இளையராஜாவின் ஜாஸ் வால்ட்ஸ்

மங்கிய ஒளி வெளிச்சத்தில் வெள்ளைக்கார தம்பதிகள் கைகோர்த்துக் கொண்டு பின்னணியில் ஒலிக்கும் இனிமையான பியானோ இசையுடன் சேர்ந்து ஆடுவதைப் பல ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். அந்த நடனத்துக்கும், இசைக்கும் ‘வால்ட்ஸ்’ (waltz) என்று பெயர். இந்த இசை ஐரோப்பாவின் கிராமிய இசைகளில் வேர்கொண்டது. கிராமிய இசையிலிருந்து மெல்ல மெல்ல செறிவாகி மேற்கத்திய சாஸ்திரிய இசையில் முக்கியமான பங்கு வகிக்க ஆரம்பித்தது. ஃப்ரான்ஸ் ஷூபர்ட், பிரெடெரிக் சாபின், ஸ்ட்ராஸ் போன்ற மேதைகள் வால்ட்ஸ் இசையில் அருமையான பல படைப்புகளைக் கொடுத்துள்ளார்கள்.

ஸ்ட்ராஸின் “ப்ளூ டேன்யுப்” எனும் படைப்பை மேற்கத்திய இசையின் மிகப் பிரபலமான வால்ட்ஸ் எனலாம்.  தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில், சிக்கில் சண்முகசுந்தரம் நாதஸ்வரத்தில் வாசிக்கும் மாண்டு ராகத்தில் அமைந்த நோட்ஸ் பகுதியை சுத்தமான வால்ட்ஸ் எனலாம். (இது மதுரை மணி ஐயர் தன் கச்சேரிகளில் மிகவும் பிரபலப்படுத்திய ஒரு துக்கடா. மறுபடியும் கே.வி.மகாதேவன் இத்திரைப்படத்தில் உபயோகித்தார்.) எண்பதுகளில் வெளியாகி இன்றும் பலருக்கு விருப்பப்பாடலாக இருக்கும் எம்.எஸ்.வி இசையமைத்த “மன்னிக்க மாட்டாயா” என்கிற பாடலும், எல்.ஆர்.ஈஸ்வரியை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற “காதோடுதான் நான் பாடுவேன்” என்கிற பாடலும் வால்ட்ஸ் இசையை எளிதில் இனங்காட்டும் பாடல்கள்.

இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஜாஸ் இசை மேலெழுந்து வரத்தொடங்கியது. மேதைமை கொண்ட பல ஜாஸ் இசைக்கலைஞர்கள், எழுதிக்கொடுக்கப்பட்ட இசைத்தொகுப்புகளை வெறுமனே திரும்ப வாசிக்காமல், அவற்றைத் தங்கள் படைப்பூக்கத்தின் மூலம் மேலும் பல மாற்றங்கள் செய்து செழுமைப்படுத்தினார்கள். இதுதான் இந்திய இசைக்கும், ஜாஸ் இசைக்குமான ஒரு முக்கியமான பொதுப்பண்பு. இரண்டிலுமே மனோதர்மம் மூலம் இசைக்கலைஞரால் ஒரு கட்டுக்குள் அடங்கும் பல புதிய மாற்றங்களை spontaneous ஆக மேடையில் தரமுடியும். பொதுவெளியில் பிரபலமாக இருந்த வால்ட்ஸ் இசை, ஜாஸ் இசைக்கலைஞர்களால் சிறு சிறு அழகிய மாற்றங்களுக்குட்படுத்தப்பட்டது.

வால்ட்ஸ் இசை பெரும்பாலும்‘1-2-3’, ‘1-2-3’ என்ற தாளத்தில் சற்று மெதுவான தாளகதியில் வாசிக்கப்படும் ஒன்று. இந்தத் தாளகதியின் வேகத்தைக் கூட்டி, அதில் இரண்டாவது, மூன்றாவது அக்‌ஷரங்களில் ஒரு சிறு அசைவை ஏற்படுத்தும்போது, அதில் அழகான ஜாஸ் சேர்க்கை உருவாகிறது. இதுதான் ‘ஜாஸ் வால்ட்ஸ்’ என்றழைக்கப்படுகிறது. (ஜாஸ் வால்ட்ஸின் நவீனத்தன்மையைக் குறிப்பிடும்வகையில் இது ‘Modern waltz’ என்றும் சொல்லப்படுகிறது.) கீழுள்ள வீடியோவில் இதன் இசைநுட்பத்தை அதன் தாளத்தின் கோணத்திலிருந்து விளக்கியிருக்கிறேன்.

