சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள் – 2

ஒவ்வொரு வேளை உண்ணும் உணவிலும், நுண்ணுயிரிகளைத் தவிர்ப்பதில் அதீத கவனம் செலுத்துபவர்களை யாருக்குத்தான் பிடிக்கும்? மாபெரும் வேதியியலாளரும் (chemist), நுண்ணுயிரியல் வல்லுனருமான லூயி பாஸ்டருக்கு அந்தப் பழக்கம் உண்டு. எப்போதும் கைவசம் வைத்திருக்கும் உருப்பெருக்கும் கண்ணாடி (magnifying glass) மூலம், தனக்கு முன் வைக்கப்படும், ஒவ்வொரு உணவிலும் நுண்ணுயிரிகள் இருக்கின்றனவா என்று சோதித்த பின்னரே உண்ணுவார். ஒரு முறை அவருக்கு விருந்தளித்தவர்கள், பெரும்பாலும் மறுவிருந்துக்கு அவரை அழைப்பதில்லை.

எப்போதும் கோடிக்கணக்கில்,உங்கள் மீதும், உஙகளைச் சூழ்ந்துமிருக்கும் பாக்டீரியாக்களைத் தவிர்க்கவா முடியும்? நீங்கள் எப்போதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, அளவாக சுகாதார வழிகளைக் கடைபிடிப்பவரானாலும், உங்கள் உடற் பரப்பில், மந்தை மந்தையாக, ஒரு ட்ரில்லியன்(ஒரு லட்சம் கோடி) பாக்டீரியாக்கள் எப்போதும் மேய்ந்துகொண்டிருக்கும்-அதாவது, மேல் தோலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரிலும் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள். மேல்தோல் ஒவ்வொரு நாளும் உதிர்க்கின்ற சுமார் ஓராயிரம் கோடி செதில்கள், தோலின் நுண்துளைகள்/ வெடிப்புகளில் வடியும் சுவையான எண்ணை வகைகள் மற்றும் வலுவூட்டும் கனிமங்களே அவற்றின் தீவனம். பாக்டீரியாக்கள் மிகவும் விரும்பும் அறுசுவை உணவகம் உங்கள் உடம்பு- கதகதப்பான பெரும் பரப்பில் காலாற நடந்து வகைவகையான உணவுண்ணும் வசதிதரும் உயர்தர உணவகம்(food court). இந்த வசதிக்கு நன்றி தெரிவித்து அவை உமக்கு அளிப்பது உடல் நாற்றம் (body odour).

மேலே குறிப்பிட்ட ஒரு லட்சம் கோடி பாக்டீரியாக்கள், உங்கள் சரீரத்தின் மேற்பரப்பில் வசித்து வருபவை. இன்னொரு லட்சம் கோடி உங்களின் உணவு/மூச்சுப் பாதைகளில் அமர்ந்தும்,, கண் இமைகளிலும் பிற இடங்களிலும் உள்ள உரோமங்களைப் பற்றிக்கொண்டும், ஈரவிழிப்படலத்தில் நீந்திக்கொண்டும், உங்கள் பற்களின் எனாமலைத் துளைத்து கூடாரம் அமைத்துக் கொண்டும் வாழ்கின்றன. உங்கள் ஜீரண மண்டலம், குறைந்த பட்சம் 400 வகைப்பட்ட, 10000 கோடிக்கு மேலான நுண்ணுயிரிகளுக்கு வாழ்வாதாரம். ஒவ்வொரு பாக்டீரியா வகையும் ஒரு ஸ்பெஷலிஸ்ட், சர்க்கரைக்கு, மாவுப்பொருளுக்கு, பிற பாக்டீரியாக்களுடன் சண்டைபோட என பலப்பல தனித்திறனாளிகள் நிறைந்த உழைக்கும் வர்க்கம். சும்மா இருக்கும் சுகவாசிகளும் உண்டு. ஆச்சர்யமாக இருக்கிறதா? உதாரணமாக, குடற்பகுதியில், நீக்கமற நிறைந்திருக்கும் ஸ்பைரொகீட் (intestinal spirochete) என்ற வகை பாக்டீரியாக்கள் ஒரு வேலையும் செய்வதில்லை. கேட்டால், “இந்த இடம் பிடித்திருக்கிறது, இனிமேல்தான் சாவகாசமாக வேலை தேடவேண்டும்” என்று சொல்லக்கூடும். சுமார் பத்து க்வாட்ரில்லியன்(100 கோடி கோடி) செல்கள் இருக்கும் மனித உடலில், 100 க்வாட்ரில்லியன்(1000கோடி கோடி) பாக்டீரியா செல்கள் குடியிருக்கின்றன. அதாவது, நம்மின் பெரும்பகுதி அவையே. பாக்டீரியாக்களின் பார்வையில் நாம் சிறுபான்மையினராகத் தெரிவோம்.

