வாசகர் மறுவினை

top

கடந்த வாரம் கால வெள்ளத்தில் கரைந்து போன கலைஞர்கள் என்னும் தலைப்பில் திரு. ப. கோலப்பன் என்பவர் எழுதியதாக ஒரு கட்டுரை சொல்வனம் என்னும் மாதமிருமுறை இணையதள இதழில் 31 / 12 / 2011 வந்திருப்பதாகவும் அதன் மறு பதிப்பு TDR Times – ல் வெளியிடப்பட்டு இருந்தது.

நான் இந்த கடிதம் எழுதுவதற்கு காரணம் ஒரு தகவல் மிக மிக தவறாக அதுவும் மிகவும் மிகைபடுத்தப்பட்டு அது சொல்வனம் இணைய தளத்தில் வெளியிடப்படிருப்பதை மறுப்பு தெரிவிக்கத்தான்.

சொல்வனம் இதழில் தரப்பட்ட தவறான தகவல் இதுதான்

இந்த ஊரில் ஒரு நாயுடு ரைஸ் மில் வைத்திருந்தார். அரையணாவுக்கு நெல் அரைத்துத் தருவார். கூலி அதிகமாக இருக்கிறது என்று எல்லோரும் வீருசாமி பிள்ளையிடம் கூறினார்கள். நாயுடு அவருக்கு நண்பர். காலணாவுக்கு அரைத்துத் தருமாறு நாயுடுவிடம் கேட்டுக் கொண்டார். நீரு ஒரு மில் வைச்சு காலணாவுக்கு அரைத்துக் கொடும் என்றார் நாயுடு.

மேற்கண்ட இந்த தவறான தகவலை எழுதிய கட்டுரையாளருக்கு கீழ்கண்ட சில விவரங்களை தர விரும்புகிறேன்.

காலஞ்சென்ற இசை கலைஞர் திரு. வீருசாமி பிள்ளையும் சரி திரு. ஜெயராம நாயுடுவும் சரி இருவருமே திருவிடைமருதூரில் சிறு வயது முதல் அடி மட்டத்திலிருந்து தங்களது வாழ்க்கையில் சிறுக சிறுக வளர்ந்து ஒரு வளமான நாணயமான ஒரு வாழ்க்கையினை அமைத்து கொண்டவர்கள். அதுவும் தங்களது உழைப்பையே மட்டுமே மூலதனமாக வைத்து.

திரு வீருசாமி பிள்ளை அவர்கள் பிரபல இசை கலைஞர் என்னும் முறையில் இருந்து விட்டதால் அவரது வாழ்க்கை சம்பவங்கள் சாதாரணமாக வெளிவந்துவிட்டன. சொல்வனம் இதழிலும் அப்படியே வந்திருக்க வாய்ப்பு.

ஆனால் திரு. ஜெயராம நாயுடு அவர்களை பற்றி இந்த கட்டுரையாளருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்று தான் நான் நினைக்கிறேன். அப்படி தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் எழுதி இருக்கவே மாட்டார்.

எனவே எனக்கு தெரிந்த ஜெயராம நாயுடு அவர்களை பற்றி நான் தெரியபடுத்துவதுதான் சரியாக இருக்கும் என்று நான் சில தகவல்களை சொல்ல விரும்புகிறேன்.

காரணம் நான் திருவிடைமருதூரில் பிறந்து வளர்ந்து 1984 வரை அவ்வூரிலேயே இருந்திருக்கிறேன். மேற்படி இருவரையும் நான் பார்த்திருக்கிறேன்.

திரு. வீருசாமிபிள்ளை வடக்கு வீதியில் தனது வீட்டு திண்ணையில் காலையில் நாதஸ்வரத்தில் சாதகம் செய்வதையும் பார்த்திருக்கிறேன். திரு. ஜெயராம நாயுடு மில்லில் கல்லாவில் அமர்ந்து இருப்பதையும் சரி மிஷினில் மாவு அரைத்து கொடுப்பதையும் சரி இரண்டையுமே பார்த்திருக்கிறேன்.

திரு ஜெயராம நாயுடு அவர்கள் தனது சிறு வயதில் முதன் முதலில் ஒரு டைலர் கடையில் சட்டைக்கு காஜா தைத்து கொடுக்கும் ஒரு சிறிய பையனாக தனது வாழ்க்கையினை தொடங்கியவர். .

தனது அயராத உழைப்பின் மீது இருந்த நம்பிக்கை ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து வாழ்க்கையில் உயர்ந்தவர்.

