வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்: வாக்னரும் நானும்

பயப்படவேண்டாம். ரிச்சர்ட் வாக்னருடன் எனக்கு நேர் பழக்கம் கிடையாது. நம்மிடையே வாழும் நடமாடும் விக்கிபீடியா எனக் கருதப்படும் ஆங்கிலேயரான ஸ்டீபன் ப்ரை பிபிசியுடன் இணைந்து உருவாக்கிய காணொளி தான் ‘வாக்னரும் நானும்’.

எத்தனையோ இசைக் கலைஞர்கள் வாழ்ந்த ஐரோப்பாவில் இன்றளவும் ரிச்சர்ட் வாக்னருக்கு தனித்துவமான அடையாளம் உண்டு. சொல்லப்போனால் மோட்ஸார்ட், பீத்தோவன்,பாஹ், ஹேன்டல் போன்ற மேதைகளை விட மிகக் குறைவான அளவு தான் இவர் இசையமைத்திருக்கிறார். ஆனாலும் இன்று வரை மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீத வரலாறில் ரிச்சர்ட் வாக்னருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. இசை வரலாறை வாக்னருக்கு முன், வாக்னருக்குப் பின் எனப் பிரித்ததில் பீத்தோவனைப் போல முதன்மையான சிம்மாசனத்தில் இசை உலகம் அவரை வைத்துள்ளது.

அதே சமயம், இஸ்ரயேல் நாட்டில் அவரது இசையை ஒளிபரப்புவதற்குத் தடை உள்ளது. சொல்லப்போனால் யூத இனத்தினர் அனைவருக்கும் வாக்னர் மிகப் பெரிய எதிரி. அவரது இசையை வீட்டில் கேட்பதற்கு கூட பல யூத குடும்பங்கள் அனுமதிப்பதில்லை.

அதிகமாக ரசிக்கப்படும் இசையைக் கொடுத்த அவரை இந்த அளவு சில மக்கள் வெறுக்கக் காரணம் என்ன?

கலைத்துறையில் ஈடுபடும் எந்தக் கலைஞரையும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்களை மட்டும் கொண்டு அளவிட முடியாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பிரதிநிதிகள். தனிப்பட்ட திறமையை மட்டும் முன்வைத்து ஏற்றங்களைஅளவிடாமல், அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பீட்டையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

ரிச்சர்ட் வாக்னர் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய இசை உலகம் எப்படி இருந்தது?

பதினான்காம் நூற்றாண்டு முதல் பாரீ (Paris)  நகரத்தில் உள்ள நாட்ர டாம் (Notre Dame) தேவாலயத்தில் தொடங்கிய ‘நெடும்பாடல்கள்’ எனும் குரலிசை வழியே ஜெர்மன் நாட்டு பாதிரி மார்டின் லூதரால் தேவாலயப் பாடல்கள் எனும் பெரும் வழக்கம் நிலைபெற்றது. இதை வைத்துப் பார்க்கும்போது, நாட்ர டாம் தேவாலயத்தில் பல குரல்களால் பாடப் பெற்ற தேவாலயப்பாடல்கள் தான் இன்றைய மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்துக்கு ஆரம்பம் எனக் கொள்ளலாம்.

மார்டின் லூதரின் பாணியைப் பின்பற்றி பாக் தேவாலய இசைக்குள் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். பல ஸ்ருதிகளில் குரல்கள் ஒருங்கிணைந்து பாடும் வழக்கம் மேற்கத்திய இசை மரபின் ஹார்மனிக்கு (Harmony) அடிப்படையாக அமைந்தது. பல குரல்கள் ஏற்ற இறக்கத்தோடு வெவ்வேறு ஸ்ருதிகளில் பாடும்போது இசை லயமும் ஸ்ருதியும் தன்னிச்சையாக ஒருங்கிணைந்தது. இதுதான் ஹார்மனி எனச் சொல்லப்படும் ஒத்திசைவுக்கான தொடக்கம்.

