நாய்கள் பூனைகள்

ன்பது வருடங்களுக்குப் பிறகு துபாய் விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தது. பல வருடங்களுக்கு முன்னர் நான் கலந்து கொண்ட அதே துபாய் பொருட்காட்சிக்கு நான் தற்போது வேலை பார்க்கும் நிறுவனம் அதிசயமாக என்னை கலந்து கொள்ள அனுப்பியது. இந்த ஒன்பது வருடங்களில் முதல் முறையாக அத்தி பூத்தாற்போல் அயல்நாட்டுப் பயணம்.

மரத்திலிருந்து கனி நேராக கைகளில் வந்துதிரும் சம்பவங்கள் நடப்பதுண்டு. அத்தருணங்களில் யாருக்கும் வாய்க்காத சந்தர்ப்பம் நமக்கு வாய்த்தாகப்படும். சில காலம் கழித்து வாய்த்த சந்தர்ப்பம் வரமல்ல. உபத்திரவமே என்பது போன்ற நிகழ்வுகள் அணி வகுக்கும்.

பத்து வருடங்களுக்கு முன் ஒரு போதாத வேளையில் ஐஸ் க்ரீம் கம்பெனி முதலாளி ஒருவர் கண்ணில் தற்செயலாக நான் பட்டேன். இங்கிலாந்தில் கடலுணவு கலந்த தின்பண்டங்களை பேரங்காடிகளுக்கு விற்கும் வேலையில் இருந்தபோது ஒரு முறை துபாயில் நடந்த பொருட்கண்காட்சியில் கலந்து கொள்வதற்காகப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது திருவாளர் உரிமையாளர் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த காரணத்தால் அவரிடம் பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது. பிசினஸ் கார்ட் பகிர்ந்து கொண்டு நெடுநேரம் உரையாடினோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு எனக்கு வேலை நியமனக்கடிதம் அனுப்பப்பட்டது. பணத்தைக் கண்டால் வாய் திறக்கும் பிணம் என்பார்கள். நான் பிணம் போல வாய் பேசாது, எழுதப்பட்டிருந்த தொகையின் எழுத்துருவை ரசித்துக்கொண்டே கடிதத்தில் ஒப்பிட்டேன். ஆறு மாதம் முடிந்த பின்னர் வேலை செயல்திறன் பொறுத்து பணி நிரந்தரப்படுத்தப்படும் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. சம்பளத்தொகை என்னை ஊமையாக்கியதோடு மட்டுமில்லாமல், என் மூளையையும் மழுங்கடிக்க வைத்திருக்க வேண்டும். ஆறு மாதம் கழித்து நிரந்தரப்படுத்தப்படவில்லையெனில் என்ன ஆகும் என்று யோசிக்காமல் இருந்து விட்டேன்.

ஷார்ஜா வந்து வேலையில் சேர்ந்து சரியாக ஆறாவது மாதம்; நான் மதியவுணவு உட்கொள்ள வீடு சென்று திரும்பி வந்தபோது மேசையின் மீது ஒரு காகிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு மாதம் கழித்து நான் வேலை நீக்கம் செய்யப்படுவதற்கான நோட்டிஸ் அது.

அஷு நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஐஸ்-க்ரீம் நிறுவனத்தின் ரெஃப்ரிஜிரேஷன் பிரிவின் தலைவராக இருந்தார். என்னுடைய அதிகாரியல்ல அவர். என்னை விட நான்கு அடுக்கு உயர் நிலையில் பணியாற்றுபவர். அடுக்கு வித்தியாசங்கள் பாராமல் எல்லாரிடமும் நண்பராக பழகுபவர். சம்பந்தமே இல்லாத என்னைக் கூட அவர் வீட்டிற்கு அழைத்து இருக்கிறார். இதோ போக வேண்டும், அதோ போக வேண்டும் என்று இப்போது ஊரை விட்டுப் போகும் நேரமே நெருங்கி விட்டது.

