மகரந்தம்

யூரோப்பிலிருந்து பின்வாங்கும் அமெரிக்க ராணுவம்

மேற்குலகின், குறிப்பாக அமெரிக்காவின் வளங்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகே சாத்தியமாயின. தொடர்ந்து யுத்தத்திற்குப் பிறகும் சாத்தியமானவை என்பதாலும் இந்த நிலை குறித்து இவற்றில் பல நாடுகள் மிக்க பெருமை கொண்டிருந்தன. ஒரு பெரும் யுத்தத்தில் அமெரிக்கா அதன் அத்தனை வளங்களை அழித்த பின்னும் எஞ்சி இருப்பது இத்தனை என்றால் எவ்வளவு பெரும் நிதியை ஆப்பிரிக்க, ஆசிய, லத்தின் அமெரிக்க மக்களிடமிருந்து சுரண்டி இருக்க வேண்டும் என்பதை மேற்கின் மக்களோ, அறிஞர்களோ, அரசியலாளர்களோ அதிகம் பேசுவது இல்லை. ஆனால், சமூக/ அரசியல் ஆய்வாளர்களில் பலரும் காலனியம் உலக மக்களுக்கு நல்லதே செய்தது என்று கூட எதிர்ப் பிரசாரம் செய்யத் தலைப்பட்டிருக்கின்றனர். வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவிலேயே, ஏன் தமிழகத்திலேயே கூட இந்தப் பிரசாரத்தை ஏற்பதோடு நிற்காமல், அதைத் தாமும் செய்யக் கூடியவர்கள் உண்டு.

ஆனாலும் மூன்று தலைமுறைக்கும் காணும் சொத்தையும் ஒரே தலைமுறையில் அழிக்க முடியும் என்பதை மேற்படி மேலை நாடுகள் உறுதி செய்கின்றன. எந்த நாடும் தம் உழைப்பாளர்களுக்கு எதிராகவே அரசியல், பொருளாதார அமைப்புகளை நடத்திக் கொண்டிருந்தால் அந்த நாடு சரிவில் சிக்காமல் இருக்காது என்ற எளிய கருத்திற்கு மேற்படி நாடுகள் ஒரு தெளிவான சான்றாக நிற்கின்றன. கிட்டத் தட்ட நாற்பதாண்டுகளாக மேற்கின் உழைப்பாளர்களுக்கு எதிராகவே அரசியலை நடத்திய மேற்கின் முதலியம், இன்று தன் குவித்த நிதியை என்ன செய்வது என்று தெரியாமல் வைக்கோல்போர் மீதான நாயாக நிற்கிறது. தம் மக்களிடமும் பகிர்ந்து கொடுக்க மனமில்லை, உலகில் வேறெங்கும் முதலீடு செய்யவும் வழியில்லை. வெறுமனே குவித்த வைக்கோல் படிப்படியாக மக்கிப் போவது போல, தம் மக்களை வஞ்சித்து, உலக உழைப்பாளர்களைச் சுரண்டிக் கொன்று குவித்த நிதி இன்று நாணயத்தின் மதிப்பு சரிந்து மக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த மக்களும், சரிவும் அமெரிக்காவை உள்ளிருந்து தின்று கொண்டிருக்கின்றன. உலகைத் தன் ராணுவ பலத்தால் ஆண்டு விட முடியும், தன் முதலிய அமைப்புகளும், ஊடக அமைப்புகளும் தம் இரும்பு முட்டியை வெல்வெட் துணியால் மறைத்துக் காட்டும் என்று நம்பிக் கொண்டு இருந்த அமெரிக்க அரசியலமைப்பு இன்று தன் உள்ளீடு அற்ற கனவுகள் சரிவதைப் பார்க்கத் துவங்கி இருக்கிறது. இராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பின் வாங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசின் ராணுவம், இன்று தன் நிதிப் பற்றாக் குறையால் யூரோப்பிலிருந்தும் பின் வாங்கத் துவங்கி இருக்கிறது. இதனால் அமெரிக்க ராணுவ ஆதிக்க மனோபாவமோ, பலமோ ஒரேயடியாகச் சரிந்து விட்டன என்று நாம் நம்பி விடத் தேவை இல்லை. இன்னமும் அமெரிக்க ராணுவச் செலவு உலக நாடுகளில் முதல் பத்து நாடுகளின் கூட்டுச் செலவை விட அதிகம். ஆம், இதில் சீனாவின் செலவையும் சேர்த்தே சொல்லப்படுகிறது. சீனா உண்மையில் எத்தனை செலவழிக்கிறது என்பது அந்த நாட்டின் கம்யூனியக் கட்சியின் தலைமைக் கொள்ளையருக்கே தெரியும் என்றாலும், தெரிந்த தகவலை வைத்து மேற்படி முடிவு கிட்டுகிறது.