பிற்காலத்தில் ஹார்மனியின் பல சங்கதிகளைக் கொண்டு மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம் வளர்ந்து வாக்னர் காலகட்டத்தில் ஷுமான், மென்டல்ஸொன் போன்ற மேதைகளால் இசையில் கற்பனாவாதம் (Romanticism) உருவானது. விளக்க முடியாத உணர்வுகளை வெளிப்புற சங்கதிகளோடு பொருத்திப் பார்ப்பதும், அப்படிப்பட்ட புற நிகழ்வுகளின் அழகியலே கலையின் அழகியல் எனவும் வாதம் செய்தது. கற்பனாவாதக் கலைஞர்கள் பழங்கதைகள், தொன்மம், மக்களின் நிகழ் கலைகளிலிருந்து தங்களுக்குத் தேவையான கருத்துகளையும் அழகியல்களையும் எடுத்துப் பிரயோகப்படுத்துவர். மனித மனதுக்கும் அறியவியலாத இயற்கைக்கும் உள்ள, சொற்களால் எளிதே விளக்க முடியாத உறவை விவரிப்பதே கற்பனாவாதக் கலைகளின் வேலை எனப் பிரகடனம் செய்தனர். இந்த இசையை தொன்மக் கதைகள் மற்றும் ஐதீகங்களுடன் இணைத்து பெரிய நாடக வெளியை உருவாக்கியதால்தான் வாக்னர் இசை நாடக உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இத்தாலி நாட்டின் ஒபேரா எனும் இசை நாடகங்கள் வெறும் இசை மட்டுமே. நாடகமல்ல என்பது அவரது வாதம்.அவரைப் பொறுத்த வரை இசை இந்த வெளியின் உணர்வுத் தளம் மட்டுமே. இசையே நாடகமல்ல.

தனிப்பட்ட மன உணர்வுகளை மீட்டுவதால் சில இசை வகைகள் நமக்குப் பிடிக்காமல் போகலாம். காலத்தின் எண்ணிலடங்கா கதவுகளைத் திறக்க இசை ஒரு ஊடகமாக இருப்பதால் சில கசப்பான அனுபவங்களை நம் நினைவுக்கு கொண்டு வரலாம். என்றாலும் அந்த இசையை உருவாக்கிய இசையமைப்பாளரை யாரும் வெறுப்பதில்லை. நமது ரசனைக்கு ஒவ்வாமல் இருக்கும்போது அவ்வகை இசையைத் தாண்டிவிடுகிறோம்.

ஆனால், காலத்தின் அழியாத கறை ரிச்சர்ட் வாக்னரின் இசையை வியாபித்தது. அவரது இசை ஹிட்லருக்குப் பிடித்த இசையாக மாறியது தான் முதல் காரணம். ஜெரமன் தேசியவாதத்தை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கத்தோடு வாக்னரின் சில புத்தகங்கள் வெளியானது இரண்டாவது காரணம். ஜெர்மன் நாட்டு அடையாளங்களை, கலாச்சார விழுமியங்களை, புதையுண்ட தொன்மங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வம் இருவரையும் இணைத்தது எனச் சொல்லலாம். ஆனால் இந்த மீட்கும் செயலை இருவரும் வெவ்வேறு வழிகளில் கையாண்டனர் என்பதை உலகம் மறந்தது.

