அணு ஆற்றலின் அரசியல்

ஹிரோ சைய்தோ

ஃபூகுஷீமா அணு உலை விபத்து பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுபவர் ஹவாயியி பல்கலைக் கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகப் பொறுப்பாற்றும் ஹிரோ சாய்தோ (斉藤 弘久  – Hirohisa Saito).  முப்பத்தி இரண்டு வயதான இளைஞரான ஹிரோ சாய்தோ, ஜப்பானியர். கல்லூரிப் படிப்பிற்கு அமெரிக்காவிற்கு வந்தவர், தத்துவத் துறையில் இளநிலைப் பட்டதாரியானார். முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு சமூகவியலைத் தேர்ந்தெடுத்தவர்,  சமூகவியல் துறையில் ஆய்வுப் படிப்பிற்கு மிஷிகன் பல்கலையில் (யுனிவர்ஸிடி ஆஃப் மிஷிகன்) சேர்ந்தார். அங்கு 2009 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றபின், யுனிவர்ஸிடி ஆஃப் ஹவாயியில் பேராசிரியராகப் பதவி ஏற்றுச் சில வருடங்களாக அங்கு பணி புரிகிறார். அணு சக்தி குறித்த ஜப்பானியரின் போராட்டங்களைப் பற்றி ஆய்வு நடத்த ஜப்பானில் தங்கி களப் பணி செய்ய இவருக்கு ஒரு உதவித் தொகை (Fellowship) கிட்டவும் ஜப்பானில் ஓராண்டாகத் தங்கி அணு சக்திக்கு எதிரான போராட்டங்களைப் பற்றியும், ஜப்பானிய அரசு அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் பற்றியும் ஆய்வு நடத்துகிறார். இது அவர் ஜப்பானில் இருந்தபடி எழுதும் கட்டுரைத்  தொடர். ஐந்து பகுதிகளாக வெளியிட இருக்கிறோம். இந்த இதழில் முதல் பகுதி வெளி வருகிறது. ஃபூகுஷீமா அணு உலை விபத்து நடந்து ஓராண்டு இந்த வாரம் பூர்த்தியாகிறது. இக்கட்டத்தில் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

ஃபூகுஷீமா பெருவிபத்திலிருந்து ஓராண்டுக்குப் பிறகு

நான் ஜப்பானைச் சேர்ந்தவன், தமிழ் பேசுபவனில்லை. ஆனால் இப்பத்திரிகையின் பதிப்பாசிரியர் மைத்ரேயன் எனது இனிய நண்பர். இவரை நான் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் ஆராய்ச்சி மாணவனாய் இருந்தபோது சந்தித்தேன். ஃபூகுஷீமா பேரிடர் நடந்த ஒரு வருடத்துக்குப் பின் தொடர்ந்த சில இணைநிகழ்வுகள் ஃபூகுஷீமா அணுநிலையப் பேரழிவைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் சிறப்புக் கட்டுரைகளாய் சொல்வனத்துக்கு நான் பங்களிக்க வழி வகுத்தன.

பல்கலைக்கழகத்தில் என் ஆராய்ச்சித்தலைப்பாக ‘ஃபூகுஷீமா அழிவு’ அமைந்தது தற்செயல்தான். நான் ஹவாயியில் வசிப்பதால் 2011-2012 கல்வி ஆண்டை ஜப்பானில் கழிப்பதற்கான உதவித்தொகை எனக்கு அதிர்ஷ்டவசமாக (அல்லது துரதிர்ஷ்டவசமாக) கிடைத்திருக்காவிட்டால் நான் இந்தக் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கமாட்டேன். அணு உலைப் பெருவிபத்தை எதிர்கொண்ட சமயத்தில், ஜப்பானுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற உந்துதலில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஜப்பான் (FoE Japan) என்ற சுற்றுச்சூழல் சார்ந்த, அரசுசார்பற்ற அமைப்பில் (NGO) தன்னார்வ ஊழியனாகச் சேர்ந்தேன். அந்த அமைப்பில், மாற்று எரிசக்தி குறித்த கொள்கைகளுக்கான பிரச்சாரங்களுக்கு உதவத் தொடங்கினேன். இதன் தொடர்பாய் ஃபூகுஷீமா பேரிடரைச் சூழ்ந்த அரசியல் பூசல்களைப் பற்றி ஆழப் படிக்கத் தீர்மானித்தேன்.

