பொங்கல் வாழ்த்தும், ஓவியர் கே.மாதவனும்

இப்போதெல்லாம் கடிதங்கள் நிறைய வருகின்றன. ஆனால் முதலில் எல்லோருக்கும் வரும் கடிதம் என்பது பெரும்பாலும் சிறுவயதில் கிடைத்த வாழ்த்து அட்டைகள்தாம். அதுவும் புத்தாண்டு பிறந்து பொங்கல் வரும் வேளையில், சின்ன வயதில் வண்ண அட்டைகளாலும், தாள்களாலும் ஆன வாழ்த்துக்களைச் சேகரிப்பதிலும், அதுவும் பார்ப்பதற்கு அலைவதிலும் தனி சுகம். வாழ்த்து அட்டைகளை எல்லோருக்கும் வாங்கி அனுப்ப அவ்வளவு காசு அந்த வயதில் ஏது. 5ம் வகுப்பு 6ம் வகுப்பு படிக்கும் போது நம் அம்மா அப்பா எவ்வளவுதான் காசு தருவார்கள். இருந்தாலும் ஒரு நடை நடந்து கடைகளுக்குச் சென்று வாழ்த்து அட்டைகளைப் பார்த்து திரும்புவது தவறுவதில்லை. வரிசையாக அம்பாரமாய் கட்டி வைத்திருக்கும் வாழ்த்து அட்டைக்கடைகள் ஒவ்வொரு ஊரிலும் பல கண்காட்சிகளை உருவாக்கி விடும் அந்த சீசனில்.

fig_2aவீரவநல்லூர் கிளாக்குளத்தில் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த போதுதான் என் பெயருக்கு முதல் கடிதம் வந்தது. வாழ்த்து அட்டைதான். எங்கள் தாய் மாமா தான் அனுப்பி இருந்தார். பின்னாளில்தான் தெரிந்தது, “சின்னப்பயலுக்கு காகிதம் ஒன்னும் இதுவரை வரல அவன சமாதானப்படுத்த ஒன்ன தட்டி விடப்பா ன்னு எங்கப்பா தன் மாப்பிள்ளையிடம் சொல்லி நடந்த வேலையென்று. எது எப்படியோ நம் பேருக்கு தபால் ஒன்று வந்தாகிவிட்டது. வாழ்த்துக்கு நன்றி அனுப்ப வேண்டும். நன்றி வாழ்த்து அட்டை வாங்க மெயின் பஜாருக்கு அண்ணன்தான் அழைத்துச் சென்றான். பஸ் ஸ்டாண்டு தாண்டி பஜார் நடுவில் வெங்கடாசலம் ஐயர் கடையில் (அவர் சௌராஸ்டிரா பிராமணாள் நாங்களும் சௌராஸ்டிரா தெருவில்தான் குடியிருந்தோம்) வாழ்த்து அட்டைகளைப் பார்த்தோம். முதலில் நான்கைந்து அட்டைகளைக் காண்பித்தார். எனக்கு எல்லாமே நன்றாகத்தான் இருந்தன. அண்ணன்தான் இது வேண்டாம், நன்றி கார்டு வேண்டும் என்று கேட்டு வாங்கித் தந்தான். அப்புறம் அங்கேயே எதிர் வரிசையில் மூக்க மூப்பனார் கடையிலும் பெரிய அட்டைகளை தொங்க விட்டிருந்ததை பார்த்தோம். இவ்வளவு தூரம் வந்தபின் கடையம்மன் கோயில் வாசலில் மாடக்கண்ணு செட்டியார் பிரேம் கடையையும் எட்டிப் பார்த்து விடுவோம் என்று அண்ணன் கூட சென்றேன். அடேங்கப்பா நீளமாகவும் உயரமாகவும் நிறைய கலர் கலராக தெரிந்தது. வாழ்த்து அட்டைகள் வைத்திருந்த திண்டு கூட எனக்குத் தெரியவில்லை அவ்வளவு உயரம். சரி சரி இன்னொரு நாள் வந்து பார்த்து கொள்ளலாம் என்று திரும்பி விட்டோம்.