வாக்னரின் பெரிய ரசிகரான ஸ்டீவன் ஃப்ரை (Stephen Fry)  ஜெர்மன் நாட்டில் நடக்க இருக்கும் பெய்ருட் எனும் வாக்னர் இசை நிகழ்வுக்குச் செல்லப் பயணிக்கிறார். அதற்கு முன் நியூர்ன்பெர்க் (Nürnberg) ) எனும் இடத்துக்குச் செல்கிறார். யூத அழிப்புக்கான ஆயத்தங்களும் ஹிட்லரின் பிரச்சாரத்தை காண அணிவகுத்த கூட்டங்களுக்கும் துவக்கம் இங்குதான்.  இது ஹிட்லரின் வரலாற்றில் மிக முக்கியமான இடமாகும். யுதர்களுக்கு எதிரான பல சட்டங்கள் உருவானதும் இந்த இடத்தில் தான். குறிப்பாக, யூதர்கள் ஜெர்மன் நாட்டுப் பிரஜைகள் அல்ல என அறிவித்ததும், பவாரியா மாநிலத்தின் பல பகுதிகளில் ‘உடைந்த கண்ணாடிகளின் இரவு’ (Kristallnacht- Night of Broken Glass) எனப்பட்ட,  யூத அமைப்புகளின் கண்ணாடி அலங்காரங்களை உடைத்து யூதர்களைப் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தும் போக்கின் துவக்கமும் இதுதான்.
குறிப்பாக, நாஜி அமைப்புகள் நடத்திய கண்டனப் போராட்டங்களுக்கு முன் வாக்னரின் இசை ஒலிபரப்பப்படும். அதே போல, யூதர்கள் சிறைபட்டிருந்த முகாம்களிலும் வாக்னரின் இசை சில குறிப்பிட்ட நேரங்களில் இசைக்கப்பட்டன. வாக்னரின் ஜெர்மன் தேசியவாத நோக்கில் யூத வெறுப்பு சிறு துளிதான் என்றாலும் அதைப் பெரிய ஜ்வாலையாக மாற்றியது ஹிட்லரின் இசை ரசனை மட்டுமே. அதுவே வாக்னருக்கு எதிர்ப்பு உலகில் உருவாகவும் காரணமாயிற்று.
ஸ்டீவன் ஃப்ரை ஒரு யூதர். அவரது குடும்பங்களில் வாக்னரின் இசைக்கு பெரிய தடை இருந்தது. அந்த தடையே ஒரு காதலாக மாறியதாக அவர் குறிப்பிடுகிறார். அப்படி என்னதான் அதில் இருக்கிறது என்றறியும் இளைஞருக்கு இயல்பான ஒரு குறுகுறுப்பினால் வாக்னரின் இசையை சிறுவயதிலிருந்து கேட்கத் தொடங்குகிறார். காலப்போக்கில் அவருக்கு மிகவும் உத்வேகம் தரும் இசையாக அவை மாறுகின்றன.

இசை நாடகங்களில் தந்தை என அழைக்கப்படும் வாக்னருக்கு வெற்றி சுலபத்தில் வரவில்லை. தன சொந்த ஊரான ஜெர்மனியில் இத்தாலிய இசை நாடகங்கள் மட்டுமே வெற்றி அடைவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், அவற்றில் இசை தான் அதிகமாக இருந்தது என்றும் நாடக உச்சங்கள் இல்லை என்றும் அவர் நினைத்தார். ஜெர்மன் நாட்டு பழங்கதைகள், ஐதீகங்களைக் கொண்டு குள்ளன் ஆல்பெரிஹ்ஹின் மோதிரம் நீபுலோங்  (Der Ring des Nibelungen- டெர் ரிங் டெஸ் நீபுலோங்), டிரிஸ்டனும் இசொல்டும் (Tristan und Isolde) போன்ற இசை நாடகங்களை பல வருட உழைப்புக்குப் பிறகு உருவாக்கினார். ஆனால் அவற்றின் பிரமாண்டம் காரணமாக போதிய நிதி இல்லாமல் காகிதத்திலும் அவரது கனவிலும் மட்டுமே அவை உருப்பெற்று இருந்தன. இந்நிலையில் பவேரியா நாட்டின் இளவரசர் இரண்டாம் லுட்விக், வாக்னரின் இசைக்கு தீவிர ரசிகராக மாறினார். அவரது உதவியைப் பெற்று தனது கனவு அரங்கமான பெய்ஹோய்ட்-ஐ(Bayreuth) அந்நகரில் வாக்னர் உருவாக்கினார்.

அதாவது உலகிலேயே முதல் முறையாக, பெரும் பொருட் செலவில், அதிநவீன கட்டமைப்பிலும் ஒரு இசைக்கலைஞரின் இரு நாடகங்களுக்காக மட்டுமே கட்டப்பட்டது தான் பெய்ஹோய்ட் அரங்கம். அதன் ஒவ்வொரு சதுர அடியையும் வாக்னர் வடிவமைத்து உருவாக்கினார்.