ஜான் கோல்ட்ரேன் இன்று ஜாஸ் இசையின் முக்கியமான இசைக்கலைஞர்களில் ஒருவராக, ஜாஸ் இசையின் பல உச்சங்களைத் தொட்டக் கலைஞராகப் பார்க்கப்படுகிறார். ‘The sound of music’ என்ற பிரபலமான திரைப்படத்தின் ‘My favourite things’ என்ற பிரபலமான பாடலை ஜாஸ் வால்ட்ஸ் வடிவில் ஜான் கோல்ட்ரேன் வாசித்திருக்கிறார். இது ஜாஸ் வால்ட்ஸ் இசையின் முக்கியமான படைப்பாக இன்றும் கருதப்படுகிறது. அதன் நேரடி வாசிப்பை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இதில் பங்களிக்கும் ஒவ்வொரு இசைக்கலைஞருமே மனோதர்மப்படி இசையை மெருகேற்றியபடியும், அதே சமயம் மைய மெலடிக்குத் தன் பங்களிப்பைக் கொடுத்தபடியும் இருப்பதைப் பார்க்கலாம்.

இந்தப் பாட்டின் ஜாஸ் இசையையும், ஜாஸ் வால்ட்ஸ் ஓட்டங்களைக் கேட்டு ரசிக்கவும் கொஞ்சம் பயிற்சி தேவை. ஏற்கனவே நிறைய ஜாஸ் இசை கேட்டிருந்தால் அதை எளிதாக நெருங்கி ரசிக்க முடியும். புதிதாக அறிமுகப்படுத்திக் கொள்பவர்களுக்கான ஒரு நல்ல ஜாஸ் வால்ட்ஸ் இசை இங்கே இருக்கிறது. பர்ட் பாகரேக் என்ற இசையமைப்பாளர், Butch Cassidy and the Sundance Kid என்ற பிரபலமான திரைப்படத்தின் ஒரு காட்சிக்குப் பின்னணியாக அமைத்திருக்கும் இசை இது. South American Getaway எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத்துணுக்கு இளையராஜாவின் இசையமைப்புக்கு மிக அருகில் இருப்பதை உணர முடியும். ஜாஸ் வால்ட்ஸ் பாணியில் அமைக்கப்பட்ட Mr.Bojangles என்ற இந்த பாடலும் மிக முக்கியமான ஒன்று. சமகாலத்திய உதாரணமாக Snatch திரைப்படத்தின் பின்னணி இசையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் Stranglers என்ற இசைக்குழுவினரின் ‘Golden Brown‘ என்ற பாடலைச் சொல்லலாம்.

இந்த வீடியோக்களைப் பார்த்து, ஜாஸ் வால்ட்ஸைக் குறித்து அறிமுகம் கிடைத்தபின் இதை இந்தியப் பின்னணியில் யோசித்துப் பாருங்கள். இதை இந்தியத் திரையிசையில் எப்படி உபயோகிக்க முடியும்? மதுக்கோப்பைகளும், சிகரெட் புகையும் நிறைந்திருக்கும் ஒரு இரவு விடுதியின் பின்னணி இசையாகப் பயன்படுத்தலாம். அல்லது பர்ட் பாகரேக் பயன்படுத்தியிருப்பது போல, ஒரு நீளமான, உற்சாகமான, நகர் சார்ந்த காட்சிக்குப் பின்னணி இசையாகப் பயன்படுத்தலாம். ஆனால் சர்வ சாதாரணமாக ஒரு நாயகன் – நாயகியின் காதல் பாடலுக்கான இசையாகவோ, ஒரு அம்மா தன் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கும் பாட்டுக்காகவோ பயன்படுத்தமுடியும் என்று யோசிக்க முடிகிறதா? சரி, அதைவிட்டுவிடுவோம். இந்த ஜாஸ் வால்ட்ஸை சாஸ்த்ரீய இந்திய இசைக்கருவியான தபேலாவில் கொண்டுவரமுடியும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? இவையெல்லாமும் கூட சாத்தியம் என நம்மவர் ஒருவருக்கு தோன்றியிருக்கிறது.

