வால் மக்டர்மிட் – மரபை உடைத்த பெண்குரல்

தீவிரமான குற்றப்புனைவுகளைப் பெண்கள் எழுத முடியுமா? தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ குற்றப்புனைவுகள், புலனாய்வுக்கதைகள் பெண்களால் எழுதப்படுகின்றனவா?

இரண்டாம் கேள்விக்கு பதில் தேடுவது அத்தனை சிரமமான விஷயம் இல்லை. தார்வாடைச் சேர்ந்த ஷஷி தேஷ்பாண்டே (Shashi Deshpande) ஆங்கிலத்தில் எழுதுகிறார். தமிழில் ‘இந்துமதி’ குற்றப்புனைவு சார்ந்து சில படைப்புகளை எழுதி உள்ளார். (மிகப்பழைய குமுதம் இதழ்களின் பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் வாசித்திருக்கிறேன்.) ஆனால், உலகளவில் பல குற்றப்புனைவுகளோடு அறிமுகம் இல்லாத வாசகர்கள், முதல் கேள்விக்கு அவ்வளவு உறுதியாகப் பதில் சொல்லமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். பெண்கள் இவ்வகைப் புனைவில் (genre) அதிகம் ஆர்வம் இல்லாதவர்கள் என்ற எண்ணம் நம் வாசகர்களிடையே பொதுவாக உள்ளது.

ஆனால், உலகெங்கும் நன்கு அறியப்பட்ட அகதா க்ரிஸ்டி, நயோ மார்ஷ் (ngaio marsh) ஆகியோரில் துவங்கி, தன் கணவர் பெர் வாலுவோடு இணைந்து ஐரோப்பாவின் குற்றப்புனைவுகளின் எழுச்சிக்கு வித்திட்ட மய் ஷ்யோவால் (Maj Sjöwall), இன்று பிரபலமாக இருக்கும் கேரின் ஃபோஸம் (Karin Fossum), காரின் ஆல்வ்டியேகென் (Karin Alvtegen), பி.டி. ஜேம்ஸ், ரூத் ரெண்டல், ஸூ க்ராஃப்டன் போன்றார் வரை உலகின் சிறந்த குற்றப்புனைவுகளைப் பெண் எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இன்று குற்றப்புனைவு வாசகர்களிடையே நன்கு அறிமுகமாகியிருக்கும் வால் மக்டர்மிட் (Val Mcdermid).

57 வயதாகும் வால் மக்டர்மிட், இன்று ஸ்காட்லாண்டின் மிக முக்கியமான குற்றப்புனைவு எழுத்தாளர். (இயன் ரேங்கின் இன்னொரு முக்கியமான ஸ்காட்டிய குற்றப்புனைவு எழுத்தாளர்.) நிலக்கரி சுரங்கம் சார்ந்த சிறுநகரில் வளர்ந்த இவர், ஸ்காட்லாண்டின் அரசுப் பள்ளி ஒன்றில் துவங்கிப் படித்து, கல்லூரிப் படிப்பிற்கு ஆக்ஸ்ஃபர்ட் (oxford) சென்ற முதல் பெண்ணாவார். அங்கேதான் பாலுணர்வு குறித்த தன் உணர்வைக் கேள்விக்குள்ளாக்கி, தான் ஒரு தற்பால்விழைவாளர் (lesbian) என்பதைப் புரிந்துகொண்டார். கல்லூரிப்படிப்பை முடித்தபின், மான்செஸ்டர் நகரில் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அந்நகரில் வேலை செய்த மொத்தம் 137 பத்திரிகையாளர்களில் இவரையும் சேர்த்து மொத்தம் மூன்றே மூன்று பெண் பத்திரிகையாளர்கள்தான். “அக்காலத்தில் பெண் நிருபர்களின் நிலை அப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒரு பெண் பத்திரிகையாளரை நியமிப்பதை ஏதோ ஒப்புக்கு வைத்திருந்தார்கள். அதைத் தாண்டிப் பத்திரிகைத்துறையில் பெண்களுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்கவில்லை.” என்று ஒரு பேட்டியில் சொல்கிறார் மக்டர்மிட்.

அதன்பின் நாடகாசிரியராக இருந்து, அப்புறம் முழு நேர நாவலாசிரியர் ஆனார். குற்றப்புனைவுகளில் பொதுவாக ஆண்மை (masculinity) பிரதானமாக இருக்கும். பெண்களால் எழுதப்பட்ட, பெண்கள் முக்கிய பாத்திரங்களாக இருக்கும் குற்றப் புனைவுகளை எடுத்துக்கொண்டால் கூட அவற்றிலும் ஆண்களே பெரும்பாலும் முக்கியப் பாத்திரங்களாக உள்ளனர். (உதாரணம்: Ngaio Marsh, Elizabeth George ஆகிய எழுத்தாளர்களின் நாவல்கள்). அகதா கிறிஸ்டியின் ஹெர்க்யூல் பாய்ரோ (Hercule Poirot), மிஸ் மார்புல் (Miss Marple) பாத்திரத்தை விட அதிகம் புகழ் பெற்றவர்தானே?

குற்றப்புனைவுகளில் பெண் கதாபாத்திரங்களின் ஒரு முக்கிய அம்சம் அந்த பாத்திரங்களின் தாய்மை உணர்வு, அரவணைக்கும் தன்மை. கிறிஸ்டியின் ‘மிஸ் மார்புல்’ (Miss Marple) பாத்திரம், ஏதோ தன் எண்ணங்களில் தொலைந்து போயிருக்கும் அன்புக்குரிய மூதாட்டியின் தோற்றத்தை (lovable bemused old lady) நமக்கும், கதையின் மற்ற பாத்திரங்களுக்கும் அளிக்கும். அலெக்ஸாண்டர் மக்கால் ஸ்மித் (Alexander McCall Smith) எழுதும் ’நம்பர் ஒன் லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ தொடர் நாவல்களில் (‘The No. 1 Ladies’ Detective Agency’ Series) வரும் மா ப்ரஷஸ் ராமொட்ஸ்வெ (‘Mma Precious Ramotswe’ ) பிறருடன் கனிவாகப் பழகும் பாத்திரம். இவை ’பெண்’ என்றால் சமூகத்திலிருக்கும் எதிர்பார்ப்புகளை ஒட்டிய நடத்தை உள்ள பாத்திரங்கள், பெண்களுக்கான குணங்களைக் கொண்டே துப்புத் துலக்குவதைச் செய்வதாக அமைந்த புனைவுகளாக இருந்தன.

