ஒரு மகாராணியின் நினைவுக் குறிப்புகள்

அது கண்டதும் காதல் என்றே நம்புகிறேன். என் கண்ணெதிரே இருந்த மட்டமான ‘Atkins diet’ புத்தகத்திற்கு அருகே அது அமர்ந்திருந்திருந்தது. அதன் ஆரஞ்சு வண்ண அட்டையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட மஞ்சள் நிறத்தில் முகலாய பாணி ஜன்னல் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. அதன் நடுவில் புத்தகத்தின் தலைப்பு : “A Princess Remembers: The Memoirs of the Maharani of Jaipur”. மகாராணி காயத்ரி தேவியின் இந்த சிறிய புத்தகத்தை நான் நிச்சயம் தவறவிடப் போவதில்லை. பெண் அரசியல்வாதிகளில் ஒரு சகாப்தமாக கருதப்படும் இவரது இந்த நூலுக்கு இந்த பழைய புத்தக கடையில் இருந்து உடனடியாக விடுதலை பெற்றுத்தர முடிவு செய்தேன். அதையெடுத்து, அதன் அட்டையின் மீது படிந்திருந்த தூசை தட்டினேன். அடுத்த சம்பிரதாயம்: பேரம் பேசுவது. அந்தக் கடையின் விற்பனையாளர் முப்பது ரூபாய் விலை சொன்னார். விஷயம் அறியாதவர்; அந்தப் புத்தகத்தின் விலையை அதன் எடையை வைத்து தீர்மானித்தார்.

ஒருவகையில் அந்த பழைய புத்தகக்காரரும் சரியாகத்தான் தீர்மானித்திருந்தார். புவியீர்ப்பு சார்ந்தும், வாசிப்பின் வசதியை சார்ந்தும் அந்தப் புத்தகம் லேசானதுதான். ஆனால், அந்தப் புத்தகத்தை வேகமாக புரட்டிச் செல்லும் யாரும் அந்தப் பெண்ணின் நினைவுகள் கசியவிடும் மாயஜாலத்தில் ஈர்க்கப்படுவர். புத்தகத்தின் எந்த விஷயம் இந்த மாயஜாலத்தை நிகழ்த்துகிறது என்று சொல்வது கடினம். புத்தகம் நம்முன் விரிக்கும் காலனிய அரசின் கடந்த காலம், அரச குடும்பம் குறித்த சித்திரம், மகாராணியின் ஈர்க்கும் ஆளுமை அல்லது அவரது எழுத்தில் வெளிப்படும் குறும்பான நகைச்சுவை; இவற்றில் எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். இருந்தும் அவரது இந்த அனுபவக்குறிப்பை படிக்கும் வாசகரது மனதில் ஒரு வித இரக்கமும், கூடவே அவர் மீது பாசவுணர்வும் சுரந்தபடியேயிருக்கும்.