இளையராஜா பல மேற்கத்திய இசை வகைகளை இந்திய இசையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பது அவர் இசையைப் பின்தொடரும் பலருக்கும் தெரிந்ததொரு விஷயம். ஆனால் அந்த இசை வகையை அப்படியே பிரதியெடுத்துத் தமிழில் கொடுக்காமல், தன்னுடைய திரையிசை வடிவுக்குள் நாம் முற்றிலும் யூகிக்கமுடியாத இடத்தில், மிகவும் பொருத்தமாக உபயோகிதிருப்பார். உதாரணமாக ப்ரியங்கா என்ற திரைப்படத்தில் வரும் ‘வனக்குயிலே குயில் தரும் இசையே’ என்ற பாடலைச் சொல்லலாம். அப்பாடல் இந்திய ராகமான லலிதாவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் தாளமோ ரெக்கே எனப்படும் ஜமைக்க இசையில் வேர்கொண்டது. கர்னாடக சங்கீதப் பரிபாஷையில் சொல்வதானால் ரெக்கே இசையின் அரை இடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து இசைக்கப்படும் தாள அமைப்பை இந்த பாடலில் துல்லியமாகக் கேட்க முடிகிறது. நாம் அதை கவனித்துப் பிரித்துப் பிரித்துப் பார்த்தாலேயொழிய லலிதாவோ, ரெக்கேவோ நமக்குத் தெரியாது. அதில் நமக்குத் தெரிவது இளையராஜாவின் ஒரு தேர்ந்த இனிமையான திரையிசைப்பாடல் மட்டுமே. அந்த வகையில் அவர் நமக்கு ஒரு மேற்கத்திய இசைவகையை அறிமுகப்படுத்துவதோடு, இந்திய இசைக்குள் அதன் புதிய சாத்தியங்களையும் முன்வைக்கிறார். அதனால்தான் அவருடைய இசைப் படைப்புகள், ‘பிரதியெடுப்பவை’யாக இல்லாமல், படைப்பூக்கத்தோடு கூடிய பல இசைச் சாதனைகளாக இருக்கின்றன.

ilayaraja-rare-photos60

‘தில் தில் தில் மனதில்’ என்ற ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் இடம்பெற்ற பாடலை கவனியுங்கள். பாடலின் துவக்க இசையாக வரும் கிதாரில் இசைக்கப்படுபவை, ஜாஸ் இசையின் தனித்துவமான Major 7th கார்ட்கள். அந்த கிதாரின் தாளகதியைச் சற்று வேகப்படுத்தி கற்பனை செய்து பார்க்கும்போதுதான் அது உண்மையில் ஜாஸ் வால்ட்ஸ் என்றே புரிகிறது. அதைத் தொடர்ந்து பல்லவி ஆரம்பிக்கும்போது வாசிக்கப்படும் தபேலாவில் ஜாஸ் வால்ட்ஸின் அசையும் தாளகதி வாசிக்கப்படுகிறது. இதன் மூலம் ஜாஸ் வால்ட்ஸுக்கு ஒரு அழுத்தமான இந்திய வண்ணம் கிடைக்கிறது. தபேலாவின் ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் பின்னணியில் கேட்கும் ரிதம் கிடார் மீட்டல்கள், இளையராஜாவின் ஜாஸ் வால்ட்ஸ் கற்பனையைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்தப் பாடல் முழுக்கவே ஜாஸ் வால்ட்ஸ் தாளகதியில்தான் தபேலா இசைக்கப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிய தபேலாவில் ஜாஸ் வால்ட்ஸ் மூலம் ஒரு முழுநீள திரையிசைப்பாடலை உருவாக்கிய முதல் இசையமைப்பாளர் இளையராஜாவே. (இதே பாடலின் சரணத்தில் இறுதி இரண்டு வரிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கார்ட்களையும் இங்கே குறிப்பிடவேண்டும். அவை வழக்கமான கார்ட் நகர்வுகள் இல்லை. அதில் இளையராஜா செய்திருக்கும் மாற்றம், மரபை மீறி, கற்பனைக்கெட்டாத புதுவகை கார்ட் நகர்வுகளைக் கொண்டுவருவதில் இளையராஜாவுக்கும், அவர் இசைக்குழுவினருக்கும் இருக்கும் ஆளுமையைக் காட்டுகின்றன.)

