ரமாவும், உமாவும் – திலீப்குமாரின் புதிய புத்தகத்தை முன்வைத்து…

கடந்த இரண்டு வாரங்களில் நான் படித்த நான்கு புத்தகங்களுமே பெண்களையும், குடும்ப, சமுதாய வெளியில் அவர்கள் படும் துயரங்களையும் மையமாக வைத்து எழுதப்பட்டவை. நானாகத் தேடிப் படிக்காவிட்டாலும், தற்செயலாக அப்படி அமைந்துவிட்ட புத்தகங்கள் இவை. ‘The Country where no one ever dies’ என்ற அல்பேனிய நாவல், அல்பேனியாவில் வளரும் ஒரு சிறு பெண் பதின்பருவத்துக்குள் நுழையும் வயதில் சந்திக்கும் அடக்குமுறைகளையும்,அவள் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக அவளை அடைந்துவிட நினைக்கும் பின்னணியையும் விவரிக்கிறது. எழுதியவர் Ornela Vorpsi. அச்சிறுமி வளரும்போதே, ‘நீ எவனுடனாவது படுத்து வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்து நிற்கப்போகும் வேசி!’ என்ற பேச்சுகளைத் தன் குடும்பத்தினரிடமிருந்தே கேட்கிறாள். தினந்தோறும். இந்நாவலின் இன்னொரு இழை அல்பேனியாவின் கம்யூனிஸ அரசின் அடக்குமுறையும் வீழ்ச்சியும்.

அதற்கடுத்து படித்த புத்தகம், ஸோஃபி ஆக்ஸானென் (Sofi Oksanen) எழுதிய ’பர்ஜ்’ (Purge) என்ற ஃபின்னிஷ் நாவல். ஃபின்லாந்தின் சமீபத்திய பிரபலப் புத்தகம் ஏதாவது ஒன்றைப் படித்துவிடவேண்டும் என்ற காரணத்தால் வாங்கிப் படித்த புத்தகம். துப்பறியும் சாகசக்கதை என்றெல்லாம் இங்கே விளம்பரப் படுத்தப்பட்டாலும், இது இரு பெண்களின் வலி மிகுந்த கிழக்கு ஐரோப்பிய வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம். அந்தத் துயரை உள்வாங்கிக் கொள்ள முடியாமல், கொஞ்ச கொஞ்சமாகத்தான் இப்புத்தகத்தைப் படித்து முடிக்க முடிந்தது. பாலியல் வன்முறைக்கு தினந்தோறும் உள்ளாகும் ஏராளமான கிழக்கு ஐரோப்பிய ஏழை நாட்டுப் பெண்களின் கதை இது. கூடவே எஸ்தோனிய விடுதலைப் போராட்டத்தையும் சொல்கிறது.

மூன்றாவதும் ஃபின்னிஷ் நாவல்தான். யூஹானி ப்ராண்டர் (Juhani Brander) எழுதிய ’எக்ஸ்டிங்ஷன்’ (Extinction) என்ற புத்தகத்தின் சில பகுதிகள். அவை அலெக்ஸாண்டர் ஹெமான் தொகுத்திருந்த ’2010 இன் சிறந்த ஐரோப்பியப் புனைகதைகள்’ (‘Best European Fiction 2010’) தொகுதியில் இடம்பெற்றிருந்தன. ஆனால் அந்த ஒரு சில பகுதிகளில் படிக்கக் கிடைத்த மாய்ரெ (Maire) என்ற கதாபாத்திரத்தின் வலியும், வாழ்க்கையும், அதையும், அதைத் தொடர்ந்த பிற பகுதிகளும், யூஹானி ப்ராண்டர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்திவிட்டது. கிண்டலான நடையில் தாவித்தாவி எழுதிச் செல்லும் அவர் எழுத்துநடை சுவாரசியமான ஒன்று. முழுப்புத்தகம் வேண்டுமென்று ஓவ்லு (Oulu) நூலகத்தில் கேட்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை.