எனது கட்டுரைகள் பெரும்பாலும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஜப்பான் அமைப்பின் ஒரு தன்னார்வ ஊழியன் என்ற முறையில், எனது அவதானிப்புகளை ஆதாரமாய் கொண்டவைகளே. 2011-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திலிருந்து ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஜப்பான் அமைப்புக்கும், அந்த அமைப்பின் பிற தோழமை அமைப்புகளுக்கும் ஜப்பானிய அரசாங்கத்துடன் ஒப்பந்தப்பேச்சு நடத்த ஏற்பாடு செய்வது, கதிரியக்கத்தால் ஏற்படும் ஆரோக்கியக்கேடுகளைப் பற்றியும், புதுப்பிக்கப்படக் கூடிய கச்சாப்பொருட்கள் வழியே ஆற்றல் உற்பத்தி செய்வதற்கான கொள்கைகளைப் (Renewable energy policies- கட்டுரையில் இனி வரும் இடங்களில் இது புதுப்பிக்கப் படக்கூடிய ஆற்றல் எனக் குறிக்கப்படும்) பற்றிய சமீபத்திய நிலைகளைப் பற்றியும் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது போன்றவற்றில் நான் உதவி செய்து வந்திருக்கிறேன். எனது கணிப்புகளுக்குத் துணையாய் நிபுணர்களின் அறிக்கைகளிலிருந்தும், ஆழப் படித்தவர்களின் புத்தகங்களிலிருந்தும் விவரங்களை எடுத்திருக்கிறேன். ஐந்து பாகங்களைக் கொண்ட இக்கட்டுரைத்தொடரில், ஃபூகுஷீமா பேரிடர் பற்றிய பல்வேறு கோணங்களை நான் அளிக்கவிருக்கிறேன்.

ஃபூகுஷீமா பயங்கரத்திலிருந்து தொடரும் பல இடர்ப்பாடுகள் விரைவில் தீரச் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தொடரின் முதல் கட்டுரையில் ஜப்பான் அரசு இந்தப் பேரழிவையும் அது தொடர்பான பிரச்சினைகளையும் சர்ச்சைக்குரிய வகையில் கையாண்டதைக் குறித்து சுருக்கமாய்க் காட்ட விரும்புகிறேன். இக்கட்டுரைகள் மூலம் ஃபூகுஷீமா பேரழிவின் எதார்த்தத்தைத் தமிழக மக்கள் அறிவதன் மூலம், கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்தும், இந்தியாவின் வருங்கால அணு ஆற்றல் பற்றிய கொள்கைகளைக் குறித்தும், விவரமறிந்த வகையில் சர்ச்சித்து முடிவுகளை அடைய முடியும் என எதிர்பார்க்கிறேன்.

அழிந்த அணு உலைகளின் நிலைமை

ஃபூகுஷீமாவில் உள்ள டாயிச்சி அணுமின் நிலையம் 6 அணு உலைகள் கொண்டது. ‘டோக்யோ மின்சக்தி கம்பெனி’ (டெப்கோ) என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த உலைகளை அந்நிறுவனம்தான் இயக்கி வருகிறது. மார்ச் 11, 2011 அன்று அகண்ட கிழக்கு ஜப்பானில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது முதல் மூன்று உலைகள் (1-3 பிரிவுகள்) இயங்கிக் கொண்டு இருந்தன; மற்ற மூன்று உலைகள் (4-6 பிரிவுகள்) பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தன. முதல் மூன்று உலைகள் நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் மின்சக்தியை இழந்ததால் அவ்வுலைகளைக் குளிர்விக்கும் அமைப்புகள் செயலிழந்தன. அதனால் அணு உலைகளின் வெப்பம் அளவு மீறி உயர்ந்து, உலைகளின் உள்ளே இருந்த அணு எரிபொருள் உருக ஆரம்பித்தது. அப்படி உருகினால், பேரளவுக்கு அணுக் கருப்பிளவு துவங்கி, கட்டு மீறித் தொடர்வினைகள் ஏற்படும் சாத்தியம் இருந்தது. அதனால் ஏற்படக்கூடிய அபாயகரமான கதிர்வீச்சைத் தடுக்க, ஜப்பானின் தற்காப்புப் படைகள், டெப்கோ ஊழியர்கள், தீயணைப்புப்படையினர் எல்லாரும் தடுப்புக் கலங்களுக்குள்ளும், அணு உலைக் கலங்களுள்ளும் அடித்துப் பிடித்துக்கொண்டு நீரைப் பாய்ச்சினர். அப்போது சில ஹைட்ரஜென் வெடிப்புகள் நிகழ்ந்தபோதிலும் ஏப்ரல் மாத நடுப்பகுதியில், அணு உலை எரிபொருள் உருக்கம் தொடர்ந்து நிகழாதபடி அவர்களால் தடுக்க முடிந்தது.

டெப்கோ நடத்திய பல தொடர்ந்த விசாரணைகளும், அணுவியல் நிபுணர்களின் மதிப்பீடுகள் பலவும் 1-3 அணு உலைகளில் எரிபொருள் உருகி அணுஉலைக் கலங்களின் அடிப்பகுதியில் விழுந்ததை உறுதி செய்திருக்கின்றன. சில நிபுணர்கள் உருகிய எரிபொருள் அணுஉலைக் கலங்களிலிருந்து வெளியேறி அதன் கீழ் இருந்த கற்காரைக்குள்ளும் (concrete) ஊடுருவியிருப்பதாய் எண்ணுகிறார்கள்.