1980களிலேயே ஜாஸ் வால்ட்ஸ் இசையில் தன்னுடைய மாற்றங்களைச் சேர்த்து பரிசோதனை செய்திருக்கிறார் இளையராஜா. அருமையான orchestration கொண்ட ‘கேள் தென்றலே’ என்ற பாடல்தான் அது. மகேந்திரன் இயக்கிய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்ற படத்தில் இடம்பெற்றிருக்கிறது. பாடலின் துவக்க இசையில் வரும் சேர்ந்திசை (choir), இரண்டாம் இடையிசையிலிருக்கும் ரொமாண்ட்டிக் யுகத்தின் பாதிப்புகள் – இவையெல்லாம் இளையராஜாவின் மேற்கத்திய செவ்வியல் இசை ஆளுமையைக் காட்டினாலும், பாடலின் தாள அமைப்புதான் தனித்து நிற்கிறது. பாடல் முழுதும் ஆறு அக்ஷரங்கள் கொண்ட ஆவர்தனத்துடன் அமைக்கப்பெற்று அதில் இரண்டாம் பீட் மட்டும் ஒரு சிறு அசைவுடனும், பிற பகுதிகள் வழக்கமான வால்ட்ஸாகவும் கேட்கக்கிடைக்கிறது. இரண்டாவது பீட்டுக்கு மட்டும் சின்கோபேஷன் (syncopation) கொடுத்தும், மூன்றாம் பீட்டின் ஸ்விங் அசைவை மறைத்தும் உருவாக்கியிருக்கும் இந்த தாளம் மிகவும் வித்தியாசமான ஒன்று. வழக்கமான ஜாஸ் வால்ட்ஸ்களில் கூட இவை உபயோகப்படுத்தப்படுவதில்லை.

தொண்ணூறுகளில் வெளிவந்த ஒரு பாடலில் இப்படிப்பட்ட ஜாஸ் வால்ட்ஸ் பயன்பாட்டைப் பார்க்கமுடியும். அது ‘கானம் தென்பாண்டிக் காற்றோடு’ என்ற இளையராஜாவே பாடிய பாடல். இப்பாடல் இடம்பெற்ற ‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி’ என்ற திரைப்படம் வெளியாகவேயில்லை. ஹாலிவுட்டுக்கு அடுத்து அதிக அளவில் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் நம் இந்தியச்சூழலில் இது சகஜமான ஒன்றுதான் என்றாலும், படம் வெளிவாரமல் போவதால் பல அரிய பாடல்கள் நம் கவனத்திலிருந்து தப்பிவிடுகின்றன என்பதும் வருத்தமளிக்கும் உண்மை. கண்ணுக்கொரு வண்ணக்கிளி திரைப்படத்தின் பாடல்கள் நல்ல தரமான ஒலியில் குறுந்தகடாக வெளியிடப்பட்டதுதான் ஒரே ஆறுதல். இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே மிகச்சிறப்பானவை. குறிப்பாக இந்தப் பாடலில், இடையிசையில் வரும் கிடார் வாசிக்கப்பட்டிருக்கும் விதம் இளையராஜாவின் இசைக்குழுவில் வாசிக்கும் திரு.சதானந்தம் போன்ற இசைக்கலைஞர்களின் உயர்ந்த தரத்தைக் காட்டுகிறது. இவ்வளவு மென்மையாகவும், அதே சமயம் படு வேகமாகவும், acoustic கிடார் மீதான முழு ஆளுமையுடனும் வாசிக்கப்பட்டிருக்கும் விதம் நம் மொத்த இந்தியத் திரையிசையிலேயே வெகு அரிதுதான்.