அவர் ஒரு சர்வதேச தேயிலை ப்ராண்டின் பொதுத்தலைவராக இருந்தார். எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு புது தேயிலை ப்ராண்ட் ஒன்றை சந்தைப்படுத்தும் எண்ணத்துடன் அஷுவுக்கு தாராளமான சம்பளமும் பெர்க்ஸ்ஸும் கொடுத்து பணியில் அமர்த்தினார். என்னமோ தெரியவில்லை, எல்லா திட்டமும் ஏற்பாடுகளும் இறுதிப்படுத்தப்பட்ட பிறகு, உரிமையாளர் திடீர் மனம் மாறி, தேயிலை வேண்டாம், ஐஸ்-க்ரீம் வியாபாரமே போதும் என்று முடிவெடுத்தார். முடிவெடுத்த அடுத்த நாளே அஷு வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் உரிமையாளரின் குணம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் ஆச்சர்யகரமாக அஷு வேலையை விட்டு கழிக்கப்படவில்லை. மர்மமென்னவென்றால், நிறுவனத்தில் சேருமுன்னரே உரிமையாளரிடம் மூன்று வருடம் கட்டாயமாக வேலையில் வைத்திருக்கும் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். அஷுவின் முன்-ஜாக்கிரதையான காரியத்தால், உரிமையாளருக்கு பாவம் மூன்று வருடம் முழி-பிதுங்கும் சம்பளம் தர வேண்டிவந்தது. சும்மா இருக்கும் அஷுவுக்கு வேலை தருகிறோமே என்பதற்காக அவருடைய தகுதிக்கும் முன்னனுபவத்திற்கும் சம்பந்தமில்லாத ரெஃப்ரிஜிரேஷன் வேலை தரப்பட்டிருந்தது. புன்னகையும் நேர்மறை மனநிலையுமாய் வளைய வந்தார் அஷு.

அல்-கராமாவில் இருந்தது அஷுடோஷின் வீடு. வசதியும் சொகுசும் கலந்த வீடு. வேலை நீக்க நோட்டீஸ் வந்த இரண்டாம் நாள் முதன் முறையாக அவர் வீட்டிற்குச் சென்றபோது நுழைந்தவுடன் இரு நாய்கள் என்னை உரசின. ஜாக், ஜில் என்ற பெயர்கள் அவற்றிற்கு இடப்பட்டிருந்தன. எனக்கு விலங்குகள் மீது வெறுப்போ கருணையின்மையோ இல்லை. எனினும், வீட்டுக்குள் செல்லப்பிராணிகள் வைத்திருப்பது எனக்கு ஓவ்வாததாகப் பட்டது. ஜாக் வந்து என் கால் விரல்களை நக்கிப்பார்க்க பிரயத்தனப்பட்டது. நான் என்னிரு கால்களை தரையிலிருந்து தூக்கி உட்கார்ந்திருந்த ஆசனத்தில் வைத்துக்கொண்டேன். ஜாக் நாக்கை நீட்டி என்னை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. ஜில் குரைக்க ஆரம்பித்தது. இதற்குள் நாய்களின் எஜமானர் – அஷுடொஷ் கைகளில் பானங்களோடு வந்தார். ஜாக்-ஜில்லை பால்கனிக்கு போகச்சொன்னார். நாய்கள் உடனே எஜமானரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஹாலை விட்டு வெளியேறின.

“என்ன சுப்பு, உரிமையாளரை போய் பார்த்தாயா? செயல் திறனை எடுத்துக்காட்ட மேலும் கொஞ்சம் நேரம் தருமாறு வேண்டு. அவர் ஒப்புக்கொண்டால் உனக்கு வேறு வேலை தேட நேரம் கிடைத்த மாதிரி இருக்கும்…” என்றார் அஷு. கோப்பையில் பனிக்கட்டி சப்தமிட்டது.

“ஆறு மாதத்தில் அறிவுக்ப்கு பொருந்தாத கோரிக்கைகளை அள்ளி வீசி, அவற்றைப் பூர்த்தி செய்ய முடியாமல் போன போது, ஐந்தாறு முறை மேனேஜர்ஸ் மீட்டிங்கில் நாய் குதறுகிற மாதிரி, என்னை கண்டபடி வார்த்தையால் குதறி, எல்லா மேனேஜர்களும் எள்ளி நகையாடுகிற மாதிரி செய்த போதே அந்தாள் முகத்தில் ராஜினாமா கடிதத்தை வீசியெறிந்து விட்டுப் போக எண்ணினேன். ஆனாலும், பயந்தேன். இதே நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை தரக்கூடிய வேறு வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் அல்லது வேலையே கிடைக்காமல் போய்விட்டால் என்னவாகும் என்ற பீதி. இவற்றால், ராஜினாமா செய்யாமல் இருந்தேன். வேலை நீக்கம் ஒரு வழியாக என்னுடைய முடிவெடுக்க இயலாமையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது”

ஜாக் – ஜில் பால்கனியில் குரைத்துக்கொண்டிருந்தன. அஷுவின் மனைவி – ரிச்சா- சமையலறையில் எதையோ பொரிக்கும் ஒசை கேட்டது. அஷுவின் மகன் – அங்கீத் – நாங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அறையிலேயே சத்தமில்லாமல் ஒடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தான்.

