ஆற்றேன் அடியேன்

dilapitation

சிதம்பரத்தில் இருந்து கிழக்காகவோ தெற்காகவோ இரண்டு மணித்தியாலம் காரை ஓட்டிக்கொண்டு போனால் ஒரு சின்னக் கிராமம் வரும். அப்போது பார்த்து எனக்கு பசி பிடித்துக்கொண்டது. ஆட்களிடம் விசாரித்தால் எல்லோரும் ஒரு சிறிய கடையை காட்டினார்கள். வேறு தெரிவுகள் அங்கு கிடையாது என்பதால் அங்கே போனோம். சிரித்தபடி ஒரேயொரு மனிதர் வரவேற்றார். மதியம் மூன்று மணியாகிவிட்டபடியால் பசிக்கு இட்லி பரிமாறி எங்கள் பசியை ஆற்றினார். அவர்தான் பரிசாரகர். அவர்தான் மேசை துடைப்பவர். அவர்தான் சமைப்பவர். அவர்தான் காசாளர். அவர்தான் முதலாளி. அந்த நல்ல மனிதரை இன்று காலை நினைத்துக்கொண்டேன்.

நானே சிந்திக்கிறேன். நானே தட்டச்சு செய்கிறேன். நானே திருத்தி, நானே வலையேற்றி நானே கேள்விகளுக்கு பதில் எழுதுகிறேன். அந்தக் கிராமத்து மனிதரைப்போல கடுமையாக உழைக்கும் எனக்கு சிலர் வேலை கொடுக்கிறார்கள். எனக்கு எந்த உதவியும் இல்லை. கம்புயூட்டரில் பழுது என்றால் நான்தான் பார்க்கவேண்டும். அச்சடிக்கும் மெசின் பாதியில் நின்றுவிட்டால் அதை சரிக்கட்டவேண்டும். பேப்பர் முடிந்தால், மை முடிந்தால் நான்தான் நிரப்பவேண்டும். இப்படி அல்லும் பகலும் உழைக்கும் ஒருவருக்கு பதிவுத் தபால் வந்தால் எப்படியிருக்கும்? புதுவருடம் பிறந்தபிறகு மூன்றாவது தடவையாக தலையில் கை வைத்துக்கொண்டேன்.

என்னுடைய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் இன்னும் புதிதாக பழக்கமானவர்களிடமும் நான் தவறாமல் சொல்லும் விசயம் ஒன்றுண்டு. கடிதமோ பார்சலோ பதிவுத் தபாலில் அனுப்பவேண்டாம். அவர்களுக்கு புரியாது. எனக்கு ஏதோ சகாயம் செய்வதுபோல பதிவுத் தபாலில் அனுப்பிவிடுகிறார்கள். கனடாவில் தபால்காரர்கள் வீடு தேடி வந்து பதிவுத் தபாலையோ பார்சலையோ வினியோகம் செய்வார்கள். நீங்கள் வீட்டிலே இல்லாவிட்டால் இன்னொருமுறை உங்களைத் தேடி வரமாட்டார்கள். ஓர் அறிவிப்பை உங்கள் வீட்டுக் கதவில் ஒட்டிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் அந்த அறிவித்தலுடன் குறிப்பிட்ட அஞ்சல் நிலையத்துக்கு செல்லவேண்டும். அது அநேகமாக மதிய உணவு நேரமாக இருப்பதால் அஞ்சல் நிலையம் பூட்டியிருக்கும். அது திறக்கும்வரை காத்திருக்கவேண்டும். பத்து நிமிடம் சென்றபிறகு அதிகாரி வருவார். வரிசை நகரத் தொடங்கும். உங்கள் முறை வந்ததும் நீங்கள் நீங்கள்தான் என்பதை நிரூபிக்கச் சொல்வார். அதிகாரி பார்சலை எடுத்து தந்துவிட்டு ’நீங்கள் 17 டொலர் கட்டவேண்டும்’ என்று சொல்வார். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் பற்றி ஒரு விரிவான கட்டுரையை அவசரமாக எழுதச் சொன்னதுபோல நான் திடுக்கிட்டுப்போய் நிற்பேன். ’எதற்காக 17 டொலர்?’ என்று மறுபடியும் கேட்பேன். அவர் ’கம்புயூட்டர் அப்படித்தான் சொல்கிறது’ என்பார். கம்புயூட்டர் சொன்னால் யார் மறு பேச்சு பேசமுடியும். கட்டணத்தை கட்டிவிட்டு பார்சலை மீட்டு வரவேண்டியதுதான்.

