இங்கிலாந்து நாட்டில் ஓவிய நிகழ்வுகள்
Vorticism
உணர்வுச் சூழலில் அரூப வெளிப்பாடு
முதல் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் மேற் கொள்ளப்பட்ட கலை சோதனை முயற்சிகளின் பயனாக ஓவியம் பற்றின சித்தாந்தமே புரட்டிப் போடப்பட்டது. லண்டன் நகரில் நிகழ்த்தப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் ஓவியக்காட்சிகள் (Post Impressionists show in 1910, Paul Cezanne and Paul Gauguin show in 1911, Italian futurist’s show in 1912 and second Post Impressionists show in 1912) ஆங்கில கலைச் சிந்தனையை நவீன பாதையில் திருப்பும் உந்து சக்தியாக விளங்கின. அதன் பயனாகத் தோன்றியதுதான் Vorticism இயக்கம். முன் சொன்ன நிகழ்வுகள் இல்லாமல் அவ்வியக்கம் உருவாயிருக்க முடியாது. (Vortex என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘சுழல்’ என்று அகராதி பொருள் கூறுகிறது.) ஆங்கில ஓவியர் Wyndham Lewis என்பவர் அவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார். அது futurism, Cubism ஆகிய இரண்டு பாணிகளின் தாக்கமும் கலந்த ஒன்றாக மலர்ந்தது. தாங்கள் Anglo-Saxon வழிவந்த அறிவு ஜீவிகள் என்னும் அகந்தையுடன் அவ்வியக்கம் கொஞ்சம் முரட்டுத்தனம் வெளிப்படும் விதமாகவே செயற்பட்டது.
விமர்சகரும் ஓவியரும் Omega workshops என்ற கலைப் பொருள் அங்காடியின் முதலாளியுமான Roger Fry யிடம் பல ஓவியர்கள் தொடர்பு கொண்டு இருந்தனர். கலை, கைவினைப் பொருள்களை ஓவியர்களைக் கொண்டு செய்வித்து அங்காடி விற்பனை செய்தது. ஓவியர் யார் என்பது இல்லாதபடி Omega என்னும் பெயருடன் பொருள்கள் விற்கப்பட்டன. ஓவியர் Wyndham Lewis யும் அவர்களில் ஒருவர். ஆனால் விரைவில் Roger Fry யிடம் தோன்றிய மனவேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி Rebel art center (கீரைக்கடைக்கு எதிர் கடை) என்னும் பெயரில் அங்காடி ஒன்றை தொடங்கினார். இரு அங்காடிகளின் கருத்து வேறுபாடு என்பது கடுமையாகி சர்ச்சைகள் தீவிரமடைந்தன.
தங்களை Futurists என்று அடையாளப்படுத்துவதை Wyndham Lewis ஏற்க வில்லை. அதற்கு எதிர்வினையாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவரது நெருங்கிய நண்பரும் கவிஞருமான Ezra Pound தேர்ந்தெடுத்த பெயரான Vorticism என்னும் பெயருடன் இயக்கம் முறைப்படி அது நடத்திய வார இதழான Blast இல் வெளியாகியது. Wyndham Lewis தொடர்ந்து அதில் ஓவியம் சார்ந்த பல கட்டுரை களை வெவ்வேறு புனைப்பெயர்களில் எழுதினார்.