“உணர்ச்சிவசமாக யோசித்து என்ன பயன்? உனக்கு தேவை நேரம்… அடுத்த வேலை கிடைக்கும் வரை இதே வேலையில் இருக்க முடியுமா பார். அதற்காக என்ன வழி என்று பார். நீ கேள்விப்பட்டிருப்பாய், உன் நிறுவனம் சிறப்பு வேண்டுகோள் தராவிட்டால், எமிரகத்தில் வேறேங்கும் வேலையில் சேர முடியாத படிக்கும், நேர்முகத்தேர்வளிக்க டூரிஸ்ட் விசாவில் கூட வர முடியாத படிக்கும், ஆறு மாத “பேன்” (ban) உனது பாஸ்போர்ட்டில் குத்தப்பட்டுவிடும்” – அஷு மிகுந்த அக்கறையோடு பேசினார்.

நான் மெலிதாக உலர் புன்னகை வீசினேன்.

“அஷு, துபாய் விமான நிலையத்தில் வந்திறங்கி இம்மிக்ரேஷன் முடிந்த அடுத்த நிமிடமே ‘உன் பாஸ்போர்ட் எங்களிடம்தான் இருக்கும்’ என்று பிடுங்கிக்கொண்டு போனான் என்னை ரிசீவ் பண்ண வந்த பெர்ஸனல் ஆஃபிசர். அந்த கணத்தில் நான் கொண்ட அதிர்ச்சியை விட நீ சொல்லும் இந்த தகவல் ஒன்றும் அதிர்ச்சியைத் தரவில்லை. ‘எங்கள் நாட்டுக்கு வேலை செய்ய வந்திருக்கிறாய் நீ. நீ இரண்டாம் குடி மகன்தான். அப்படித்தான் நடத்துவோம் உன்னை’ என்று சொல்லாமல் சொல்லும் சட்டதிட்டங்கள், விதி முறைகள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. என்னை விட்டால் இப்போதே இந்த நாட்டை விட்டு ஓடி விடுவேன்…”

ரிச்சா தட்டு நிறைய காளான் பஜ்ஜிகளை நிரப்பி எங்கள் முன் கொண்டு வைத்தாள்.

“உனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவத்தைக் காரணம் காட்டி முழு நாட்டையும் குறை சொல்வது சரியல்ல. லட்சக்கணக்கான இந்தியர்கள் இங்கு வந்து பிழைக்கிறார்கள். பணம் ஈட்டுகிறார்கள். சொத்து சேர்க்கிறார்கள். கொஞ்சம் ப்ராக்டிகலா யோசி. நீ இந்தியா போனால் நீ இங்கு சம்பாதித்துக்கொண்டிருந்த சம்பளம் கிடைக்குமா? நிச்சயமா கிடைக்காது. நிதானமா இருந்து யோசி…உன்னுடைய திறமைக்கு எமிரகத்தில் நல்ல வேலை கிடைக்கும். உரிமையாளரின் கை கால்களைப் பிடித்தாவது, அடுத்த வேலை கிடைக்கும் வரை இதே வேலையில் இருக்க அனுமதி கேள்.”

“இல்லை அஷு. நான் தாயகம் போய்விடுகிறேன். ஏதாவது ஒரு வேலை எனக்குக் கிடைக்கும். சம்பளம் கம்மியாக கிடைத்தாலும், நிம்மதியாக வாழ இயலும். ராத்திரி தூக்கம் நன்றாக வரும். இந்த ஆறு மாதத்தில் ஒரு நாள் கூட நான் நிம்மதியாகத் தூங்கவில்லை. ஒருநாள் கூட இந்த வேலையில் சந்தோஷமாக இல்லை. இதுதான் உண்மை. பைசாவுக்காக இந்த வேலையில் சேர்ந்தேன். அது தவறு என்று இப்போது உணர்கிறேன். இந்த வேலை நீக்கம் எனக்கு நல்ல படிப்பினை.”