புத்தகத்தை கூச் பேஹாரின் (Cooch Behar) இளவரசர்களும், இளவரசிகளும் தங்கள் பாட்டான்மார்களை (பரோடாவின் மகாராஜாவும் மகாராணியும்) பார்க்க பரோடா சென்ற பால்யகால ரயில்பயணங்கள் குறித்த நினைவுகளுடன் துவங்குகிறார் காயத்ரி தேவி. ரயில் பயணங்கள் குறித்த கூச் பேஹாரின் அவருடைய வர்ணனைகள் இனிமையானவை. தங்கத்தாலான நாக்கு வழிப்பான்கள் குறித்து அவர் தாயாரின் அளவிற்கதிகமான அக்கறையும், டிஃபன் கேரியர்களும், பயணத்தின் இடையே தொலைதூர ஊர்களில் நடக்கும் விருந்துகளும், ரயில் பெட்டியின் ஆடம்பரமும், பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் பட்டாளமும் கடந்த காலத்தின் அற்புதமான ஒரு படிமத்தை நம் கண்முன் விரிக்கிறது. இதிலிருந்து மீள்வதற்குள் பரோடா லஷ்மி விலாஸ் அரண்மனையின் ஆடம்பரமும், தனது காதல்கதையுடன் போட்டி போடக்கூடிய காயத்ரிதேவியின் பெற்றோர்களின் காதலுடனும் வாசகருக்கு அறிமுகம் நடக்கிறது. ‘ஏன் இத்தகைய காதலை வைத்து யாரும் வரலாற்றுப் படங்கள் எடுக்கவில்லை?’ என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும், இந்த ஆடம்பரங்களை குறித்துப் பேசும்போது ஒரு தவிர்க்கமுடியாத நெருடலும் இருக்கவே செய்கிறது. மகாராஜாக்களின் இத்தகைய ஆடம்பரமான வாழ்க்கையுடன் அவர்கள் ஆட்சியில் இருந்த எளிய மக்களின் வாழ்க்கையை மனம் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த ராஜ வம்சம் வெளியுலகத்தோடு தொடர்பில்லாத வேறொரு உலகத்தில் வாழந்தார்களோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

நான் என்னுடைய இயல்புணர்ச்சியின் (instinct) வசப்பட்டு இப்படி எழுதுவதாகக் கூட ஒருவர் சொல்லலாம். அதுவும் போக, சிறிதளவு பொறாமையும், இகழ்ச்சியும் இதில் கலந்திருப்பதாகக் கூட சொல்லாம். ஒருவேளை, ‘தன் குடிமகனான ஏழை விவசாயி ஒருவன் பஞ்சத்தால் தன்னுடைய இருப்பிற்கே போராடும்போது, அவனது வரிப்பணத்தில் இப்படி ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ இந்த ராஜ வம்சத்திற்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று ஒரு கேள்வியை எழுப்பி, வாசகரை பொதுவான சோஷியலிச சிந்தனைப் பாதையில் கொண்டு செல்லும் தவறைக் கூட மேற்சொன்ன பத்தியில் செய்திருக்கலாம்.

ஆனால், நான் நிச்சயம் ஒரு எளிய விஷயத்தை ஊதிப் பெரிதாக்கவில்லை. மகாராணியின் பிறப்பிலிருந்து, அவரது வளர்ப்பு மற்றும் அவரது திருமணம் வரை, அதிலிருந்து ஊதாரித்தனமான செலவு நிச்சயம் அழியாத ஒரு ஆச்சரியத்தை வாசகருக்கு ஏற்படுத்தக் கூடியது. மகாராணியும்,  அவர் குடும்பமும் வருடத்தின் பாதியை ஐரோப்பாவில் கழிக்கின்றனர். அவர்களது பேச்சுகள் முழுக்க Bentley கார்களும், சூதாட்ட விடுதிகளும், விருந்தினர்களுக்கான முடிவிலா கேளிக்கைகளும் நிறைந்திருக்கின்றன. ஐரோப்பாவில் அவர்களுக்கென்று விருந்தினர்கள் யாரும் இல்லாதபோது இந்தியாவிற்குத் திரும்பி இங்குள்ள விருந்தினர்களை உபசரிக்கின்றனர். தனி விமானத்திலோ அல்லது தங்களுக்கென்றே பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட P&O நிறுவனத்தின் கப்பலிலோ பயணிக்கின்றனர். இந்த களேபரங்களுக்கிடையே தங்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ள அவர்களுக்கு எப்படி நேரமிருந்திருக்கும்?

