தானம்

எனக்குத் தலையே வெடித்து விடும் போல் இருந்தது. எப்படிப் பட்ட மனுசன்?. ச்சே சும்மா நீயாக சொல்லிக் கொள்ளாதே. உனக்குத் தெரியுமா எப்படிப்பட்ட மனுசன் என்று? ஏதோ நீயாக நினைத்துக் கொண்டு ஏதாவது கற்பனை பண்ணிக்கொண்டால் யார் பொறுப்பு.. அதற்காக இப்படியா ஒரேயடியாக மூச்சு முட்டக் கல்லைத் தூக்கித் தலையில் போடுவது. டேய் உனக்கென்ன ? உனக்கென்ன உறவா? சினேகிதமா ? அலுவலகத்தில் பக்கத்து சீட்டுக்காரர். பார்த்தால் ஹாய் . போனால் பை. பக்கத்தில் சாப்பிட்டால் ஊறுகாயோ அப்பளமோ பகிர்வு. வருகிறார். போகிறார். அவர் எப்படி இருந்தால் உனக்கென்ன? அவர் என்ன செய்தாலும் நரி இடம் போதல் வலம் போதல் தானே உனக்கு. நீயா கடிவாங்குகிறாய். அதென்ன தலையில் கல்லைப் போட்டார் என்று கட்டிய மனைவி மாதிரிப் புலம்புகிறாய்…. ம்ம் அப்படி எல்லாம் விட்டு விட முடியுமா ? இனிக்க இனிக்கப் பேசிய பக்கத்து வீட்டுப் பத்தாவது படிக்கும் பையனை வாயில் புகையுடன் பார்க்கும் போது மனம் பதறாதா? நமக்கு என்ன சம்பந்தம் என்று பேசாமல் விட்டு விடுவோமா? சரி பேசாமல் விட்டு விடுவோம். இப்படிப் போயிட்டானே என்று மனதில் நினைக்காமல் இருக்க முடியுமா? மனம் தான் அப்படி விட்டு விடுமா?

மனம் விடாததால் புத்தியும் விடவில்லை. ஏன் ? ஏன்? என்று கேட்டுக் குடைந்தது. புதிய புதிய யுத்திகளையும் தந்தது . இதோ ஆயிற்று. புதிய வழி இல்லை தான். பழைய வழி தான். பார்ட்டி வைத்துப் கொக்கி போட்டு வாங்குவது. இத்தனை திட்டமிடல் தேவைதானா? எனக்கு ஏன் புத்தி இப்படிப் போகவேண்டும். ..போனால் என்ன. தப்பா ? அந்த ஆள் புத்தி இப்படி போறப்ப அதைக் கண்டுபிடிக்க ஒரு சின்ன ஏற்பாடு. இது கூட இல்லாமல் வாழ்வில் என்ன சுவாரஸ்யம். மனுசன் குடிக்க மாட்டார்.ம்ம் அப்படிச் சொல்லக் கூடாது. ஒரு ஸ்பூன் எடுத்து பெப்ஸிக்குள் போட்டுக் கொள்வார். ஒரு ஸ்பூன் குடித்தாலும் குடி குடி தானே என்று சொல்லிக் கொள்வார். நானும் குடிகாரன் தான் என்பார். என்ன கணக்கோ ? என்ன நினைப்போ ஒன்றும் புரியாது. ஆனால் இந்த மங்கிய வெளிச்சத்தில் ஒரு சிறிதேனும் உளறுவார். உளறல் என்று சொல்ல முடியாது. சொல்ல விரும்புவது தான். தானாகச் சொல்ல முடியாதது. அப்பட்டமாகச் சொல்ல முடியாதது. தெரியாமல் சொல்லுவது போல் சொல்ல ஒரு வழி. ஒரு வகை. அது அவருக்கும் தெரியும். எனக்கும் தெரியும். தெரிந்து கொண்டது போல் காட்டிக் கொள்வதில்லை என்பதும் இருவருக்கும் தெரியும். இருந்தும் கண்ணா மூச்சி ஆட்டத்தில் ஒரு சுகம். இந்த ஆட்டம் தாம்பத்யத்தில் உண்டு. பிள்ளை-பெற்றோரிடத்தும் உண்டு. நட்பிலும் கூட. நாமே தேடிக் கொள்ளும் பாதுகாப்பு. யார் யாரைப் பாதுகாத்துக்கொள்வது?. அவரவர் எல்லையை நிர்ணயித்துக் கொள்ள ஒரு தந்திரம். ஏதோ பார்ட்டியில் மனம் விட்டுப்ப் பேசுகிறோம் என்பதால் அலுவலகத்தில் இந்தப் பேச்சை எடுத்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை.