அணு உலைகளுக்குள் கட்டுப்பாடற்ற அணுப்பிளவு மறுவினைகள் இப்பொழுதும் அவ்வப்போது நடப்பதாகத் தெரிகிறது. நிலநடுக்கம் நடந்த தருணத்தில் 4-வது அணு உலையிலிருந்து எரிபொருள் அகற்றப்பட்டிருந்தாலும், அது இயக்கத்தில் இல்லாமல் இருந்தபோதிலும் அதில் இருந்த முந்தைய உபயோகத்தில் சக்தி தீர்ந்து போயிருந்த எரிபொருட்கள் ஒரு ஹைட்ரஜென் வெடிப்பால் வெளியே கசிந்திருக்கின்றன. துன்பம் தரும் ஒரு உண்மை என்னவென்றால், இந்த அணு உலைகளின் இப்போதைய உண்மை நிலை இன்னும் சரியாக அறியப்படாமலே இருக்கிறது. அணு உலையிலிருந்து வெளியாகியிருக்கும் அதீதமான கதிர்வீச்சினால் ஏற்பட்ட சேதத்தின் உண்மை நிலை குறித்து விரிவான, முழுமையான ஆய்வு நடத்த இயலவில்லை.

எப்படியுமே, நிலநடுக்கம், சுனாமி, ஹைட்ரஜென் வெடிப்புகள் போன்றவற்றால் அணு உலையின் சுவர்களும், குழாய்களும் சேதமடைந்திருப்பதால், இந்த அணு உலைகள் கதிர்வீச்சுக் கசிவைத் தடுக்கும் ஆற்றலை இழந்துவிட்டன என்பது தெளிவு. ஆகவே, நாசமடைந்த அணு உலைகள் காற்று, நிலம், நிலநீர் மற்றும் கடல் நீரில் கதிர்வீச்சைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அணு உலை எரிபொருள் மேலும் உருகுவதைத் தடுப்பதற்காக டெப்கோ குளிர்விக்கும் அமைப்புகளைச் சீர்திருத்தி, அணு உலைகளைச் சுற்றிப் பாதுகாக்கும் புதிய தடுப்புச் சுவர்களை எழுப்பி விட்டதென்பது உண்மைதான். ஆனால், இந்தக் குளிர்விக்கும் அமைப்புகளும் தடுப்புச் சுவர்களும் எளிதில் பழுதடையக் கூடியவையாகவும் பல குறைகளோடும் இருப்பதால் அவற்றால் கதிர்வீச்சு வெளியே கசிவதையும் சரிவரத் தடுக்க முடியவில்லை, தவிர, இன்னொரு பெரிய நிலநடுக்கமோ, சுனாமியோ நிகழ்ந்தால் அவை உடையக் கூடியவையே. இப்படிச் சொல்வதற்கேற்ப, ஜனவரி 2012 முதல் வாரத்தில் சற்றே பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டபோது ஃபூகுஷீமா பகுதி முழுவதிலும் கதிர்வீச்சு அளவுகள் தற்காலிகமாய் உயர்ந்தன. டிசம்பர் 16, 2011 ஆம் தேதி வாக்கிலேயே அணு உலைகள் 1லிருந்து 3 வரை வெற்றிகரமாய் ஒழுங்கு நிலைக்கு கொணரப்பட்டதாய் ஜப்பானிய அரசாங்கம் அறிவித்தாலும், இத்தகைய அறிவிப்பு, ஃபூகுஷீமா-டாயிச்சி அணுமின் நிலையம் ஜப்பானுக்கும் உலகத்தின் இதர பகுதிகளுக்கும் ஏற்படுத்தக்கூடிய அபாயத்தை பெருமளவில் குறைவாய் மதிப்பிடுகிறது.

அணுக்கதிர்வீச்சுத் தூய்மைக்கேட்டின் அளவு

அணு உலைகள் எவ்வளவு சேதமடைந்திருக்கின்றன என்று சரியாகத் தெரிந்து கொள்ள முடியாதிருப்பதைப் போலவே, ஃபூகுஷீமா பேரழிவால் ஜப்பானுக்கும், அதற்கப்பாலும் ஏற்பட்டிருக்கும் தூய்மைக்கேட்டின் பரப்பளவும் தெளிவற்றதாக இருக்கிறது. ஜப்பானிய அரசு அறிக்கையின்படி, ஜுன் 2011 வரை காற்றில் வெளிப்படுத்தப்பட்ட ஸீஸியம்-137ன் (Cesium-137) என்ற ஓரிடத் தனிமத்தின்(Isotope) அளவு ஹீரோஷீமா நகர்மீது அணுகுண்டு போடப்பட்டபோது வெளியானதை விட சுமார் 168 மடங்கு அதிக அளவுடையது. ஆனால் அரசாங்கத்தின் தரவுகள், சூழலில் கசிந்திருக்கும் கதிரியக்க மூலப்பொருட்களை குறைத்து மதிப்பிடுகின்றன. அரசாங்கம் மார்ச் 16,2011லிருந்துதான் கதிர்வீச்சளவுகளை பதிவு செய்து தெரிவிக்க ஆரம்பித்தது. இதனால் மார்ச்14-லிருந்து 15-வரை அணு உலை எண்-3 இல் ஏற்பட்ட ஒரு வெடிப்பால் பெருமளவில் கதிரியக்கம் வெளிப்பட்டதை அது அளவிடத் தவறியது. அரசாங்கத்தின் மதிப்பீடு நிலத்திலும் கடலிலும் உள்ள நீரில் கலந்த கதிரியக்கத்தையும் கணக்கில் கொள்ளவில்லை. உதாரணமாய் ஏப்ரல் மாதத்தில் டெப்கோ நிறுவனம் சுமார் 11500 டன் மாசுபட்ட நீரை கடலுக்குள் கொட்டி விட்டது. அப்போதிலிருந்து மாசுபட்ட நீர், சிதைந்த அணு உலைகளிலிருந்து கசிந்துகொண்டிருக்கிறது.

