ச.அனுக்ரஹா
இரவின் ஒளி
சாலைகளாலான மாலைப் பொழுதொன்றில்
மேல் செல்லும் சாலைக்கும்
கீழ் செல்லும் சாலைக்கும் நடுவே
நின்றுகொண்டிருந்தது,
தலைகுனிந்த விளக்கொன்று.
இரவைக் காணும் துணிவற்ற
மங்கிய பார்வையுடன்,
தூசுகளாய்
கரைந்துகொண்டிருந்தது.
பாய்ச்சலுடன் சீறிக்கொண்டே
இருந்தன,
சாலைகளின் ஒளிக்கண்கள்,
இரையைத் தொடரும்
கூர்மையுடன்.
இருளும் ஒளியும்
குழம்பிய இரவின்
விளிம்பில்,
தற்செயலாக, தினமும்
தென்படுகிறது,
இளம்பழுப்பு நிலா.
***
மொட்டைமாடி வானம்
முதல் சில தடவைகள்,
கடைசி இரு படிகள் வரை
சென்று திரும்பியிருக்கிறேன்.
மொட்டைமாடியில், இரவு
கரும்பூனைகளென
பதுங்கியிருக்கும்.
படிகளற்ற அந்தரத்தில்,
மூச்சிரைத்து ஒருகணம்,
மீண்டு விடுவேன்.
ஒரு முறை பூனைகளைப்
பார்க்கவென்று
சென்றபோது,
அங்கு வெறும் வானமே
நிரம்பியிருந்தது,
நிற்க தரைகளற்ற வானம்.
மேடை வெளிச்சத்தின் விளிம்பில்
மட்டுமே
தெரியும் பார்வையாளர்களைப்
போன்று,
நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்.
அதற்கு பின்,
எல்லா வானத்திலும்
என் மொட்டைமாடி
தெரிய தொடங்கியது.
-o00o-
எம். ராஜா
நள்ளிரவில்
குறட்டையொலி
வந்துபோகும் வாகனச் சத்தம்
ஏதோவொரு பூச்சியின் ரீங்காரம்
கைபேசி இசை தவிர
வேறெந்த சப்தமும் கேட்கவில்லை
இந்த நள்ளிரவில்.
தோட்டத்து மரங்களின் இலைகள்
அந்தரத்தில் ஆடுகின்றன நளினமாய்.
காற்றுக்குத் தானே அசைகின்றன இலைகள்
இசைகேட்டு ஆடுகின்ற காட்சிக்கிறக்கம்
இனிவரும் தூக்கத்திற்குள்
கள்ளூற்றிவிடும் கொஞ்சம்.
***
மருத்துவ மகிமை
கல்லூரிக் காலத்தில்
இளந்தொந்தியென இருந்தது
இப்போழ்து
விநாயகர் வயிறென
வீங்கிச் சரிந்து கிடக்கிறது.
முதுகின் கீழ்த்தண்டு
மிகுவாய் வளைந்து
கழுத்துத் தண்டில்
அழுத்தம் கூடுவதால்
உறும் உபத்திரவம் களைய
கால்மூட்டு மடங்காமல்
குப்புறக் கவிழ்த்த U போல் குனிந்து
கைகளால் கால்விரல்களைக் குலுக்கும்
கடும் பிரயத்தனங்கள் நிகழ்ந்துவருகின்றன.
மது அருந்தியதில்லை
மாதுவாய் பிறக்கவில்லை
இருப்பினும்
ஸ்கேன் செய்து சோதித்துவிடலாம்.
யாருக்குத் தெரியும்
வயிற்றுக்குள்
நீர் சுரக்கிறதோ
இன்னொரு உயிர் இருக்கிறதோ?
மருத்துவ மகிமையில்
எதுவும் சாத்தியமே.
***
சாபச் சுமை
சுவர்வழி இறங்கிய ஈரம்
படர்ந்திருக்கும்.
பாதுகை உதிர்த்த மண்துகள்கள்
ஈரக் கோடிழுத்தூரும் அட்டைப்பூச்சி
மேலும் கீழுமாய்
பயணதிசை காட்டும் பாதச்சுவடுகள்.
எதையும்
பாரமெனவே கொள்ளுமோ மாடிப்படிகள்?
வருடிச் செல்லும் காற்றில்
விமோசனம் இல்லை
ஏதேனும் ஒரு அற்புதப்பாதத்தை
எதிர்பார்த்தபடி படுத்துக்கிடக்கிறது
கல்லாய்க் கடவது எனச் சபிக்கப்பட்ட
முனிவன் காலத்து நீரோடை ஒன்று.