வரட்டும். மனம் காலங்களைக் கால் கொண்டு தாவியது. கால்களா?. இறக்கை கட்டித் தாவியது. வேறு வழியில்லை எங்காவது உட்கார்ந்து கொண்டு யோசிப்பதும் பழையதை அசை போடுவதும் எனக்குப் பழக்கமாய்ப் போயிற்று. நீங்களும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆறு வருடங்களுக்கு முன் இந்த அலுவலகத்தில் சேர்ந்த போதிலிருந்தே இருவருக்கும் இதே இடம் தான். அவர் மனைவி கல்யாணத்துக்குச் சில வருடங்களுக்குப் பின் வேலையை விட்டுவிட நான் அந்த வேலையில். இன்கிரிமெண்ட் வந்தாலும் ப்ரமோசன் வந்தாலும் இடம் மட்டும் மாறவில்லை. ஆரம்பத்தில் ஒரு சினேகப் புன்னகை கூட இல்லாமல் இயந்திரம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பேச்சும் இல்லை. ஏதோ உருவம் நிழலாடி நீங்கிய மாதிரித் தோன்றும். நம்மிடம் இதெல்லாம் பலிக்குமா? இதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு பதிலுக்கும் அதையே செய்யலாம். பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு யாரிடமாவது என்ன மனுசன் என்று சொல்ல்லாம். சிலர் செய்யக்கூடும். சிலர் கர்வி , ஈகோ பிடித்தவன் என்று திட்டலாம். பெண்கள் கண்டிப்பாகச் செய்வர். நாம் விளையாடித் தான் பார்க்க வேண்டும் வாழ்க்கை விளையாட்டு. பேச வைக்க வேண்டும். சிரிக்க வைக்கவேண்டும். இதெல்லாம் எதற்கு என்பவர்களுக்கு அதெல்லாம் எதற்கு என்பது தான் என் பதில். இப்படிப் பட்டவர்களை தொடாமல் விட்டுச் செல்வது யாருக்கும் நல்லதில்லை. நாமாக முந்திக் கொண்டு எங்கோ திறந்திருக்கும் துவராத்தைக் கண்டு பிடித்து கசிவுண்டாக்க்கி கடலைக் கொண்டு வந்து விட வேண்டும்.

பல வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. புதிய மொபைல் உபயோகம் அவருக்குத் தெரிந்திருக்காது. கோப்பிலிருந்து அச்சிடுவதில் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்யும். அவருக்கு இல்லாவிட்டால் நமக்கு நம் வேலையைப் பற்றி ஒரு சந்தேகம் இருக்கலாம். அல்லது உருவாக்கிக் கொள்ளலாம். இப்படித் திட்டம் போட்டுப் பேசினால், அடித்தால் அம்மி நகராமல் போய்விடுமா? அம்மி, குழவி எல்லாம் நகர்த்தியாச்சு. மனுசன் நல்லவர் தான். என்னமோ குடும்பம் சரியில்லாதது தான் இப்படி சுவத்தை வெறிக்கக் காரணம். அது என்னவென்று தெரியவில்லை. லேசுபாசாகத் தெரிந்ததெல்லாம் மனைவியிடம் சண்டை நாட்களில் மதியச் சாப்பாட்டுக்கு வெளியே போய்விடுவோம். டேபிளைக் குத்துவதில் ஆரம்பித்து , நல்ல பெண்ணாப் பாத்துக் கட்டிக்கோடா ?என்று அறிவுரை சொல்வதில் முடித்து ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வார். கொஞ்சம் சூடு ஆறியது போல் இருக்கும்.