மேலும், அரசு சாராத அமைப்புகள், கிழக்கு ஜப்பானில் கதிர்வீச்சு அளவுகள் உயர்ந்ததை திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டியும், அரசாங்கம் 2011 கோடை வரை ஃபூகுஷீமா மாவட்டத்துக்கு (Prefecture) வெளியே கதிர்வீச்சுக் கசிவின் கணக்கீட்டை விமானக் கண்காணிப்பு மூலம் நடத்தவில்லை. விமானக் கண்காணிப்பு நடத்தியபோது ஃபூகுஷீமா மாவட்டத்திலிருந்து டோக்யோ மாநகரப்பகுதி வரை அணுக்கதிர்வீச்சு மாசு படர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.

அணுக்கதிர்வீச்சு மாசுபடுத்தலின் தனிப்பட்டதொரு தன்மை என்னவென்றால் அது பொதுமைய வட்ட (concentric circle) அமைப்பைப் பின்பற்றாமல், கதிரியக்க வெளிப்பாடு நிகழும்போது அங்குள்ள நிலவமைப்பு, காற்றுத் திசை, பருவநிலை இவற்றைச் சார்ந்து இருக்கும். குறிப்பாய் ஃபூகுஷீமா பகுதியில் ஃபூகுஷீமா டாயிச்சி அணுமின் நிலையத்துக்கு வடமேற்கிலும் தென்மேற்கிலும் உள்ள பகுதிகள் கடுமையாய் மாசுபட்டன. இவற்றில் சில இடங்கள், செர்னோபிலின் பெருவிபத்துக்குப் பின் தனிமைப்படுத்தப்பட்டு கட்டாயமாய் மறுகுடியேற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட, பெலரூஸ், உக்ரேயின் நாடுகளின் சில இடங்களில் இருந்த அளவு, மாசுபட்டிருப்பதைக் காட்டுகின்றன. டோக்யோவிலும், அண்மை மாவட்டங்களிலும் கூட சிறு பகுதிகளில் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு மாசுபடல் காணப்படுகிறது. மரங்கள் சூழ்ந்து திறந்த வெளியில் உள்ள மண்பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் கதிரியக்க மூலப்பொருட்கள் அடர்ந்து இருக்கின்றன.

காற்று, நிலம் மற்றும் நீர் மாசுபட்டபோது உணவும் மாசுபட்டது. மாசுபட்ட உணவு வகைகளில் சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டுமானால் அவை அரிசி, பச்சைத் தேயிலை, சோயா பருப்பு, மீன், மாமிசம், மற்றும் பால். ஜப்பானின் பலவகை முக்கிய உணவுகள் மாசுபட்டுள்ளபோது ஜப்பானிய அரசாங்கம் இன்னும் ஒரு விரிவான உணவுப்பரிசோதனை திட்டத்தை உருவாக்கவில்லை. அரசாங்கத்தால் பாதுகாப்பான அளவு என்று விதிக்கப்பட்டுள்ள வரம்பு ஒரு கிலோவுக்கு 500 பெக்கெரெல். இது செர்னோபில் விபத்தில் மிகக் கடுமையாய் பாதிக்கப்பட்ட பெலாரூஸ் மற்றும் உக்ரேயினில் உபயோகப்பட்ட வரம்புகளை விட அதிகமானதாகும். மாசுபட்ட உணவை மக்கள் உட்கொண்டால் அவர்கள் உடல் உள்ளிருந்தே கதிரியக்கத்துக்கு ஆட்படுவார்கள். அது முக்கியமாய் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் நலக்கேடுகளை விளைவிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஃபூகுஷீமாவும் அதன் அக்கம்பக்க மாவட்டங்களும் பெரும்பாலும் உழவுப்பகுதிகளாக இருப்பதால் இத்தகைய உள்ளார்ந்த கதிர்வீச்சு அபாயம் ஜப்பானில் மிக அதிகம். ஃபூகுஷீமாவைச் சுற்றியுள்ள பகுதிகள் டோக்யோ மாநகரத்துக்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. விரிவான உணவுச் சோதனை முறைகளும், கடுமையான பாதுகாப்பு வரம்பும் இல்லாததனால், கிழக்கு ஜப்பான் முழுவதிலும் உள்ளார்ந்த கதிர்வீச்சு மூலம் அணுக்கரு மாசுபடல் பரவி உள்ளது.

