நச்சுயிர் (VIRUS)
நச்சுயிர் வெறுப்பூட்டும் விசித்திரமானதோர் உயிரினம்— “துர்ச்செய்திகள் நிறைந்திருக்கும் ஒரு உட்கரு அமிலத் (nucleic acid) துளி” என்னும் வார்த்தைகளால், எளிதில் அவற்றின் கொடூரம் நம் மனதில் பதியும் விதமாக குறிப்பிடுகிறார் நோபல் பரிசு பெற்ற பீட்டர் மெடாவர். நச்சுயிர்கள், பாக்டீரியாக்களைப் போலன்றி, சிறிய, எளிய உள்ளமைப்புக்கொண்ட ஒருவகை ஒட்டுண்ணிகள். தனித்திருக்கையில், ஊறுவிளைவிக்காமல் மந்தமாக இருப்பவை. சரியான விருந்தளிப்பவரின் கவனிப்பில், சுறுசுறுப்பாக செயல்படுபவை. இதுவரை அறியப்பட்டுள்ள சுமார் 5000 வகைப்பட்ட நச்சுயிர்களே, ஃப்ளூ,சளி முதற்கொண்டு, மனிதகுலத்தின் நலனுக்குப் பெருங்கேடு விளைவிக்கும், அம்மை, வெறிநாய்க்கடி நோய், மஞ்சள்காய்ச்சல், குருதிப்போக்குக் காய்ச்சல்(Ebola), இளம்பிள்ளைவாத நோய்(Polio), எய்ட்ஸ் நோயின் காரணியான, மனித நோய் எதிர்ப்புத்திறன் குறைக்கும் எச்.ஐ.வி வரையாக, நம்மை அல்லற்படுத்தும் பலநூறு நோய்களின் காரணகர்த்தாக்கள்.
நச்சுயிர்கள், உயிருள்ள ஸெல்களின் மரபுக்கூறுகளைக் (genetic material) கையகப்படுத்தி அவற்றைத் தம் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு செழிப்புறுகின்றன. விடாப்பிடியாக இனப்பெருக்கம் செய்துமுடித்து, அதிக ஸெல்களைக் கைப்பற்றப் பெரும்படையுடன் கடும்புயலெனப் பாய்கின்றன. வாழும் சூழலைத் தேடிக்கொள்ளும் நிர்ப்பந்தமில்லாததால், அவற்றிற்குக் கச்சிதமான வடிவே போதுமானது. மிக எளிய பாக்டீரியாவுக்கும் பல்லாயிரம் மரபீனிகள் தேவைப்படுகிற நிலையில், ஹெச்.ஐ.வி உட்பட்ட பல நச்சுயிர்கள், பத்துக்கும் குறைவான மரபீனிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. அவை பொதுப்பயன்பாட்டு நுண்ணோக்கி(microscope) மூலம் பார்க்க முடியாத அளவுக்குக் குறுவடிவு கொண்டவை. 1943-ல் கண்டுபிடிக்கப்பட்ட மின்னணு நுண்ணோக்கியின் வழியாகவே, விஞ்ஞானிகளுக்கு அவற்றின் முதல் தரிசனம் கிட்டியது. ஆனால் அவை அளப்பரிய நாசம் விளைவிக்கும் வலுவுள்ளவை. இருபதாம் நூற்றாண்டில் மட்டும், அம்மைநோய் கண்டு, சுமார் 30கோடி மக்கள் மடிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திடீரென்று உலகில் திகைப்பூட்டும் புதிய கொள்ளை நோயாய்ப் பரவுவதும், பின் வந்தவிதமாகவே பின்வாங்கி மறைவதுமாக, செயல்படும் நச்சுயிர்கள் மனித இனத்தையே நிலைகுலையச் செய்யும் ஆற்றல் உடையவை.1916-ல் அத்தகைய ஒர் நிகழ்வில், அமெரிக்க/ஐரோப்பிய மக்களில் சிலர், Encephalitis Lethargica என்ற விசித்திரமான தூக்கநோய்க்கு இரையாகி அவதிப்பட்டனர். தூக்கத்தில் ஆழ்ந்த நோயாளிகள், தாமாக விழித்தெழுவதில்லை. ஆனால் அவர்களை மிகச் சிரமப்படாமல், உணவுண்ணவோ, இயற்கை உபாதைகளைத் தீர்க்கவோ எழுப்பிவிட முடியும்; விழித்திருக்கும்போது, நாம் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவாக பதில் அளிப்பார்கள்; தாம் யார்,எங்கிருக்கிறோம் என்பது சரியாகத் தெரிந்திருந்தாலும், அதைச் சொல்லும் விதம், அவர்கள் உற்சாகம் குன்றி, உணர்வற்று இருப்பதையே காட்டும்.
