போர்ட்டபெல்லோ சாலை

muriel-spark-1

ம்யூரியல் ஸ்பார்க்

தன் எழுத்து குறித்து ஒரு பேட்டியில் ம்யூரியல் ஸ்பார்க் கூறிய கருத்து இது – “எனது நாவல்கள் குரூரமானவை என்று சொல்கிறார்கள். அவற்றில் குரூரமான சம்பவங்கள் நிகழ்கின்றன, அவற்றை நான் பதட்டப்படாமல் சொல்கிறேன். பெரும்பாலும் நான் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல்தான் எழுதுவது வழக்கம். ஆனால் என் எழுத்தில் அறம் குறித்த விமரிசனமும் உண்டு.  இதற்கும் அப்பால் ஒரு வாழ்வு உண்டென்பதை நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன், இந்த உலகத்து நிகழ்வுகள் மிக முக்கியமானவையல்ல. ஒரு தொலை காலப் பார்வையில் இவை முக்கியமேயில்லை.” நம் இயல்புலக அனுபவங்களில் தென்படும் அமானுடத்தின் நிழலை இருளும், மென் புன்னகையும் ஒருசேர விவரிக்கிறார் ம்யூரியல் ஸ்பார்க்.  அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ”போர்ட்டபெல்லோ சாலை”  ம்யூரியல் ஸ்பார்க்கின்  விளையாட்டும் விபரீதமும் கலந்த கற்பனைக்கு ஒரு நல்ல அறிமுகமாகும்.

-000-

எனது பதின்ம வயதில், ஒரு நாள் தோழர்கள் புடை சூழ வைக்கோல் போரில் கிடந்து புரண்டு கொண்டிருந்த போது ஒரு ஊசியைக் கண்டெடுத்தேன். எனது கையை வைக்கோல் தாள்களுக்குள் ஆழமாக விட்டபோது பெருவிரலில் அந்த ஊசி குத்தி விரலோடு வந்து விட்டது.

நண்பர்கள் கூட்டத்திலிருந்து – ஜார்ஜ், கேத்லீன் மற்றும் ஜான் ஸ்கின்னி – வெடிச்சிரிப்போலி கிளம்பியது,

சின்னதாய் ஆரம்பித்த ரத்தப்பொட்டு மெதுவாய் விரிந்துகொண்டே போனது. எங்களது உற்சாக கிறீச்சொலி அந்த உஷ்ண பார்டர்லேண்டை ஆக்கிரமித்தது. சிரிப்பொலி கொஞ்சம் மெலிய ஆரம்பித்தவுடன் ஜார்ஜ் ஏதாவது கெக்கபிக்கவெனச் சொல்வான், எங்கள் சிரிப்பு சத்தம் மீண்டும் அதிகரிக்கும். “கண்டிப்பாய் மூளையை உபயோகித்தெல்லாம் இதை செய்ய முடியாது; உனக்கு அது நிறையவும் கிடையாது. நீ ஒரு அதிர்ஷடசாலி…”என்று ஜார்ஜ் கத்தினான். எல்லாரும் இது ஒரு அதிர்ஷ்டம் என்று ஒத்துக் கொண்டார்கள்.

” ஒரு புகைப்படம் எடுப்போம்”. என்று ஜார்ஜ் சொன்னான். நான் ரத்தப்பொட்டு விரலைக் கர்சீப்பைக் கொண்டு கட்டிக் கொண்டேன். அனைவரும் போஸ் கொடுத்தோம்.

ஜார்ஜ் திடீரென்று காமிராவின் பின்னாலிருந்து கத்தினான். “ஹேய், இங்கே பார், ஒரு எலி.” அங்கே எலி கிடையாதென்று எங்களுக்கு தெரிந்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். இருந்தும் கேத்லீன் உற்சாகக்குரலில் கிறீச்சிட்டாள்; நானும் அதே மாதிரி கிறீச்சிட்டேன். அப்புறம் ஒரு மாதிரி அனைவரும் அடங்கி போஸ் கொடுத்தோம்.

அந்த புகைப்படத்தில் நாங்கள் மிக இயற்கையாக,  துல்லியமாக அருமையாக சிரித்துக் கொண்டு இருந்தோம்…

அந்த நாளிலிருந்து எனக்கு ஊசி என்றே பெயரே நிலைத்தது

-o00o-

சமீபத்திய ஒரு சனிக் கிழமையில், நான் லெட்புரூக் க்ரோவ் முனையிலிருந்து ஆரம்பித்து போர்ட்டபெல்லோ சாலையினுள் சுற்றிக்கொண்டிருந்தேன். அந்த குறுகலான சாலையில், திரளான சனிக் கிழமை கடை வீதிக் கூட்டத்தில் அவளைப் பார்த்தேன். மெலிந்து, வயது முதிர்ந்தவளாகவும், பணக்கார களையுடனும், துருத்திக்கொண்டிருந்த மார்புகளுமாக இருந்தாள். அவளை நான் கடைசியாகப் பார்த்தது ஐந்து வருடங்களுக்கு முன் இருக்கும். இத்தனை வருடங்களில் அவள் எவ்வளவோ மாறியிருந்தாலும் என்னால் அடையாளம் காண முடிந்தது – அவள் என் அருமைத் தோழி, கேத்லீன். ஐந்து வருடங்களுக்கு முன்னரே, அவளுக்கு கிட்டத்தட்ட முப்பது வயது இருக்கும்போதே சொன்னாள்: “இது எங்கள் பரம்பரையிலேயே இருக்கிறது. இளமையாக இருக்கும் போது பொலிவுடன் இருப்போம். அப்புறம் வெகு சீக்கிரம் கிழடு தட்டிவிடும்.”

நான் மௌனமாய், கூட்டத்தோடு கூட்டமாக அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு இனித் தெரியப் போவது போல, அவளுடன் பேசும் நிலையில் நான் இப்போது இல்லை. அவள் கடை கடையாய் பேராவலுடன் ஏறி இறங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு எப்போதுமே பழைய நகைகளிலும் பொருட்களிலும் பேரம் பேசுவதிலும் விருப்பம் அதிகம். அவளை இதற்கு முன் சனிக்கிழமையன்று போர்டபெல்லோ சாலையில் நடக்கும் எனது  இலக்கற்ற சுற்றல்களில் பார்த்த மாதிரி நினைவு இல்லை.

அந்த கடையில் தங்க, முத்து ஆபரணங்களுக்கு மத்தியிலிருந்து ஒரு பச்சை மாணிக்கக் கல் மோதிரத்தை எடுத்துக் கொண்டு “என்ன நினைக்கிறாய்?” என்று அவளுடன் நின்று கொண்டிருந்தவனிடம் காட்டிக் கேட்டாள். பூதாகரமாக இருந்த அவனது முகம் ஏதோ தெரிந்த முகம் போல இருந்தது. “நன்றாக இருக்கிறது, என்ன விலை?” என்று அவளிடம் கேட்டான். அதையே அவள் கடைக்காரரிடம் கேட்டாள்.

நான் அந்த மனிதனை இப்போது நன்றாக பார்த்தேன். அவன் கேத்லீனின் கணவன். தாடியில் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லையென்றாலும் அதனுள் ஒளிந்திருக்கும் பெரிய வாய், உதடுகள், பரிதாப, பழுப்புக் கண்களை கண்டுகொண்டேன்.  கேத்லீனிடம் நான் பேசுவதாக இல்லை என்றாலும் என்னுள் ஒரு உத்வேகம் கிளர்ந்து என்னை மென்குரலில் அவனை அழைக்க வைத்தது:

“ஹல்லோ ஜார்ஜ்!”

அந்த வாட்டசட்டமானவன் சட்டென்று குரல் வரும் திசை நோக்கி திரும்பினான். இடையில் ஏகப்பட்ட பேர் போய் வந்து கொண்டிருந்தாலும் சற்றே தொலைவில் இருந்த என்னைப் பார்த்துவிட்டான். நான் மறுபடியும் கூப்பிட்டேன்.

“ஹல்லோ ஜார்ஜ்!”

கேத்லீன் அவளின் வழக்கமான விதத்தில் கடைக்காரரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள். ஜார்ஜின் வாய் இப்போது மெலிதாய் திறந்தது – என்னால் சிவந்த உதடுகளையும் தாடிக்கும் அடர்ந்த மீசைக்கும் நடுவில் வெண்பற்களையும் கூட பார்க்க முடிந்தது.

“மை காட்!” என்றான்.

“என்ன விஷயம்?” என்று கேத்லீன் கேட்டாள்.

“ஹல்லோ ஜார்ஜ்!”

என்னுடைய குரல் இப்போது சத்தமாகவும் ஆர்வமாவும் ஒலித்தது. “அங்கே பார், யாரென…அதோ, அந்த பழக்கடைக்கு பின்னால்,”. கூவினான். கேத்லீன் அவன் சொன்ன திசையில் பார்த்தாள், அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. “யாரது ஜார்ஜ்?” சற்றே பொறுமையிழந்த குரலில் கேட்டாள் அவள்.

“அது…அது..அங்கே பார்…ஊசி…”

“ஹல்லோ ஜார்ஜ் என்று கூப்பிடுகிறாள்.”

“ஊசி?,..யார் நம்ம பழைய தோழி ஊசியையா சொல்கிறாய்?”

“ஆமாம், அவளேதான். அங்கே பார்.”

இப்போது அவன் முகம் பேயறைந்த மாதிரி வெளிறிப் போனது. இத்தனைக்கும் நான் நட்புணர்வோடுதான் அழைத்திருந்தேன். “யாரும் அங்கே அவள் ஜாடையில் இல்லையே?” கேத்லீன் அவனைக் கொஞ்சம் கவலையாய் பார்த்தாள். ஜார்ஜ் கையை என்னை நோக்கிக் காட்டினான். “அது ஊசிதான். எனக்கு கண்டிப்பாய் தெரியும்.”

