அணு ஆற்றலின் அரசியல் – பகுதி 2

இந்தக் கட்டுரையின் முதல் பாகம் சென்ற இதழில் வெளியானது. அதை இங்கே படிக்கலாம்.

பகுதி – 2

ஒரு ஜனநாயகம் சரியாக இயங்க மிக அவசியமான முன்தேவை, நம்பக்கூடிய தகவல். அது இல்லாமல் குடிமக்களால் சமூகப் பிரச்சினைகளைப் பயனுள்ள வகையில் விவாதிக்கவோ அல்லது பொதுக் கொள்கைகளை அலசிப் பார்க்கவோ இயலாது. அதுவும், எதிர்பாராத பேரிடர்கள் நேர்கையில், நம்பகமான தகவலின் முக்கியத்துவம் இன்னும் அதிகமானது. அவசரகாலங்களில் நிலவும் குழப்பத்துக்கும், சீரழிந்த நிலைக்கும் நடுவில் சிக்கும் மக்கள் எடுக்கவேண்டிய தீர்மானங்களுக்கு – என்ன செய்வது, எங்கே போவது என்று முடிவுகளெடுக்க – அவர்களுக்குக் கிடைக்கும் தகவலின் தரமானது, கிட்டவிருப்பது வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் வலிமையுடையது.

இப்படி ஒரு தேவை இருந்தும், ஜப்பான் ஒரு ஜனநாயகம் என்றாலும், பல நாடுகளோடு ஒப்பீட்டில் அது செவ்வனே இயங்கும் ஒரு அமைப்பு என்றே தோற்றமிருந்தாலும், தொடக்கத்திலிருந்தே, ஜப்பானியக் குடிமக்களுக்கு ஃபுகுஷிமா பேரழிவைப் பற்றி நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. இதற்கு டெப்கோ  (TEPCO) நிறுவனம்தான் முக்கியக் காரணம். ஃபுகுஷிமா டாயீச்சியை தாக்கக்கூடிய நிலநடுக்கம், சூனாமி ஆகியவற்றின் வலிமையை டெப்கோ குறைத்து மதிப்பிட்டிருந்ததால், அணு உலைகளைக் கண்காணிப்பதற்கான அமைப்பை உருவாக்கவில்லை; ஃபுகுஷிமாவிலும் டோக்யோவிலும் உள்ள பணியாளர்களுக்கும் இடையான தகவல்தொடர்பு வழிகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எதையும் டெப்கோ மேற்கொள்ளவில்லை. இதனால் முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தயார்நிலையில் டெப்கோ இருக்கவில்லை. அழிக்கப்பட்ட அணு உலைகளின் நிலை பற்றியும், கதிர்வீச்சு வெளியேற்றம் பற்றியும் மிக முக்கியமான தகவல்களை டெப்கோ வெளியிடாததற்குக் காரணம், விமரிசனங்களைத் தவிர்ப்பதற்காக அவற்றை மக்களிடமிருந்து மறைக்க விரும்பியது ஒரு காரணம் என்றால், தகவல் சேகரிக்கத் தேவையான அமைப்புகள் தொடக்கத்திலேயே செயலிழந்து போயிருந்தன என்பதும் இன்னொரு முக்கியமான காரணம்.

ஃபுகுஷிமா பேரழிவைப் பற்றி நம்பிக்கையான தகவல் இல்லாததற்கு ஜப்பானிய அரசாங்கமும் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசாங்கத்துக்கு, அதுவும் குறிப்பாய் அணு மற்றும் தொழில் முகமையகத்துக்கு (The Nuclear and Industrial Agency) அணுமின் உலைகளைச் சுதந்திரமாய் பரிசீலனை செய்யும் அதிகாரம் இருக்கவில்லை. விபத்துகள் நடந்தபோது மின்சக்தி நிறுவனங்களின் (சுய) அறிக்கைகளையே இந்த அமைப்பு நம்பி இருந்தது. பாதுகாப்புக்கான சோதனை பற்றிய இந்த சுய அறிக்கை முறை முன்பே கூடக் கடும் பிரச்சினைகளுக்குக் காரணமாய் இருந்துள்ளது; காட்டாய், பல அணு மின் நிலையங்களில் விபத்துகளும், கதிர்வீச்சுக் கசிவும் ஏற்பட்டது என்பதே, உள்ளே இருந்த ‘உண்மை விளம்பிகள்’ அனாமதேயமாய்த் தொடர்பு கொண்டு தெரிவித்த பின்புதான் வெளி அமைப்புகளுக்குத் தெரிய வந்தன. டெப்கோவை நம்பி இராமல் சுதந்திரமாய் ஃபுகுஷிமா டாயீச்சியைப்பற்றித் தகவல் சேகரிக்கும் வழி   இம்முகமையகத்துக்கு இல்லாது போனதுதான் இப்பேரழிவின்போது அரசாங்கத்தின் எதிர்நடவடிக்கைகள் தாமதமானதற்குக் காரணம்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், அரசாங்கம் டெப்கோவின் அறிக்கைக்குக் காத்திருக்க வேண்டி இருந்தது. அப்படிக் கொடுக்கப்பட்ட அறிக்கையும் எந்த அளவுக்கு நம்பகமானது என்பதைச் சரிபார்க்கும் வழிகளும் அரசாங்கத்திடம் இல்லை.

