நகருக்குள் சென் ஹுவான்ஷெங்கின் சாகசம்

ஜியாங்ஸிவில் பிறந்து வளர்ந்தவர் காவ் ஸியாவ்ஷெங். 1950களில் சிறுகதைகள் பிரசுரித்தார். இருப்பினும், 1979க்குப் பிறகு நடந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களின் போதான சீன விவசாயிகள் வாழ்வையும் உளவியலையும் பிரதிபலிக்கும் அவரது ‘லீ ஷுண்டா வீடு கட்டினார்’, ‘ஏழ்மை பீடித்த வீடு’, ‘சென் ஹுஆன்ஷெங்கின் சாகசம்’ ஆகிய கதைகள்தான் அவருக்குப் புகழைக் கொண்டு வந்தன. 1979 மற்றும் 1980களில் அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் தேசிய விருது பெற்றன. அவருடைய ‘நகருக்குள் சென் ஹுவான்ஷெங்கின் சாகசம்’ என்ற சிறுகதையின் மொழிபெயர்ப்பு இது.

சென் ஹுவான்ஷெங் ஒருநாள் நகருக்குக் கிளம்பினான். குளிர்காலம் கடந்திருந்தது. படிப்படியாகக் கூடி வந்த காற்று மெதுவாக வெப்பம் கொண்டிருந்தது. வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு புத்தம்புது ஆடைகள் தரித்து, இறகு போல லேசாக இருக்கிறதென்ற பாவனையுடன் சுத்தம் செய்யப்பட்ட பயணப் பையைத் தூக்கிக் கொண்டு துடிப்புடன் நடந்தான். பத்து மைல் தொலைவு என்பது அவனது உறுதியான நீண்ட கால்களுக்குப் பெரிய விஷயமே இல்லை. முன்பும் பல முறை பாரம் தூக்கி நடந்திருக்கிறான். சொல்லப் போனால், இப்போது அவன் கையில் பெரிய கனமேயில்லை. அத்தோடு, இன்றைக்கு வேகமாகச் சென்றடைய வேண்டிய எந்த நிர்பந்தமும் அவனுக்கில்லை. ஆகவே, மெதுவாகக் காட்சிகளை ரசித்தவாறு நடந்தான்.

முறுக்கு விற்கப் போய்க் கொண்டிருந்தான். நெல் அறுத்தாயிற்று; கோதுமை விதைத்துமாயிற்று. விவசாய வரியைத் தானியமாகக் கொடுத்து, மிச்சத்தைச் சந்தையில் விற்றுப் பணமாக்கியிருந்தான். கூடுதலாகக் கொஞ்சம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் இப்போது வெளிப் பட்டிருந்தான். கெடுபிடிகளெல்லாம் தளர்ந்தப்பட்டு சந்தை மீண்டும் திறந்து விடப்பட்டிருந்தது. சூதாடாத வரை பொருட்களை விற்பதற்குத் தடையில்லை.

தன் சொந்த மாவும் எண்ணையும் பாவித்து தான் அவன் முறுக்கு செய்திருந்தான். அரசுக்குச் சொந்தமான கடைகளில் விற்கும் முறுக்கை விட மிகவும் புதியதாக நறுமணமும் சுவையும் கொண்டிருந்தது அவன் சுட்ட முறுக்கு. பார்த்தாலே எடுத்துத் தின்னும் ஆர்வத்தை ஏற்படுத்தும் முறுக்குகள் பை நிறைய சுமார் பத்து நெகிழித்தாள் பொட்டலங்களில் இருந்தது. எல்லாவற்றையும் விற்றால் மூன்று யுவான்களாவது கிடைக்கும்.

அந்தக் காசை வைத்து தனக்கு ஒரு தொப்பி வாங்க எண்ணியிருந்தான். புத்தம் புதியதொரு தொப்பி. நாற்பந்தைந்து ஆண்டுகளில் ஒரு தொப்பியை அவன் அணிந்ததில்லை. ஒரு தொப்பி வாங்கும் வசதி அவனிடமிருந்ததுமில்லை. கலாசாரப் புரட்சிக்கு முன்போ அவன் ஓர் இளைஞன். ஆகவே, தொப்பியே தேவையிருக்கவில்லை. புரட்சியின் போதோ தொப்பியின் தேவையிருந்தது. இருப்பினும், கைக்கும் வாய்க்குமாகவே வாழ்ந்ததில், வாங்க முடியாதிருந்தது. துணி வாங்குவதே பெரும் ஆடம்பரமாக இருந்தது. 1978க்குப் பிறகு அவனது வருவாய் கூடியது. அந்த மகிழ்ச்சியில் அவன் குளிரைப் பொருட்படுத்தவில்லை.

