கலம்பகம்
ஐம்பதுக்கும் மேற்பட்ட கலம்பகங்கள் தமிழில் உண்டென்பர். சத்தியமாக, மாணவப் பருவம் தொட்டு இன்றுவரை நான் கேள்விப்பட்டது நந்திக் கலம்பகம் ஒன்று மட்டுமே! பெருந்தொகை ஊதியமாகப் பெற்று தமிழ் கற்பிக்கும் பேராசிரியர் எவரேனும் மேலும் சில கலம்பகன்களை அறிந்திருக்கக்கூடும். இந்த ஐம்பதுக்கும் அச்சு வடிவம் உண்டா, தமிழ் முதுகலைப் படிப்பில் பாடத் திட்டமாக உளதா, இலதா என்றெமக்குத் தெரியாது. ஆனால் செம்மொழியான தமிழ்மொழி ஏ.ஆர்.ரகுமான் இசை வடிவிலாவது வாழ்ந்திருக்கும்.
மதுரைக் கலம்பகம், கைலாயக் கலம்பகம், கச்சிக் கலம்பகம் எனச் சில குறிப்பாகப் பேசப்படுகின்றன. தேடினால் கிடைக்கும். ஆனால் வேலை மெனக்கெட்டு எதற்குத் தேடனும் என்பதுதானே நமது மனப்போக்கு!
கலம்பகங்கள் அகம், புறம் என இரு பிரிவுகளிலும் பாடப்பெறும். புயவகுப்பு, அம்மானை, ஊசல் முதலிய பதினெட்டு உறுப்புகள் கொண்டது அந்தாதியாக அமைக்கப் பெறும். தேவர், அரசர் இவரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெறுவது. இன்று தேவர் எங்கு கறந்து உறைகின்றனரோ? அரசர் இனமும் அழிந்து போயிற்று. இனமானத் தலைவர்கள் மீது பாடலாம் எனில் கலம்பகம் பாடுவது எளிய யாப்பு முறையும் அன்று.
எடுத்துக்காட்டுக்கு, பன்னிரு சைவத் திருமுறைகளையும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, பதினோராம் திருமுறையில் உள்ளடக்கிய நாற்பது நூற்களில் ஒரேயொரு கலம்பகம்தான். அது அவரே திருஞான சம்பந்தர் மீது பாடியது. திருஞான சம்பந்தரின் இன்னொரு பெயர் ஆளுடைய பிள்ளை. பதினோராம் திருமுறையின் இறுதில் நூலாக இருப்பது ‘ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்’.
இந்தக் கலம்பகத்தில் கையாளப்பட்ட பாக்கள், பாவினங்களின் பட்டியலே மலைக்க வைக்கின்றன. அவைபற்றி அதிகம் தகவல் அறிய விரும்புபவர் ‘சிதம்பரப் பாட்டியல்’ கண்ணுறலாம்.
இனி பாக்கள், பாவினங்களின் பட்டியலைப் பார்க்கலாம். பயன்படுத்தப்பட்டன-
1. ஒரு போகு கொச்சகக் கலிப்பா
2. நான்கடித் தாழிசை
3. அராகம்
4. இரண்டடித் தாழிசை
5. இருசீர் ஓரடி அம்போதரங்கம்
6. முச்சீர் ஓரடி அம்போதரங்கம்
7. நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்
8. வெண்பா
9. கட்டளைக் கலித்துறை
10. அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
11. எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
12. எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
13. பதின்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
14. பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
15. பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
16. கலிவிருத்தம்
17. சம்பிரதம்
18. மறம்
19. ஈற்றடி மிக்கு வந்த நான்கடிக் கலித்தாழிசை
20. நேரசை ஆசிரியப்பா
21. வஞ்சித் துறை
22. ஆசிரியத் துறை
23. கட்டளைக் கலிப்பா
24. கைக்கிளை மருட்பா
25. இன்னிசை வெண்பா
தமிழின் அனைத்துப் பாக்கள், பாவினங்கள் பற்றிய இலக்கணம், எடுத்துக்காட்டுச் செய்யுள் என எளிய தமிழில் புலவர் பெருமக்களில் எவரேனும் நூலொன்று எழுதலாம். காலமும் கடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் தகுதியும் திறமையும் உடைய தமிழ்ப் புலவர்களின் சராசரி அகவை இன்று எண்பது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
வெறும் 57 பாடல்களே கொண்ட ‘ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பக’த்தில் இத்தனை பாக்கள், பாவினங்கள் ஆளப்பட்டிருப்பது அதிசயமாகப் படுகிறது. மேலும், தமிழில் புதுக்கவிதை, நவீன கவிதை செழித்து, படர்ந்து ஓங்கி வளருவது அதிசயமாகப் படவில்லை.