புத்தகம் எனக்கு முன்பின் பரிச்சயமில்லாத ஒருவர் அனுப்பியது. அதைப்பற்றி ஒருவரும் எனக்கு அறிவிக்கவுமில்லை. நான் காசுகட்டி பார்சலை பெறவேண்டியிருந்தது. அதுதவிர அரை நாள் நேரத்தையும் செலவாக்கிவிட்டது. புத்தகத்தின் தலைப்பு இன்னும் அதிர்ச்சியடைய வைத்தது. ’சித்த வைத்திய மகாத்மியம்’. எளிமையான தமிழ். மாதிரிக்கு இரண்டு வரிகள். ‘இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்தன. இவர்களால் செய்யப்பட்ட நூல்களென்று சொல்லப்பட்டு இக்காலத்துக்கு வழங்குவன யாரோ சாமானியர் பாடிவைத்த புரட்டு நூல்களேயாம்.’ 17 டொலர் கட்டி பார்சலை மீட்டபடியால் இந்த வருடம் முடிவதற்கிடையில் எப்படியும் நூலை வாசித்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

தபால் சேவை ஆரம்பித்த காலத்திலும் இப்படித்தான் பிரச்சினைகள் இருந்தன. உலகத்தில் முதல் முதலாக தபால் சேவை தொடங்கியது இங்கிலாந்தில்தான். அப்பொழுது எல்லாம் பெறுபவர்தான் கடிதத்துக்கோ பார்சலுக்கோ கட்டணம் செலுத்தவேண்டும். இங்கிலாந்தில் இருந்த எழுத்தாளர்களுக்கு இப்பொழுது நடப்பதுபோல அப்பொழுதும் வாசகர்கள் கடிதம் எழுதுவார்கள். அதை எழுத்தாளர் பணம் கட்டி வாசிப்பார். சிலர் தங்கள் கட்டுரைகளையும் நாவல்களையும் சிறுகதைகளையும் கவிதைகளையும் அனுப்பி கருத்து கேட்பார்கள். அதற்கும் எழுத்தாளர்தான் பணம் கட்டுவார். சிலர் தொக்கையான நாவல் கையெழுத்துப் பிரதியை அனுப்பிவைப்பார்கள். இவர் பணம் கட்டுவார். சிலர் அவரை திட்டி எழுதுவார்கள். அந்தக் கடிதத்தையும் அவர்தான் பணம் கட்டி வாசிக்கவேண்டும். நான் பார்சலுக்கு பணம் கட்டியபோது அந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.

davidsedaris

[டேவிட் செடாரிஸ்]

சில வருடங்களுக்கு முன்னர் டேவிட் செடாரிஸ் என்ற எழுத்தாளர் பாரிஸில் இருந்து ரொறொன்ரோவுக்கு வந்திருந்தார். இவர் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அப்பொழுதுதான் அவருடைய புத்தகம் Squirrel Seeks Chipmunk வெளியாகி அமோகமாக விற்றுக்கொண்டிருந்தது. அவர் புத்தக சுற்றுலாவில் இருந்ததால் ஒர் இரவு தங்கும் இடத்தில் அடுத்த நாள் தங்கமாட்டார். மாநிலம் மாநிலமாக, நாடு நாடாக அவர் பயணம் செய்தார். அவர் தங்கியிருந்த ஹொட்டலில் போய் வழக்கம்போல அவரைச் சந்தித்தேன். என்னுடைய மொழிபெயர்ப்பு புத்தகம் (Inauspicious Times) ஒன்றை அவருக்கு பரிசளித்தேன். நான் வழக்கமாகச் செய்யாத ஒன்று அவர் கேட்டபடியால் கையளித்தேன். அவர் பணம் தர முயன்றபோது ’வேண்டாம், அன்பளிப்பு’ என்று சொல்லிவிட்டேன்.