இப்படி உருவானது ஒரு பந்தம். நட்பு என்று சொல்லிவிட முடியாது. அதை விடக் கொஞ்சம் கம்மி. அதற்காக ஒரேயடியாக வெறும் தெரிந்தவர் என்றும் சொல்லிவிடமுடியாதபடி ஒரு உறவு. அலுவலகத்தில் எட்டு வயசு வித்யாசமான , பதவி வேறு பாடுகளுள்ள இருவருக்குள் இருந்த நீள அகலத்து இடைவெளிக்குள் ஆகச்சாத்தியமான ஒரு உறவு வடிவம்.

‘ஃப்ளாஸ் பேக் ஆச்சா. விசயத்துக்கு வருவோம் ’

‘ஹல்லோ வாங்க ..’. வெளியே வந்து விட்டால் சார் என்றழைப்பதில்லை. உள்ளே அதை மறப்பதில்லை. இரண்டிலும் அவருக்கு விருப்பமும் சம்மதமும் தான்.

அவர் வழக்கம் போலத் தான் ஒரு ஸ்பூன் மது . ஸ்பூன் என்றால் ஸ்பூனே தான் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு டம்ளர் பெப்ஸி. நான் சமத்துவத்தில் . அல்லது என் விகிதம் அவருக்கு பெருமளவு உல்டா.

அவரே ஆரம்பித்தார்.

‘ நீ பாத்துட்ட தான . நேத்தைக்கு. அதுனால தான பார்ட்டி. பொறுக்கி’

நான் மறைக்கவும் இல்லை. ஆமென்றும் சொல்லவில்லை . சிரித்தேன். அவர் போய் வந்த இடத்தை நினைத்தால் கொஞ்சம் அறுவெறுப்பாகக் கூட இருந்தது. பசங்களுக்குத் தெரியாத இடமா ? நாம் போனதில்லை என்றாலும் போன பசங்களைத் தெரியும்.

இந்தச் சூழலை எப்படிக் கையாளவேண்டும் என்று விளங்கியது.

‘ ஒண்ணு சொல்லட்டா செல்வம்.. எல்லாம் வீட்டப் பத்தி தான்ப்பா. உனக்கும் கூடக் கொஞ்ச கொஞ்சம் தெரிந்திருக்கும். ஒண்ணும் அறியாமத் தெரியாமக் கல்யாணம் பண்ணிக்கலை. எட்டு வருசமா லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணி இருக்கேன். நீ உட்கார்ந்திருந்த சீட்ல உட்கார்ந்திருந்தவ தான். ஒரே ஜாதியுமாப் போச்சு. எங்க வீட்டுலயும் பேருக்கு ரெண்டு சொல்லிட்டு கோயில்ல தாலிகட்டி ஹோட்டல்ல வரவேற்பு வச்சு முடிச்சிட்டாங்க. அவுங்க வீட்டுல இன்னி வரைக்கும் ஒத்துக்கல. அது கிடக்கட்டும். பிரச்சனைக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பிரச்சனையே கல்யாணம் ஆனதிலிருந்து அப்படியே மாறிட்டது தான்.

ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. நாம தான் எல்லாம் தெரிஞ்சவன்கிறது குடும்ப வாழ்க்கைல செல்லாது. நாட்டுக்கு ராஜாவா, மந்திரியா இருந்தாலும் நாலு சுவத்துக்குள்ள புருசனுக்குப் பொண்டாட்டிதான். பொண்டாட்டிக்குப் புருசந்தான். எப்படி ஆரம்பிச்சதுன்னே தெரியல. ஆனா ஆரம்பிச்சுடுச்சி. உனக்கே தெரியும். என்னைப் பத்தி. அவளுக்கு ஒன்ன விட அதிகம் தெரிஞ்சிருக்கனும். ரெம்பவே தெரிஞ்சிருக்கனும். தெரியாட்டியும் நம்பிக்கை இருக்கனும். புரியுதா என்ன சொல்ல வரேன்னு.
‘ம்ஹூம். தலையும் புரியல. வாலும் புரியல.’