இளையராஜா தன் ஜாஸ் வால்ட்ஸ் பாடல்களுக்கான தாளகதியை எந்த விதமான தாளக்கருவிகளை உபயோகித்து, எப்படி அமைக்கிறார் என்பதும் கவனிக்கப்படவேண்டிய விஷயம். முழுக்க எலெக்ட்ரானிக் ட்ரம்ஸ் தாள அமைப்பில் இளையராஜா செய்திருக்கும் ஒரு நேரடியான ஜாஸ் வால்ட்ஸை ‘நவோதயம்’ என்ற இந்தத் தெலுங்குப் பாடலில் கேட்கலாம். முழுக்க தபேலாவால் ஆன ஜாஸ் வால்ட்ஸையும், முழுக்க ட்ரம்ஸில் இசைக்கப்பட்ட மேற்கத்திய வகை ஜாஸ் வால்ட்ஸையும் முன்பு பார்த்தோம். இரண்டையும் ஒன்று சேர்த்தும் ஒரு ஜாஸ் வால்ட்ஸ் கதியை ‘தேவன் கோயில்’ என்ற பாட்டில் அமைத்திருக்கிறார் இளையராஜா. தபேலா தாளகதியின் முதுகெலும்பாகவும், ட்ரம்மின் ஹை-ஹாட்ஸ் துடிப்பான கணக்கைத் தொடர்வதையும் கவனிக்கலாம். இந்தப் பாடலின் மெட்டை மட்டும் வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தால் இது வெகு சாதாரணமாகத் தெரிகிறது. ஆனால் இசைக்கருவிகளின் சேர்க்கைதான் இந்தப் பாடலை முழுக்க வேறொரு தளத்துக்கு நகர்த்துகின்றன. பாடலின் மெட்டு உருவாகும்போதே இசைக்கருவிகளையும் கற்பனை செய்துகொள்வதன் மூலம்தான் இப்படிப்பட்ட பாடல்களையே உருவாக்கமுடியும். ஆகவே, இளையராஜாவின் பாடல்களில் உபயோகிக்கப்பட்டிருக்கும் இசைக்கருவிகள், மெட்டுக்கான பிற்சேர்க்கைகளாக இல்லாமல், மெட்டு, குரல் ஆகியவற்றுக்கு சமமான இடத்தை வகிக்கின்றன.

‘உன் பார்வையில்’ என்ற பாடலும் இந்திய இசைக்கருவிகளில் உருவாக்கப்பட்ட ஜாஸ் வால்ட்ஸுக்கு உதாரணம். ஹார்மோனியத்தால் நிறைக்கப்பட்டிருக்கும் பாடலின் ஆரம்ப இசை ஜாஸ் வால்ட்ஸை கற்பனைக்கெட்டாத இடங்களில் பயன்படுத்துவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஆளுமையைக் காட்டுகிறது. இப்பாடலின் ஹார்மோனியப் பகுதிகள் இளையராஜாவே வாசித்திருப்பவை. அருமையான ஹார்மோனியமும், தேர்ந்த குரல் வெளிப்பாடும் இப்பாடலின் இனிமையைப் பலமடங்கு கூட்டுகின்றன. இதைப் போலவே கேட்பதற்கு இனிமையான பாடலுக்கான இன்னொரு உதாரணம், எண்பதுகளில் வெளிவந்த ‘கீதம் சங்கீதம்’. மோகன ராகத்தின் அழகை சாதாரண ரசிகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் ஸ்வரங்களின் நகர்வை இப்பாடலில் அமைத்திருக்கிறார் இளையராஜா. இப்பாடலின் மெட்டை வாய்விட்டுப் பாடிப்பார்த்தால் அது எவ்வளவு சாஸ்த்ரீயமான, மரபான உணர்வைக் கையாள்கிறது எனப் புரியும். உதாரணமாக ‘நீ தானே என் காதல் வேதம்’ எனும் இடத்தில் ‘பஸ தரி ஸக ரிப கத பா ரீ ஸா’ என தாட்டு வரிசைக்கொத்த ஸ்வர சஞ்சாரங்களை சாதாரணமாகக் கேட்கலாம். ஆனால் தாளகதியில் தரப்பட்டிருக்கும் ஜாஸ் வால்ட்ஸ் அசைவின் காரணமாக, பாடல் மெட்டின் சாஸ்த்ரீய அமைப்பை மீறி ஒரு புத்துணர்வான நவீன வடிவம் கேட்பவருக்குக் கிடைக்கிறது. சத்யா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘இங்கேயும், அங்கேயும்’ என்ற வெளிவராத பாடலும் இதே போன்ற இசையமைப்புக்கு ஓர் உதாரணம். தாளகதியில் கொடுக்கப்பட்டிருக்கும் துள்ளல், பாடல் மெட்டின் சாஸ்திரிய உணர்வை முற்றாக மறைத்துவிடுகிறது. இதைப் பாடியிருப்பவர் இந்தியாவின் மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவரான லதா மங்கேஷ்கர். இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெறாமல் போய் பலருக்கும் தெரியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம்.