“உனக்கு உடம்புக்கு ஏதாவது செய்கிறதா? வீட்டிற்கு போகலாம் வா!” என்றாள் கேத்லீன். “உனக்குத் தெரியும், எனக்கும் தெரியும், ஊசி இப்போது உயிருடன் இல்லை.”

spark2

இப்போது உங்களிடம் நான் கொஞ்சம் விளக்கியே ஆகவேண்டும். நான் வாழ்வை விட்டு நீங்கி ஏறத்தாழ ஐந்து வருடங்கள் ஆகின்றன. உயிரோடு இல்லையென்றாலும் இன்னும் இந்த உலகை விட்டு நான் போய்விடவில்லை. இன்னமும் சில வினோத விஷயங்கள், வேலைகள் இருக்கின்றன. முடிக்காமல் விட்ட ஏராளமான வேலைகள்…

எனது பொழுதுபோக்கு சனிக்கிழமை காலைகள்தான். மழை பெய்யும் சனிக்கிழமைகளில் இளமையாகவும் உயிரோடும் இருந்த காலங்களில் சுற்றியது போல் நான் ஊல்வொர்த் (Woolworth) சந்துகளில் சுற்றியலைந்து கொண்டிருப்பேன், அங்குள்ள கடைகளில், அவற்றின் முன்னால் இருக்கும் கண்ணாடிப் பெட்டிகளில் இருக்கும் எண்ணற்ற பொருட்களை ஒரு வித பற்றுதலுமில்லாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

விதவிதமான க்ரீம்கள், டூத்பேஸ்ட்கள், பருத்தி கையுறைகள், வரைய உபயோகப்படுத்தும் பேப்பர்கள், க்ரேயன்கள்,

ஆரஞ்ஜேட்கள், ஐஸ்க்ரீம் கோன்கள், பெய்ண்ட், கோந்து, மார்மலேட் டின்கள்…

முன்னர் எனக்கு இவை மிகவும் பிடித்தமானவை; இப்போது இவற்றுக்கான தேவையில்லை.

மழை இல்லாத சனிக் கிழமைகளில் போர்ட்டபெல்லோ தெருவில்தான் இருப்பேன். அப்போதைக்கும் இப்போதைக்கும் பெரிய மாற்றங்கள் இல்லை, அதே தள்ளு வண்டிகள், கடைகள், சளசள ஜனங்கள்…ஜார்ஜியன் ஸ்பூன்கள், மோதிரங்கள், நீலமும் பச்சையும் கலந்த கற்கள் பதித்த தோடுகள், தந்தத்தில் வரையப்பட்ட/எழுதப்பட்ட நுண்ணிய சீமாட்டிகளின் ஓவியங்கள், வெள்ளி மூக்குப்பொடி டப்பாக்கள்…இப்படி பற்பல சமாச்சாரங்கள் குவிந்திருக்கும்.

சில சமயங்களில், எனது தோழி கேத்லீன் – கேத்தலிக் – எனது ஆன்ம சாந்திக்கு நடத்தும் பிரார்த்தனை கூட்டத்திற்கும் போவதுண்டு. ஆனால் பெரும்பாலான சனிக்கிழமைகளில் நான் இந்த கடை வீதியில் இலக்கில்லாமல் சுற்றுவதையே விரும்புவேன். இந்த மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக சுற்றிக்கொண்டு, கல்லாப்பெட்டி கலகலக்கும் சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நிறையப் பிடிக்கும்

இப்படி ஒரு சனிக்கிழமை காலையில் சுற்றிக் கொண்டிருக்கும்போதுதான் எனது தோழி கேத்லீனையும் அவளது கணவனும், எனது தோழனுமான ஜார்ஜை சந்தித்தேன். என்னுள்ளே அந்த உத்வேகம் எழுந்திருக்கவில்லையெனில் அவனை அழைத்திருக்க மாட்டேன். அப்படி அழைத்தபோது ஒரு மாதிரி அசாதாரணமான சந்தர்ப்பத்தில்தான் நான் ஜார்ஜின் கண்களில் பட்டிருக்க வேண்டும்.

“ஹல்லோ ஜார்ஜ்.”

பழக்கடை பக்கத்திலிருந்து தோழமையான குரலில் நான் அழைத்ததை அவன் ஒரு பேயைப் பார்ப்பது போல் பார்த்தான், பாவம்.

-o00o-

படிப்பு முடிந்தவுடன், அதாவது படிப்பென்று ஸ்காட்லாந்தில் நாங்கள் நினைத்திருந்த ஒன்று முடிந்தவுடன் ஒருவர் பின் ஒருவராக லண்டன் போய் சேர்ந்தோம். ஸ்கின்னி தொல்பொருள்துறையில் மேலும் படிக்கப்போனான். ஜார்ஜிற்கு அவனது பணக்கார மாமாவின் புகையிலைத் கம்பனியில் வேலை உறுதியாகியிருந்தது. கேத்லீன் அவளது பணக்கார உறவினர் கூட்டத்தில் இருந்த ஒரு அத்தையின் மே ப்ளவர் தொப்பிக்கடையில் சேர்ந்துவிட்டாள்.

கொஞ்ச நாள் கழித்து நானும் லண்டன் போய்சேர்ந்தேன். வாழ்க்கையைப் பற்றி எழுதுவதுதான் என் லட்சியமாக இருந்தது. அதற்கு வாழ்க்கையைப் பார்க்கவேண்டுமல்லவா, அதற்குத்தான் இந்த லண்டன் மாற்றம். “நாம் நால்வரும் ஒற்றுமையாக தொடர்பிலேயே இருக்கவேண்டும்,” ஜார்ஜ் இப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தான். தான் புறக்கணிப்பட்டுவிடக் கூடாது என்ற நினைவிலேயே இருந்தான். நாங்கள் நால்வரும் வெவ்வேறு திசைகளில் போகவிருந்தோம், மற்ற மூவரும் அவனை மறந்துவிடக் கூடாது என்பதில் ஜார்ஜ் கவனமாக இருந்தான்.

ஆஃப்ரிக்காவில் உள்ள அவனது மாமாவின் புகையிலைத் தோட்டத்திற்கு போக வேண்டிய நாள் நெருங்க, நெருங்க அவனது இந்த ‘தொடர்பிலேயே இருக்கவேண்டும்,” தொணதொணப்பு அதிகமாகிக் கொண்டே போயிற்று,

“நான் மாதாமாதம் கடிதம் எழுதுவேன். நாம் நால்வரும் ஒற்றுமையாக…” கிளம்பிப் போவதற்கு முன் எங்கள் அந்த புகைப்படத்தை மூன்று ப்ரிண்ட்கள் போட்டான். அதன் பின்னால் “ஊசி, ஊசியை கண்டுபிடித்த நாளில் ஜார்ஜ் எடுத்தது,” என்று எழுதி எல்லாரிடமும் ஒரு காப்பி கொடுத்துவிட்டுப் போனான்.

spark31

நான் எனது வாழ்நாளில் ஒரு திட்டமுமில்லாமல், குறிக்கோளற்றுதான் அலைந்தேன். எனது நண்பர்களுக்கு என்னைப் புரிந்துகொள்வது சிரமமான ஒன்றாக இருந்தது. நியாயமாக நான் பசியில் தவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு நாளும் கஷ்டப்பட்டதே இல்லை. நான் ஆசைப் பட்டதுபோல் வாழ்க்கையைப் பற்றி எழுத உயிருடன் இருக்கவில்லைதான். அதனால்தானோ என்னவோ இப்போது ஒரு அசாதாரண சூழ்நிலையில் இந்த மாதிரி உத்வேகம்…

என்னவெல்லாம் செய்தேன்? கென்சிங்டனில் ஒரு தனியார் பள்ளியில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வேலை பார்த்தேன். அதாவது அந்த சின்னக் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் தெரியாது. அந்தக் குழந்தைகளை டாய்லெட்டிற்கு கூட்டிச் சென்று வருவதிலும் சிறுமிகளுக்கு கர்ச்சீஃபை உபயோகப்படுத்தக் கற்றுத் தருவதிலும் பிசியாக இருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு கொஞ்ச நாள் பனிக்கால விடுமுறையில் இருந்தேன். அப்புறம் ஒரு வைர பிரேஸ்லெட்டைத் தியேட்டரில் கண்டெடுத்தேன். கிடைத்த ஐம்பது பவுண்டுகள் சன்மானத்தை வைத்து கொஞ்ச நாள் ஓட்டினேன். பின் ஒரு விளம்பரத்துறை ஆளிடம் வேலையில் இருந்தேன். பெரிய தொழிலதிபர்களுக்கு மேடைப்பேச்சுகள் தயாரித்துக் கொடுப்பதுதான் வேலை –மேற்கோள்களைக் கொண்ட புத்தகம் மிகவும் உதவியாக இருந்தது.  இப்படியே காலம் போயிற்று.