பொதுவாக இவ்வகைப் பெண்கள் காவல்துறையில் வேலை செய்வதாக சித்திரிக்கப்படுவது அரிது. தனியார் துப்பறிவாளராக சில சமயம் இருப்பினும், அவர்களை மீறிய ஏதோ ஒரு காரணத்தால் குற்றத்தை விசாரணை செய்ய வேண்டிய சூழ்நிலை வந்ததால் அதில் சம்பந்தப்பட வேண்டியவர்களாக இருப்பர். [அகதா கிரிஸ்டியின் மிஸ் மார்புல் இப்படித் தற்செயலாக துப்புத் துலக்க உதவியவர், பிற்பாடு தம் வாழ்விலிருந்து அதிகம் விலகாமலேயே அந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக அமைந்த பாத்திரம்.] காவல்துறையில் பெண்கள் வேலை செய்யும்போது சந்திக்கவேண்டிய தனிப்பட்ட பிரச்சினைகள் (பாலினப் பாகுபாடு, இரக்கம், அவர்கள் திறமை,செயல்திறன் குறித்த சந்தேகங்கள்) பற்றியெல்லாம் இந்தக் கதைகளில் காட்டப்படுவதில்லை. மேலும் இந்தப் பெண்கள் புலனாய்வு செய்யும் குற்றங்களுக்கும் ஒரு பொதுவான தன்மை இருக்கும். அதாவது பணம்/பொருள்/பழிவாங்குதல் என்ற மேலோட்டமான வகைமைக்குள்தான் குற்றங்கள் இருக்கும். குற்றத்தின் தன்மை, அது விசாரிப்பவர் மீது ஏற்படுத்தும் மன அழுத்தம் பற்றி இவை அதிகம் பேசாதவை.

இவை எல்லாவற்றையும் உடைத்து, வேறு விதமான பெண்களை முக்கியமான கதாபாத்திரங்களாகக் கொண்ட குற்றப்புனைவுகளை எழுதுகிறார் வால் மக்டர்மிட். இவருடைய நாவல்களின் முக்கிய இழைகளாக, சிக்கலான கதாபாத்திரங்கள், அவர்களுக்கு நன்கு செதுக்கப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்கள், குற்றம் குறித்த கூர்மையான உளவியல் பார்வை, பெண்கள்/ பாலுணர்வில் மாற்று விருப்புகள் கொண்டவர்கள் முக்கியப்படுத்தப்படுவது, மாறி வரும் சமூக நிலைகள் குறித்த அவதானிப்பு போன்றவற்றைச் சொல்லலாம்.

val_mcdermid

பொதுவாகச் சமீப காலம் வரை, பெண்களும், பாலியல் சிறுபான்மையினரும் பொதுவெளியிலும், படைப்புத்துறையிலும் எள்ளலாகவே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக குற்றப்புனைவுகளில் பாலியல் சிறுபான்மையினர் ஒன்று குரூர மனம் கொண்டவர்களாக, குற்றவாளிகளாக இருப்பார்கள் அல்லது குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். ஆனால் மக்டர்மிட்டின் படைப்புகளில் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினர், முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுடைய பாலினம், பாலியல் தெரிவுகள் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை. முன்முடிவான வார்ப்புகளை (‘stereotype’) இப்படி உடைக்கும் தன் நாவல்கள் பற்றி மக்டர்மிட் கூறுகிறார்:

“நான் இதை வலிந்து செய்வதில்லை. கதையின் போக்கே இவற்றைத் தீர்மானிக்கிறது. புற எதார்த்தங்கள் குறித்து நான் கவனம் கொண்டிருக்கிறேன் – இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி விபரம் தெரிந்தவர்கள் என்னிடம் சொன்னபடி பார்த்தால், தற்பாலுறவை நாடும் வாலிபரான ஒரு ஆண், தொடர் கொலைகாரர் ஒருவரால் கொல்லப்படுவது அதிக சாத்தியம் உள்ள ஒன்று. ஆனால், மனிதர் தவறான முடிவு எடுக்கும்போது என்ன நடக்கிறது என்பதை ஆராய்வது எப்போதுமே சுவாரசியமானது என்று நான் கருதுகிறேன். தற்காலக் குற்றநாவல் எதிர்பார்க்கமுடியாததை ஆய்ந்து பார்ப்பதற்கான களமாகி இருக்கிறது. எப்போதுமே குற்றப்புனைவு என்பதில் எழுத்தாளர்கள் விஷயங்களின் விளிம்பு நிலைகளைக் குடைந்து பார்க்கிறார்கள்.”

இதில் இறுதி வரி முக்கியமான ஒன்று, மையத்திலிருந்து விளிம்புக்குச் செல்வதுதான் பொதுவான புனைவுகளில் கூட சிறந்ததாகக் கருதப்படுகிறது அல்லவா? அதைத்தானே இன்னொரு வகையில் குற்றப்புனைவுகள் செய்கின்றன? இந்த வரியை இவருக்கு மட்டுமல்லாமல், இன்று குற்றப்புனைவுகளில் சிறந்த ஆக்கங்கள் படைக்கும் பலருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

மக்டர்மட்டின் ஆக்கங்களை உளவியல் சார்ந்த காவல்துறை விசாரணை (Psychological police procedural) என்று வகைப்படுத்தலாம். அதில் நான்கு விதமான புத்தகங்களை எழுதுகிறார் மக்டர்மட்.