dilip-02நான்காவது, சென்ற வாரம் புத்தகக் கண்காட்சியையொட்டி வெளியான தமிழ் எழுத்தாளர் திலீப் குமாரின் ‘ரமாவும், உமாவும்’ என்ற புத்தகம். திலீப் குமார் மிகக்குறைவாகவே எழுதக்கூடியவர். (‘சக எழுத்தாளர்கள் ஜெயமோஹனும், புதுச்சேரி கண்ணனும் சொல்வது போல வருடத்துக்கு அரை கதை எழுதுகிறவன்.’ – இதே தொகுதியில் இடம்பெற்றிருக்கும் ‘ஒரு எலிய வாழ்க்கை’ சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி.) கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக சிறுபத்திரிகை வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட, மரியாதைக்குரிய எழுத்தாளராக இருந்தாலும், அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுதி இதுதான். இதிலும் மொத்தம் நான்கு படைப்புகள்தான். அதில் ஒன்று ‘ரமாவும், உமாவும்’ என்ற குறுநாவல்.

இக்கதையைப் படிக்க ஆரம்பித்தபோது எனக்குப் பெரிய அதிர்ச்சிதான் ஏற்பட்டது. ரமா, உமா என்ற இரண்டு குஜராத்தி நடுவயது குடும்பப்பெண்கள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவதில்தான் கதை ஆரம்பிக்கிறது. அதையெல்லாம் பேசக்கூடாது என்று நினைக்கும் ஆசாரசீலனல்ல நான். ஆனால், இக்கதை சொல்லப்பட்டிருப்பது வெறும் உரையாடல்களால் மட்டுமே. (திலீப்குமாரின் ‘நிகழ மறுத்த அற்புதம்’ கதையின் பாணி.) ஆகவே, அதில் சூழலை விவரிக்கும் விவரணைகளோ, உணர்ச்சிகளை கதைசொல்லியின் பார்வையில் சொல்லும் பகுதிகளோ கிடையாது. அந்த இரு பெண்கள் உடலுறவு குறித்து உரையாடிக்கொள்வதும், கலவியின்போது பிதற்றிக்கொள்வதும், உடல் பாகங்களை வர்ணிப்பதுமாகவே கழிந்தது. இதை எழுத திலீப்குமார் எதற்கு? அதற்குத்தான் எத்தனையோ ‘பின் நவீன’ எழுத்தாளர்கள் இருக்கிறார்களே என நினைத்துக்கொண்டேன்.

ஆனால் முதல் பகுதி முடிந்ததும், மெல்லிய புன்னகையோடு திலீப்குமார், கதைசொல்லி என்ற பெயரில் பேச ஆரம்பிக்கிறார்.

ரமாவும், உமாவும் கோபமாகக் கதைசொல்லியிடம் முறையிடுகிறார்கள். ‘எங்களை எதற்கு இப்படி ஓரினச்சேர்க்கையாளர்களாகப் படைத்திருக்கிறீர்கள்? எங்களுக்கு இது பிடிக்கவேயில்லை.’ என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்கு கதைசொல்லி சொல்கிறார்: ‘நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். எனக்குக்கூட வருத்தமாக இருக்கிறது. ஆனால் எனக்கு வேறு வழியில்லை. தவிர அது இலக்கிய விவகாரம். சொன்னாலும் உங்களுக்குப் புரியாது.’ என்று சொன்னபின் அந்த ‘இலக்கிய விவகாரத்தை’ விளக்குகிறார்.

‘இப்போது போய் யாராவது யதார்த்தக் கதையை எழுதுவார்களா? எழுதினால் காறித்துப்பிவிடுவார்கள். உங்களுக்குத் தெரியாது. தொண்ணூறுகளுக்குப் பிறகு இலக்கிய நிலவரமே மாறிவிட்டது. தலித் எழுத்தாளர்கள் கதைகள் எழுத ஆரம்பித்த பின் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்க, நடுத்தர சாதி எழுத்தாளர்களின் சாயம் முற்றிலுமாக வெளுக்கத் தொடங்கிவிட்டது. இது ஒரு நெருக்கடியான நேரம். 60/70-களில் கூட இந்திய இலக்கியத்திற்கு இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது இந்தியப் பாத்திரங்கள் ஏதோ இரண்டாம் உலகப்போரில் வதைபட்டுத் திரும்பியவர்கள் போல் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு இருளிலும், மெளனத்திலும் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

