ஆயிரம் தெய்வங்கள் – 18

முதல் உலக அழகி – ஆஃப்ரோடைட்

இன்றையப் புத்துலகத்தில் அழகிப் போட்டிக்குப் பஞ்சமே இல்லை. மெட்ரோ நகர்களில் வென்று, இந்திய அழகிப் போட்டியில் வென்று, பின்னர் உலக அழேகிப்போட்டிக்கு நன்கு உயரமான ஒடிசலான அழகிகளைத் தேர்ந்தெடுத்து இந்தியாவைப்போல் ஒவ்வொரு நாடும் அனுப்புவதுண்டு. மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முடிவாக உலக அழகியைத் தேர்ந்தெடுக்கும். புராணங்களைப் புரட்டிப் பார்த்தால் போட்டி பொறாமை எல்லாம் அம்மன் சாமிகளுக்குள் ஏற்பட்டதாகப் புராணக் கவிஞர்கள் கற்பனை செய்வதுண்டு. கல்வியா, செல்வமா, வீரமா என்று சரஸ்வதி, லக்ஷ்மி, துர்கா போட்டா போட்டி நிகழ்த்திய சரஸ்வதி சபதம் என்ற சினிமாவில் அழகைவிட அதிகாரம்தான் லட்சியம். நல்ல புஷ்டியான உடல்வாகு கொண்ட அக்காலத் தமிழ் நடிகைகளின் தேவியர் வேஷம் எவ்வாறு பக்தியை ஏற்படுத்தியது என்று பகுத்தறிவது கடினம். கிரேக்க புராணத்தில் எத்தினா, ஹீரா, ஆஃப் ரோடைட் மூவரும் – அதிகாரம் நிரம்பிய மூன்று பெண்தெய்வங்களும் அழகிப்போட்டிக்குப் பங்கேற்ற நிகழ்ச்சி சுவையான விஷயம்மட்டுமல்ல. இலியத் புராணத்திற்கு இதுவே காரணமானது. இந்த நிகழ்ச்சியை கவனிக்கும் முன்பு ஆஃப்ரோடைட்டின் அறிமுகத்தை கவனிப்போம்.

அழகுக்கு ஒரு தெய்வம் என்றால் அது ஆஃப்ரோடைட். ரோமாபுரிக் கடவுள் வீனஸ் இதுவே. கிரேக்க புராணங்களில் பின்னால் நுழைந்த இந்த தெய்வத்தின் தோற்றம் ஸீயஸ்ஸின் தாத்தா காலத்திலேயே ஏற்பட்டுள்ளது. ஸீயஸ்ஸின் தந்தை குரோனஸ் தன் தந்தை யுரேனஸைக் கொன்ற போது கொட்டிய ரத்தம் கடலில் விழுந்தபோது தோன்றிய பல தெய்வங்களில் ஆஃப்ரோடைட்டும் ஒருத்தி. ஆஃப்ரோடைட்டின் உருவச்சிலை நிர்வாணமாகவே காணப்படும் ரோம் நகரத்தில் வீனஸாகத் தொழப்பட்ட ஆஃப்ரோடைட் கலையின் சின்னமாகும். ஆஃப்ரோடைட்டின் துணையாக எப்போதுமே புறா கைவசம் உண்டு. கிரேசஸ், ஹோரே, என்ற தோழியர்கள் கூடவே ஆஃப்ரோடைட்டுக்குத் துணையிருப்பதுண்டு. இனி அழகிப் போட்டிக்குள் நுழைவோம்.