வயதேறி மெலிந்திருந்த இவ்வாண்டில் தான் குளிர்காலத்தில் அவனுக்கு அடிக்கடி தும்மலும் சளியும் பிடித்தது. அதனால் தான், ஒரு தொப்பியை வாங்கிவிடுவதென்று முடிவெடுத்தான். பெரிய கஷ்டமொன்றுமில்லை. கிராமத்தை விட்டு வெளியாகி ஊருக்குள் போய் கூடுதலாகக் கொஞ்சம் காசு சம்பாதித்தால் போதும்.

கவலைகள் நீங்கியவனாக, புத்தம் புதியதொரு ஆளாகத் தன்னை உணர்ந்தான். வாழ்நாளெல்லாம் ஏழ்மையில் உழன்றிருந்தவன், இனி தொடர்ந்து பொருளாதார மேன்மை அமையுமென்று மகிழ்வுடன் நம்பினான். திருப்தியும் மகிழ்ச்சியுமாக இருந்தவன் முகம் முன்பெப்போதும் விட பிரகாசமாக, பூரிப்பாகயிருந்தது. வீட்டில் தானியக் குதிரும் உடையலமாரியும் நிறைந்ததில் இரவுகளில் உறக்கம் கலைந்தால் மீண்டும் வராத அளவிற்கு அவனுக்குள் மகிழ்ச்சி பொங்கிப் பெருகி வழிந்தது. மனைவியை எழுப்பி அரட்டையடித்து தான் நேரத்தைக் கடத்த வேண்டியிருந்தது.

பேசுவது அவனுக்கு என்றைக்குமே கவருமளவில் வந்ததில்லை. பெரும்பாலும், மனைவியைத் தவிர வேறு யாருடனும் பேசியதில்லை. எல்லோருடனும் பழக அவனுக்கு விருப்பம் தான். ஆனால், பேச ஒன்றுமேயிருப்பதில்லை. சின்னச் சின்ன அனுபவங்களையும் சாகசங்களையும் சின்னச் சின்ன சுவைமிகு உரையாடல்கள் மூலம் வெளிப்படுத்துவோரைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். உறைய வைக்கும் பேய்க் மற்றும் திகில் கதைகளை எப்படியெல்லாம் சொல்லிக் கவர்கிறார்கள். அவன் தன்னை வெட்டி என்று கருதினான். அவனுக்கு எதைப் பற்றியும் சுவைபடப் பேச இருப்பதில்லை; அவற்றை அவனால் கண்டடையவும் முடிவதில்லை. நகரிலிருந்து திரும்பிய பிறகு, “இன்றைக்கு ஊருக்குள் கூட்டமாக இருந்தது”, அல்லது, “பன்றிகள் விற்றார்கள். காய்கறியெல்லாம் மலிவாக இருந்ததில் என்னால் சரியாக விற்க முடியவில்லை”, என்பதைக் கடந்து அவனால் ஒன்றுமே சொல்ல முடிந்ததில்லை.

அவன் வாழ்க்கையும் கூட குறிப்பிடத் தக்கதாக இருக்கவில்லை. “அம்மா அடிக்கடி என்னை அடிப்பார். ஆனால், அப்பா அரிதாகவே அடிப்பார்”, “நான்காவது வரை படித்தேன். படிச்சதெல்லாம் மறந்துட்டேன்”, “39 வறட்சில காஞ்சி கெடந்த ஆத்துல நாங்க மீன் பிடிச்சோம்”, “49ல கம்யூனிஸக் கட்சி குவாமிங்தோங்கைத் தோற்கடித்தது”, “திருமணத்துக்குப் பிறகு என் மனைவி ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள் பெற்றெடுத்தாள்”, என்பதைக் கடந்து வாழ்க்கை குறித்து ஒன்றும் சொல்லவும் அவனுக்கு வராது. வாயை மூடிக் கொண்டிருந்தால் பிரச்சனை ஒன்றுமில்லை.

அவனுக்கு புதினங்கள் படிக்க முடியாது. இசை நாடகங்களையும் கேட்ட கதைகளையும் நினைவில் வைக்கவும் முடிந்ததில்லை. சுவாரஸியமற்ற விவசாயத் தொழில் குறித்தோ யாருக்கும் கவலையில்லை. அவன் முறுக்கு விற்பதொன்றும் பெரிய விஷயமில்லை. நீண்ட காலமாக எளிய மக்கள் செய்து வந்தது தானே அது. முறுக்கு செய்முறை, பொட்டலம் கட்டுவது, இலாபம் வைத்து விலை நிர்ணயிப்பது, எங்கே எப்போது நல்ல விற்பனை செய்யலாம் என்றறிவதெல்லாமே பிறரிடமிருந்து பெறக் கூடியவை. இவற்றைக் குறித்து பெருமைப் படுவதே அபத்தம். சொன்னால், கேட்பவர்கள் சிரிப்பார்கள். “கேட்டியா, ஒண்ணுக்குமே லாயக்கில்லாதவன். இப்ப முறுக்கு சுட்டு விக்றானாம்.”