1. லிண்ட்ஸி கோர்டன் (Lindsay Gordon) என்னும் தற்பால் விழைவுள்ள நிருபர் குற்றங்களைப் புலனாய்வு செய்யும் தொடர் நாவல்கள்.

2. கேய்ட் ப்ரான்னிகன் (Kate Brannigan) என்னும் தனியார் துப்பறிவாளர் மையக்கதாபாத்திரமாக இருக்கும் தொடர் நாவல்கள்.

3. டோனி ஹில் (Tony Hill ) என்னும் குணவுரு வரைவாளர் (profiler), மற்றும் கேரொல் ஜோர்டன் (carol Jordan) என்னும் போலீஸ் அதிகாரி இருவரும் சேர்ந்து பணிபுரியும் சம்பவங்கள் கொண்ட தொடர் நாவல்கள்.

4. மேற்சொன்ன மூன்று வகையிலும் அடங்காத தனி (standalone) நாவல்கள்

இவை அனைத்திலும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட, வெவ்வேறு களங்களில் பணியாற்றுகிற முக்கியப் பாத்திரங்கள் இருப்பார்கள்.

இதில் டோனி ஹில் தொடர் மிகவும் பிரபலமான ஒன்று. தொலைக்காட்சியில் தொடராகவும் வருகிறது. (அதற்கான கதைகள் தனி). இத்தொடர்தான் வால் மக்டர்மிடுக்கு ஒரு திருப்பு முனை என்று சொல்லலாம். இதில் வந்த முதலாவது நாவலுக்கே (‘The Mermaids Singing ‘) அவர் குற்ற நாவலாசிரியர் சங்கம் (CWA) வழங்கும் ‘கோல்டன் டாக்கர்’ (Golden Dagger) என்ற உயரிய விருதை பெற்றார். இனி, இத்தொடர் பற்றி சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

குற்றப்புனைவின் எந்தத் தொடரிலுமே, அதில் வரும் பாத்திரங்கள், தொடரின் கதை அளவுக்கு முக்கியமானவை. ஏனென்றால் தொடர்ச்சியாக ஆறு அல்லது ஏழு நாவல்கள் படிக்க வேண்டும் என்றால், அதில் தொடர்ந்து வரும் பாத்திரங்களும் நம்மை ஈர்க்குமளவுக்கு ஆழமாகவும், சுவாரசியமாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் பல நாவல்களாகச் செல்லும் நெடுந்தொடரை அலுப்பு தட்டாமல் படிக்கமுடியும். இன்னொரு காரணமும் உள்ளது. பொதுவாக குற்றப்புனைவுகளில் முதல் வாசிப்பிற்குப் பிறகு, அது எவ்வளவு சிறந்த நாவலாக இருந்தாலும், அதன் முக்கிய அம்சமான புதிர் தன்மை குறைந்து விடும் அல்லவா, அதனால் மறுபடி அதே பாத்திரங்கள் வரும் புனைவைப் படிக்க ஒருவருக்கு விருப்பம் எழவேண்டும் என்றால் அந்தப் பாத்திரங்கள் அவரை ஈர்க்க வேண்டும். அவற்றில் மேன்மேலும் கவனிக்கக் கூடிய அளவுக்கு ஆழமும், பரிமாணங்களும் வேண்டும். ஷெர்லாக் ஹோம்ஸ் எனும் பாத்திரத்தின் ஆளுமைதானே அந்த நாவல்கள்/சிறுகதைகள் இத்தனை ஆண்டுகள் கழித்தும் வாசிப்பு/மறுவாசிப்பு செய்யப்படுவதற்கான ஒரு முக்கிய காரணம்? அந்தப் பாத்திரம் நிஜமான மனிதர் என்றே உலகெங்கும் ரசிகர்கள் கருதுவதோடு, அவர் வசித்ததாகக் கருதப்படும் வீடு, அதைச் சுற்றிய தெருக்கள் எல்லாம் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வரும் இடங்களாகி விட்டன. புனைவு அந்த அளவுக்குக்கு நிஜம் போலிருந்திருக்கிறது, பல தலைமுறைகளாக வாசகர்களைக் கவர்கிறது.

டோனி ஹில் தொடரின் பல கதாபாத்திரங்களும் வாசகர்களின் ஈர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளுமளவுக்கு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருப்பவை. இத்தொடரின் மையக் கதாபாத்திரமான டோனி, ஒரு குண உரு வரைவாளர் (Profiler), உளவியல் நிபுணர்.

theretributionbookcoveratlantic

இத்தொடரைப் புரிந்துகொள்வதற்கு, குணவுரு வரைவு என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வது அவசியம். குற்றப் புலனாய்வு என்பது ஆரம்பத்தில் குற்றவாளி விட்டுச்சென்ற தடயங்கள் (material evidence), நேரடி சாட்சியங்கள் (eye witness) மூலம் நடந்தது. பிறகு குற்றங்கள் பற்றிய ஆய்வுகள் மூலம் இதை முன்னே நகர்த்தினார்கள். (எந்த இடங்களில் குற்றம் அதிகம் நடக்கிறது, எவ்வளவு இடைவெளி விட்டு நடக்கிறது போன்ற ஆய்வுகள்). பின்னர் தடயவியல் புலனாய்வு (forensic investigation), அறிவியல் முன்னேற்றங்களால் முக்கியமான, உபயோகமான வழியானது. ஆனால் இவற்றில் குற்றவாளிகளின் மனநிலை பற்றிய ஆராய்ச்சிகள் பொதுவாக நடப்பதில்லை. அந்த வேலையைக் குணவுரு வரைவு செய்கிறது. ஒரு குற்றம் நடக்கிறது, குற்றவாளி யாரென்று தெரியவில்லை, அதிகத் தடயங்களும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். குற்றம் நடந்த முறை, குற்றம் நடந்த இடம், இவற்றை வைத்து, குற்றவாளியின் வயது, அவர் பார்க்கக்கூடிய வேலை, அவருடைய நிறம்/இனம் போன்றன குறித்த சாத்தியங்கள் பற்றி ஒரு பொதுச்சித்திரத்தை, குணவுரு வரைவு என்பது, நடத்தை பகுப்பாய்வு (behavioral analysis) என்ற வழிமுறை மூலம் பெற்று, அதைக் காவல்துறைக்கு அளிக்கிறது.