இலியத் யுத்தத்திற்குரிய காரணம் பாரிஸ் அதாவது ட்ராஸ் கோட்டைத் தலைவனும், மன்னனுருமான ப்ரையம்மின் அரும்புதல்வன். ட்ராய் இளவரசன். இவன் கிரேக்க இளவரசி ஹெலனைக் கடத்திக் கொண்டு ட்ராய்க்கு வந்த வினையால் யுத்தம். ஹெலன் கிரேக்க அரசன் மெனிலாசின் மனைவி என்பதால் சிக்கல். இந்திய ராமாயணத்தில் ராவணன் சீதையைத் துõக்கி ஸ்ரீலங்காவில் சிறைவைத்தான். இதனால் ராம-ராவண யுத்தம். ஆனால் ஹெலன் சீதை அல்ல. பாரிஸை விரும்புகிறாள். இஷ்டப்பட்டு ஓடிவந்தாள். பாரிஸும் ராவணன் அல்லன். ராவணன் ஒரு அசுரன். பாரிஸ் ஒரு தேவன். பாரிசுக்கு வாக்களித்தபடி ஆஃப் ரொடைட். ஹெலனை வழங்குவதற்குள் ஹெலனுக்கும் மெனிலாசுக்கும் மணம் நடந்துவிட்டதா? இல்லை ஆஃப் ரொடைட் வாக்களித்த சமயம் ஹெலன் கன்னியாக இருந்தானா? இந்தக் கேள்விகளில் ஒரு பொருளும் இல்லை. போட்டிக்குள் நுழையலாம்.

ஒலிம்பசில் தேவசபை கூடியது. பழனியப்பன் கதையில் வந்த மாம்பழம் போல் அழகிப் போட்டி ஆப்பிளைப் பெறுவதில் வந்தது. ஏரஸ் ஒரு அபூர்வ ஆப்பிளை விட்டெறிந்து அழகில் சிறந்தவள் எவளோ அவள் மட்டுமே அதை உண்ணலாம் என்று நிபந்தனை விதித்தாள். “தானே அழகி, தனக்கே ஆப்பிள் வேண்டும்” என்று எத்தினா, ஹீரா, ஆஃப்ரொடைட் ஆகிய மூவரும் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டனர்.

இம்மூவரில், “யார் பேரழகி” என்று முடிவுக்கு வரமுடியாமல் சபையில் குழப்பம் வந்தது. ஸீயஸ் தலையிட்டு, ப்ரையம் மகன் பாரிஸை நீதிபதியாக நியமித்தார். ட்ராஸ் மலைப்பகுதிக்கு அம்மூன்று பெண்தெய்வங்களையும் பாரிஸையும் அழைத்துச் செல்லும்படி ஹெர்மஸ் பணிக்கப்பட்டார். அழகுப் போட்டிக்கு ஒத்திகை நடக்கும்போது மூன்று பெண்தெய்வங்களும் பாரிசுக்கு லஞ்சம் வழங்க முன் வந்தனர். போர்க்கடவுளான எத்தினா பாரிசுக்கு போரில் அவனை யாருமே வெல்ல முடியாத சக்தியை வழங்குவதாக வாக்களித்தாள். ஹீராவோ பாரிசை ஆசியாவின் மன்னராக உயர்த்துவதாக வாக்களித்தாள். ஆனால், ஆஃப்ரொடைட் மட்டுமே தன் மேனி அழகை நிர்வாணமாக நின்றுகாட்டி அங்க அவயங்களின் சாமுத்ரிகா லட்சணங்களையும் கூறியதோடு பாரிசுக்கு கிரேக்க இளவரசி ஹெலனையே பரிசாக வழங்கவும் வாக்களித்தாள். ஆகவே, பாரிசுக்குத் தீர்ப்பு வழங்க சிரமம் இல்லாமல் போயிற்று. தன் கையிலிருந்த அபூர்வ ஆப்பிளை ஆஃபரொடைட்டுக்கு பாரிஸ் வழங்கினான். பின்னர், தக்க தருணத்தில் தான் வாக்களித்தபடி ஹெலனைக் கவர்ந்து செல்ல பாரிசுக்கு உதவினாள். இதனால் நிகழ்ந்த ட்ராய் யுத்தத்தில் மெனிலாஸ்- ஹெலனின் கணவன் பாரிசைக் கொல்ல வந்த சமயத்திலும் ஆஃப்ரொடைட் பாரிசைக் காப்பாற்றினாள். தனக்கு ஆப்பிள் கிடைக்காவிட்டாலும் எத்தினா பாரிசின் தீர்ப்பை மதித்ததுடன் ட்ராய் யுத்தத்தில் கிரேக்கர்களும் எதிராக பாரிசுக்கு மட்டும் உதவினாள். இருந்தும் கூட, ஒடிஸஸின் தந்திரத்தால் ட்ராய் வெல்லப்பட்டது. எத்தினா சிலையும் களவு போனது. ஆஃப்ரொடைட்டால் விதியை எதிர்த்து வெல்ல முடியவில்லை. டையோமிடசிடமிருந்து தன் மகன் ஏனியசைக் காப்பாற்றி அயல்நாட்டில் மறைவாக வாழச்செய்து ட்ரோஜன் வம்சாவளியை ஆஃப்ரொடைட் காப்பாற்றினாள்.

