கிரேக்க இந்திரன் – டையோனைசஸ்
வடமேற்கு இந்தியாவில் அலெக்ஸாந்தர் படையெடுத்தபொது அப்பகுதியில் பிரபலமாயிருந்த இந்திர வழிபாட்டை கிரேக்க ஆசிரியர்கள் டையோனைசஸ் வழிபாட்டாகவே குறிப்பிட்டுள்ளனர். இந்திரனுக்கும் டையோனைசஸ் வழிபாட்டுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை மது அருந்துவதும் போர் தொடுப்பதும் ஆகும். ஆனால் டையோனைசஸின் பிறப்பு பரீட்சித்து மகாராஜனுடைய பிறப்புக்கு நிகர். பாரதப்போரின் ஒரு கட்டத்தில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் பாண்டவர்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு எய்த ஒரு பானம் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றுக்குள் நுழையும் தருணத்தில் பகவான் கிருஷ்ணன் பரீட்சித்தைக் காப்பாற்றியதைப் போல் ஸீயஸ்ஸின் மகனாகிய டையோனைசஸை ஸீயஸ் காப்பற்றியவிதம் குறிப்பிடத்தக்கது. டையோனைசஸின் தாய் செமீலி மீது பொறாமையுற்ற ஹீரா அவளைக் கொன்று விடுகிறாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த சிசுவை வெளியில் எடுத்த ஸீயஸ் தனது தொடையை அறுத்து உள்ளே வைத்துத் தைத்துக் கொண்டார். தக்க தருணத்தில் தொடையிலிருந்து பிறந்த டையோனைசஸ் ஏத்தேமசின் இரண்டாவது மனைவி ஐனோவின் பொறுப்பில் விடப்பட்டான். ஹீராவின் பார்வையிலிருந்து தப்ப அக்குழந்தைக்குப் பெண்ணுடை அணிவிக்கப்பட்டது. எனினும் விதி விளையாடியது. டையோனைசஸ் வளரும் ரகசியத்தை அறிந்து கொண்ட ஹீரா, ஏத்தேமசைப் பைத்தியம் பிடிக்க வைத்தாள். அவன் பித்து பிடித்த நிலையில் தன் இரண்டாவது புதல்வன் லியார்க்ஸை வெந்நீர் தொட்டியில் தள்ளிக் கொன்றான். சோகம் தாளாத ஐனோ தன் முதல் புதல்வன் மிலிக்ரீடஸ் உடன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். எனினும் ஸீயஸ் ஐனோவை லிக்தோக்கியா என்ற கடல் தெய்வமாக்கினார். மிலிக்ரீடஸ் பாலேமான் என்ற தெய்வமானான்.
அனாதையாக விடப்பட்ட டையோனைசஸ் பின்னர் ஸீயஸ் உதவியால் நியாசா மலையில் வசிக்கும் வனதேவதைகளிடம் ஒப்புவிக்கப்பட்டு அவனும் வளர்ந்து பெரியவனாகிறான். டையோனைசஸின் திராட்சை சாகுபடியும் மதுவின் அறிமுகமும் ஆகும். நியாசா மலைப்பகுதிகளில் திராட்சை சாகுபடி தீவிரமானது. சொல்லப் போனால் கிரேக்க மரபின்படி திராட்சையைக் கண்டுபிடித்த பெருமை டையோனைசஸ் மீது சாற்றிக் கூறப்படுகிறது.
பழிவாங்கும் குணமுள்ள ஹீரா வாளாவிருக்கவில்லை. டையோனைசஸைப் பைத்தியமாக மாற்றி அலையவிட்டாள். இந்நிலை நீடிக்கவில்லை. ப்ரைஜியா என்ற ஊரில் தாய் தெய்வமாயிருந்த சைபோலி டையோனைசஸின் பைத்தியம் தெளிவித்தது. அதன்பின் தொடர்ந்தன வெற்றிகள்.