இதற்கிடையில் எனக்கு ஸ்கின்னியுடன் திருமணம் நிச்சயமானது. அப்புறம் ஒரு ஆறு மாதம் கழித்து ஸ்கின்னியை உண்மையாகவே காதலிக்கவில்லை என்று முடிவு செய்தேன், நிச்சய மோதிரத்தை திருப்பி கொடுத்துவிட்டேன்…

ஆனால் ஸ்கின்னியுடன், ஸ்கின்னிக்காகத்தான் ஆப்பிரிக்கா போனேன். ஸ்கின்னி ஒரு ஆராய்ச்சிக் குழுவுடன் கிங் சாலமன் சுரங்கங்களை தேடிச் சென்றான். மிக புராதனமான இடங்கள் – இப்போது பெய்ரா (Beira) எனப்படும் புராதன துறைமுகமான ஓஃபிரில் (Ophir) ஆரம்பித்து போர்ச்சுகீசியக் கிழக்கு ஆஃப்ரிக்கா மற்றும் தெற்கு ரொடிசியா (Southern Rhodesia) வழியாக அடர் கானக ஜிம்பாப்வே வரை. அந்த சிதைந்து பாழடைந்த ஆலயங்களின் சுவர்கள் பிரமாண்ட மலைகளின் முன் அவற்றை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தன. நான் ஒரு காரியதரிசி மாதிரி அந்த குழுவுடன் சென்றேன் – எனக்கான ஏற்பாடெல்லாம் ஸ்கின்னிதான். பயணத்திற்குச்  செலவு செய்ததும் அவன்தான்.

என்னுடைய வாழ்க்கையைப் போன்ற ஒரு வாழ்க்கை பெரும்பாலோருக்கு எரிச்சலாய்தான் இருக்கும். இயல்பான வாழ்க்கையில் அவர்கள் தினமும் வேலைகளுக்கு செல்கிறார்கள்; ஏதாவது செய்கிறார்கள், கட்டளையிடுகிறார்கள் அல்லது கட்டளைகளுக்கு பணிந்து செல்கிறார்கள், தட்டச்சு இயந்திரத்தை தட்டிக்கொண்டே இருக்கிறார்கள், வருடத்தில் இரண்டு மூன்று வாரங்கள் விடுமுறையில் போகிறார்கள்.

யாராவது இந்த மாதிரியெல்லாம் செய்யாமல் அதே சமயம் பெரிய அளவில் பாதிப்பில்லாமல் தப்பித்து விட்டால் வெறும் அதிர்ஷ்டம் என்று முடிவு கட்டிவிடுகிறார்கள்.

திருமண நிச்சயம் முறிந்த அன்று ஸ்கின்னி என்னிடம் இதைப் பற்றி ஒரு லெக்சர் அடித்தான்; ஆனால் எப்படியும் ஒரு சில மாதங்களில் பிரிந்துவிடுவோம் என்று தெரிந்தும் ஆப்பிரிக்காவிற்கு கூட்டிச் சென்றான்.

நாங்கள் ஆப்பிரிக்காவிற்கு வரப்போவதை ஜார்ஜிடம் தெரிவிக்கவில்லை. “சொன்னால் நாம் அவன் இருக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று முதல் வாரத்திலேயே எதிர்பார்ப்பான். நாம போகப்போவது நம்ம வேலைக்குத்தானே, அவனை எதற்கு தொந்தரவு செய்து கொண்டு,” என்று சொல்லிவிட்டான் ஸ்கின்னி. கிளம்புவதற்கு முன் கேத்லீன் “ஜார்ஜிடம் என் அன்பைத் தெரிவி. ஆனால் அவனது கடிதங்களுக்கு பதில் அனுப்பத் தவறும்போதெல்லாம் அவனை அவசர கேபிள்களை அனுப்ப வேண்டாம் என்று சொல். எனது கடையில் நான் ரொம்ப பிசியாய் இருக்கிறேன்.  அவன் நடந்துகொள்வதைப் பார்த்தால் அவனுக்கு உலகத்தில் வேறு நண்பர்களே இல்லாதது போல் இருக்கிறது…!”

நாங்கள் போய் சேர்ந்த ஃபோர்ட் விக்டோரியாவிலிருந்து கிட்டத் தட்ட நானூறு மைல்கள் தாண்டி அவனது மாமாவின் புகையிலைத் தோட்டம் இருந்தது.அவனைப் பற்றி மற்ற வெள்ளைக் குடியேறிகளிடம் விசாரித்தோம். கண்டிப்பாய் நல்லவிதமாய் பதில் வரவில்லை. அவன் ஒரு கறுப்புப் பெண்ணுடன் வாழ்ந்து வருபவதைக்கூட பொறுத்துக் கொண்டார்கள். அவன் புகையிலைத் தோட்டத்தைப் பற்றி தான் புகார்களே, ஒரு மாதிரி விதிகளை மீறிய முறைகளில் பயிரிடுகிறான் என்று குறை சொன்னார்கள்.

கருப்புப் பெண்ணுடன் வாழ்ந்துவரும் செய்தி எனக்கு என்னவோ போலத்தான் இருந்தது. நான் வளர்ந்த பல்கலைக்கழக டவுன் பற்பல இந்திய, ஆப்ரிக்க, மற்ற ஆசிய மாணவர்களால் நிரம்பியதாய் இருந்தாலும் அப்போதெல்லாம் கட்டுப்பெட்டித்தனமான சமூகத்தை எதிர்த்து எதையும் செய்வது இயல்பானதல்ல. இப்படியெல்லாம் செய்தால் அது பெரும் புரட்சியாகத்தான் பார்க்கப்படும்!

பின் ஒருவழியாய் ஜார்ஜை சந்திக்கப் புறப்பட்டோம். எங்களது ஆப்ரிக்க வருகையைப் பற்றி அவன் முன்னரே அறிந்திருந்தான். சந்தித்ததில் மகிழ்ச்சிதான் என்றாலும் முதல் ஒரு மணி நேரம் கடுகடுவென்றே இருந்தான்.

“உனக்கு கடைசி நிமிட ஆச்சரியம் தரலாமென்றுதான் முன்னாலயே சொல்லவில்லை ஜார்ஜ்.”

“நாங்கள் வருவது உனக்கு தெரிந்துவிடும் என்று எங்களுக்கு எப்படித் தெரியும் ஜார்ஜ்? இந்த மாதிரி செய்திகளெல்லாம் ஒளியைவிட சீக்கிரம் பரவுவது எங்களுக்கு எப்படித் தெரியும் ஜார்ஜ்!”

“உனக்கு கடைசி நேர ஆச்சரியம் என்றுதான் நம்பியிருந்தோம் ஜார்ஜ்!”

இப்படி பலதடவைகள் ‘ஜார்ஜிட்ட’பின் ஒரு வழியாய் சமாதானமானான். அவன் தனது தோட்டத்தை சுற்றிக் காட்டினான். தான் செய்து வரும் வினோதப் பரிசோதனைகளை விவரித்தான். (குதிரையையும் வரிக்குதிரையையும் இணை சேர்க்க முயற்சி!) அப்புறம் ‘வாங்க, வீட்டிற்கு போய் ஏதாவது குடிப்போம், மடில்டாவையும் சந்திக்கலாம்”

மடில்டா அகலத்தோள்களுடன் கடும் பழுப்பில் இருந்தாள். வீட்டின் முன் உட்கார்ந்து மதுபானங்களை அருந்தியபடி ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தோம். இருந்தாலும் ஜார்ஜ் என்னிடம் ஸ்கின்னியுடன் திருமணத்தை நான் நிச்சயம் செய்துவிட்டு முறித்துக் கொண்டது குறித்து தொணதொணத்துக் கொண்டே இருந்தான். “நாம் நெடுங்கால நண்பர்கள், ஒற்றுமையாக இருக்கவேண்டும், ஏன் இப்படி செய்துவிட்டாய்?”

ஆரம்பித்துவிட்டானே என்று நினைத்துக் கொண்டு பேச்சை மாற்ற முயன்றேன். மடில்டாவிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன்,  நாணத்துடன், தடுமாற்ற ஆங்கிலம் பேசினாள். ஆப்பிரிக்காவின் மற்றப் பகுதிகளுக்கு போயிருக்கிறாயா என்று கேட்டேன். “நான் அந்த மாதிரி வளர்ப்பில்லை,” என்றாள். எல்லா வார்த்தைகளுக்கும் சரிசமமான அழுத்தம் கொடுத்தாள்.

“அவளது தந்தை நடாலில் ஒரு வெள்ளை மாஜிஸ்ட்ரேட், மற்ற ‘கலர்’களை மாதிரியான வளர்ப்பு இல்லை…புரிந்துகொள்வாயென்று நினைக்கிறேன்,” என்றான் ஜார்ஜ். அவள் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தாள். ஜார்ஜ் அவளிடம் ஏதாவது வேலை சொல்லி ஏவிக் கொண்டே இருந்தான். மொத்ததில் அவளை ஒரு வேலைக்காரி மாதிரிதான் நடத்தினான்.

“சூரியக்குளியல் எடுத்துக் கொள்வாயா?” என்று என்னிடம் கேட்டாள்.  “ஒத்துக் கொள்ளாது,” என்றேன்.

பின் அவள் என்னிடமோ ஸ்கின்னியிடமோ அப்புறம் பேசவேயில்லை; நாங்கள் அவளை அதற்கப்புறம் சந்திக்கவும் இல்லை.

அப்புறம் சில மாதங்களுக்கு பின் ஸ்கின்னியிடம் “எனக்கு இந்த கேம்ப் வாழ்க்கை அலுத்துவிட்டது,” என்றேன். நான் கேம்ப்பை விட்டுப் போவதில் அவனுக்கு ஆச்சரியமில்லை. ஆனால் சொன்ன விதம் பிடிக்கவில்லை என்பது அவனது பார்வையிலேயே தெரிந்தது. ஒரு ‘பிரெஸ்பிடெரியன்’ (presbyterian) பார்வை பார்த்தான்.

“இந்த மாதிரி பேச்செல்லாம் வேண்டாம்….இங்கிலாந்து திரும்பிப் போகிறாயா அல்லது இங்கேயே (இந்த நாட்டிலேயே) இருக்கப் போகிறாயா?”