‘ நீ சின்னப்பையன். நல்லா இருக்கனும்டா நீ. என்ன மாதிரி மாட்டிக்கக் கூடாது. நல்லா விசாரிச்சுக் கல்யாணம் பண்ணு. என்னத்த விசாரிச்சு என்ன பண்ண. வெளிய தெரியாத ஒண்ணு ஓடிக்கிட்டிருக்கத யார் தான் சொல்ல முடியும். தண்ணியப் பாத்தே தரம் கண்டு பிடிச்சிடுவேன்ன்னு சொன்னவங்க கூடத் தப்பிக்க முடியாது. தெரிஞ்சே மாட்டிகிட்டேன். இல்லை இல்லை. அப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. இப்படி இல்லையா அல்லது எனக்குத் தெரியவில்லையா ஒன்னும் புரியலைப்பா. இன்றைக்கு உண்மையா ? நேற்று தான் உண்மையா. உண்மைதான் உண்மையா? ’ தழுதழுக்க ஆரம்பித்திருந்தார்.

இவ்வளவு தூரம் ஆகும் என்று நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் லவ் பண்ணிக் கொண்டு கல்யாணம் பண்ணிக் கொண்ட கிளி மாதிரி மனைவி. கிளி என்றால் கிளியேதான். வரிசயாகப் பிறந்த இரண்டு குழந்தைகள். வசதியான வாழ்வு. ஏதோ சின்னப்பிரச்சனைகள். பிரச்சனை இல்லாத வீடு எங்கே இருக்கிறது. இந்த மனிதர் தான் சைக்கோ மாதிரிப் பெரிது படுத்துகிறாரோ என நினைத்து வைத்திருந்தேன். இவர் ஆரம்பிக்கிற சீரைப் பார்த்த்தால் இன்னும் என்னென்னவோ இருக்கும் போலிருக்கிறதெ..

‘ம்ம் என்னத்தச் சொல்ல. எல்லாம் என் தலைவிதி. வெளியே சொன்னால் வெட்கக்கேடு.. எதற்கெடுத்தாலும் சந்தேகம்டா செல்வம். என்னால் பொறுக்க முடியவில்லை.. கல்யாணத்துகு முன் காட்டிய முகம் ஒண்ணு . பார்க்கலைன்னா அப்ப்டியே துடிச்சிப் போயிடுவா ! உதட்டில் தெரியும் அத்தனை உணர்ச்சிகளும். இப்பப் பாரு மூஞ்சில எப்பயும் சிடுசிடுப்பு. சொல்ல வந்ததை முகத்தாலும் சொல்லக் கடுகடுப்பு. உதட்டைச் சுளித்துக் கொண்டு கழுகு கொத்துவது போல் ஒரு பார்வை. பாத்திரத்தை உள்நெளிய வைக்கும் டங் டங் கென உருட்டல். போதுமடா சாமீ..வீட்டுல பாத்த கல்யாணம்னாக் கூட நமக்கு வாச்சது இவ்வளவுதான்னு பொறுத்துக்கலாம்.. உருகி உருகி நான் சப்பிட்ட சாக்லேட் தாள வருசக்கணக்கில வச்சுக்கிட்டு இருந்தவகிட்ட இருந்து வர்றப்ப முடியலைப்பா ?
‘ இல்லீங்க . லேடிஸ்னா கொஞ்சம் சந்தேகம் இருக்கத் தான் செய்யும் . பொஸஸிவ்னெஸ் தான் காரணம்.

‘அடி வாங்காத..ம்ம். ஆமா ….நான் கூட அப்படித்தான் நினைத்து சட்டை செய்யவில்லை.ஒரு மாதிரி சிரித்துச் சமாளித்தேன். பதில் பேச என்ன இருக்கிறது. ஒன்றுமில்லாத விசயத்துக்கு என்ன பதில் சொல்ல. ஆனா நாளாக நாளாக இது வளர்ந்து அவள் தன் கையைக் கீறிக் கொண்டு பேசாமல் திரும்பிப் படுத்த போதுதான் எனக்கு உறைத்த்து.’