திரேஸ் நாட்டில் மது வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பாக்ஸான்டஸ் மகளிர் வட்டத்தை மன்னன் லிக்ருர்கஸ் சிறை பிடிக்கவே வெகுண்டெழுந்த டையோனைசஸ் மன்னனைப் பைத்தியமாக்கினான். அவன் திராட்சைக் கொடியை வெட்டுவதாக எண்ணி தன் காலைத் தானே வெட்டிக் கொண்டான். பின் தெய்வத்திடம் குறி கேட்டு அம்முடிவின்படி மக்கள் திரண்டு மன்னனைத் துண்டு துண்டாகக் கிழித்தனர். திரேஸ் மது தெய்வத்தின் வசமானது. பின்னர் திராட்சைக்குத் தடை விதித்த திபேஸில் மன்னன் பெந்தீயஸ் பழிவாங்கப்பட்டான்.மதுதெய்வ வழிபாட்டில் பெண்கள் மயங்கிக் கிடந்தனர். இப்படி மதுவில் மயங்கியிருந்த டையோனைசஸ் பக்தைகளுக்கு மன்னன துன்பத்தை ஏற்படுத்தி மதுவுக்குத் தடை விதித்தான். மது தெய்வத்துக்குத் தீவிர பக்தையாக இருந்த பென்தீயஸின் தாயே தன்னிலை மறந்து மகனை மானாக எண்ணி அவனை நார்நாராகக் கிழித்துக் கொன்று விடுகிறாள். தன்னைப் பழி வாங்கிய ஹீராவின் தேசமான ஆர்கோயில் புரோயீட்டஸ் மன்னனாயிருந்தான்.அவனுடைய புதல்விகளைப் பைதியமாக்கிய மது தெய்வம் அவர்களைப் பசுவாக எண்ணிப் புற்களைப் புசிக்க வைத்தான். நாக்சோசில் கப்பல் கொள்ளையர் திட்டத்தை முறியடித்தான். அக்கப்பலில் அடிமையாக வேலை செய்த மது தெய்வத்தை தெய்வம் என்றறியாத கப்பல் தலைவன் அந்த அடிமையை விலை பேசி விற்ற சமயம் டையோனைசஸ் தனது மந்திர சக்தியால் கப்பல் முழுவதும் திராட்சைக் கொடிகளாயின, அவை துருப்பிடிக்கும் சர்ப்பங்களாக மாறின. உயிருக்கு பயந்த மாலுமிகள் கடலில் குதித்துத் தப்பித்தனர்.அப்படி கடலில் குதித்தவர்கள் டால்பின்களாயினர்.
இப்படி மயக்கியும் மந்திரித்தும் வெற்றி பெற்ற மது தெய்வம் ஒலிம்பசை நோக்கி வந்தது. மது தெய்வத்தின் இந்திர பவனி வித்தியாசமானது. அவனது தேரில் திராட்சைக் கோடிகள் சுற்றப்பட்டிருக்கும். அவனது தேரை சிறுத்தைகள் இழுத்துச் செல்லும். சைலன், பாக்சாண்டஸ், சட்வீடர் போன்ற தாய் தெய்வங்கள் முன் செல்வர். அவனது காவற்படையில் சட்வீடர்களில் சிலேனஸ் என்ற முதியவர் மது தெய்வத்தின் குரு. யரேனஸை குரோனஸ் கொன்றபோதுசிந்திய ரத்தத் துளியில் உருவான சிலேனஸ் சுகரனைப் போல அசுர குரு. ஹீராவின் எதிரிகள் டையோனைஸஸின் நண்பர்களாயினர். இந்திய புராணங்களில் தும்புறுவர் (ஹயக்ரீவர்) என்ற தெய்வத்துக்கு முகம் குதிரையாகவும் உடல் மனிதனாகவும் இருக்கும். கிரேக்க கதைகளிலும் ஹயக்ரீவர்கள் உண்டு. அவர்கள் சென்டாரஸ் எனப்படுவர். இவர்களின் பிறப்புக்கு ஸீயஸ் காரணம். தேஸ்ஸாலி மன்னன் ஹீராவைக் கண்டு காமுற்றான். அவனது காமவெறியை அடக்க மேகத்தை ஹீராவாக மாற்றினான். மேகத்தைப் புணர்ந்த மன்னன ஐஷன் செண்டாரஸ் மக்களைப் பெற்றான். மனிதர்களுக்கு உதவும் குணமுடைய சைரான், போல்ஸ் தவிர மற்ற சென்டார்கள் முரடர்கள். பெண்களைக் கடத்துவதும் நரபலி தருவதும் போன்ற தீய செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் எல்லாரும் மதுதெய்வத்தின் காவற்படையில் அடக்கம்.