உதாரணமாக ஒரு கொலையாளி ஒருவரைக் கொன்று அவர் விழியை எடுத்துச் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதைக் குணவுரு வரைவு எப்படி அர்த்தப்படுத்துகிறது? அவர் அந்தக் கண் எப்போதும் மரண நேரத்தில் இருந்த பயத்தோடு தன்னைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு சென்று இருக்கலாம். இது அவர் எப்போதும் மற்றவர் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணுபவராக இருக்கலாம் என்று குணவுரு வரைவு ஒரு கருத்தை முன்வைக்கலாம். இதன் நீட்சியாக, அவர் தனக்குக் கீழ் பல பேர் வேலை பார்க்கும் ஒரு உயர் பதவியில் இருப்பார், தன்னிடம் பணியாற்றுபவர்கள் மீது மிகவும் கண்டிப்பாக இருப்பார் (control freak), வீட்டிலும் தன் குடும்பத்துடன் அப்படித்தான் இருப்பார் என்று குணவுரு வரைவு கூறலாம். (இது ஒரு உதாரணம் மட்டுமே). இதை ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற பாத்திரங்கள், காரின் டயர் தடம், சிகரட் துண்டு போன்றவற்றை வைத்து குற்றவாளியை கண்டுபிடிப்பதுடன் ஒப்பிடக்கூடாது. குணவுரு வரைவானது, குற்றவாளி இந்த மாதிரி இருப்பார்/இருக்கலாம் என்றுதான் சொல்கிறது. ஒரு ஆளைச் சுட்டி இவர்தான் குற்றவாளி என்று சொல்வதில்லை. காவல்துறைதான் இதை வைத்து வழக்கை முன்னகர்த்த வேண்டும், அதாவது அந்தக் குற்றம் சார்ந்து விசாரிக்கப்பட்ட ஆட்களில் யார் இந்த சித்திரிப்பை ஒத்து வருகிறார்களோ, அவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தி நிரூபணத்துக்குத் தேவையான தடயம் சேகரிக்க முயல்வது பயன் தருமா என்பதை அவர்கள் யோசிக்க இது உதவும்.

இதில் ஒரு பிரச்சினையும் உண்டு. மேலே பார்த்த உதாரணம், பல பேருக்குப் பொருந்தலாம். ஆனால் அவர்கள் அனைவரையும் குற்றவாளி என்று இதனால் சொல்ல முடியுமா? மேலும் ஒருவர் என்னதான் அறிவுஜீவியாக இருந்தாலும் கூட இன்னொரு மனிதரின் மனதை, அதன் ஆழத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது சாத்தியமில்லை. இதனால் குணவுரு வரைவு ஒரு முழுமையான அறிவியல் கோட்பாடா (exact science) என்று உலகெங்கும் விவாதங்கள் நடக்கின்றன. இந்த முறையின் வெற்றி/தோல்வி பற்றிய புள்ளிவிவரங்கள் மூலமும் இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இதில் பிழைகள் வர வாய்ப்புள்ளதால் காவல் துறையிலேயே இதற்கு எதிர்ப்பும் இருக்கின்றது.

குணவுரு வரைவு பற்றித் தான் எழுதுவதைக் குறித்து மக்டர்மிட் கூறுவதைப் பார்ப்போம். இதுவும் மேலே எழுதி உள்ளதற்கு வலு சேர்கின்றது.

“ஒட்டு மொத்தமாக, குணவுரு வரைவு என்பது இயல்பான அறிவு மட்டுமல்ல. நிகழ்தகவுகளின் (probabilities) பங்களிப்பும் அதில் உள்ளது. சிலநேரம் புள்ளியியல் முறைப்படி நோக்கி, அத்தனை சாத்தியமாகத் தெரியாததால் குற்றவாளியை நோக்கிச் செல்லும் வாய்ப்புகளை முதல் கட்டத்தில் கருதவில்லை என்று டோனி ஒத்துக் கொள்வார். நான் சந்தித்துள்ள குண உரு வரைவாளர்கள் தங்கள் வேலையை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்கள். எத்தனையோ விஷயங்கள் இவர்களின் முடிவுகளை நம்பி இருக்கின்றன என்பதால் இந்த வேலை அத்தனை கடினமானது.நான் படுக்கச் செல்லும்போது, யாருடைய இறப்பும் என்னால் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் குண உரு வரைவாளராக இருந்தால், எப்போதுமே பாதாள விளிம்பில் இருப்பது போலவே உணர்வீர்கள், மேலும் என்னென்னவோ பிழைகள் நேரக்கூடும் என்று தோன்றும். அசல் வாழ்வில் இந்த வேலையைச் செய்கிற குண உரு வரைவாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. சில நேரம் செய்தியில் தொடர்-கொலை பற்றி ஏதும் இருக்கையில், என்னைத் தொலைபேசியில் கூப்பிடுவார்கள், ஏதும் குண உருவாக்கம் என்னிடம் இருந்து கிட்டுமா என்று கேட்பார்கள். அவர்களுக்கு உண்மைக்கும், புனைவுக்கும் உள்ள வித்தியாசம் புரிவதில்லை என்று நினைக்கின்றேன். என்ன வித்தியாசமென்றால் என்னால் தகவல்களைக் கதைக்குத் தகுந்தவாறு பொருத்திக் கொள்ள முடியும்.”