சேதத்துக்கான நஷ்ட ஈடு பற்றிய கருத்து வேறுபாடுகள்

அணுக்கரு மாசுபடல் மிக அதிகமாகப் பரவயிருப்பதால், ஏராளமான மக்கள் டெப்கோவுக்கு எதிராய் நஷ்ட ஈடு கோரியுள்ளனர். இவ்வாறு கோரியவர்களில் மீனவர்கள், விவசாயிகள், உணவகங்கள், ஓய்வு விடுதிகளின் உரிமையாளர்கள் ஆகியோர் அடங்குவார்கள். இவர்கள் தவிர, கடுமையாய் மாசுபட்ட இடங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமைக்கு ஆளானவர்களும் உண்டு. இந்த நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் டெப்கோவை நொடித்துப்போக வைக்கக்கூடும். இதைத் தடுப்பதற்காக ஆகஸ்ட் 2011-ல் ஜப்பானிய அரசாங்கம் அணுக் கதிர்வீச்சுச் சேதப் பொறுப்பு நிவாரண நிதியை (Nuclear Damage Liability Facilitation Fund) உருவாக்க ஒரு சட்டத்தை இயற்றியது. நவம்பர் 2011 இந்த நிதி அமைப்பு டெப்கோவுக்கு 900 பில்லியன் யென்களை அளிக்க உறுதி அளித்தது.

எனினும் இந்த நிதியின் அமைப்பில் பல சிக்கல்கள் இருக்கின்றன. முதலாவது, இது நஷ்டஈடுகளைக் கொடுக்கப் பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்தும் அதிகாரத்தை இது டெப்கோ நிறுவனத்திற்குக் கொடுக்கிறது. நஷ்ட ஈடுகளைக் கொடுப்பதால் நொடித்துப்போகாமல் இருக்க அந்த உதவி என்று சொல்லப்பட்டாலும், டெப்கோ இந்த பொதுப்பணத்தை எப்போதாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அது நிபந்தனை விதிக்கவில்லை. ஒரு மூன்றாம் தரப்பாளர் டெப்கோவைச் சீரமைத்து மறுஉருவாக்கவும் அது உத்தரவு பிறப்பிக்கவில்லை. இத்தகைய பாரபட்சமான ஏற்பாடு பலகாலமாய் அரசாங்கத்துக்கும் டெப்கோவுக்கும் இடையே இருந்து வந்துள்ள கூட்டு நடவடிக்கைகளுடன் ஒத்துப்போவதே. கடந்த 50 வருடங்களாய் அரசாங்கம் அணு ஆற்றலை தேசிய செயல்திட்டமாய் ஆதரித்து வந்துள்ளது. கிழக்கு ஜப்பானில் மின்சக்தி உற்பத்தியிலும், விநியோகிப்பதிலும், சந்தையில் ஏகபோக உரிமையை (monopoly) டெப்கோவுக்கு அரசாங்கம் கொடுத்துள்ளது. தயாரிப்பில் செலவு அதிகமான முறையில் மின்சக்தி உற்பத்தி செய்தாலும், அதிக உள்ளடக்க விலைக்கு ஈடாக அதிக லாபம் கிடைக்கும்படி சட்ட அமைப்பை அரசு உருவாக்கி இருக்கிறது. இச்சட்டம், அதிகம் செலவு அதிகமாக ஆகும் அணு மின் நிலையங்களைக் கட்டுவதை ஊக்குவித்துள்ளது. இதற்கெல்லாம் ஈடாய், டெப்கோ அரசியல்வாதிகளுக்கு பெருமளவில் நிதி நன்கொடைகள் கொடுத்து, ஓய்வு பெற்ற அரசாங்க அலுவலர்களை தன் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் உயர்பதவிகளில் வைத்திருக்கிறது.

இது தவிர, பெருமளவில் பொது நிதி உறுதி அளிக்கப்பட்ட போதிலும், டெப்கோ நிறுவனம், ஃபூகுஷீமா பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கொடுப்பதைத் தவிர்த்து வந்துள்ளது. நஷட ஈடுக்கான விண்ணப்பப் படிவங்களை வேண்டுமென்றே நீளமாகவும் குழப்பமாகவும் அமைத்து, நஷ்டஈடு கேட்பதை டெப்கோ மிகக் கடினமாக்கியுள்ளது. இதன்மூலம் அபாயமான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டின் வகைகளையும், தொகையையும் மிகவும் கட்டுப்படுத்தி உள்ளது. அரசாங்கம் குறித்த இடங்களிலிருந்து வெளியேறியவர்கள் தாங்கள் இழந்த வீடுகளுக்கும் தொழில்கள் போன்ற பிழைப்பு வழிக்கும் ஈடாக உதவிப்பணம் பெறுவது அரிய காரியமாகப் போயிற்று. மிகக்கடுமையாய் மாசுபட்ட இடங்களிலிருந்து தாங்களாகவே வெளியேறியவர்களுக்கு நஷ்டஈடு எதுவுமே முதலில் வழங்கப்படவில்லை. பிறகு அரசு சார்பற்ற அமைப்புகள் இவர்களுக்கும் டெப்கோ நஷ்டஈடு கொடுக்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கோரிக்கைகள் எழுப்பின. வெளியேறியவர்களுக்கு நஷ்ட ஈடு தாமதமாகவும் குறைந்த அளவிலுமே கிடைத்ததால், கதிர்வீச்சில் கடுமையாய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த போதும், பலர் பொருளாதாரக் காரணங்களால், தங்கள் சொந்த இடத்திலேயே தங்கி இருக்கத் தீர்மானித்தனர். அதாவது வேறு கோணத்தில் பார்த்தால், டெப்கோவுக்கு ஆதரவாய் அரசாங்கம் சாதாரணக் குடிமக்களைத் தியாகம் செய்துவிட்டது.