ஒருவித தாழ்வு பனப்பான்மையை வளர்த்துக் கொண்டிருந்தான். மாலைகளில் எல்லோரும் கூடிப் பேசும் போது வாயையே திறப்பதில்லை. யாரும் அவனிருக்கும் திசையைக் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை. ‘கலாசார வாழ்க்கை’ என்ற ஒன்று இருக்கிறதென்றே முன்பு அவன் அறிந்திருக்கவில்லை.

ஆனால், வாழ்க்கை மேம்பட்ட போது தான் மேலும் முன்னேற ஆசை கொண்டான். திரைப்படங்களுக்கும் இசை நாடகங்களுக்கும் போக மிக விருப்பப் பட்டான். அதெல்லாம் இல்லாமலிருந்தால் வாழ்க்கை இனிமையற்றிருந்தது என்று பட்டது. “யார ரொம்பப் பிடிக்கும்?”, என்று கேட்டதுமே, “லூ லோங்ஃபேய்”, என்பான்.

“அவரில் அப்படி என்ன விசேஷம்? அவரும் ஒரு சாதாரண கதை சொல்லி தானே?”

“அதென்னவோ எனக்குத் தெரியாது. அவர் பேச்சைக் கேட்க எனக்கு மிக விருப்பம்.”

வெட்கமாகி விட்டது அவனுக்கு. வாயையே திறந்திருக்கக் கூடாது. அவர்களிடம் சொல்ல ஏதேனும் அனுபவம் வாய்த்தால் எப்படியிருக்கும்?

***

ஒவ்வொரு முறை அது போல அவமானப்படும் போதும் அவனது ஆசை மீண்டும் துளிர்க்கும் என்றாலும் அதைக் கடந்து வேறெதுவுமே நடக்காது. நகருக்குப் போகும் வழியில் நினைவெல்லாம் புதுத் தொப்பியிலேயே குவிந்தது.
மெதுவாக நடந்தும் ஆறு மணிக்கே நகரை அடைந்து விட்டான். ஒரு கோப்பை தேநீர் வாங்கிக் கொண்டான். இரவுணவுக்கென்று கட்டிக் கொண்டு வந்திருந்த தோசையைத் தின்றான். வழியிலிருந்த கடைகளில் பொருட்களைப் பார்வையிட்டவாறே ரயில் நிலையம் நோக்கி நடந்தான். மூன்று கடைகளுக்குள் ஏறிச் சென்று தொப்பி விலையைக் கேட்டறிந்தான். இறுதியில் தனக்குப் பிடித்த தொப்பியைக் கண்டடைந்தான். கையில் சேமிப்பு தவிர வேறு பணமில்லை என்ற நினைவும் எழுந்தது. அன்றிரவு சம்பாத்தியத்தில் தொப்பி வாங்க நினைத்திருந்தான். ஆனால், கடைகள் இத்தனை சீக்கிரமே மூடப்படும் என்பதை மறந்தே போனான். நாளை காலை வரை காத்திருக்க வேண்டியது தான். ஆனால், இரவை எங்கே கழிப்பது? நகரில் அவனுக்கு எந்த உறவோ நட்போ இல்லையே. இன்னும் சில நாட்களுக்கு குளிரைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஏமாற்றமே தலையை மேலும் குளிரச் செய்தது. எட்டு மணி சுமாருக்கு சீக்கிரமே வந்து சேர்ந்தான். நல்ல இடமாகப் பார்த்து உட்கார நேரமிருந்தது. ரயிலுக்குக் காத்திருந்தோர் ஏற்கனவே சாப்பிட்டிருப்பர். அவர்களுக்கெல்லாம் அவனுடைய முறுக்கு தேவையிருக்காது. சில பிள்ளைகள் மட்டும் வாங்கச் சொல்லி நச்சரித்தனர்.

ரயில் வந்தால் தான் விற்பனை சூடு பிடிக்கும். 9.40க்கு ஒரு ரயில் வரும். இன்னொன்று 10.30க்கு. அந்நேரத்துக்கு எல்லாக் கடைகளும் அடைத்திருப்பார்கள். பயணிகள் பசியுடன் அவனைச் சுற்றி மொய்ப்பார்கள். 11.20க்கு ஒரு ரயிலுண்டு. ஆனால், அது அகால வேலை. முறுக்கு மிச்சமிருந்தாலும், அந்த ரயிலுக்குக் காத்திருக்க மாட்டான். வீட்டுக்குப் போய் தூங்கி விடுவான்.
நினைத்தைப் போலவே தான் நடந்தது. 10.30 ரயில் வந்ததும், பயணிகள் கூட்டமாக முற்றுகையிட்டனர். ஆளுக்கொரு பொட்டலம் முறுக்கைக் கையிலெடுத்தனர். ஒரே நேரத்தில் அனைவரையும் கவனிக்க முடியாமல் திணறினான். பிற்பாடு, காசை எண்ணிய போது, முப்பது காசு குறைவாக இருந்தது. மீண்டும் மீண்டும் எண்ணினான். முப்பது காசு குறைவாகத் தான் இருந்தது. கூட்டத்தில் யாரோ காசு கொடுக்காமல் முறுக்குப் பொட்டலத்தை எடுத்திருந்தார்கள். அந்த துரதிருஷ்டத்தை எண்ணி சற்றே வருந்தினான். இது போன்ற ஆட்களை நினைத்து எப்போதும் போலவே உஷாராகத் தான் இருந்தான். இருந்தாலும், கூட்டம் ஒரே நேரத்தில் அம்மியதால் கோட்டை விட்டிருந்தான். இனி, நஷ்டத்தைச் சகிக்க வேண்டியது தான். வேறென்ன செய்ய? எப்படியிருந்தாலும், முப்பது யுனாவ்களுக்கு மேலேயே லாபமீட்டியிருந்தான்.