ஆண்டிபயாட்டிக்ஸ் (நுண்ணுயிர் எதிர்ப்பொருள்) மற்றும் கிருமிநாசினிகளையும் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் அறிவார்ந்த பெருங்குடிகள் என்ற மதர்ப்பில், பாக்டீரியாக்கள் வாழ்க்கையின் ஓரத்திற்கே துரத்தப்பட்டுவிட்டன என்று நாம் மார்தட்டிக்கொள்ளலாம். அது உண்மையல்ல. அற்ப ஜீவிகளாகிய பாக்டீரியாக்கள், நம்மைப்போல் பெரு நகரங்களை நிர்மாணித்துப் பெரு வாழ்வு வாழாவிட்டாலும், சூரியன் வெடித்துச் சிதறும் நாள் வரை வாழ்ந்திருக்கும் வலு கொண்டவை. பூமி அவர்களின் கிரகம்; இங்கு நாம் வாழ்வது, இங்கிருக்க அவர்களால் அனுமதிப்படுவதாலேயே.

பாக்டீரியாக்கள், பல கோடி ஆண்டுகள் மனிதரில்லாத உலகில் உலவி வந்த உயிரினம். அவற்றின் துணையின்றி நாம் ஒருநாள் கூட வாழ்ந்திருக்க முடியாது. அவை நம் கழிவுகளைச் சுத்திகரித்து, மறு சுழற்சிக்குத் தருகின்றன. அவை அயராது மென்ற பின்னரே இறந்த உயிரினங்கள் மக்கிப் போக இயலும். அவை, நாம் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்தும், நம் விளை நிலங்களின் உற்பத்தித் திறனைத் தக்கவைத்தும் உதவுகின்றன. மேலும், நம் வயிற்றில் வைட்டமின்களை உணவுடன் ஒருங்கிணைப்பது, உடல் ஏற்கும் சர்க்கரைகளாகவும், கலப்புப் பல்சர்க்கரைகளாகவும் (polysaccharides) , உண்ணும் உணவை மாற்றுவது, நம் தொண்டை வழியாக நுழையும் அயலிடத்து கிருமிகளுடன் போரிடுவது போன்ற பலவற்றையும் அவை செய்கின்றன.

காற்றிலுள்ள நைட்ரஜனை எடுத்து, நமக்குப் பயன்படும் ந்யூக்லியோடைட்களையும் அமினோஆசிட்களையும் தயாரிக்க, பாக்டீரியாக்களால் மட்டுமே முடியும். நாம் நன்றியோடு வரவேற்கத்தக்க மகத்தான சேவை இது. மார்கலிஸும் ஸேகனும் (Lynn Margulis and Carl Sagan), ”அதையே நாம் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதானால், தேவையான பொருட்களை 500 டிகிரி சென்டிகிரேடுக்கு காய்ச்சி, 200 மடங்கு காற்றழுத்தம் கொடுத்து நசுக்கித் தயாரிக்க வேண்டியிருக்கும்.” என்கின்றனர். பாக்டீரியாக்கள் எந்த ஆரவாரமுமில்லாமல், இந்த வேலையை எப்போதும் செய்து கொண்டிருக்கின்றன . அப்படிக்கிடைக்கும் நைட்ரஜன் இல்லாமல் பெரிய உயிரினங்கள் பிழைத்திருக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நுண்ணுயிரிகள் நமக்கு சுவாசிக்கும் காற்றையும் நிலையான காற்றுமண்டலத்தையும் தொடர்ந்து அளித்து வருகின்றன. சைனோபாக்டீரியா என்னும் புதிய பதிப்பு உள்ளிட்ட பாக்டீரியாக்கள், பூமிக்கோளின் சுவாசிக்கத்தக்க பிராணவாயுவின் பெரும்பகுதியைத் தருகின்றன. கடற்பாசி மற்றும் கடல்வாழ் சின்னஞ்சிறு உயிரினங்கள் குமிழிகளாக ஓராண்டில் வெளியேற்றும் ஆக்சிஜனின் எடை 150 பில்லியன்(15 கோடி) கிலோகிராம்.