மாசகற்றித் தூய்மைப்படுத்துதல் மற்றும் மறுகட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில் உள்ள பிரச்சினைகள்

அரசாங்கம், வெளியேற்றப்பட்ட மக்கள் விஷயத்தில் எவ்வளவு அலட்சியமாக நடந்துகொண்டதோ, அதே அளவு பாதிக்கப்பட்ட இடங்களைத் தூய்மைப்படுத்துவதிலும், மறுகட்டமைப்புக்கு முக்கியத்துவம் தருவதிலும் அலட்சியமாக நடந்துகொண்டது. அரசு சார்பற்ற அமைப்புகளும், மக்களும், வெளியேற்றதுக்கு இன்னும் மேலான பண உதவியும், வேறு வாழ்வாதார ஏற்பாடுகளையும் கோரி வருகையில், அரசாங்கம் பாதிப்படைந்த பகுதிகளை தூய்மைப்படுத்துவதாக உறுதியளித்து, ஃபூகுஷீமா மக்கள் தம் இடத்திலேயே தங்கி இருக்கும்படி ஆக்குகிறது.

இருந்தும் அழிவால் பாதிக்கப்பட்ட இடங்களைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு ஏராளமான நேரம், பணம், மற்றும் மனித உழைப்பு தேவை. இதனால்தான் அரசாங்கம் ஃபூகுஷீமா டாயிச்சி அணு மின் நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில், தூய்மைப்படுத்தும் பணிக்கான தன் திட்டத்தை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. மேலும் தூய்மைப்படுத்துதலுக்குப் பலனிருக்கும் என்பதும் உத்தரவாதம் இல்லை. உதாரணமாக, , ஜுலை 2011-ல் அதிக அளவில் கதிர்வீச்சு காணப்பட்ட வடரி(Watari) மாவட்டத்தைத் தூய்மைப்படுத்த ஃபூகுஷீமா நகர நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் இந்த முயற்சிகள் திருப்திகரமான பலன்களை அளிக்கவில்லை. ஃபூகுஷீமா நகர நிர்வாகத்தின் கூற்றுப்படி, தூய்மைப்படுத்தலுக்குப் பிறகு காற்றில் கதிர்வீச்சு மாசு தோராயமாக 30% அளவுதான் குறைந்தது. நிஜத்தில் தூய்மைப்படுத்தும் முயற்சிகளுக்குப் பிறகும் அதிக அளவிலான கதிர்வீச்சு, ஏறக்குறைய மணிக்கு 2.0µSv என்ற அளவில் மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் பதிவாகிக்கொண்டிருந்தது.

மேலும் ‘தூய்மைப்படுத்துதல்’ என்ற சொல் உருவாக்கும் பிரமையைப்போல, தூய்மைபடுத்தல் கதிரியக்கத்தை அகற்றுவதில்லை. அது வெறுமே பாதிக்கப்பட்ட இடங்களின் கழிவுகளை இன்னொரு இடத்துக்கு மாற்றுகிறது. அரசாங்கம் தூய்மைப்படுத்தும் பணியை நடத்துவதில் மெத்தனம் காட்டுவதற்கு இன்னொரு காரணம் மாசுக் கழிவுகளை பாதுகாப்பாய் சேமித்து வைக்கும் இடங்களையும் திட்டங்களையும் இன்னும் முடிவு செயயவில்லை. உண்மையில் இவ்வளவு அதிகமான கழிவுகளை அகற்றி சேமிப்பதற்கான வசதிகள் ஃபூகுஷீமாவில் இல்லை. அதனால் கொஞ்சம் கழிவுகள் டோக்யோவுக்கும், ஜப்பானின் இதர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, இரண்டாம் கை கதிர்வீச்சு மாசுபடுதலின் அபாயம் ஜப்பான் முழுவதும் பரவி உள்ளது.

தூய்மைப்படுத்தும் பணி மறுகட்டமைப்புப் பணியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இது இதர வகைகளில் இரண்டாம் கை மாசுபடலை ஏற்படுத்தக் கூடும். ஃபூகுஷீமாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஃபூகுஷீமாவின் உணவுப் பொருட்களை உபயோகிக்க நாடு தழுவிய பிரச்சாரத்தை அரசும், ஃபூகுஷீமா நிர்வாகமும், பிற தொழில் சமூகங்களும் செய்கின்றன. இந்தப் பிரச்சாரத்தினால் ஜப்பானிய மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றி விவரங்கள் இன்னும் தெரியவில்லையாயினும், நிச்சயமாக இரண்டாம் கை மாசுபடல் பற்றிய விபரங்கள் கொஞ்ச கொஞ்சமாய் வெளியே வரத்தொடங்கி உள்ளன; உதாரணாக, ஜனவரி 2012-ல், மாசுபட்ட மணணும்,கற்களும் பயன்படுத்தியதால், ஃபூகுஷீமாவில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்களில் அதிக அளவிலான கதிர்வீச்சு காணப்பட்டது. கதிர்வீச்சு அபாயம் பற்றி கவனமாகப் பரிசீலிப்பதைக் காட்டிலும், துரிதமான மறுகட்டமைப்புக்கு முன்னுரிமை கொடுப்பதன் ஆபத்தான பின்விளைவை இது காட்டுகிறது.