படிப்பவரின் வயிற்றெரிச்சலை கிளப்பிவிட்ட பாவத்தைக் கழுவும் விதமாக, தானும் அரண்மனையின் இந்த ஆடம்பரங்களைக் கண்டு ஒரு சமயம் ஆச்சரியப்பட்டதாக மகாராணி தெரிவிக்கிறார். ஜெய்ப்பூர் அரண்மனையின் சேமிப்பு-கிடங்குகள் குறித்த தனது ஆச்சரியத்தையும், அந்த கிடங்குகளில் அவர் கண்ட ஒயின்கள், பிற மதுபானங்கள், சிகரெட், தேனீர், பிஸ்கட், ஷாம்பூ, கிறிஸ்துமஸ் வெடிபொருட்கள், சாக்லேட்டுகள், இன்னும் பலவற்றை குறித்தும் விவரிக்கிறார். மகாராணிக்கென்று பிரத்யேகமாக ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெறப்பட்டு செறிவூட்டப்பட்ட ‘எவியன்’ (Evian) குடிநீரைத் தனது அரண்மனையின் பணியாட்களும் அவர்களின் நாய்களும் கூட பயன்படுத்தியதை கேள்விப்படுகிறார். ‘ஜெய்பூரின் மூன்றாவது அரசி’யாக பதிவியேற்றவுடன், காயத்ரி தேவி ஐரோப்பாவில் தான் பயின்ற வீட்டுப்பரமாரிப்பு குறித்து பயிற்சியைக் கொண்டு அரண்மனையின் செலவைப் பாதியாகக் குறைக்கிறார். ராணி இந்தப் பயிற்சிகளை ஐரோப்பாவில் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பின்போது கற்றுக் கொண்டார். இது குறித்த கதைகள் நம்மை கூச் பேஹாரின் இளவரசிக்கும் ஜெய்பூரின் மகாராஜாவுக்கும் இடையே முகிழ்த்த காதலுக்கு இட்டுச் செல்கிறது.

இரண்டாம் சவாய் மான் சிங் (ஜெய்பூர் மகாராஜா) மற்றும் இளவரசி காயத்ரி தேவிக்குமிடையே இருந்த காதல் பழங்கதைகளிலும், இலக்கியங்களிலும், திரைபடங்களிலும் மட்டுமே காணக் கிடைக்கக் கூடியது. அது குறித்த குறிப்புகள் இந்த புத்தகத்திற்கு தனி அழகைச் சேர்க்கின்றன. ரகசிய காதல் கடிதங்களின் பரிமாற்றங்கள், ரகசிய சந்திப்புகள், ஒன்றாக சேர்ந்து திரைப்படம் பார்ப்பது, பெற்றோரிடமிருந்து கிளம்பும் எதிர்ப்பு இப்படியான விஷயங்கள் இளவரசியின் இளவயதுக் காதலில் ஏற்படுகின்றன. இப்புத்தகத்தில் மகாராஜா ஒரு சராசரித்தன்மையை மீறிய பேராளுமையாக வெளிப்படுகிறார். அரச வம்சத்தின் பல கட்டுப்பாடுகளை உடைக்க விரும்பும் காயத்ரி தேவிக்கு ராஜா தனது முழு சம்மதத்தையும் வழங்குகிறார். ராஜ வம்சப் பெண்கள் அனைவரும் திரைக்குப் பின் இருக்கும் வழக்கத்தை காயத்ரி தேவி உடைக்கிறார், ராஜாவின் முழு ஒத்துழைப்புடன்.