1983-இல் வெளிவந்த ‘பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னடப்படம்தான் இன்று இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் மணி ரத்னம், அனில் கபூர் என்ற இரண்டு கலைஞர்களுக்கும் முதல் படம். இதில் இளையராஜா அமைத்திருக்கும் ‘நகு எந்திதே’ என்ற பாடல் பல்லவியிலும், ஆரம்ப இசையிலும், இளையராஜாவின் வழக்கமான ஜாஸ் வால்ட்ஸ் என்றுதான் எண்ணவைக்கும். ஆனால் முதல் இடையிசையில் மேற்கத்திய சாஸ்திரிய இசையின் சிறு பகுதியும், அதைத் தொடர்ந்து தென்னிந்திய நாட்டுப்புற இசையும் வந்துபோகின்றன. இரண்டாம் இடையிசையில் தர்பாரி ராக ஆலாபனையின் சிறுபகுதியும் வந்து போகிறது. இவை அனைத்தையும் ஒன்று சேர்க்கும் ஜாஸ் வால்ட்ஸ் தாளகதிதான், பாடல் பகுதிகள் துண்டு துண்டாகத் தனித்தனியாகத் தெரியாமல், ஒரு நிறைவான முழுமையைத் தருகிறது. இசைவகை வெவ்வேறாகப் பயனித்தாலும், பாடல் முழுதும் வந்துபோகும் அசையும் தாளகதி பாடலை ஒரே வடிவுக்குள் வைத்து அதன் ஜாஸ் வால்ட்ஸ் தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

இளையராஜா தன்னுடைய பாடல்களின் அடிப்படை காலப்பிரமாணத்தில் பல தாளமாற்றங்களைச் செய்பவர் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். அவருடைய பெரும்பாலான பாடல்கள், மேற்கத்திய வால்ட்ஸின் இந்திய வடிவான ’திஸ்ர கதியில்’ அமைந்தவை. அவை வழக்கமான 3/4 என்ற தாளகதியில் ‘த கி ட, த கி ட’ என எந்த அசைவும், சிங்கோபேஷனும் இல்லாமல் செல்லும். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மரபை மீறி இப்பாடல்களின் துவக்க இசை, இடையிசைகளில் மேற்கத்திய வடிவில் தாளப்பரிசோதனைகள் செய்யத் தவறுவதில்லை இளையராஜா. ‘சொர்க்கத்தின் வாசற்படி’ என்ற திஸ்ர ஏக தாளத்தில் அமைந்த பாடலைக் கேட்பவர்களுக்கு, துவக்க இசை, இடையிசைகளில் மேற்கத்திய ஜாஸ் வால்ட்ஸ் வந்துபோவது வியப்பாக இருக்கும். ஆனால் திஸ்ர ஏக தாளத்துக்கும், ஜாஸ் வால்ட்ஸ் தாளகதிக்கும் இருக்கும் இணைத்தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு, மரபான திரைப்பாடலிலிருந்து ஜாஸ் வால்ட்ஸ் வடிவத்துக்குள் அடிக்கடி கூடு விட்டுக் கூடு பாய்கிறார் இளையராஜா. மாப்பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘என்னதான் சுகமோ’ என்ற பாடலும் இதற்கு இன்னொரு உதாரணம். இடையிசையில் வரும் மேற்கத்திய ட்ரம்ஸின் ஜாஸ் வால்ட்ஸ், சரணத்தின் இந்திய தபேலாவின் திஸ்ர ஏக தாளத்துக்குள் புல்லாங்குழல் மூலம் சர்வசாதாரணமாக நுழைந்துவிடுகிறது. அந்த உரையாடல் வெகு அநாயசமாகப் பாடலின் உணர்வையே வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது.