நல்லவேளை, நாங்கள் ஐரோப்பாவிலிருந்து கரீபியனுக்கு ஏற்கெனவே நகரத் தொடங்கி விட்டிருந்தோம். அதோடு வராது வந்த மாமணி போல், மார்க்குவேஸ்ஸும் அப்போது வந்து சேர்ந்தார். அதன்பின்தான் நாங்கள் கொஞ்சம் இளைப்பாற முடிந்தது. மாயம், மந்திரம் என்று ஜரூராக களத்தில் இறங்கிவிட்டோம். அப்போது எங்கள் பாத்திரங்கள் ராமேஸ்வரம் கடற்கரையில் லத்தீன் அமெரிக்கர்களைப் போல் சிந்தித்துக்கொண்டு அலைந்ததையும் கூட மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். யார் கண் பட்டதோ? இப்போது அதுவும் அலுத்துப் போய்விட்டது. நாங்கள் என்னதான் செய்வது? இந்த உலகமயமாக்கல் வேறு பாடாய்ப் படுத்துகிறது. எங்கள் அரசியல் பார்வைகளை எல்லாம் இது முற்றிலும் காலி செய்துவிட்டது. அதனால்தான் இப்படி எல்லாம் எழுதித் தடுமாற வேண்டியிருக்கிறது.’

சமகால இலக்கியப்போக்கைக் குறித்து முற்றிலும் பகடியாக, தான் எழுதும் கதையையும் கூட அதில் சேர்த்து, விஷமப்புன்னகையோடு பேசுகிறார் திலீப்குமார். இக்கதை தரங்கம்பாடியில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. “ரமாவும், உமாவும் பெங்களூருவில் உள்ள சங்கம் ஹவுஸ் அறக்கட்டளையின் சார்பில் ஆகஸ்ட் 2011-இல் தரங்கம்பாடியில் நடத்தப்பட்ட எழுத்தாளர் முகாமில் பங்கேற்றபோது எழுதப்பட்டது,” என்று புத்தக முன்னுரையில் சொல்கிறார் திலீப்குமார். இக்குறுநாவலைப் பற்றிய முக்கியமான குறிப்பாக அதை நான் படிக்கிறேன். இக்குறுநாவலை – ஒரு இலக்கியப் படைப்பு உருவாகும் விதம், அதை ஆரம்பிக்கும் விதம், மையப்பகுதி, உச்சம், உரையாடல்கள் இவற்றைக் குறித்து கற்றுத்தரும் ஒரு முயற்சியாகவே திலீப்குமார் உருவாக்கியிருப்பார் என்று கருதுகிறேன்.

கதாபாத்திரங்களும், கதை சொல்லியும் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகள் பூராவுமே படைப்பு உருவாக்கத்தின் சூட்சுமங்களையும், அதை உருவாக்கிய விதங்களையும் குறித்தே உள்ளன. அதற்கு வசதியான விதத்தில் திலீப்குமார் எடுத்துக்கொண்டிருக்கும் கருதான் கதாபாத்திரங்களே எழுத்தாளனிடம் குறை சொல்லிப் புலம்புவதும், எழுத்தாளன் காரணங்களை விளக்கி சம்பாஷணைகளைப் பற்றிப் பேசுவதும். சரி, இதை வெறுமனே உத்தியைச் சொல்லிக் கொடுக்கும் படைப்பு என்று வரையறுத்துவிட்டால், இங்கே பெண்களைப் பற்றிப் பேசுவதும், அவர்களின் திருப்தியின்மை, அதன் விளைவாக நடுவயதுக்கு மேல் வேறொரு பெண்ணோடு சேர்ந்து உச்சத்தைக் காணுதல் – இதெல்லாம் வெறும் கவனக்கலைப்புகளா? இதற்கும் பெண்களின் துயரைத் தீவிரமாகப் பேசும் அல்பேனிய நாவலுக்கும், ஃபின்னிஷ் நாவலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

அந்தத் தொடர்பை நாம் இக்குறுநாவலின் பகுதி இரண்டில் பெற்றுக்கொள்ள முடிகிறது.

உமா கொஞ்சம் பயந்த சுபாவி. கணவனுக்கும், குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும் பயந்து அடங்கிப் போகிறவள். ஆனால் ரமா கொஞ்சம் தைரியசாலி. அதே சமயம் வாழ்க்கையில் அதீதமாக எதையுமே பார்த்திராதவள். இருவருக்குமே ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயமும், ஆர்வமும் உண்டு. உமாவின் சிறுவயது ஏழ்மையில் உழன்றிருப்பது. இருமுறை தற்கொலைக்குக் கூட முயற்சித்திருக்கிறாள் . முதல் தற்கொலை முயற்சியைப் பற்றி எந்த அலங்காரப்பூச்சோ, விவரணையோ இல்லாமல் வெறுமனே அப்பெண் பேசுவதாக விவரித்திருப்பது கூட மனம் பதைபதைக்க வைக்கிறது.