கிரேக்க கிருஷ்ணன் – ஹீராக்ளீஸ்
டி.டி. கொஸாம்பி, ஏ எல் பாஷ்யம் போன்ற வரலாற்று அறிஞர்கள் யதுகுல வீரனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய சாகசங்களும் ஹீராக்ளீஸின் சாகசங்களும் ஒப்பிடத்தக்கவை என்று கூறினாலும் ஜனனக்கதை வேறுபடுகிறது. ஹீராக்ளீஸ் முதல் நிலை தெய்வமல்ல. சக்தி குறைவான தெய்வமே. பெர்சியஸ் வமிசத்தில் வந்தவன். பெர்சியஸின் பேரன் ஆம்பிட்ரையோன் மனைவி அல்ஸ்மினாவை கௌத முனிவரின் மனைவி அகல்யாவை இந்திரன் ஏமாற்றியது போல் ஸீயஸ் இரவு ஆம்பிட்ரையொன் போல் வந்து ஒரு தேவகுமாரனை அவள் கருவில் ஏற்றிவிட்டபின் புலர்காலைப் பொழுதில் அவள் கணவன் ஆம்பிட்ரையோன் உறவு கொண்டான். இதனால் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைள் பிறந்தன. ஸீயஸ் உறவில் பிறந்தவன் அல்சீடஸ். மற்றவன் ஐபிக்ளிஸ்.
அல்சீடஸ்தான் பிற்காலத்தில் ஹீராக்லீஸ் ஆகிறான். ஹீராக்ளீஸ் என்றால், “ஹீராவின் புகழ்” என்று பொருள். ஹீராக்ளிஸின் கதை அல்சீடஸ் மீது ஹீரா கொண்ட வெறுப்பு, கொலைவெறி, எல்லாம் அன்பாக மாறி ஹீராவின் மகளை மணந்து அப்போலோவின் வாழ்த்து காரணமாக அல்சீடஸ் ஹீராக்ளீஸாகி ஒலிம்பசில் இடம்பெற்ற தெய்வமானாள்.
ஸீயஸ் ஏதோ பேச்சுவாக்கில், “பெர்சியஸ் சந்ததியில் வருபவனே நாளை ஆர்கோஸை ஆள்வான்,” என்று ஹீராவுக்கு வாக்களித்தான். உடனே ஹீரா, ஸீயஸ் செய்த வேலையைக் கண்டுபிடித்துவிட்டாள். உடனேயே பெர்சியஸ் சந்ததியில் அதே ஆஸ்மினாவின் கர்ப்பத்திலிருந்த ஏழு மாத சிசு யுரைத்தீயசைப் பிறக்க வைத்து ஸீயஸின் வாக்குப்படி ஆர்கொஸ் மன்னனாகப் பிரகட்டனப்படுத்திவிட்டு எட்டு மாதக் குழந்தைகளாயிருந்த ஹீராக்ளீசும் ஐபிக்ளிசும் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது கொடிய இரு கருநாகங்களை ஏவிக் கடிக்கச் செய்தாள். ஆனால் பாலகிருஷ்ணனாகிய ஹீராக்லிஸ அந்த இரு கருநாகங்களையும் கொன்று விடுகிறான். இதன்பின் ஹீராக்ளீஸ் சராசரி கிரேக்கக் குழந்தையாகவளர ஸீயஸ் ஏற்பட்டு செய்தார். லைனஸ் என்ற பாட்டு வாத்தியார் வசம் ஒப்புவிக்கப்பட்டான்.