அடுத்து அவர் கேட்ட கேள்விதான் என்னைத் திடுக்கிட வைத்தது. ‘நீங்கள் எப்பொழுது புத்தகச் சுற்றுலா புறப்படுகிறீர்கள்?’ என்றார். என்னுடன் எனது மகனும் வந்திருந்தார். நான் திடுக்கிட்டு மகனைப் பார்த்தேன். மகன் என்னைப் பார்த்தார். பிறகு இருவரும் ஒரே நேரத்தில் சிரிக்கத் தொடங்கினோம். டேவிட் ‘என்ன என்ன’ என்று பதறினார். ‘ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?’ என்றார். ’அப்படி ஒன்றும் இல்லை. தமிழ் இலக்கியச் சூழலில் புத்தகச் சுற்றுலா என்பது நடப்பதற்கு இன்னும் 100 வருடங்கள் காத்திருக்கவேண்டும்’ என்று சொன்னேன். அவரால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. நானும் அந்தப் பேச்சை அத்துடன் நிறுத்திவிட்டேன்.

தமிழ்ச்சூழல் உற்சாகம் தரக்கூடியதாக இல்லை. தமிழ் எத்தனை தூரம் வளர்ந்திருக்கிறது என்பதை அளக்க ஒரு புதிய அளவுகோல் கிடைத்திருக்கிறது. 2012ம் ஆண்டு தொடக்கத்தில் விக்கிப்பீடியாவில் பல மொழிகளில் மொத்தமாக எத்தனை கட்டுரைகள் ஏறியிருக்கின்றன என்று தேடிப் பார்த்தேன். ஆங்கிலத்தில் 3,900,000 கட்டுரைகள், யப்பான் மொழி 791,000 கட்டுரைகள், சீனமொழி 385,000, அரேபிய மொழி 156,000, ஹிந்தி 93,000 என்று விடை வந்தது. தமிழில் 43,000 கட்டுரைகள் மட்டுமே. இதில் பரிதாபம் என்னவென்றால் ஒரு கோடிக்கும் குறைவானவர்கள் பேசும் ஹீப்ரு மொழியில் 129,000 கட்டுரைகள் ஏறிவிட்டன. ஏழு கோடி மக்கள் பேசும் தமிழில் ஆக 43,000 கட்டுரைகள்தான். உலகத்தில் ஆக மூன்று லட்சம் பேர் மட்டும் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியில்கூட 36,000 கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன.

தமிழின் தொன்மையை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கும். அதே சமயம் ஒருவித சோகமும் வந்து கப்பிக்கொள்ளும். இதை தவிர்க்க முடியாமல் இருக்கிறது. யேசுநாதர் பிறந்த சமயம் உலகின் சனத்தொகை 200 மில்லியன்தான். அதாவது இன்றைய பிரேசில் நாட்டு சனத்தொகை அன்றைய முழு உலகத்தின் சனத்தொகையாக இருந்தது. அப்படியானால் அன்று இந்தியாவின் சனத்தொகை என்னவாக இருந்திருக்கும்? 30 மில்லியன் என்று வைக்கலாம். தமிழ்நாட்டின் சனத்தொகை ஒரு மில்லியன் என்று எடுத்துக் கொண்டாலும் அப்பொழுதே சங்க இலக்கியம் படைக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழர் நாகரிகம் எத்தனை உயர்ந்ததாக இருக்கவேண்டும். தமிழர்களிடம் நாவல், சிறுகதை வடிவம் இருந்ததில்லை. ஆங்கிலேயர்களிடம் இருந்து அவற்றை கடன் வாங்கியதுதான். ஆனால் தொகை இலக்கியத்தை (anthology) கண்டுபிடித்தது தமிழர்கள்தான். புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை என தொகை நூல்கள் தமிழிலேதான் முதலில் வந்தன. ஆயிரம் வருடங்கள் கழித்துத்தான் ஆங்கிலத்தில் Book of Exeter என்ற முதல் தொகை நூல் வந்தது. அதையிட்டு நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

