‘ஆற்றேன் அடியேன்’ கட்டுரைக்கு இரண்டு மறுவினைகள்

கடந்த இதழில் வெளியான அ.முத்துலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட ‘ஆற்றேன் அடியேன்’ கட்டுரைக்கு வந்த இரண்டு மறுவினைகளை இங்கே அளிக்கிறோம்.

dilapitation

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

‘என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே’ என்ற வரிகளை என்னால் மறக்க முடியவில்லை. தமிழையும், தமிழ் இலக்கியத்தையும், அதன் எதிர்காலத்தையும் நினைக்கும்போது இந்த வார்த்தை தொடர்தான் மறுபடியும் மறுபடியும் என் நினைவுக்கு வந்து இடர் செய்கிறது. உச்சக்கட்ட விரக்தியை வேறு எந்த வார்த்தைகளால் வர்ணிப்பது?

மேலே காணப்படும் வரிகளை கண்ட பொழுது ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் விரும்பினேன், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒரு செம்மொழி நிறுவன ஆய்வரங்கில் நான் பேச இருக்கும் கட்டுரையின் சில பகுதிகளை இங்கு உங்களுக்கு தருகிறேன்.

கட்டுரையின் தலைப்பு – மொழியின் தோற்றமும் மனித மூளையும்

முதலில் இரண்டு தனிப்பட்ட கோட்பாடுகளை விளக்கி கொள்வோம்.

[௧] சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட அற்புத இலக்கியம் திருக்குறள். திராவிட இலக்கியங்களுள் மிக முக்கியமானதொரு இடத்தை பெற்றுள்ள “திருக்குறள்” என்றுமே மனித இனம் போற்றும் ஒரு படைப்பாக இருக்கும். உலகம் முழுவதும் உள்ள அனைத்து மொழி மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் அற்புத செய்திகள் திருக்குறளில் உள்ளது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து பார்க்கையில் நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு சிறந்த நூல் திருக்குறள்.

[௨] சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர், 1970 ஆம் வருடம் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வுக்குழுவினரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு தனித்தன்மை வாய்ந்த அதி நவீன அறிவியல் துறை “உளவியல் சார்ந்த உடலியங்கியல்” (Psychophysiology) , மனித உடலில் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் மூளையின் மற்றும் அதனுள் இருக்கும் மனதின் செயல்பாடுகளை எவ்வாறு தாக்குகிறது, அதுபோல மூளை மற்றும் மனித மனதின் செயல்பாடுகள் எவ்வாறு மனித உடலினை பாதிக்கிறது என்ற செய்திகளை மண்டலம் (Systems) ( உடல் இயக்கப் பகுதிகளின் தொகுதி) அளவினில் இருந்து ; உறுப்பு (Organ) ஒரு குறிப்பிட்டப்பணியினை செய்யவல்ல உடலின் உறுப்பு ) அளவு வரை ; மேலும் உயிரணு (Cell) ( ஒரு உட்கருவி கொண்டுள்ள ஒரு நுண்ணிய உன்மம்) வரையிலும் மிக நுட்பமான நுண்ணிய அளவு வரை கடந்து நோக்கும் மிகவும் அற்புதமான அதி நவீன மருத்துவ அறிவியல் துறை.

இங்கு நாம் கண்ட இரண்டு கோட்பாடுகளுக்கும், அவை தோற்றுவிக்கப்பட்ட காலத்தினைக் கணக்கிடும் பொழுது அவற்றின் இடையே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் இடைவெளி உள்ளது, இவ்வாறான சூழலில் இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஒரே நேர்கோட்டினில் ஒரே அணியினில் வரிசைப்படுத்தினால் அவற்றில் இருந்து வரும் கருத்துக்களை ஆராயும் பொழுது, அறிவியலின் இரண்டு பிரிவுகளுக்கும் நன்மை ஏற்படுவது என்பது யதார்த்தமான உண்மை.

