சில வருடங்களுக்கு முன் உலகின் பொருளாதார மையம் அமெரிக்காவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு மாறுமென்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தார்கள். அந்தக் கணிப்பு உண்மையாகி வருகிறது என்பதற்கு சீனா ஒரு நல்ல உதாரணம்.
செல்வந்தராயிருப்பது போற்றத்தக்கது என்ற புதிய நடைமுறையை முன்வைத்த டெங் சியா பிங் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதுமுதல் தொழில்துறையிலும் பொருளாதார ரீதியாகவும் அதிவேக வளர்ச்சியடைந்து வரும் சீனா உலகின் பல நாடுகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு சீனா தன் சர்வதேச பொருளாதார வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் சீனாவில் சர்வதேச முதலாளித்துவ குரு பீடமான அமெரிக்காவின் நேரடி முதலீடு மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரப்படி ஏறத்தாழ ஐம்பது பில்லியன் டாலர்கள்(1) அதே போல அமெரிக்காவுக்கு அதிகமான பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடு சீனா. சென்ற ஆண்டு நானூறு பில்லியன் டாலர்கள் அளவில் சீனா தன் பொருட்களை அமெரிக்காவுக்கு விற்றிருக்கிறது (2)
சீனாவின் வணிக விரிவாக்கம் புத்தக வெளியீட்டுத் துறையிலும் நிகழ்ந்து வருகிறது. உலகில் அதிகமான புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வெளியிடும் நாடு தற்போது சீனாதானென்று செய்திகள் கூறுகின்றன.
2002 வரை லாபத்தைப் பொருட்படுத்தாமல் புத்தகப் பதிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த சீனா தற்போது அதை லாபமிக்க துறையாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. பதிப்புத்தறை, அரசு நிறுவனங்கள் வசமிருந்தாலும் அவைகளும் லாபமீட்ட சீன அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. விட்டது சனியன் என்று தனியாருக்கு தாரை வார்ப்பதில்லை. அதே சமயம் தனியார் பதிப்பகங்களுமிருக்கின்றன. 2010ஆம் ஆண்டில் சீனா 965,000 தலைப்புகளில் புத்தகங்கள், நாளிதழ்கள், தினசரிகள் மற்றும் மின்புத்தகங்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. இதைவிட பத்து மடங்கு அளவில் இவ்வகைப்பட இறக்குமதியைச் செய்து கொள்கிறது சீன அரசு. தகவல் சேகரத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு சீன அறிவுப் பசிக்கு சான்றாக இன்னும் திகைப்பூட்டும் செய்தி : சென்ற ஆண்டு மட்டும் சீனாவில் 328000 தலைப்புகளில் புத்தகங்களும், கிட்டத்தட்ட 10000 இதழ்களும், 1900 நாளிதழ்களும் வெளியிடப்படுகின்றன. (3). இந்த புத்தக வணிகமும் அதிகமாக நடப்பது சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில்தான்.
அரசியல் வணிக உறவுகள் நிமித்தம் சீனாவும் அமெரிக்காவுமிடையே மொழி மற்றும் கலாச்சார புரிதல்கள் அவசியமாகின்றன. இதனால் அந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிவர்த்தனை திட்டங்களின்கீழ் பல புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றிலொன்று சமகால சீனக்கவிதைகள் என்னும் தொகுப்பு. இதை கேன்யான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 49 கவிஞர்களின் 200 கவிதைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. கவிதைத் தொகுப்பைப் பற்றி பேசுமுன் சீனக் கவிதைகள் குறித்து சில விஷயங்கள்.
சீனக் கவிதைகளுக்கு தமிழ் கவிதைகளைப் போலவே ஒரு நீண்ட வரலாறுண்டு. க்யு யுவான் (கி.மு. 340-277) சீனக்கவிதையின் தந்தையாக கருதப்படுகிறார். பண்டைத் தமிழகத்தைப் போலவே சீன மன்னர்கள் பலர் புலவர்களாகவும் புரவலர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே சீனக் கவிதை மன்னர் வம்சங்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.