நான் பிறந்தபோது உலகத்தின் சனத்தொகை 2.3 பில்லியன். இன்று அது 7.0 பில்லியன், மூன்று மடங்காக வளர்ந்திருக்கிறது. ஆனால் பூமியின் அளவு அதேதான். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழின் வளர்ச்சி எப்படி இருக்கிறது. மூன்று மடங்கு வளர்ந்திருக்கிறது என்று சொல்லமுடியுமா? 2009ம் ஆண்டு யூன் மாதம் 16ம் தேதியை எல்லோரும் கொண்டாடினார்கள். என்ன விசயம் என்று கேட்டபோது ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை அன்று ஒரு மில்லியனை தொட்டுவிட்டது என்றார்கள். யாரோ கணக்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்று யாராவது கணக்கு வைத்திருக்கிறார்களா?

nenjilசுந்தர ராமசாமியின் நினைவுகளை அவருடைய மனைவி கமலா ராமசாமி ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ என்ற தலைப்பில் நூலாக எழுதிப் பதிவு செய்திருக்கிறார். அந்த நூலின் இறுதிப் பகுதியில் அவர் எழுதிய வார்த்தைகள் என் மனதின் ஆழத்தில் போய் பதிந்துவிட்டன. ’முழுக்க அவருடைய இருதயம் பற்றிய அக்கறையில்தான் இருந்தோம். சுவாசப்பையில் ஒரு பிரச்சினை ஏற்படப்போகிறது என்னும் நினைப்பே இருக்கவில்லை. பல்மனரி ஃபைப்ரோஸிஸ் (Pulmonary Fibrosis) என்றார்கள். என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே. இனி எனக்கொன்றுமில்லை.’ இப்படி அவர் எழுதி நூலை முடிவுக்கு கொண்டு வருகிறார். ’என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே’ என்ற வரிகளை என்னால் மறக்க முடியவில்லை. தமிழையும், தமிழ் இலக்கியத்தையும், அதன் எதிர்காலத்தையும் நினைக்கும்போது இந்த வார்த்தை தொடர்தான் மறுபடியும் மறுபடியும் என் நினைவுக்கு வந்து இடர் செய்கிறது. உச்சக்கட்ட விரக்தியை வேறு எந்த வார்த்தைகளால் வர்ணிப்பது?

சமீபத்தில் மின்னஞ்சலில் ஓர் ஓவியர் தொடர்புகொண்டார். பத்திரிகைகளில் வரும் என்னுடைய சிறுகதைகளுக்கு தான் படம் வரைந்திருப்பதாகக் கூறினார். என்னுடைய முதல் கேள்வி ’உங்களுக்கு சன்மானம் உண்டா? என்பதுதான். அவர் உண்டே என்று மட்டும் பதிலளித்தார். எவ்வளவு சன்மானம் என்று நாகரிகம் கருதி நான் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. ஆனால் பத்திரிகை ஆசிரியர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. ’எங்கள் பத்திரிகையில் எழுதுவதால் உங்களுக்கு பேரும் புகழும் கிடைக்கிறது. நாங்கள் எழுத்தாளருக்கு சன்மானம் எதுவும் வழங்குவதில்லை.’ அது நல்ல சமாதானமாகத்தான் பட்டது. ஆனால் ஓவியக்காரருக்கு மட்டும் பேரும் புகழும் கிடைப்பதோடு சன்மானமும் கிடைத்தது. இது எப்படி நியாயம் என்பது எனக்கு தெரியவில்லை.