“அப்போது, நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் என் தம்பி மற்றப் பையன்களோடு தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். ஒரு பையனுக்கும், இவனுக்கும் சண்டை ஏற்பட்டு இவன் அவனை நன்றாக அடித்துவிட்டான். கீழே விழுந்ததில் அந்தப் பையனுக்கு அடிபட்டு முழங்காலிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. என் தம்பி பயந்துபோய் வீட்டிற்குள் வந்து ஒளிந்துகொண்டான். சுமார் பதினைந்து நிமிடம் கழித்து, அடிபட்ட பையனின் குடும்பத்தினர் ஒரு பெரிய படையாகத் திரண்டு எங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டார்கள். தெருவில் நின்று கொண்டு உரத்த குரலில் திட்டத் தொடங்கிவிட்டார்கள். எங்கள் விதவைத் தாயாரால் அவர்களை சமாதானப்படுத்தவே முடியவில்லை. உலகில் உள்ள எல்லா ஆபாசமான வசைகளையும் பொழிந்துகொண்டிருந்தார்கள். காதால் கேட்க முடியாத, மிக மிக அசிங்கமான வார்த்தைகள் அவை. என் அம்மாவையும், என்னையும் குறித்த வசைகள்தான் அதிகம். என் வாழ்க்கையில் அது போன்ற ஒரு கொடூரமான ஆபாசப்பேச்சை நான் கேட்டதே இல்லை. இது நடந்துகொண்டிருந்தபோது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாருமே இதைத் தடுக்க முன் வரவில்லை.

எங்கள் அம்மா மிகவும் சிறுமைப்பட்டு நிலைகுலைந்து போனாள். என் தம்பியை கண்மண் தெரியாமல் பயங்கரமாக அடித்துவிட்டாள். அவமானம் தாங்காமல், இரவு வரை அழுதுகொண்டே இருந்தாள். பின் திடீரென்று, ‘நாம் எல்லோருமே தற்கொலை செய்துகொள்வோம்’ என்றாள். என் வீட்டிலிருந்த ஷன் வயலட் என்ற பெரிய மருந்து பாட்டிலை எடுத்து வந்து சிறிய கிண்ணங்களில் ஊற்றி எல்லோருக்கும் – அண்ணன், நான், தம்பி, என் சிறிய தம்பி – கொடுத்தாள். அவள் பாட்டிலிலிருந்து நேரடியாகக் குடித்தாள். நாங்கள் எல்லோரும் அழுதுகொண்டே அந்த திரவத்தைக் குடித்தோம். பின் எங்கள் அம்மா எங்களைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.

நல்லவேளை நாங்கள் குடித்த திரவம் நீர்த்துப் போயிருந்தது. நாங்கள் சாகவில்லை. மாறாக, ஒரு மணி நேரம் கழித்து எங்கள் எல்லோருக்கும் வாந்தியும், பேதியும் பிடுங்கிக்கொண்டது. இரண்டு மூன்று நாட்கள் வரை எங்கள் எல்லோருடைய உதடுகளில், பற்களில், நாக்குகளில் வயலட் நிறம் படிந்திருந்தது. நாங்கள் சிரித்தால் ஏதோ டிராகுலாக்கள் சிரிப்பது போலிருந்தது.”

வயலட் நிற வாயோடு அந்தக் குடும்பம் இரண்டு மூன்று நாட்கள் எப்படிக் கழித்திருக்கும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருந்தேன். சிறுவர்கள் விளையாடச் செல்லும்போது, நண்பர்கள் கேலி செய்திருப்பார்கள். அந்த அம்மாவோ, வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள், காய்கறி விற்பவர்கள் – இப்படி யாரிடமுமே முகம் கொடுத்து பேசமுடியாமல் போயிருக்கும். ஒரு அவமானத்தைக் களைந்துகொள்ள முயற்சித்தால், அந்த அவமானமே ஒரு உருக்கொண்டல்லவா உடல் மீது ஒட்டிக்கொண்டது? அத்தனையும் மீறி நாங்கள் சிரித்தால் டிராகுலாக்கள் சிரிப்பது போலிருந்தது என்று சொல்கிறாள் உமா. அக்காவும், தம்பிகளும் ஒருவர் வாயை மற்றவர்கள் கேலி கூட செய்துகொண்டிருக்கலாம்.