டாங், சோங், யுவான், மிங், க்விங், நவீன கவிதை என சீன கவிதை மரபைப் பிரிக்கலாம். துவக்கத்திலிருந்தே சீனக்கவிதைக்கான இலக்கணம் தமிழைப்போல கடுமையானதாக இருக்கவில்லை. எழுத்துகள், சொற்கள், அடிகள் குறித்த இலக்கணம் மட்டுமே உண்டு. நான்கு சொற்கள் நான்கு வரிகள், அடுத்து, நான்கு சொற்கள் ஏழுவரிகள், பிறகு பதினோரு வரிகளென விதிகள் தளர்த்தப்பட்டன.
டாங் அரச வம்சம் ஆட்சி செய்த காலத்தை சீனக் கவிதையின் பொற்காலமென்று சொல்கிறார்கள். டூ ஃபு, லீ போ இருவரும் இந்தக்காலத்தைச் சேர்ந்தவர்கள். இன்று வரை போற்றப்படுகிறவர்கள்.. மது, மலைகள், மலர்கள் பற்றிய கவிதைகளோடு டூ ஃபு அரசியல் சமூக நிலவரங்களைப் பற்றிய கவிதைகளையும் எழுதியிருக்கிறார். லீ போ என்ற கவிஞர் 10 லிட்டர் மதுவைக் குடித்துவிட்டு உடனே 100 கவிதைகள் எழுதுவாரென்று சக கவிஞர்கள் கிண்டலடிப்பார்களென்று ஒரு செய்தி கூறுகிறது.
அடுத்து இசைக்கேற்ற கவிதைகள் பாடல்களாகின. அவை கவிதைகளெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டன. யுவான் மற்றும் மிங் காலகட்டதில் கவிதைகள் இலக்கணம் மீறியும் இலக்கணத்தை ஒட்டியும் எழுதப்பட்டன. இக்காலத்தில் உரைநடை புழக்கத்தில் வர, கவிதைகள் அதிக கவனம் பெறவில்லையென ஒரு கருத்திருக்கிறது. க்விங் கவிதைகள் டாங் கவிதைகளுக்கு அடுத்த நிலையைப் பெறுகின்றன.
நவீன கவிதை அல்லது புதுக்கவிதை சீனாவில் 1920களில் உருவாகிறது. புதுக்கவிதை தமிழில் ஏற்கப்படாததுபோல சீனாவிலும் ஏற்கப்படவில்லையென சில நூல்கள் கூறுகின்றன. தற்போது புதுக்கவிதைகளே எழுதப்படுகின்றன. எந்த குறிப்பிட்ட பாணியிலும் அடைபடாதவை இந்தக் கவிதைகள். அப்படியென்றால் பழங்கவிதைகளுக்கும் புதுக்கவிதைகளுக்கும் என்ன வேறுபாடு? சீன புதுக்கவிதை சாமான்ய மனிதர்களைப் பாடுகிறது. பேச்சுமொழியை எழுத்து மொழியாக்குகிறது. பழமையான மொழியைத் தவிர்க்கிறது. ஹீ ஷீ இதன் முன்னோடி.
1949ல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, சீனாவில் எழுத்தாளராக- கவிஞராகவிருக்க, மிகுந்த துணிச்சல் தேவையாயிருந்தது. எப்போது புகழ்வரும் எப்போது போலீஸ் வருமென்று சொல்லமுடியாது. அதையும் மீறி கவிஞர்கள் குழுக்களாக இயங்கியிருக்கிறார்கள். இவர்களில் மிஸ்ட் என்னும் குழு மாவோவக்கு முன்னும் பின்னும் ஆட்சியாளர்களுக்கு எதிரான கவிதைகள் எழுதினார்கள். இவர்கள் நடத்திய ‘இன்று’ இதழ் தடை செய்யப்பட்டது. ஷீ ஷீ என்ற கவிஞர் மீது போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டெங் ஷீயா பிங் ஆட்சிக்கு வந்த்தும் பல கவிஞர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
சமகால சீனக்கவீதைகள் தொகுப்பு : கலாச்சாரப்புரட்சி, டினாமென் சதுக்கப் போராட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கான விதிமுறைத் தளர்த்தல்கள், சீனர்களுக்கு வெளிநாடு செல்லும் அனுமதி, உலக நாடுகளின் புத்தகங்கள் கிடைத்தல், கணினி மற்றும் இணைய வசதிப் பெருக்கம் – இவை போன்றவை நிகழ்ந்த காலகட்டமான 1966 முதல் 2009 வரையான கவிதைகளைத் தன் உள்ளடக்கமாகக் கொண்ட புத்தகம்.
