அடையாறு சிக்னல். பச்சை விளக்கிற்காகக் காத்திருந்தேன். அலுவலகத்தின் கசகசப்பு. சென்னையின் தணலோடு இரவிலும் எரிச்சலூட்டிய கணம்.
‘அண்ணா… சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுண்ணா. ஏதாவது இருந்தா கொடுங்கண்ணா…’
பைக்கை விடச்சற்று உயரமான பையன். ஒட்டியிருந்த வயிறைக் காட்டும் மேலேறியிருந்த சட்டை.
இப்போது உலகத்தை, பிச்சை எடுப்பதைச் சாடும் இளைஞர் கூட்டத்தோடு தான் இருந்திருப்பேன். அந்த ரயில் சம்பவங்கள் நடைபெறாமலிருந்தால்…
சிக்னல் விழும் அறிகுறிகள் தெரிந்ததால்.
‘தம்பி பைக்ல ஏறுப்பா ’
அவன் ஒரு கணம் தயங்கி ஏறிக்கொண்டான். கண்டிப்பாகப் பயிற்றுவிக்கப் பட்டவனானால் ஏறி வந்திருக்க மாட்டான்.
பக்கத்திலேயே வாடிக்கையான கடை. சாத்தூர்க்காரர் நடத்திக் கொண்டிருக்கிறார். வாடிக்கையான கடை என்பதால் பரிமாறுபவர்கள் ஆச்சரியமோ கேலியோ கலந்த சிரிப்புடன் பார்த்தனர். ஒரு ருபாயோ ரெண்டு ரூபாயோ போட்டுவிட்டுப் போவதை விட்டுவிட்டு இப்படி ஹோட்டல்ல பிச்சைக்காரனை உட்கார வைக்கணுமா என்று கேட்கிற சிரிப்பு.
‘என்னப்பா சாப்பிடுற?’
அவன் என்னையே பார்த்தான்.
‘நீயே சொல்லுண்ணா…’
‘பரோட்டா சாப்பிடலாமா?’
‘சரிண்ணா…’ அவன் சங்கோஜத்துடனே உட்கார்ந்திருந்தான். வயிற்றைப் பார்த்தேன் . நிச்சயம் சாப்பிட்டிருக்கவில்லை. அவனுக்கு நாலு பரோட்டாவும் சால்னாவும் ஆர்டர் பண்ணினேன். எனக்கு மூன்று. டயட்.
சொன்னவுடன் வந்து விட்டால் சின்னக் கடை என்று நினைத்து விடுவார்களோ என்று இப்பொழுதுதான் எதைக்கேட்டாலும் கொஞ்ச நேரம் கழித்துத்தானே தருகிறார்கள். இந்தக் கொஞ்ச நேரத்துக்குள் மனம்தான் எத்தனை காலத்தைக் கடந்து விடுகிறது. நொடியில் கழியும் வருடங்கள். சிறுவயதின் தில்லி டூர் ஞாபகத்துக்கு வந்தது.
எட்டாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன். ஸ்கவுட்டில் சேர்ந்திருந்தேன். எல்லாம் ஜாலியான வித்யாசமான அனுபவங்கள்.
கம்புகளையும், போர்வைகளையும் வைத்துக் கூடாரம் போடச் சொல்லிக் கொடுத்தார்கள். ரகசியக் குறிப்புகளை எங்கெங்கோ மறைத்து , ஒன்றின் தொடர்ச்சி ஒன்றில் இருக்கும் படியாக வைத்துப் புதையலைக் கண்டுபிடிக்கச் சொன்னார்கள். கோவில்களை வைத்துத் திசை கண்டுபிடிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்.
திடீரென ஐந்து பேரைக் கூப்பிட்டு அந்தக் கூட்டத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என ஒரு கேள்வி. ஐம்பத்தந்து பேர் இருக்கிற கூட்டத்தை பத்துப்பேர் என்றோ நூறுபேர் என்றோ யாரும் தப்பாகச் சொல்லிவிடக் கூடாது. அறுபதோ ஐம்பதோ ஓகே. சரியான எண்ணிக்கைக்குப் பக்கத்தில் சொல்பவருக்குத் திடீர்ப் பரிசு. எவ்வளவு நல்ல விசயம் . ராப்பகலாக மனப்பாடம் பண்ணிப் பேசவேண்டியதில்லை. சூழலைக் கவனிக்கும் அறிவு. தேவையான அறிவு.