அஷு அப்புறம் ஒன்றும் பேசவில்லை.

வேலை தீர்ந்ததற்கடுத்த நாள், இம்மிக்ரேஷன் கன்சல்டன்டுடன் பாஸ்போர்ட்டோடு அனுப்பப்பட்டேன். அதிகமாக அரபி பாஷையும் கொஞ்சம் ஆங்கிலம் பேசும் அந்த கன்சல்டன்ட் என்னை இரண்டு மூன்று கௌன்டர்களில் உட்கார்ந்திருந்த அதிகாரிகளிடம் அரபி மொழியில் உரையாடிக்கொண்டே இரண்டு மூன்று முறை முழுக்க முழுக்க அரபி மொழியிலிருந்த ஆவணங்களில் கையெழுத்திடவைத்தான். எல்லா கையெழுத்துகளும் ஃபார்மாலிட்டிகளும் முடிந்த பின், தேனீர் அருந்தும்பொழுது, “ஆறு மாத பேன் (ban) என் பாஸ்போர்ட்டில் இடப்படுமா?” என்று அவனிடம் சாந்தமாகக் கேட்டேன். “ஆம். உங்கள் உரிமையாளரின் நேரடி உத்தரவு அது” என்று கிடைத்தது பதில்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு, துபாயை விட்டு கிளம்பினோம். அஷு தன் காரில் எங்களை விமான நிலையம் வரை கொண்டு வந்துவிட்டார்.

*

*

இந்தியா திரும்பிய எனக்கு முதல் ஆறு மாதங்களுக்கு எந்த வேலையும் அமையவில்லை. பிறகு கையில் கிடைத்த ஒரு வேலையை ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் மும்பையில் கிடைத்த இந்த வேலையில் சேர்ந்தேன். ஷார்ஜாவில் நான் வாங்கிய சம்பளத்தை விட மிக மிகக் குறைவான சம்பளம். திடீரென்று தரையிறங்கிய வாழ்க்கைத்தரம். ஒரு படுக்கையறை, ஹால், கிட்சன் – எலிக்கூண்டு போன்ற மும்பை ஃப்ளாட்டை பார்த்ததும் உதட்டை பிதுக்கினாள் மனைவி.

காலையும், மாலையும் போரிவலியிலிருந்து சர்ச்கேட் வரை கூட்டமான ரயிலில் பயணம். டயோடா கரோலாவின் சொகுசில் ஆஃபிஸ் சென்று வந்த ஷார்ஜா தினங்கள் அவ்வப்போது நெஞ்சில் நிழலாடும். மும்பை நிறுவனம் குறைந்த சம்பளத்தில் நிறைய அனுபவமிக்க ஒருவன் கிடைத்து விட்டான் என்று குதூகலித்தது. “திரு.சுப்ரமணியன் இங்கிலாந்து, துபாய் போன்ற இடங்களில் பணியாற்றியவர்” என்று பெருமையோடு என் இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்டேன். அதைக் கேட்கும்போது எனக்குத் துளி கூட பெருமை ஏற்படவில்லை. அவருக்கு அளப்பரிய பெருமை. ஏற்றுமதி வியாபாரத்தில் இருந்தாலும், புது அலுவலகத்தில் வெளிநாட்டுப் பயணம் செல்லும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவில்லை. பல மட்டங்கள் கீழிறங்கி, கல்லூரிப் படிப்பு முடிந்து கேரியரைப் புதிதாகத் துவங்கும் உணர்வு.

துபாயின் நினைவு லேசாக மங்க ஆரம்பித்து பின் யாராவது துபாயில் இருந்தவர்களை, இருப்பவர்களைச் சந்திக்கும்போது மட்டும் உயிர் பெற்று உடனே மறைந்துகொண்டிருந்தது. துபாயில் என்னுடைய சக ஊழியனாக இருந்த – சதானந்தை தாதர் ஸ்டேஷனில் ஒரு நாள் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. மீரா ரோடு செல்லும் லோக்கல் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தான், விடுமுறையில் வந்திருக்கிறானாம். பழைய துபாய் நண்பர்களைப் பற்றி விசாரித்தேன். ஐஸ்-க்ரீம் நிறுவன முதலாளி ஓய்வு பெற்றுவிட்டாராம். அவர் மகன் இப்போது நிறுவனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாராம். அஷுவைப்பற்றியும். அஷு ஐஸ்-க்ரீம் நிறுவனத்திலிருந்து விலகி, சொந்தமாக தேயிலை வியாபாரம் ஆரம்பித்திருக்கிறாராம். “அவருக்கென்ன அவர் சாமர்த்தியம் கலந்த கெட்டிக்காரர்… எது செய்தாலும் வெற்றிகரமாக இருப்பார்” என்று குறிப்பிட்டேன்.