இதற்கும் மேலாக, ஃபுகுஷிமா டாயீச்சி அணு மின் நிலையத்தைத் தாக்கிய இத்தனை பெரிய நிலநடுக்கம் மற்றும் சூனாமியை எதிர்கொள்ள டெப்கோவைப் போலவே அரசாங்கமும் தயார்நிலையில் இல்லை. ஃபுகுஷிமா அணு நெருக்கடிநிலை எதிர்வினை மையத்தை (Fukushima Nuclear Emergency Response Center) அரசாங்கம் அணுநிலையத்துக்கு ஐந்தே கிலோ மீட்டர் தூரத்தில் வைத்திருந்தது. இருந்தும் இந்த மையம் இரண்டு காரணங்களால் செயல்படவில்லை. முதலாவதாக, கிழக்கு ஜப்பானின் பெரு நிலநடுக்கத்துக்குப் பின் இந்த மையமும் மின்சக்தியை இழந்தது. அணு விபத்துகளின் போது உள்ளூர் தலைமையகமாய் செயல்படும் நோக்கத்துடன் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், அணுச் சிதறல்களிலிருந்து கட்டிடத்தைப் பாதுகாக்கும் வசதிகள் இந்த மையத்தில் பொருத்தப் பட்டிருக்கவில்லை. (எப்படியுமே, ஃபுகுஷிமா பேரழிவு நடந்த உடனே கதிர்வீச்சு அளவுகள் பெரும் அளவில் இருந்ததால் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க வசதிகள் செய்யப்-பட்டிருந்தாலும் கூட இதன் ஊழியர்கள் வெளியேற வேண்டித்தான் இருக்கும். இந்த மையம் ஃபுகுஷிமா டாயீச்சி நிலையத்துக்கு இத்தனை அருகாமையில் இருத்தப்பட்டிருந்தது என்பது அரசாங்கம் அங்கு நடக்கும் வாய்ப்புள்ள அணு விபத்துகளின் அளவை குறைவாய் மதிப்பிட்டிருந்தது என்பதைக் காட்டுகிறது.)

அவசரகாலத்தில் கதிர்வீச்சுத் தாக்கத்தை முன் அனுமானிக்க உதவும் ’ஸ்பீடி’ (System for Prediction of Environment Emergency Dose Information) என்னும் முறையையும் அரசாங்கம் உபயோகிக்கத் தவறி இருந்தது. இந்த பாவிப்பு முறை ஃபுகுஷிமா நாசத்தின்போது வேலை செய்து கொண்டிருந்தது, ஃபுகுஷிமா டாயீச்சியிலிருந்து வெளியேறிய கதிர்வீச்சு காற்றின் திசை, தட்பவெப்பநிலைகள் மற்றும் நில வடிவமைப்புக்-கேற்றபடி எப்படி பரவப் போகிறது என்பதை மிகச்சரியான அளவில் முன்கூட்டியே மதிப்பிட்டிருந்தது. எனினும் பிரதமர் நாவ்டொ கான் (Naoto Kan-菅 直人), அவரது அமைச்சரவை அங்கத்தினர்கள் ஆகியோர், ஃபுகுஷிமா டாயீச்சீயைச் சுற்றி இருந்த குடியிருப்புகளில் இருந்த மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கும் முன்பு ஸ்பீடியை உபயோகிக்கவில்லை. இதன் விளைவால், இக்குடியிருப்புக்களின் மக்கள் அரசாங்கத்தின் உத்தரவின்படியோ அல்லது தம் சொந்தத் தீர்மானத்தாலோ வெளியேறியபோது, பலரும் கதிர்வீச்சு அதிகம் ஏற்பட்ட இடங்களுக்குக் குடிபெயர்ந்திருந்தனர். அதனால் இவர்கள் பெரும் அளவில் கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு உள்ளாயினர். அரசாங்கம் ஸ்பீடி பாவிப்பு முறையின் அடிப்படையில் வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்.

இதனால், ஃபுகுஷிமா பெருநாசம் விரியும்போது, ஃபுகுஷிமாவுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த மக்களுக்கு என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை ஏனெனில் அவர்களுக்கு ஃபுகுஷிமா டயீச்சீயின் சமீபத்திய நிலை பற்றிய நம்பிக்கையான தகவல் எதுவும் இருக்கவில்லை. வெளியேறுவதா வேண்டாமா, சில உணவுப்பொருட்களை உட்கொள்ளுவது பாதுகாப்பானதா இல்லையா என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. இதற்கிடையில் பிரதம அமைச்சரவைக் காரியதரிசி யுகியோ ஏடானோ ((枝野 幸男,Edano Yukio) தவறான முடிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு செய்தியைப் பல பத்திரிக்கையாளர் கூட்டங்களில் திரும்பத் திரும்ப சொன்னார், “தற்போதைய கதிர்வீச்சு அளவால் உடல்நலத்திற்கு உடனடி விளைவுகள் இல்லை.” கதிர்வீச்சின் அளவு காலப்போக்கில் மக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்குப் போதுமான அளவு அதிகமாய் இருந்தது என்பது இதன் மறைமுக அர்த்தம். அணு மற்றும் இதரத் தொழில்களுக்கான முகமையகம் (Nuclear and Industrial agency) தொடக்கத்தில் ஃபுகுஷிமா பேரிடரைச் சர்வதேச அணுச் சம்பவங்களின் அளவீட்டில் (the International Nuclear Events Scale- INES ), 4-ஆம் நிலை என்று நிர்ணயித்திருந்தது – அதாவது (அமெரிக்காவில் ஏற்பட்ட) மூன்று மைல் தீவு (Three Mile Island)  அணு உலை விபத்தை விடக் கடுமையளவில் குறைவானது என்று. அரசாங்கமும், டெப்கோவும் ஃபுகுஷிமா டயீச்சியில் நேர்ந்துகொண்டிருந்தது ஒரு சின்ன விபத்து எனபது போன்ற ஒரு அபிப்பிராயத்தை உருவாக்க திரும்பத் திரும்ப முயற்சி செய்துகொண்டிருந்தன. ஏப்ரல் 12ஆம் தேதிதான் அரசாங்கம் ஃபுகுஷிமாவின் அளவு மேற்படி பன்னாட்டு அணு சம்பவ அளவையில் 7ஆம் நிலை – அதாவது செர்னோபில் பேரழிவின் அளவு கடுமையானது- என்று இறுதியாய் ஒப்புக்கொண்டது.