பொதுவாகச் சாரணர் இயக்கத்தில் பெரிய முகாம் எதுவும் இருக்காது . இருந்தாலும் பக்கத்தில் இருக்கும் மலையிலோ மாவட்டத் தலைநகரிலோ இருக்கும். எங்களுக்கு எப்படியோ தில்லிவரை ஒரு முகாம் –டூர் உருவானது. வருவேன் என்று சொன்னவர்கள் வராமலிருக்க , கடைசி வரை பிகு காட்டியவர்கள் ரெயிலில் ரிசர்வேசன் செய்த பின்னர் வருவேன் என்று அடம்பிடித்து அப்பாக்களைக் கூட்டி வர என்று வழக்கமான சுற்றுலாக் குளறுபடிகளுடன். கோவில்பட்டியிலிருந்து கிளம்பி தில்லிக்கு போக ஆரம்பித்தோம். பல பையன்களுக்கு அதுதான் வீட்டை விட்டு முதல் பிரிவு. அம்மாக்கள் பதைபதைப்புடன் விடை கொடுக்க பையன்கள் ஜாலியாகக் கையாட்ட ரெயில் கிளம்பியது. முதல் பயணத்தின் முதல் கட்டம் அதற்கே உரித்தான தன்மைகளுடன். பிடித்து வைத்திருந்த உலகத்தை ரயில் புகைபோல் பின்னால் தள்ளி விட்டு புதிய உலகைப் பிடிப்பதற்கான உவகையுடன் உற்சாகத்துடன் ரயிலும் மாணவர்களும். முதல் ரம்மி. முதல் புகை எனச் சிலருக்குச் சில விசயங்கள் இதில்தான் அறிமுகமாயின. இதில் முக்கியமான விசயம் ரொம்பப் பணம் கொடுத்தால் பசங்க கெட்டுப் போய்விடுவார்களோ என்று அனேகமாக எல்லாப் பெற்றோர்களும் பணத்தை அளந்தே கொடுத்திருந்தனர். எங்களுக்கும் எவ்வளவு தேவைப்படும் என்று தெரியவில்லை. அவர்கள் கொடுத்த பணமே இதுவரை மொத்தமாகக் வாங்கியிராத பணமாக இருந்தது.
பார்ப்பதை எல்லாம், ரயிலில், ரயில் நிலையங்களில் விற்பதை எல்லாம் வாங்கிக் கொண்டிருந்தோம். தமிழ்நாடு முடியும் வரை இருந்த பரபரப்பு மாறி ரயில்சூழல் அமைதியானது மாதிரி ஆனது. இரண்டாம் நாளானதும் காரணமாக இருக்கலாம். வரிசைக்கு உடற்குறைபாடுள்ளவர்கள், திருநங்கைகள் (அப்பொழுதெல்லாம் இந்தச் சொல் வழக்கத்தில் இல்லை) ஏன் நன்றாக இருக்கும் சிலர் கூட பிச்சை கேட்டுக் கொண்டே இருந்தனர். பெரிய எரிச்சலாகிவிட்டது.
‘எப்படித்தான் அடுத்தவுங்க கிட்ட இப்பிடிப் பிச்ச கேட்க முடியுதோ?’
‘கொஞ்சம் கூட வெக்கமில்ல. இப்பிடிப் பெழைக்கிறதுக்கு கெணத்துல விழுந்து சாகலாம்’
‘இவனுகளுக்கெல்லாம் பேங்குல பணம் நெறைய இருக்காம்.’
’ வயிறு அப்பிடிப் பசிக்குதோ? ஒரு நாளுக்குத் திங்காம இருந்தாத் தான் என்ன? ’
ஒருத்தர் ஆரம்பித்தால் அதே போல் அதைத் தொடரும்- மிஞ்சும் வசனங்கள் கடைசியாக வெளியான பட வசனங்களின் சாயலைத் திரட்டி.