தாயகம் திரும்பி வந்தது அல்லது திருப்பி அனுப்பப்பட்டது ஏன் நிகழ்ந்தது? எதன் பொருட்டு? ஐஸ்-க்ரீம் நிறுவன உரிமையாளர் பின்க்-ஸ்லிப் கொடுத்துவிட்டார் என்பதாலா? அல்லது கிடைக்கும் வேலைவாய்ப்பு தமக்கேற்றதா என்று ஆராயாமல் ஏற்றுக்கொண்டதாலா? நியமனத்தின்போது பின்பற்ற வேண்டிய எல்லா முன் ஜாக்கிரதையான செயல்முறைகளைக் கையாண்டு பின் நியமனத்தை ஏற்றுக்கொள்ளாதது என் சாமர்த்தியமின்மையன்றி வேறென்ன? ஹயர் அண்ட் ஃபயர் கொள்கையை தாட்சண்யமின்றி அமல்படுத்தினார் என்ற காரணத்திற்காக ஐஸ்-க்ரீம் நிறுவன உரிமையாளரின் மேல் உணர்ச்சிவசப்பட்டேன். ஏன்? அயல் நாட்டில் வசதியுடன் கை நிறைய சம்பளத்துடன் வசதியாக வாழ்ந்த வாழ்க்கை இழந்தேன் என்பதால் அல்லவா? பின் ஏன் பத்திரமான சூழலைத் தேடி சொந்த நாட்டுக்குத் திரும்பினேன் என்று எனக்கு நானே சப்பைக்கட்டு கட்டிக்கொள்கிறேன் ?

திருவாளர் உரிமையாளருக்கும் அஷுவையும் துரத்தி அனுப்ப ஆசை இருந்தது. ஆனால் முடிந்ததா? வேலையில் அமர்த்துவோர் எல்லோருமே – உள்நாடானாலும் வெளிநாடானாலும் – பணியாளர்களின் பலவீனங்களைத் திறம்பட பயன்படுத்திக்கொள்பவர்கள்தாம். என்னுடைய இப்போதைய நிறுவனத்தின் இயக்குனர் மட்டும் என்ன – காருண்ய மூர்த்தியா? ஒரு கசப்பான அனுபவம் காரணமாக தாயகம் திரும்பியவன் நான் என்பது அவருக்குத் தெரியும். பத்திரமான பணிச்சூழல் மட்டுமே நான் வேண்டுகிறேன் என்பதையும் அவ்வளவு எளிதில் வேலை மாற்றம் பற்றி நான் சிந்திக்கப்போவதில்லையென்றும் அவர் அறிவார். எனவே, பாதுகாப்பான உணர்வைத்தரும் சூழலை தவிர, மற்றெதையும் – மனத்திருப்தி, நல்ல சம்பளம் உள்பட – தர விருப்பமில்லை.

போரிவலி – சர்ச்கேட் ரயில் பயணம் தொடர்ந்தவாறிருந்தது. ஐந்து வயதாகி விட்ட மகனிடம், துபாயில் எங்களிடமிருந்த டயோடா கரோலா பற்றி சொல்லுவாள் மனைவி. உடனே, என் மகன் என்னிடம் “அப்பா… எனக்கு டயோடா கரோலா இப்பவே வேணும்” என்பான். அதைக் கேட்டதும், ”அப்பாவால் இப்போதைக்கு பொம்மைக்கார்தான் வாங்கமுடியும்” என்று நக்கலடிப்பாள். “அதெல்லாம் ஒரு காலமடி பொன்னாத்தா!” என்று ஒரு திரைப்பட வசனத்தை ஏற்ற இறக்கத்துடன் சொல்லிக் காட்டுவேன். சம்பாஷணை திசை மாறிச் சென்றுவிடும்.

