மகரந்தம்

விவாகரத்தின் நன்மைகள்!

உறவுகள் பொருளாதாரம் சார்ந்தவை. தனி நபர்களைக் கருத்தில் கொண்டால் இதை ஏற்பது கடினம். ஆனால் தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரத் தேக்கம் கடந்த சில ஆண்டுகளில் நிலை த்து நீடிக்கிறது. இதன் தாக்கங்களை ஆய்வு செய்யும்போது மேற்கண்டது போன்ற முடிவுகள் உறுதிப்படுகின்றன. அங்கு ஆண்டுக்கு ஆண்டு விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அமெரிக்க மாகாணங்களில் எங்கெங்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதற்கான புள்ளியியல் ஆதாரங்கள் கிட்டியிருக்கின்றன. ஆனால் பொருளாதாரத் தேக்கம், வேலையின்மை ஆகியனவற்றால் விவாக முறிவுகள் குறைகின்றன என்பதை ஒரு நற்செய்தியாகக் கொள்ள முடியாது. கல்லூரிக் கல்வியை முடித்த மாணவர்கள் பெற்றோரை விட்டுப் பிரிவதில்லை, மணம்புரிய நினைக்கும் காதலர்கள் இணைந்து வாழத் தயங்குகிறார்கள். கூட்டுக் குடும்பங்கள் பொருளாதார தேக்க நிலையால் அதிகரிக்கின்றன, இவை ஒரு கோணத்தில் பழமை வாதிகளுக்கு மகிழ்வு தரலாம். ஆனால் அதே பழமை வாதிகளில் பலரும், ‘தன் காலிலேயே நிற்க வேண்டும்’, ‘பொருளாதாரத் தன்னிறைவு திருமணத்தின் அடிக்கல்’, ‘தொடர்ந்த வாய்ப்புகளைத் தருவது சந்தைப் பொருளாதாரம்’ என்றிப்படிப் பல முன்னுக்குப் பின் பொருந்தாத கருத்துகளையும் கொண்டவர்கள். அவர்களுக்கு வேலையில்லாமல் இளம் ஆண்கள் வீட்டைச் சுற்றி வருவது சிறிதும் பிடிக்க வாய்ப்பில்லை. எனவே இந்நிலைமை எந்தத் தலைமுறைக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதல்ல.

மணமாகாதவர்கள் மணம் புரிவதாலும், மணமானவர்கள் மணமுறிவு செய்து கொள்வதாலும் ஒரு இல்லம் இருக்கிற இடத்தில் இரண்டு உருவாகி, அதன்மூலம் புதிய வீடுகள், அவற்றுக்குத் தேவையான நுகர்பொருள் வர்த்தகம் மற்றும் செலவுகள் அதிகரித்து பொருளாதாரம் மேம்படும் என்பது ஒரு சுவையான முரண்நகை. இது குறித்த ஒரு சிறு குறிப்பு இங்கே இருக்கிறது.

-o00o-


திருடனை திருடனால் ஒழிப்போம்

திருடன் பெரியவனா பூட்டு பெரிதா என்று கேட்டால், போதுமான அவகாசம் கிட்டினால் திருடன் வெற்றி பெறுவான் என்பதுதான் பதிலாக இருக்கும். பூட்டை வெவ்வேறு சாவிகளைக் கொண்டு சோதித்து அதன் தன்மையைப் புரிந்து கொண்டு அவன் அதைத் திறந்தே தீருவான். இது போன்ற ஒரு சவாலை மருத்துவத்துறையும் எதிர்கொண்டு நிற்கிறது. ஆண்ட்டிபயாட்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அதை எதிர்த்து எந்த பாக்டீரியாவாலும் நிற்க முடியவில்லை. ஆனால் இயற்கை எதையும் ஒரே மாதிரியே தொடர்ந்து செய்வதில்லை: அதன் இயக்கம் நிகழ்தகவு சாத்தியங்கள் அனைத்தையும் முயற்சி செய்வதாக இருப்பதால், அது தன்னைக் குலைத்துக் கொண்டே முன்னேறுகிறது. அங்கங்கு ஒன்று இரண்டு ஆண்ட்டிபயாடிக்குகளால் அழிக்க முடியாத மரபணுக்கள் , தப்பிப் பிழைத்த பாக்டீரியாக்கள், மற்ற பாக்டீரியாக்கள் கொல்லப்பட்ட நிலையில் தங்கள் மக்கள்தொகையைத் தீவிரமாக விருத்தி செய்து கொண்டுவிட்டன. இவற்றால் மாற்று வடிவு கொண்டு விட்ட பலவித தொற்று நோய்களிடம் இன்றுள்ள ஆண்ட்டிபயாட்டிக்குகள் தோல்விடையத் துவங்கி மருத்துவத்துறைக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.