இந்தச் செய்தி அமெரிக்க ராணுவம் யூரோப்பிலிருந்து பின்வாங்குவதைச் சொல்கிறது.

http://www.spiegel.de/international/world/0,1518,808941,00.html

யூரோப் : குறையும் மொத்த உற்பத்தி, கதறும் முதலியம்

முதல் செய்தியில் அமெரிக்க ராணுவத்தின் பின்வாங்கலைப் பேசினோம். அது அமெரிக்காவின் பொது அமைப்புகள் அமெரிக்கப் பண முதலைகளின் பேயாட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாததால், மக்கள் சார்பில் இருந்து அவர்களைக் கண்காணித்து நிற்காமல், அவர்களின் சார்பில் நின்று மக்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முனைந்ததால் இன்று தம் இயக்க சக்தியை இழந்து சுருங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கின்றன. அதே நிலையில் யூரோப்பிய நாடுகள் இல்லை என்றாலும், அவையும் கட்டுப்பாடற்ற நுகர்வும், அரசுகள் முதலிய அமைப்புகளுடன் கொண்ட மோசமான உறவுகளாலும் கீழ்மைப் பட்டு நிற்கின்றன. ஃப்ரான்ஸ், பிரிட்டன், இத்தலி, கிரீஸ், ஸ்பெயின் என்ற பல நாடுகள் இத்தகைய கீழ்மை நிலைக்கு வந்தாயிற்று. இனி எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பயப்படத் துவங்கி உள்ளன இவை. இத்தனைக்கும் இவற்றின் தேச மொத்த உற்பத்தி கடந்த ஆண்டில் ஒரு சதவீதம் போலத்தான் சுருங்கி இருக்கிறது. முதலியத்தின் அடிப்படைகளில் ஒன்று, சுருங்காத உற்பத்தி, தொடர்ந்த பொருள் பெருக்கம். மேன்மேலும் பொருளுற்பத்தி பெருகிக் கொண்டே இருப்பது என்பது முதலியத்தின் பெருங்கனவுகளில் ஒன்று. அப்போதுதான் ஏதோ சிறிது துகள்களை உழைப்பாளர்களுக்குப் பிய்த்துப் போட்டு விட்டு முதலாளர்கள் தம் நிதியைப் பெருக்கிக் கொண்டே இருக்க முடியும் என்பது கோட்பாடு.

ஒரு சதவீதச் சுருக்கத்துக்கு இத்தனை ஓலமிடும் மேற்கின் செய்தித் தாள்கள், பல நூறாண்டுகள் ஆசிய ஆப்பிரிக்க மக்களின் பொருளாதாரத்தைப் பயங்கரச் சுரண்டலுக்கு உட்படுத்தி அம்மக்களை ஓட்டாண்டிகளாக ஆக்கியதை நினைத்தும் பார்ப்பார்களா? மாட்டார்கள் என்பது வரலாற்றுப் பாடம்.