“சில காலம் இந்த நாட்டில இருக்கலாம்னுதான் நினைக்கிறேன். “

“நல்லது, ரொம்ப தூரம் போகாதே.”

என் வண்டியும் ஓடியது – உள்ளூர் வாரப்பத்திரிக்கையில் ஒரு கிசுகிசு பக்கம் எழுதிக்கொண்டிருந்தேன். வாழ்க்கையைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தது இந்த மாதிரி எழுத்தல்லதான்! நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இங்கிலாந்திலிருந்து இப்போதுதான் வந்திருந்தேன் என்பதாலும் வாழ்க்கையைப் பார்க்க ஆசைப்பட்டதாலும் நண்பர்களுக்குப் பஞ்சமில்லை.

பின்னர் ஒரு தடவை ஜார்ஜை புலாவாயொவில் (Bulavwayo) உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தேன். இருவரும் காக்டெயில் பானங்களை அருந்திக் கொண்டு (இரண்டாம் உலக) யுத்தத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஸ்கின்னியின் குழு ஒரு மாதிரி ஜிம்பாப்வேயிலேயே இருக்கலாமா அல்லது இங்கிலாந்திற்கு திரும்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம்.

அவர்களின் ஆராய்ச்சிகள் அதிசுவாரசியக் கட்டத்தை எட்டியிருந்தன. நான் ஜிம்பாவ்வே போகும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸ்கின்னி அந்த பாழடைந்த ஆலயங்களுக்கு கூட்டிச் செல்வான்.. நிலவொளியில் எங்கள் நடைபயணங்கள் அற்புதமானவையாக இருந்தன, எனக்கு அந்த சுவர்களில் மயக்கும் பினீசிய அருவங்களை காட்டிக் கொண்டே வருவான். நான் அவனைத் திருமணம் செய்துகொள்ளலாமா என்று பாதி யோசனையில் இருந்தேன். ஒருவேளை அவனது படிப்பெல்லாம் முடிந்தபின்…

சூழ்ந்து கொண்டிருக்கும் போர்மேகங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாலும் ஜார்ஜ் திரும்பத் திரும்ப ஸ்கின்னியுடனான திருமண நிச்சய முறிவைச் சுற்றியே பேசிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் `ஜார்ஜ் உன்னுடைய பேச்சில் முரட்டுத்தனம் தெரிகிறது,” என்று சொன்னபிறகுதான் நிறுத்தினான். அடுத்து அவன் முகமும் குரலும் சட்டென பரிதாபமாகின.

“போர் நடக்கப்போகிறதோ இல்லையோ, நான் இந்த நாட்டை விட்டு போகப்போகிறேன்!” என்றான்.

“ஏன்? என்ன ஆச்சு?”

“புகையிலைத் தோட்டத்தில் பெரும் நஷ்டம், மாமா ரொம்ப கடுப்படிக்கிறார். எல்லாம் மற்ற தோட்டக்காரர்களால்தான். அவர்களுக்கு உன்னைப் பிடிக்கவில்லையானால் அவ்வளவுதான். நீ தொலைந்தாய்…”

“மடில்டாவின் கதி?”

“அவளுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை, அவளுக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள்.”

குழந்தையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். ஜார்ஜின் எல்லா அம்சங்களும் பொருந்திய நிலக்கரி நிற பெண் குழந்தை.

“குழந்தை?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை. மேலும் காக்டெயிலை கொண்டுவரச் சொன்னான். அவன் அதைக்  குடிக்காமல் கொஞ்ச நேரம் குச்சியை வைத்து சுற்றிக்கொண்டு அமைதியாக இருந்தான். பின்,

“உன்னுடைய இருபத்தி ஒன்றாவது பிறந்த நாளன்று என்னை ஏன் அழைக்கவில்லை?” என்றான்.

“அய்யோ ஜார்ஜ்! அதற்கு பெரியதாய் பார்ட்டி ஒன்றும் வைக்கவில்லை. நானும் ஸ்கின்னியும் இரு வயதான புரொபஸர்களும் அவர்களின் மனைவிகளும்தான். ரொம்ப அமைதியாய் கொஞ்சம் பானங்கள் குடித்தோம். அவ்வளவுதான்.”

“நீ இருபத்தி ஒன்றாவது பிறந்த நாளன்று அழைக்கவில்லை. எனக்கு எல்லாம் தெரியும் கேத்லீன் எனக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறாள்.”

இது பொய். கேத்லீன் எனக்கு எழுதும் கடிதங்களில் அவளின் கடிதங்களைப் பற்றி ஜார்ஜிடம் சொல்லவேண்டாமென எச்சரித்திருந்தாள். “அவனுக்கு தொடர்ந்து எழுத வேண்டுமென எதிர்பார்ப்பான், இதெல்லாம் நான் இப்போ இருக்கிற பிசில முடியாத காரியம்!”

“நமது பழைய நாட்களை, நட்பை, நீயும் ஸ்கின்னியும் மறந்து விட்டீர்கள்!” என்றான் கடுமையான குரலில்.

எனக்கு எரிச்சலாக வந்தது. “சரி, நான் கிளம்புகிறேன்,” என்று எழுந்தேன். “இரு இரு, என்னை இப்படி இந்த நிலைமையில் விட்டுட்டு போகாதே!” பழுப்பு கண்களில் கண்ணீர் தளும்ப ஆரம்பித்தது.

“உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்”

“ஏதாவது நல்ல விஷயமா?” மிகுந்த ஆர்வமான குரலில் கேட்டேன். அவனுடன் பேசும்போது எல்லாவற்றையும் மிகைப்படுத்தத்தான் வேண்டும்!

“நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று உனக்கு தெரியாது!”

“எவ்வளவு?”

எனக்கு இந்த அதிர்ஷ்டசாலி பட்டம் சலித்துவிட்டது.  எல்லாருடைய பார்வையிலும் நான் அதிர்ஷ்டசாலி. உண்மையில் நான் எவ்வளவு அதிர்ஷடசாலி என்பது எனக்குத்தானே தெரியும்!

“நீ யாரையும் சார்ந்து இல்லை. நீ விருப்பட்ட நேரத்திற்கு, இடத்திற்கு வருகிறாய், போகிறாய். எப்போதும் உனக்கு நீ விரும்புவது கிடைத்துவிடுகிறது. ஒரு கவலை கிடையாது. உன்னுடைய அதிர்ஷடம் உனக்கு தெரியாது!”

“அட, என்னை விட என்னைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறாய் போல! உனக்கு என்ன, பணக்கார மாமா இருக்கிறார்!”

“சட்! அவருக்கு என்மேலிருந்த நல்ல அபிப்ராயம் போய்விட்டது… அது முடிந்த கதை…”

“உனக்கு இன்னும் வயதிருக்கிறது…சரி, நீ சொல்ல வந்த விஷயம் என்ன?”

“அது ஒரு ரகசியம். நினைவிருக்கிறதா, நமது பள்ளி நாட்களில் நிறைய ரகசியங்கள் நமக்குள் வைத்துக்கொண்டிருப்போமே?”

எனக்கு அப்படி ஒன்றும் நினைவில்லை, ஆனால் மறுக்கவில்லை.

“சரி, என்ன அது?”

“நீ முதலில் யாரிடமும் சொல்ல மாட்டாயென்று சத்தியம் செய்”

“சத்தியம்”

“நான் திருமணமானவன்!”

“ஜார்ஜ்! என்னது! யாருடன்?”

“மடில்டா!”

“என்ன கொடுமை ஜார்ஜ்?!” யோசிப்பதற்குள் வார்த்தைகள் வெளிவந்துவிட்டது. ஜார்ஜ் மறுக்கவில்லை.

“ஆமாம், என்ன செய்வது?”

“நீ என்னிடம் கேட்டிருக்கலாமே?”

“நான் உன்னைவிட இரண்டு வயது மூத்தவன். உன்னிடமிருந்து அறிவுரை எப்படி எதிர்பார்ப்பேன்?”

“அப்போது என்னிடம் எந்த அனுதாபத்தையும் எதிர்பார்க்காதே!” நான் பட்பட்டென்றுதான் பேசினேன்.

“ஆனால் நீ ஒரு அருமையான தோழி…” “நான் என்ன செய்வது, இந்த நாட்டில் மூன்று வெள்ளை ஆண்களுக்கு ஒரு வெள்ளைப் பெண் வீதம் தான் இருக்கிறது. எனக்கு ஒரு பெண்துணை தேவை.”

அவன் சொன்ன விதம் அருவருப்பாய் இருந்ததற்கு இரு காரணங்கள் – ஒன்று எனது ஸ்காட்லாந்த் வளர்ப்பு முறை, இரண்டாவது, அதற்கு அவன் உபயோகித்த வார்த்தை.. இரண்டு மூன்று தடவை வேறு சொன்னான்.

“நீயும் ஸ்கின்னியும் வந்து போனபிறகு மடில்டா நிறைய மாறிவிட்டாள். ஒருநாள் அவளது உடமைகளை எடுத்துக்கொண்டு மிஷன் நண்பர்களுடன் போய்விட்டாள்.”

“நீ அவளை போக விட்டிருக்கக் கூடாது.”

“நான் விடவில்லை. பின்னாலேயே போனேன். திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாள். திருமணம் செய்துகொள்ள வேண்டியதாகி விட்டது.”

“ஓ, அப்ப இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லையே? இந்த மாதிரி ‘கலப்பு’ கல்யாணச் செய்திகளெல்லாம் சீக்கிரம் வெளியே கசியுமே?”