இந்நிலையில் காரி முல்லிஸ் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு புரட்சிகரமான தீர்வை முன்வைக்கிறார். திருடனுக்குத் தடுப்பாக பூட்டை உருவாக்குவதற்கு பதில், திருடனைக் காட்டிக் கொடுக்ககூடிய ஆள்காட்டிகளை உருவாக்குவதுதான் இந்தத் திட்டம். நம் உடலின் எதிர்ப்பு சக்தியால் வெற்றி கொள்ளப்படக்கூடிய மூலக்கூறுகளைப் பயன்படுத்தி தொற்றுநோய்க் கிருமிகளை ஒழிக்க முடியும். இந்த மூலக்கூறுகள் (மாலிக்யூல்ஸ்) தொற்றுநோய்க் கிருமிகளாகப் பார்த்து அவற்றிடம் போய் ஒட்டிக கொள்ளுமாம். அதையடுத்து மூலக்கூறுகளை அடையாளம் காணும் எதிர்ப்பு சக்தி, மூலக்கூறுகளுடன் சேர்த்து அவற்றுடன் ஒட்டிக கொண்டிருக்கிற நச்சுயிரிகளையும் அழித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்தி இங்கே.

-o00o-


அறிவியல் புனைவுகள்

சமீபத்துப் பத்தாண்டுகளில் அறிவியல் கதைகள் புனைவிலக்கியங்களில் மையத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் நாவல்கள், சிறுகதைகள் ஆகிய இரண்டுமே பல வகை எழுத்தாளர்களால் பொதுப் பத்திரிகைகளிலும், பெரும் பிரசுரங்களுக்கும் எழுதப்படுகின்றன. அதே போல ஹாலிவுட் முன்பு சாகசக் கதைகளை மட்டுமே அறிவியல் நவீனம் என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருந்தது. இப்போது மாற்றுலகு குறித்த கற்பனைகள், உளநிலை பிறழ்வு குறித்தவை, சோதனைச்சாலை விபத்துகளால் நடக்கும் பல பிரச்சினைகள் என்று விளிம்பில் இருந்த புனைவுகளை வைத்து மையத்து நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. பிற யூரோப்பிய நாடுகளில் கூட குறைந்த பட்ஜெட்டுகளில் எடுக்கும் தயாரிப்பாளரும் இப்போது அறிவியல் நவீனங்களை, புனைவுகளைப் படமாக்க முன்வருகின்றனர்.
இதோ ஒன்று.

சில மாதங்கள் முன்பு கண்டேஜியன் என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து தற்போது நிறைய அறிவியல் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. நியுயார்க்கரில் ஆர்வெல்லியன் வகைமையைச் சேர்ந்த ஒரு நல்ல சிறுகதை பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதை நீதிக் கதை என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் இது கொரகெஸ்ஸன் போய்ல் அடிக்கடி எழுதுகிற வகை மாற்று எதார்த்தக் கதை.

-o00o-


ஸ்வீடிஷ் புக் ரிவ்யூ

புத்தகங்களைப் பற்றி வாசிக்க நினைப்பவர்களுக்கு ஆங்கில மொழி பேசும் நாடுகளுக்கு வெளியே ஒரு நல்ல பத்திரிக்கை இதோ ஸ்வீடிஷ் புக் ரிவ்யூ.