மகாராஜாவின் முந்தைய இரண்டு மகாராணிகளும் திரைக்குப் பின்னே இருந்தனர். ஒருவேளை ஐரோப்பிய கல்வி பெற்ற காயத்ரி தேவியை மகாராஜா விரும்பியதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஏற்கனவே இருமுறை திருமணமான மகாராஜாவிற்கு காயத்ரி தேவியுடனான திருமணம் காதலினால் ஏற்பட்டதானாலும் இந்தத் திருமணம் சில வகைகளில் அவருக்கு நடைமுறை சவுகரியங்கள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. விளையாட்டு, வேட்டையாடுதல் மற்றும் பொழுதுபோக்கு மீதான தன்னுடைய ஆவலை பகிர்ந்து கொள்ளும் அற்புதத்துணையாக காயத்ரி தேவியை அவர் நினைத்திருக்கலாம். ஆனால் நிச்சயம் இது ஒரு சுயநலம் நிரம்பிய முடிவல்ல. தன்னுடைய விடலைத்தனத்தால் மட்டுமே ஒரு காதலை ஏற்று, திருமணத்திற்குப் பின் மகாராஜாவின் நிழலிலேயே தனது வாழ்க்கையைக் கழிக்கும் ஒரு இளவரசியின் கதையல்ல இது. காயத்ரி தேவி அரசியலில் பங்கேற்க முடிவெடுக்கும்போது மகாராஜா அமைதியாக (சில சமயங்களில் வெளிப்படையாகவும்) தனது ஆதரவை தெரிவிக்கிறார். மகாராணியின் அரசியல் பயணங்களில் அவரது சாதனைக்குப் பெரும் துணைபுரிந்தாலும் மகாராஜா எப்பொழுதும் ராணியின் அரசியிலில் குறுக்கிடுவதில்லை.

மகாராணி காயத்ரி தேவி அரசியலில் அப்போதைய ஆதிக்க சக்தியான இந்திய தேசிய காங்கிரஸை எதிர்த்து ஏன் களம் இறங்கினார் என்பதை அனுமானிப்பது ஒன்றும் கடினமானதல்ல. அரசாட்சியில் குறைந்து வரும் தனது கணவரின் அதிகாரம், அதனால் சரியும் ராஜ வம்சத்தின் கெளரவம் – இவையிரண்டும் முக்கிய காரணங்கள். 1956-ஆம் ஆண்டு ஜெய்பூர் மகாராஜா ராஜபுதானா பிராந்தியத்திற்கு தான் ராஜபிரமுகராக (rajapramukh) இனி இருக்கப்போவதில்லை என்று மத்திய அரசிற்குத் தெரிவிக்கிறார். அதற்கு பிரதமர் நேரு  ‘அரசியல் சட்ட சாசனத்தை இப்படியெல்லலாம் யாரும் மிரட்டிவிட முடியாது’ என்று காட்டமாகப் பதில் அளிக்கிறார். அரச வம்சத்தவர் இதன் மூலம் தங்களுக்கு விடுக்கப்பட்ட செய்தியை அறிந்து கொள்கின்றனர். அவர்கள் ஒரு ‘புதிய நிதர்சனத்தை’ உணரத் துவங்குகிறார்கள். அதன்பின் அவர்களுடைய பழைய படோடாபங்களும் ஆடம்பரமும் அவர்களிடமிருந்து விலகத் துவங்குகின்றன. ராம்பாக் அரண்மனை ஒரு உயர்தர ஹோட்டலாக மாற்றப்படுகிறது. தேவைக்கதிகமான பணியாளர்களுக்கு பணிஓய்வு அளிக்கப்பட்டது. பிரத்யேக தனி விமானங்கள் வேறு வழியின்று விலக்கப்பட்டன. அவர்களின் யானைக்கூடங்கள் (philkana) கூட காலிசெய்யப்பட்டன.

ஆனால் காயத்ரி தேவி அரசியலில் இறங்க இவை மட்டும் காரணங்கள் கிடையாது. பெருகி வந்த ஊழல், அரசு அளிக்கும் பயன்களைத் தன் சுற்றத்தாருக்கு மட்டும் அளிக்கும் புது ஆளும் வர்க்கத்தின் போக்கு, இவையனைத்தும் ராணியை அரசியலை நோக்கி தள்ளியிருக்கும். ஜெய்ப்பூரின் வரலாற்று சிறப்புகள் அழிக்கப்பட்டபோது, அது குறித்து முறையிட மகாராணி மாநிலத்தின் முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதி கேட்டு நிற்கவேண்டியிருந்தது.