ஆஃப்ரோடைட்டின் அசல் கணவன் ஹெஃபாஸ்டஸ் என்றாலும் ஆப்பிளை விட்டெறிந்த ஏரசே ஆஃப்ரோடைட்டின் ஆசை நாயகன். ஆஃப்ரோடைட் பெற்றெடுத்த கலைச் செல்வங்களாக விளங்கிய ஈராஸ் காதலுக்கு தெய்வம், காதலுக்கு விடை தரும் ஆண்டிராஸ், பயத்தைக் குறிக்கும் போபஸ், இசையைக் குறிக்கும் ஹார்மோனியா ஆகிய தெய்வங்களுக்கு ஏரஸ் தந்தையாக கிரேக்க புராணம் கூறுகிறது. தாய் ஆஃப்ரொடைட்.

ஆஃப்ரோடைட் குரோனஸ் காலத்துப் பழைய தெய்வம் என்பதால் ஏராளமான ஆண்தெய்வங்கள் ஆஃப்ரொடைட்டின் கணவன்களாக வரிக்கப்பட்டுள்ளன. ஹெஃபஸ்டஸ், ஏரஸ் தவிர அதோனிஸ் என்ற சிரிய தெய்வமும் உண்டு.
சிரிய நாட்டின் மன்னன் தீயஸ். தீயஸின் மகள் மைரா ஒரு முறை எதுவோ தவறு செய்துவிட்டு ஆஃப்ரோடைட்டின் சாபத்திற்கு ஆளாகிறாள். சாபத்திற்குக் கட்டுப்படாவிட்டால் உயிருக்கே அபாயமாகிவிடும். ஆஃப்ரோடைட்டின் சாபத்தின்படி மைராவின் தந்தையுடன் தகாத உறவு கொள்ளவேண்டும். மைரா தாதியின் உடை அணிந்து பதினொன்று இரவுகள் தந்தை அறியாதபடி தந்தையுடன் உடலுறவு கொண்டாள். பன்னிரண்டாவது இரவில் தீயஸ் தாதி உடையில் வருபவள் தன் சொந்தமகள் என்று கண்டுபிடித்துச் சொல்லொணாத் துயரமும் சினமும் பொங்கி எழுந்து மைராவைக் கொல்ல முயற்சிக்கவே அவள் தப்பி ஓடுகிறாள். தீய்ஸ்ஸோ விட்டபாடில்லை. துரத்தித் துரத்திக் கொல்ல வருவதைக் கண்ட ஆஃப்ரொடைட் மைரா மீது இரக்கப்பட்டு அவளை ஒரு மரமாக மாற்றுகிறாள். அப்படி மாற்றப்பட்டது. அதுவே வீமர் மரம். பத்துமாதம் கழிந்ததும் அந்த வீமர் மரம் சுயமாகப் பிளந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றது. அதுவே அதோனிஸ். இந்த தெய்வக்குழந்தையின் அழகில் ஆஃப்ரொடைட் மதிமயங்கினாள். அதோனிஸை வளர்க்கும் பொறுப்பு பெர்சிஃபோனிடம் வழங்கப்பட்டது. அதோனிஸை