அரசாங்கத்துக்கும் டெப்கோவுக்கும் பணிந்திருந்த மைய ஊடகங்கள்

மார்ச் 11 ஆம் தேதிக்குப் பின் தொடர்ந்து நடந்த இத்தனை சம்பவங்களினூடே ஜப்பானிய மைய ஊடகங்கள் அரசாங்கமும் டெப்கோவும் சொல்லியதை எவ்வித விமர்சனப் பார்வையும் இல்லாமல் அப்படியே அறிவித்தன. கதிர்வீச்சு குறித்த ஏடானோவின் தவறான கூற்றையோ, அரசாங்கமும், டெப்கோவும் ஃபுகுஷிமா பேரிடரின் கடுமையைக் குறைத்து மதிப்பிட்டதையோ இவை கேள்வியேதும் கேட்கவில்லை. இதற்கும் மேலாக, ஃபுகுஷிமா டாயீச்சி இல்லாமல் டோக்யோ பெருநகரப் பகுதி 2011ஆம் வருடக் கோடையில் பெரிய அளவு மின்வெட்டைச் சந்திக்கும் என்று அரசாங்கமும் டெப்கோவும் தெரிவித்தபோது, ஜப்பானிய மைய ஊடகங்கள் மீண்டும் அரசாங்கத்துக்கும் டெப்கோவுக்கும் ஒத்தூதி, அணு சக்தி இல்லாமல் ஜப்பானில் வாழ்வு எப்படி மிக அசௌகரியமாகிவிடும் என்று வலியுறுத்தின. (ஆனால் டெப்கோ மற்றும் இதர மின்சக்தி நிறுவனங்களால், அவர்களது சில அணு உலைகள் கிழக்கு ஜப்பானின் பெரும் நிலநடுக்கத்தினாலோ அல்லது முன்பே திட்டமிடப்பட்ட பராமரிப்புக் காரணங்களினாலோ நிறுத்தப்பட்டிருந்தபோதும், கோடையின் உச்சகட்டத் தேவையை ஈடுகட்ட முடிந்தது என்பது பின்னால் தெளிவானது.)

ஜப்பானின் மைய ஊடகங்கள் அரசாங்கத்துக்குப் பணிந்து இருப்பதன் ஒரு காரணம், கிடைக்கும் தகவல்களை விமரிசன நோக்குடன் ஆராய்வதற்கு நிருபர்களுக்குப் பயிற்சியளிக்கும் அமைப்பு வசதிகள் அவற்றிடம் இல்லை. ஜப்பானியப் பத்திரிக்கைகளில் பணி செய்யும் பத்திரிகையாளர்கள் அரசாங்க அலுவலர்கள் கொடுக்கும் தகவல்களை உபயோகித்து அரசியலைப் பற்றிய செய்திக்கட்டுரைகள் எழுதும்போது, அவற்றின் நம்பகத்தன்மையைச் சோதிக்காமலும், தமது பார்வையில் விளக்கங்கள் சேர்க்காமலும் அப்படியே பதிப்பிக்கின்றனர். இவ்விதத்தில் ஜப்பானியப் பத்திரிக்கை நிறுவனங்கள் செய்தி முகமையங்களைப் (News agencies) போல (மொ.பெ குறிப்பு: வெறும் செய்தித் திரட்டிகளாக) செயல்படுகின்றன. நிஜத்தில் ஜப்பானின் பல வட்டாரப் பத்திரிக்கைகள் செய்தி முகமையங்கள் தயாரிக்கும் செய்திக்கட்டுரைகளை பெருமளவில் சார்ந்து இருக்கின்றன. நாட்டளவில், ஜப்பானின் மூன்று பெரிய செய்தித்தாள் நிறுவனங்களான அஸாஹி, மயினிசி, யோமியுரி ஆகியன, மற்ற வட்டாரச் செய்தித்தாள்களை விட அதிகத் தலையங்கங்களைப் பதிப்பிக்கின்றன என்பது உண்மையாயினும், இத்தலையங்கங்கள் ஃபுகுஷிமா பெருநாசத்திற்கு அரசாங்கத்தின் மெதுவான, பலனற்ற எதிர்வினைகளை விமரிசிப்பதை நிச்சயமாகத் தவிர்த்துள்ளன.

