கடற்குதிரை

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : கடல்குதிரை, ஆழ்கடலின் அற்ப ஜீவி. வடிவில் மீனின் சாயல் தெரியாவிட்டாலும், அது சேமன் (Salmon), ட்யூனா (Tuna) வகுப்பைச் சேர்ந்த மீனினம். ஆறங்குலமே நீளமுடையது. பக்கவாட்டில் குதிரை முகம் கொண்டிருப்பதால், கடல் குதிரையென அழைக்கப்படுகிறது. மீன் காட்சியகங்களிலும், வெகு சிலர் வீட்டு மீன் தொட்டிகளிலும் காணக்கிடைக்கும். பல ஆண்டுகளாக, சிறுநீரகக்கோளாறு, மலட்டுத்தன்மை நீக்கும் சீன மருந்துத் தயாரிப்புக்காக, ஆண்டுக்கு 10 மில்லியன் என்ற அளவில் கடலிலிருந்து அள்ளப்படுவதால், கடலில் அவற்றின் இருப்பு கணிசமாக குறைந்து, இப்போது ‘அருகிவரும் உயிரினம்’ என்ற நிலைக்கு வந்துவிட்டது. கீழ்க்காணும் மொழிபெயர்ப்புக் கவிதை, இன்ஸ்பெக்டர் கோபோல்ட் (Inspector Kobold என்ற தலைப்பில் ஜெர்மன் மொழியில், டுர்ஸ் க்ருன்பைய்ன் (Durs Grunbein) என்ற முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் பிறந்த கவிஞரால் எழுதப்பட்டு, மைகெல் எஸ்கின் என்பவரால் (Michael Eskin) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு, ந்யு யார்க்கர் (New Yorker) என்னும் வாரப் பத்திரிகையில் வெளிவந்தது. [http://www.newyorker.com/fiction/poetry/2010/09/27/100927po_poem_grunbein]

சோதனையாளர் கோபோல்ட்[6]

கடல்குதிரைகள்- என்ன நினைத்துப் படைத்தாரோ யாரறிவார்.

பழக்கூழாலோ,கண்ணாடிக் குழம்பை ஊதியோ வடிவமைத்த
சதுரங்கக் குதிரைகளா?
குமுறும் ஆழியில்
பக்கவாட்டில் மட்டுமே தெரியும்
தன்னிரக்கக் கோமாளிகள்.

அவை பொஸைடனின்[1] வெளிகளை
ஸ்பானியக் குதிரையேற்றப் பயிலரங்காக்கும்:[2]

மாக்கடலின் சின்னஞ்சிறு லிபிட்ஸானேர்கள்[3]
அவற்றின் முகங்களை அவதானித்தால்-
திருகு வரியோடும் குழல் வாய்களின் மெல்லிய சுளிப்பில் தெரிகிறது-
பயிற்சியில் அவை களிப்புறவில்லை.

கடற்பாசியில் வால் சிக்கிவிட,
ஆழிப்புழைகளின் இழுப்பால் அவதியோ?

எலும்பு உள்ளாடையில் செங்குத்தாய் நிமிர்ந்து,
வெளிர்பழுப்பு நிற மேலங்கியணிந்து
இருண்ட, பாசி அடர்ந்த இடங்களில்,
கடல் முள்ளெலிகளின்[4] சாஹாபாண்ட்[5] நடனத்தைக் கண்டு மிரளாமல்
தம் ஆய்வுப்பணிச் சுற்றைத் தொடர்கின்றன.

Durs Grunbein
Durs Grunbein

ஜெர்மன் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இதோ:

INSPECTOR KOBOLD

Sea horses-who knows
What he was thinking.
Chess piece made of fruit jelly
Or hand-blown glass?
Appearing only in profile,
Sad clowns of the moody sea,

They turn Poseidon’s fields
Into a Spanish riding school:

Tiny ocean Lipizzaners.
Only they don’t seem to enjoy the dressage-
Judging by their faces-
These flute mouths- slightly piqued.

Does the current bother them, the kelp
In which their tails get caught?

Upright in their fish-bone corsets,
Ash-brown waistcoats, on their rounds of inspection
Through the dark algaeous spaces-

Unfazed by the urchin’s sarabande.

-Durs Grunbein
(translated from German by Michael Eskin)
The New Yorker, September 27, 2010

(முற்றும்)

குறிப்புகள்:

1.பொஸைடன்..(Poseidon )- கிரேக்கர்களின் கடவுள்களில் ஒருவர். கடல், நீர், பூகம்பம், குதிரைகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். க்ரோனாஸும், ரியாவும் பெற்ற ஆறு பிள்ளைகளில் ஒரு கடவுள். ஜீயஸின் சகோதரன். குதிரைகளின் தோற்றுவாய் என்றும் கருதப்படுகிறார்.