பெர்சிஃபோனும் விரும்பியதால் அதோனிஸை ஆஃப்ரோடைட்டிடம் திருப்பித்தர முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள். ஆஃப்ரோடைட் ஸீயஸ்ஸிடம் முறையிட்டாள். ஸீயஸ் வழங்கிய தீர்ப்பின்படி ஆண்டில் நான்கு மாதம் பெர்சிஃ போனிடமும் நான்கு மாதம் ஆஃப்ரோடைட்டிடமும் மீதி நான்கு மாதம் அதோனிஸ் விரும்பும் இடத்தில் இருக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. அதோனிஸ் விரும்பிய இடம் ஆஃப்ரோடைட்டின் அரவணைப்பு என்பதால் ஆண்டில் எட்டுமாதம் அவன் ஆஃப்ரோடைட் வசமே இருந்தான். அதோனிஸ் வளர்ந்து பெரியவனாகிறான். அதோனிஸ் மீது ஆஃப்ரோடைட் அளவற்ற அன்பை வழங்குவதைப் பொறுக்கமுடியாத ஏரஸ் ஒரு காட்டில் கரடி உருவில் அதோனிஸ் வரவுக்காக காத்திருந்தான். ஏதுமறியாத அதோனிஸ் அக்காட்டு வழியே சென்றபோது கரடி உருவில் இருந்த ஏரஸ் அதோனிஸைக் கடித்துக் கொன்றுவிடுகிறான். அதோனிஸ்ஸைக் காப்பாற்ற ஆஃப்ரோடைட் விரைவாக வரும்போது அவள் காலில் முள் குத்தி ரத்தம் பீறிட்டெழுந்து வெள்ளை ரோஜா மீது விழுந்து சிவப்பு ரோஜாவானது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் வெள்ளை ரோஜா (ஜீன் மாற்றம் பெற்று?) சிவப்பு ரோஜாவானது. ஆஃப்ரோடைட்டுக்கு முள் குத்திய அதே நேரம் அதோனிஸ் உயிர் பிரிந்தபோது அவன் உடலிலிருந்து பீறிட்டெழுந்த ரத்தமே அனிமோன் பூக்களாயின. இன்னமும் மத்திய தரைக்கடல் நாடுகளில் அனிமோன் பூக்கள் அதோனிஸ் இறந்ததால் நிகழ்ந்தது என்று மக்கள் நம்புவதுண்டு.ஆஃப்ரோடைட் அத்தோனிஸ் வழிபாட்டை உருவாக்கியதுடன் சிரியாவில் அத்தோனிஸ் தோட்டம் அமைத்து அத்தோனிஸ் நினைவாகப் பூந்தொட்டிகளில் மலர் விதைகளைத் துõவி அவை முளைத்துவந்ததும் வெந்நீர் ஊற்றி வேண்டுமென்றே வாடச்செய்யும் சடங்கு நிகழ்ந்துவருகிறது.