துபாய் விஜயம் நிச்சயம் ஆனதும் என் மனதில் அஷுதான் வந்தார். இந்தியா திரும்பிய பிறகு அஷுவின் தொடர்பில் நான் இருக்கவில்லையாதலால், அவரை எப்படிச் சந்திப்பது என்று புரியவில்லை. ஒரு சமூக வலைப்பின்னல் தளத்தில் அவரின் மின்னஞ்சல் கிடைத்தது. ”நான் துபாய் வருகிறேன் ; சந்திக்கலாமா?” என்று கேட்டு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வருமா என்ற சந்தேகத்துடன் இருந்தேன். பதில் வந்தது. தன்னுடைய கைத்தொலைபேசி எண்ணைத் தந்து துபாய் வந்தவுடன் அழைக்கச் சொல்லியிருந்தார்.

*

*

அஷுவின் ஜாகை ஷார்ஜாவிற்கு மாறி இருந்தது. தீரா-வில் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து என்னை கூட்டிக்கொண்டு போனார். புஹெய்ரா கார்னீஷுக்கு அருகில் அவர் குடியிருந்த பழைய அபார்ட்மெண்டில் கார் பார்க் பண்ண இடமே கிடைக்கவில்லை. கட்டடத்தின் மூன்று புறங்களில் சாலையில் இருந்த பார்க்கிங் லாட்டில் எங்காவது இடம் கிடைக்குமாவென்று பார்க்க, கட்டடத்தைச் சுற்றி ஏழெட்டு முறை வலம் வந்தோம். எந்தக் காரும் நகர்கிற மாதிரி தெரியவில்லை. சிவனே என்று ஒரு பக்கமாக காரை நிறுத்தி காருக்குள் உட்கார்ந்து கொண்டே காத்திருந்தோம். அரை மணி நேரம் கழித்து குறுந்தாடி வைத்த ஒர் இளைஞன், காரை எடுத்தவுடன், அவன் பார்க் செய்திருந்த இடத்தை ஆக்கிரமித்தது அஷு-வின் கார்.

அஷுவின் வீட்டில் இப்போது இரு பூனைகள் இருந்தன. நாய்களைக் காணோம். பல வருடங்களுக்கு முன்னரே அவை நன்கு வளர்ந்த முதிர்ந்த நாய்களாகத் தோற்றமளித்தன. நான் அவற்றைக் கண்டபோது பத்து-பன்னிரண்டு வயது ஆகியிருக்கக்கூடும். வீட்டு நாயின் சராசரி வயது 16 முதல் 18 வயது என்று எங்கோ படித்தது ஞாபகமிருக்கிறது.

அஷு இரண்டு பெண் பூனைகளுக்கு வைத்திருந்த பெயர்கள் – ஜிலேபி, ஜல்பா. அஷுவின் பேச்சுக்குக் கீழ்படிந்து நாய்களைப் போல் பால்கனிக்கு பூனைகள் செல்லவில்லை. எவ்வளவு விரட்டியும் ஜிலேபி என்ற பூனை என்னைச் சுற்றிச் சுற்றி வந்து என்னை பயமுறுத்தியவாறே இருந்தது. என் கால்கள் தரையைப் பாவவில்லை. கொஞ்ச நேரம் கழித்து, ஜிலேபியும் ஜல்பாவும் “மியாவ்..மியாவ்” என்று கத்திக்கொண்டே அன்புச்சண்டை போட ஆரம்பித்து விட்டன. அப்பாடா! ஜிலேபிக்கு என் மேலிருந்த கவனம் போனதே என்று நிம்மதியுற்றேன்.

ஐஸ்-க்ரீம் நிறுவனம் ஒப்பந்தம் முடிந்த அடுத்த நாளே, இனிமேல் வேலைக்கு வரவேண்டாம் என்று அஷுவுடம் சொல்லிவிட்டது. முன் ஜாக்கிரதையாக ஒப்பந்தம் முடிவதற்கு முன்னர் அஜ்மன் ஃப்ரி ட்ரேட் ஏரியாவில் ஒரு நிறுவனத்தை ரிஜிஸ்டர் செய்து வைத்திருந்தார். நிறுவனத்தின் இயக்குனர் என்றபடியால், அவருக்கு எமிரகத்தில் வசிக்கும் விசா கிடைக்கும். எனவே, வேலை போனவுடன் எமிரகத்தை விட்டு நீங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. சௌதி அரேபியாவில் அவருடன் பணிபுரிந்த பழைய நண்பர் ஜே.எஸ்.ராவ் என்பவருடன் சேர்ந்து தேயிலை வியாபாரம் தொடங்கினார். ஜோர்டான், சிரியா, ஏமன் மற்றும் குவைத் நாடுகளில் இருந்த சில வாடிக்கையாளர்களுக்குத் தேயிலை சப்ளை செய்தார். ஒன்றரை வருடம் லாபகரமாகவே தொழில் நடந்தாலும், அஷு, ராவ் இருவருக்குமே மேலும் சொந்த நிதியிட்டு வியாபாரம் பெருக்கும் எண்ணமில்லை. ராவின் ஒரே மகள் திருமணம் புரிந்து கொண்டு பெங்களூர் சென்ற பிறகு, அவருக்கு இந்தியா திரும்பும் எண்ணம் வலுப்பெற்றது.