இன்றைய காலக்கட்டத்தில் இருந்து சுமார் நூறு ஆண்டுகளுக்கு பிறகு, சங்க இலக்கியங்களுக்கு எதிர்கால தலைமுறையினர் மத்தியில் எந்த அளவினில் வரவேற்பும், பயன்பாடும் இருக்கும் என்ற கேள்விக்கு நாம் பதில்சொல்லித்தான் ஆக வேண்டும். உருமலர்ச்சிக் கொள்கையின் அடிப்படை கூறுகள் சில யதார்த்தமான உண்மைகளை, இயற்கையின் விதிகளை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன, மீண்டும் நிரூபிக்க அவை தயங்காது. ஒரு பயன்பாட்டின் அடிப்படையில் மனித இனம் தனது கருத்துக்களை வெளியிட ஒரு கருவியாக மொழியை உருவாக்கியுள்ளது. ஆதலினால் பயன் தராத நிலையில் மொழியின் பகுதிகளை, மொழியைக் கூட மறந்துசெல்ல மனித இனம் தயங்காது. இது உண்மை, இது அறிவியல், உணர்ச்சியின் வசப்படாமல், அறிவியல் துணைகொண்டு நாம் ஏற்க வேண்டிய தருணம் இது.

சங்க இலக்கியங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பயன்பாட்டினை அதிகப்படுத்துவதன் மூலம் ஒரு வகையில் உருமலர்ச்சிக் கொள்கையின் சக்தியினை நன்மைக்கு , தமிழின் மேன்மைக்கு நம்மால் பயன்படுத்த முடியும். கொடுத்தே பழகியது தமிழ், வந்தாரை வாழவைக்கும் தமிழ், மொழிக்குள் செய்திகளைக் கொடுத்தாரை வெல்ல வைக்கும் தமிழ்.

உளவியல் சார்ந்த உடலியங்கியல் சார்ந்த இடர்பாடுகள் மற்றும் உடல் உபாதைகள் அடுத்த பத்து ஆண்டு கால அளவில் உலக நாடுகளை குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள மக்களை பெரிய அளவினில் ஆட்கொள்ளும் அச்சுறுத்தல் உள்ளது, மன அழுத்தம் (Depression) முதல் மன உளைச்சல் (Anxiety) வரை எல்லா வகையான உளவியல் சார்ந்த உடலியங்கியல் நோய்களும் கடுமையான அளவினில் மற்றும் விகிதத்தில் நம் மக்களை தாக்கும் நிலை உள்ளது, ஆகையினால் இந்த துறை சார்ந்த அறிவியல் செய்திகளை சாமானிய மக்களிடம் நாம் எடுத்துச்செல்ல வேண்டும்.வருமுன் காப்பதே சிறந்த மருத்துவ முறையாகும்.

ஒரே சமயத்தில் சங்க இலக்கியத்தையும் உயர்த்தி மனித சமூகத்தின் உடல் நிலையையும் காக்க நாம் வகை செய்ய வேண்டும், இந்த புதுமையான சிந்தனைப் போக்கு ஒரு அறிவுப் புரட்சியினை நம்மிடையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மேலும் மிக சமீப காலமாக இந்திய மக்களிடையே ஏற்பட்டுள்ள கலாச்சார மாறுபாட்டால் பண்டைய இலக்கியங்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது, அனைத்து மொழி அறிஞர்களையும் கவலை அடைய செய்துள்ள சூழல் இது. விரிசலை அகற்ற “மருத்துவத்தின் தத்துவ அடிப்படைகள்” (PHILOCINE) என்னும் புதியதொரு கல்வி முறை இன்றைய காலநிலையில் அறிமுகமாகிறது, இத்துறை மேலே விவரிக்கப்பட்ட இரண்டு கோட்பாடுகளுக்கும் துணை செய்யும் என்பது எங்களது நம்பிக்கை.

மேலும் விபரங்கள் வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும்.

தமிழுடனும் அன்புடனும்

செம்மல் மணவை முஸ்தஃபா

www.ariviyaltamilmandram.org

-o00o-

(அ.முத்துலிங்கம் அவர்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட கடிதம்)