“நான் பக்கத்து காங்கோ நாட்டிற்கு கூட்டிப் போயல்லவா திருமணம் செய்து கொண்டேன், அவள் யாரிடமும் மூச்சு விடமாட்டாள்.”

“இருந்தும் அவளை விட்டுட்டு போகமுடியாதில்லை?”

“நான் இந்த ஊரை, நாட்டை விட்டு போகத்தான் போகிறேன். போதும், எனது வாழ்நாளில் இரு வருடங்கள், மூன்று மாதங்கள் வீணடித்துவிட்டேன்.”

“அப்ப டைவோர்ஸா?”

“மடில்டா ஒரு கத்தோலிக். டிவோர்ஸுக்கு ஒத்துக் கொள்ளமாட்டாள்.”

ஜார்ஜ் காக்டெயிலை அமைதியாக மிடறினான். அவனது பழுப்பு கண்கள் ஈரமாய் பளபளத்தன. மெதுவாய், “என் மாமா ஒரு பெரிய தொகை கொடுத்து செட்டில் செய்துவிட்டார். ஒரு ‘கலர்’ பெண்ணின் மூலம் குழந்தை கதையெல்லாம் தெரியும். புரிந்துகொண்டார். திருமணம் பற்றியெல்லாம் தெரியாதுதான்!”

“அவள் அமைதியாக இருந்துவிடுவாளா என்ன? மனைவி என்கிற அந்தஸ்து அவளுக்கு உண்டே?”

“அந்த செட்டில்மெண்ட் மூலம் நிறைய பணம் அவளுக்கு வரும், வாயைத் திறக்க மாட்டாள்.”

“ம்…நீ வேறு திருமணம் செய்துகொள்ள முடியாது இல்லையா?”

“அவள் செத்துப்போனாலொழிய…அவளா, நல்ல காட்டெருமை மாதிரி இருக்கிறாள்!”

“அடடா…உன் நிலைமை புரிகிறது”

“உன் வாய் ஒன்று சொன்னாலும் முகம் வேறல்லவா சொல்கிறது. வயதான என் மாமா கூட என்னைப் புரிந்துகொண்டார்.”

“அப்படியெல்லாம் இல்லை ஜார்ஜ். உன்னுடைய தனிமையைப் புரிந்து கொள்ள முடிகிறது”

“ஆனாலும் உன்னுடைய இருபத்து ஒன்றாவது பிறந்த நாளிற்கு என்னை கூப்பிடலை இல்லை?” பேச்சை மாற்றினான்.

“நீ கூடத்தான் உன்னுடைய திருமணத்திற்கு கூப்பிடவில்லை!”

“பார்த்தாயா, குத்திக்காட்டுகிறாய். நீயும் ஸ்கின்னியும் என்னுடன் ஒழுங்காய் பழகியிருந்தால் நான் இந்த மாதிரி முட்டாள்தனமாய் கல்யாணம் அது இதுவென்று மாட்டியிருக்கமாட்டேன்,” குரலில் முரட்டுத்தனம் அதிகமானது. “சரி, நான் கிளம்புகிறேன்,” என்றவாறே எழுந்தேன்.

“ரகசியம், நினைவிருக்கட்டும். யாரிடமும் மூச்சு விடமாட்டயே?”

“ஸ்கின்னிகிட்ட கூடவா? அவன் உன்னை புரிஞ்சிப்பான்.”

“ம்ஹூம். மூச்சு விடக்கூடாது. சத்தியம் பண்ணியிருக்கிறாய்.”

அவன் நிலைமையை நினைத்தால் பாவமாகத்தான் இருந்தது.

யுத்தம் ஆரம்பிக்க முன்னரே நான் ஸ்கின்னி மற்றும் குழுவினருடன் இங்கிலாந்து திரும்பிவிட்டேன். அதற்கப்புறம் நான் ஜார்ஜை சந்திக்கவே இல்லை; ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் வரை, என்னுடைய சாவிற்கு சற்று முன் வரை.

oOo

உலகப்போருக்குப்பின் ஸ்கின்னி அவனுடைய படிப்புக்குத் திரும்பிவிட்டான். அது இன்னும் ஒன்றரை வருடங்கள் என்று போகும். அது முடிந்தபின் அவனைத் திருமணம் செய்துகொள்ளலாமென்ற என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது.

நானும் கேத்லீனும் இப்போது சனி காலைகளில் போர்ட்டபெல்லொ சாலையில் உள்ள பழம்பொருள் கடைகளில் சுற்றிக் கொண்டிருந்தோம். வயதாகிறது, சீக்கிரம் செட்டிலாகச் சொல்லி ஸ்காட்டிலாந்திலுள்ள எங்கள் குடும்பங்களிலிருந்து சமிக்கைகள் வந்துகொண்டிருந்தன. கேத்லீன் என்னை விட ஓரிரு வயது குறைவாக இருந்தாலும் அதிக வயதினளாகவே தோற்றமளித்தாள்.

ஸ்கின்னியைத் திருமணம் செய்து கொள்ளலாமென்ற என்ற எனது எண்ணத்திற்கு அவனது அடுத்த ஆராய்ச்சி களங்களான மெசபடோமியாவும் ஒரு காரணமென்று நினைக்கிறேன். பாபிலோன், அசிரியா பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்திருந்தான். இன்னும் சொல்லப் போனால் பாபிலோனிய அசிரிய எழுத்துகளை படிக்கக்கூட கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.

கேத்லீனுக்கு ஒரு அமெரிக்க கப்பற்படை அதிகாரியுடன் நிச்சயம்கூட ஆகியிருந்தது; ஆனால் பாவம், அவர் யுத்தத்தில் இறந்து போனார். கேத்லீனுக்கு செல்ஸி (Chelsea) பக்கத்தில் வீடு, லாம்பெத்தில் (Lambeth) தொல்பொருள் கடையென்று நன்றாக வசதியாகத்தான் இருந்தாள். அவளுக்கு இப்போது திருமண ஆசை, குழந்தைகள் ஆசை அதிகமாகிக் கொண்டிருந்தது என்று தோன்றியது. கடைகளின் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் ப்ராம்களின் உள்ளே எட்டிப்பார்ப்பாள்! “கவிஞர் ஸ்வின்போர்ன் (swinburne) கூட இந்த மாதிரிதான் செய்வாராம்,”  என்றேன் ஒரு தடவை.

ஸ்கின்னியின் கடைசி பரிட்சைக்கு முன் காச நோய் வந்து எழுத முடியாமல் போய்விட்டது. உடல்நிலை தேறுவதி ற்காக ஸ்விஸ் போய்விட்டான். “நல்ல காலம், நீ அவனைக் கல்யாணம் செய்துகொள்ளவில்லை, இல்லையெனில் உனக்கும் டீபி வந்திருக்கும். நீ அதிர்ஷடசாலி!” என்றாள் கேத்லீன். நான் அதிர்ஷ்டசாலி, யோகம் செய்தவள், லக்கி – இப்படி ஆளுக்காள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிக்கொண்டேதான் இருந்தார்கள். எரிச்சலூட்டினாலும் ஒரு விதத்தில் உண்மைதான். வாழ்க்கையை நடத்துவதற்கு நான் ரொம்ப மெனக்கெடவில்லை. அவ்வப்போது புத்தக விமரிசனங்கள், அந்த விளம்பரத்துறை ஆளிடம் சில மாதங்கள் – தொழிலதிபர்களுக்காக இலக்கியம், கலை, வாழ்க்கை பற்றிய உரைகள் தயாரித்துக் கொடுப்பது இப்படியாகப் போய்க் கொண்டிருந்தது.

இடையில் ஸ்கின்னியை இரு முறை ஸ்விஸிற்கு போய் பார்த்து வந்தேன். ஒரு மாதிரி தேறிவிட்டான், இன்னும் சில மாதங்களில் திரும்புவதாக இருந்தது. அவன் திரும்ப வந்ததும் ஒருவேளை அவனை திருமணம் செய்துகொள்ளலாமாவென்று யோசனையில் இருக்கிறேன் என்று கேத்லீனிடம் சொன்னேன். “அதென்ன ஒருவேளை, கண்டிப்பாய் செய்துகொள்,” என்று வற்புறுத்தினாள் கேத்லீன். இது நடந்தது ஒரு ஐந்து வருடங்களுக்கு முன், நான் உயிருடன் இருந்த கடைசி வருடம்…

oOo

நானும் கேத்லீனும் இப்போது மிக நெருங்கிய தோழிகளாகி விட்டோம். வார நாட்களில் அடிக்கடி சந்திப்புகள், அப்புறம் சனிக் காலைகளில் போர்ட்டபெல்லோ சாலைகளில் சுற்றிய பின் அவளுடன் சேர்ந்து கெண்ட்டில் (Kent) வசிக்கும் அவள் சித்தியின் பண்ணை வீட்டில் வார இறுதியைக் கழித்து வருவோம்.

அந்த வருட ஜூனில் கேத்லீனை ஒரு மதிய உணவில் சந்தித்தபோது, “இன்று கடைக்கு சுவாரசியமான ஓரு ஆள் வந்தார். யாராக இருக்கும், ஊகி பார்க்கலாம்” என்று கேத்லீன் உற்சாகமாகக் கேட்டாள்.

“யார்?”

“ஜார்ஜ்!”

அவனைப்பற்றி சுத்தமாய் மறந்தே போயிருந்தோம். எப்போதாவது பேச்சு வரும். “நால்வரும் ஒன்றாய் சேர்ந்தே இருக்க வேண்டும்,” என்று அவனைப் போல் மிமிக் செய்து காட்டுவேன்.