இனப்பெருக்கம் செய்வதில் இவை கில்லாடிகள். அவற்றால் 10 நிமிடங்களுக்குள் ஒரு புதிய தலைமுறையை உருவாக்க முடியும். கேங்க்ரீன் என்னும் தசை அழுகலை உண்டாக்கும் மிகக்கொடிய நுண்ணுயிரியான Clostridium perfringens, 9 நிமிடங்களில் வாரிசை உலவ விடுகிறது. கணக்குப் பார்த்தால், இந்த வேகத்தில், ஒரேஒரு பாக்டீரியம் இரண்டு நாட்களில் உற்பத்தி செய்யும் வாரிசுகளின் எண்ணிக்கை பிரபஞ்சத்தின் புரோட்டான்களை விஞ்சி நிற்கும். ”போதுமான ஊட்டச்சத்து கிடைத்தால், ஒரு நுண்ணுயிரி ஸெல் ஒரே நாளில் 2,80,000 பில்லியன் வாரிசுகளைப் பெற்றெடுக்கும்” என்கிறார் பெல்ஜியத்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானி க்ரிஸ்டியான் ட டூவா (Christian de Duve). ஒரு மனித ஸெல், அதே நேரத்தில் ஒரேஒரு முறை பிளவடைந்து, இன்னொரு ஸெல்லை மட்டுமே தரவல்லது.

சுமார் ஒரு மில்லியன் பிளவைகளில் ஒரு முறை விகாரி(mutant) ஸெல் ஜனிக்கிறது. “மாற்றம் (mutation) உயிரின வளர்ச்சிக்கு இடையூறு; விகாரியைப் பொறுத்தவரை மாற்றம் அதன் போதாத வேளை,” என்பது பொதுவான கருத்து. ஆனால், எப்போதாவது, மாற்றங்களால் புது பாக்டீரியத்துக்கு எதிர்பாராத ஆதாயமும் கிடைக்கலாம். தாக்க வரும் ஆண்டிபயாடிக்-குகளைத் திகைக்க வைக்கவோ, திணற வைக்கவோ முடிகிற வரப்பிரசாதமாக அது அமையலாம். சுலபமாக மாற்றுத்திறன்களை வளர்த்துக் கொள்ளும் பாக்டீரியாக்களிடம், மற்றொரு குலைநடுங்கவைக்கும் மேம்பட்ட ஆயுதமும் உண்டு. அதுதான் தகவல் பரிமாற்ற வசதி. மரபியல் குறியீட்டுத் துணுக்குகளை (pieces of genetic coding) எந்த பாக்டீரியமும் யாரிடமிருந்தும் எடுத்துக்கொள்ளலாம். மார்கலிஸும், ஸேகனும் (Margulis and Sagan) இதைப்பற்றி எழுதும்போது- எல்லா பாக்டீரியாக்களும் ஒரே மரபீனிக் (gene) குட்டையில் நீந்துகின்றன என்பதே இதன் சாராம்சம்-என்று குறிப்பிடுகிறார்கள். பாக்டீரியாக்களின் பிரபஞ்சத்தின் ஒரு கோடியில் நிகழ்ந்த எந்த இணக்கமான திருத்தமும் (adaptive change) வேறிடங்களுக்கு விரைவில் பரவுகிறது. இது எதைப்போல் என்றால், சிறகு முளைக்கவும், உள் கூரையில் நடக்கவும் தேவையான மரபியல் குறியீடுகளை, வண்டுகளிடமிருந்து மனிதன் பெற்றுக்கொண்டு, சாகசங்கள் புரியும் மாமனிதனாகி விட முடிவதைப் போன்றது. மரபியல் நோக்கில் பார்த்தால், பாக்டீரியாக்கள், சின்னஞ்சிறியதும், உலகளாவியதும், வெல்ல முடியாததுமான ஒரு உயர்தனி உயிரினமாக ஏற்றுக்கொள்ளப் படவேண்டியவை.