பெருமூச்செறிந்தான். சரி, வீட்டுக்குக் கிளம்பலாம் என்று எழுந்தான். கால்கள் துவண்டன. மிகவும் பலகீனமாக உணர்ந்தான். உடல்நலமில்லையா என்ன? கூட்டத்தைச் சமாளித்ததில் அவன் எதையுமே அறியவில்லை. மிகவும் சோர்வாக இருந்தது. வாய் வறண்டு காய்ச்சலடிப்பது போலிருந்தது. நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். சுட்டது. உடல் மிகக் குளிர்ந்தது. சூடாக ஒரு கோப்பை தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், கடைகள் எல்லாமே மூடியிருந்தன. ரயில் நிலையத்தில் சுடுநீர் கிடைக்கும் என்ற ஞாபகம் வந்தது. கிடுகிடுவென்று போனான்.

கோப்பைகள் இல்லை. அவரவர் கோப்பைகளைக் கொண்டு வந்து தான் பயணிகள் வென்னீர் எடுத்து அருந்தினர். கோப்பைகள் பற்றி ரயில் நிலையத்துக்கு எந்தப் பொறுப்புமிருக்கவில்லை. உள்ளங்கையைக் குழித்து பிடித்தருந்தினான் சென். கை சுடவில்லை. ஏனெனில், கைகளும் காய்ச்சலில் தீயாய்த் தானே சுட்டன. வென்னீர் குடித்த பிறகு ஓரளவுக்கு நன்றாக உணர்ந்தான். வீட்டுக்கு நடப்பது கஷ்டம் போலிருந்தது. திடீரென்று, வீடு மிகத் தொலைவு போலப் பட்டது. நிற்க முடியவில்லை. உடனே உட்காந்து கொண்டான். தொப்பி வாங்காததால் தான் இத்தனையும். குளிர் இப்படித் தாக்கி காய்ச்சலையே கொண்டு வந்து விட்டதே. ஒன்றுமே சரியில்லை. இப்போது என்ன செய்வது? உறவோ நட்போ இல்லாத ஊரில் உடல்நிலை மோசமானால் எப்படி மருத்துவரைக் காண்பது? சரியான நேரத்துக்கு வைத்தியரைக் காணாவிட்டால் உயிர் பிழைப்பது கஷ்டமாகி விடுமே. நேர்மையும் நாகரிகமும் கொண்ட அவனைப் போன்றவன் இறப்பதாவது? அப்படியென்ன அவசரம் சாவதற்கு? இன்னும் சில ஆண்டுகளைக் கடின உழைப்பில் போட வேண்டியுள்ளதே? வாயோரங்கள் மட்டும் குளிரில் நடுங்கின. இனிய இசைக்குத் தாளம் போடுவது போல வலது கையைத் தொடை மீது தட்டினான். நீண்ட பெருமூச்சு விட்டவன் அங்கிருந்த நீள் இருக்கையில் மெல்லச் சரிந்து படுத்தான்.

***

கண்விழித்த போது பளிச்சென்று வெளிச்சமடித்தது. மூளை வெறிச்சிட்டிருந்தது. எங்கிருக்கிறோம் என்று குழம்பியவாறே இருமினான். கண்களைத் திறக்கவே வேண்டாம் போலிருந்தது. மீண்டும் தூங்கப் போக நினைத்துப் புரண்டு சட்டென்று சுதாரித்துக் கொண்டவன், மெத்தென்றுணர்ந்தான். சுற்றிலும் கூர்ந்து பார்த்தான். பெரிய, வசதியான படுக்கையில் படுத்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான். நம்ப முடியவில்லை. கண்கள் மூடியிருந்தாலும் எப்படி இங்கே வந்தேன் என்று யோசித்தபடி கிடந்தான். மிகவும் யோசித்தான். கிராமக் கட்சிக் குழுச் செயலாளர் வூவின் முகமும் அவரது வாகனமும் மங்கலாக நினைவுக்கு வந்தன. அதன் பிறகு, எல்லாமே புரிய ஆரம்பித்தது.