கீழ்க்காணும் செய்தி எபபடி யூரோப்பிய நாடுகளின் ஒரு சதவீதச் சுருக்கமே அவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்பதைச் சொல்கிறது.

http://www.spiegel.de/international/germany/0,1518,808758,00.html

நாட்டின் ஸ்திரத்தன்மையை அளக்க ஒரு செயற்மாதிரி
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடித்ததாம் நரி. அதைப் போல ஆப்பிரிக்க மக்களை சுக்குச் சுக்காக உடைத்து, ஆசியாவை உடைத்துக் கொண்டிருந்த யூரோப்பிய இன ஆய்வு என்ற உருவில் உலவும் இனவெறி இன்று மருத்துவ சுத்தத்தோடு யூரோப்பியரின் ’இனங்களை’ ஆராயத் துவங்கி இருப்பதன் விளைவு ஒன்றை குறித்த செய்தி தான் இது. ‘ஐரோப்பிய நாடுகளில் எவையெல்லாம் நிலைத்து நிற்கும்? எவையெல்லாம் சிதையும்? ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்களை ஒரு பிரதேசமாக அறிவித்துக் கொள்வதில் உள்ள நன்மை என்ன?’ இது போன்ற கேள்விகளுக்கான விடையை மேசை மீது கையை ஊன்றியபடியே விடை கண்டுபிடிக்க வசதியாக ஒரு செயற்மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

http://www.eurekalert.org/pub_releases/2011-11/f-sf-amm111711.php

இப்படி குறுங்குழு வாதத்தால் யூரோப்பியர் தமக்குள் யுத்தம் செய்து தம்மைப் பல முறை ஏற்கனவே மறு வார்ப்புச் செய்ததன் விளைவாகவே உலக யுத்தங்கள் நடந்தன. மறுபடி சரிந்து வரும் பொருளாதாரத்தால் யூரோப்பியரிடையே இணைப்பும், பிளவும் தலை தூக்கத் துவங்கி இருக்கின்றன என்று தோன்றுகிறது. ‘நாம் எல்லாம் யூரோப்பியர்’ என்ற ஒரு பேரமைப்பை உருவாக்க முயன்று தோற்றதின் விளைவு இது என்றும் தோன்றுகிறது.

மெக்ஸிகோவின் குற்ற கும்பல்கள்

மெக்ஸிகோவின் பொருளாதார நிலை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்தியாவை விட மேல் என்று சொல்ல முடியும். ஆனால் உள்ளமைப்பு என்று பார்த்தால் இந்தியாவைப் போலவே மேல் தட்டுக்கும் கீழ் தட்டுக்கும் நடுவில் பெரும் இடைவெளி. இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளைப் போல பெரும் குற்றக் கூட்டங்கள் நாட்டின் பரவலான பகுதிகளை அரசின் கட்டுப்பாட்டை அலட்சியம் செய்து தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்தக் குற்றக் கூட்டங்கள் நடுவே எல்லை விரிப்புப் போட்டியில் நடக்கும் யுத்தங்களில் அரசு தலையிட்டு இவர்களை ஒழித்துக் கட்ட எடுக்கும் முயற்சிகள் தோற்று வருகின்றன, காரணம் தமிழ் சினிமாக் கதைகள் போன்றதுதான். போலிஸ், ராணுவம் ஆகியனவற்றிலும் இந்தக் குற்றக் கூட்டங்களின் ஆட்கள் நிறைய உண்டு. பல ஊர்களில் போலிஸ் நிலையத்தின் தலைமை அதிகாரிகள் தெருவில் நாயைப் போலச் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். இதன் நடுவில் இடது சாரி எதிர் வலது ஃபாசிஸ்டுகள், பெருநிலக்கிழார்கள் எதிர் கூலி விவசாயிகள், வெள்ளைக் கிருஸ்தவர்கள் எதிர் அமெரிக்கப் பழங்குடி மக்கள் என்று வேறு எதிரிடைப் போராட்டங்கள் உண்டு.