ஓய்வெடுக்க விட்டால், நொடியில் ஆழ்ந்த தூக்க நிலையை அடைவார்கள; அப்படியே விட்டுவிட்டால், அந்நிலையே காலவரையறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கும். சிலர் மாதக்கணக்கில் இப்படியே இருந்து மடிந்தனர். மிகச் சிலரே, தப்பிப் பிழைத்து நனவுகிற்கு மீண்டனர்- பழைய உற்சாகத்தை முற்றிலும் இழந்தவர்களாக. வெறும் ஜடங்களாக வாழ்நாளைக் கழித்தார்கள். (முழுதுமாக எரிந்து அடங்கிய எரிமலைகளாக-என்கிறார் ஒரு மருத்துவர்). பத்து ஆண்டுகளில், அரைக்கோடி மக்களைக் கொன்ற பின்னர், இந்நோய் அமைதியாக வெளியேறியது. அதற்கிடையில், அதைவிடக் கொடூரமான கொள்ளைநோய் (மனிதசரித்திரம் கண்ட கொள்ளைநோய்கள் எல்லாவற்றையும் விட கொடியது) வந்துவிட, தூக்கநோய் உரிய கவனம் பெறாமல் விலக நேர்ந்தது.
சிலநேரங்களில் பன்றிக்காய்ச்சல்(Great Swine Flu Epidemic) எனவும்,மற்றும் சில நேரங்களில் Great spanish Flu கொள்ளைநோய் எனவும் அழைக்கப் பட்டாலும், இருவகை நோய்களும் கொடூரமானவையே. முதலாம் உலகப்போர் நடந்த நான்கு ஆண்டுகளில் போரால் மடிந்தவர்களின் எண்ணிக்கை 2.1 கோடி. பன்றிக்காய்ச்சலின் தாக்குதல் தொடங்கிய நான்கு மாதங்களில் அதே அளவில் மக்கள் மடிந்தனர். முதலாம் உலகப் போரில் மடிந்த அமெரிக்கர்களில், 80% ஃப்ளு தாக்கி இறந்தனர். மீதிப்பேரே எதிரியின் ஆயுதம் தாக்கி இறந்தவர்கள். சில யூனிட்களில், அதிக மரணங்கள் நேர்ந்து, மரணவிகிதம் 80% அளவை எட்டியது.
1918-ஆம் ஆண்டின் இளவேனிற் பருவத்தில், ஆபத்தில்லாத சாதாரண ஃப்ளுவாக வெளிப்பட்டு, அடுத்த சில மாதங்களில் எப்படியோ கொடிய உருமாற்றம்(mutation) பெற்றது. நோயால் பாதிக்கப்பட்டவர்களில்,ஐந்தில் ஒருவர் மிதமான அறிகுறியுடன் நோயுற்றார். பிறரின் உடல்நிலை மிக மோசமாகி பெருமளவில் சாவுகள் நேர்ந்தன-நோயுற்ற சில மணிகளில் சிலரும், சில நாட்களில் சிலருமாக.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, முதற்சாவுகள், 1918-ஆம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் பாஸ்டன் நகரில், மாலுமிகளிடையே நேர்ந்தன எனப் பதிவுகள் கூறுகின்றன;ஆனால் இந்தக் கொள்ளைநோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவியது. பள்ளிகள் மூடப்பட்டன; பொது கேளிக்கை அரங்குகளும், திரையரங்குகளும் மூடப்பட்டன; மக்கள் முகமூடியணிந்து நடமாடினர். அவற்றால் ஒரு நலனும் வந்துசேரவில்லை. 1918-ஆம் ஆண்டின் இலையுதிர்ப் பருவம் தொடங்கி அடுத்த ஆண்டின் இளவேனிற் காலம் முடியுமுன், அமெரிக்காவில், 5,48,452 பேர் ஃப்ளூ நோயால் மடிந்தனர். பிரிட்டனில் 2,20,00 பேரும் அதே போன்ற எண்ணிக்கையில் ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இறந்தனர். மூன்றாம் உலகின் பதிவுகள் சரியில்லாது போனதால், அனைத்துலக சாவுகளின் எண்ணிக்கை, துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் அது 2 கோடிக்குக் குறையாது; 5 கோடியாகவும் இருக்கலாம்; உலகளாவிய மரணங்கள் 10 கோடி என்கின்றன சில மதிப்பீடுகள்.
நமக்குத் தெரிய வந்த 1918 ஃப்ளூவின் விவரங்கள் சொற்பமே; ஒன்றுமே இல்லை என்று கூடச் சொல்லலாம். எப்படி திடீரென்று கடல்களையும், மலைத்தொடர்களையும், நிலத்தடைகளையும் தாண்டி உலகெங்கும் பரவும் கொள்ளை நோயாக உருவானது என்ற கேள்விக்கு விடையில்லை. விருந்தோம்புவோர்(host) உடலுக்கு வெளியே சில மணி நேரமே பிழைத்திருக்கவல்ல நச்சுயிர், ஒரே வாரத்தில் மாட்ரிட்,பாம்பே மற்றும் ஃபிளடெல்ஃபியா போன்ற தொலைதூர நகரங்களைச் சென்றடைந்தது எப்படி?