இத்தாலிய Futurist இயக்கத்தை தொடங்கிய ஓவியர் F. Marinetti யின் புதிய சிந்தனையால் Vorticism பெரிதும் ஈர்க்கப்பட்டது. தனது வார இதழில் Futurism கொள்கைகளை வெளிப்படையாக முன்வைத்தது. இவ்விரண்டு இயக்கங்களும் தொழிற் புரட்சி மக்களுக்கு அறிமுகப்படுத்திய இயந்திர சக்தியால் பெரிதும் ஈர்க்கப் பட்டிருந்தன. அவர்களது படைப்புகளில் அதன் தாக்கம் பரவலாக கருப்பொருளாகக் கையாளப்பட்டது. Futurist உத்தியில் ஒரு உருவத்தின் தொடரசைவு என்பது கித்தானில் அதன் வேகம் வெளிப்படும் விதத்தில் ஓவியமாயிற்று. Vorticism அதிலிருந்து மேலும் பயணப்பட்டு அறிமுகமற்ற இருண்மை மிகுந்த ஒரு சூழலில் பார்வையாளனைக் கொண்டு சென்று செருகியது. Futurist இயக்கம் இயந்திரப் பயன் பாட்டால் நிகழவிருக்கும் வருங்கால நன்மைகளென்று கணித்தவற்றில் மனித சக்தியின் மெத்தனம் என்பது நீக்கப்பட்டு மனித இனம் புதிய எல்லைகளை தொடும் என்பது முக்கியமானது. அக்கருத்தை ஏற்றுக்கொண்ட Vorticism இயக்கம் அத்துடன் நின்று விடாமல் எதிர்காலத்தில் இவ்வகை இயந்திர சக்தியின் ஆதிக்கம் மனித குலத்துக்கு எவ்விதம் அழிவு தரக்கூடும் என்றும் சிந்தித்தது. அதுபற்றின அச்சம் கொண்டது. மனித உறவுகளையும் உணர்வுகளையும் சிதைத்துவிடும் அபாயம் பற்றிய கவலைகளை ஓவியக் கருப்பொருளாக்கியது. இயந்திர ஆதிக்கம் பற்றின அச்சமும் அதே சமயம் அவற்றின் மேல் அவர்களுக்கிருந்த மரியாதையும் ஓவியர்களுடைய படைப்புகளில் வெளிப்பட்டன. ஆனால் அவற்றில் ஒரு தெளிவற்ற குழப்பம் மிகுந்து காணப்பட்டது. Wyndham Lewis ஒரு சுயநலவாதி என்றும், அவ்வியக்கத்தின் முதன்மையானவர் இல்லையென்றும், எப்போதும் தனது படைப்புகளையே முன் நிறுத்தி செயற் பட்டவரென்றும் பின்னாள் கலை வல்லுனர் விமர்சித்தனர்.
வெறும் மூன்றே ஆண்டுகளே உயிர்த்திருந்த அது முதல் உலகப்போரின் காரணமாகக் கலைந்து போயிற்று என்றபோதும், Vorticism இயக்கம் Futurist இயக்கத்துக்குப் பின்னர் 20ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கலை சிந்தனையை முன்னெடுத்துச் சென்ற வகையில் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.
Independent Group
சுதந்திர உதிரிகள்
இலண்டன் நகரில் 1952-55 களில் Institute Of Contemporary Arts என்று அழைக்கப்பட்ட அமைப்பின் வளாகத்தில் இங்கிலாந்து தேசத்து ஓவியர், சிற்பி, கலை விமர்சகர், கட்டடக் கலைஞர் என்பதாக ஒரு கூட்டம் ஓவியர் Richard Hamiton, சிற்பி/ஓவியர் Eduardo Paolozzi இருவரின் உந்துதலில் தொடர்ந்து சந்தித்து வந்தது. அங்கு அச்சந்திப்புகளின்போது விஞ்ஞானம், தொழில் நுட்பம், இசை, அரங்கம், கலைகள் போன்றவற்றவை சார்ந்த கருத்துப் பறிமாற்றங்கள், அவை சார்ந்த விவாதங்கள் போன்றவை விரிவான விதத்தில் நிகழ்ந்தன. எனினும் படைப்பதில் அக் கலைஞர்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத விதமாகவே செயற்பட்டனர். எழுத்தாளரும், கட்டிடக் கலை விமர்சகருமான Rayner Banham குழுவின் தலைமைப் பொறுப்பில் இயங்கினார்.