இந்தச் செய்தி குற்றக் கூட்டங்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டி இப்போது விளிம்பு நிலை ஊர்களில், அமெரிக்காவோடு எல்லைப் புறங்கள் ஆகிய இடங்களில் நடப்பதோடு நிற்காமல், மெக்ஸிகோவின் உள்புறங்கள், ஓரளவு அமைதியான இடங்களுக்கெல்லாம் பரவி வருகிறது என்று சொல்கிறது. கர்த்தராலும் காக்க முடியாது என்பதை மெக்ஸிக கிருஸ்தவர்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள்.

http://www.nytimes.com/2012/01/19/world/americas/mexico-drug-war-bloodies-areas-thought-safe.html?_r=1&hp

காப்பி குடிக்கும் இந்தியப் பெண்களுக்கு…

காப்பி குடிக்கும் இந்தியர்கள், குறிப்பாக பெண்களின் கவனத்துக்கு. காப்பி குடிப்பது ஆசியப் பெண்களின் உடலில் பெண்களுக்கான ஹார்மோனான எஸ்ட்ரோஜென் என்பதை அதிகரிக்கிறதாம். மாறாக வெள்ளைப் பெண்களின் உடலில் காப்பி குடிப்பது எஸ்ட்ரோஜென் சுரப்பைக் குறைக்கிறதாம். இப்போது ஏன் ஆசியப் பெண்களை காப்பி மாறுபட்ட விதத்தில் பாதிக்கிறது என்று ஆராயத் துவங்கவிருக்கிறார்கள். ஒரே ஒரு விஷயத்தைக் கவனிக்கவும். ஆசியப் பெண்கள் என்று அமெரிக்க யூரோப்பிய ஆய்வாளர்கள் கருதுவது அனேகமாக கிழக்கு ஆசியா, சீனா ஜப்பான் போன்ற நாட்டுப் பெண்களாகத்தான் இருக்கும். அவர்களுடைய உடல் மட்டுமல்ல, உணவு வகைகள், பிறப்பிலிருந்து அவர்களுக்கு பாதிப்பைக் கொடுக்கும் நோய்கள் போன்றன மிக வேறுபட்டவை. அதனால் இந்த ஆய்வு இந்தியப் பெண்களுக்குப் பொருந்துமா என்பது குறித்து தகவலைத் தேடிப் பிடிப்பது நல்லது.
எஸ்ட்ரொஜென் மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு, அந்த வயதுகளில் குறைவதால் பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். இதை எதிர்கொள்ள நவீன மருத்துவம் முன்பெல்லாம் அவர்களுக்கு எஸ்ட்ரொஜென் ஹார்மோன்களை செயற்கையாக உட்கொள்ளச் சொல்லிக் கொண்டிருந்தது. அது வேறு எதிர்விளைவுகளைக் கொணர்கிறது, புற்று நோய்க்குக் கூட தூண்டுதலாகும் வாய்ப்புண்டு என்று சமீபத்தில் அந்த சிகிச்சையை நிறுத்தி விட்டார்கள். ஒரு வேளை அந்த நிலையில் இருக்கும் இந்தியப் பெண்கள் காப்பி குடிப்பதைத் தொடர்ந்தால் எஸ்ட்ரோஜென் சிறிது அதிகரித்து அவர்களுக்கு ‘hot flashes’ என்று சொல்லப்படும் உடல் வெப்பம் திடீரென்று அதிகரிப்பது, தூக்கமின்றிப் போவது, வியர்த்துக் கொட்டுவது போன்ற பிரச்சினைகள் குறையுமா என்று பார்க்கலாம்.

http://well.blogs.nytimes.com/2012/01/27/caffeine-alters-estrogen-levels-in-younger-women/?hpw