காயத்ரி தேவியின் அரசியல் செயல்பாடுகள், அவரது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கும் முறையாகவும், அப்போதைய காங்கிரஸ் அமைப்பின் நடவடிக்கைள் குறித்த தனது கசப்பை வெளியிடும் வடிவமாகவும் இருந்தன. காங்கிரஸ் குறித்த அவரது கசப்பிற்கான காரணம், சரியும் தன்னுடைய கெளரவத்தாலும் சுதந்திர இந்தியாவின் அரசு அரசாட்சி குறித்த தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனதுதான். இதன் அர்த்தம் நேருவின் அதிகாரத்துவம் மற்றும் பொன்னுலக கனவுகளையும் எதிர்த்த ராஜாஜியின் கருத்துக்களால் அவர் ஈர்க்கப்படவில்லை என்பதல்ல. அவரது அரசியல் பிரவேசம் நிகழ ராஜாஜியின் கருத்துக்களால் அவர் ஈர்க்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணம். இருந்தும் அரசியலில் அவரை பெருமளவில் செலுத்தியது என்னவோ காங்கிரஸ் மீதான கசப்புதான். காயத்ரி தேவி தன்னுடைய அரசியல் சூழலை வைத்தே வருங்காலத்தில் காங்கிரஸ் ஒரு (தனியார்) பெருநிறுவனமாக மாறிவிடும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் பதிவுசெய்கிறார். இந்த தீர்க்கதரிசனம் ஆச்சரியப்பட வேண்டியது. ஏனெனில் இன்றும் கூட டெல்லியை சேர்ந்த (ஊடக)அரட்டையாளர்கள், பல்வேறு தெளிவான விவாதங்களுக்குப் பிறகும், கடுமையான மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களைப் போல் முகபாவனையை காட்டி ‘இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது’ என்று சொல்லிவிடுவார்கள்.

தான் சுதந்திரா கட்சியில் சேரவிருப்பது குறித்து மகாராஜாவிடம் காயத்ரி தேவி சம்மதம் கேட்கிறார். ராஜாவும் எந்த யோசனையுமின்றி ராணியின் இந்த முடிவிற்கு சம்மதம் தெரிவிக்கிறார். ராணியின் இந்த முடிவிற்கு பின்னால் இரு காரணங்களில் ஏதாவது ஒன்றுதான் இருக்க முடியும் : அப்போது வருகை தரவிருந்த ராணி இரண்டாம் எலிசபத் மற்றும் அரசர் பிலிப் ஆகியோரிடம் பிரிட்டிஷ் அரசதிகாரத்துடன் ஒப்பிடுகைகளில் ஜெய்ப்பூர் அரச வம்சத்தின் சரிவு அவரை தூண்டியிருக்கவேண்டும். அல்லது, காங்கிரஸ் பெரு நிறுவனத்தால் தனிவாழ்விலும் அரசியல் வாழ்விலும் துன்பங்களை அனுபவித்து அதனால் ஏற்பட்ட கோபத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவும் இருக்கலாம். சுதந்திரா கட்சியில் சேர முடிவெடுத்தவுடன் அரச வம்சத்திற்கே உரிய ராஜ-மிடுக்குடன், ஒரு உள்ளூர் சுதந்திரா கட்சி பிரமுகரை தன் அரண்மனை விருந்திற்கு அழைத்து அக்கட்சியின் படிவங்களில் முறைப்படி கையெழுத்திடுகிறார். அவரது முடிவின் ‘தைரியத்தை’ பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக ராஜாஜியின் கடிதம் ஒன்று அவருக்கு வருகிறது. இது பற்றி எழுதும்போதே இனி தான் எத்தகைய துன்பங்களை சந்திக்கவேண்டியிருக்கும் என்று அறிந்திருக்கவில்லை என்று காயத்ரி தேவி ஒப்புக்கொள்கிறார்.