அன்புள்ள முத்துலிங்கம் ஐயா,
வணக்கம். நீங்கள் நலமா?
சொல்வனம் இணைய இதழில் “ஆற்றேன் அடியேன்” என்னும் உங்கள் எழுத்தைப் படித்தேன். அதில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி நீங்கள் குறிப்பிட்டது மகிழ்ச்சியாய் இருந்தாலும், நீங்கள் சொல்லியது (வருத்தப்பட்டு சொல்லியது) பெரும்பாலும் உண்மையே என்றாலும், அதில் ஒரு சிறு திருத்தம் சேய்து கொள்ள வேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்கின்றேன். நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை எண்ணிக்கைகள் “official count” ஆனால் “200 எழுத்துகளுக்கும் மேல்” உள்ள கட்டுரைகள் என்னும் எண்ணிக்கை வேறானது. 200 எழுத்துகளில் ஒரு கட்டுரை என்பது வெறும் ஓரிரண்டு வரிகள் கூட இல்லாத கட்டுரை. நீங்கள் சுட்டும் இந்தியில் மே 2010 இல் 57,000 கட்டுரைகள் இருந்தன, ஆனால் 200 எழுத்துக்கும் கூடுதலாக உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 35,000 தான். பல மொழிகள் வெற்றாக பல கட்டுரைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தமிழில் அப்படி இல்லை. சராசரி கட்டுரையின் பைட் அளவில் தமிழ் விக்கிப்பீடியா உலகில் 10 ஆவதாக நிற்கின்றது.

http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm என்னும் பக்கத்தில் கீழே இரண்டாவதாக வரும் அட்டவணையில் – இதன் தலைப்பு “The following table ranks this project in relation to projects in other languages with 1000+ articles” அதில் கடைசியாகக் கிடைக்கும் முழுத் தரவைப் பாத்தால் (ஏப்பிரல் 2010) உக்கான தரவு- தமிழ் சராசரி பைட்டு அளவில் 10 ஆவதாகவும், மொத்த கலைக்களஞ்சிய பைட்டு அளவில் 32 ஆவதாகவும் உள்ளது தெரியவரும்.

தமிழ் விக்கிப்பீடியா உலகில் முதல் 20-க்குள் வரும் என்று நம்புகின்றேன். நல்ல பயனுடைய கட்டுரைகளாக ஒரு 20,000-30,000 கட்டுரைகள் இருந்தாலே அது மாபெரும் வெற்றி (ஒரு அச்சுத் தொகுதி 1000 பக்கம் என்று கொண்டால், ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பக்கம் என்று கொண்டால், இதுவே 20-30 பெரும் தொகுதிகளாகும். வெட்டியான செய்திகளாக பன்னூராயிரக்கணக்கில் தொகுப்பதினும் பயனுடைய கருத்துகளைச் செறிவாகவும், தெளிவாகவும் தொகுத்து வந்தால் நமக்குப் பயன்படும். நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம்தான் மறுக்கவில்லை. ஆனால் உலக மொழிகளில் தமிழ் முதல் 10-12 மொழிகளுக்குள் ஒன்றாக நிற்க நிறைய வாய்ப்புக்கூறுகள் உள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா, வரலாறு காணாத அளவுக்கு இலங்கைத் தமிழர்களும், சிறிய எண்ணிக்கையில் மலேசியத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களுமாக ஒன்றிணைந்து உருவாக்கி வரும் பெரிய ஆக்கம். அத்தனையும் இலவசம். ஏராளமான படங்கள், மிக அரிய ஆயிரக்கணக்கான அறிவுச் செய்திகள் கொண்ட பெரும் தொகுப்பு. அதில் உள்ள குறைகள் மிக ஏராளம் மறுக்கவே இல்லை, எனினும் ஒரு வரலாறு படைக்கும் படைப்பு என்பது அதில் உள்ள அரிய செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் தெரியும். எத்தனையோ ஆயிரக்கணக்கான அறிவுச்செய்திகள் வேறு எங்கும் தமிழில் பதிவாகாமல் தமிழில் தமிழ் விக்கிப்பீடியாவில்தான் முதன் முதலாகப் பதிவாகி உள்ளது.

சில தமிழ்க்கட்டுரைகளில் உள்ள அறிவியற் செய்திகள் ஆங்கில விக்கியில் கூடக் கிடையாது. கொலோபசுக் குரங்கு, தும்பி முதலான கட்டுரைகளைப் பாருங்கள். சில அறிவியற் செய்திகள் ஆங்கில விக்கியில் வரும் முன்னரே தமிழ் விக்கியில் முதலில் பதிவாகி உள்ளது. இந்திய மொழிகளில் தமிழ் முதல் 1-2 இடத்திலே உள்ளது (வெறும் கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டி)

அன்புடன்
செல்வா