மகரந்தம்

வெந்நீரால் குளிர்விக்கப்படும்(?!) கணிணி அளிப்பான்கள்(servers)

சூடான கணினிகள், அளிப்பான்கள் (servers), தொலைத் தொடர்பு எந்திரங்கள் போன்றனவற்றை எப்படிக் குளிர்விப்பது என்பது ஒரு தீராத பிரச்சினை பெரும் தொடர்புத் துறை நிறுவனங்களுக்கு. இதற்கே எக்கச் சக்கமான சக்தியும், அந்த சக்தியை உற்பத்தி செய்ய எரிபொருளும் தேவைப்படுவதால், கடல்நீரைப் பயன்படுத்திக் குளிர்விப்பது, குளிர்நீருள்ள பெரும் ஏரிகள், ஐஸ்லாந்து, ஃபின்லாந்து போன்ற இயல்பாகவே குளிர் அதிகமுள்ள நிலப்பகுதிகளில் அளிப்பான்களின் ‘பண்ணை’யை அமைப்பது என்று பலவிதங்களில் விடைகளைத் தேடுகின்றன இந்த நிறுவனங்கள். [புதுச் சொல்லாக்கங்கள் சில சமயம் விசித்திரமாகவே இருக்கின்றன. அளிப்பான்கள் என்பவை எந்திரங்கள். ஆனால் ‘சர்வர் ஃபார்ம்ஸ்’ (Server Farms) என்று இவற்றைப் பெரும் எண்ணிக்கையில் வைக்கும் இடங்களை அழைக்கிறார்கள். சர்வர்கள் எனப்படும் அளிப்பான் எந்திரங்கள் எப்படி பசு, எருமை, குதிரை, பன்றி போன்ற வளர்ப்பு மிருகங்களுக்குச் சமமாகக் கருதப்படத் துவங்கின என்பது மனித மனதின் விசித்திர இயக்கங்களைப் பற்றி யோசிப்பவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு புதிர்.]
ஏலத்தின் மூலம் உலகெங்கும் பொருட்களை விற்க முயலும் நிறுவனமான ஈ-பே (E-bay), ஒரு புது முறையைப் பயன்படுத்திப் பார்க்கவிருக்கிறது. பாலைவனத்தில் தன் பெரும் அளிப்பான் எந்திரங்களைப் பொருத்தி அதிக உஷ்ணத்தில் அவற்றை ஓட்டவிருக்கிறது. 115 டிகிரி ஃபாரன்ஹைட் உஷ்ணத்தில் செயல்படும் இந்தக் கருவிகளை வெந்நீரால் (100 டிகிரிதானே) கூடக் குளிர்விக்க முடியுமாம். செய்தி இங்கே.

http://www.wired.com/wiredenterprise/2012/02/ebay-desert-data-center/

-00-


சீனாவின் வளர்ச்சியும், அதன் குடிமக்களின் நம்பிக்கையின்மையும்

நன்கு பயின்ற, கல்வியிலும் தொழிலிலும் வெற்றி கண்ட சீன இளைஞர்கள் நாட்டை விட்டு நீங்கி மேற்குக்கு குடி பெயர்வதையே நாடுகிறார்கள். ஏன்? அவர்களைப் பொறுத்தவரை சீன அரசாங்கத்தை நம்பி எதையும் செய்துவிட முடியாது. தடாலடியாக எதையாவது செய்து அவர்கள் எதிர்காலத்தை சீன அரசு குழியில் தள்ளிவிடும் என்று நினைக்கிறார்கள். மேலும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் கவலை அவர்களுக்கு. இந்நிலையை விரிவாக பேசுகிறது இந்தக் கட்டுரை.

http://www.spiegel.de/international/world/0,1518,817092,00.html

-00-


நான்கு தந்தங்களுடன் ஒரு யானை

பேலியாண்டாலஜி (Paleontology) எனப்படும் பண்டைக் காலத் தடயங்களை ஆராயும் துறையில் என்னென்னவோ அதிசயங்களெல்லாம் கிட்டும். ஆனால் எந்தத் தகவலும் உடனடியாக ஒரு புரியக் கூடிய உருவில் கோர்க்கப்பட்டுக் கொடுக்கப் படாது. தடயம் கிட்டி, அதைப் பிரித்து அறிந்து, பல பின்னணிகளில் பொருத்திப் பார்த்து எது இருப்பதில் நம்பகத் தன்மை உள்ள விளக்கமாக இருக்கும் என்று கருதி, அதைப் பலர் கலந்தாலோசித்து, பின் ஒரு விளக்கமாகத் தருகிறார்கள். சில ஆண்டுகள் கூட இல்லை, சில வாரங்கள் முன்பு நடந்த ஒரு சம்பவத்தை அறியவே நிறைய விசாரணைகளும், ‘துப்புத் துலக்கலும்’ தேவைப்படுகின்றன.