பாராளுமன்ற தேர்தலின் போது காயத்ரி தேவியை அவரது கட்சி ஜெய்பூர் தொகுதியில் போட்டியிட கேட்டுக் கொள்கிறது. ஆனால் அவர் எந்த ஒரு பதவியை விரும்பியும் தான் அரசியலில் ஈடுபட வில்லை என்று சொல்லிவிடுகிறார். ‘இது ஒரு அரசியல்வாதியின் வழக்கமான ‘அதிகார மறுப்பு’ நாடகமோ?’ என்று சந்தேகம் எழுந்தாலும் எனக்கு அவரது கூற்று உண்மையானதாகவே தோன்றுகிறது. ஆனாலும் கட்சியின் வேண்டுகோளின் படி 1962 மற்றும் 67-ல் நடந்த தேர்தல்களில் போட்டியிடுகிறார்.

புத்தகம் இந்த இரு தேர்தல்கள் குறித்தும் பேசுகிறது. மகாராணியின் முதல் அரசியல் பிரச்சாரம் குறித்த முழு தகவல்களும் வர்ணணைகளும் நமக்கு கிட்டுகின்றன. குறிப்பாக தனது அரண்மனை சுகத்தினை விடுத்து அவர் தொலைதூர கிராமப்புற குடிசைகளுக்கு செல்ல நேர்ந்தது குறித்து அறிந்துகொள்ளமுடிகிறது. இங்கேயும் நம்மை உறுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால், தேர்தல் பிரசாரம் குறித்து பேசப்படும் வரை மாநிலத்தின் உட்பகுதிகளும் அம்மக்களின் வறுமை நிலை குறித்தும் பேசப்படவில்லை என்பதுதான். இதன் அர்த்தம் ஜெய்ப்பூர் அரசர்கள் தங்கள் பொறுப்புகளை முற்றிலும் உதறிவிட்டார்கள் என்பதல்ல. உண்மையில் தங்கள் மக்களின் பால் அவர்கள் கொண்டிருந்த நேசம் குறித்த பல சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன. ஆனால், இந்த அரச வம்சத்தவர்கள் தங்கள் மக்களை இத்தகைய பிற்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளியதில் தங்களுக்கும் ஒரு பங்குண்டு என்பதை ஏற்பார்களா என்று கேள்வி எழுகிறது.

தனது முதல் தேர்தலில் அவர் அசாதாரண பெரும்பான்மையுடன் வெற்றி பெறுகிறார். 1,75,000 வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுகிறார். இதன் காரணமாக, ஜெய்பூர் அரச வம்சம் மீண்டும் ஒரு முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது. அவர்களின் இதற்கு முந்தைய கின்னஸ் சாதனை காயத்ரி தேவியின் மகளின் கல்யாணத்திற்காக செய்யப்பட்ட ஆடம்பர செலவு குறித்தது. ஆனால் இவ்வெற்றியைத் தொடர்ந்து காயத்ரி தேவிக்கு காத்திருப்பதென்னவோ சோதனைகள்தான். அற்பமான விஷயங்கள் முதற்கொண்டு தன் கட்டுபாட்டிற்குக் கீழ் வராத விஷயங்கள் உட்பட அனைத்து விஷயத்திலும் அவர் தொடர்ச்சியாக யுத்தம் புரிகிறார். இதனால் மனச்சோர்வும் கையறு நிலையும் ஏற்படுகிறது. அவர் முன்னாள் மகாராணியாக இருக்கலாம், தன் ஊரில் பெரும் பிரபலாமாகவும் தன் மக்களின் அன்பிற்கும் கவனிப்பிற்கும் உரியவராக இருக்கலாம், ஆனால் புது தில்லியில் அவர் 534 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். ஆனால் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தையோ, மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தோற்கடிப்பதையோ அவரால் தடுக்கமுடியவில்லை.