“புல்லாங்குழல் கொடுத்த ராகங்களே,” என்று கீதம் படித்த கிருஷ்ணன் எங்கே? இந்த ஹீராக்ளஸ் எங்கே? சங்கீதம் என்றாலே காத தூரம் ஓட்டமெடுத்த ஹீராக்ளஸ் ஒரு நாள் பொறுமை இழந்து பாட்டு வாத்தியார் மீது நாற்காலியை விட்டெறிந்ததில் லைனஸ் அதே இடத்தில் மரணமுற்றான். இசைப்பாடம் நின்றது. காட்டுக்கு அனுப்பப்பட்டு துரோணருக்கு சமமான தேயுத்தாரஸ் என்ற குருவின் கட்டுப்பாட்டில் குருகுலவாசத்தில் ஹீராக்ளீஸ் வில்வித்தை பயின்றான். மிகவும் முரடனாக வளர்ந்த ஹீராக்ளீஸ் அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்து தனது பதினேழாவது வயதிலேயே சித்தேரியன் மலையில் வாழ்ந்து மக்களை அச்சுறுத்திய சிங்கத்தைப் பிடித்து அதன் கழுத்தை நெறித்துக் கொன்றான்.
மன்னன தெஸ்பீயஸ் வியந்து தனது ஐம்பது பெண்களையும் ஹீராக்ளீசுக்கு மணமுடித்துக் கொடுத்து ஐம்பது பேரப்பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டான். திபெஸ் பகுதி அதிகாரம் ஆர்கோமெனஸ் மன்னன் எர்ஜினஸிடம் இருந்தது. எர்ஜினசின் தூதுவர்கள் கப்பம் கேட்டு வந்தபோது அவர்களை வழியில் சந்தித்த ஹீராக்ளீஸ் அவர்களது காதுகளையும், மூக்குகளையும் அறுத்து அவைதான் கப்பம் என்று எர்ஜினஸிடம் அனுப்பி வைத்தான். சினம் மேலிட்ட எர்ஜினஸ் பெரும்படையுடன் திபெஸ் வந்தான். எர்ஜினஸ் படைகளைச் சின்னாபின்னமாக துவம்சம் செய்து போரில் வென்று எர்ஜினசை திபெசுக்குக் கப்பம் செலுத்துமாறு கேட்டான். இதைக் கண்டு மகிழ்ந்த திபெஸ் மன்னன் கிரியோன் தன் மகள் மெகராவை ஹீராக்லீசுக்கு மணம் முடித்து வைத்தான்.
பன்னிரண்டு சாகசங்கள்
ஹீராக்ளீஸின் வளர்ச்சிக்கு முடிவு கட்டி ஒழித்துக்கட்ட ஹீரா தனது மாய சக்திகளை அவன் மீது ஏவி விட்டாள். அதனால் ஹீராக்ளீஸ் பைத்தியமாகிறான். மெகாரா மூலம் பெற்றெடுத்த தனது ஐந்து குழந்தைகளையும் தன்னிலை மறந்த நிலையில் கொலை செய்து விடுகிறான். இக்கொலைகளுக்குப் பிராயச்சித்தமாக ஹீராவின் ஆணைகளுக்கு அடிபணிந்து ஆர்கோஸ் மன்னன் யூரைத்தியஸின் தண்டனைகளுக்குக் கட்டுப்படுகிறான். ஹீராக்ளீஸுக்கு வழங்கப்பட்ட பன்னிரண்டு தண்டனைகளும் பன்னிரண்டு சாகசங்களாயின. அப்பன்னிரண்டு தண்டனைகளும் அவன் ஆபத்தானவன் என்பதால் தெய்வங்களின் தெய்வமான ஸீயஸ் தன் புதல்வனான ஹீராக்ளீஸுக்கு தன்னுடைய சக்திகளை வழங்கினார். அவனிடம் ஹெர்மஸ் வழங்கிய போர் வாளும் அப்போல்லோ வழங்கிய அஸ்திரங்களும் இருந்தன போக, ஹீராக்ளீஸே சுயமாக நெமியாவில் இருந்த ஒரு ஆலிவ் மரத்திலிருந்து ஒரு குண்டாந்தடி, அதாவது, பீமனுடைய கதாயுதம் போல் ஒன்றைத் தயார் செய்து கொண்டான்.