ஜப்பானிய மைய ஊடகங்கள் ஃபுகுஷிமா பேரிடர் விவகாரத்தில் அரசாங்கத்தைக் கடுமையாய் விமரிசிப்பதில் குறிப்பிடத்தக்க விதத்தில் தயக்கம் காட்டியதற்கு இன்னொரு முக்கியமான காரணம், இந்த விஷயம் டெப்கோவையும், அணு உலைகளை உபயோகிக்கும் இதர மின் சக்தி நிறுவனங்களையும் பற்றியதாய் இருந்ததுதான். ஜப்பானிய மைய ஊடகங்கள், குறிப்பாகத் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களில் மிகப் பெரியனவற்றுக்கு அனைத்து மின்சக்தி நிறுவனங்களிடமிருந்தும் விளம்பர வருமானம் கணிசமான அளவில் கிடைக்கிறது. 2010 இல் டெப்கோ மட்டுமே விளம்பரங்களுக்காக 11 பில்லியன் யென்னுக்கும் மேலாய் செலவழித்தது. கிழக்கு ஜப்பானில் மின்சக்தியை உற்பத்தி செய்யவும், வினியோகம் செய்யவும் டெப்கோவுக்கே ஏகபோக உரிமை இருக்கையில், போட்டியே இல்லாத ஒரு நிறுவனம் விளம்பரங்களுக்காக இந்த அளவு செலவழிப்பது முதலில் அர்த்தமற்றதாய் தெரியும். ஆனால் விளம்பரத்துக்காகச் செலவழிப்பதன் மூலம், மொத்த உற்பத்திச் செலவை அதிகமாகக் காட்டி,  மின்சாரத்தின் விலையைச் சட்டபூர்வமாய் அதிகரிக்கும் அதிகாரம் டெப்கோவுக்கு இருக்கிறது. [ஜப்பான் மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்வதில் முழு அடக்கச் செலவு அடிப்படையில் விற்பனைக்கான விலையைத் தீர்மானிக்கும் (full cost pricing) முறையைக் கடைப்பிடிக்கிறது. இதில் விளம்பர செலவுகளும் அடக்கம்.] இப்படியாக, கடந்த 40 வருடங்களில், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அணு சக்தியின் நன்மைகளையும், அணு உலைகள் பாதுகாப்பானவை என்ற கருத்தையும் பரப்புவதற்காக டெப்கோ, பெருமளவில் பணம் கொடுத்திருக்கிறது. இந்த விளம்பர வழிப் பிரச்சாரத்திற்கான கட்டணத்தையும் மறைமுகமாக ஜப்பானின் நுகர்வாளர்களே கட்டி இருக்கிறார்கள்.

இதுமட்டுமே அல்லாது ஜப்பானிய மைய ஊடகங்கள் அரசாங்கத்திற்கும் டெப்கோவுக்கும் பிரசாரகர்களாக இருப்பது மட்டுமின்றி, ஃபுகுஷிமா படுநாசத்தைப் பற்றிய தோற்றங்களைத் திரித்து மக்களின் கருத்துகளை வளைக்க முயற்சித்தன. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு மைய ஊடகங்கள் மாசுபட்ட உணவுப் பிரச்சினையை அணுகிய விதம். மார்ச் 2011க்குப் பின், டோக்யோ மாநகரப்பகுதியில் உள்ள கடைகளுக்கும் உணவகங்களுக்கும் ஃபுகுஷிமா மற்றும் அண்டைய பகுதிகளிலிருந்து வினியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் அதிக அளவிலான கதிர்வீச்சு கண்டுபிடிக்கப்பட்டது. ஃபுகுஷிமா விபத்துக்குப் பின்னர் வந்த மாதங்களில் மாசுபட்ட உணவுச் சம்பவங்கள் பலமடங்கு அதிகரிக்கவும், பல நுகர்வோர்களும் ஃபுகுஷிமாவிலிருந்து வந்த உணவுப்பொருட்களை, அவை மாசுபடாமல் இருப்பினும் தவிர்க்க ஆரம்பித்தனர். ஜப்பானிய மைய ஊடகங்கள் நுகர்வோரின் இந்த நடத்தையை “ஃபுகுஷிமா விவசாயிகளுக்கு எதிரான ஆதாரமற்ற ஒதுக்கல்” என்றோ, அல்லது, உணவு மாசுபடுத்தலின் காரணம் தங்களது விளைநிலங்களையும், கால்நடைகளையும் சரியாய் சோதித்துப் பார்க்காத வெகு சில “கவனமில்லாத ஃபுகுஷிமா விவசாயிகள்” என்றோ வர்ணித்தன.