அடுத்த தேர்தலின் போது(1967) காங்கிரஸ் கொஞ்சம் சுதாரித்துக் கொள்வதை நாம் அறியமுடிகிறது. சமதர்ம சமூகத்தை வேண்டும் காங்கிரஸ் அனைத்து மக்களின் ஓட்டும் ஒரே நபருக்கு கிடைத்துவிடக் கூடாது என்று நினைத்தோ என்னவோ தன்னுடைய தொகுதி சீரமைப்புத் திட்டத்தின் மூலம், சென்ற முறை ஜெய்ப்பூர் பகுதியில் இருந்த பல இடங்களை நீக்கிவிட்டு புதிதாக ஒரு ஜெய்ப்பூர் பாராளுமன்றத் தொகுதியை உருவாக்கியது. காங்கிரஸின் இந்த திட்டம் பலித்தது. இந்த முறை காயத்ரி தேவியின் பெரும்பான்மை பலம் வெகுவாக குறைந்தது. இருந்தும் ஜெய்ப்பூர் தொகுதியை அவர் தக்கவைத்துக் கொண்டார். மாநில சட்டசபையை பொறுத்தவரை காங்கிரஸால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திரா கட்சியின் ஆட்சி அமையாத படி எப்படியெல்லாம் தடைகளை ஏற்படுத்தினார் என்று மகாராணி விவரிக்கிறார். இந்த விவரணையில் சட்ட ஒழுங்கை குலைக்கும் வகையில் தேவையில்லாத காவல்துறையின் துப்பாக்கிச்சூடும், அதன் விளைவாக உயிரிழப்புகளும் நடந்ததைக் குறிப்பிடுகிறார். மேலும், நாம் இன்றளவும் காணும் ஒரு விஷயத்தை, சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு பேரணியாக ஆளுநரிடம் அழைத்துச் சென்று சட்டசபையில் தங்களுக்குள்ள ‘எண்ணிக்கை பலத்தைக்’ காட்டும் போக்கை காயத்ரி தேவி பதிவு செய்கிறார். இவையனைத்தும் இன்றளவும் நம்மை ஆளும் காங்கிரஸ் எனும் பெரு அமைப்பின் மாறா தன்மையையும், நம் துரதிருஷ்டத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

காலாவதியான பழைய ராஜ வம்சத்தாருக்கு காங்கிரஸின் சோஷியலிச கனவுலகு நோக்கிய பயணம் குறித்த தங்களின் எதிர்ப்பை சரியான முறையில் முன்வைக்க கிடைத்த ஒரே வாய்ப்பாக சுதந்திரா கட்சி அப்போது இருந்திருக்கலாம். தான் இருந்த காலத்தின் சிந்தனையை மிஞ்சிய ஒரு பொருளாதார மற்றும் சமூக பார்வையை முன்வைத்த கட்சி சுதந்திரா கட்சி. ஆனால் இந்திய வாக்காளர்களால் இந்தக் கட்சி எதனால் நிராகரிக்கப்பட்டது என்று வியப்பு எழுத்தான் செய்கிறது. ஒரு வேளை, அக்கட்சியின் அமைப்பே கூட அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்திருக்ககூடும். சுதந்திரா கட்சியின் தலைமை பெருமளவிற்கு ராஜ வம்சத்தாரும், பெரு முதலாளிகளும் மற்றும் ‘உயர் சாதி’ வகுப்புகளாலும் நிரம்பியிருந்தது. இவர்களின் நடவடிக்கைகள் அவர்கள் காலத்திற்கே ஒத்துவராத மிக பழைய காலத்து விழுமியங்களை ஒட்டி இருந்தது. உன்னதம், ஒழுங்கு, பொதுவாழ்வில் நேர்மை போன்ற விஷயங்களை முன்வைத்த இவர்களால் ஓட்டு அரசியலில் நிலைத்து நிற்க முடியவில்லை. அவர்கள் அரசாட்சியை குறிவைத்து நடக்கத் துவங்கியிருக்கலாம், ஆனால் அவர்கள் காங்கிரஸ் எனும் பெரு அமைப்பின் போர் வீரர்களை யுத்த களத்தில் சந்திக்க வேண்டியாதாயிருந்தது. அந்த யுத்தத்தில் அவர்களுக்கு தோல்வி நிச்சயம். இது குறித்து விரிவாக பேச இது தருணமல்ல. இது மகாராணியின் வாழ்வை பேசும் தருணம். அதனால் மீண்டும் அதே இடத்திற்கு திரும்புவோம்.

