முகங்கள்

என்னுடைய ஞாபக மறதி உலகப் புகழ் பெற்றிருக்க வேண்டும். துரதிருஷ்ட வசமாக எனக்கு உலகப் புகழ் இன்னும் கிடைக்க வில்லையாதலால் அதற்கும் கிடைக்கவில்லை. எடுத்துக் கொண்டு போன பைக்கை மறந்து விட்டு நடந்து வருவதில் துவங்கி, யார் வீட்டையோ நம் வீடு என்று சாவியை வைத்துத் திறக்க முயற்சித்து தோற்றது உட்பட பற்பல. கவனிக்காமல் லேடிஸ் டாய்லெட்டில் நுழைந்து அடிவாங்காமல் தப்பித்ததும் உண்டு.

“ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள், கட்டுன பொண்டாட்டியத் தொலச்சுட்டு வந்து நிக்கப் போற.” என்று வாழ்த்தியவர்களுக்கு ஒரு வார்த்தை இதில் தொனிக்கும் ஆணாதிக்கம் உங்களுக்குப் புரியவில்லையா? கட்டின மனைவி என்ன பொருளா? கைப்பை அல்லது குடை மாதிரி எடுத்துக் கொண்டுபோய் மறந்து விட்டு வருவதற்கு? அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் எத்தனை பேர் இந்த ஞாபக மறதியை விரும்பி வரவேற்கக் கூடும். அவளுக்கும் உயிர் உண்டு. அறிவும் , ஞாபகமும் , ஞாபக மறதியும் உண்டு . தவிர என் ஞாபகசக்தி சற்று வித்யாசமானது. பலரைக் கலங்கடிக்கும். குறிப்பாக மனிதர்களின் பெயர்களும் விவரங்களும் தேவையான கோர்வையுடன் நல்ல ஞாபகத்தில் இருக்கும்.

கொஞ்ச நாள் முன் கும்பகோணம் வழியாகச்செல்ல நேரிட்டது.

“இங்க தானம்மா மஞ்சுளா அக்காவக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கு?”

“எந்த மஞ்சுளா?”

“நீங்க பால்வாடில வேலைபாக்குறப்ப, நான் அரைக்கிளாஸ் படிச்சப்ப திருப்பதி போனப்பக் கூட வந்தாங்களே வீரபாண்டியாபுரத்திலிருந்து.” அரைகிளாஸ் என்பது ஒண்ணாம் கிளாஸில் பாதி. அதாவது எல்.கே.ஜி , யு.கே.ஜி போல பால்வாடி வகுப்புக்கு அரைகிளாஸ் என்று பெயர்.

“அடப்பாவி. கணக்கு வச்சுப் பாத்தா முப்பது வருசம் இருக்குமே. ஒரு தடவ தானே பாத்தோம்.”

“என்னமோ ஞாபகம் இருக்கு..”

“இதெல்லாம் ஞாபகம் வச்சிரு. வேகமா ஓடி வந்து தண்ணிக்குப் பதிலா ஒரு டம்ளர் பாமாயிலக் குடிச்சியே அப்பக் கொஞ்சம் கவனிச்சுப் பாத்திருந்தா ஒரு மடக்குக் குடிச்ச ஒடனெ கண்டு பிடிச்சிருந்திருக்கலாம்.எனக்கும் ஆஸ்பத்திரிச் செலவு மிச்சமாயிருந்திருக்கும்.”

“ரெண்டு ட்ரம்மும் ஒண்ணு போல இருந்துச்சு.ரெம்பத் தாகம் வேற..”

“தேவையில்லாத மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்க. தேவை இருக்கத மறந்துடு.”

அது என்னவோ உண்மைதான். இப்படி இருப்பதால் என்னை ஞாபக மறதிக்காரன் என்று சொல்வதை நான் வெறுக்கிறேன். மாற்று ஞாபகசக்திக்காரன் என்று கூப்பிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடிக்கடி சாவியைத் தொலைத்துவிட்டு வீட்டுக்காரரிடம் உள்ள மாற்றுச்சாவியை வாங்கி டூப்ளிகேட் பண்ணிக் கொண்டிருப்பேன்.

“ஐநூறு ரூவான்னா இப்படி தொலைப்பீங்களா?”