’எதற்காக சிறுகதைகளுக்கு ஓவியம் வரைகிறார்கள்?’ என்று அதே பத்திரிகாசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னார், ’ஒரு நல்ல சித்திரம் வாசிப்பை தூண்டுகிறது’ என்று. ’சித்திரமே இல்லாவிட்டால் வாசகர் என்ன செய்வார்?’ என்று கேட்டேன். அவர் ’வாசகர் வாசிக்காமல் போகக்கூடும்’ என்றார். ’வாசகர்கள் படங்களைப் பார்த்து ஈர்க்கப்படுகிறார்கள் என்றால் படங்களை மாத்திரம் பிரசுரிக்கலாமே?’ எனக் கேட்டேன். அதற்கு அவரிடம் பதில் இல்லை. அவர் தன் பத்திரிகையில் படம் வரையும் ஓவியர் ஒருவருக்கு கொடுப்பதாகச் சொன்ன பணம் நான் என் வாழ்நாளில் சிறுகதை ஒன்றுக்கு பெற்ற ஆகக்கூடிய சன்மானத்திலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகமானது. ஆனால் கட்டுரையையோ கதையையோ எழுதியவருக்கு ஒரு சதம்கூட கொடுக்காமல் இருப்பது அவருக்கு குற்றமாகத் தெரியவில்லை. ஒரு படத்தை காட்டி வாசகரை இழுத்து என் கட்டுரையையோ கதையையோ படிக்க வைப்பது எனக்கு பெரிய இழுக்காகப்பட்டது. என்னை என்றுமில்லாத விதமாக ஒருவிதமான துக்கம் ஆட்கொண்டது. (இதே கட்டுரையோ சிறுகதையோ புத்தகமாக வெளிவரும்போது அங்கே சித்திரங்கள் ஒன்றுமே இரா என்பது நினைவுக்கு வந்தது. புத்தகத்தை வாங்கும் வாசகர்கள் அதில் உள்ள எழுத்தை மட்டுமே படிப்பதற்கு வாங்குகிறார்கள். அது பெரிய ஆறுதல்.) சித்திரக்காரருக்கு சன்மானம் வழங்கும் பத்திரிகை அந்தக் கதையையோ கட்டுரையையோ கவிதையையோ எழுதிய ஆசிரியருக்கும் சன்மானம் வழங்கவேண்டும். இல்லையேல் இருவருக்கும் ஒன்றுமே வழங்காமல் இருக்கலாம். ஆனால் சித்திரக்காரருக்கு கொடுத்து ஆசிரியரை நிராகரிப்பது உச்சகட்டமான அவமானம் என்றுதான் எனக்குப் பட்டது.

முதலாம் உலக யுத்தம் நடந்தபோது ஒரு போர்வீரனிலும் பார்க்க குதிரை பெறுமானம் உள்ளதாகக் கருதப்பட்டது. ஒரு போர்வீரனும் குதிரையும் ஆபத்தில் இருந்தால் முதலில் குதிரை காப்பாற்றப்பட்டது; பின்னர்தான் போர்வீரன். குதிரை பீரங்கியை இழுக்கும், ராணுவத்துக்கு தேவையான உணவுப் பொதிகளை காவும். போர்வீரனைக் ஏற்றிக்கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்யும். இதுவெல்லாம் போக உணவு தீர்ந்த சமயத்தில் குதிரையைக் கொன்று சமைத்து சாப்பிடக்கூடியதாக இருக்கும். அது போலத்தான். சித்திரக்காரர் ஓர் எழுத்தாளரிலும் பார்க்க மதிப்பாக பார்க்கப்படுகிறார்.

தமிழ்ப் புலவன் எந்தக் காலத்திலும் மதிக்கப்பட்டது கிடையாது. அதியமான் நெடுமான் அஞ்சியின் வாசலில் நெடுங்காலம் நின்று வெறுங்கையோடு திரும்பிப்போன ஒளவையாரின் நினைவு வந்தது. 2000 வருடமாக வாசலில் நின்று பழகிவிட்டது. தமிழ் படைப்பது என்றால் அப்படித்தான். ஆற்றேன் அடியேன்.

(இந்தக் கட்டுரையின் முகப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் சித்திரம், தாராசுரம் கோயிலில் இருக்கும் அரிய வண்ணப்படைப்பு. நூற்றாண்டு காலப் பழமை வாய்ந்த இப்பொக்கிஷத்தின் மீது இருக்கும் கிறுக்கல்கள், கட்டுரையில் அ.முத்துலிங்கம் அவர்கள் சொல்லியிருக்கும் தமிழின் அத்தனை வீழ்ச்சியையும் உருவகப்படுத்துவதாக உள்ளது. – ஆசிரியர் குழு.)