இதிலுள்ள கவிஞர்கள் அவரவர் மனோதர்மத்துக்கேற்றவாறு கவிதைகள் எழுதியுள்ளனர். பெரும்பாலான கவிதைகள் எளிமையாக உள்ளன. புரியும்படியாகவும் உள்ளன. பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஒருவர் கவிதை சொன்னால் எப்படி இருக்குமோ அது போலுள்ளன.. கவிதை மொழி ஏறக்குறைய பேச்சு மொழியென்றே சொல்லலாம். கவிதையின் பாடுபொருள்கள் கொசு, சூர்யகாந்தி, நட்பு, இராணுவ வீரனின் துயரங்கள், பூக்காத மரங்கள், வெக்கை, மணமுறிவு போன்றவை. தனிமனித வாழ்க்கையின் பிரதிபலிப்புகள். இதில் கொசு கவிதையில் படிமங்கள் நன்றாக வந்துள்ளன. பெண்ணுடல் பற்றிய கவிதைகளோ அரசியல் கவிதைகளோ இந்த நூலில் தொகுக்கப்படவில்லை. காதல் கவிதைகள்கூட காசுவலாக, மேம்போக்காகப் பேசப்பட்டிருக்கின்றன. தீவிர உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத கவிதைகள்.
.
மேற்கத்திய தாக்கங்கள் தென்படாத சீன மண்ணின், சீன மனதின் சித்திரங்கள் என்று இந்த கவிதை தொகுப்பைக் குறிப்பிடலாம். இதில் தொகுக்கப்பட்ட கவிஞர்கள் உயிரோடிருப்பவர்கள். பேராசிரியர்கள் அல்லது உயர் பதவியிலிருப்பவர்கள். சாதாரண தொழிலாளிகள், பின்தங்கிய மக்களின் கவிதைகள் எதுவும் இந்தத் தொகுப்பிலில்லை.
இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இரு கவிதைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளவை. இந்தக் கவிதைகளின் இயக்கம், குரல், கருப்பொருள், அங்கதம், சமூக அரசியல் கண்ணோட்டம், பதிவுத் திறன், கருப்பொருள், வடிவம் ஆகிய அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.
இந்தக் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் பெரும்பாலும் அமெரிக்கர்கள் ( அமெரிக்க சீனர்களல்ல) ஐரோப்பியர்கள் செய்திருக்கிறார்கள். இவர்களில் பலர் சீன மொழியில் அபார தேர்ச்சி பெற்றவர்களென நூலின் தொகுப்பாளர் குறிப்பிடுகிறார்.
வெவ்வேறு போக்குகள் கொண்ட இரு கவிதைகளின் ஆங்கிலவழி தமிழாக்கம்
யாங் ஜியான்
அவர்கள் சொன்னார்கள்
இந்த எர்ஹுவின் நரம்புகளைக் கிழித்தெறி
க்வின்னை சுக்கு நூறாக்கு
அப்படி நாம் இசையையிழந்தோம்
அவர்கள் சொன்னார்கள்
உயரமான இந்த மரத்தை சாய்த்துவிடு
வயதானவைகளையும்
அதனால் நாம் குளிர்நிழலையிழந்தோம்
அவர்கள் சொன்னார்கள்
இந்தக்கல்தச்சனையும்
அந்த மரவேலைக்காரனையும்
விட்டொழி. இப்போதே.