நீங்கள் சிந்துகின்ற, உங்கள் உடல் உதிர்க்கின்ற, உங்கள் கடைவாயில் ஒழுகுகின்ற எதுவாயினும் அவற்றைப் பாக்டீரியாக்கள் உணவாக ஏற்றுச் செழிக்கின்றன. ஈரத்துணியால் துடைக்கும்போது மேடையில் படும் சிறு ஈரம் போதும், அவை விதையின்றி எழுந்தது போல் பூத்துக் குலுங்க. மரம், சுவரொட்டியின் பின்பக்க பசை, காய்ந்த பெயிண்டில் கலந்துள்ள உலோகம் எனப் பல வகை உணவுகளை ரசித்து உண்ணுகின்றன. தயோபஸில்லஸ் காங்க்ரிடிவொரஸ் (Thiobacillus Concretivorous) என்னும் நுண்ணுயிரி, உலோகங்களைக் கரைக்க வல்ல அடர்கந்தக அமிலங்களில் மட்டுமே வாழ்வதையும், வேறு எந்த சூழலிலும் அதுவால் இயலாததையும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மைக்ரோகாகஸ் ரேடியோஃபிலஸ் (Micrococcus radiophilus) என்கிற வகை பாக்டீரியாக்கள், அணு உலைகளின் கழிவுத் தொட்டிகளில் தங்கி அங்குள்ள புளுட்டோனிய வகையறாக்களை உண்டு, ஆனந்த வாழ்வு வாழ்கின்றன. சில பாக்டீரியாக்கள் ரசாயனப் பொருட்களுடன் வினையாற்றும் வேலையற்ற வேலையைச் செய்கின்றன. அதன் மூலம் அவை எந்த பயனும் அடைவதாகத் தெரியவில்லை.

அவை கொதிக்கும் நீரூற்றுகளிலும், காஸ்டிக் சோடா ஏரிகளிலும், பாறைகளுக்கு உட்பகுதியில் வெகு ஆழத்திலும், கடலின் அடிப்பகுதியிலும், அண்டார்டிகாவிலுள்ள மக்மர்டோ பாலைப் (Mc Murdo Dry)  பள்ளத்தாக்கிலுள்ள கற்களுக்கு அடியில் மறைந்திருக்கும் கடுங்குளிர்நீர்க் குளங்களிலும் வாழ்கின்றன. இன்னும் சொல்லப்போனால், வளிமண்டல அழுத்தம் போல் 1000 மடங்கு அழுத்தம்- 50 ஜம்போ ஜெட்களால் நசுக்கப்படுவதற்கு சமமான அழுத்தம்-கொண்ட பசிஃபிக் சமுத்திரத்தின் 7 மைல் ஆழத்திலும் வாழ்ந்து வருகின்றன. அழிக்க முடியாதவை என்ற புகழ் பெற்ற சிலவும் உண்டு. டைனகாகஸ் ரேடியோடூரன்ஸ் (Deinococcus radiodurans) என்னும் பாக்டீரியாக்களில் உள்ள தடுப்பாற்றலால் (immunity), அவை கதிரியக்கத்தையும் எதிர்கொள்ளும் வலிமை பெறுகின்றன. ”அதன் மரபணு (DNA) , கதிரியக்கத் தாக்குதலின்போது வெடித்துச் சிதறி மீண்டும் சரியாக இணையும்- திகில் படங்களில் உயிருள்ளனவற்றின் கைகால்கள் பறந்து வந்து ஒட்டிகொள்வது போல” என்கிறது இகானமிஸ்ட் பத்திரிகை (The Economist).

நிலவில் இரு ஆண்டுகள் நிறுவப்பட்டிருந்த கேமிராவின் இறுக மூடப்பட்டிருந்த(sealed) லென்ஸில் இருந்த Streptococcus பாக்டீரியம் உயிரோடு திரும்பி வந்ததுதான், அவற்றின் பிழைத்திருத்தல்(survival) வல்லமைக்கு சரியான உதாரணம். பாக்டீரியாக்கள் உயிர்வாழ முடியாத சூழல்கள் மிகச்சில. “மிகஅதிக வெப்பநிலை காரணமாக, ஆழ்கடற்புழைகளில்(ocean vents), செருகப்படும் தேடுகோல்(probe) உருகிவிடும் நிலையிருக்கும்; அங்கேயும் பாக்டீரியாக்கள் இருப்பதைக் காண முடிகிறது” என்று விக்டோரியா பென்னெட் என்னிடம் (புத்தக ஆசிரியர்) சொன்னார்.