சலேம் சுலைமான் என்ற அபுதாபியைச் சேர்ந்த வணிகரொருவரின் தொடர்பு கிடைத்தது. அபுதாபியில் இரண்டு சூப்பர் மார்கெட்டுகள், ஷார்ஜாவில் மூன்று ரெசிடென்ஷியல் கட்டிடங்கள், ரஸ் அல் கெய்மாவில் ஒரு க்ளப் – என்று அவரின் வியாபாரம் கொழித்திருந்தது. பல நாள் சந்திப்புகள், நிறைய உரையாடல்கள், தெரிந்த பிற செல்வந்தர்களிடம் விசாரிப்புகள் என்று அஷு எல்லா முன் ஜாக்கிரதை செயல் முறைகளைக் கையாண்டார். ராவ், அஷு – இருவரும் தத்தம் பங்குகளை சுலைமானுக்கு விற்றனர். சுலைமான் க்லொரி இண்டர்னேஷனல் என்ற புது நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக அஷு இருப்பார். நிறுவனத்தின் உரிமையாளர் சுலைமான் சட்டபூர்வ பொதுமேலாளர். அஷுவுக்கு சம்பளத்தோடு, விற்பனையில் கமிஷனும் கொடுக்கப்படும். புது நிறுவனத்தில் சுலைமான் ஒரு வருடத்திற்குள் ஐந்து மில்லியன் திர்ஹம்கள் முதலீடு செய்வார் என்று திட்டம்.

இரண்டு வருடங்கள் ஒடிய பிறகும், நிறுவன குறைந்த நிதியிலேயே இயங்கியது. பல முறை கேட்டும், இப்போது முதலீடு செய்கிறேன், அப்புறம் செய்கிறேன் என்று தட்டிக்கழித்தவாறு இருந்தார் சுலைமான். பேசப்பட்ட சம்பளத்தைக் கூட முழுக்கப் பெற முடியாத நிலையில் நிறுவனத்தின் நிதிநிலை மோசமாகிக்கொண்டு வந்தது. நிதிநிலை காரணத்தால், வந்திருக்க வேண்டிய பெரிய வியாபாரங்கள் வராமல் போயின. கருத்து வேறுபாடும், வாக்குவாதமும் முற்றின. ஒருநாள் சுலைமான் அஷுவை வேலை நீக்கம் செய்துவிட்டார். இதற்கெல்லாம் அசறுவாரா அஷு? பக்காவாக போட்டுவைத்திருந்த வேலை நியமன ஒப்பந்தத்தின் பலத்தில், தொழிலாளர் நீதி மன்றத்தில் சுலைமான் மீது வழக்கு தொடுத்தார். வெற்றி பெற்றார். ஒரு லட்சத்து தொண்ணுராயிரம் திர்ஹம்கள் அஷுவுக்கு வழங்கப்படவேண்டும் என்று தீர்ப்பானது.

தீர்ப்பு வந்த அதே மாலை, போலிஸ் வந்து அஷுவின் வீட்டை தட்டியது. குர்த்தா பைஜாமாவுடன் இருந்தவரை விலங்கிட்டு கைது செய்து சிறைக்குக் கூட்டிக்கொண்டு போனது. நிறுவனத்திலிருந்து ஒரு மில்லியன் திர்ஹம் களவாடினார் என்று அஷுவின் மீது பொய்க்குற்றம் சாற்றியிருந்தார் சுலைமான்.