இதற்கு மாற்றாக, அரசு சாரா அமைப்புகள், மாசுபட்ட இடங்களில் வசித்தவர்களைத் தற்காலிகமாய் வெளியேற்றவேண்டும் என்று பரிந்துரைத்து வருகின்றன. அரசாணைப்படி வெளியேற்றதுக்குட்பட்ட பகுதிகளை விரிவு படுத்தவும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வெளியேற்றத்துக்குத் தனியான தேர்வு விதிகளை உருவாக்கவும், வெளியேற்றப்பட்டவர்களுக்கான உதவிகளை அதிகப்படுத்தவும் வலியுறுத்தும் கோரிக்கைகளை அவர்கள் அரசிடம் வைத்துள்ளனர். ஆனால் குடிமக்களை அகற்றுவதற்கு இந்த அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக, அம்மக்களின் வெளியேறும் முயற்சிகளைத் தளரவைக்கும் வகையிலேயே அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் இருக்கின்றன. அவற்றுக்கு இந்த அமைப்புகளால் ஈடு கொடுக்கமுடியவில்லை.

அணு ஆற்றல் ஆதரிப்புக் கொள்கையின் தொடர்ந்த நீடிப்பு

ஜப்பானிய அரசாங்கம் மாசு அகற்றுதலுக்கும், மறுகட்டமைப்புக்கும் முன்னுரிமை கொடுப்பதற்குக் காரணம், ஃபூகுஷீமா பேரழிவின் தீவிரத்தை குறைத்துக் காட்டுவதன் மூலம் தனது அணு ஆற்றல் கொள்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள விரும்புவதே. அணு ஆற்றலை ஜப்பானில் தொடர்ந்து நிலைநாட்டுவதற்காக, அரசாங்கமும் மின்சக்தி நிறுவனங்களும் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த அணு உலைகளை திரும்பத் துவக்க அவசரப்படுகின்றனர். அப்படிச் செய்யாவிட்டால், ஜப்பானில் உள்ள 54 அணு உலைகளும் ஏப்ரல் 2012க்குள் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டு விடும். ஒருவேளை அப்போது பெருமளவில் மின்தடை பாதிப்பு ஏற்படாது போனால், அணு ஆற்றலின் அவசியமின்மை நிரூபணமாகிவிடும். அரசாங்கமும் மின்சக்தி நிறுவனக்களும் அதைத் தவிர்க்க விரும்புகின்றன.

அணு உலைகளை திரும்பத் துவக்குவதற்குக் கடினமான பாதுகாப்பு அளவுகோல்களை மக்கள் கோரியதால், அரசாங்கம், விபத்துகளின் சாத்தியத்தைக் கண்டறிய ’அழுத்தச்’ சோதனைகளை உபயோகிப்பதாகவும், அணு மின் நிலையங்கள் அமைந்துள்ள இடங்களின் உள்ளூர் மக்ககளின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதாகவும் வாக்களித்துள்ளது. அழுத்தச் சோதனைகள், அணு உலைகளை திரும்பத் துவக்குவதற்கு வழி தேடுவனவாகவே அமைக்கப்பட்டுள்ளன. அணு உலைகளின் பாகங்களில் உலோகம் இழிந்து போவதை (metal fatigue of reactor components.) அழுத்தப் பரிசோதனைகள் கணக்கில் கொள்வதில்லை. நிலநடுக்கங்களினால் ஏற்படக்கூடிய கட்டமைப்பு சார்ந்த சேதங்களையும் அரசாங்கம் குறைத்து மதிப்பிட முயற்சிக்கிறது. ஃபூகுஷீமா டாயிச்சி அணு மின் நிலையத்தில் சுனாமி வருவதற்கு முன்பே கதிரியக்கம் கசிய ஆரம்பித்திருக்கலாம் என்ற கருத்துக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளபோதிலும், ஜப்பானின் அணு மின் நிலையங்கள் (ஃபூகுஷீமா டாயிச்சி அணு மின் நிலையம் உட்பட), பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் கட்டப்பட்டிருப்பதாய் அரசாங்கம் வலியுறுத்திக் கூறுகிறது. இதற்கு எதிர்ப்பாக,, அரசு சாரா அமைப்புகள் ஜப்பானில் அனைத்து அணு உலைகளையும் மூடுவதற்காக, கண்டனங்கள் மற்றும் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இதற்கும் மேலாய், அரசாங்கம், அணு உலைகளை மிட்சுபிஷி மற்றும் டோஷிபா போன்ற பெரும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஏற்றுமதி செய்ய முயன்று வருகிறது. நவம்பர் 2011-ல், ஜப்பானியப் பாராளுமன்றம் ஜார்டன், ருஸியா, தென் கொரியா மற்றும் வியத்நாமுடன் அணு ஒத்துழைப்பு உடன்படிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது. ஜார்டனிலும் வியத்நாமிலும் அணு மின் நிலையங்கள் கட்டுவதற்கான இடங்களும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டன. ஜப்பானிய அரசாங்கமும் பெரும் தொழில் நிறுவனங்களும் ஃபூகுஷீமா பேரழிவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தத்தளித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் வெளிநாட்டில் விபத்தை விளைவிக்கக்கூடிய சாத்தியம் உள்ள அணு உலைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தவிர, ‘புதுப்பித்துக் கொள்ளக்கூடிய சக்தியை’ (Renewable Energy) முற்படுத்துவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முனைந்து வருகிறது. ஃபூகுஷீமா பேரிடருக்கு அப்புறம், புதுப்பித்துக்கொள்ளும் சக்திக்கு பொதுமக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது; ஆயினும், ஆற்றல் உற்பத்தி பற்றிய கொள்கைகளை விவாதித்துப் பரிந்துரைக்கும் ஆணையங்களுக்கு அணு சக்திக்குச் சார்பாய் உள்ள நிபுணர்களையே அரசாங்கம் நியமித்து வருகிறது. அரசு சாரா அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புக்கு இணங்கி, அரசாங்கம் அணு சக்தி குறித்து விமர்சனமுள்ள குழு அங்கத்தினர்களை அதிகரித்துள்ள போதிலும், அணு ஆற்றல் சார்பான நிபுணர்களின் சதவீதம் அதிகம். அதனால் அவர்கள்தான் விவாதங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