பின்னர் சில ஊர்கள் வந்தன. போயின. டெல்லி கேம்ப் உண்மையில் வித்யாசமானதாக இருந்தது. எதிர்பார்த்திராத குளிர். தரையில் பெட்சீட்டைப் போட்டு கூடாரத்தில் கம்பளியைக் கொடுத்து படுக்க வைத்துவிட்டார்கள். பரிதாபமாக கம்பளியையே இரண்டு சுற்றுச் சுற்றிப் படுத்தாலும் குளிர் எங்களுடனேயே படுத்திருந்தது, கூரிய நகங்களுடன். ஸ்கவுட் மாஸ்டரைப் பார்த்தோம். டூருக்கு அவரும் மாணவர்தான். நாங்களாவது குளிரைக் கேலிசெய்து கொண்டு புலம்பிக் கொண்டு படுக்க முடிந்தது.
பின்னர் பேரணி. இந்தியா கேட், ராஷ்ட்ரபதி பவனைக் கேட்டுக்கு வெளியே இருந்து ஒரு பார்வை. நாடாளுமன்றம் . வெளியே இருந்த குரங்குகள் , உள்ளே போய்க் கொண்டிருந்த அரசியல்வாதிகள், வட்ட நீர்க் கொப்புளிப்பைச் சுற்றிப் பறக்கும் பறவைகள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நாங்கள் ரயில் ஏறும் போதுதான் உறைத்தது குளிர் மட்டுமல்ல செலவும் நாங்கள் எதிர்பார்க்காததை விட அதிகம் ஆகியிருந்தது. அதிகம் என்ன ஒன்றும் இல்லாமல் ஆகி இருந்தது. ஆசிரியரிடம் போய்க் கடன் கேட்கலாம் என் நினைத்திருந்ததை ஏதோ தடுத்தது. கொஞ்ச நேரத்தில் பசி அந்த ஏதோவைத் தள்ளிவிட்டு அவரிடம் போய்க் கேட்டபோது அவரிடமும் பணம் இல்லை. பரிதாபமாக விழித்தார்.
கடலை, அவல் எனச்சுருக்கமான உணவுகள் கூட ஒருசமயத்தில் வாங்க முடியவில்லை. காசில்லை. டூர் உற்சாகம் முழுவதும் வடிந்திருந்தது. இரணடு வேளைகளுக்கு மேல் சாப்பிடவில்லை. சாப்பிட ஏதுமில்லை. பசி வயிற்றிலிருந்து எல்லாப் பாகங்களுக்கும் பரவி இருந்தது. காசு இல்லாதவர்கள் இல்லை. ஆனால் இன்று ஒருவர் கையிலும் இல்லை. கையில் இருப்பவர்கள் பக்கத்தில் இல்லை.ரயிலின் இரண்டு மூன்று தடுப்பறைகளில் மாணவர்கள் பிரிந்து வந்து கொண்டிருந்தோம். டிக்கெட் எடுக்காத பயணியாக, சுமையாக பசி எங்களுடன் பயணித்தது. நடு அறையை எட்டிப் பார்த்தோம்.
சில ராணுவவீரர்கள். வந்து கொண்டிருந்தார்களோ போய்க் கொண்டிருந்தார்களோ தெரியவில்லை. அவர்களுக்குள் சிரித்துக் கொண்டு , அரட்டையடித்துக் கொண்டு இருந்தனர். ஒரு டப்பா நிறைய சுடப்பட்ட சப்பாத்திகள். நிறைய நாளைக்குத் தாங்கும் ஏதோ ஒன்று தொட்டுக்கொள்ள. அவர்கள் சாப்பிடும்போது அங்கிருந்த மாணவர்களுக்கும் கொடுத்ததைப் பார்த்தோம். கொஞ்சம் தயங்கித் தயங்கி அந்தத் தடுப்பறையில் இருந்த மாணவர்கள் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
எங்களில் சிலர் கழிப்பறை செல்வது போல அந்தத் தடுப்பறையைக் கடந்தோம். எங்கள் நண்பர்களுக்குப் புரிந்தாலும் அதற்கு மேல் என்ன செய்யவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ராணுவவீரர்களுக்கு எங்கள் பசி என்ன தெரியுமா?
ரயிலின் பக்கத்தில் இருந்த வாயிலில் நாங்கள் இரண்டு மூன்று பேர் நின்று பேசிக் கொண்டிருந்தோம்.,
‘ ச்சே நம்ம நெலம இப்பிடி ஆயிடுச்சேடா?’