இது ஸ்வீடனில் இருந்து வெளியானாலும் ஆங்கிலத்தில் இருப்பதால், ஸ்காண்டிநேவிய இலக்கிய உலகை அணுக ஒரு நல்ல வாயிலாக இருக்கிறது. அண்மைய இதழில் ராபின் ஃபுல்டன் மக்ஃபெர்ஸன் (ட்ரான்ஸ்ட்ரமர் கவிதைகளை மொபெ செய்தவர்) சமீபத்தில் கார்டியன் பத்திரிகையில் மொழி பெயர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு நிலைபாடு எடுத்ததைப் பாராட்டும் கட்டுரை குறிப்பிடத்தக்கது. இந்த இதழின் தலையங்கமே மொழிபெயர்ப்பின் இயல்பை விவாதிக்கிறது. மேலும், சமீபத்தில் ஒரு கூட்டமர்வில், மொழிபெயர்ப்பாளர்கள் பத்து பேர் ஒவ்வொருவரும் தனித்தனியே ஒரு விஷயத்தை மொழி பெயர்த்துக் கொண்டு வந்து ஒப்பீடு செய்தார்களாம். அது குறித்த கட்டுரை தவறாமல் வாசிக்கப்பட வேண்டியது.

-o00o-


பொது நூலகங்களின் அவசியம் என்ன?

இந்த இதழில் அஜய் எழுதிய வால் மக்டர்மிட் என்ற குற்றப் புனைவெழுத்தாளர் குறித்த கட்டுரையை படித்த வாசகர்கள் அவர் எப்படி நூலகங்களைப் பயன்படுத்தி வாசகராக வளர்ந்து எழுத்தாளரானார் என்று எழுதிய குறிப்புகளை ரசிப்பார்கள். இந்தச் செய்தியை வாசிக்கும்போது சில நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை.

விவேகானந்தா கல்லூரி நூலகத்தில் ஒரு மொத்த மாடி நிறைய அலமாரிகள், அது பி.ஜி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மட்டும்தான் என்று அடைத்திருந்தார்கள். அந்த அலமாரிகளில் இருந்த புத்தகங்கள் எல்லாம் டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்ற முன்னாள் மத்திய நிதி அமைச்சர் கல்லூரிக்குத் தன் நூலகத்தைத் தானமாகக் கொடுத்ததால் கிட்டிய புத்தகங்கள். எத்தனை என்றால் சில ஆயிரம் புத்தகங்கள். அவற்றில் ஒரு பிரச்சினை. அவை பெரும்பாலும் 30-50 வரை இருந்த கால கட்டப் புத்தகங்கள். பலவும் நூலகத்தை விட்டு எடுத்துப் போக முடியாத அளவுக்கு உளுத்துப் போயிருந்தன. ஒரு முறை அந்தப் புத்தகத்தில் தேதியை ரப்பர் ஸ்டாம்ப் போட நூலகர் ஒரு அழுத்து அழுத்தினார், அப்படியே ஸ்டாம்ப் பல பக்கங்கள் உள்ளே போய் விட்டது பொடிந்து விட்ட புத்தகம். அவர் அதை குப்பையில் போட இருந்தார். நான் சொன்னேன், “படித்து விட்டுக் கொடுக்கிறேன் அப்புறம் போடுங்கள்,” என்று. சரி என்று கொடுத்தார். இப்படி பல புத்தகங்களைக் கொண்டு போய்ப் படித்து விட்டு வந்து திரும்பக் கொடுப்பேன், என் கண்முன் அவற்றை இரண்டாக உடைப்பார். நடு முதுகில் இல்லை. அட்டையோடு அப்படியே உடைத்தால் உடைந்து விடும் அப்புத்தகங்கள்.