அதைப் போல, முழுக்க ட்ரம்ஸ் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் பாடல்களில் ஜாஸ் வால்ட்ஸுக்கும், மரபான வால்ட்ஸ் வகைகளுக்குமாக மாறிச் செல்வதுபோல பாடலை அமைப்பது இளையராஜாவுக்கு ஒரு பெரிய விஷயமேயில்லை. ஃப்யூஷன் என்று வெளிப்படையாகக் காட்டி அமைக்கப்பட்டிருக்கும், ‘கண்ணனைக் காண்பாயா’ பாட்டில் கர்நாடக சங்கீதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிகள் ரூபக தாளத்தில் அமைந்திருக்கின்றன. இடையிசையில் தாளம் ஒரு வித்தியசமான 3/4 தாளவகைக்கு மாறுகிறது. ஆனால் கேட்பவருக்கு அந்த வித்தியாசம் எதுவும் தெரியாத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இளையராஜாவின் ஜாஸ் வால்ட்ஸ் அமைப்புகள் எப்போதுமே வெளிப்படையாக இதுதான் ஜாஸ் வால்ட்ஸ் என்று காட்டும்படி அமைவதில்லை. நாமாகத்தான் பாடலின் பல்வேறு அமைப்புகளிலிருந்து – இடையிசைகளிலிருந்தோ அல்லது பாட்டின் உணர்வையே மாற்றும் சரணத்திலிருந்தோ ஜாஸ் வால்ட்ஸ் தாள கதியமைப்புக்களை கவனிக்கவேண்டும். உதாரணமாக திரைக்கதைப்படி ஒரு urban உணர்வு தேவைப்படும்போது, இதுபோன்ற Major 7th கார்ட்களால் நிரம்பும் ஜாஸ் வால்ட்ஸ் அமைப்புகளால் பாட்டைக் கட்டமைக்கிறார் இளையராஜா. நவீன உடையில் கிராமத்தில் வந்திறங்கும் கதாநாயகியை அறிமுகப்படுத்தும் பின்னணி இசையில் அவர் பயன்படுத்துவதும் ஜாஸ் வால்ட்ஸ் துணுக்கே. அதே நாயகி இந்திய சிற்பங்களைக் கண்டு வியக்கையில் சடாலென வீணையில் ஒரு திருப்பத்தை தந்து திரையில் வரும் காட்சியை கண்ணில்லாதவரும் கூட உணரும் வகையான தருணங்கள் இவை. இயல்பான இசை ஞானத்தோடு, எந்த வகை இசையை எங்கே பயன்படுத்தவேண்டும் என்ற அறிவும் கொண்டவராக இருக்கிறார் இளையராஜா. அதனால், அவர் ஜாஸ் வால்ட்ஸ் இசைவகையை பாடல் கட்டமைப்புக்காகவும், கேட்பவருக்கு அலுப்பேற்படுத்தாமலிருக்கும் மாற்றமாகவும், திரைக்கதையை மேம்படுத்தும் கருவியாகவும் பயன்படுத்துகிறார்.

இந்தியாவின் பல்வேறு இசையமைப்பாளர்களை நான் ஓரளவே கேட்டிருக்கிறேன். ஆனால் நான் கேட்டவரை, இந்திய இசையமைப்பாளர்களில், இப்படிப்பட்ட ஜாஸ் வால்ட்ஸ் தாள அமைப்பில் பாட்டை அமைத்தவர்கள் அரிது, அல்லது இல்லவே இல்லை என்று சொல்வேன். பெரும்பாலான தமிழர்களுக்கு ஜான் கோல்ட்ரேனைப் பற்றியோ, அவர் ஜாஸ் வால்ட்ஸை எப்படிக் கையாண்டார் என்றோ தெரியாது. அவர்களுக்கு பர்ட் பாகரேக் யாரென்று தெரியாது. Mr.Bojangles யாரோ ஒரு அந்நியர். அதிகம் அறியப்படாத Stranglers, Limp Twins பற்றியெல்லாம் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் பதிலாக ஒருவர் இருக்கிறார். அவர், இளையராஜா.