நான் சிரித்தேன். நான் தொலைத்த ஐநூறு ரூபாய்களைச் சொன்னால் வாடகையை ஏற்றிவிடுவார்.
இவற்றைப் பற்றி என் பழைய வகுப்புத்தோழரிடம் (ரோல் நம்பர் 43) சொல்லிக் கொண்டிருந்த போது பைத்தியங்கள் பலவிதம் என்று சொன்னதை நான் ரசிக்கவில்லை.

இன்றும் அப்படித்தான். மஸ்கட் இண்டர்நேசனல் ஏர்போர்ட் வாசலில் தவிப்புடன் காத்திருந்தேன். முக்கியமான மீட்டிங். நான் வந்திறங்கிய ஏர்போர்ட்டையே மாற்றி விரிவாக்கிக் கட்டவேண்டிய காண்ட்ராக்ட் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அது தொடர்பான முக்கியமான மீட்டிங். மனைவி எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டதால் என்னால் எதையும் மறக்க முடியவில்லை. ஆனால் மீட்டிங் எங்கு நடக்கிறது என்ற தகவலை மறந்து விட்டேன். போன் செய்தும் கேட்கமுடியாதபடி செல்போன் சார்ஜ் இறங்கி இருந்தது. அப்படி இல்லாவிட்டாலும் போன் செய்து கேட்டிருப்பேனா என்று சந்தேகம் தான். வரவிருப்பது எல்லாம் பெரும் தலைகள். மீட்டிங் இடத்தைக் கூட ஞாபகம் வைத்திருக்கவில்லை என்பது காண்ட்ராக்டில் சிறிய அளவிலாவது கடின விளைவுகளை ஏற்படுத்தும்.

இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்பு இரண்டுமுறை அந்த இடத்திற்குப் போயிருக்கிறேன். ஆனால் எங்கள் கம்பெனியின் பெருந்தலைகளுடன். எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொண்டனர். நான் அமைதியாக புற்களை வேடிக்கை பார்த்து வந்தேன். இன்று புற்கள் தான் தெரிகிறது. எந்த வழியில் எங்கு போனோம் என்று மறந்து விட்டது.

இந்த மாதிரி இக்கட்டான சூழல்களில் என் மூளை சிறப்பாக வேலை செய்யும். நிதானமாக யோசித்துப் பார்த்தேன்.

முதன் முதலில் மஸ்கட் வந்த பொழுது இவ்வளவு சின்ன ஏர்போர்ட்டா என்று நினைத்தேன். சின்னதாக இருப்பதால் தானே விரிவாக்கப் பணிகளுக்கு நமக்கு காண்ட்ராக்ட் கிடைத்திருக்கிறது . கூட்டமும் அதிகமில்லை. பின் ஏன் விரிவாக்கம். கடல் போல். கல்யாணம் செய்தால் பைத்தியம் தெளிந்து விடும் என்பது போல எடுத்துக் கட்டினால் பயணிகளின் எண்ணிக்கை கூடிவிடுமோ ? அதெல்லாம் நமக்கெதுக்கு. எங்கும் இந்திய வாசம். வெளியே வந்து பார்த்தேன். எங்கள் மேனேஜர் தெளிவாக முகவரியை ஒரு பக்கம் அளவில் ப்ரிண்ட் எடுத்து வந்திருந்தார். வெளியே வரிசை வரிசையாக ஓமானிகள். பார்த்தவுடனேயே அமீரக அரபிகளுக்கும் , இவர்களுக்கும் நல்ல வித்யாசம் தெரிந்தது. அந்த ஓமானிக் குல்லாவையும் (அமீரகத்தினர் சிவப்பும் வெள்ளையும் கலந்த துணியை கருப்பு பிரிமனையுடன் சேர்த்து அணிந்திருப்பர்) , நீள அங்கியும் அணிந்த நூற்றுக் கணக்கான ட்ரைவர்கள். அவர்களும் வரிசையில் . நாங்களும் வரிசையில் நின்று எங்களுக்கு உண்டான டாக்சியில் முன்கூட்டியே பணம் செலுத்தி ஏறிக் கொண்டோம். ஆனாலும் வழியைக் கண்டுபிடிப்பதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டது. நல்லவேளையாக இங்கு அரபி டிரைவர்கள் இங்கிலீஸும், ஹிந்தியும் தேவையான அளவுக்கு பேசியதால் சமாளிக்க முடிந்தது. நீங்கள் ஓமானியா என்று தெரியாமல் கேட்டு விட்டேன். நம்பர் ஒன் ஓமானி என்றார். அப்படியே விட்டுவிட முடியுமா ? அப்படியானால் நம்பர் டூ ஓமானி யார் என்று கேட்டேன். ரிங்பாரி என்று ஏதோ சொன்னார். நிச்சயம் கெட்ட வார்த்தையாக இருக்க வாய்ப்புள்ளது. நம்பர் டூ ஓமானி ஏமானியா என்றேன். முகம் மலர ’ஆமாம், ஆமாம்’ என்றார், இவனுக்கு கொஞ்சம் வரலாறு தெரிந்திருக்கிறது என்று. மீண்டும் அட்ரஸை கண்டு பிடிப்பதில் குழப்பம். நாங்கள் சென்று சேர வேண்டிய முகவரிதாரரை போனில் பிடித்து டிரைவரிடம் போனைக் கொடுத்தார். இவர் பேச, அவர் பேசக் கொஞ்சம் கலவரமாகி விட்டது. வேறொன்றுமில்லை. இங்கிலீஸில் பேசமுடியுமா என்று அவர் கேட்டிருக்கிறார். அதுவரை இவரும் இங்கிலீஸில் தான் பேசி இருக்கிறார் அரபி வாடையுடன். இவருக்குக் கோபம் வந்து விட்டது. அப்ப இதுவரை நான் என்ன சைனீஸிலா பேசினேன் என்று. ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.