அது சென்னுக்கு அதிருஷ்ட வருடமாக அமைந்திருந்தது. எப்போதும் யாரேனும் ஒருவர் அவனுக்குதவினார்கள். அரை மயக்கத்தில் ரயில் நிலைய காத்திருப்பு அறையின் நீள் இருக்கையில் கிடந்த போது ஒரு ஜீப்பில் செயலாளர் வூ வந்தார். 12.15 ரயிலைப் பிடிக்கவிருந்தார். தலைநகரில் நடக்கவிருந்த ஒரு கலந்தாலோசனைக் கூட்டத்துக்குப் போகவிருந்தார். அரை மணிநேரம் முன்பே வந்திருந்ததால் காத்திருப்பு அறைக்கு வந்தார். ஒருவேளை அவருக்கு உதவி தேவையிருக்கலாமென்று ரயில் ஏறும் வரை வாகன ஓட்டுனர் காத்திருந்தார். நள்ளிரவில் அங்கே மிகச் சிலர் மட்டுமே இருந்தனர். உறங்கிக் கொண்டிருந்த சென்னைப் பார்த்துச் சிரித்தார். போன ஆண்டு தான் வூ அவர்கள் சென்னுடைய கம்யூன் விவசாயக் குழுவுவில் இரண்டு மாதங்கள் பணியாற்றியிருந்தார்.

“இந்த எளிய உழைப்பாளி இங்கே என்ன செய்கிறான்? ரயிலைத் தவற விட்டிருப்பானோ?”

அவனருகில் இருந்த காலிப் பையைக் கண்டார் வூ.

“அடடா, பொருட்களைத் திருட்டுக் கொடுத்து விட்டானோ?” குனிந்து உலுக்கி எழுப்பியும் சென் கண்ணையே திறக்கவில்லை.
உடலோ தீயெனச் சுட்டது. அவனை மெதுவாகத் தூக்கி உட்கார வைத்தார் வூ.

கண்ணைத் திறந்ததும் வூவின் முகத்தைக் கண்டவன் சட்டென்று அவரைப் பற்றக் கையுயர்த்தினான். “உடம்பு சரியில்லையா?”, என்று கேட்டார். தலையாட்டினான். எப்படி இங்கே என்று கேட்டதுமே பை மீது கை வைத்துக் காட்டினான். “உன் சாமான்களெல்லாம் எங்கே?”, எனக் கேட்டார். புன்னகைத்தான். புரியும்படி சொன்னோமா என்று சந்தேகப் பட்டான். ஆனால், வூ புரிந்து கொண்டார். ஓட்டுனர் உதவியுடன் அவனைத் தாங்கிப் பிடித்து வாகனத்தில் ஏற்றினார்.

வெண்ணிற ஆடை அணிந்த ஒருவர் அவனைச் சோதித்தார். ஃப்ளூ ஜுரமென்று வூவிடம் சொன்னார். காசு கேட்காமல் மருந்து மாத்திரைகள் தந்தார். வாகனத்தில் அவனை ஏற்றியபடி, “மன்னிக்கணும். படுக்கை காலியாக இல்லை, அதான். ஏதேனும் விடுதிக்குக் கூட்டிப் போங்கள். ஓரிரவு நல்ல உறக்கம் கிடைத்தால் ஜுரம் சரியாகி விடும்”, என்றார். வாகனம் நகரும் போது வூ ஓட்டுனரிடம், “இன்னும் பதிமூணு நிமிஷம் தான் இருக்கு ரயிலுக்கு. மொதல்ல என்னய ரயிலடியில விட்ரு. அதுக்கப்புறம், ஹோட்டெல்ல ஒற்றையறை எடுத்து தங்க வை. என் நண்பன்னு சொல்லு,..”, என்றார்.

அவன் கண்கள் குளங்கட்டி, பெருகி கன்னங்களில் வழிந்தது. எத்தனை அரிய மனிதர் வூ! பிரச்சனையில் மாட்டியிருந்த தன்னை நண்பனைப் போல எண்ணி உதவுகிறார். ஒருவேளை உயிரையே காப்பாற்றியிருந்தாரோ.

இத்தனைக்கும், அவர்களிருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் மட்டுமே. நண்பர்கள் இல்லை. கிராமத்தில் பணியாற்றிய போது, அவனது வாழ்க்கைத் தரம் எந்தளவுக்கு மேம்பட்டிருந்தது எனக் கண்டறிய வூ ஒரேயொரு முறை வீட்டுக்கு உணவருந்த வந்திருந்தார். அவர்கள் பரிமாறிய எளிய உணவின் மதிப்பை விட பல மடங்கு விலையுயர்ந்த இனிப்புப் பலகாரங்களை குழந்தைகளுக்கு வாங்கி வந்திருந்தார். அவனுக்கு நண்பரில்லை என்ற போதிலும், எளிய மக்களோடு பழகக் கூடிய பண்புடையவர்.