ஆனால் நிஜத்தில் பிரச்சினை, நுகர்வோர்களின் ஆதாரமில்லாத பயமோ, உற்பத்தியாளர்களின் பொறுப்பின்மையோ அல்ல. மாறாக, அணுக் கதிர்வீச்சு மாசுபடுத்தல் விவகாரத்தையும், விபத்து விளைவித்த நாசத்துக்கான நஷ்ட ஈடு கொடுக்கும் விஷயத்தையும் அரசு கையாண்ட விதத்தில்தான் பிரச்சினை உருவாகிறது. இன்றுவரை அரசாங்கம் ஃபுகுஷிமாவின் விளைநிலங்களில் (குடியிருப்புப் பகுதிகளிலும் கூட) மாசு அளவுகளைப் பற்றி அரைகுறையான அளவெடுப்பையே நடத்தியிருக்கிறது. உணவுப்பொருட்களுக்கென முழுமையான சோதனைத் திட்டமொன்றை நிறுவவும் அரசாங்கம் தவறி இருக்கிறது. இத்தகைய அரைகுறையானதும், மேம்போக்கானதுமான உணவுப்பொருள் மாசுபடல் பற்றிய கணிப்பின் அடிப்படையில், அரசு ஃபுகுஷிமா விவசாயிகளுக்கு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவும், வினியோகிக்கவும் அனுமதி கொடுத்தது.. வேறு வழியேதும் இல்லாததால் ஃபுகுஷிமா விவசாயிகள் அரசின் ஆலோசனையைப் பின்பற்றினர். டெப்கோ விவசாயிகளுக்கு சிறு அளவு நஷ்ட ஈடு கொடுப்பதில் கூட மிக மெதுவாகச் செயல்பட்டதாலும், கடுமையாய் மாசுபட்ட பகுதிகளிலிருந்து தாமாகவே வெளியேறிவர்களுக்கு ஈடு வழங்க அதிக முரண்டு பிடித்ததாலும், பல ஃபுகுஷிமா விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்து வினியோகிக்கும் உணவுப்பொருட்கள் மாசுபட்டவையாய் இருக்கக்கூடும் என்ற பயம் இருந்தபோதிலும் தங்களது வேளாண்மைத் தொழிலைத் தொடர்ந்து நடத்தினர்.

இருந்தும் மைய ஊடகங்கள், மாசுபட்ட உணவுப்பொருட்களை ஃபுகுஷிமா விவசாயிகள் வினியோகித்ததற்கோ, நுகர்வோர் ஃபுகுஷிமாவிலிருந்து வந்த உணவுப்பொருட்களைத் தவிர்த்ததற்கோ,தகவலைப் பகிரவும் பகிராமல், திரிக்கவும் செய்து குழப்பம் விளைவித்த அரசையும் ,டெப்கோவையும் விமரிசிக்கவில்லை. வேறு விதமாகச் சொன்னால், ஃபுகுஷிமா விவசாயிகளின், மேலும் டோக்யோ மாநகர் பகுதி நுகர்வாளர்களின் துன்ப நிலைக்கு டெப்கோவுக்கும் அரசுக்கும் இருந்த பொறுப்பு வெளிப்படையாகத் தெரியாத விதமாக, மைய ஊடகங்கள் மாசுபட்ட உணவுப்பொருட்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டன. உணவுப்பொருள் மாசுபடலைப் பற்றிய இந்த ஒருதலைப் பட்சமான செய்தி வெளியீடு, மைய ஊடகங்கள் அரசையும் டெப்கோவையும் மக்களின் தீவிரமான கூர்ந்த ஆய்விலிருந்து மறைமுகமாய் பாதுகாத்த பல சம்பவங்களில் ஒரு உதாரணமே.

ஃபுகுஷிமா பேரழிவு நடந்த காலத்தை விட, தற்சமயம் செய்தித்தாள்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அரசு மற்றும் டெப்கோவின் நம்பகத்தன்மையை குறைக்கும் விதமான செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. அணு ஆற்றல் சார்ந்த பிரச்சினைகளை அம்பலப்படுத்தும் கருத்துரைகளையும் வெளியிட்டு அதற்கு மாற்றாய் புதிப்பிக்கப்படக்கூடிய ஆற்றல் வகைகளை ஆதரிக்கின்றன. அணு ஆற்றலை படிப்படியாய் கைவிடத் தூண்டும் இயக்கத்தின் முயற்சிதான் மைய ஊடகங்களிடையே இந்தச் சிறிய (ஆனால் கண்டுணரக்கூடிய அளவிலான) மாற்றம் நேர்ந்திருப்பதற்கான காரணம். குறிப்பாக, இந்த இயக்கம் தகவல்- தொடர்பு தொழில்நுட்பத்தில் (ICTInformation and Communication Technology) ஏற்பட்ட சமீபத்து முன்நகர்வுகளான ட்விட்டர், ப்ளாகுகள் போன்றனவற்றை நன்கு பயன்படுத்தி, அணுசக்திக்கு ஆதரவான மைய ஊடகங்களின் சாய்வை வலுவாக எதிர்த்ததே காரணம்.