ஃபூகுஷீமா பேரிடர் நிகழந்த முதலாமாண்டு நிறைவுற்றதை தொடர்ந்து மக்கள் நடத்திய எதிர்ப்பு பேரணி
ஃபூகுஷீமா பேரிடர் நிகழந்து முதலாமாண்டு நிறைவுற்றதை தொடர்ந்து மக்கள் நடத்திய எதிர்ப்பு பேரணி

வரும் பகுதிகளில்

ஃபூகுஷீமா பேரிடர், மக்களின் வாழ்க்கைமுறையை அழித்து, ஆரோக்கியத்துக்கு அபாயம் விளைவித்தது; விளைவித்துக்கொண்டிருக்கிறது. எனினும் இந்தப் பேரிடர் மூலம் ஒரு சாதாரண ஜப்பானியக் குடிமகனைவிட, அரசுக்கும், மின்சக்தி நிறுவனங்களுக்கும் ஆதாயம் கிடைப்பதுதான் முக்கியம் என்றிருக்கும் ஜப்பானிய சமுதாயத்தின் கட்டமைப்புகளை இது உலகிற்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது. இது ஜப்பானின் சாமானிய மக்களைத் தூண்டி அணு சக்தியை படிப்படியாய் கைவிடும் ஒரு இயக்கத்தைத் தொடங்க உதவியுள்ளது. ஜப்பானின் எதிர்காலம், ஃபூகுஷீமா பேரழிவைப்பற்றி நடந்து வரும் சர்ச்சைகளில் என்னவிதமான முடிவு எடுக்கப்படுகிறது என்பதைப் பொருத்து இருக்கிறது.

வரும் இதழ்களில், இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள், முக்கியமாய் ஜப்பானிய அரசும், மக்களும், முன் சொன்ன ஐந்து பிரச்சினைகளையும் பற்றி என்ன விதமான நிலைப்பாடு கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி விவரித்து ஆராய்வேன். தொடரின் இரண்டாம் பகுதியில் ஃபூகுஷீமா பேரிடரைப் பற்றிய ஊடகங்கள் கொடுக்கும் தோற்றம், அது சார்ந்த இடர்கள் – முக்கியமாய் பெருவாரிப் பத்திரிக்கைகளின் அணுசக்திக்கு சார்பு நிலைப்பாடு, அதற்கு அணு சக்திக்கு எதிரான இயக்கத்தின் எதிர்வினை இவற்றைப் பற்றிப் பேசுவேன். அரசு ஊழியர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்குமே அதிக செல்வாக்கு உள்ளதாக ஜப்பானிய அரசமைப்பு இருப்பதால், இவர்கள் ’சக்தி’ உற்பத்தி பற்றிய கொள்கைகளை உருவாக்குவதில், எப்படி குடிமுறை சமுதாயத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை மூன்றாம் பகுதி ஆராயும். நான்காம் பகுதியில், அரசாங்கம் மற்றும் குடிமுறை சமுதாயத்தின் சார்பான அறிவியல் நிபுணர்கள் அதிக அளவில் இல்லாததினால் அணு சக்தியைக் கைவிடுமாறு கேட்கும் இயக்கத்துக்கு அரசாங்கத்தின் அணுசக்தி சார்பான கொள்கைகளை எதிர்ப்பதில் சிரமம் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். இறுதியில் ஐந்தாம் பகுதி ஒரு ஜனநாயக பூர்வமான, மக்களுக்கு நியாயம் செய்யும் வகையான, நெடுநாள் நிலைத்து இருக்கக் கூடிய சமுதாயத்தை உருவாக்க ஃபூகுஷீமா பேரிடரில் பொதிந்துள்ள விஷயங்களை ஆராய்ந்து முடிவடையும்.

(தொடரும்)

 

மொழிபெயர்ப்பாளர் : உஷா வை.

One Reply to “அணு ஆற்றலின் அரசியல்”

Comments are closed.