சுருக்கமாகச் சொன்னால் கிடைக்கும் தகவல்கள் மூலம் குற்றவாளியின் மனவெளிக்குள் நுழைய முயன்று, அதில் அவரைப் பற்றிய ஊகங்களைக் கொண்டு அவை எதார்த்தத்தில் ஒரு மனிதரிடம் எப்படித் தோற்றம் கொள்ளும் என்று சுட்டல்களைக் காவல்துறைக்குத் தருகிறது குணவுரு வரைவு. அதுவரை தெளிவு ஏதும் கிட்டாது, மசமசப்பான நிலையில் சிக்கியிருந்த புலனாய்வுக்கு ஒரு திசையைச் சுட்டுவது, அல்லது சாத்தியக்கூறு அதிகமான கோணங்களைத் தருவது குணவுரு வரைவு.

குணவுரு வரைவைக் கொண்ட கதை உள்ள தொலைக்காட்சித் தொடர்களும் இப்போது வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது ’க்ரிமினல் மைண்ட்ஸ்’(‘Criminal Minds’ ) என்னும் அமெரிக்கத் தொடர். இத்தொடரில் குணவுரு வரைவு ஆய்வு மூலமே முழுக்குற்றமும் புலனாய்வு செய்யப்படும். மக்டர்மட்டின் டோனி-ஹில் தொடரின் முக்கியப் பாத்திரமான டோனி, இங்கு முன்பே சொன்னது போல இப்படிப்பட்ட குணவரைவு நிபுணர். கூடவே உளவியல் நிபுணராகவும் செயல்பட்டு, மனநிலை பாதித்தவர்களுக்குச் சிகிச்சையும் செய்வதன் மூலம், மனநிலை பாதிக்கப்பட்டவர்களைப் புரிந்துகொள்ள முயல்கிறார்.

மக்டர்மிட் அவரைப் பாலுறவில் குறைபாடு (‘sexual dysfunction’) உள்ளவராகப் படைத்தது குற்றப்புனைவுகளின் ஆண்மை மையத்தன்மைக்குக் கவனிக்கத்தக்க ஒரு மாற்று. டோனி மற்றவர்களுடன் அதிகம் நெருங்கிப் பழகக் கூச்சப்படுபவர், அதற்கு அவருடைய சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணம் என்று தொடரின் முதல் நாவல்களில் கோடி காட்டப்படும். அவர் தந்தை, தன் மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே பிரிந்து சென்றவர். தாயும் டோனியிடம் பாசமாக இல்லை. டோனி தாய்/தந்தை இருவர் பற்றியும் பேசவே விரும்பாதவர் என்றும் நமக்குத் தெரிய வருகின்றது. சமீபத்திய நாவல்களில் காட்டப்படும் டோனியின் தாய் கதாபாத்திரம் மூலம் டோனியின் துயரம் மிகுந்த கடந்த கால வாழ்க்கை பற்றிய புதிய சித்திரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. மொத்தத்தில் டோனி வதைபடும் ஆன்மா (tortured soul), தன் மனவலிகளைத் தன் வேலையின் மூலம், பிறருக்கு உதவுவதன் மூலம் மறக்க முயல்பவர். இப்படி ஒரு சிக்கலான பாத்திரத்தின் மூலம் ஒரு தொடரை நகர்த்துவது எளிதல்ல. (ஸ்டீய்க் லார்ஷொனின் ‘ஸலாண்டர்’ நினைவுக்கு வருகிறார்.)

டோனி, கேரொல் ஜோர்டன் (carol jordon) என்ற துப்பறிவாளரான, பெண் போலிஸ் அதிகாரியுடன் பணிபுரிகிறார். கேரொல் ஜோர்டன் இத்தொடரின் இன்னொரு முக்கியமான பாத்திரம். இவர் ஒரு குழுவின் தலைவர், செயலூக்கமிக்க திறமையான அதிகாரி. அக்குழுவின் பணி வன்முறை மிக்க குற்றங்களை விசாரிப்பது. ஜோர்டனின் பாத்திரமும் நன்கு வார்க்கப்பட்ட ஒன்று. அவருக்கும் டோனிக்கும் உள்ள உறவு இத்தொடரின் போக்கில் இயல்பாக மாற்றம் கொள்கின்றது. முதலில் அவர் குணவுரு வரைவு மீது அதிகம் மதிப்பு வைத்திருப்பதில்லை. பிறகு டோனியின் செயல் திறன், வேலைத் தீவிரம், அறிவுக் கூர்மை, தவறுகள் தன்னிடமும் இருக்கக் கூடும் என்பதை உடனடியாக ஏற்கும் தாராளத் தன்மை, பெண் போலிஸ் என்று ஒதுக்காமல் தன்னிடம் கருத்துகளைப் பகிர்ந்து சர்ச்சிக்கும் சமநோக்கு, மாற்றுக் கருத்துகளை அவற்றின் பொருத்தம் கருதிப் பார்த்து சீர்தூக்கி, உதவுமானால் ஏற்கும் அறிவுச் சீர்மை ஆகியவற்றைக் கருதி மனமாற்றம் கொள்கிறார். ஒரு வழக்கு விசாரணையில் மேலதிகாரிகளின் கவனமின்மையால் பாலியல் தாக்குதலுக்கு ( sexual assault ) உள்ளாகிறார். அதிலிருந்து மீள டோனி உதவுகிறார். இருந்தும் அதன் பக்க விளைவாக கரோல் அதிகமாகக் குடிக்க ஆரம்பிக்கிறார் (வேலை செய்வதற்கு பாதகமில்லாமல்). இருவருடையே உள்ள உறவு இதனால் பலப்படுகிறது. டோனியின் ’குறைபாடு’ பற்றி அறிந்தவர் ஜோர்டன் மட்டுமே. இருவருடையே நட்பு, பாசம் என்பதையும் தாண்டி வெளிப்படையாகப் பேசப்படாத பிணைப்பு உள்ளது. இருவரும் தங்களுக்குள்ளே சுமக்கும் கசப்பான நினைவுகளின் தொடர்ந்த பளு காரணமாக அப்பிணைப்பைக் கவனித்து அது எங்கு இட்டுச் செல்லும் என்பதை அறியத் தயங்குகிறார்கள்.