செஞ்சடை வெண்மதி அணிந்த சிவன் எந்தை திருவருளால்…”
என ஞான சம்பந்தரைப் பாடுகிறார் நம்பியாண்டார் நம்பி. பாடலை நான் பிரித்து எழுதியுள்ளேன். இந்தப் பாடலின் வகை, “ஒரு பொகு கொச்சகக் கலிப்பா”. அதன் இலக்கணம் என்ன என்று என்னைக் கேட்காதீர்கள். “இழவுக்கு வந்தவள் தலை அறுக்க மாட்டாள்”.
இந்தக் கலம்பகத்தின் செய்யுட்களின் கிடப்பைக் கண்ணுறுகிறபோது, இதை சைவர்களேனும் கற்றல் நன்றெனப்படுகிறது. எந்த சைவப் புலவரும் இந்தக் கலம்பகத்தி விரிவுரையாற்றியோ மேற்கோள் காட்டியோ பேசியதுண்டா என்பதை எவரும் உறுதி செய்யலாம். இது போன்ற நூல்கள் தொழில் செய்ய உதவாது என்று எனக்குத் தோன்றுகிறது.
நந்திக் கலம்பகம்
தெள்ளாற்றுப் போர் வென்ற நந்திவர்ம பல்லவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இது. பாடியவர் பெயர் அறியப்படவில்லை. 88 பாடல்கள் கொண்டது. அரசர்க்குத் தொண்ணூறு எனும் இலக்கணத்தைக் கொண்டு பார்த்தால், 2 பாடல்கள் இறந்து விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
அற்புதமான கடவுள் வணக்கச் செய்யுள்.
“மண்டலம் ஆம், அம்பமும் ஆம்…”
கொன்றை அழித்தவனே என்றும் வெள்ளெருக்கம் சடை முடியன் என்றும், கங்கை ஆற்றைப் புனைந்தவன் என்றும், வெண்ணீற்றைப் பூசியவன் என்றும், வேன்மதிக் கொழுந்தைச் சூடியவன் என்றும் பாடப்பட்ட சிவனை, புலவர் நினைத்துப் பாடுகிறார்.
“திசை நடுங்கத் தோன்றிற்று, நீ உண்ட திறம் நஞ்சம்
உயிர் நடுங்கத் தோன்றிற்று, நீ உதைத்த பெருங் கூற்றம்”
என்பது புலவரின் வியங்கோள்.
பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் இயற்கை அழகும் தலைவனின் வீரம், அவன் மார்மேல் கொங்கை சேர்க்கத் தலைவி ஏங்கிக் கொள்ளும் காமம் எனப் பாடிச் செல்பவை. தமிழும் கவிதையும் காமமும் துளிர்த்து நிற்பவை. இங்கு தலைவி கூற்றாக ஒரு பாடல்:
மலர்க்கும் மாதவி தன்மேல் வண்டு ஆர்க்கும் காலம்
வரிக்குயில்கள் மாவில் இளந்தளிர் கோதும் காலம்
சிலர்க்கு எல்லாம் செழுந்தென்றல் அமுது அளிக்கும் காலம்
தீவினையேற்கு அத்தென்றல் தீவீசும் காலம்
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பல்மாடக் கச்சிப்
பனிக் கண்ணன் பகுமுத்தம் பார்த்தாரும் காலம்
அவர்க்கு எல்லாம் ஐங்கணை வேள் அலர்தூற்றும் காலம்
அகன்று போனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம்”
நந்தியைப் பற்றிய பல பாடல்கள் தனிப் பாடல்களாகக் கலம்பகப் படிகளில் ஒரு சேரக் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் 27 பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன. மிகவும் சுவாரசியமான பாடல்கள் பலவுண்டு. அவற்றுள்,
செந்தழலின் சாற்றைப் பிழிந்து, செழுஞ்சீரச்
சந்தனம் என்று யாரோ தடவினார் – பைந்தமிழை
ஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மேல்!”