இதே போல மத்திய நூலகத்திலும் எத்தனை புத்தகங்களைத் தேடித் தேடி எடுப்பேன். அங்கோ ஒரு வரிசையும் இராது. டூவி முறையில் ஏதேதோ கணக்கில் பல சங்கேதச் சொற்களால் புத்தகங்கள் குறிக்கப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும். ஊகமாகப் புத்தகங்களைக் கண்டு பிடிக்க முடியாது. ஒவ்வொரு புத்தகத்தையும் போய் கால் நம்பர் தேடி எடுத்து பின் கண்டு பிடிப்பது என்பது மிகவும் சுத்தி அடிக்கிற முறை. ஆனால் அதுதான் அறிவியல் பூர்வமான அல்லது தர்க்க பூர்வமான முறை. அந்த முறையை உலகளவில் பெரிதும் முன்னேற்றியவர் ரங்கநாதன் என்ற சென்னை பல்கலைக் கழக நூலகர் என்பார்கள். சென்னைப் பல்கலை நூலகத்தைப் பயன்படுத்த முயன்றவர்களுக்குத் தெரிந்திருக்கும் அது எப்படி பல பத்தாண்டுகளாக முன்னேறாமல் அப்படியே இருக்கிறது என்று.

கன்னிமாரா, மத்திய நூலகம், பிரிட்டிஷ் கௌன்சில், அமெரிக்க தூதரக நூலகம் மட்டும் இல்லை என்றால் என் சென்னை வாழ்வு பயங்கர தண்டமாக இருந்திருக்கும். இதெல்லாம் என் கல்லூரி நாட்களின் விவரணை. இன்று நிலைமை முன்னேறி இருக்கிறதா என்றால் இராது என்று ஊகிக்கிறேன். தொலைக்காட்சிகளும், வலையுலகும் வந்த பின் பழைய புத்தகங்களை யாரே தேடிப் படிக்கப் போகிறார்? (இந்தக் குறிப்பு மட்டும்: மைத்ரேயன்).

-o00o-


காமரூனில் யானை வேட்டை

ஆப்பிரிக்காவில் உள்ள காமரூன் நாட்டுக்குள் அண்டை நாட்டு கடத்தல்காரர்கள் நுழைந்து அங்குள்ள காட்டில் இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளைக் கொலை செய்துள்ளனர். சீனா ஆப்பிரிக்க பொருளாதாரத்தை ஊடுருவும் நிலையில், சீன மக்களின் தந்த வேட்கைக்கு ஆப்பிரிக்க யானைகள் பலியாகின்றன. யானைகளின் தொகை உலகெங்கும் குறைந்து வருகிறது. ஒரே ஆண்டில், நவீன கொலைக கருவிகளைக் கொண்டு இத்தனை யானைகள் கொள்ளப்பட்டுள்ளன. எந்த ஒரு குறிப்பிட அரசையும் இதற்கு முழுப் பொறுப்பாக்க முடியாது – தந்ததைப் பெருமை கொள்ளக்கூடிய செல்வமாகக் கருதும் உலக மக்கள், அதிலும் குறிப்பாக, சீனர்கள் கண்டனத்துக்குரியவர்கள்.

-o00o-


உலகளவில் பிரபலமாகும் பாலிவுட் திரைப்பட நடனங்கள்

இந்திய பிபிஓக்கள் சர்வதேச அளவில் வெற்றி பெற்று தம்மை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டன. எனினும் அவற்றுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் இல்லை. படைப்பூக்கம் தேவைப்படாத உழைப்பு மட்டுமே தேவையாயிருக்கும் பணிகளுக்குதான் இந்திய பிபிஓக்கள் பொருத்தமாக இருக்கும் என்றே நம்பப்பட்டு வருகிறது. ஆனால், அண்மையில் ஒரு இசைக் கலைஞர், தன் பாடலுக்கு பெங்களூரில் உள்ள நடனப் பள்ளி ஒன்றிடம் ம்யூசிக் வீடியோ தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து அதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார். இந்தி திரைப்படங்களுக்கு உரிய நடன அசைவுகளுடன் படம் பிடிக்கப்பட்ட அந்த வீடியோ யூட்யூபில் ஒன்றே முக்கால் லட்சம் முறை காணப்பட்டுள்ளது. இந்தியாவின் கலைத் துறை வெற்றிகளும் அங்கீகரிக்கப்பட்டு வரும் நிலையில், தொழில் துறையிலும் இந்திய பிபிஓக்கள் தம் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் காலம் தொலைவில் இல்லை. ந்யூ யார்க் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.