இவர்களிடையே உள்ள உறவு பற்றி, உறவின் மாற்றம்,வளர்ச்சி பற்றியும் மக்டர்மிட் கூறுவது:

“அவர்களின் உறவு முழுமை பெறாததால் தான் வாசகர்களைத் தூண்டி இழுக்கிறது என்று நினைக்கிறேன். நாவலைத் தாண்டியும் அதற்குத் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. இத் தொடரில் ஒரு புது நாவலைப் படிக்க ஆரம்பிக்கும்போது, அவர்கள் நாவல்களுக்கிடையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் கற்பனை செய்யமுடியும். ‘த மெர்மெய்ட்ஸ் ஸிங்கிங்’(‘The Mermaids Singing’- ’மச்சக்கன்னிகள் பாடுகையில்’) முதலில் ஒரு தனி நாவலாகவே எண்ணி எழுதப்பட்டது. ஒரு தொடரை எழுதும்போது அதில் வரும் பாத்திரங்களுக்கு நாம் அளித்துள்ள குணங்கள், அனுபவங்கள் ஆகியவற்றால் எப்போதும் கட்டுப்படுத்தப் படுகின்றோம். ஒரு புது டோனி ஹில் நாவல் பற்றி நான் திட்டமிடும் போது, அவருடைய முந்தைய வாழ்வு, அவர் என்னென்ன செய்யக் கூடியவர் என்பனவற்றால் அது கட்டுப்படுத்தப்படுகிறது. தனி நாவல் எழுதும்போது, ‘இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்!’ என்பது போன்ற விவரங்கள் எதாலும் நான் கட்டுப்படுத்தப்படுவதில்லை.

த மெர்மெய்ட்ஸ் ஸிங்கிங் நாவலில் டோனி பாலுறவில் செயல்திறன் இழந்தவர் என்பது கதையின் போக்கில் கிட்டும் ஒரு தகவல், அது கதை நன்கு செயல்பட அவசியமானது. டோனி, ஜோர்டன் உறவு, இருவருக்கிடையே உள்ள இன்னும் எந்தத் தீர்வையும் காணாத பாலுறவு ஈர்ப்பு மட்டுமே அல்ல; உடலுறவை நாடும் உறவாக அது மாறுவது பற்றி டோனி எச்சரிக்கையாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. ஒரு நல்ல பெண்ணால் குணப்படுத்தப்படும் ஆண் என்ற ஒரு கருத்து, அது என்னதான் பழைய உத்தியாக இருந்த போதும், அதுவும் இதில் உள்ளது. கேரொல் அப்படி ஒரு பெண்ணாக இருந்து டோனியைக் குணப்படுத்த விரும்புகிறார். டோனியின் அருவருப்பூட்டும் தாய் வனெஸ்ஸாவைப் போல சில விஷயங்கள் எப்போதும் மனக் கோடியில் இருக்கின்றன. அவள் யார், எப்படிப்பட்டவள் என்பது குறித்த ஒரு துவக்கநிலைக் கோட்டுரு என் மனதில் இருந்தது. நான் ஏதோ பாத்திரங்களுக்கு நம்மை மீறிய வாழ்க்கை இருப்பதாகச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நமக்கு ஏதும் தொடர்பில்லாத, தெரியாத ஒன்றை நம்மால் உருவாக்க முடியாது- ஆனால் பாத்திரங்களுடன் நேரம் செலவிட்டு உழைக்கும் போது, வியப்பூட்டும் சாத்தியங்கள் நம் முன் எழும்.”

இவர்களின் குழுவில் உள்ளவர்களுக்கும் தனி கிளைக்கதைகள், குணாதிசயங்கள் உண்டு. ஒருவர் மனிதர்களை விட, கணினியுடன் வேலைசெய்வதையே விரும்புவார். அவருக்கு யாருடைய அந்தரங்கமும் புனிதம் கிடையாது, ஒருவரைப் பற்றி எந்த விவரம் இணையத்தில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமும், திறமையும் உள்ளவர். இதுபோல் இன்னொருவர், முன்னேறுவதில் பேராவலுள்ள ஆசாமி. அதற்காகத் தன் குழுவின் திட்டத்தை, குழுத்தலைவரைக் கூட மீறிச் செல்லக்கூடியவர்.

இத்தொடரில் குணவுரு வரைவு முக்கியப் பங்கு வகிப்பதால், குற்றவாளிகளும் அதற்கேற்ப இருண்மையான மனநிலை உடையவர்கள். வன்முறை அவர்களுக்கு ஒரு வடிகால். இதில் சிலர் மனப் பிறழ்ச்சியால், தாங்கள் செய்வதை விரும்பாமலும், அதே நேரம் அதை நிறுத்தி விட முடியாமலும் இருப்பவர்கள். சிலர் தங்கள் வக்கிரத்திற்கு வடிகால் தேடி விபரீதமான செயல்களில் ஈடுபடுவர்கள். இதனால் இந்த நாவல்களில் குற்றங்கள் சற்றே பயங்கர வன்முறையாக (graphic violence) இருக்கும் . இதனால் பக்கத்திற்கு பக்கம் ரத்தம், கொலை இருக்கும் என எண்ண வேண்டாம். குற்றம் நிகழும் முறை, அதற்கான மனநிலைக் காரணிகள், அதன் பாதிப்பு (impact) – இவை சற்று பயங்கரமாக இருக்கலாம்.