‘ என்னது அவ்வளவுக்குப் போயிருச்சா?’

‘ ஆமாம்பா . யார்ட்ட சொல்ல. ஒரு பத்து நிமிசம் லேட்டாயிட்டாலும் எவ கூட சுத்திட்டு வர்றன்னு ஒரு குத்து. அவ பாக்காதப்ப போன்ல பேசினால் எவ கூட இளிப்புன்னு ஒரு குத்து. தூங்குறப்ப போன எடுத்து நம்பரச் செக் பண்றது, தெரியாத நம்பர்களக் குறிச்சு வச்சுக்கிட்டு மறுநாள் லோக்கல் பூத்ல இருந்து டயல் பண்ணிப் பாக்குறது .. அது விதிவசமா ஒரு பொண்ணா இருந்துட்டா தொலஞ்சேன். ஒவ்வொரு வார்த்தையும் செத்துர்ற மாதிரி நெஞ்சுல குத்தும். இப்படியே அதிகமாகி அதிகமாகி எந்தப் பொண்ணப் பாத்தாலும் சந்தேகம் தான். அறுபது வயசு காய்கறிக் கடைக்காரி கூட வச்சு சந்தேகப் படுறா. வெறகுக் கடைக்காரிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். அவ கூட வச்சு சந்தேகப்படுறா. பக்கத்து வீட்டுல பத்தாவது படிக்கிற சின்னப்பிள்ளய வச்சு சந்தேகப்படுறா. பொண்ணுன்னு இருந்து அவளுக்குத் தெரிந்தால் போதும் .வயசு கூட ஒரு பொருட்டில்லை. காரண காரியம் தேவை இல்லை. ஒங்களப் பாத்து சிரிச்சா. இல்லை நீங்கள் அவளைப் பாத்து சிரிச்சீங்க . கை காட்டுனீங்க. இப்படி எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு சண்டையை ஆரம்பித்து பிளேடை எடுத்திடுவாள். நான் என்ன தான் செய்றது… அவ செய்யுற மிச்ச விசயத்த வெளிய சொல்லமுடியாது.

எனக்கும் தீவிரம் உறைக்க ஆரம்பித்தது.

ஒரே அறுவெறுப்பும்மா . வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமா என்னக் கொல்ற மாதிரி இருந்தது. உண்மையச் சொல்றேன். நம்புனா நம்பு … அவளத்தவிர வேற யார்ட்….ச்சீய் இதையெல்லாம் உன்கிட்டச் சொல்ல வேண்டிய நிலைக்கு வச்சுட்டா…

ஆனா..ஒரு ஸ்டேஜுல எனக்கும் வெறி வந்துடிச்சி.. தினம் தினம் சித்ரவதை. அணு அணுவாக. கணுக் கணுவாக. ஒன்னுமே இல்லாதப்ப இவ இப்படிச் சொல்றாளே . எதுவும் இல்லாம இப்படி வாயில விழுகிறதுக்கு இவ சொல்ற மாதிரியே இருந்துட்டா என்னன்னு தோணிடுச்சி..ஒரு கணத்தில் தோன்றி மறைந்த அந்த எண்ணம் அப்படியே இன்னொரு பக்கம் வளர்ந்துகிட்டே இருக்கு. தோணினாப் போதுமா? பாக்குற ஆத்துல எல்லாம் படகு விட்டுர முடியுமா? வளர்ந்த விதம்னு ஒன்னு இருக்குல்லியா…ஆனாப் பழிவாங்குற வெறி மட்டும் அடங்கல..உனக்குப் புரியாது. வெளிய இருந்து பார்க்கிறவங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு தோணும். உள்ள இருந்து எட்டு வருசம் அநுபவிச்சுப் பாத்தா தான் தெரியும். பேப்பர்ல பாத்துருப்போம். கட்டிய கணவனைக் கொன்ற மனைவி. பெற்ற தாயைக் கொன்ற மகன் என்று . வெளில இருந்து பாக்குறப்ப என்னடா இது உலகம் ரெம்பக் கெட்டுப்போச்சுன்னு தோணும். கொலையை ஒத்துக்க முடியாதது தான். ஆனா குடும்பத்துல வர்ற பிரச்சனைகள் ஒவ்வொண்ணும் ஒரு தினுசு. பாம்புன்னும் நெனைக்க முடியாது பழுதுன்னும் நெனைக்க முடியாது . அவ அழிச்சாட்டியம் தொடரத் தொடர ஊரெல்லாம் இவ சொல்ற மாதிரித் திரிஞ்சு எல்லாப் பக்கமும் என் பிள்ளைகளாக் கிடக்கனும்னு ஒரு ஆங்காராம். ஆனா தப்பு செய்யலாம்னு மனம் சொன்னாலும் புத்தியோ உடம்போ ஒத்துக்கலை. கை வரலை. கால் வரலை.