மைய ஊடகங்களை எதிர்க்க தகவல்-தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஆற்றல்

ஜப்பானில் அணுசக்தியைப் படிப்படியாய் கைவிடக் கோரும் இயக்கம் ஃபுகுஷிமா பெருநாசத்துக்குப் பதில்வினையாய் 18 மார்ச், 2011 அன்று மக்களின் ஒரு சிறு கூட்டம் டெப்கோவுக்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்தபோது ஆரம்பித்தது. அந்த நிறுவனம் அணுப்பேரிடருக்குக் காரணமாய் இருந்ததை உரத்தகுரலில் கண்டனம் செய்து, அணு உலைகளைப் படிப்படியாய் மூட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். டெப்கோவுக்கு எதிரான கண்டனம் தினம் தொடர்கையில், ஜப்பான் முழுவதிலும் மக்கள் அணு ஆற்றலுக்கு எதிரான கண்டனத்தை வெளிப்படுத்த ஒன்று கூடினர். இத்தகைய அணு ஆற்றல் எதிர்ப்புக் கண்டனங்கள் 2011ம் வருடத்தினுள் இரண்டு முறை உச்சத்தை அடைந்தன. முதலாவதாய் ஜூன் 11ஆம் தேதியன்று ஃபுகுஷிமா பேரிடர் நடந்து மூன்று மாதங்கள் ஆனதைக் குறிக்கும் வகையில் ஜப்பான் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நாடளாவிய கண்டனங்கள் ”6.11 அணு ஆற்றலைப் படிப்படியாய் கைவிடல், ஒரு மில்லியன் மக்களின் நடவடிக்கை” (“6.11 Nuclear Power Phase-out, One Million People’s Action.”) என்ற பெயரில் அரசு சாரா அமைப்புகளில் அணு ஆற்றலுக்கு எதிரானவையும், சுற்றுச்சூழல் இயக்கங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அடுத்ததாய் செப்டெம்பர் 19 அன்று, நோபெல் விருது பெற்ற எழுத்தாளர் கென்ஸாபுரோ ஓய் ((大江 健三郎, Kenzaburō Ōe) உள்ளிட்ட செல்வாக்குமிக்க அணு எதிர்ப்புப் போராளிகளின் குழுவொன்றின் அழைப்பை ஏற்று டோக்யோவின் மெய்ஜி பூங்காவில் நாற்பதிலிருந்து அறுபது ஆயிரம் மக்கள் போலக் கூடினர். பெரிய கூட்டமாய் மக்கள் டொக்யோவின் மத்தியப் பகுதிகள் வழியே ஊர்வலமாய் சென்று மெடி (METIMinistry of Economy, Trade and Industry) மற்றும் டெப்கோவின் முன்னால் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்புகளுடன் அணு ஆற்றலுக்கு எதிரான அரசு சாரா சுற்றுச் சூழல் அமைப்புகள், பலவித கருத்தரங்குகள், பட்டறைகள், ஆய்வரங்குகள், திரைப்படக்காட்சிகள் போன்ற தகவல் பரப்பு நிகழ்ச்சிகளின் மூலம் ஃபுகுஷிமாவில் உயர்ந்த அளவிலான கதிர்வீச்சு, டோக்யோ பெருநகர் பகுதி முழுவதிலும் நிகழ்ந்த அணுச்சிதறல்களின் உண்மையான அளவு, கதிர்வீச்சினால் உடல்நலத்துக்கு ஏற்பட்ட ஆபத்துகள், அணு உலைகளைப் படிப்படியாய் கைவிட்டு புதிப்பிக்கப்படக்கூடிய ஆற்றலை மேம்படுத்தும் திட்டத்திற்கான யோசனைகள் என்று பெருவாரி மைய ஊடகங்கள் அடக்கி வாசித்த தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்த்தனர். அரசு சாரா அமைப்புகளின் இத்தகவல் பரப்பு நடவடிக்கைகளின் உச்சநிலைதான் 2012-ஆம் வருடத்தில் ஜனவரி 14-15 தேதிகளில் யொகொஹாமாவில் நடந்த ’அணுசக்தியிலிருந்து விடுபட்ட உலகு’க்கான அனைத்துலக மாநாடு. அணு ஆற்றலுக்கு எதிரான ஜப்பானியரும், வெளிநாட்டினருமான போராட்டக்காரார்கள், பொறியியல் வல்லுனர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மற்றும் அரசியல்வாதிகள், இரண்டு நாட்கள் நடந்த இம்மாநாட்டில் தங்கள் கருத்துக்களை உரைகளாய் சமர்ப்பித்து, கலந்துரையாடல்களில் பங்கேற்றனர். இம்மாநாடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஈர்த்தது, ஆனால் சில ஜப்பானிய மைய ஊடகங்கள் இதைப் பற்றிய செய்திகளை வெளியிடவேயில்லை.

அரசு சாரா அமைப்புகள் இத்தகைய கண்டனங்களையும் தகவல் நிகழ்சிகளையும் ஏற்பாடு செய்கையில் அவர்கள் ஐசிடிக்களைப் (ICT) பெருமளவில் உபயோகிக்கிறார்கள். தங்கள் நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைப் பரப்ப இவற்றை உபயோகிக்கிறார்கள். வரவிருக்கும் கண்டனக்கூட்டங்களைப் பற்றிய விளம்பரங்களையும், தகவல் விளக்க நிகழ்ச்சிகளைப் பற்றிய விபரங்களையும் பரப்ப ட்விட்டர் மற்றும் மின்னஞ்சல் தொடர்புகள் மிக அதிக அளவில் உபயோகிக்கப்படும் ஊடகங்களாகும். அதே ஊடகங்களே, அரசு சாரா அமைப்புகளின் வலைத்தளங்களுக்கும், ப்ளாகுகளுக்குமான சுட்டிகளைக் கொடுப்பதன் மூலம், அவற்றின் நிகழ்ச்சிகள் பற்றிய பதிவுகள், பல கலந்துரையாடல்களிலும், கூட்டமர்வுகளிலும் விநியோகிக்கப்பட்ட பிரசுரங்கள், அறிக்கைகள், கையெழுத்து இயக்கத்துக்கான படிவங்கள், அந்த நிகழ்ச்சிகளின் படங்கள் ஆகியனவற்றின் பிடிஎஃப் கோப்புகள், மேலும் பல தகவல்களை பரவலாக மக்களுக்குக் கொடுத்து வந்தன.