இந்த கேள்விக்குப் பொருந்தும் விடை- நச்சுயிர்கள் தம் உடல்களில் அடை கிடந்தபோதிலும், நோய் அறிகுறிகள் மிகக் குறைவாக அல்லது அறவே இல்லாமல் இருந்த மனிதர்கள் மூலம் நோய் பரவியது என்பதே. வழக்கமான ஃப்ளூ வெளிப்படுகளிலும் கூட, 10 சதவிகித மக்கள், நோய் அறிகுறிகள் ஏதுமில்லாததால், தாம் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிவதில்லை. அவர்கள் நடையுடையோடு இருப்பதால், சிறந்த நோய் பரப்பிகளாகச் செயல்படுகிறார்கள்.
1918-ன் ஃப்ளூ வெளிப்பாடு எப்படி உலகெங்கும் பரவியது என்று இதன் மூலம் தெரிந்து கொண்டோம். இருப்பினும், அது எப்படிப் பல மாதங்கள் பதுங்கி இருந்துப் பின் அனேகமாக ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் (தீவிரவாதிகளைப்போல்) வெளிப்பட்டது என்பதற்கு விளக்கமில்லை. வழக்கமாக, குழந்தைகளும், முதியோரும் ஃப்ளூவால் அதிகப் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆனால், இம்முறை குறிப்பாக மக்கள்தொகையின் முதுகெலும்பாக இருப்போர் பெருநாசத்துக்கு ஆளானார்கள் என்பது திகைப்பூட்டுகிறது. முதியோர் முந்தைய ஃப்ளூ வெளிப்பாட்டில் நோயுற்று அதன் பயனாகத் தடுப்பு சக்தி பெற்றிருக்கலாம்; ஆனால் குழந்தைகள் யார் கருணையால் தப்பினார்கள் என்றும் தெரியவில்லை. பெரும்பாலான ஃப்ளூ தாக்குதல்கள் மிதமானதாக இருந்துவரும் நிலையில், 1918 ஃப்ளூ மட்டும் ஏன் கொடுமையின் சிகரத்தைத் தொட்டது என்பதும் யாருக்கும் புரியாத புதிர்.
காலப்போக்கில், சில நச்சுயிர் வகைகள் மீண்டும் மீண்டும் மறு வாழ்வு பெற்றுத் திரும்புகின்றன. H1N1 என்றழைக்கப்படும் ரஸ்யா வைரஸ், 1933-ல் மிகப் பெரிய அளவில் பரந்த நிலப்பரப்பில் திடீர்த்தாக்குதல் நடத்திய பின், மறுமுறை 1950-களிலும், இன்னொரு முறை 1970-களிலும் தாக்குதல் நிகழ்த்தியது. இடைப்பட்ட காலத்தில் எங்கே சென்றது என்று யாருக்கும் தெரியாது. நச்சுயிர்கள், அடுத்த தாக்குதலை, அடுத்த தலைமுறை மனிதர்கள் மீது நடத்துவதற்காக, யாருக்கும் தெரியாமல் ,காட்டு மிருகங்களின் உடலில் ஒளிந்து கொண்டு காத்திருக்கின்றன என்னும் கருத்து நிலவுகிறது. இன்றும் பன்றிக்காய்ச்சல் மீண்டும் தலை நீட்டும் சாத்தியம் இருப்பதை யாரும் மறுப்பதில்லை.
பன்றிக்காய்ச்சல் வராவிட்டாலும், பிற கொள்ளை நோய்கள் வரலாம். புதிய அச்சுறுத்தும் நச்சுயிர்கள் முளைத்தவண்ணம் இருக்கின்றன. எபோலா, லஸ்ஸா மற்றும் மார்பர்க் காய்ச்சல்கள் எல்லாமே வீறுகொண்டு எழுவதும் விலாசமின்றி மறைவதுமாக, மீண்டும் மீண்டும் விளையாட்டுக் காட்டி வருகின்றன. ஆனால் தற்போது தமக்குள் அமைதியாக மாற்றங்களை உருவாக்கிகொண்டுள்ளனவா அல்லது இன்னொரு பேரழிவு உண்டாக்கும் தாக்குதலுக்கு சரியான தருணம் வரக் காத்திருக்கின்றனவா என்று யார் அறிவார்? எய்ட்ஸ் நோய், நம்மிடையே நெடுங்காலம் இருந்து வந்திருப்பது (பிரபலம் ஆனதிற்கும் முன்பே பல ஆண்டுகள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்கும் என்ற நம் ஐயத்தை உறுதி செய்யும் வகையில்) இப்போது தெரிய வந்துள்ளது, 1959-ல் மர்மமான நோயால்,எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் இறந்த மாலுமி, எய்ட்ஸ் நோய்வாய்ப்பட்டவர் என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் ராயல் இன்ஃபர்மரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். என்ன காரணத்தாலோ இந்த நோய் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அமைதியாக செயலற்று இருந்தது
(Translation of pages from 316 to 319 which deal on the topic VIRUS- excluding the 2 paras that deal with vaccine production-of the America’s National Best Seller-“ A Short HISTORY of Nearly Everything”—By BILL BRYSON); Translated from original by GORA(G.Rajaram)