1920-களில், சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, எட்ஸன் பாஸ்டின், ஃப்ராங்க் க்ரீயர் (Edson bastin, Frank Greer)   என்ற இரு விஞ்ஞானிகள் எண்ணெய்க்கிணறுகளில் 2000அடி ஆழத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பாக்டீரியா வகைகளை கண்டெடுத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்கள். ”2000அடி ஆழத்திலெதுவுமே வாழமுடியாது;இவர்களின் கண்டுபிடிப்பு மாபெரும் அபத்தம்; அவர்களிடம் உள்ள மாதிரிகள் (samples) , மேற்பரப்பு பாக்டீரியாக்களுடன் கலந்து களங்கமடைந்தவையாக இருக்கலாம்” என்ற அன்றைய விஞ்ஞானியரின் கருத்து, அடுத்த 50 ஆண்டுகள் வரை மாறவில்லை. ஆனால் இன்றோ, கரிம (organic) உலகிற்கு சிறிதும் சம்மந்தமில்லாத நுண்ணுயிரிகள் பெருமளவில் பூமிக்குள் அதிஆழத்தில் வாழ்கின்றன என்று நாம் அறிவோம். அவை பாறைகளை, அதாவது, பாறைகளில் உள்ள இரும்பு,கந்தகம், மாங்கனீஸ் போன்ற மூலகங்களை உண்கின்றன. சுவாசிப்பதுவும் கூட வழக்கத்துக்கு மாறான இரும்பு, குரோமியம், கோபால்ட் போன்ற மூலகங்களை (யுரேனியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்). இத்தகைய நிகழ்வுகளின் காரணமாக தங்கம்,செம்பு மற்றும் அரிய உலோகப்படிவுகளும், இயற்கை எரிவாயு மற்றும் எரிஎண்ணெய்ப்படிவுகளும் உருவாகியிருக்கலாம். பாக்டீரியாக்களின் ஓயாத துருவல்களால் (கொறிப்புகளால்) பூமியின் மேலோடு உருவானதென்றும் கருதப்படுகிறது.

புவிமேற் பரப்பின் அடியில் 10000 கோடி டன் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன என்று சில விஞ்ஞானிகள் இப்போது கருதுகிறார்கள். இப்பகுதி, நிலத்தடி பாறை வாழ் தன்னூட்டி பாக்டீரியாக்களின் சூழல் தொகுதி (Subsurface Lithoautotrophic Microbial Ecosystem-SLiME) என்று அழைக்கப் படுகிறது. பூமிக்கு அடியில் உள்ள எல்லா பாக்டீரியாக்களையும் அள்ளி மேற்பரப்பில் போட்டால் பூமியெங்கும் நில மட்டம் 5 அடி உயரும் என்பது (கார்னெல் பல்கலையின்) தாமஸ் கோல்ட்(Thomas Gold)-ன் மதிப்பீடு. இந்த மதிப்பீடு சரியென்றால், பூமிக்கு மேல் இருக்கும் உயிர்களை விட அதிக எண்ணிக்கையான உயிர்கள் பூமிக்கு அடியில் இருக்கும்.

ஆழத்தில் வாழும் நுண்ணுயிரிகள் சிறுத்தும், வீரியம் குறைந்தும் காணப்படும். அவற்றுள், செயலூக்கம் நிறைந்தவை எனக்கருதப்படுபவை ஒரு நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிளவு படும்; மற்றையவை 500 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிளவு படும்.” குறைந்த செயல்பாடுகளே நீண்ட ஆயுளின் திறவு கோல் எனக் கொள்ளலாம்” என்கிறது எகானமிஸ்ட். வாழ்க்கைப்பாதை கரடுமுரடாகும்போது, பாக்டீரியா செயலுறா உறக்க நிலைக்குச் சென்று, புறச்சூழல் சீரடையும் வரை காத்திருக்கும்.

(Translation of pages 302 to 306 of the America’s National Best Seller-“ A Short HISTORY of Nearly Everything”—By BILL BRYSON)