இவற்றுடன் யூஸ்ட்ரீம் ஜப்பானுடைய (Ustream Japan- http://www.ustream.tv/ வலைத்தளம், பெரிய அளவிலான கண்டனக் கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கும் அரசுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் போன்றவற்றையும் நிகழ்படத் தொடரோடியாய் (internet streaming) இணையத்தில் பரப்பும் வசதியை அளிக்கின்றது. யூஸ்ட்ரீம் ஜப்பான் ஏப்ரல் 2010-இல் ஜப்பானிய மற்றும் அமெரிக்க பெரும் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டு, ஏற்கனவே அகண்ட கிழக்கு ஜப்பானின் நிலநடுக்கத்தினாலும், ஃபுகுஷிமா பேரிடராலும் விளைந்த சேதங்களைப் பற்றி மிகவும் தேவைப்பட்ட தகவல்களை வினியோகிப்பதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது. அணு ஆற்றலிருந்து விடுபட்ட உலகுக்கான அனைத்துலக மாநாட்டின் பிரதான கூட்டத்தொடர்கள் உள்ளிட்ட ஃபுகுஷிமா தொடர்பான முக்கியமான நடவடிக்கைகள் பற்றிய பதிவுகளை யூஸ்ட்ரீம் ஜப்பான் சேமித்து தனது வலைத்தளத்தில் வலையேற்றியிருக்கிறது. இதைப்போன்ற இணைய நிகழ்படத் தொடரோடி பரப்பு வசதியை அளிக்கும் இன்னொரு முக்கிய அமைப்பு, ‘அவர் ப்ளானெட் டிவி’ (Our Planet-TV).

இதன் வலைத்தளம் (http://www.ourplanet-tv.org/). அமெரிக்காவில் 9/11ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை மைய ஊடகங்கள் விநியோகித்த விதத்தில் குறை கண்ட தயாரிப்பாளர்கள், நிகழ்பட பத்திரிகையாளர்கள், மற்றும் இதர ஊடகத்துறை சார்ந்தவர்களால் தொடங்கப்பட்டது இந்த லாப நோக்கற்ற இணைய ஒளிபரப்பு நிலையம். இந்த நிலையம் ஃபூகுஷிமா பேரிடர் தொடர்பான பத்திரிக்கையாளர் கூட்டங்கள் மற்றும் அரசு ஆணைக்குழுக் கூட்டங்கள் பற்றிய செய்திகளை ஒளிபரப்புகிறது. அதற்கு மேல், நாசத்தால் பாதிக்கப்பட்ட நகராட்சிகளில் வாழும் மக்களின் நேர்காணல்களையும் அணு ஆற்றல் சார்ந்த விஷயங்களில் அறிவியல் நிபுணர்களின் உரைகளையும் ஒளிபரப்புகிறது. இந்த நேர்காணல்கள் மற்றும் உரைகளின் நிகழ்படத்துண்டுகள் ‘அவர் ப்ளானெட் டிவி’ அல்லது யூட்யூபின் இணையதளத்தில் வலையேற்றப்படுகின்றன.

இவ்வாறு, ஜப்பானின் அணுசக்தியை படிப்படியாய் கைவிடத் தூண்டும் இயக்கம், புதிதாய் கிடைத்துள்ள பலவகையான தகவல்-தொடர்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஃபுகுஷிமா பேரிடர் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள், அரசாங்கத்தின் கொள்கைகளுக்குத் தங்களின் பதில்வினைகள் போன்றவற்றை அரசாங்கம் மற்றும் டெப்கோவுக்கு மிகவும் சாதகமான ஜப்பானிய மைய ஊடகங்களை நம்பாமல் தானே பரப்பியுள்ளது. கொள்கையளவில் இந்த ஐசிடிக்கள், ஃபுகுஷிமா பேரிடரால் எழுந்த பிரச்சினைகளைப் பற்றிய அறிவு பூர்வமான விவாதங்களில் ஈடுபடவும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கொள்கைகளை முன்மொழியவும் ஜப்பானிய குடிமக்களுக்குத் தேவையான, நம்பகமான தகவல்களைப் பரப்ப வசதி செய்கின்றன. குறிப்பாக, குடிமக்களின் கைக்கெட்டும் தகவல் ஊற்றுக்களின் எண்ணிக்கை ஐசிடி மூலம் அதிகரிக்கிறது. அரசு சாரா அமைப்புகள் ஐசிடி யை உபயோகித்து அரசும் டெப்கோவும் அடக்கி வாசிக்கும் தகவல்களைத் தெரிவித்து மக்களை எச்சரிக்கலாம். அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களுக்குப் போட்டியாய் தங்களது புள்ளிவிவரங்களையும் நிபுணர் அறிக்கைகளையும் பிரசுரிக்கலாம். மைய ஊடகங்களின் தகவல்களுக்கு மாறுபட்ட செய்தி அறிக்கைகளையும், அலசல்களையும் தருவதற்கு அணுசக்தியை படிப்படியாய் கைவிடத்தூண்டும் இயக்கத்துக்கு ஐசிடி உதவுவதால், அவை ஜப்பானியக் குடிமக்கள் அரசு மற்றும் டெப்கோவின் செயல்களைப் பற்றி மேலும் யோசிக்கவும், மேலும் விமர்சனத்துடன் பார்க்கவும் உதவுகின்றன.