அதனால் அழகான கற்பாலங்களில்லை
கம்பீரமான வீடுகளில்லை
அவர்கள் சொன்னார்கள்
இந்த ஞானிகளின் புத்தகங்களையெரியுங்கள்
துறவிகளையும் கன்னிகாஸ்த்ரீகளையும் துரத்துங்கள்
அதனால் நமக்கு தார்மீகமில்லை
மனச்சாட்சியும்.
1967ன் அழிவில் பிறந்த
நான் அழிவைப் பார்க்க சபிக்கப்பட்டேன்
வரைவில் நோய்வாய்பட்டேன்
என் கண்கள் அழிவைத்தவிர வேறெதையும் அறிந்த்தில்லை
நீங்களெல்லோரும் சாவதைப் பார்த்த
எனக்கு சாவு விதிக்கப்படவில்லை
என்விதி இடிபாடுகளிலிருந்து பேச
புழுதியால் இறுகப் பிணைக்கப்பட்ட
இரும்புக்கதவை அகலத்திறக்க.
எர்ஹு – 2 நரம்புகளாலான இசைக்கருவி – வயலினைப்போல் வாசிப்பது
க்வின் – 7 நரம்புகள் கொண்ட இசைக்கருஙி
யாங் சியான் – கன்பூசியக் கோட்பாடுகளை வெளிப்படையாக பின்பற்றுபவர். மனதளவில் பௌத்தர்.
மாவோ – சீன மூலம் யி ஷா
அண்மைக்காலமாக
அயல்நாட்டுப் பிரசுரமொன்றை
படித்துக் கொண்டிருக்கிறேன்
மா சீ டாங்கின் வாழ்க்கை வரலாறு
தினமும் சில அத்தியாயங்களாக
பலமுறை,
படித்துக்கொண்டே செல்கையில்
எனக்குள் சிரித்துக்கொள்வதை
தவிர்க்கமுடியவில்லை.
ஏனென்றால்
நான் வியப்புடன் கண்டுபிடித்த
மாவோவின் சிந்தனைமுறைகளை
குரலின் த்வனிகளை
நடிக்கும் பழக்கத்தை
பலவிதங்களில் பிரயாசைப்பட்டு
பின்பற்றிய
அந்த மனிதனை அது ஞாபகப்படுத்தியது
உண்மையில் அவனைப்போன்றவர்கள்
அதிக எண்ணிக்கையிலிருந்தார்களென்பதை
நான் கண்டுபிடித்தேன்
அவர்களில் பலர் என்னைச்சுற்றிலுமிருந்தார்கள்
அவர்கள் நடுவில்
என் தந்தைகூட இருந்தார்
நான் மேலும் படிக்க
அவர்களிலிருந்து மாறுபட்டவனாய்
என்னையறிந்தேன்
அதைவிட அச்சுறுத்தியதென்னவென்றால்பின்பற்றும் எந்த முயற்சியுமில்லாமல்
நான் அவரைப்போலவேயிருந்தேன்
வூ வென் ஜியான் என்ற இயற்பெயர் கொண்ட யி ஷா 1966ல் பிறந்தவர். இந்தக்கவிதை 2008ல் எழுதப்பட்டது.
கடைசியாக இரண்டு விஷயங்களைச் சொல்லாது போனால் எனக்கு மண்டை வெடித்துவிடும்.
தமிழகம் போல சீனாவிலும் ஆத்மதிருப்திக்காக மட்டுமே கவிதையெழுதுகிறார்கள். சீனாவிலும் கவிதைப் புத்தகங்களை வாங்குவாரில்லை.
(1) http://www.ustr.gov/countries-regions/china
(2) http://www.reuters.com/article/2012/02/10/usa-economy-idUSL2E8DA7C320120210
(3) http://www.chinadaily.com.cn/bizchina/2011-07/21/content_12951326.htm