2. ஸ்பானிஷ் குதிரையேற்றப் பயிலரங்கம்(Spanish riding school)-ஆஸ்திரியா நாட்டில், வியன்னா நகரில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் துவங்கும் பாரம்பரியப் பெருமை பெற்ற குதிரையேற்றப் பயிற்சிப்பள்ளி

3. லிபிட்ஸானேர்கள்-(Lipizzaners)- ஸ்பானியக் குதிரையேற்றப் பயிற்சிப் பள்ளியில் வருடாந்திரக் குதிரையேற்றக் காட்சிகளில் பங்கு பெரும் ஸ்லாவீனிய நாட்டில் பல நூறாண்டுகளாகப் பாரம்பரியமாக வளர்க்கப்படும் தரமான வகை வெண்குதிரைகள்

4.கடல் முள்ளெலிகள்(Sea Urchins)-கடலின் அடியில் முள்குண்டுகளாய் (முள்ளம்பன்றியைப்போல்) பரவி, அங்குள்ள பாசிகளை உண்டு வாழும் உயிரினம்.

5. சாராபேண்ட் (அல்லது சாஹாபாண்ட் -ஃப்ரெஞ்சு உச்சரிப்பு) என்பது பரோக் எனப்பட்ட காலத்தில் பிரபலமான நடனம். அதற்கு முன்பு லத்தீன் அமெரிக்காவில் பரவலாகிப் பின் ஸ்பெயினில் பரவியது. செய்ரபாண்டெஸ் (Cervantes) தன் நாவலில் இதைப் பற்றி எழுதி இருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது. இந்த நடனத்தின் ஒரு வடிவை இங்கு காணலாம். முதல் வீடியோ ஆண்களுக்கான தனி நடனம்.

இரண்டாவது பெண்களுக்கான தனி நடனம்.

மூன்றாவது ஆண்களும் பெண்களும் கலந்து ஆடும் நடனம்- முறையான வகை.

இன்னொரு வகை கலப்பு நடனம் இங்கே:

சாராபேண்ட் என்ற பெயரில் இசையும் மேலே கண்ட நடனத்தோடு இசைக்கப்படுவது உண்டு. அதன் ஒரு நிகழ்ச்சியை இங்கே பார்க்கலாம்.

6. கோபோல்ட் என்பது ஜெர்மனியில் கிருஸ்தவம் பரவி பண்டை நம்பிக்கைகளை அழித்த போதும், அழியாமல் மக்களிடையே உள்ள ஒரு பழம் குடி நம்பிக்கை. வீடுகளில் வாழ்ந்து சில நேரம் சோதனையாகவும், சில நேரம் பயனுள்ளதாகவும் இருக்கும் குறளிகளில் ஒரு வகை- இது சிறுவர் போலவும், பழுப்பு ஆடைகள் அணிந்தும் காணப்படுமாம். அனேக நேரம் பார்க்க முடியாதபடி இருக்கும். சில நேரம் காணப்படும். இதே போல கடலாழங்கள், சுரங்கங்களிலும் வேறு வகை கோபோல்ட் குறளிகள் (Gnome) இருப்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. கோபோல்ட்டுகள் உன்னிப்பான கவனம் கொண்டவை, நுணுக்கமாக சூழலைச் சோதிப்பவை என்றும் நம்பிக்கை உண்டு. கடல் குதிரைகள் உருவிலும் சிறியவை, பற்களில்லாத வாய்கள் கொண்டவை. மிக்க ஆழங்களிலேயே வாழும் உயிரினம். இவை சிறு உயிரினங்களையே உண்டு வாழ்பவை. தம் இரையை மிக உன்னிப்பாகக் கவனித்து விட்டு ஒரு தாவலில் பிடித்து விழுங்குபவை. அதிக தூரம், அதிக வேகமாக நீந்த இயலாதவை என்பதால் தம் இரையை மிகக் கவனிப்புக்குப் பிறகே இவை தாவிப் பிடிக்கின்றன. இறால் மீன் (prawn, shrimp) வகை உயிரினங்கள் இவற்றின் இரைகளில் சில.

7. இதே கவிஞர் தன்னுடைய மற்றொரு கவிதையை வாசிக்கிறார். அதன் ஆங்கில் மொழிபெயர்ப்பும் வாசிக்கப்படுகிறது.