ஆயிரம் தெய்வங்கள் – ஹேடஸின் நரக சாம்ராஜ்ஜியம்

ஹிந்து மதத்தில் சொர்க்கம்-நரகம் எல்லாம் விண்ணுலகில் உள்ளதாகக் கற்பனை உண்டு. கிரேக்க மதத்திலும் அவ்வாறே. மற்ற மேற்கத்திய புராணங்களிலும் பாதாள உலகமே நரகமாகும். இறந்த உயிர்களின் ஆன்மாக்கள் பாதாளத்திற்குச் செல்லும். பாதாள உலகமே நரக சாம்ராஜ்ஜியம். அப்படிப்பட்ட நரக சாம்ராஜ்ஜியத்திற்குள் எமதர்மராக விளங்கிய ஹேடஸ் ஸீயஸ்ஸின் சகோதரனும் ஆவான்.

கிரேக்கர்களின் பாதாள உலகம் ஆழிசூழ்ந்த அற்புதங்களைக் கொண்டது. ஏராளமான நதிகள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும். நதிகளைக் கடந்து சென்றால் திட்டுத் திட்டாகப் பாசிப் பாறைகள். பாசிப் பாறைகளைச் சுற்றி ஓடும் நதிகளுக்கு சோகமான பெயர்கள் உள்ளன. உதாரணமாக, ஏக்கிரான் என்ற நதியின் பொருள் வலி. கொகைட்டஸ் நதியின் பொருள் துன்பம். பைலெகெத்தான் என்ற நதியின் பொருள் நெருப்பு ஆறு. ஸ்டைக்ஸ் நதி காரிருள். லெத்தே நதி மறதி. கிரீசின் வறட்சிப் பகுதி எப்ரைஸ். அங்கு ஓடும் இரண்டு நதிகளுக்கும் “நரகத்தின் வாயில்கள்” என்ற பெயர் உள்ளது.

உண்மையில் ஏக்கிரான் தாய் தெய்வம் ஜெயிலேயின் மைந்தன். குரோனஸின் சகோதரன். இவன் செய்த தவறு ஒன்றுக்காக நரக தண்டனை அனுபவிக்கிறான். ஒலிம்பிக் யுத்தத்தில் சோர்ந்து போகும் டைட்டன் டைட்டிகளுக்குத் தண்ணீர் வழங்கும் கடமை இவனுக்கு உண்டு.

ஸ்டைக்ஸ் நதி இரவின் புதல்வன். ஒலிம்பிக் யுத்தத்தில் இவன் ஸீயஸ்ஸுடன் போராடியதை நினைவில் கோண்டு ஹேடஸின் தூதுவனாக வாழ்ந்து வருகிறான். அதாவது, எமதூதன். ஸ்டைக்ஸ் நதி கொடிய நச்சுள்ள நீரே நரகத்தின் பாவங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நச்சு நீர் உலோகங்களையே கரைத்து விடுமாம். மனிதன் விழுந்தால் என்ன ஆவது?

charon1

ஹெடஸின் நரக சாம்ராஜ்ஜியத்தில் ஷரான் என்ற ஓடக்காரன் ஏக்கிரான் நதியில் படகோட்டுகிறான். இறந்த மனிதனின் இறவாத ஆன்மா மோட்சமடைய இவனுக்குப் பணம் தர வேண்டும். அப்போதுதான் ஆன்மா கரையேறும். அப்படி பணம் தராவிட்டால் ஏக்கிரான் நதியில் அந்த ஆன்மா பிசாசாக அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் ஹேடஸ் நரக சாம்ராஜ்ஜியத்தில் நீதி விசாரணைக்கு ஆளாகின்றன. மூன்று நீதிபதிகள் கொண்ட டிரிப்யூனல் – அதாவது மைனாஸ், அயாக்கஸ், ராடமைந்தஸ் ஆகிய மூவரும் தீர்ப்பு வழங்கும் உரிமை உள்ளவர்கள். வரலாற்றில் ராடமைந்தஸ் பெயரில் கோட் ஆப் க்ரீட்டன் லாஸ் என்று புராதன கிரேக்க நகர அரசுகளில் நீதி பரிபாலனச் சட்டங்களாகச் செயல்பட்டன.

இறந்து போன மனிதனின் ஆன்மாக்கள் இவ்வாறு நீதி விசாரணைக்குட்பட்டு அவற்றின் குற்றம் உறுதியாகி ‘டார்ட்டாரஸ்’ பாதாளச் சிறைக்குள் தள்ளப்படும். குற்றம் செய்யாத நல்ல ஆன்மாக்கள் எலிஸ்ஸியன் தோட்டத்துக்கு அனுப்பப்படும்.

குற்றம் சாட்டப்பட்டு டார்ட்டாரஸில் தண்டனை அனுபவிக்கும் தேவகுமாரர்களில் சிசைப்பஸும் ஒருவன். சிசைபஸ் சோகக் கதையை முன்பே கவனித்தோம். இதில் கவனிக்க மறந்த விஷயம் சிசைபஸ் மனைவியின் துரோகம். அசோபஸ் மகளை ஸீயஸ் கடத்தியபோது இந்த உண்மையை அசோபஸிடம் கூறியதுதான் தெய்வ குற்றம். தான்தொஸ் ஆவியை சிசைபஸ் மீது ஏவினாலும், தானும் ஆவியாக மாறி தான்தோசை விலங்கிட்டாலும்கூட, ஸிசைபஸ் தன் மனைவியிடம் தன் உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லியிருந்தான். தான்தோசை ஆவி வடிவில் வென்றாலும்கூட திரும்பி வந்து தன் பூத உடலில் அவன் ஆன்மா புகுந்து கொள்ள இயலாதவாறு சிஸைபஸின் மனைவி மண்ணில் புதைத்துவிட்டதால் ஆவியாகவே திரிவதைத் தவிர வேறு வழியில்லை. டார்ட்டாரஸில் இவனுக்குச் சரிவிலிருந்து ஒரு கல்சக்கரத்தை ஏற்றும் தண்டனை கிடைத்தது. மேலே ஏற்றியதும் அது பழையபடி கீழே உருண்டு விடும். தன் வாழ்நாள முழுவதும் ஒரு கல்சக்கரத்தை ஏற்றியபடியே தண்டனை அனுபவித்தான்.