60-களின் இறுதிகளில் விவரிக்க அவருக்கு மகிழ்ச்சியான கதைகள் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. மகாராஜா இரண்டாம் சவாய் மான் சிங் ஒரு போலோ (polo) ஆட்டத்தின் போது உயிரிழக்கிறார். அதையடுத்த இரண்டே ஆண்டுகளில் இருபத்து ஆறாவது சட்டத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மன்னர்களின் உரிமைகள், பட்டங்கள் மற்றும் மானியங்களை இந்த மசோதா ரத்து செய்கிறது. இதன் நகைமுரணை நாம் கவனிக்க வேண்டும்: பாராளுமன்றத்தில் இந்த மசோதா விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் அப்போது ஜெய்ப்பூரின் மகாராஜாவாக இருந்த சவாய் பவானி சிங், பாராசூட் ரெஜிமெண்ட்டின் வீரர்களுடன் எதிரி நாட்டின் உள்ளே வெகுதூரம் ஊடுருவி சென்று போரிட்டுக் கொண்டிருந்தார். தில்லியிலோ ஒரு புதிய நேரு-காந்திய வம்சாவளி தனது அதிகாரத்தை உறுதி செய்துகொண்டிருந்தது. புகழ்பெற்ற பாரசூட் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த அவர் தனது போர் வீரர்களுக்கு தன் சொந்தப் பணத்தில் ஆடைகளும் ஆயுதங்களும் தருவித்துக் கொடுத்திருந்தார். அவர்களுக்குக் காலாவதியான தளவாடங்ளையே அரசு அளித்திருந்தது.

மகாராணி காயத்ரி தேவி தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னால் சிறையையும், பல சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. இவற்றையெல்லாம் 1976-ல் வெளியான இந்த நினைவுக் குறிப்புகளில் மகாராணி விவரிக்கவில்லை. ஒரு நினைவுக்குறிப்பு சோகமான, இதயம் கனக்கும் வகையில் முடிவது வருத்தமளிக்ககூடியதே. ஆனாலும், காயத்ரி தேவியின் ஆளுமை நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியது. எளிய பொன்னுலக கனவுகளுக்காகவும், வெற்று சித்தாந்தங்களுக்காகவும் தனது பொது அறிவை நிராகரிக்கும் சில அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்ல காயத்ரி தேவி. தன் மரபுவழி நினைவுகளாக (legacy) அவர் விட்டுச்செல்ல தீர்மானித்தது பள்ளிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்களையே. இன்று வரை காயத்ரி தேவி மற்றும் அவரைப் போன்ற பிற ராஜ வம்சத்தவர்களின் அரசியல் மரபுகள் செழுமைப்படுத்தப்பட்டு நம்முடைய வெகுஜன அரசியல் விவாதங்களில் ஒன்றிணைக்கப்படவில்லை. நம் இன்று காண்பதெல்லாம் அவர்களது மீதங்களும், வெள்ளோட்டங்களும், செய்தித்துணுக்குகளும் மட்டுமே. இவை அவர்களைக் குறித்த முழு சித்திரத்தை அளிப்பதில்லை. இந்தக் குறைபாட்டைச் சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். இக்கதைகளில் நம்மை நெகிழ வைக்கும் பிரம்மாண்டமும், அழகும், பழங்கால நினைவுகளும், புராதான வீரம் செரிந்த கலாச்சாரத்தின் அடையாளமும் உள்ளன. நிச்சயம் அந்தப் பணி செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.