இச்சிந்தனைகள் அவனை மகிழ்வித்தன. போர்வையை இழுத்து கண்களைத் துடைத்துக் கொண்டான். கண்களைத் திறந்து அறையைக் கூர்ந்து நோக்கினான். அனைத்துமே புத்தம் புதியதாக இருந்ததைக் கண்டு மிக வியந்தான். உயரே விட்டத்தைப் பார்த்தால் கண்ணைக் கூச வைக்கும் வெண்மையில் பிரகாசித்தது. சுவர்களின் கீழ்பகுதிகளெல்லாம் நல்லமரத்திலும் மேல் பகுதிகளெல்லாம் வெள்ளையடித்தும் இருந்தன. உயர் ரக தோலிலாலான இரு பெரிய சொகுசு இருக்கைகள் தவிர அடர் பழுப்பு நிற அலமாரியும் வெளிர் மஞ்சள் மேசையும் இருந்தன. படுக்கை விரிப்புகள் எல்லாமே அழகிய பூக்களுடன் தூய்மையாக இருந்தன. தலையணை உறைகள் பட்டுத் துணியில் கண்ணைப் பறித்தன.

அழுக்காகி விடுமோ என்ற அச்சத்துடன் சடாரென்று கால்களைப் படுக்கையை விட்டு வெளியெடுத்தான். மெதுவாக எழுந்து உடைகளை உடுத்திக் கொண்டான். பாதணிகளைக் கையில் ஏந்திக் கொண்டு வெறுங்காலுடன் நடந்தான். சொகுசு இருக்கைகளைக் கண்டதும் ஒரு முறை உட்கார்ந்து பார்க்க ஆசைப் பட்டான். ஆனால், தான் அதில் உட்கார்ந்தால் பழுதாகி விடுமோ என்று பயந்தான். மெல்ல கதவையைத் திறந்து கொண்டு வெளியேறினான்.

தாழ்வாரத் தரை பாதத்தின் அடியில் குளிர்ந்து கூர்மையாகத் தாக்கியது. மற்றவர் கால்களில் காலணிகளைக் கண்டதும் தானும் அணிந்து கொண்டான். வூ மிக உயர்ந்த விடுதிக்கு தன்னை அனுப்பியிருந்தார். அதுவும் தன் தகுதிக்கு இது மிக அதிகம். பொதுவாகவே விடுதியறைகளின் வாடகை அதிகமென்று கேள்விப்பட்டிருந்தான். அதுவும் இது போன்ற அறை கண்டிப்பாக மிக அதிகமிருக்கும். ஒரு தொப்பியின் விலை கூட இருக்கலாம். அடடா, வீணானதே!

கவலை தோய்ந்தவனாக அறை வாடகைக்கான ரசீதைக் கேட்டு கட்டிவிட்டு வெளியேறி விடலாமென்று நினைத்தான்.

“என்னோட அறை வாடகை ரசீது கொடுக்கறீங்களா காம்ரேட்?”, என்று வரவேற்பில் நாளிதழ் வாசித்தபடி நின்ற பெண்ணிடம் கேட்டான்.

“எந்த அறை?”, தாளிலிருந்து கண்களை எடுக்காமலே கேட்டார் பெண்மணி.

“தெர்ல. அதோ கிழக்கே கடைசில இருக்கே அந்த அறை.”

சட்டென்று தாளைத் தூர வைத்து விட்டு, “நீங்க தான் செயலாளர் வூவோட ஜீப்ல வந்தவரா? இப்ப ஜுரம் பரவால்லையா?”

“பரவால்ல. வீட்டுக்குப் போறேன்.”

“ஒண்ணும் அவசரமில்ல. செயலாளர் வூவோட பழைய நண்பரா நீங்க? எங்க வேல பாக்கறீங்க?”

நிறைய பேச ஆரம்பித்து விட்டார் பெண்மணி. அகலமாகச் சிரித்துக் கொண்டே ரசீதை நீட்டினார். அவர் மிக அழகாக இருந்ததாக நினைத்துக் கொண்டான்.

ரசீதைப் பார்த்தான். தீயைத் தொட்டது போல் கைகள் நடுங்கின. தன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. தலைக்கேறிய ரத்தத்தால் முகஞ்சிவந்து, “எவ்வளவு?”, என்று கூவினான்.

“ஐந்து யுவான்.”

“ஒரேயொரு இரவுக்கா?”, என்றவன் வியர்த்தான்.

“ஆமாம்.”

அவன் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. “அடக் கடவுளே, ஒண்ணுல்ல, இரண்டு தொப்பிகள் வாங்கலாமே!”

“உங்களுக்கு இன்னும் குணமாகல்லனு நெனைக்கிறேன்”, என்று பதைபதைத்தாள். “எப்படி வியர்கிறது பாருங்கள்.”