வாக்னர் மாபெரும் இசைக்கலைஞர் மட்டுமல்ல. கட்டிடக்கலை, அரங்க வடிவமைப்பு, பார்வையாளர்களது மேஜை வசதிகள் (பதினெட்டு மணி நேர நாடகம் ரிங்), எதிரொலிக்காத அரங்கப் பொருட்களின் தொழில்நுட்பம் என அனைத்திலும் தன முழு திறமையைக் காட்டினார். அதனால், இசையில் மட்டும் மிகச் சிறந்ததாக இல்லாமல், ஒளி/ஒலி அமைப்புகளும் இன்றளவும் பிரமிக்கத்தக்க அமைப்பாக இந்த நாடகம் உருவாகியுள்ளது. இன்றளவும் இதற்கு இணையான அரங்கம் உலகத்தில் இல்லை என்றே பலர் கருதுகிறார்கள். ஆனால், இங்கு வருடம்தோறும் நடந்து வரும் இசை நிகழ்ச்சிக்கு அனுமதிச் சீட்டு கிடைப்பதை விட குதிரைக் கொம்பைத் தேடுவது சுலபம். குறைந்தபட்சம் ஏழு வருட காத்திருப்புக்குப் பின் சீட்டு கிடைக்கலாம். அதைப் பற்றி மிக சுவையான கேள்வி பதில்கள் இங்கு இருக்கின்றன. (http://www.faqs.org/faqs/music/wagner/general-faq/section-17.html)

பெய்ஹோய்ட் அரங்கில் ஸ்டீபன் ப்ரை

இப்படி தவம் கிடக்க வேண்டிய டிக்கெட் ஸ்டீவனுக்கு வழங்கப்படுகிறது. இதைவிடப் பெரிய பரிசு தனக்கு யாரும் கொடுத்துவிட முடியாது என அவருக்குத் தலைகால் புரியவில்லை. தன முப்பது வருடக் கனவு நிறைவேறப்போவதாகக் கூத்தாடுகிறார். ஆனாலும் தன் இனத்துக்கு நடந்த கொடுமைகளால் சஞ்சலத்துக்கு தள்ளப்படுகிறார். தன குடும்பத்தில் பலரும் ஹிட்லரின் சிறைகளில் இறந்துள்ளதால் ஆழமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார். ஆசை ஒரு புறம், தான் செய்வது மனப்பூர்வமாக சரிதானா எனும் கேள்வி மறுபுறம் அவரை அலைக்கழிக்கிறது.

லண்டனிலிருந்து கிளம்புவதற்கு முன் இரண்டு காரியங்கள் செய்கிறார். ஹிட்லரின் கொடும் பாசறைகளில் செல்லோ கலைஞராக அடைபட்டிருந்த ‘Inherit the Truth’ ஆசிரியர் அனிடா லாஸ்கரைச்(Anita Lasker-Wallfisch) சந்திக்கிறார் (4).

அவரது முதல் கேள்வியே ‘ஏன் வாக்னர்? ஏன் பெய்ஹோய்ட்?’ என்பதுதான். அதற்கு ஸ்டீவன் பல விளக்கங்கள் கொடுக்கிறார். தன சுய அடையாளத்தை நிறுவியதில் வாக்னரின் இசைக்கு பெரும் பங்கு உண்டு எனச் சொல்கிறார். பின்னர், ‘சிறைகளில் வாக்னரின் இசை பின்னணியாக இசைக்கப்பட்டதா?’ எனத் தன் குற்ற உணர்வுகளைக் கேள்விகளாகக் கேட்கிறார். அதற்கு அனிதா, ‘கண்டிப்பாகக் கிடையாது. நான் இருந்த ஆஸ்விச், பெல்சென் பாசறைகளில் அப்படி எந்த இசையும் தனிப்படுத்தி வாசிப்பது கிடையாது. காலை வேளையில் சில மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதப் பாடல்களை வாசிப்போம். பாஹ், ஷுமான் எனப் பலருடையதும் அதில் அடங்கும்.’ எனக் குறிப்பிட்டதும் தன குற்ற உணர்வு குறைந்ததாக ஸ்டீவன் குறிப்பிடுகிறார். ‘அப்படியா?! ‘ எனப் பலமாகச் சிரித்தபடி, ‘வாக்னரின் இசை ஒரு கூச்சல். அதில் இசையைக் கண்டுபிடிக்கக்கூடிய திறமை உங்களுக்கு இருக்கிறதே, ஆச்சர்யம் தான். போய் பாருங்கள்.’ என வழி அனுப்புகிறார் அனிடா.