purgePurge நாவலில் அந்த எஸ்தோனியக் குடும்பத்தில் மூன்றே மூன்று உறுப்பினர்கள்தான். பாட்டி, அம்மா, மகள். அந்த வீட்டில் ஒரே ஒரு அறைதான். என்ன குளிர்காலமாக இருந்தாலும் பாட்டிக்கு ஜன்னல் கண்ணாடி திரையிட்டு மூடப்படக்கூடாது. அந்த ஜன்னல் வழியே தெரியும் சிறு வானத்துண்டைப் பார்த்தபடியே இருக்கிறாள் பாட்டி. அது அவளுடைய சிறுவயது, கிராமத்தில் வசதியாகக் கழித்த நாட்களின் நினைவு, மிச்சம். மூன்று பேரின் உடைமைகளும் எப்போதும் பெட்டியில் சரியாகக் கட்டப்பட்டு, ஏதோ வெளியூர் செல்வதற்குத் தயாராக இருப்பது போல் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணமாய் அந்த அம்மா சொல்வது: “எந்த நேரமும் இந்த வீடு தீப்பிடிக்க நேரிடலாம். தப்பித்து ஓடுவதற்கு வசதியாகத்தான் இவற்றைக் கட்டி வைத்திருக்கிறேன்.”

Purge நாவல் நான்-லீனியர் பாணியில் காலத்தில் முன்னும் பின்னுமாய் ஓடிச்செல்லும் கதை. திலீப்குமாருடையது காமத்தில் ஆரம்பித்து, சாதாரண குஜராத்திப் பெண்களின் குடும்பத் துயரை, தனிமையை, அக வெறுமையைப் பேசும் குறுநாவல். இதை நேரடியாகச் சொல்லாமல் இந்த வடிவில் சொல்வதற்கான காரணம் குறுநாவலில் கதை சொல்லி சொல்வதைப் போல், இப்படி எழுதுவதுதான் இப்போதைய ட்ரெண்ட்.

இது சந்தேகமில்லாமல் பின்நவீனத்துவ படைப்புதான். ஆனால் இந்தியச் சூழ்நிலையில் எது பின் நவீனத்துவமாக இருக்க முடியும் என்று யோசிக்க வேண்டும். மேற்கில், மரபைத் துண்டித்துக் கொண்டு நவீனத்துவம் ஒரு கட்டமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டுடன் ஒவ்வொரு துறையிலும் உருவாகியுள்ளதாகத் தோற்றம் தருகிறது. அங்கே பின்நவீனத்துவம் என்பது எப்படி நிகழ்கிறதோ அப்படியே இங்கும் இருக்க வேண்டியதில்லை.

இங்கே மரபு இன்னும் தொடர்கிறது. நவீனத்துவம் இப்போதுதான் கட்டமைக்கப்பட்டு வருகிறது – இதுதான் பெண்ணியம், இதுதான் இந்துத்துவம், இதுதான் ஜனநாயகம் என்பன போன்ற விஷயங்கள் முரண்பாடுகளற்ற கருத்தாக்கங்களாக இப்போதுதான் உருவாக்கம் பெறுகின்றன. இதுவரை சாதிகளானாலும் சரி, வேறு எதுவானாலும் சரி, இங்கு ஒரு நெகிழ்வு இருக்கிறது – எல்லாம் கலந்து கட்டி இருக்கிறது. அதனால் எந்த விஷயத்திலும் அது குறித்து இது இப்படிதான் என்று வரையறை செய்யும்போது அதில் உள்முரண்பாடுகள் இயல்பான ஒன்றாக இருக்கின்றன, தவிர்க்க முடிவதில்லை. இது பெண்ணியம், இது முற்போக்கு, இது இந்துத்வா, இது இலக்கியம் என்ற கட்டமைப்பு இங்கே இப்போது இன்னும் முழுமை பெறவில்லை: உள்முரண்பாடுகள் பூசி மெழுகப்படுவதே இங்குள்ள நவீனத்தின் இயல்பாக இருக்கிறது. அவை இன்னும் மறையவில்லை, மறைத்து வைக்கப்படுகின்றன.

