மீரா பென்னும் பீத்தோவனும்

திருநெல்வேலி குறுக்குத்துறை கோவிலுக்குப் பின்னால் வளைந்து திரும்பும் தாமிரபரணியின் ஒயிலும், கருங்குளம் வானமாமலைப் பண்டாரத்தின் பூம்பல்லக்கு சப்பர அலங்காரமும், இக்மார் பெர்க்மானின் Wild Strawberry படத்தில் வருகிற அந்தக் கனவுக்காட்சியும், சார்லி சாப்ளின், என்.எஸ்.கே.யின் நகைச்சுவையுணர்வும் நம்மை வியக்க வைத்துக் கிறங்கச் செய்கின்றன.

இந்த வியப்பையும் கிறக்கதையும் சில புத்தகங்களும் தரத்தான் செய்கின்றன. மனதுக்குப் பிடித்தமான பாட்டைத் திரும்பத் திரும்பப் பாடத் தோன்றுகிற மாதிரி சில புஸ்தகங்களையும் திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றும். டால்ஸ்டாயின் நாவல்கள், தி.ஜானகிராமனின் படைப்புகளில் உள்ள மென்மையும் நளினமும் பரவசப்படுத்துகின்றன. பல வருஷங்களுக்கு முன்னால் படித்தா இன்கிரிட் பெர்க்மான் என்ற நடிகையின் வாழ்க்கை வரலாற்றைச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் திரும்பத் திரும்ப மனம் அசை போடுகிறது. வெல்வெட் துணியின் மீது நடப்பது போல் சில பகுதிகள். சில பகுதிகள் “இப்படியுமா அந்தப் பெண்ணிடம் நடந்து கொள்வார்கள்?” என்று ஆற்றாமைப்பட வைக்கின்றன. பெர்னாட் ஷா, ஹிட்ச்காக் போன்ற மேதைகள் அவரிடம் நடந்து கொண்டவிதம் அவர்களுடைய இன்னொரு முகத்தைக் காட்டுகிறது.

Meera Behnஇந்த மாதிரி ஆச்ச்சரியப்படவைத்த புஸ்தகமொன்றைச் சமீபத்தில் படித்தேன். காந்திஜியின் சிஷ்யையான மீரா பென் மேற்கத்திய சாஸ்திரீய சங்கீத சாம்ராட் பீதோவனைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். “Beethoven’s Mystical Vision” என்பது தலைப்பு. காந்திஜிக்கு நகைச்சுவையுணர்ச்சி உண்டா என்பது பலருடைய சந்தேகம். காந்திஜி என்றால் அஹிம்சை, சத்தியாக்கிரகம், அறவுணர்ச்சி இந்த மாதிரிதான் ஞாபகத்துக்கு வரும். “சிரிக்கவே மாட்டாரோ மனுஷர்?” என்று தோன்றும்.

காந்திஜியைப் பற்றியே இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என்றால், அவரது சிஷ்யையான மீரா பென்னைப் பற்றி வேறு எப்படி நினைக்கத் தோன்றும்? ஆனால் கடற்படை அதிகாரியின் மகளான மீரா பென்னுக்கு சாஸ்திரீய சங்கீதத்தில் அபாரமான ஆசை இருந்திருக்கிறது என்றால் நம்பத்தான் முடியுமா? இளமையில் பியானோ கற்றிருக்கிறார். பீதோவன் படைப்புகளின் பைத்தியமாகவே இருந்திருக்கிறார். பீதோவன் வாழ்ந்த வியென்னா, பான் நகரங்களுக்குப் போய் அவர் நடாடிய தெருக்களில், அவர் ஏறிய, இறங்கிய குன்றுகளில், காடுகளில் எல்லாம் மீரா பென்னும் திரிந்திருக்கிறார். அவரைப் பற்றி என்ன புத்தக கிடைத்தாலும் படித்திருக்கிறார்.

ரோமன் ரோலண்ட் பீதோவனைப் பற்றிப் புத்தகம் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டு அதைப் படிப்பதற்காகவே ஒரு வருஷம் பிரான்ஸில் தங்கி பிரெஞ்சு மொழியைக் கற்றிருக்கிறார். அவருடைய பீதோவன் பிரேமைதான் காந்திஜியைச் சந்திப்பதற்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ரோமன் ரோலண்டைச் சந்தித்தபோது, அவர் மீரா பென்னிடம் தான் காந்திஜியைப் பற்றி எழுதியுள்ள புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, “நீ காந்திஜியைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்கிறார்.

“இல்லை”

“அவர் இன்னொரு இயேசு கிறிஸ்து” என்று சொல்லியிருக்கிறார் ரோமன் ரோலண்ட். அதன் பிறகுதான் மீரா காந்திஜியைப் பார்க்க இந்தியா வருகிறார்.

mirabehn1931c

[காந்தியும், மீரா பென்னும்]

அடுத்த ஆச்சரியம் 1931-ல் மீராவும் காந்திஜியும் ரோமன் ரோலண்டைச் சந்தித்தபோது, பீதோவன் இசையைக் கேட்க வேண்டும் என்று காந்திஜி கூர, ரோமன் ரோலண்ட் பீத்தோவனின் ஐந்தாவது சிம்போனியில் உள்ள மிருதுவும் மெதுவுமான பகுதியைப் பியானோவில் இசைத்துக் காட்டியிருக்கிறார். ஒரு அரசியல் போராட்டவாதி, அரையாடைப் பக்கிரி, பீதோவனில் தோய்ந்து போயிருக்கிறார்.

பீதோவனின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளையெல்லாம் கோட்டுச் சித்திரம் தீட்டுவதுபோல், தாவித் தாவிச் செல்லும் சம்பவங்களுடன் மீரா பென் எழுதியிருக்கிறார்.

பீதொவனின் இசையில் Warrior Movementகள் என்ற உரத்த இடிமுழக்கம் போன்ற பகுதிகளும் உண்டு. நீரோடையின் சலசலப்புச் சிணுங்கல் போன்ற மெதுவான மென்மையான பகுதிகளும் உண்டு. இந்த அம்சம் மீரா பென் நூலிலும் இருக்கிறது.

அடுத்த ஆச்சரியம், பீதொவனுக்கு சம்ஸ்கிருதத்தின் மீதும் கீதையின் மீதும் அபாரமான ஈடுபாடு இருந்திருக்கிறது. கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலுள்ள சாராம்சம் அத்தனையையும் திரட்டி, தானே தனது கைப்பட, அதை எழுதி, தன் மேஜை மீது வைத்திருக்கிறார். இந்தக் கையெழுத்துப் பிரதி இன்றும் லண்டன் இசை அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

மீரா பென்னின் புத்தகம் காலமெல்லாம் நினைவில் நிற்கும் ஒரு உன்னத அனுபவம்.

(நன்றி : தினமணி கதிர், 12.12.1999)