ஆஃப் ரொடைட் உலக அழகிகளின் தெய்வம் என்றாலும் அழகு தேவதை என்றாலும்கூட ஏனோ கோபம் வந்தால் பத்ரகாளியாகவும் மாறக்கூடியவள். மனிதர்களுக்கு சாபம் வழங்குவதில் சளைக்காதவள். ஈவோஸூக்கு ஒரியோன் மீது விரகதாபத்தை ஏற்படுத்தியவள். லெமோ நகரத்துப் பெண்கள் தன்னை வழிபடாத குற்றத்திற்காக பிளேக் நோயைப் பரப்பியவள். பஃபோஸ் மன்னன் சினிரஸின் புதல்விகளுக்கு ஏராளமாக சோதனைகளை வழங்கி அன்னியர்களுக்கு மணம் செய்துவைத்தாள்.

ஏரஸ் – சாதனையில்லாத தெய்வம்

ஆஃப்ரோடைட்டின் ஆசை நாயகர்களில் ஒருவனான ஏரஸ், எல்லாம் வல்ல இறைவனான ஸீயஸ் – ஹீராவின் புதல்வனாக இருந்தாலும் இலியத் போரில் தோற்றோடும் நிலைதான் ஏற்பட்டது. ஏரஸ் தன் புதல்வர்கள் போபஸ் தெய்மஸ் உட்பட ட்ரோஜன் யுத்தத்தில் குதிரைப் படைகளுடன் நின்றாலும் சாதனை ஒன்றுமில்லை. அத்தினாவைப் போல் ஏரஸ்ஸும் போர்க்கடவுள்தான். குதிரைகள் மிகுந்த திரேசைத் தன் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். குதிரைகள் இருந்து என்ன பயன். போர்த்ததந்திரம் தெரியாத தெய்வம். ட்ரோஜன் யுக்கத்தில் எத்தினாவின் அருளைப் பெற்ற டையோமிடஸ் எய்த அம்பு ஏரஸின் உடலைத் தைத்துவிடவே ஒலிம்பசுக்கு ஓட்டமைடுத்தான். ஸீயஸ் மருந்திட்டு உயிர்பிழைத்தான். ஹெக்டார் வஞ்சனையால் கொல்லப்பட்ட பின்னர் ட்ராய் படைத் தளபதியான அமேசான் ராணி பெந்தசீலியா ஏரசின் மகளுமாவாள். பெந்தசீலியா நிஜமான வீராங்கனை. அக்கில்லஸை எதிர்த்து வீரப்போர் புரிந்தபோது உருண்ட கிரேக்கப்படை வீரர்களின் தலைகள் எவ்வளவோ இருப்பினும் இறுதியில் மாவீரனான அக்கில்லிஸின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் தான் விரும்பிய அக்கில்லஸின் வாளுக்கு பலியான போது புன்னகையுடன் அவள் இறந்தபோது, விதியின் கொடூரத்தை எண்ணி அக்கில்லஸ் பெந்தசீலியாவுக்காகக் கண்ணீர்விட்ட சமயம் ஆத்திரத்தில் ஏரஸ் அக்கில்லசைக் கொன்று பழிவாங்க ஈட்டியை எறிந்தபோது ஸீயஸ் தன் வஜ்ராயுதத்தை எறிந்து ஏரசின் ஈட்டியைத் துõளாக்கி அக்கில்லஸைக் காப்பாற்றினார்.

திரேஸ் மன்னனாக வாழ்ந்த ஏரஸ் தன் மகள் ஹார்மோனியாவுடன் உறவு கொண்டு உருவாக்கப்பட்டவர்களே அமேசான் அழகி அசுரிகள். அவர்களில் பெந்தசீலியா ஒருத்தி. திபெசில் ஏரசுக்குச் சொந்தமான நீரூற்றை ஏரசின் மைந்தன் ஒரு நாகாசூரன் காவல் காத்தான். திபெசில் ஒரு புதிய நகரை உருவாக்க கேட் மஸ் வந்தபோது அந்த நாகாசூரனைக் கொன்றுவிடுகிறான். இந்தப் பாவத்திற்கு விமோசனம் செய்ய ஏரசிடம் கேட்மஸ் எட்டுமாதம் அடிமையாக வேலை செய்தான். எட்டுமாத தண்டனை முடிந்ததும் ஹார்மோனியாவை கேட்மசுக்கு மணம் செய்வித்தான். அநேகமாக கேட்மஸ் பெற்ற இரண்டாவது தண்டனை இத்திருமறைமாயிருக்கலாம். இதற்குப் பழியாக ஹிராக்ளீசிடமும் ஏரஸ் காயம்பட்ட கதை உண்டு. ஏரசின் மகன் சைக்னஸுடன் ஹீராக்ளீஸ் சண்டையிட்டபோது ஏரஸ் குறுக்கே தலையிட்டான் ஹீராக்ளீஸின் வாள் அவன் தொடையில் பாய்ந்து காயமானது. ஏரஸ் தோல்வியுடன் திரும்பினான்.

ஒருமுறை ஏரியோப்பாக்கஸ் மலை அருவிக்கரையில் பாசிடான் மகன் ஹாலிரோத்தியஸ் ஏரிசின் மகள் அல்சிப்பியுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்ததை கவனித்த ஏரஸ் பாசிடானின் மகனைக் கொன்றுவிடுகிறான். விஷயமறிந்த பாசிடோன் ஸீயஸ்ஸிடம் முறையிட்டான். தேவசபை கூடி நீதிவிசாரணை நடந்தது. ஏரஸ் எச்சரிக்கப்பட்டு இறுதியில் அக்கொலைக்குற்றம் மன்னிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏரியோப்பாகஸ் மலையில் கொலைகளுக்குத் தீர்ப்பு வழங்கும் மரபு பிற்காலத்திலும் பின்பற்றப்பட்டது.