இங்கு பின்நவீனத்துவம் மேற்கத்திய மாதிரியை வடிவிலும் உள்ளடக்கத்திலும் போலி செய்வதாக இருக்க வேண்டுமா? நாமாக சொந்தமாக பின் நவீனத்துவத்தை முயற்சித்தால் அது எவ்வாறு இருக்க வேண்டும்?

1. படைப்புகள் உள்முரண்கள் கொண்டவையாக இருக்க வேண்டும். உள்முரண்களை மறைக்காத படைப்பே சிறந்த ஒரு பின்நவீனத்துவ படைப்பாக இருக்க முடியும்.

2. விமரிசனம் படைப்பின்மீது தீர்ப்பு சொல்வதாக இருக்கக் கூடாது. அதில் உள்ள உள்முரண்களை வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் இன்றைய சமூகம் இப்படித்தான் இருக்கிறது. இதைதான் படைப்புகள் பிரதிபலிக்க வேண்டும், விமரிசனம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

திலீப்குமாரின் இந்தக் குறுநாவல் உள்முரண்கள் நிறைந்து இன்றைய அறிவுச் சூழலை, பொது வெளியைப் பிரதிபலிக்கிறது.  இவை பிறிதொரு கட்டத்தில் பேசப்பட வேண்டிய முக்கியத்துவம் கொண்டவை.

இந்தக் குறுநாவலின் இன்னொரு முக்கியமான விஷயம் – இதில் உரையாடல்களையும், மொழியமைப்புகளையும் திலீப்குமார் கையாண்டிருக்கும் விதம். கிட்டத்தட்ட முறைப்படுத்தப்பட்ட (கொச்சையற்ற) தூயதமிழிலேயே ரமாவும், உமாவும் உரையாடிக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் இவ்விரு பெண்களும் குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தமிழ்நாட்டில் வசிக்கும் நகர்ப்புற மத்தியவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் உரையாடிக்கொள்வது ஆங்கிலத்தில் இருக்கிறது. அந்த ஆங்கிலத்தை மொழிபெயர்க்கையில் தூயதமிழில் கொண்டு வருகிறார் திலீப்குமார்.

இங்கே எனக்கு, சென்ற வருடம் வெங்கட் சாமிநாதன் எஸ்.சங்கரநாராயணின் மொழிபெயர்ப்புகளைக் குறித்து எழுதியது நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ இருவர் பேசிக்கொள்ளும் உரையாடலில் சங்கரநாராயணன் சுதந்திரம் எடுத்து மாற்றியிருந்த உரையாடல்களை, (“இதென்ன மதுரைக்கு வந்த சோதனை?” போன்ற வரிகள்) வெ.சா கேள்விக்குள்ளாகியிருந்தார். அதே கட்டுரையில் அவர் பாலகுமாரன் எழுதிய ஒரு சிறுகதையில் ஆங்கில உரையாடலைத் தமிழில் தரும்போதுகூட அது ஆங்கில உரையாடல்தான் என நமக்குத் தெரியும் வகையில் அதை எழுதியிருந்ததையும் குறிப்பிட்டிருந்தார். வலசை சிறுகதையில் Bullshit என்ற வார்த்தையை, ‘காளைச்சாணம்’ என்று குறிப்பிட்டிருப்பார் ஜெயமோகன். படித்தவுடனே, அதன் ஆங்கில மூலம் சட்டென்று நினைவுக்கு வந்து, மெல்லிய புன்னகையையும் ஏற்படுத்திவிடுகிறது. ரமாவும், உமாவும் குறுநாவலில் திலீப்குமார் இந்தியப்பெண்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதைக்கூட ஆங்கில தொனியிலேயே கொடுத்திருக்கிறார். (“நான் உன்னைத் தழுவிக்கொள்ளட்டும்” – Let me hug you.)