இந்த சம்பவம் சுமாராக எழுபது லட்சம் வருடங்கள் முன்பு நடந்திருக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி. ஒரு கூட்டமான மிருகங்கள் தண்ணீர் மிகக் குறைவாக ஓடிய ஒரு பரப்பின் வழியே பயணித்து ஆப்பிரிக்காவுக்குள் போகின்றன. அவை போகிற போது விட்டுச் சென்ற தடயங்கள் இத்தனை காலமாக அப்படியே இருந்திருக்கின்றன. அவை என்ன வகை மிருகங்கள் என்று புரியாமல் பண்டைத் தடயவியலாளர் தடுமாறிக் கொண்டிருந்தனர். தடயங்கள் அப்பகுதி மக்களுக்குப் பல காலமாகத் தெரிந்திருந்தவை. அறிஞர்களுக்குத் தெரிந்து 10-12 வருடங்களாயிருக்கின்றன. 2003 இல் ஒரு பாக்கெட் காமிராவைப் பட்டம் ஒன்றில் சேர்த்து உயரப் பறக்கவிட்டு எடுத்த பல படங்களைத் தொகுத்து நோக்கியபோது இவை அனைத்தும் ஒரே கூட்டத்து மிருகங்களால் உருவானவை என்பது தெரிந்திருக்கிறது. பிறகு அங்கு கிட்டிய எலும்புத் துண்டங்களின் உறைந்து இறுகிய வடிவுகளை வைத்து இவை அனைத்தும் பல லட்சம் வருடங்கள் முன்பு வாழ்ந்த யானை வகை மிருகங்கள் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்த யானைகளுக்கு நான்கு தந்தங்கள் இருந்திருக்கின்றன என்பது வரை தெரிந்திருக்கிறது. மேலே அறிக்கையைப் படியுங்கள்.

http://www.wired.com/wiredscience/2012/02/in-the-steps-of-ancient-elephants/

பேலியாண்டாலஜி என்ற துறை நம் புராணங்களை ஒத்த ஜாலமான கதைகள் கொண்டது என்றாலும், அவற்றுக்கு ஏனோ நாம் கூடுதலான மதிப்பைக் கொடுக்கிறோம், அது ஏன் என்றும் யோசிக்கலாம்.

-00-


ஜப்பானில் வறுமை

ஜப்பானில் வறுமை, பட்டினியால் சாவு என்றெல்லாம் இந்தச் செய்தி கூவுகிறது. ஜப்பானின் எழுச்சியும், தேக்கமும், இன்று ஓரளவு வீழ்ச்சியும் பற்றி நிறைய கட்டுரைகள், புத்தகங்களெல்லாம் இன்று கிட்டுகின்றன. இவற்றில் சில ஜப்பானியரே எழுதியவை. இந்த இதழில் ஒரு ஜப்பானிய ஆய்வாளர் ஃபூகஷிமா அணு உலை விபத்து குறித்தும் அதை ஜப்பானியர் எப்படி அணுகுகிறார்கள் என்பது குறித்தும் எழுதிய கட்டுரையைப் பிரசுரிக்கிறோம். அது சொல்வனம் இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.

இந்தச் செய்தியைக் கொடுக்கிற கார்டியன் ஓரளவு சிந்திக்கக் கூடிய பத்திரிகை என்பதால் இதில் உள்ள செய்தி நம்பகத் தன்மை உள்ளதென்று எடுத்துக் கொள்ளலாம். இதையே நியுயார்க் டைம்ஸ் போன்ற ஒரு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கருவியான செய்தித்தாள் பிரசுரித்தால் எப்படி எடுத்துக் கொள்வதென்பதை நாம் நன்கு யோசிக்க வேண்டி இருக்கும். இந்தச் செய்தியிலும் இறந்த குடும்பம் ஒன்றுதான். வறுமை நிலையில் உள்ள முதிய ஜப்பானியர் இன்றளவில் நிறைய என்றாலும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டே இந்தக் கட்டுரை பேசுகிறது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
இந்தச் செய்தியில் ஜப்பானின் சமூகமும், அரசும், தனி மனிதர்களும் தம் நிலை குறித்து எப்படி யோசிக்கிறார்கள் என்பது சில வியப்புத் தகவல்களை நமக்குத் தருகிறது என்பது உண்மை.