1. முதலாவதாக எகிப்திய மன்னன் பரோவின்அ வாகனமான ஸ்பின்ங்ஸ் சிங்கத்தின் தம்பிதான் நெமியா சிங்கம். அதைக் கொள்ளும் தண்டனையில் வெற்றி பெற்ற ஹீராக்ளீஸ் அதனுடன் போரிட்டுக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு அதன் மண்டை ஓட்டைத் தன்னுடைய தலைக்கவசமாக மாட்டிக கொண்டான்.
2. இரண்டாவதாக கிருஷ்ணரைப் போல காளிய நர்த்தனம். காளியனைப் போல் கிரேக்க ஹைத்ரா என்பது நூறு தலை நாகம். டைபோனும் எகித்னாவும் கூடி உருவாக்கிய ஹைதராவை அன்புடன் வளர்ப்பவள் ஹீரா. இப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஹைதராவுடன் போர் புரிய வேண்டுமென்பது ராஜகட்டளை. ஹீராக்ளீசுக்கு உதவியாக அவன் மருமகன் அப்போல்லோவும் உடன் போரிடத் தயாரானான். லெர்ணாவில் உள்ள குடிநீர் ஊற்றை மறித்தபடி நின்ற ஹைதராவின் நூறு தலைகளையும் ஹீராக்ளீஸ் வெட்டி வீழ்த்திய மறு நிமிடமே நூறு தலைகளும் புதிதாய் முளைத்தன. பின்னர் ஒரு கடப்பாறையைப் பழுக்கக் காய்ச்சுமாறு அப்போல்லோவுக்கு உத்தரவிட்டான். அப்படிப் பழுக்கக் காய்ச்சிய கடப்பாறையை அடுத்த முறை தலைகளை வெட்டிய ரத்தம் சிந்தாமல் தலையில் அழுத்தவே ஹைதரா அலறி அடித்துக் கொண்டு ஓடி மறைந்து விட்டது.
மூன்றாவதாக ரைமாந்தஸ் மலையில் உள்ள ராட்சதக் கரடி.அதை குகையிலிருந்து வெளியேற்றிப் பனிக்கட்டி நிறைந்த பகுதியில் ஓட ஓட விரட்டிக் களைப்படைய வைத்த ஹீராக்ளீஸ் அந்த ராட்சதக் கரடியை உயிருடன் தூக்கித் தன் தோள்மீது சுமந்து ஆர்கோஸ் வந்ததை கவனித்த மன்னன் யூரைத்தியஸ் ஒரு பெரிய ஜாடிக்குள் ஒளிந்து கொண்டானாம்.
4. நனகாவது கட்டளை சிரைனிய மலையில் பயிர்களை மேய்ந்து நஷ்டப்படுத்தும் ராட்சத மான். இது ஆர்ட்டமீசுக்கு அர்ப்பணமானது. அப்போல்லோவின் அன்புக்குரியது. ஹீராக்ளீஸ் ஹீராவின் கட்டளைக்கு முன்பே இந்த மானைப் பிடிக்க முயன்று தோற்றுப் போனான். ஆனால் இம்முறை தோற்கவில்லை. கரடியைப் பிடித்த அதே தந்திரம்தான்.அந்த மானை உயிருடன் பிடித்து தோளில் போட்டுக்கொண்டு மிடுக்குடன் வந்த ஹீராக்ளீஸை வழி மறித்து அம்மானைக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டி, அம்மானைத் திருப்பிக் கேட்டனர். மானைத் தர மறுத்த ஹீராக்ளீஸ் தான் செய்தது குற்றமானால் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் ஆர்டகாஸ் மன்னர் யூரைஸ்தீயஸ். நீங்கள் பேச வேண்டிய நபர் அவரே, நானல்ல என்று கூறிவிட்டான்.
5. ஐந்தாவது கட்டளை ஆர்க்கடியாவின் ஸ்டைம்பாலஸ கழுகுக் கூட்டம். இவை மனிதர்களுக்கும் பழத்தொட்டங்களுக்கும் எமனாயிருந்த போல்லாக்கழுகுகளை அழிக்கும் தண்டனை ஹீராக்ளீஸுக்கு வழங்கப்பட்டது. இதை நிறைவேற்ற எத்தீனா ஹீராக்ளீஸுக்குப் பித்தளை ஒலிக்கருவியை வழங்கினாள். அதை ஊதியபோது பெரிய சத்தம் எழவே குகையைவிட்டு வெளியேறிய கழுகுகளை ஒவ்வொன்றாகத் தனது அம்புகளால் கொன்று விடுகிறான்.