ஓரளவு திருப்தி அடைந்தாலும், ஸ்டீவனுக்கு தன செய்கையில் மனம் ஒன்றவில்லை. இஸ்ரயேல் போன்ற நாடுகளே வாக்னரின் இசைக்குத் தடை போடும் போது ஜூபின் மேத்தா, டேனியெல் பேரன்போயிம் (Daniel Barenboim) போன்றவர்கள் அதற்கு எதிராக தங்கள் போராட்டங்களை இன்றும் நடத்தவில்லையா எனத் தன் செயலுக்கு இருக்கும் நியாயத்தை பார்வையாளர்கள் முன் வைக்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு  பெய்ஹோய்ட் இசை நிகழ்ச்சிக்குப் போவது எனத் தீர்மானிக்கிறார். ஆனால், நியுர்ன்பெர்க் மைதானத்தில் உட்கார்ந்திருக்கும்போது, ‘என் மனம் மிக சஞ்சலமாக இருக்கிறது,’ எனத் திரும்பத் திரும்ப குறிப்பிடுகிறார்.

ஒரு வழியாக, விழா தினத்தன்று கையில் தன முப்பது வருடக் கனவுச் சீட்டோடு அரங்கத்துக்கு முன் வந்து நின்று அவரது முடிவைச் சொல்கிறார்.

‘வாக்னரின் ’யூத வெறுப்பாளன்’ எனும் அடையாளம் மிகவும் முக்கியமான விஷயம். அதற்கு நேரடியான ஆதாரங்கள் இல்லையென்றாலும், அவரது நாடங்களில் சில பாத்திரங்கள் அப்படிப்பட்ட சாயலுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. அது அந்தக் கால ஜெர்மன் நகரத்து சமூக மனச் சாய்வாக இருக்கலாம். ஆனால், பல வருடங்களாக அவரது இசையைக் கேட்கும் ரசிகன் என்ற முறையில் என் மனதுக்குத் தெரியும், வாக்னர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவரை இப்படிப்பட்ட அடையாளங்களில் குறுக்க முடியாது. அதையும் மீறி உலகம் இதுவரை காணாத இசை மேதை அவர் என்பது எனக்குத் தெரியும்.’

வரலாற்றில் நடந்தவற்றுக்கு ஒவ்வொரு தலைமுறையும் பொறுப்பு ஏற்க வேண்டுமா எனும் அடிப்படைக் கேள்விகளை பேசுபொருளாக எடுத்துகொண்டால் வரலாற்றையே முழுவதாக அலசினாலும் விடை கிடைக்காது என்கிறார் ஸ்டீவன். முடிந்துபோனவை என்பதால் வரலாற்றின் கோர முகங்களுக்கு இன்று எதுவும் மதிப்பில்லை என தீர்ப்பெழுத முடியுமா? அல்லது, பதிலுக்கு பதில் கொடுக்கும் பணியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மெல்ல அந்த பொறுப்பைத் தட்டிக் கழித்து நம் வருங்காலச் சந்ததியினருக்கு சொத்தாகக் கொடுக்கலாமா? இல்லை அவற்றை மறந்துவிடத்தான் முடியுமா? பழைய நிகழ்வுகளுடன் நாம் ஒவ்வொருவரும் கொள்ளும் ஒப்பந்தம் தான் நமக்கான வரலாறு எனக்கொண்டால், ஸ்டீவனுக்கு மட்டுமல்ல நம் எல்லாருக்குமே அந்த பொறுப்பு இருக்கிறது. கதவு ஜன்னல்களை அடைத்துவிட்டு நம் வேலையைப் பார்த்தாலும் நம் உள்ளத்திலிருக்கும் கேள்விகளை என்றாவது எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்பதும் நம் சரித்திரம் தான்.

கட்டுரை எழுத உதவிய தளங்கள்

1. Wagner & me – Stephen Fry, BBC. http://www.faqs.org/faqs/music/wagner/general-faq/section-17.html காணொளி

2. Beyreuth Festival – http://www.wagneropera.net/Bayreuth/2012-Bayreuth-Festival-Programme.htm

3. The Ring of Nibelung – http://www.amazon.com/Ring-Nibelung-Richard-Wagner/dp/0393008673

4. பிபிஸி யில் ஒலி பரப்பப்பட்ட அனிதா லாஸ்கரின் பேட்டியை இங்கு கேட்கலாம்.  ஏன் பல நாடுகளுக்குப் போனாலும், தான் ஜெர்மனிக்கு ஒரு தடவை கூடப் போக மறுப்பது ஏன் என்பதையும், தன் இனஒழிப்பு முகாம்களில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் இங்கு பேசுகிறார்.  http://www.bbc.co.uk/iplayer/console/p0093ndt