http://www.guardian.co.uk/world/2012/feb/24/family-die-starvation-japan

-00-


சீனா vs. ஹாங்காங்

சீனரின் உள்நாட்டு இடம் பெயர்தல் குறித்தது இது. சீனாவின் ஹூகாவ் முறை குறித்து சொல்வனத்தில் ஜயந்தி சங்கர் எழுதிய பத்துக் கட்டுரைகளோடு இதை இணைத்துப் பார்த்தால் நமக்கு ஒரு மேலான புரிதல் கிட்டும். ஹூகாவ் என்ற குடியுரிமைச் சீட்டு சீனர்களின் வாழ்வில் ஒரு பெரும் பிரச்சினை. அந்தச் சீட்டு இல்லாவிடில் வேலை பார்ப்பது கடினம், மருத்துவ வசதி பெறுவது கடினம், பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இடம் கூட கிட்டாது. எந்த நேரமும் போலிஸால் பிடிக்கப்பட்டு ஊரை விட்டுக் கடத்தப்பட முடியும்.  நித்திய கண்டமாக வாழ்வு இருக்கும், வயிற்றில் அமிலம் சுரக்க எந்நேரமும் தெருக்களில் உலவ வேண்டி இருக்கும். கார், இரு சக்கர மோட்டர் வாகனங்கள் என்று எதையும் ஓட்டக் கூட முடியாது.  தவிர வேலைக்கு அமர்த்துவோருக்கு இந்தப் பிரச்சினை இருப்பவருக்கு குறைவான ஊதியம் கொடுத்தால் போதும் என்றும் தெரியும். பல மேலை நாடுகளில் இப்படி குடியுரிமைச் சீட்டு, அனுமதி இல்லாத தொழிலாளர்கள் கிட்டத் தட்ட அகதிகள் போன்றே வாழ்கிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில் இத்தகையோரை மையமாக வைத்து அரசியல் வெற்றிகள் கூட ஈட்டப்படுகின்றன. வலது சாரிக் கட்சிகளுக்கு உலகில் பல நாடுகளிலும் இந்த வகை மனிதர்கள் அரசியல் நடத்த ஒரு பகடைக்காய். இடது சாரிகளுக்கோ பல நாடுகளிலும் அரசைக் கவிழ்க்க இந்த மனிதர்களின் மோசமான நிலை இன்னொரு வசதியான ஆயுதம்.   மேற்கு நாடுகளுக்கும் சீனாவுக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு என்னவென்றால், இங்கு சீனர்களே சீனாவில் பல பகுதிகளிலும் வசிக்க உரிமை அற்றவர்கள் என்பதுதான். இந்தியாவில் காஷ்மீர் ஒன்றில்தான் இப்படி ஒரு உரிமை இந்தியருக்கு மறுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் செய்திக் கட்டுரையில் ஹாங்காங் என்கிற முன்னாள் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த தீவு, இன்று எப்படி மையச் சீனாவுடன் இன்னமும் ஒட்டாமல் இருக்க முயல்கிறது என்ற அரசியல் எதார்த்தம் வெளியாகிறது. ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ஆட்சியின் ஜனநாயக அமைப்புகளில் வாழ்ந்து பழகிய சீனர்களுக்கு, சீன கம்யூனிஸ்டு கட்சியின் அடக்கு முறையும், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தன்னிச்சை இயக்கமும் ஏற்கக் கூடியதாக இல்லை. அதே நேரம் என்னதான் தேசிய உணர்வு கூடி இருந்தாலும், மையச் சீனாவின் பல குடிமக்களுக்கும், சீனாவோடு ஒப்பிட்டால் ஹாங்காங்கில் நில்வும் திறந்த சமுதாய நிலைமை பிடித்திருக்கிறதால், கர்ப்பம் தரித்து குழந்தை பிரசவிக்கும் நிலையில் உள்ள சீனப் பெண்கள், ஹாங்காங்கிற்குப் பயணம் செய்து அங்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது அந்தக் குழந்தைகளுக்கு ஹாங்காங்கில் குடியுரிமைச் சீட்டு பெற வாய்ப்பளிக்கிறதாம்.

சீனா பிரும்மாண்டமாக வளர்ந்து விட்டது என்று மார்தட்டும் இந்திய இடது சாரிகளுக்கு இதெல்லாம் கண்ணில் படாது என்பதில் நமக்கேதும் வியப்பு எழத் தேவை இல்லை. குருட்டு பக்தி இந்திய இடதுகளின் நெடுங்கால குணாதிசயம்தானே.

http://www.nytimes.com/2012/02/23/world/asia/mainland-chinese-flock-to-hong-kong-to-have-babies.html?hpw