இலண்டன் நகரில் Whitechapel Art Gallery என்னும் கலைக்கூடத்தில் குழுவினர் ஒரு படைப்புக் கண்காட்சியை 1954இல் நடத்தினர். ‘This is Tumorrow” என்று காட்சிக்குத் தலைப்பிட்டனர். அந்த காட்சி இங்கிலாந்தின் நவீனக் கலை வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஓவியர்கள், சிற்பிகள், கட்டிடக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், க்ராஃபிக் அச்சுக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து 12 தனித் தனிகுழுவாகத் தங்களை அமைத்துக் கொண்டு படைப்பு களை உருவாக்கினர் என்பது அப்போது அதன் சிறப்பம்சமாக ஆயிற்று. அவற்றில் Richard Hamilton, John voelcker, John McHale மூவரும் கூடிப் படைத்த ‘அறை’ (Room) என்னும் படைப்பு என்றும் நினைவில் இருக்கக்கூடிய ஒன்றாக அமைந்திருந்தது. அக்காட்சி மூலம் அவர்கள் மக்கள் அதுவரை அதிகம் அறிந்திராத புதிய கலாச்சாரம் பற்றியும், பொதுஜன ஊடகம் குறித்தும், அவர்களின் சமகால வாழ்க்கையைப் பற்றியும், கலையில் அவைபற்றின புதிய அணுகுமுறை சார்ந்த செய்தியையும் சொன்னார்கள். அந்தக் காட்சி பின்னர் Pop Art என்னும் கலை இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாயிற்று.
1955 களில் குழுவினர் அமைப்புரீதியாக சந்தித்துக் கொள்வது என்பது நின்று விட்டது. எனினும், 1962-63 வரை தனிப்பட்ட முறையில் அவர்கள் சந்திப்பது என்பது நின்றுவிடவில்லை. படைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருந்தது.
குழுவில் இருந்த சிலர்
Lawrence Alloway கலை விமர்சகர்
Richard Hamilton கட்டடக் கலைஞர்
NigilHenderson ஓவியர், புகைப்படக் கலைஞர்
John McHale ஓவியர்
Eduardo Paolozzi ஓவியர், சிற்பி
Alison
Peter Smithson இருவரும் கட்டடக் கலைஞர்
New British Sculpture Group
கிட்டும் சாதனம் கொண்டு வாழ்க்கை விமர்சனம்
1980 களின் தொடக்கத்தில் இலண்டன் நகரில் இருந்த Lisson Gallery யுடன் சிற்பிகள் சிலரைக் கொண்ட குழு தொடர்பு கொண்டு இயங்கி வந்தது. அவர்களுக்கு என்று பொதுவான அணுகுமுறையோ, எண்ண ஓட்டமோ, பாணியோ அல்லது கொள்கையோ ஏதும் இருக்கவில்லை. என்றாலும் அவர்கள் ஒன்றாகவே தங்கள் கலைப்படைப்புகளை செய்தார்கள். பழைய மரபுரீதியான உத்திகள், சாதனங்கள் இவைகளைக்கொண்டு படைப்புகளை உருவாக்கினார்கள். தங்களின் தினசரி வாழ்க்கையுடன் இவற்றைத் தொடர்புப் படுத்தினார்கள்.
[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]
[/DDET]
(முற்றும்)
வாசகர்களுக்கு வணக்கம்.
இந்த ஓவியக் கட்டுரைத் தொடரின் இறுதிக் கட்டுரை இது. இவற்றை முதல் பகுதியாக கொள்ளலாம். அடுத்த பகுதியாக ஐக்கிய அமெரிக்காவிலும் இன்னும் வேறு சில நாடுகளிலும் நிகழ்ந்தவை பற்றிப் பிறகு வாய்ப்புக் கிட்டும்போது உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.
அன்புடன்,
வந்தனம் சொல்லி,
அரவக்கோன்
(அ.நாகராஜன்)