உதாரணமாக ஒரு நாவலின் முக்கிய இழைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிறிய சம்பவத்தை பார்க்கலாம். டோனி மனநோய் சிகிச்சை மையத்தில் வசிக்கும் ஒருவருக்கு உளவியல் சிகிச்சை செய்கிறார். நோயாளி ‘பேய் பிடித்த கை’ (alien hand/possessed hand) என்ற நோய்க்குறியால் (syndrome) அவதிப்படுபவர். அதாவது தன் கையை ஏதோ ஒரு சக்தி செலுத்துவதாக எண்ணி, அது தன் மனைவி, மக்களைக் கொலை செய்யக் கூறியதாக நினைத்து அவர்களைக் கொன்றவர், இப்போது பச்சாதாபத்தால் (remorse) உருகுபவர். இந்நிகழ்வு மையக்கதையோடு நேரடியாக சம்பந்தப்படவில்லையென்றாலும் இதைப் படிக்கும்போது வாசகருக்கு ஏற்படும் அதிர்ச்சி, மனதின் சமநிலையை சற்றே குலைக்கக்கூடும். இதைத்தான் பயங்கர வன்முறை (Graphic violence ) என்று குறிப்பிட்டேன்.

மக்டர்மிட் சமூக நிகழ்வுகள், மாற்றங்கள் சார்ந்தும் தன் கதைகளை அமைப்பார். ‘ஒரு சமூகம் தனக்குத் தக்க குற்றவாளிகளையே அடைகிறது.’ (A society gets the criminals it deserves.) இது இவரின் நாவலில் வரும் ஒரு வரி. அதாவது குற்றம் செய்பவன் வானத்தில் இருந்து குதித்தவன் அல்ல, அவனும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம், சமூக நிலைகள், அவை தனிமனிதன் மீது செலுத்தும் அழுத்தங்கள் ஆகியன குற்றங்களுக்குக் காரணிகள் என்கிறார் மக்டர்மிட். இது குற்றங்களை நியாயப்படுத்தும் வாதமல்ல, மாறாகக் குற்றவாளியை தண்டிப்பதோடு நின்று விடாமல், குற்றத்தின் வேரை அறிந்து, அக்காரணங்களால் மேன்மேலும் குற்றங்கள் எழாமல் தடுக்க முயல்வதன் அவசியத்தைச் சுட்டுவது.

உதாரணமாக 2005-இல் லண்டனில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு முஸ்லிம்களைக் குறித்த ஆங்கிலேயரின் பார்வை மாறி, அவர்களைத் தீவிரவாதிகளாகப் பார்ப்பது, அதை அந்நாட்டில் பிறந்து, வளர்ந்து, தங்களை இங்கிலாந்தவராகவே நினைத்து வரும் முஸ்லிம் இளைஞர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஒரு நாவலின் முக்கிய இழை.

இன்றைய பல ’பரபரப்பு’ நாவல்களில், முன்பு ரஷ்யர்கள் இருந்த இடத்தில், முஸ்லிம்கள் ’தயார் நிலை’ வில்லன்களாக இருக்கிறார்கள். காட்டாக, ப்ராட் தோர் (Brad Thor) எழுதும் நாவல்கள். வெறும் பரபரப்புப் புனைவு (Pulp Fiction) என்று இவற்றை விட்டு விட முடியாது. ஏனென்றால் இந்த வகை நாவல்கள்தான் அதிகம் படிக்கப்படுகின்றன. ஒரு பொது பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கும் சக்தி கொண்டவையாக இருக்கின்றன. தொண்ணூறுகளின் தொடக்கம் வரை ரஷ்யர்கள் பற்றிய பொதுக் கருத்து எப்படி இருந்தது? அதற்கு அந்தக் காலத்திய பரபரப்புக் கதைகள் ஒரு முக்கிய காரணம் என்று அந்தக் காலத்திய சூழ்நிலை மற்றும் கதைகளை படித்தவர்கள் உணர்வார்கள். ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள், கோலின் ஃபோர்ப்ஸ் (Colin Forbes) எழுதிய நாவல்களில் வரும் ரஷ்யர்கள் இறுக்கமான முகம்/மனம் கொண்ட, எந்த உணர்ச்சியும், கருணையும் இல்லாத, மேற்கை அழிப்பதையே லட்சியமாகக் கொண்டவர்கள்தானே? இதனால் மக்டர்மிட் தரும் மாற்றுப் பார்வைகள் மிக முக்கியம். .

இன்று சமூக வலைத்தளங்கள் பெருகி, முகம் தெரியாத, ஆணா, பெண்ணா என எதுவுமே தெரியாதவர்களுடன் நட்பு கொண்டு, மிக அந்தரங்க விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் காலம். வெறும் வலை வழி நட்பை மட்டுமே நம்பி, ஒருவரைச் சந்திக்க, நீண்ட தூரம் செல்லக் கூடத் தயாராக இருக்கிறார்கள் சிலர். இது வேறு சிலருடைய மன விகாரங்களுக்கு வசதியாகிறது. இளம்பெண்கள் எவ்வாறு சமூகவலைத்தளங்கள் மூலமாகச் சில வக்கிர மனிதர்களுக்குப் பலியாகிறார்கள் என்பது இன்னொரு நாவலின் இழை.

சமூகம் சார்ந்த அவதானிப்பு இருந்தாலும், நிஜ வாழ்க்கைக் குற்றங்களை அப்படியே இவர் எழுதுவதில்லை. வெறும் பரபரப்புக்குக்கென நடப்பு நிகழ்வுகளை நாவலில் வைக்காமல், உண்மையான அக்கறை சார்ந்து நடப்புகளின் பொதுக்கூறுகளை மட்டும் புனைவுக்காக எடுத்துக்கொள்கிறார். இதற்கு அவர் கூறும் காரணம் அவருடைய நுட்பமான இயைவுணர்வைக் காட்டுகிறது:

“பொதுவாக நான் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளிடமிருந்து மிக விலகியே நிற்கிறேன். ஒரு வெளியாளாக என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும் என்று நாம் எண்ணலாம், ஆனால் செய்வதறியாமல் மற்றவர்கள் துயரத்தை நாம் மதிக்கத் தவறி விடலாம், அதனால் எண்ணியதற்கு மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை நாம் கடுமையாக்கக் கூடும். சில நேரம் மிக விபரீதமான சம்பவங்கள் நடந்து விடுகின்றன- நாம் ஒன்றை எழுத, அது நிஜமாக நடந்து, தலைப்புச் செய்தியாகி விடுகிறது. வாழ்க்கை, கலையை நகல் செய்துவிடுகிறது. அதிலிருந்து விலகி நிற்கவேண்டும், புத்தகத்தில் அது திடுமெனச் சரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.”