ஒரு விசயம் சொல்லட்டுமா?

இதென்ன திருப்பம்.

‘ சங்கரர் தெரியுமா? ஆதி சங்கரர். பல இடங்கள்ள வாதம் பண்ணி அத்வைதத்தை நிலை நாட்டினவர். அந்தக் காலத்துல வாதத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்கு. வட நாட்டுல ஒரு ஜாம்பவானுக்கும் இவருக்கும் ஒரு வாதம். எல்லா வாதத்துலயும் சங்கரர் ஜெயிச்சுக்கிட்டே இருக்கார். அந்த ஜாம்பவானின் மனைவியும் மெத்தப் படித்த மேதை. இன்னும் ஒரு கேள்விக்கும் சங்கரர் பதிலளித்து விட்டால் அவர் பக்கம் பூரண ஜெயம். கணவன் தோற்று விடுவதை எந்த மனைவி தான் விரும்புவாள். அடுத்த கேள்வியை மனைவி கேட்டார். கேள்வி சிற்றின்பம் தொடர்பானது. சங்கரருக்கோ தர்ம சங்கடம். சுத்த பிரம்மச்சாரி. பதில் சொன்னால் பிரம்மச்சார்யம் கேள்விக்குள்ளாகும் . கேலிக்குள்ளாகும். சொல்லாவிட்டால் வாதில் வெல்ல முடியாது. ஜெயம் அந்தப் பக்கமாகும். சங்கரர் என்ன பண்ணார் தெரியுமா? கொஞ்ச நாள் அவகாசம் கேட்டார். தன் உடலை ஒரு இடத்துல மறைச்சு வச்சிட்டுக் கூடு விட்டுக் கூடு பாஞ்சு இன்னொரு ராஜா உடம்புல உயிராகி ராணி கூடப் போகம் அனுபவிச்சு வந்து பதில் கண்டு பிடிச்சு மீண்டும் கூடு விட்டுக் கூடு பாஞ்சு தன் உடம்புல உயிருண்டாக்கி விடை சொன்னாராம். உடம்புக்கு அவ்வளவு புனிதம் வேண்டி இருக்கிறது.

எனக்கு லேசாகப் புரிபட ஆரம்பித்தது.

ஆமாண்டா அவளைப் பழிவாங்கினது மாதிரியும் ஆச்சு.. நானும் தப்பு பண்ணாத மாதிரி ஆச்சு. தானங்களிலே சிறந்த தானம் எது என்று கேட்டு விட்டு சின்னப்பிள்ளைகளில் நாம் விளையாடுவோம் தெரியுமா? எதைச் சொன்னாலும் இன்னொரு விடை வைத்திருப்போம். ஒருவன் கண் தானம் என்றால், நாம் நிதானம் என்போம். அவன் நிதானம் என்றால் நாம் அன்னதானம் என்போம். ஒவ்வொருவருக்கும் ஒரு விடை. எனக்கும் ஒரு விடை.

‘ஒன்னு சொல்லட்டா’

‘ சொல்லு. கெட்ட வார்த்தைல மட்டும் திட்டாத.’

‘ ரெண்டு சைக்கோக்களை ஒரு வீடு தாங்காது.பிள்ளைங்க ரெம்பப் பாவம். ஒரு நல்ல டாக்டரப் பாருங்க’