“அவன் ஆப்பிரிக்காவிலேயே டஜன் குழந்தைகளுடன் செட்டிலாயிருப்பான்!” என்று ஸ்கின்னி பரிகாசிப்பான்

கேத்லீன் மட்டும் பரிதாபப்படுவாள் “அவன் பாவம்தான். கடிதம் எழுதலாம். ஆனால் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான். எல்லா சமயத்திலும் முடிகிற காரியமா என்ன!”

நான் அவனது திருமணத்தைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அப்படியே போய் விட்டது.

இப்போது அவனது வருகையை எதிர்நோக்கி கேத்லீன் மிக ஆர்வமாயிருந்தாள். “அவனைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. அவனுக்கு எப்போதுமே மற்றவர்கள் கவனம் தேவை,” என்றாள்.

“அவனுக்கு அம்மாதான் தேவை,” என்ற என்னுடைய கிண்டலையெல்லாம் கேத்லீன் பொருட்படுத்தவில்லை. தற்போது வெயிட் போட்டிருக்கிறானாம். நிறைய யுத்த கால கதைகள், அவன் வைத்திருந்த டர்பன் நைட் கிளப் கதைகள் இப்படி பல கேத்லீனிடம் சொல்லியிருக்கிறான்; ஆனால் மடில்டாவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இந்த “ஜார்ஜை” சந்திக்க நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் ஏதோ வேலையாக அடுத்த நாளே ஸ்காட்லாந்திற்குப் போக வேண்டியதாய் விட்டது. அவனை செப்டெம்பர் வரை சந்திக்கவே இல்லை; என்னுடைய சாவிற்கு சற்றுமுன் வரை…

oOo

நான் ஸ்காட்லாந்தில் இருந்தபோது வந்த கேத்லீனின் கடிதங்களின் மூலம் அவர்கள் இருவருக்கும் நெருக்கம் மிக அதிகமாகியிருந்ததை உணர்ந்து கொண்டேன். அவனைப் பற்றி நிறைய பேசிக்கொண்டே இருந்தாள். அவனுக்கும் கெண்ட்டில் ஒரு வயதான பெரியம்மா பெண் உண்டு; கேத்லீனின் சித்தியின் பண்ணை வீட்டிலிருந்து சில மைல்கள் தொலைவில்தான். எனவே வார இறுதியில் இருவரும் சேர்ந்து கென்ட் போவார்கள். அங்கே நீண்ட நடைப்பொழுதுகளும் உண்டு.

நான் அந்த செப்டெம்பரில் லண்டன் திரும்பினேன். கேத்லீன் சித்தி வெளிநாடு சென்றிருந்தபடியால், அந்த வார இறுதியில் நான் கேத்லீனுடன் கென்ட்(Kent) பண்ணை வீட்டில் இருப்பதாக ஏற்பாடு.  (வேலைக்காரியும் விடுமுறையில் போயிருந்தாள்). ஜார்ஜ் சில நாட்களுக்கு முன்னரே லண்டலினிருந்து கென்ட்டிற்கு போய்விட்டான். கேத்லீன் ஆர்வமாக “அவன் அறுவடைக்கு உதவுகிறான்,” என்றாள்.

அந்த சனிக்கிழமை எதிர்பாராதவிதமாக கேத்லீனுக்கு சில வேலைகளினால் லண்டனிலிருந்து கிளம்பத் தாமதமாகிவிட, நான் மட்டும் அதற்கு முன்னர் மதியமே போய் விடுவதாய் முடிவு செய்து கொண்டோம். போய் அன்றிரவு நடக்க இருக்கும் டின்னர் ஏற்பாடுகளை கவனிப்பதாய் திட்டம். ஜார்ஜை அந்த சனியிரவு டின்னருக்கு அழைத்திருந்தாள்.

“நான் ஒரு ஏழு மணியளவில் அங்கிருப்பேன். நீ போகும்போது வீடு காலியாயிருக்கும், உனக்கு ஒன்றும் சிரமமில்லையே?” என்றாள் கேத்லீன்.

காலி வீடு எனக்கு பிடிக்கும். போய் இறங்கியபோது அந்த ஜார்ஜியன் காலத்து எட்டு ஏக்கரில் அமைந்திருந்த வீடு இன்னும் பிடித்திருந்தது. டின்னருக்காக எதுவும் செய்ய வேண்டியிருக்கவில்லை; கேத்லீன் சித்தி நிறைய வைத்துவிட்டு போயிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் துண்டு குறிப்புகள்:

“இவை அனைத்தையும் தீர்த்துவிடுங்கள், இன்னும் ப்ரிட்ஜில் நிறைய இருக்கிறது.”

“இது பசித்த மூன்று வயிறுகளுக்கு காணும்”

“பார்ட்டிக்கென இரண்டு பூன் (beaune) பாட்டில்கள் டேபிளுக்குப் பின்னால் வைத்திருக்கிறேன், மறந்து விடாதீர்கள்.”

ஒரு புதையல் வேட்டை போல குறிப்புகளை ஒவ்வொன்றாகப் படித்து எல்லாவற்றையும் சந்தோஷமாகத் தேடி எடுத்து வைத்தேன். அந்த பெரிய வீட்டிற்குள் சுற்றி வந்தேன். சன்னல்களைத் திறந்து வெளிறிய மஞ்சள் செப்டெம்பர் காற்றை அறைகளினுள் அனுமதித்தேன். பால் மட்டும் இல்லை, வாங்கி வர வேண்டும். பக்கத்தில் இரு வயல்வெளிகளைத் தாண்டி இருக்கும் பால் பண்ணைக்கு நான்கு மணிக்கு மேல் கிளம்பினேன். தொழுவத்துக்காரர் அப்போதுதான் பால் கறந்து முடித்திருப்பார்.

தொழுவத்துக்காரர் என்னிடம் பால் புட்டியை நீட்டியபோதுதான் ஜார்ஜை அங்கு பார்த்தேன்.

“ஹல்லோ ஜார்ஜ்!” என்றேன்.

“ஊசி! நீ இங்க என்ன செய்கிறாய்?” என்றான் ஜார்ஜ்.

“பால் வாங்கிக்கொண்டிருக்கிறேன்!”

“நானும்தான். உன்னைப் பார்த்ததில் சந்தோஷம்!”

பால்காரரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு இருவரும் கிளம்பினோம்.

“சரி உன்கூடவே வருகிறேன்; ஆனா வழியில் நிற்க மாட்டேன், சீக்கிரம் போகணும்; என்னுடைய கசினுக்கு டீக்கு பால் கண்டிப்பாய் வேண்டும்,” என்று கூடவே வந்தான்.

“கேத்லீன் எங்கே?”

அவள் லண்டனில் வேலைகளில் மாட்டிக்கொண்டாள் என்றும் ஒரு ஏழு மணியளவில் எதிர்பார்க்கலாமென்றும் சொல்லிக்கொண்டே வந்த போது முதல் களம் தாண்டி விட்டோம்.

அவன் வழி இடது புறம் பிரிந்து போனது.

“சரி, இரவு பார்க்கலாமா?” என்று கேட்டபடியே போகாமல் நின்றான்.

“ஓகே, இரவு பழைய கதைகளையெல்லாம் பேசலாம்”

இப்போது என்னுடனே களத்தடுப்பைத் தாண்டி குதித்தான். “இங்க பார் ஊசி, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

“நாம் இரவில் பேசலாம் ஜார்ஜ். உன்னுடைய பெரியம்மா பெண் பாலுக்காக காத்துக் கொண்டிருப்பாள்,” ஏதோ குழந்தையிடம் பேசுவது போலத்தான் நான் பேசிக்கொண்டிருந்தேன்.

“இல்லை, உன் கிட்ட தனியாய் பேசணும், இதுதான் சந்தர்ப்பம்,”

நாங்கள் இரண்டாவது களத்தை தாண்ட ஆரம்பித்தோம். சில மணி நேரங்கள் நான் தனியாய் இருக்கலாமென்று நினைத்திருந்தேன். இவன் விடமாட்டான் போல, இப்போது எரிச்சலாய் வ்ந்தது.

“ஹேய், அங்க பார், வைக்கப்போர்!”

அது ஒரு பெரிய படப்பு, ஏணி வைத்துத்தான் ஏறவேண்டும்.

“ஆமாம், வைக்கப்போர்.” அசட்டையாக கூறினேன்.

“அங்க போய் உட்கார்ந்து பேசலாம். உன்னை மறுபடியும் வைக்கப்போரில் பார்க்க ஆசையாக இருக்கிறது. நான் அந்த போட்டோவை இன்னும் வைத்திருக்கிறேன். நினைவிருக்கிறதா, நீ..”

“வைக்கப்படப்பில் ஊசியைக் கண்டெடுத்தேன்,” என்று அந்த பெரிய வைக்கோல் படப்பின் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டே வாக்கியத்தை முடித்து வைத்தேன். மேலே ஏற சிரமமாகத்தான் இருந்தது. என்னுடைய பால் புட்டியை வைக்கோல் புற்களுக்கு நடுவில் பொதித்து வைத்தேன். ஜார்ஜ் அவனுடைய புட்டியை கவனமாக கீழே வைத்துவிட்டு மேலே ஏறினான்.

“என்னுடைய வயதான பெரியம்மா பெண்ணிற்கு நேரத்தை பற்றி ரொம்ப தெரியாது; நான் ஒரு பத்து நிமிஷமாகத்தான் வெளியே போயிருந்தேன் என்றால் நம்பி விடுவாள்!” என்று ஜார்ஜ் சொன்னதும் சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தேன். முகம் நன்றாக அகன்று, பெருத்திருந்தது.  பெரிய பழுப்பு கண்களில் விளக்கமுடியாத ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது.