குறுநாவலில் வரும் கதைசொல்லியாக திலீப்குமாரே அப்படிச் செய்திருப்பதைக் குறித்தொரு பதில் சொல்கிறார்:

“இதில் பல உயர் விஷயங்களும், பல ஏடாகூட விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை ஆங்கிலத்தில் இலகுவாகச் சொல்லிவிடலாமே என்றுதான் பார்த்தேன். உங்களுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பதென்று தெரியவில்லை. உதாரணமாக, ‘shit’ என்ற வார்த்தையையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வார்த்தையை மேன்மக்கள் பலர் கூடியிருக்கும் எந்த சபையிலும் நீங்கள் ஆயிரம் முறைக்கு மேல் பிரச்சினையில்லாமல் அழகாகச் சொல்லிவிடமுடியும். ஆனால் இதையே நீங்கள் தமிழில் ஒருமுறை சொன்னாலே, உங்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள். சமீபத்தில் தமிழ்த்திரைப்படத்தில், ஒரு காட்சியில் கதாநாயகன், கதாநாயகியைப் பார்த்து, ‘உன்னை சதா புணர்ந்துகொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது’ என்று சொல்கிறான். இதை அவன் தமிழில் சொன்னான் என்றா நினைக்கிறீர்கள்? ‘I want to make love to you all the time’ என்று ஸ்டைலாக ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுப் போகிறான். இந்த வசனம், தமிழ்க் கலாசாரக் காவலர்கள் – யார் கண்ணிலும் படாமல் போனதற்குக் காரணம் அது ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதுதான். தமிழில் சொல்லியிருந்தால் திரையங்கத்தைக் கொளுத்திவிட்டு, இயக்குநரையும் உதைத்திருப்பார்கள். […] இந்திய மொழிகளில், “கதவைப் பூட்டிவிட்டு கடைவீதிக்குப் போகலாம், வா” போன்ற வாக்கியங்களைத்தான் இயல்பாகச் சொல்லமுடியும். மற்றபடி, இந்த ‘உணர்ச்சி’, ‘புணர்ச்சி’ போன்ற விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வதுதான் பதவிசாக இருக்கும். அதனால் நீங்கள் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். நான் அதைத் தமிழ்ப்படுத்திக்கொள்கிறேன்.” என்று சொல்கிறார் கதைசொல்லி.

இதே இதழில் நான் மொழிபெயர்த்திருக்கும் ஒரு அமெரிக்கச் சிறுகதையும் வெளியாகியிருக்கிறது. அதில் “I took a long look at her ass” என்பதை “அவள் பிருஷ்டத்தை உற்றுப் பார்த்தேன்” என்று மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால் அதிலும் கூட, ஆங்கிலத்தில் உபயோகித்திருக்கும் வார்த்தையின் பயன்பாடு தமிழில் ரொம்பவும் பதவிசாகத்தான் கிடைக்கிறது. அதைப்போல “Kill those motherfuckers for me!” என்ற வாக்கியம். சிறுகதை முழுக்க, தீவிரமான, மேலான தமிழில் மொழிபெயர்ப்பு செய்துவிட்டு, அந்த ‘Motherfuckers’ என்ற வார்த்தையை மட்டும் எப்படித் தமிழில் அப்படியே தரமுடியும்? கஷ்டம்தான். கடவுள் தன் அடுத்த பிறவியில் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பிறக்கவேண்டும்.

ரமாவும், உமாவும் கதை சில இடங்களில் கவித்துவமான வசனங்களோடும், சில இடங்களில் அன்றாட, அசுவாரசியமான வசனங்களோடும் நகர்கிறது. கதையின் ஆரம்பத்தில் தீவிரமான பாலியல் சார்ந்த உரையாடல்களை வைத்துவிட்டு, மையப்பகுதியில் அன்றாட வாழ்வின் பிரச்சினைகளைக் குறித்துப் பேசும் உத்தியையும் இன்னொரு இடத்தில் கதைசொல்லியே விளக்குகிறார்:

“நமது உரையாடலில் பொதுவாகக் காணப்படும் ஊளைச்சதையை நீக்கி சொற்களும், வாக்கியங்களும் அவற்றின் ஆதாரப் பொருளின் கட்டமைப்புக்கு ஏற்ற அழகோடு துலங்க வேண்டும் என்று கருதினேன். இந்தக் கதையைப் படிப்பது ஒரு நிர்வாண ஓவியத்தின் முன் நிற்பது போன்ற அதிர்ச்சியைத் தரவேண்டும். அதிர்ச்சி தரும் முதல் கணங்களைக் கடந்து மெல்ல மெல்ல பாலுணர்வுக்கு அப்பாலான அகசலனத்தையும் நிறைவையும், இந்த மொழிநடையின் மூலம் சாதிக்க விரும்பினேன்.”