ஏரஸ் ஒரு கொலைகார தெய்வமாக விளங்கியதால் ஏரஸின் வாரிசுகள் நற்பண்புகளைப் பெறவில்லை. ஆஃப்ரொடைட்டைத் தவிர பைரின் அரக்கியுடன் ஏரஸ் உறவு கொண்டு சைன்கஸ், டையோ மீட்ஸ், திரேஷியஸ், ஒயிநாமஸ் ஆகிய நான்கு அசுரப்பிள்ளைகளை பைரின் பெற்றெடுத்தான். அவர்களில் மூவரை ஹீராக்ளீஸ் வதம் செய்து கொன்றான். ஒயிநாமஸ் மட்டும் எஞ்சியிருந்தான். இவன் கொலைவெறி பிடித்த தலைவெட்டி தெய்வமாயிருந்தான். இறுதியில் இவன் தலையும் வெட்டப்பட்டது. ஒயிநாமஸுக்கு அழகிய புதல்வி உண்டு. அவர் பெயர் ஹிப்போதாமியா. ஒபிநாமசிடம் அழகிய ரதம் இருந்தது. ஒயிநாமஸ் சிறந்த தேரோட்டி. வேகமாக ரதம் ஓட்டுவதில் வல்லவன். தன் மகளை மணப்பவர் தேர்-ரத ஓட்டத்தில் வெல்ல வேண்டும். தோற்கும் வீரர்களின் தலை எலிஸ் கோட்டை வாசலில் துண்டிக்கப்பட்டுக் காட்சிப் பொருளாக வைக்கப்படும். ஒயிகாமஸ் எலிஸ் நகர மன்னனும் ஆவான். நுõற்றுக் கணக்கில் தலைகள் உருண்டனவே தவிர ஹிப்போத்தாமியாவுக்குத் திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருந்தது. ஹிப்போத்தாமியா டான்டாலஸ் மகன் பிலாப்ஸைக் காதலித்துவந்தாள். பிலாப்ஸ் ரதஓட்டத்தில் வெல்ல ஹிப்போத்தாமியா சூழ்ச்சி செய்தாள். ஒயிநாமசின் தேரோட்டி மைத்திலசுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது. அவன் ஒயிநாமஸ் அறியாதபடி ரதத்தில் இருந்த பித்தளைக்கடையாணியைக் கழட்டி அதே நிறத்தில் அச்சாக மெழுகில் கடையாணி செய்து ஒயிநாமசின் ரதத்தில் மாட்டிவிட்டான். பந்தயம் தொடங்கிய சில நிமிடங்களில் ரதம் வேகமாகச் சென்றபோது சக்கரங்கள் கழன்றன. குதிரைகள் ஒயிநாமசைத் தாறமாறாக இழுத்துச் சென்றதில் பாறைகளில் மோதி அவன் உடல் சின்னாபின்னமாகித் தலையும் துண்டிக்கப்பட்டு கோரமாக இறந்தான். பின்னர் ஹிப்யாத்தாமியா – பிலாப்ஸ் திருமணம் எளிதானது.

பாசிடான் – சமுத்திர ராஜன்

பாசிடான் ஸீயஸ்ஸின் அண்ணன். மண்ணுலகையும் விண்ணுலகையும் ஸீயஸ் ஆண்டான். ஆழி சூழ் உலகைப் பாசிடோன் ஆண்டான். சமுத்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவன் பெற்ற விதிப்பயன். சிறுவனாயிருந்தபோது அவன் டெல்சைனஸ் பொறுப்பில் விடப்பட்டான். டெல்சைனஸ் உலோகங்களை வளைத்து ஆயுதங்களைச் செய்வதில் வல்லவன்.டெல்சைனஸின் தங்கை ஹலியாவைப் பாசிடான் மணந்துகொண்டு ஆறு புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் பெற்றுக் கொண்டான். அப்புதல்வியின் பெயர் ரோடஸ். அதே பெயரில் அவன் நினைவாக கிரேக்கத் தீவு உண்டு.

பாசிடான் ரதத்தை நாகமுகமுள்ள குதிரை இழுக்கும். பாசிடானின் துணைக்கு ஏராளமான கடல் பிராணிகளும் நீர்தேவதைகளும் புடை சூழ்ந்துநிற்கும். பாசிடோன் நினைத்த மாத்திரத்தில் தன்னை ஒரு பாம்பாகவோ, ஸ்லாகவோ, டால்ஃபினாகவோ முதலையாகவோ, திமிங்கலமாகவோ மாற்றிக்கொண்டு போராட முடியும். ஒரு மாயாவி அரக்கனும் கூட. கடல்மட்டுமல்ல. கடற்கரைகளிலும் அவனுக்கு செல்வாக்கு உண்டு. கடற்கரைகளில் மலைகளையும் ஆறுகளையும் அவன் தோற்றுவித்தான்.