“அப்புறம்…இவ்வளவு வருடங்களுக்கு பின் ஸ்கின்னியை திருமணம் செய்துகொள்ள போகிறாயா?”

“இன்னும் தெரியாது ஜார்ஜ்.”

“எப்படியோ அவனை இவ்வளவு வருடங்கள் நன்கு கவனித்துக்கொண்டாய்!”

“இது உனக்குத் தேவையில்லாத விஷயம்,” சுருக்கென கூறினேன்.

“கோபப்படாதே, சும்மா விளையாட்டிற்குத்தான் சொன்னேன்,” அதை உணர்த்துவதற்கு கொஞ்சம் வைக்கோலை எடுத்து எனது முகத்தில் தேய்த்துவிட்டான்.

அடுத்த நொடி, “நீயும் ஸ்கின்னியும் என்னை ரொடிசியாவில் சரியாகவே நடத்தவில்லை.”

“நாங்கள் ரொம்ப பிசியாக இருந்தோம் ஜார்ஜ்; நாங்கள் இன்னும் சின்ன வயது, நிறைய பார்க்க, செய்ய வேண்டியிருந்தது. உன்னைத்தான் எப்போ வேண்டுமானாலும் பார்க்க முடிந்ததே.”

“நீங்கள் இருவரும் சுயநலக்காரர்கள், ” என்றான்.

“சரி, நான் கிளம்புகிறேன்” நான் வைக்கற்படப்பிலிருந்து கீழே இறங்க எத்தனித்தேன். என்னை கையைப் பிடித்து நிறுத்தினான்.

“உன் கிட்ட ஒன்று சொல்ல வேண்டும்.”

“ஓகே ஜார்ஜ், சொல்லு.”

“முதல்ல கேத்லீனிடம் இந்த விஷயம் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு. அவளேதான் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று வைத்திருக்கிறாள்.”

“ஆல்ரைட், சத்தியம், என்ன விஷயம்.”

“நான் கேத்லீனை திருமணம் செய்துகொள்ள போகிறேன்.”

“ஆனால் நீ ஏற்கனவே திருமணம் ஆனவன்?”

“நான் மடில்டாவை காங்கோவில் வைத்துதானே திருமணம் செய்தேன்?”

“இருந்தாலும் இருதார மணம் கிரிமினல் குற்றம் ஆயிற்றே?”

அந்த வார்த்தை அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பிவிட்டது. கை நிறைய வைக்கோற்களை எடுத்து என் முகத்தில் எறியப்போவது போல இருந்தான். அப்புறம் ஒருமாதிரி கட்டுப்படுத்திக் கொண்டு, “அந்த காங்கோ திருமணம் சட்டப்படி செல்லுமான்னு சந்தேகம்தான். அதைப்பற்றி கவலைப்படவில்லை, என்னைப் பொறுத்தவரை அந்த மாதிரி ஒன்று நடக்கவே இல்லை” என்றான்.

“நீ இந்த மாதிரி நடந்து கொள்ள முடியாது!”

“எனக்கு கேத்லீன் தேவை. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமாக இருப்போம்.”

“சரி நான் கிளம்புகிறேன், நேரமாகிறது” என்றேன்.

என்னுடைய கணுக்கால்களின் மேல் அவனது இரு கால் முட்டிகளையும் வைத்து அமுக்கி பிடித்துக் கொண்டதில் என்னால் நகர முடியவில்லை. முகத்தில் வைக்கோலைப் பூசினான்.

“ஊசி, கொஞ்சம் சிரி. பழைய நாட்களைப் போல் பேசலாம்.”

“வெல்?”

“மெடில்டாவை திருமணம் செய்துகொண்ட விஷயம் உன்னையும் என்னையும் தவிர யாருக்கும் தெரியாது..”

“மெடில்டாவிற்கு தெரியுமே?”

“தொடர்ந்து பணம் வந்து கொண்டிருக்கும் வரை அவள் வாயைத் திறக்க மாட்டாள்.அதெல்லாம் தகுந்த ஏற்பாட்டில்தான் இருந்து வருகிறது”

“என்னை போக விடு ஜார்ஜ்.”

”நீ இந்த விஷயத்தை ரகசியமாய் வைத்திருப்பதாய் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய்..நினைவிருக்கட்டும் சத்தியம்.”

“ஆமாம் சத்தியம் செய்து கொடுத்திருந்தேன்.”

“இப்போது நீயும் ஸ்கின்னியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள். நாம் நால்வரும் சரியான ஜோடிகளாய் இருக்கப் போகிறோம். பல வருடங்களுக்கு முன்னரே இப்படி இருந்திருக்க வேண்டும்….நமது இளமை நம்மை இழுத்துச் சென்று விட்டது இல்லையா?”

“வாழ்க்கை கொண்டு சென்றது.”

“ஆனால் இப்போது எல்லாம் சரியாகப் போகிறது. நீ என்னுடைய ரகசியத்தை கண்டிப்பாய் காப்பாற்றப் போகிறாய், இல்லையா? சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய்.”

அவனது பிடி சற்றே தளர்ந்தது. இப்போது என்னால் கொஞ்சம் நகர முடிந்தது.

“கேத்லீனுக்கு உன்னைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தால் நீ ஏற்கனவே திருமணம் ஆனவன் என்ற உண்மையை அவளிடம் சொல்வேன்.”

“இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாதே. நீ ஸ்கின்னியுடன் சந்தோஷமாய் வாழ்க்கையை தொடரப் போகிறாய். என்னுடைய வழியில் நிற்காதே…”

“நான் கண்டிப்பாய் சொல்லத்தான் போகிறேன். கேத்லீன் என்னுடைய நெருங்கிய தோழி!” நான் படபடவென்று சொன்னேன்.

அவன் என்னை கொன்று போடுவது போல பார்த்தான். பிறகு அதைச் செய்தான்.

என் வாய் நிறைய வைக்கோற் புற்களை அடைத்து, என் இரு கைகளையும் அவனது இடக்கையால் பிடித்துக்கொண்டு, என் மேல் அப்படியே விழுந்து நகர முடியாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டு…

இந்த வாழ்வில் நான் கடைசியாகப் பார்த்தது, அவனது வாயின் சிவந்த வரிகளையும் வெண்ணிற பற்களின் இடைவெளிகளையும்தான்.

சுற்றி மைல்கள் தொலைவிற்கு ஆள் அரவமே இல்லை. அந்த பிரம்மாண்ட படப்பில் பெரிய பள்ளம் தோண்டி எனது உடலை உள்ளே போட்டு மேலே காய்ந்த புற்களை வைத்து மறைத்து மூடிவிட்டான்.  மிக இயற்கையாக இருக்கும்படிச் செய்துவிட்டு ஜாக்கிரதையாக கீழே இறங்கி அவன் தனது பால் புட்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டான்…

அதனால்தானோ என்னவோ, ஐந்து வருடங்களுக்குப் பின் போர்டபெல்லொ சாலையில் ஒரு பழக்கடை பக்கத்தில் நான் “ஹலோ ஜார்ஜ்” என்று சொன்ன போது பிரமித்து வெளிறிப் போனான்.

oOo

வைக்கோல் போர் கொலை அந்த வருடத்தின் மிகப் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று.

ஒரு இருபது மணி நேரத் தேடலுக்குப்பின் எனது உடல் கண்டுபிடிக்கப்பட்டதும் அன்றைய மாலைப் பத்திரிக்கைகளின் தலைப்பு செய்தி:

‘ “ஊசி” கண்டுபிடிக்கப்பட்டாள்; வைக்கோல் போரில்!’

கேத்லீன் அவளது கேத்தலிக்கப் பார்வையில் “ஊசி இறப்பதற்கு முந்தின நாள்தான் சர்ச்சில் பாவமன்னிப்பு கேட்டாள்; எவ்வளவு அதிர்ஷ்டசாலி!”

பாவம் அந்த தொழுவத்துக்காரர் – அவரை உள்ளூர் போலீசும், பின்னர் ஸ்காட்லாந்த் யார்டும் பல மணி நேரங்கள் குடைந்தெடுத்தனர். ஜார்ஜையும்தான். ஜார்ஜ் பால் வாங்கிவிட்டு என்னுடன் திரும்பியதை சொன்னான். ஆனால் நிற்காது பெரியம்மா பெண் வீட்டிற்குப் போனதாகக் கூறிவிட்டான்.

“நீங்கள் ஊசியை பத்து வருடங்களுக்கு அப்புறம் பார்த்தீர்கள், ஆனால் கொஞ்ச நேரம் கூடவா நின்று பேசவில்லை?” இன்ஸ்பெக்டர் மிகுந்த சந்தேகத்துடன்தான் கேட்டார்.

“என்னுடைய பெரியம்மா பெண் பாலுக்காக காத்துக் கொண்டிருந்தாள். மேலும் அன்று இரவுதான் நாங்கள் டின்னரில் சந்திப்பதாக இருந்தோமே,” ஜார்ஜ்.