மீண்டும் இக்கதையின் உத்தியையும், மொழியமைப்பையும் நான் முன்பு குறிப்பிட்ட புத்தகங்களோடு ஒப்பிடுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

நான் படித்த மூன்று ஆங்கிலப் புத்தகங்களுமே ஐரோப்பிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டவைதான். ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வருவது போல், மொழிநடையை முற்றிலும் மாற்றாமல், ஐரோப்பிய மொழிகளுக்கிடையேயான நெருக்கம் காரணமாக ஓரளவுக்கு, மூலவடிவில் கையாளப்பட்டிருக்கும் நடையை அப்படியே கொண்டுவந்துவிடமுடிகிறது. [முக்கியமாக, புத்தகங்களின் முன்னுரையிலும், விமர்சனங்களிலும் மொழிநடை மாற்றம் குறித்து எழுதப்பட்டிருக்கும் விவரங்களைப் பார்த்துவிட்டேன். இவை பெரும்பாலும் நெருக்கமாக இருப்பதாகவே சொல்லப்படுகின்றன.]

Purge என்ற ஃபின்னிஷ் நாவல், மொழியமைப்பில் மிகவும் மரபார்ந்த, தீவிரமான வடிவைக் கையாள்கிறது. நவீன பிரிட்டிஷ் எழுத்துமுறை போலில்லாமல், ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய வடிவங்களைப் பிரதிபலிக்கும் சற்றே பழமையான, கவித்துவமான நடை. [The rainy yard was siveling gray; the limbs of the birch trees trembled wet, leaves flattened by the rain, blades of grass swaying, with drops of water dripping from their tips.] அல்பேனிய நாவலின் வடிவம், சற்றே சகஜமான நவீன பிரிட்டிஷ் வடிவம். அதே சமயம் முற்றாக தெருவழக்கையும் பேசுவதில்லை. [Whenever a pretty girl passes by, muffled sighs rise from the terrace where the men are sitting around and enjoying the coffee, sighs that are steamier than their coffee.]

ஆனால் மூன்றாவது புத்தகமான Extinction முற்றாக வெட்டி வெட்டிச் செல்லும் மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் ஒன்று. தற்போதைய அதிநவீன உரையாடல்களாலும், வாக்கிய அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும் வடிவம்: “Month after month he inserts his dirty fingers into the timid thicket between her legs, and soon an infection, having marinated in the dark, sprouts symptoms.”

இந்த மூன்று வெவ்வேறு மொழியமைப்புகளையும் தமிழில் கொண்டுவருவது, அவற்றை அப்படியே ஆங்கிலம் தொனிக்க மொழிபெயர்த்தால் கூட சாத்தியமா எனத் தெரியவில்லை. ரமாவும், உமாவும் ஆங்கிலம் பேசும் இந்தியப்பெண்கள் என்பதால் திலீப்குமார் தப்பித்தார். அதே சமயம், திலீப்குமார் தமிழிலிருந்து நூறு சிறந்த சிறுகதைகளைத் தற்சமயம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது பல்வேறு வட்டார வழக்குகளையும், மொழிநடைகளையும் ஆங்கிலத்துக்கு எப்படி கொண்டு சென்றார் என்று தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருக்கிறது.

ரமாவும், உமாவும் நாவலில் கதைசொல்லி, “இது சுமாரானவைகளின் காலகட்டம். இதில் சுமாரான கதைதான் எழுதமுடியும்” என்று சொல்வதை ஒத்துக்கொள்ளவேண்டும் என முதல் பார்வைக்குத் தோன்றினாலும், (குறிப்பாக திலீப்குமாரின் கடவு சிறுகதைத் தொகுதியை ஒப்பிடும்போது), இதில் கதைசொல்லி கதை உருவாகும், எழுதப்படும் விதம் குறித்து நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பவை ஏராளம். அவற்றைத் தவறவிட்டால் கதைசொல்லி எழுந்துபோவதைப் போல், திலீப்குமாரும் புன்னகையோடு எழுந்து சென்றுவிடுவார், அவ்வளவே.

இப்புத்தகக் கண்காட்சியையொட்டி வெளியாகியிருக்கும் ‘ரமாவும், உமாவும்’ தொகுப்பு சந்தியா பதிப்பம் வெளியீடாக வந்திருக்கிறது. சந்தியா பதிப்பக அரங்கில் (அரங்க எண்: 94, 95) இப்புத்தகம் கிடைக்கும்.