மேற்படி இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். சாதாரண நண்பர்களாக அல்ல மிக மிக நெருங்கிய நண்பர்களாக அதுவும் தங்களது வாழ்நாள் முழுவதும்

திரு வீருசாமி பிள்ளை அவர்கள் வசதி ஏற்பட்ட பின் தனது வசதி வாய்ப்பினை மேலும் பெருக்கி கொள்வதற்காக ஒரு மில்லை ஏற்படுத்தினாரே தவிர . தொழில் போட்டி காரணமாகவோ, பொறாமையினாலோ, சண்டையினாலோ அல்லது வீம்புக்காகவோ அவர் மில்லை ஏற்படுத்தவே இல்லை என்று இதன் மூலம் உங்களுக்கு தெரிய படுத்த விரும்புகிறேன்.

மேற்கண்ட அந்த இருவருமே திருவிடைமருதுரின் மாமனிதர்கள் அதில் ஒருவரை பற்றிய தகவல்களை கொடுப்பதற்காக மற்றொருவரை பற்றி தவறான தகவல் கொடுத்தால் எப்படி சரியாக இருக்கும்.

ஒரு உண்மையினை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதன் பொருட்டுதான் இந்த கடிதம்

வணக்கம்.

இப்படிக்கு
G.SRIDHAR
S/o. Late Ganesan ( Vanchi sirs Brother)
previously resided at No. 69 Mahadaana Street,
Tiruvidaimarudur – 612104.

இக்கடிதத்தை கட்டுரையாசிரியர் ப.கோலப்பன் அவர்களுக்கு அனுப்பிவைத்தோம். அவருடைய பதில்:

இது உண்மையாக இருக்கலாம். ஏனென்றால் அவர் அந்த ஊர்க்காரர். நமக்குத் தகவல் தந்த கணேசன் வீருசாமிபிள்ளையுடன் பல ஆண்டுகள் இருந்தவர். அவரும் லீருசாமிபிள்ளை நாயுடுவுக்குப் போட்டியாக ரைஸ் மில் வைத்தார் என்று சொல்லவில்லை. நாமும் அப்படி எழுதவில்லை. ரைஸ் மில் தொடங்கப்பட்டது உண்மை. கணேசனின் கை அதில் அடிபட்டு விரல்களை இழந்ததும் உண்மை. போட்டியாக தொடங்காமல் இருந்திருக்கலாம்.

அன்புடன்,
ப. கோலப்பன்

-o00o-

சொல்வனம் இதழை வாசிப்பது நிச்சயம் பெரும் சுகம்தான்.

பி.ஏ.கிருஷ்ணனுடனான சேதுபதி அருணாசலத்தின் உரையாடல் ‘கலங்கிய நதி’ புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியது. கோலப்பன் எழுதிய சகாராமராவ் குறித்த கட்டுரையும், ஒரு வைஷ்ணவ அடியார் குறித்து சுஜாதா தேசிகன் எழுதிய நம்பி இருந்த வீடு கட்டுரையும் மிக அருமை. சுகா எழுதிய ‘மாங்குலை இல்லாத கல்யாணம்’ ஒரு கல்யாணக் களையுடன் இருந்தது.

சகாராமராவ், திருகோட்டியூர் நம்பி போன்ற மறைந்துள்ள பொக்கிஷங்களை வெளிக்கொண்டுவருவதன் மூலம் இணைய உலகில் சொல்வனம் ஒரு முக்கிய பங்காற்றுகிறது என்று சொல்வதில் நிச்சயம் எந்த மிகையும் இல்லை.

நன்றி
வனமாலி கோபால்

-o00o-

ஐயா,
வணக்கம். சொல்வனம் இணைய இதழ் (இதழ் 63) கண்டேன்.மிக்க மகிழ்ச்சி. ஓவியர் பொன்.வள்ளிநாயகம் வரைந்த ”பொங்கல் வாழ்த்து” கட்டுரை கண்டேன்.மலரும் நினைவுகளை மலர விட்டதோடு பெரும் ஓவியர் கே.மாதவனை பற்றியும் கூறியுள்ளார்.

குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் வந்துவிட்ட இந்த நவின யுகத்தில் அஞ்சலில் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட காலம் ஒரு சுகமான சவையான நினைவுகள்தான்!.

ம,முத்துக்குமார்
மணிமுத்தாறு-627421
நெல்லை மாவட்டம்

bottom