“ராத்திரி தானே வந்தேன்”, என்றான் சென். இத்தனை வெகுளியாகத் தன் முட்டாள் தனத்தை வெளிக் காட்டியிருக்கக் கூடாதோ.
உடனேயே அவன் ஒரு வெத்து வேட்டு என்று புரிந்து கொண்டு விட்டவள் முகஞ்சுளித்தாள். “எப்ப வந்தீங்கன்றது எனக்கு அக்கறையில்ல. மதியம் வரைக்கும் உள்ள வாடகையைக் கொடுத்து தான் ஆகணும்.” செயலாளர் வூவுக்கு வேண்டியவன் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் அவள் அவனைக் கேலி செய்யவில்லை.

இறுகிய அவள் முகம் அவனது முட்டாள்த் தனம் அவளை எரிச்சல் படுத்தியிருந்ததைச் சொன்னது. சடாரென்று வாயை மூடிக் கொண்டான். சட்டைப் பைக்குள்ளிருந்து நடுங்கும் கைகளால் பணத்தை எடுத்தான். கொடுக்கும் முன்னர் மூன்று முறை எண்ணினான். வியர்வையில் தோய்ந்திருந்தது தாள்கள்.

அந்தப் பெண் ரசீதைத் திருப்பிக் கொடுத்தார். நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பணத்தை வாங்கிக் கொண்டாள்.
அவனுக்குக் கோபம் வந்தது. அத்தனை பணத்தைக் கொடுத்தும் அவள் முகத்தில் ஒரு சிறுபுன்னகையைக் கூட கொண்டு வரவில்லையே. வெளியேறி நடக்கப் போனான். திடீரென்று, பை நினைவு வந்ததுமே திரும்பி அறைக்குப் போனான்.
அறை வாசலில் தயங்கினான். வழவழப்பான தரை அவனை நிறுத்தியது. ஒரு நொடி, காலணியைக் கழற்றி விட்டு நுழைவோமா என்றெண்ணினான். பிறகு, “ஒண்ணும் வேணாம். அதான் பணம் கொடுத்துட்டேனே”, என்றபடி அறைக்குள் போனான். உள்ளே நுழைந்தவன் நேராகப் போய் சொகுசு இருக்கையில் புதைந்தான். “பழுதானால் பழுதாகட்டும். ஐந்து யுவான்கள் கொடுத்ருக்கேனே.”

பசியெடுத்தது. மிச்சமிருந்த ஒரே தோசையைப் பிட்டுத் தின்றான். மேசை மீதிருந்த மின்கெட்டில் வென்னீரை கோப்பையில் ஊற்றிக் கொண்டான். இருக்கை ஒன்றுமே ஆகாமல் அப்படியே தானிருந்தது. எழுந்து நின்று மீண்டும் தொம்மென்று உட்கார்ந்தான். மீண்டும் மீண்டும் மூன்று முறை அவ்வாறு செய்தான். இருக்கைக்கு ஒன்றுமே ஆகவில்லை. மிக அருமையான இருக்கை ! சாய்ந்து அமர்ந்து தோசையைத் தின்றான். தலைவலி இல்லை. வியர்ந்ததில் காய்ச்சலும் போய் விட்டது. பணம் போனதை துரதிருஷ்டத்தை விரட்டி விட்டதாக நினைத்துக் கொண்டான். சிகிச்சையின் ஒரு பகுதி என்றெண்ணிக் கொள்ள வேண்டியது தான்.

வென்னீரைக் குடித்த பிறகு மீண்டும் பணத்தின் ஞாபகம் வந்தது. அவனுக்கு மிகப் பிடித்த தொப்பி இரண்டரை யுவான்கள் தான். இரண்டு தொப்பிகள் விலையில் ஒருநாள் அறை வாடகையா? இங்கெல்லாம் தங்கினால் பணக்காரர்கள் கூட ஏழைகளாகி விடுவார்கள். நாளொன்றுக்கு எழுபது காசுகள் மட்டுமே வருவாய் பெறும் எளிய கம்யூன் விவசாயி அவன். ஏழுநாள் வருவாய் கூடப் போதாதே ஒருநாள் வாடகை கொடுக்க. இதென்ன அபத்தம்! அறையில் ஏழு மணிநேரம் தான் தங்கியிருந்தான். அவனைப் போன்ற ஓர் எளிய கிராம விவசாயி இது போன்ற படுக்கையில் படுப்பதாவது? மதியம் வரை வாடகை என்று சொல்லியிருந்ததால் அங்கேயே தான் இருக்கப் போகிறான். எதற்கு முன்பாகவே போக வேண்டும்?
யோசனையைச் செயல்படுத்தக் கிளம்பினான். காய்ச்சல் இறங்கி, சாப்பிட்டுமாயிற்று. முகம் கழுவலாமென்று தோன்றியது. கைவசம் ஒரு துண்டு தான் இல்லை. படுக்கை விரிப்பை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் போய் முகங்கழுவித் துடைத்தான். உடையைக் கழற்றாமல் படுக்கையில் மீண்டும் விழுந்தான். இப்போது, ஐந்து யுவான்கள் கட்டியிருந்ததால் அவனில் எவ்விதத் தயக்கமுமில்லை. அறை தொழுவம் போலானாலும் இனி அவன் கவலைப் படமாட்டான். பணம் கொடுத்ததும் வீண் போகவில்லை.