ஸீயஸ்ஸுக்கு எதிராக ஹீரா செய்த சூழ்ச்சியில் பாசிடான் பங்கு பெற்ற குற்றத்திற்கு தண்டனையாகச் சில ஆண்டுகள் ட்ராய் மன்னன் லாவோமிடானிடம் அடிமையாகப் பணி செய்ய நேர்ந்த போது ட்ராய் கோட்டை மதில் கட்டுமானப் பணிகளை அயாக்கஸுடன் இணைந்து செய்தான். வேலை செய்த பணிகளுக்குரிய சன்மானத்தை லாவோமிடான் வழங்கவில்லை. ஓர் அசுரப்பிராணியை அனுப்பி ட்ராய் நகரை அழிக்கச் செய்தான். ஹீராக்ளீஸ் அப்பிராணியைக் கொன்றுவிட்டாலும் கூட லாவோமிடானின் புதல்வி ஹிசையோனை அப்பிராணி விழுங்கிவிட்டதை யாராலும் தடுக்க முடியவில்லை. இலியத் போரில் ட்ரோஜனுக்கு உதவாமல் கிரேக்கர்களுடன் சேர்ந்து கொண்டான்.

பசுமை நிரம்பிய ஆர்கோஸ் பிரதேசத்தை வழங்கும்படி ஸீயஸ்ஸிடம் விண்ணப்பித்தபோது ஹீராவும் அது எனக்கு வேண்டுமென்று கூறினாள். ஃபோராரியாஸ் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தீர்ப்பு ஹீராவுக்கு சாதகமாக அமைந்துவிட்டதால் தோற்றுப்போன பாசிடான் ஆர்கோஸை ஒரு பஞ்சப் பிரதேசமாக மாற்றினாள். நீரூற்றுக்களை வற்றும்படி செய்தான். அந்த சமயத்தில் தானாஸும் தானாஸின் ஐம்பது புத்திரிகளும் ஆர்கோஸ் வந்தனர். அந்த ஐம்பதில் ஒருவள்தான் அமிமோன். அமிமோன் மீது மோகம் கொண்டான். அந்த மோகத்தில் அமிமோன் சொற்படி ஆர்கோஸ் நீருக்களைத் திரும்ப வழங்கிப் பசுமையாக்கினான். அமிமோன் மூலம் நாப்ளையஸ் என்ற வீரமகனைப் பெற்றான்.

பாசிடானுக்கும் ஏரஸுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. பல மனைவியர் மூலம் அவன் பெற்ற ஒன்பது பிள்ளைகளில் ஒன்று கூட உருப்படி இல்லை. தீயவர்களாகவே விளங்கினர். தாசா மூலம் பெற்ற பாலிஃபீமஸ். மெடுசா மூலம் பெற்ற கிரைஸோர், ஃபிகாசஸ், இஃபிமீடியா மூலம் பெற்ற அலோதே, செர்சயான், சைரான், லாஸ்ட்ரைஜன் மன்னன் லாமோஸ், ஆர்ட்டமிசால் கொல்லப்பட்ட ஓரியன் ஆகியோர் பாசிடானின் அரும்புதல்வர்கள்.

வரலாற்று அடிப்படையில் ஸீயஸைப்போல் பாசிடானும் வம்சாவளி மூலகர்த்தாவும்கூட. சிடோன்/சிரியா மன்னர் அஜினஸ், சிசியோன், கோரிந்த மன்னர்களின் தாத்தாவும், பைலோஸ் மன்னர்கள் நெஸ்டஸ், பீலியஸ் ஆகிய மன்னர்களின் முன்னோர்களும் திடன் மன்னர்களான ஆம்ஃபியான், செத்துõஸ் போன்றோரும் பாசிடானின் வாரிசுகளாவர். அடுத்த இதழில் கிரேக்க எமதர்மர்ஹேடஸ் மற்றும் கிரேக்க இந்திரன் டையோனைசஸ் அறிமுகமாகிறார்கள்.

(தொடரும்)