அஷுவின் மகன் – அங்கித் அங்கு இல்லை. கொஞ்சநாள் முன்னால்தான், மேல்படிப்புக்காக கனடா சென்றான். ரிச்சா என்ன பண்ணுவது என்று தெரியாமல் கையைப்பிசைந்து கொண்டு நின்றார். ரிச்சா வேலை செய்துவந்த பள்ளியின் ப்ரின்சிபால் – ஷாஹித் அஹ்மது – பாகிஸ்தானை சேர்ந்தவர் – ஒரு குற்றவியல் வழக்கறிஞரைப் பிடித்துத் தந்தார். ஜாமீன் கிடைக்க 72 நாட்கள் ஆயின. ஒரு வருடமாக போலீஸ், நீதி மன்றம், வக்கில் அலுவலகம் என்று அலைகிறார். வருமானம் இல்லை. ரிச்சாவின் ஊதியத்தில்தான் வண்டி ஒடுகிறது. சேமிப்பு எல்லாம் வக்கீலுக்கே போகிறது.

“உண்மையான நண்பர்கள் யார் என்று கஷ்டம் வந்த பிறகுதான் தெரிகிறது, சுப்பு” என்று அஷு சொன்ன போது அந்த சொற்களில் புதைந்திருந்த துக்கம் தெளிவாக உணரும்படியாக இருந்தது. ஏனெனில், ஒருவரைப்பற்றியும் துளி கூட குறை சொல்லாத களங்கமில்லாத மனிதராக அவரை ஒன்பது வருடம் முன்னர் நான் அறிந்திருந்தேன்.

“முன்னெச்சரிக்கையின் மறுபெயர் அஷுவென்று என் நண்பர்கள் எல்லாரும் கேலி செய்வார்கள். அந்த அளவுக்கு தற்காப்புணர்வோடு செயல்படுவேன். சுலைமானைப்பற்றி அவ்வளவு விசாரித்தேன். இருந்தும் அவனுடைய உண்மையான முகத்தைக் கடைசி வரை என்னால் ஊகிக்க முடியவில்லை. எனக்கும் சாமர்த்தியக்குறைவு இருக்கக்கூடும் என்பதை இந்நிகழ்வுகள் எனக்கு உணர்த்தின. வயதாவதாலோ என்னமோ இப்போதெல்லாம் இவையெல்லாவற்றையும் ஒர் அனுபவம்தானே என உணர்ச்சிக்கலப்பின்றி என்னால் அறிவு பூர்வமாக யோசிக்க முடிவதில்லை. பல வருடம் முன்னர் ஒரு சாதாரண வேலையிழப்பின் காரணமாக ‘ஷார்ஜா வேண்டாம் இந்தியா சென்று விடுகிறேன்’ என்று நீ சொன்னதை பல முறை நினைத்து பார்த்திருக்கிறேன்… உன்னைப் போல இந்தியா திரும்பும் எண்ணம் ஏன் தோன்றவில்லை என்று என்னை நானே நொந்து கொள்கிறேன்”

கொஞ்ச நேரம் மௌனமானார். என்ன சொல்வது என்று தெரியாமல், நான் ஜிலேபியும் ஜல்பாவும் எங்கே என்று தேடினேன். ஹாலில் இல்லை. பக்கத்து அறைக்குச் சென்றிருக்கக்கூடும்.

“என் வாழ்க்கையில் என்றுமே மறந்தவிட முடியாத வருத்தம் – போன வருடம் அலஹாபாத்தில் என் தாயார் மறைந்த போது, ஒரே மகனான நான் இறுதிக்கடன் செய்ய இந்தியா போக முடியாமல் என் பாஸ்போர்ட் இல்லாமல் போனதுதான்… இவ்வழக்கு எப்போது நிறைவுறும் என்றோ என்ன தீர்ப்பு வரும் என்றோ தெரியாது. என் தாயாரின் ஈமச்சடங்கு செய்ய முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு இந்த அபார்ட்மெண்ட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்த அவஸ்தையை விட பெரிய தண்டனையா எனக்கு கிடைத்து விடப்போகிறது? என் பாஸ்போர்ட் என் கையில் என்று கிடைக்கும் என்ற ஒரே கேள்வி மட்டுமே என்னுள் தற்சமயம்…”

அஷுவின் கண்கள் பனித்தது போன்று தோன்றியது.

ஜிலேபியும் ஜல்பாவும் என் பாதங்களை உரசின. கலங்கும் என் கண்களையும், மனதையும் அஷுவிடமிருந்து திருப்பாமலேயே நான் அவை விளையாடுவதற்கு வாகாக என் கால்களை வைத்துக் கொண்டேன்.