6. பிலஸ்போனில் எலிஸ் மன்னன் ஆகேயஸுக்கு சூரியனால் வழங்கப்பட்ட பசுக்கள் நிறைய இருந்தன. மன்னனோ மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம் செய்யாததால் மாட்டுச் சாணமும் மூத்திரமும் மலைபோலக் குவிந்து மணம் வீசியது. அதைச் சுத்தம் செய்யும் பணியை ஹீராக்ளீஸ் மேற்கொள்வதுதான் ஆறாவது கட்டளை. ஒரே நாளில் சுத்தம் செய்ய ஆகேயஸ் வற்புறுத்தினான.ஒரே நாளில் சுத்தம் செய்வதற்குப் பணம் தர வேண்டுமென்று ஹீராக்ளீஸ் கேட்டதற்கு ஆகேயஸ் ஒப்புக் கொண்டான். பிளஸ்போனசில் அல்பீயஸ், பீனியஸ் என்ற இரு நதிகள் ஓடின. அந்த இரு நதிகளையும் திசை திருப்பி ஆகேயஸ் மாட்டுத் தொழுவத்தில் உள்ள சாணி மலைகளை ஓடச் செய்து சுத்தமாக்கினான். இப்படி வேலை செய்ததற்கு பணம் தராமல் ஆகேயஸ் ஹீராக்ளீசை நாடு கடத்தியதும், பின்னர் ஹீராக்ளீஸ் ஆகேயசை வஞ்சம் தீர்த்ததும் வரலாறு.
7. ஏழாவது கட்டளை க்ரீட்டின் முரட்டுக் காளை. யூரோப்பா மீது காதல் கொண்ட ஸீயஸ் காளை என்பதால் காளை வடிவில் அவளை விரட்டிப் புணர்ந்த அதே காளை என்பதால் ஹீராக்லீசுக்குக் கட்டுப்பட்டது. அதைப் பிடித்து யூரைஸ்தீயஸிடம் வழங்க, யூரைஸ்தீயஸ் ஹீராவிடம் வழங்கினான். ஹீராவோ அது ஸீயஸ் என்பதால் சுதந்திரமாகத் திரிய விட்டுவிட்டாள்.
8. எட்டாவது கட்டளை கிரேஸ் மன்னன டையாமீட்டஸிடம் இருந்த நான்கு மாமிச குதிரைகள். இந்த நன்கு குதிரைகளும் பசித்தாலும் புல்லைத் தின்னாது. மனிதர்களைக் கொன்று தின்னும். இப்போல்லாக் குதிரைகளிடம் அன்புடன் பழகி அவற்றைத் தன்வசமாக்கிய ஹீராக்ளீஸ் சரியான சமயத்தில் மன்னன டையாமீட்டஸைப் பிடித்து வந்து அவனை அந்த நான்கு குதிரைகளுக்கும் உணவாக்கினான். பின்னர் அந்த நான்கு குதிரைகளும் பழையப்படி புற்களைத் தின்னும் வழக்கத்தை மேற்கொண்டன.
இந்த எட்டு கட்டளைகளையும் நிறைவேற்றியபின் ஹீராக்ளீஸுக்கு ஓய்வு தரப்பட்டது. இன்னம் நான்கு கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும்-
அமேஸான் அழகி ஹிப்போலைட்டாவின் தங்க ஒட்டியாண்ணத்தைத் திருட வேண்டும், ஜெரிபான் பசுக்கள் – சூரிய தேவனுடன் போர், எலுசிஸ் சென்று செர்பீரஸ் என்ற காலபைரவரைக் கைது செய்து ஆர்டகாஸ் வந்த கதை, தங்க ஆப்பிள் பழக் கொள்ளையுடன் வேறு சில சாகசங்களையும் இலியத் போர் துவக்கத்தையும் அடுத்த இதழில் காண்போம்.
>(தொடரும்)