மேலும் குடிமுறை சமுதாயத்தில் ஆக்கபூர்வமாகச் செயல்படுவோருக்கு, பொதுக்கருத்துக்களை வெளியிடக் கிடைக்கும் வாய்ப்பை விரிவுபடுத்த ஐசிடி ஊடகங்கள் உதவுகின்றன. தங்கள் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ட்வீட்களுக்கு மக்கள் இப்போது பதில் கொடுத்து தங்கள் கருத்துக்களை நேரடியாய் தெரிவிக்கலாம்.குறிப்பாக, குடிமக்களுக்குக் கையெழுத்து சேகரிப்புத் திட்டம், கண்டனங்கள் போன்ற கூட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து தங்கள் கருத்துக்களைப் பகிரங்கமாக்க சமூக ஊடகங்கள் உதவி செய்கின்றன. மத்திய அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிராய் மனுக்களில் கையெழுத்துப்போட அழைப்பு, உள்ளூரில் நடக்கும் எதிர்ப்புக் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு போன்றவை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டெரின் மூலம் அடிக்கடி பரப்பப் படுகின்றன.

இவற்றின் வழியே இப்போதெல்லாம் அரசே குடிமக்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தைத் தொடர்பை மேம்படுத்த முயல்கிறது. அரசின் முகமையங்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் மறுவினைகளுக்கான பக்கங்கள் இருப்பதால், அணுசக்தியை படிப்படியாய் கைவிடத்தூண்டும் இயக்கம் மக்களை இவ்வலைத்தளங்களுக்குப் போய் அணு ஆற்றலுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை குறிப்புகளாய் விட்டு வர ஊக்குவிக்கின்றது.

இவ்வாறாக, புதிதாய் கிடைத்திருக்கும் ஐஸிடிக்கள் அணு ஆற்றல் குறித்த ஊடக பாரபட்சங்களை முறியடிக்கவும் அணு ஆற்றலை விமரிசிக்கும் வகையிலான பொதுமக்கள் கருத்துக்களைத் திரட்டவும் அணுசக்தியை படிப்படியாய் கைவிடத்தூண்டும் இயக்கத்துக்கு உதவியாய் இருந்துள்ளன. இதன் விளைவாய் மைய ஊடகங்களும் அரசு மற்றும் டெப்கோவுக்கு எதிரான செய்தி அறிக்கைகளையும் அலசல்களையும் பரப்ப ஆரம்பித்தன.

அதே நேரத்தில், அணு சக்தியை கைவிடக் கோரும் இயக்கத்துக்கு அரசு மற்றும் டெப்கோவின் கொள்கைத் திட்டங்களின் மேல் கவனிக்கப்படத் தக்க அளவிலான தாக்கம் செலுத்துவது கடினமாய் உள்ளது. உதாரணமாய், அரசு உணவுப்பொருள் பரிசோதனை அமைப்பை மேம்படுத்தவோ அல்லது அணு மாசு அளவுகளைப் பற்றிய முழுமையான ஆய்வை நடத்தவோ இல்லை. டெப்கோவும் ஃபுகுஷிமா பேரிடரால் அவதியுற்ற மக்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதில் மிகவும் கெடுபிடியாய் இருந்து வருகிறது.

இன்னொரு விதமாகச் சொன்னால். ஐஸிடிக்கள் ஜப்பானிய குடிமுறை சமுதாயத்துக்கு பொதுமக்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான வழிகளை விரிவாக்கியபோதும், அதே அளவு சாதகமான விளைவுகளை ஜப்பானிய குடிமுறை சமுதாயத்துக்கு அரசுக் கொள்கைகளில் தாக்கம் விளைவிப்பதில் உருவாக்கவில்லை.

அடுத்த இதழில், ஜப்பானிய அரசியல் முறையின் அமைப்பை ஆராய்ந்து பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டுக்கான விரிபரப்பு அதிகமானாலும் அது அரசின் மேல் செலுத்தக்கூடிய தாக்கத்தின் அதிகரிப்பாய் மாறாதது ஏன் என்பதை ஆராயும்.

(தொடரும்)

இங்கிலீஷ் மூலக் கட்டுரையைத் தமிழாக்கியவர்: உஷா வை.

குறிப்பு : ஃபுகுஷிமா நிகழ்வைத் தொடர்ந்து ஜெர்மனிய இதழ் ஒன்று வெளியிட்டிருக்கும் ஒரு ஆவணப் படத் தொகுப்பை இங்கே காணலாம் : http://www.spiegel.de/flash/0,,28219,00.html