நான் அந்த டிரைவரைத் தான் தேடினேன். முகங்களை ஞாபகம் வைத்திருக்கும் ஆற்றல் எனக்கு ரெம்பவே அதிகம். அவரைக் கண்டு பிடித்து விட்டேன். எத்தனை ஆடுகள் இருந்தாலும் தன் ஆடு மேய்ப்பனுக்குத் தெரியும். விமான நிலையத்தின் ஓசிப் பேப்பரை மேய்ந்து கொண்டிருந்தார். நான் அவர் பக்கத்தில் போய் நின்று கொண்டேன் .

“குட் மாரினிங்.”

“அஸ்லாமு அலைக்கும். கிதர்?”

“என்னை ஞாபகம் இருக்கிறதா.”

“ஆயிரம் பேர் வருகிறார்கள்.போகிறார்கள்.எங்கு போகவேண்டும்.”

“கம்பெனி பேர் தெரியும் .ஆனால் எப்படிப் போவெதென்று தெரியவில்லை. முதல் நாள் நீங்கள் தான் எங்களை இறக்கி விட்டீர்கள். முக்கியமான மீட்டிங் இருக்கிறது.”

நம்பர் ஒன் ஏமானி விவகாரத்தையும் , சைனீஸையும் ஞாபகப் படுத்தினேன். அவருக்கு ஞாபகம் வந்து விட்டது .

“ஏழு ரியால் தானே.”

“கரெக்ட். கரெக்ட் அவ்வளவுதான் கொடுத்தோம்.”

“அது ருவி ஏரியா. நான் கொண்டு போய் விடுகிறேன். ஆனால் என்னுடைய டர்ன் இன்னும் வரவில்லை. கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா? ”

“கண்டிப்பாக” – வேற வழி.

முன் நின்ற ஏழெட்டு டாக்சிகளுக்கு ஆட்கள் கிடைத்தனர். ஆனால் சோதனையாக ஒரு டாக்சி மட்டும் ஆள் கிடைக்காதது என்னைப் பொறுமை இழக்கச் செய்தது.

பின் நின்ற டாக்சிக்கு ஆள் நிற்பதைப் பார்த்து அவருக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். இருவரும் உரக்கப் பேசினர். உரக்கப் பேசினாலே கோபமாகத் தானே இருக்க வேண்டும்.

“அவர் தான் முன்னே நிற்கிறார்.அவர் டாக்சியில் போங்கள்.”

எனக்குக் கோபம் வந்தது.

“நான் என்ன சொல்லி இவ்வளவு நேரம் உங்கள் பக்கத்தில் நிற்கிறேன் என்று ஞாபகம் இல்லையா? எனக்கு வழி தெரியாதப்ப அவர் எப்படி என்னைக் கூப்பிட்டு போகமுடியும்”

“அவருக்கு வழி தெரியும்.”

“எப்படி?”

“சில மாதங்களுக்கு முன் அவர் வண்டியிலும் போனீர்களாம். இந்த ஏர்போர்ட் வழியே வந்து இந்த ஏர்போர்ட்டையே இடித்துக் கட்ட வேண்டி, அதற்குண்டான டிராயிங்களைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போனீர்களாம். உங்களை மறக்க முடியவில்லையாம்.”