தூங்க முடியவில்லை. செயலாளர் வூயின் நினைவுகள் மேலெழுந்தன. ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் அறை வாடகை சென்னுக்குக் கட்டுப் படியாகுமா என்று யோசிக்க மறந்தார் போலும். தொப்பியை வாங்காமல் விட்டதற்கு மிக வருந்தினான். இருந்ததையெல்லாம் கொடுத்ததோடு சேமிப்பிலும் கையை வைக்க வேண்டியிருந்ததே. தொப்பியை வாங்குவது எப்போது? மீண்டும் காய்ச்சல் வராமலிருக்கவேனும் தொப்பியை வாங்கியே தீர வேண்டும்.

முறுக்கு நினைவு வந்ததுமே பசி வயிற்றைக் கிள்ளியது. அவனுக்கிருந்த பசிக்கு தோசை போதவில்லை. முறுக்கெல்லாம் விற்று முடிந்து விட்டனவே. இந்தப் படுக்கையில் கிடந்தால் பசி தான் கூடும் போலும். ஆனால், எங்கே சாப்பாடு கிடைக்கும்? கையில் கம்யூன் ரேஷன் கூப்பனுமில்லை. நடக்கவே தெம்பில்லாத அளவுக்குப் பசி அதிகரித்தது. இன்னொரு இரவு இங்கிருக்க முடியுமா? அந்நினைவு வந்ததுமே சடாரென்று குதித்தெழுந்து போர்வையை விலக்கியெறிந்தான். பாய்ந்து பையைத் தூக்கிக் கொண்டு வெளியேறினான். எத்தனை ஆடம்ர அறையாக இருந்தாலும், அவனுக்கான இடமில்லையே அது. இன்னும் மூன்று மணிநேரம் மீதமிருந்தாலும் அங்கிருந்து போய்விடலாமென்று தீர்மானித்தான்.

நேராகப் பல்பொருள் அங்காடியை அடைந்தான். தொப்பியை வாங்கித் தலையில் பொருத்திக் கொண்டு நடந்தான்.
காட்சிகளைக் கண்டு ரசித்தவாறே வீட்டை நோக்கி நடந்தவன் கிராமத்தை நெருங்கியபோது திடீரென்று கவலை கொண்டான். எப்படி இதையெல்லாம் மனைவியிடம் விளக்குவது? ஆடம்பரச் செலவென்று எகிறுவாளே. சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகச் சொல்வோமா? ஆனால், அவன் என்றைக்குமே சூதாடியதில்லை. ஆடம்பரச் சாப்பாட்டில் காசைக் கரைத்து விட்டேன் என்று சொல்லலாமா? ஆனால், உணவில் பேராசை கொண்டவனுமில்லை அவன். அது போன்ற ஆடம்பர விடுதி அறையில் கிராமத்து ஆட்கள் யார் தான் தங்கியிருப்பார்கள்? உண்மைக் கதையையே சொல்ல வேண்டியது தான். அவனுக்குச் சொல்ல ஒன்றுமில்லை என்று இனி யாரும் ஏளனமாகப் பார்க்க மாட்டார்கள். யாருமே இனி அவனை இழிவாகக் காணப் போவதில்லை.

சட்டென்று அவனுக்கு ஊக்கமேற்பட்டது. மனைவியை நினைத்து இனி அவனுக்குக் கவலையில்லை. செயலாளர் வூவின் பெயரைச் சொல்வான். யானைக்கொரு காலமென்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும் தானே ! ஐந்தே யுவான்களில் அவனுக்கு ஆன்ம அனுபவமும் திருப்தியுமேற்பட்டிருந்தது. அவ்வகையில் அது மலிவு தானே? மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடந்தான்.
கிராம கம்யூனில் அவனது மதிப்பு உயரவே செய்தது. அனைவரும் அவனது சாகசங்களைக் கேட்டனர். காம்ரேட்கள் எல்லோரும் நண்பர்களானார்கள். வீதிகளில், அவனைச் சுட்டிக் காட்டி, “ஒரே நாள் வாடகைக்கு ஐந்து யுவான்கள் கொடுத்து விடுதியில் தங்கியிருந்தவன்”, என்று பேசினர்.

கம்யூனுக்கு விவசாயப் பொறிகள் விற்கும் தரகர் முதுகில் தட்டி, “உன்னைப் போல எனக்கு அதிருஷ்டம் அமைந்ததில்லை. நானும் தான் அடிக்கடி நகருக்குப் போகிறேன். அதே விடுதியிலே தங்குகிறேன். ஆனாலும், அவர்கள் அத்தனை அருமையான அறையை எனக்குக் கொடுத்ததில்லை”. அப்போதிலிருந்து, சென் மிகுந்த திருப்தியடைந்தவனாக முன்பை விட உற்சாகமாக உழைத்தான்.

(முற்றும்)