எம்.ராஜா
-o00o-
லாவண்யா
சர்வாதிகாரி
எவர்க்கும் தென்படாத
புதிருலக மாயாவி ஒருவன்
ஈரேழுலகங்களை பல்கோடி உயிரினங்களை
படைத்தானென்று
பலரும் சொல்லக்கேட்டு
கள்குடித்த பித்தன் எவனோ
கதைவிட்டகதையெனப்
பலமுறை நினைத்திருக்கிறேன்
நிலமொருபங்கும் உப்பு
நீரிருபங்குமாய் புவியை
படைத்தவனை
கருணைக்கடலென்பது கருத்துப்பிழையென
கருத்துப்போர் புரிந்திருக்கிறேன்.
ஆனால் பூமிப்பந்து
கிலுகிலுப்பையாய் குலுங்கும் தருணங்களில்
வலையில் சிக்கிய பறவைபோலுணர்கிறேன்.
உல்லாசப்பயணம் சென்ற உறவும் நட்பும்
கடலின் வயிற்றில் காணாமல்போன கொடுமையை
நிகழ்த்தியதாரெனப் புரியாமல் தவிக்கிறேன்.
ஆண்மனமும் பெண்ணுடலுமாகிவரும்
அர்த்தநாரீச்வரிகள்
மகப்பேறுகளில்
மதலைகளோடரவுகளையுதிர்ப்பதை
மருந்துகளாலும் மாத்திரைகளாலும்
தவிர்க்கமுடியாமல் தோற்கிறேன்
இருத்தலின் துயரங்களை
மலர்களின் இனிமையில் மறக்கச்செல்ல
பூங்காவில் நின்றிருந்த டைனோசார்கள்
நரவேட்டையாடத்துரத்த
எப்படியென்றெனக்கே தெரியாமல்
செத்துப்பிழைக்கிறேன். ஒரு
சர்வாதிகாரியின் துதிபாடியாகிறேன்.
***
போதை
தணல் சொற்களில்
தீய்ந்த மனங்களின்
பிணவாடை குமட்டுமென்
வனவீட்டில் நறுமணமொன்றை
காற்றழைத்துவந்ததுன்
கூந்தலிலிருந்து.
கதிரொளியும்
அகலொளியும்
கண்டிராத சுவர்களும் கூரையும்
பேய் சாத்தான் போரில்
இல்லாமல் போயின
கருப்புவனத்தில் ஒற்றைப்பொறியாய்
தெரிந்த்துன்முகம்
அவமானத்தழும்புகளை
அடையாளங்களாய் சுமக்குமென்
முகம் பார்த்து நீ
முறுவலித்த ஒரு தருணம்
இதவென்பது என்னவெனத் தெரிந்தது
மரத்துப்போகவும்
மறந்துபோகவும்
போதைகளுடனிருக்கிறேன்.
எல்லா போதைகளும்
தணிந்துவிடுகின்றன.
தணியாமலிருக்கும்
ஒரு போதை மட்டும்.
உன் முத்தம்
லாவண்யா
-o00o-
பா.சரவணன்
இரவின் பொய்யாமழை
நேற்றைய இரவின் இறுதிப்பக்கத்தில்
தவளைகள் கத்தாத பெருமழை பெய்தது.
யாருமே நனையாத,
எவருக்குமே விருப்பமற்ற,
கழுவியதைக் கழுவி
மேலெழும்
மழை என்பது –
மழை மட்டுமே
என்பதை ஒவ்வொரு துளியாய்ச்
சொல்லிச்சென்றது
எவருக்கும் பெய்யாத
மாநகரின் மழை.
***
நிகழ்வினைத் தேர்ந்தெடுத்தல்
ஒவ்வொரு முறையும்
கடந்த காலம் ஒன்றின்
எழுதப்படாத பக்கமாய்
இருக்கிறது நிகழ்வு.
அது நிகழ்வேன்பதற்காக
மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது.
ஒவ்வொருமுறையும்
தவிர்த்த நிகழ்வுகள்
பெரும் பட்டியலாகின்றன.
இறுதியில்,
எம்முன் விழும் எந்த இரண்டையும் விட
மூன்றாவது ஒன்றே
சரியானதாய் இருக்கிறது.
***
சொல் வழியும் உதிரம்
சொல்லப்படா சொற்களால் நிறையும்
சொல்லின் உலகம்
நிறைந்தும் நிறையாமலும்
எஞ்சி இருக்கிறது.
நாவோன்றின் ஒற்றைப்பிறழ்வில்
இருக்கிறது
சொல்லொன்றின் வாழ்வும் இறப்பும்.
இறந்துவிட்ட சொற்களின்
நாற்றத்தால் நிறைகிறது
நினைவெனும் வெளி.
பிறக்காமலேயே இறந்துவிட்ட
சொல்லின் வாசம்
உடல் அறியா நடுவழி துப்பும்
உதிரத்தின் வாசத்தை
ஞாபகமூட்டும்.
மிச்சம் இருக்கும் சொற்கள்
அதனதன் வழியில்
இருந்தும் கலந்தும்
பிரிந்தும் வளர்ந்தும்
கரைந்தும் போகக்கூடும்
ஒரு உயிரின் விடைபெறுதல் போல.