இத்தொடர் இன்னும் முடியவில்லை. ஒவ்வொரு பாத்திரத்தின் வளர்ச்சியை, மாற்றத்தை எளிதில் உணர்ந்து உள்வாங்க, நாவல்கள் வெளிவந்த, வெளிவரும் காலவரிசையில் படிப்பதுதான் சிறந்தது.

வால் மக்டர்மிட்டின் தனி (standalone) நாவல்கள் உளவியல் குற்றப்புனைவு (pyschological crime) என்ற வகைமையில் வருபவை. காவல்துறை புலனாய்வு, குணவுரு வரைவு என எதுவும் இதில் கிடையாது. தூரத்து எதிரொலி (The Distant Echo) என்ற நாவலின் ஆரம்பத்தில், நான்கு கல்லூரி மாணவர்கள் மிக அதிகமாகக் குடித்துவிட்டு தங்கள் விடுதி திரும்பும்போது தங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் பிணத்தின் மேல் தடுக்கி விழுகிறார்கள். ரத்தம் அவர்கள் மேலெல்லாம் படிய, அவர்கள் மீது காவல்துறை சந்தேகப்படுகிறது. ஆனால் போதிய ஆதாரம் கிடைப்பதில்லை. அனைவரும் ஒரு விருந்துக் கலப்பில் பலரோடு இருந்ததால், ஒவ்வொருவரும் என்ன செய்தனர் என்று நால்வருக்கும் தெரிவதில்லை. சிலருக்கு இடைநேரங்களில் வெளியே போக வாய்ப்புமிருக்கிறது, சிலர் போகவும் செய்திருக்கிறார்கள். அதனால் ஒருவர் மேல் மற்றவர் சந்தேகம் கொள்கின்றனர். அவர்கள் நட்பில் இதனால் ஒரு விலகல் ஏற்படுகிறது. கல்லூரிக்குப் பின் தத்தம் வழியில் செல்கின்றனர். நால்வர் வாழ்விலும் இந்த சம்பவத்தின் நிழல் படிந்து, ஒரு இருள் விளிம்பில் நின்று இவர்களை வாழ்க்கை பூராவும் அச்சுறுத்திய வண்ணம் இருக்கிறது. போலிசாரும் இவர்கள் மீதுள்ள சந்தேகத்தை விலக்காமல் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்து, நால்வரில் முதலில் ஒருவர், பின் இன்னொருவரும் கொல்லப்பட, மற்ற இருவரும் தங்களைக் காத்துக்கொள்ள அந்தப் பெண்ணை யார் கொலைசெய்தது என்று கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒரு தற்செயல் குற்றச் சம்பவம், அதில் எதேச்சையாக இடறி விழுபவர்களின் வாழ்வுகளில் ஏற்படும் பெரும் மாற்றங்கள், போலிஸின் எதிர்வினைகள், இறந்த பெண்ணின் உறவினர்களின் நீண்ட நாள் ஆங்காரம், அதனால் தற்செயலாகச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏற்படும் மன அழுத்தம், பின்னர் அந்த அழுத்தம் ஒரு கொதி நிலைக்கு சென்று முடிவது என்று கதை நகர்கின்றது.

கட்டுரையின் ஆரம்பத்தில் பெண்கள் குற்றப்புனைவுகளை எழுதுவதைக் குறித்து பொதுவாக வாசகரிடையே இருக்கும் ஐயங்களைக் குறிப்பிட்டேன். ஆனால் அதன் இன்னொரு எல்லையாக, சக ஸ்காட்லாண்டிய குற்றப்புனைவு எழுத்தாளரான இயன் ரேங்கின், பெண்கள்தான் அதீத வன்முறை மிக்க நாவல்கள் அதிகம் எழுதுகிறார்கள் என்று ஒருமுறை கூற, அது குறித்து ரேங்கினுக்கும், மக்டர்மிட்டுக்குமிடையே விவாதம் ஏற்பட்டது. எனினும், இருவரும் இன்றளவும் ஒருவர் மீது மற்றொருவர் மதிப்பு வைத்துள்ளவர்கள்.

“இன்று குற்றப்புனைவுகள், வன்முறை இவற்றைக் குறித்து பெண் எழுத்தாளர்களிடம் பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்வி, வன்முறைகளைச் சித்திரிக்கும்போது ஒரு பெண்ணாக எப்படி உணர்கிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். எனக்கு இந்தக் கேள்வியே முட்டாள்தனமாகத் தெரிகிறது. வன்முறைகளில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். அப்படியென்றால் அவர்களுக்குத்தானே வலியும், துயரமும் நன்கு தெரியும்?” என்று ஒரு பேட்டியில் கேட்கிறார் மக்டர்மிட்.

குற்றப் புனைவுகளில்/பொதுப்புனைவுகளில் பெரும்பாலும் விளிம்பு நிலையில் (marginalized) இருக்கும் பாத்திரங்களை, காத்திரமானவர்களாக, முக்கியமானவர்களாகத் தன் நாவல்களில் உருவாக்கி, குற்றப் புனைவுகளின் எல்லைகளைச் சற்றாவது விரிவுபடுத்திய, தரமான பல புனைவுகளைத் தந்தவர் என்றளவில் மக்டர்மிட் மிக முக்கியமான எழுத்தாளரே.

One Reply to “வால் மக்டர்மிட் – மரபை உடைத்த பெண்குரல்”

Comments are closed.