என்றொரு பாடல்.
“பைந்தமிழை ஆய்கின்ற நந்திவர்ம பல்லவனின் மார்பினைத் தழுவ மாட்டாமல் வேகின்ற பாவியாகிய என்மீது செந்தழலின் சாற்றைப் பிழிந்து, செழுமையான குளிர்ச்சியான சந்தானம் என்று யாரோ தடவிப் போனார்,” என்பது எனது உரை.
பொருள் எழுத வேண்டாத பல செழுமையுள்ள பாடல்கள்.
மங்கையர் கண் புனல் பொழிய, மழை பொழியும் காலம்;
மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம்;
கொங்கைகளும் கொன்றைகளும் போன் சொரியும் காலம்;
கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம்;
செங்கை முகில் அனைய கோட்டைச் செம்பொன் பெய்மேகத்
தியாகபரன் நந்தி அருள் சேராதார் போல
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழைக் காலம்
அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடுங் காலம்”
அற்புதமான உவமைகள் பல உண்டு.
“பெண் இலா ஊரில் பிறந்தாரைப் போல வரும் வெண்ணிலாவே, இந்த வேகம் உனக்கு ஆகாது” என்று ஒரு பாடல் குறிக்கும். “இரும்பு உழுத புண்ணுக்கு இடு மருந்தோ” என இன்னொரு பாடல் வினவும். “கார் ஊர் குழலிக்கு காது அளவு ஊரும் கடைக்கண்களே” என மற்றொரு பாடல் வியக்கும்.
அனுபவித்து வாசிக்க அகத்துறைப் பாடல்களும் உண்டு.
“கைக்குடம் இரண்டும், கனக கும்பக் குடமும்
இக்குடமும் கொண்டாள் முறியாதே? – மிக்க புகழ்
வெய்க் காற்றினால் விளங்கும் வீருநந்தி மா கிரியில்
ஈக்காற்றுக்கு ஆற்றா இடை?”
என்றொரு பாடல்.
“மிக்க புகழ் மூங்கில் காற்றினால் விளங்கும் வீரநந்தியின் பெருமலையின் சிறுகாற்றுக்கும் ஆற்றாத பெண்ணின் இடை, கைக்குடம் இரண்டும் போற்கும்பத் தலைக்குடமும் கொண்டு நடந்தால் முறியாதா?” என்பது பொருள்.
கோன் நந்தியின் வெற்றிச் சிறப்பைப் பாடும் ஒரு பாடலுடன் இந்தக் கலம்பகப் பகுதியை நிறைவு செய்யலாம்:
திருவின் செம்மையும், நிலமகள் உரிமையும்,
பொது இன்றி ஆண்ட பொலம் பூண் பல்லவ!
தோள் துணை ஆக, மா வெள்ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணாய்! நந்தி! நின்
திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின்,
நெடுநர் சேரும் பதி சிவக்கும்மே;
நிறம் கிளர் புருவம் துடிக்கின், நின் கழல்
இறைஞ்சா மன்னர்க்கு இடம் துடிக்கும்மே;
மை இல் வாள் உரை கழிக்கும் ஆகின்
அடங்கார் பெண்டிர்
பூண் முலை முத்தப் பூண் கழிக்கும்மே;
கருவாய் போல் வளை அதிர, நின்னொடு
மருவா மன்னர் மனம் துடிக்கும்மே;
மாமத யானை பண்ணின்
உதிரம் மன்னும், நின்எதிர் மலைத்தோர்க்கே.
1957-ல் மர்ரே எஸ். ராஜம் ஐயர் வெளியிட்டதன் மறுபதிப்பாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் 1985-ல் வெளியிட்ட நந்திக் கலம்பகத்தின் மறுபதிப்புப் படிகள் இன்றும் கிடைக்கின்றன.
நந்திக்கலம்பகத்தை இணையத்தில் இங்கே படிக்கலாம்.
(தொடரும்)