tantalus1

டார்ட்டாரஸ் நரகத்தில் தண்டனை அனுபவிக்கும் மற்றொரு தெய்வம் டாண்டாலஸ் – பிலாப்ஸ், அட்ரிட்ஸ், நையோபி ஆகியோர் இவனது வாரிசுகள். இவன் செய்த குற்றம், ஹெர்மஸின் நாயைத் திருடிவிட்டு, “இல்லை” என்று பொய் சத்தியம் செய்தது. டாண்டாலஸுக்கும் ஒரு விசித்திர குரூர தண்டனை. அது எதுவெனில் நல்ல குடிநீர் ஏரிக்குள் இவனைக் கட்டிப் போட்டிருந்தார்கள். தண்ணீர் இருந்தும் தாகத்துக்குத் தண்ணீர் குடிக்க முடியாது. தலைக்கு மேல் கொத்துக் கொத்தாய்ப் பழங்கள் தொங்கும். ஆனால் புசிக்க முடியாது. பசியால் துடித்துப் பழங்களைச் சுவைக்க வாயை உயரக் கொண்டு போகும்போது பழங்கள் எட்டாக்கனியாகி உயரே போய் விடும். இவனுக்கு உயிரே போய் விடும்.

தண்டனை பெற்ற மற்றொரு டார்ட்டாரஸ் கைதி ஐஷன். இவர் ஒருமுறை துணிந்து ஹீராவைக் கட்டியணைத்து விட்டான். முயற்சி பலிக்கவில்லை என்றாலும் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டு தீச்ச்சக்கரத்தில் கட்டப்பட்டு அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள காட்சியை டார்ட்டாரஸில் பார்க்கலாம்.

டார்ட்டாரசில் பெண் கைதிகளும் உண்டு. தானிசின் ஐம்பது பெண்கள். தானிசும் எஜிப்டசும் சகோதரர்கள். இந்த ஐம்பது பெண்களும் எஜிப்டசின் புதல்வர்களிடமிருந்து தப்பி ஆர்ஜிஸ் சமவெளியில் தஞ்சம் புகுந்தனர். இந்தப் பெண்களைக் கண்டுபிடித்த எஜிப்டசின் புதல்வர்கள் முறைப்படி தானிசிடம் பெண் கேட்டனர். இவர்களின் திருமணத்தை ஒப்புக் கொண்ட தானிஸ் தன் பெண்களுக்கு ஐம்பது வாள்களைப் பரிசாக வழங்கி முதலிரவின்போது மாப்பிள்ளைகளின் தலைகளை வெட்டுமாறு கூறினான். ஹைப்பர்மெஸ்ட்ரா தவிர மற்ற நாற்பத்து ஒன்பது பெண்களும் முதலிரவில் கணவனைக் கொன்ற காரிகைகளாயினர். இந்தக் குற்றத்திற்காக நாற்பத்து ஒன்பது பெண்களுக்கும் அடியில்லாத ஓட்டைப் பீப்பாய்கள் வழங்கப்பட்டு நீர் நிரப்பும் தண்டனை வழங்கப்பட்டது. இன்னமும் இவர்கள் தண்ணீர் நிரப்பிய வண்ணம் உள்ளனர். பீப்பாய் நிரம்பிய பாடில்லை.

cerberus

டார்ட்டாரஸ் நரக சாம்ராஜ்ஜியத்தைக் காவல் காக்கும் நாய் செர்பீரஸ். இந்த நாய்க்கு மூன்று தலைகள். வாயில் கூர்மையான விஷப் பற்கள. உடல் முழுதும் கருநாகங்கள்- விரியன் பாம்புகள் சுற்றி நெளியும்.பாம்புகளே அதன் வால்கள். இப்படிப்பட்ட கோரத் தோற்றம் கொண்ட செர்பீரஸின் பணி உள்ளே வரும் ஆன்மாக்களை முகர்ந்து பார்த்து குரைப்பது. உள்ளே வந்த ஆன்மாக்களை வெளியே விடாது. இருந்தாலும் இரண்டு தேவகுமாரர்களை செர்பீரசால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருவன் மாவீரன் ஹீராக்லஸ். வீரத்தால் வென்றவன். மற்றொருவன் ஓர்ப்யூஸ். இவன் தன் இசையால் மதிமயங்கச் செய்து டார்ட்டாரசில் யுரைட்டசைச் சந்தித்ததாக மரபு உள்ளது.

இத்துடன் ஹெடஸின் நரக சாம்ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பிற்கால மரபில் பெயரும் புகழும் பெற்ற டயோனைசஸ், ஹீராக்ளஸ் ஆகிய தெய்வங்களின் கதைகளை அடுத்த இதழில் கவனிப்போம்.

((தொடரும்)