‘இப்பிடிச் சோத்துக்கு லாட்டரியடிக்க வேண்டியதாப் போச்சே’
‘ ம்ஹும் ம்ஹும் ம்ஹும்’ போலியாக ஒருவன் அழுதான். எங்களுக்குச் சிரிப்பும் அழுகையும் கலந்து வந்தது.
‘ பேசாம பட்டாளத்துக்காரங்க பக்கத்துல ஒக்கார்ந்திரலாமா . இல்ல எங்களுக்கும் கொஞ்சம் சப்பாத்தி கொடுங்கன்னு கேட்ருவமா ?’
‘ச்சீ போடா அசிங்கம்…’ என்றவன் சொல்லிலும் அழுத்தம் இல்லை. கேட்கலாம் என்றவனுக்கும் அதே மனநிலை. இரண்டும் கெட்ட மனநிலை.
‘வரும்போது பிச்ச எடுத்தவங்களக் கிண்டல் பண்ணுனம்ல நமக்கு வேணும்’
டாய்லெட் போய்விட்டு வந்திருந்த ஒரு ராணுவ வீரர் எங்களருகே எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார் என்பதை அப்பொழுதுதான் பார்த்தோம். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை நிச்சயம் புரிந்து கொண்டதை அவர் முகம் காட்டியது. எங்கள் எல்லோருக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியவில்லை. பாதையோரச் சன்னலைப் பார்த்துக் கொண்டே எங்கள் தடுப்பறையில் போய் அமர்ந்தோம்.
எப்பொழுது சாப்பிடக் கூப்பிடுவார்களோ என்ற நிலை மாறி கூப்பிட்டுச் சப்பாத்தி கொடுத்துவிடுவார்களோ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால் அந்த ராணுவக்காரர் கொஞ்சம் கௌரவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டார். எங்களைக் கூச வைக்கவில்லை. தர்ம சங்கடங்களைத் தவிர்த்தார். அவருக்கும் கூட அது சாதாரணமாய் இருந்திருக்காது. அடுத்த ரயில்நிலையத்திற்கு அப்புறம் எங்கள் மாஸ்டர் எங்களைக் கூப்பிட்டார். அவர் கையில் எங்கள் அனைவருக்கும் ஓரிரு நாட்களுக்கு தேவையான ப்ரெட் , ஜாம் கொஞ்சம் வாழைப் பழங்கள். அவரும் சாதாரணமற்ற பார்வையோடே எங்களுக்குக் கொடுத்தார். இது கண்டிப்பாக ராணுவ வீரரின் பணம்தான். அவர் மாஸ்டர் பக்கம் போனதைப் பார்த்தோம். சாப்பிட்ட எல்லாமும் சொல்லமுடியாத ருசியாய் இருந்தது. எங்கும் விரவி இருந்த பசி சுருங்கி வயிற்றுக்குள் வந்து பின் காணாமல் போனது.
மீண்டும் கோவில்பட்டிக்கு வந்த்தும் வராததுமாய் மாஸ்டர் மணியார்டர் ஃபார்மை நிரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம்.
டேபிளில் பரோட்டா வந்திருந்தது.
‘சாப்பிடுப்பா’
அவன் பேசாமல் பார்த்தான். அவன் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
ஒரு வாய் வைத்தான். உள்ளேயே போகவில்லை. போனதும் எப்பொழுது வெளிவரலாம் என்பது போலிருந்தது. எனக்கு அப்பொழுதுதான் உறைத்தது..
‘இதைப் பார்சல் பண்ணுங்க… ’ என்றுசொல்லி உடனடியாக கட்டவைத்துக் கையில் கொடுத்தேன்.
‘தேங்க்ஸ்ன்னா தேங்க்ஸ்ன்னா’ என்று சொன்னவாறே நொடியில் ஓட்டமெடுத்து மறைந்தான். நிச்சயம் கல்லாக்காரருக்குப் புரிந்திருக்கவில்லை. கடைசியிலாவது வைக்கவேண்டியவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டேன் என்பதைப் போல் இருந்தது அவரின் சொறிதலும் இளிப்பும். பசி மட்டுமா ரயில் பாடம்?