தவிர்க்கப்பட்ட செயற்கைகோள் பேரழிவு : இந்தியாவிற்கான பாடங்கள்

1990-களில் ஏவப்பட்ட செயற்கைகோள் ஒன்று உலகரங்கில் ஜெர்மானியர்களின் கெளரவத்தை உயர்த்தியது. தனது பணியை வெற்றிகரமாக முடித்த இந்த செயற்கைகோள் கொஞ்சம் கொஞ்சமாக பூமியை நோக்கி வரத் துவங்கியது. ஆனால் திட்டமிட்டபடி இது கடலில் இறங்காமல் சீனாவின் நிலபரப்பை நோக்கி விழத்துவங்கியது. ஒரு பேரழிவின் சாத்தியத்தை கொண்டிருந்த இந்த தவறு, ஒரு வழியாக சமாளிக்கப்பட்டு வங்காள கடல் பகுதியில் விழ வைக்கப்பட்டது. மேலும் தகவலுக்கு இதை படியுங்கள் :

http://www.spiegel.de/international/germany
/0,1518,812297,00.html

செயற்கைகோள் துறையில் சின்னஞ்சிறு தவறுகள் கூட இத்தகைய பிரச்சனைகளை ஏற்படுத்திவிட முடியும். சமீபத்தில் இந்திய அரசு ISRO நிறுவனத்தின் ஒரு பிரச்சனையை கையாளத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது. விஞ்ஞானிகளிடம் இது ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதன் விளைவுகளை மேலே கூறிய விஷயத்தின் பின்ணணியில் வைத்து யோசிக்க வேண்டும்.

மூளையை பாதிக்கும் ஏழ்மை

ஒரு வகுப்பின் நடுத்தர குடும்பத்து மாணவனுக்கும், ஏழ்மையான பின்புலத்திலிருந்து வரும் மாணவனுக்கும் இடையே நிலவும் தேர்ச்சி வேறுபாடுகள் குறித்து கல்வியாளர்கள் பேசியிருக்கிறார்கள். சமீபத்திய விஞ்ஞான ஆய்வு அந்த வேறுபாட்டின் பின்ணணியில் உள்ள காரணங்களை அறிவியல் பூர்வமாக உணர்த்துகின்றது. தன் ஏழ்மையை உணரும் ஒரு மனிதனின் புலனறிவு வளர்ச்சியை பெருமளவில் பாதிப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக இளவயதில் இதன் பாதிப்பு இன்னும் அதிகம் என்று சொல்கிறது இந்தக் கட்டுரை. படியுங்கள்.

http://www.wired.com/wiredscience/2009/03/poordevelopment/

போர்ச்சுகலின் காலனிய ஆசை

பிறநாடுகளை கைப்பற்றி தன்னை விரிவாக்கும் காலனிய ஆசை யாரையும் விடாது போல!! 19ஆம் நூற்றாண்டில் யூரோப்பியக் காலனியவாதிகளின் பகல் கனவுகள். சென்ற நூற்றாண்டில் இல்லை, இந்த நூற்றாண்டில் கூட தோற்ற நாடுகளில் கனவு இன்னும் சாகவில்லை. குட்டி நாடு போர்ச்சுகலுக்கு காலனிய ஆசைகள் இன்னமும் வற்றவில்லை.

http://bigthink.com/ideas/41601

யானைக்கும் உண்டு contact lens

ஒரு யானைக்கும் இன்னொரு யானையுக்கும் சண்டை. இது புதிதல்ல. சண்டையில் தன் கண்ணில் பிரச்சனையை வரவழைத்துக் கொண்டது ஒரு யானை. இதுவும் புதிதல்ல. அந்த யானையின் கண்பார்வையை சரிசெய்யும் விதமாக contact lens பொறுத்தப்பட்டுள்ளது. இது நிச்சயம் புதிது. தன் இனத்திலேயே முதன் முதலில் lens பொறுத்திக்கொண்ட பெருமை இந்த யானைக்கு. இந்தக் கட்டுரையை படியுங்கள்.

http://www.spiegel.de/international/europe/0,1518,811536,00.html