பாவம் அந்த பெரியம்மா பெண், ஜார்ஜ் பத்து நிமிடங்களுக்குள் பால் வாங்கித் திரும்பி விட்டதாக சத்தியம் செய்தாள். அடுத்த சில மாதங்களில் அவள் இறக்கும்வரை அப்படியேதான் நம்பிக்கொண்டிருந்தாள். மைக்ரோஸ்கோப் பரிசோதனையில் ஜார்ஜின் மேல் கோட்டில் வைக்கோல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த அறுவடை நேரத்தில் மாவட்டத்தில் (County) உள்ள எல்லாருடைய மேல் கோட்டிலும் வைக்கோல் இருக்கும். என்னுடைய மணிக்கட்டுகளின் காயங்கள் மிக வலிமையான பெரிய கைகளால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொன்னது. துரதிருஷடவசமாக பால்காரரின் கைகள் ஜார்ஜின் கைகளை விடப் பெரியதாகவும் வலிமையாகவும் இருந்தன. மேலும் நான் மட்டும் அன்று முழுக்கை கார்டிகன் ஸ்வெட்டர் அணிந்திருக்காவிடில் கொலையாளியின் கைரேகைகள் பதிந்திருக்க வாய்ப்புண்டு என்றும் அறிக்கை சொன்னது.

ஜார்ஜிற்கு கொலைக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று காட்ட கேத்லீன் ஜார்ஜுடன் திருமணம் நிச்சயமாகி விட்டதாக போலீசிடம் சொன்னாள். ஸ்காட்லாந்த் யார்ட் ஜார்ஜின் ஆப்பிரிக்க வாழ்க்கையையும் விசாரித்தது. மடில்டாவுடன் வாழ்ந்த விவகாரமெல்லாம் வெளிவந்தாலும் யார் காங்கோ ரெஜிஸ்டர்களைப் பற்றி கவலைபடப்போகிறார்கள்?

எனவே கிடைத்த தடயங்களை வைத்து யார் மேலும் உறுதியாக குற்றம் சாட்ட முடியவில்லை.

அப்புறம் போலிசின் பார்வை கேத்லீனின் அத்தை வீட்டிற்கு ஐந்து மைல்கள் தள்ளி இருந்த விமானப்படை முகாமின் மேல் நகர்ந்தது. ஆனால் ஒன்றும் முன்னேற்றம் இல்லை.

வைக்கோற்படப்புப் படுகொலை அந்த வருஷத்திய தீர்க்கப்படாத குற்றவழக்காக இருந்துவிட்டது….

ஜார்ஜும் கேத்லீனும் கொஞ்ச காலத்திற்கு பின் திருமணம் செய்துகொண்டனர். பால்காரர் கனடாவிற்கு குடியேறிவிட்டார்; அவர் மீது அனுதாபம் கொண்ட ஸ்கின்னிதான் உதவி செய்தான்.

***          ***

அந்த சனிக்கிழமை ஜார்ஜை கேத்லீன் விடுவிடுவென கூட்டிச் சென்றாலும் மறுபடியும் அவனை போர்ட்டபெல்லொ சாலையில் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன்.

அதே போல் அடுத்த சனிக்கிழமையில் கண்களில் கொஞ்சம் நம்பிக்கையுடனும் நிறைய கவலைகளுடனும். ஜார்ஜ் மட்டும் வந்தான். சோள நிறத்தில் தாடியும் மீசையும் அவனது பெரிய வாயைச் சூழ்ந்திருந்தன.

நான் அவனது நம்பிக்கையைச் சிதறடித்தேன்.

“ஹல்லோ ஜார்ஜ்!”

இப்போது என் பக்கம் அவன் பார்த்த பார்வை! வாய் பூராவும் வைக்கோல்களை அடைத்து வைத்தது மாதிரியான பார்வை என்று நினைத்துக்கொண்டேன். மேற்கொண்டும் பேசியிருப்பேன், ஆனால் அவன் அங்கே நிற்கவில்லை. சாலைகளின் இருபுறங்களிலும் கோணல்மாணலாக ஓடினான்.

இருந்தாலும் அடுத்த வாரமும் வந்தான். இந்த முறை கேத்லீனும் வந்தாள். அவன் கையை இறுக்கிக்கொண்டு வந்தாள். அவளது ரசனைக்ககேற்ற பொருட்கள் நிறைய ஸ்டால்களில் இருந்தாலும் அவைகளையெல்லாம் அவள் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அந்த பளபளத்த வெள்ளி நிறத்தோடுகளையாவது பார்ப்பாள் என எதிர்பார்த்தேன். இல்லை, எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

ஜார்ஜ்…பரிதாப தோற்றத்துடன், ஏதோ வலியால் இடுங்கின மாதிரியான கண்களுடன் சாலையைக் கடந்து மறுபக்கத்திற்கு வந்தான்.

“ஓ ஜார்ஜ், நீ பார்க்க ஆளே சரியில்லையே ஜார்ஜ்,” என்றேன்.

“அங்க பார், பார். அந்த ஹார்ட்வேர் கடைக்கு பக்கத்தில் ஊசி!” என்று கூவினான்.

கேத்லீன் கலங்கிய கண்களுடன் “வா வீட்டிற்கு போகலாம் டியர்,” அவனை இழுத்தாள்

“ம்ஹூம், ஜார்ஜ், நீ பார்க்க நோய்வாய்ப்பட்டவன் போல இருக்கிறாய்!” என்றேன்…

கொஞ்ச நாளில் அவனை ஒரு நர்சிங் ஹோமில் சேர்த்தார்கள். வாரத்தில் மற்ற நாட்களிலெல்லாம் அமைதியாகத்தான் இருப்பான். சனிக்கிழமை காலைகளில் மட்டும் அவனைக் கட்டுப்படுத்தி போர்டபெல்லொ சாலைக்குப் போகாமல் பார்த்துக் கொள்வது சிரமமான ஒன்றாகிப் போனது.  ஒரு சில மாதங்களுக்குப்பின் அவன் நர்சிங் ஹோமிலிருந்து தப்பிவிட்டான், ஆனால் அது சனிக்கிழமையல்ல, திங்கட்கிழமை. அவனை எல்லோரும் போர்ட்டபெல்லோ சாலையில் தேடிக்கொண்டிருந்தபோது அவன் கென்ட்டில், வைக்கற்போர் கொலை நடந்த பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் இருந்தான். அவன் பேசின விதமே அவன் சரியில்லை என்ற தோற்றத்தை நிலையத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தது.

“நான் ஊசியை மூன்று சனிக்கிழமைகளாக போர்ட்டபெல்லா சாலையில் பார்த்திருக்கிறேன்….என்னை ஒரு ஹோமில் அடைத்துவைத்தார்கள், ஆனால் நான் தப்பிவிட்டேன்…ஊசி கொலை…வெல், நான்தான் அதைச் செய்தேன். இப்போது உண்மையைச் சொல்லிவிட்டேன்…இனிமேலாவது ஊசி வாயை மூடுவாளா?”

இந்த மாதிரி நிறைய பைத்தியக்காரர்கள் ஒவ்வொரு கொலைக்கும் வந்து உளறுவதுண்டு.  காவலர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவனை அந்த ஹோமிற்கே அனுப்பிவைத்தனர்.

அவன் அங்கே ரொம்ப நாள் தாங்கவில்லை. பாவம் கேத்லீன், கடையை விட்டுவிட்டு அவனுடனே வீட்டில் இருந்தாள். சனிக்கிழமைகளில், அவன்தான் கொலை செய்தானென்றும் போர்ட்டபெல்லொ சாலைக்கு போகவேண்டுமென்றும் ரொம்பப் படுத்தினான். ஒரே ஒரு தடவை மடில்டாவைப்பற்றி ஏதோ சொல்ல வந்தான். கேத்லீன் சரியாக கவனிக்கவில்லை. அதற்கப்புறம் அதைப்பற்றி பேச அவனுக்கு தைரியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஸ்கின்னி ஜார்ஜைவிட்டு கொஞ்சம் தள்ளியே இருந்தாலும் கேத்லீனிடம் அனுதாபமாகத்தான் இருந்தான். அவர்களை கனடாவிற்கு குடியேற ஆலோசனை கொடுத்ததும் அவன்தான்.  கனடாவில் ஜார்ஜ் கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் கண்டிப்பாய் பழைய ஜார்ஜில்லை. கேத்லீன் ஸ்கின்னிக்கு எழுதும் கடிதங்களில் இப்படித்தான் குறிப்பிடுவாள். “அந்த வைக்கோற் படப்பு துயரம் ஜார்ஜை வதைத்துவிட்டது. சில சமயங்களில் ஊசியை விட ஜார்ஜின் நிலைமையை நினைத்துதான் நான் நிறைய வருத்தப்படுகிறேன்.”

“அடிக்கடி ஊசியின் ஆத்மாவிற்காக பிரார்த்தனை நடத்திக்கொண்டு இருக்கிறேன்.”

போர்ட்டபெல்லொ சாலையில் இனிமேல் ஜார்ஜ் என்னை பார்ப்பது சந்தேகம்தான். எப்போதும் அந்த கசங்கின வைக்கற்படப்பு புகைப்படத்தை வைத்துக் கொண்டு முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறான். கேத்லீனுக்கு அந்த புகைப்படம் பிடிக்கவில்லை, ஆச்சரியம் இல்லைதான். என்னைப் பொருத்தவரை அந்த புகைப்படம், ஒரு சந்தோஷமான தருணம்.  ஆனால் நாங்கள் அனைவரும் புகைப்படத்தில் காணப்பட்டது போல உண்மையில் அருமையானவர்கள் இல்லை என்று நினைக்கிறேன்.

பின்னணியில் பெரிய சோளக்கதிர்கள் தெரிய, ஸ்கின்னி பரிகாசப் பார்வையுடன், கேத்லீன் தலைக்கு அழகாக கைகொடுத்து சரிந்து பார்த்துக்கொண்டு, நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவளாய் காட்டிக்கொண்டு… ஒவ்வொருவரும் ஜார்ஜின் காமிராவைப் பார்த்து, இந்த அற்புத உலகை நோக்கி, சிரித்துக் கொண்டிருந்தோம் – நிரந்தரமாய்.