வீட்டுக்கு வந்து ஸ்டாம்பு ஒட்டி கவரில் பேர் எழுதி சைக்கிள் கேரியர் மேல் ஏறி போஸ்ட் பாக்சில் போடும் படலமும் முடிந்தது. போஸ்ட்மேன் வழக்கமாக வருவதை விட பொங்கல் நேரத்தில் எங்களுக்கு ரொம்ப முக்கியமானவராகப் பட்டார். நாங்க போட்ட வாழ்த்து என்றைக்கு போய் சேரும் என்று அவரிடம்தான் விசாரிப்போம். அவர் தெருவுக்குள்ளே வந்துவிட்டாலே அவர் பின்னாடி ஒரு பெரிய கூட்டம். அதுவும் லீவு நாள் என்றாலும் அவர் வந்துவிடுவார். அந்த நேரத்திலும் அவர் பை பிதுங்கி இருக்கும். அந்தச் சுமைதான் எங்களுக்கு சுகம். எல்லாப் பிள்ளைகளுக்கும்தான். எங்கள் ஏரியா போஸ்ட் மேன் ஸ்டாம்ப் ஒட்டாத கவர்களுக்கு ஒரு நாளும் அபராதம் வாங்க மாட்டார். அவரே கட்டிவிடுவார். ஆனால் ஸ்டாம்ப் ஒட்டாமல் வந்திருக்கிற தகவலைச் சொல்லி விடுவார். அதற்காகத்தான் எங்கள் தந்தை பொங்கல்படி கொடுப்பதாக நினைத்ததுண்டு.

ஆறாம் வகுப்பிற்கு ஹை ஸ்கூல் சேர்ந்தவுடன் மாடக்கண்ணு செட்டியார் கடை திண்டு உயரத்துக்கு நான் வந்து விட்டேன். இந்த வருஷம் அவருடைய கடை விரிக்கப்பட்டவுடன் தினமும் அட்டைகளை எட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் அடிக்கடி கிட்டியது. செட்டியாருக்கு அட்டைகளை எட்டி மட்டும் பார்த்துவிட்டு வாங்காமல் போனால் கோபம் பொத்துக்கொண்டு வரும். “நேத்து எவ்ளோ நேரம் நின்னு அடச்சிங்கடே. ஒன்னும் வாங்காம என்னடே லுக்கு? பெரிய இவரு மாதிரி. இன்னைக்கும் லுக்கு மட்டும்தானா சீக்கிரம் கிளம்புங்க”. மறுநாள் ஏசித் தொலைத்திடுவார். அவர் கடையில் காலை வெயில் நேரத்தில் அட்டைகளை வைக்க மாட்டார். கிழக்கு பார்த்த கடை. சாயந்திரம் ஸ்கூல் விட்டு வரும்போது அட்டைகளை அடுக்கி வைக்க உதவக்கூடிய சிறுசுகளை அவர் ஒன்றும் சொல்வது கிடையாது. நான் அந்த சிறுசுகளில் ஒன்றாகி விட்டேன். அங்குதான் கலர் கலராக பிரிண்டிங் படங்களை என் கண்கள் விழுங்க ஆரம்பித்தன.

நிறைய கலர் கலராக வாழ்த்து அட்டைகளை மலைக்க மலைக்க பார்த்தது திருநெல்வேலி சாலைக்குமார சுவாமி கோயில் பக்கத்து சங்கு நூலகத்தில்தான். அதற்குமுன் அவ்வளவு அடுக்கிய அட்டைகளை ஒரே இடத்தில் பார்த்ததும் கிடையாது. ஜிகினா ஒட்டி வெங்கடாசலபதி, அறுபடை வீடு, ஐயப்பன் படம், அஷ்டலெட்சுமி, பிள்ளையார், சரஸ்வதி, லெட்சுமி, ஏசு, ரோஜா பூக்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என கலர் கலராக சங்கு நூலகம் பல நாள் கண்ணுக்குள்ளேயே கிடந்தது.

007பொங்கல் வாழ்த்து அட்டைகள் சேகரிக்கத் தொடங்கியதும் எங்கள் டிராயிங் மாஸ்டர் முத்து சுப்பிரமணியன் சார் “எப்பா பொங்கல் வாழ்த்துல கே.மாதவன் படங்கள் கிடச்சதுன்னா சேத்து வைங்கப்பா” என்றார். அப்புறம் கிடைக்கின்ற வாழ்த்து அட்டைகளில் கே.மாதவனை தேட ஆரம்பித்தேன். மாடக்கண்ணு செட்டியார் பிரேம் கடையில் கழற்றும் பழைய படங்களில் திருவாச்சி இல்லாத முருகன் படம் இயற்கைப் பின்னணியில் ரொம்ப பிடித்திருந்தது. டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடிக்காக கே.மாதவன் வரைந்த படம்தான் அது. ஓவியர் கே.மாதவன் தமிழ்நாட்டின் மிக முக்கியமான சினிமா, நாடக பின்னதி, பேனர், பத்திரிகை, காலண்டர் ஆர்ட்டிஸ்ட். கே.மாதவன் பொங்கல் வாழ்த்து அட்டைகளின் வண்ண அழகும் தூரிகை வீச்சும், அனாயசமான அவரின் வேகமும், அலாதியான பாணியும், எவரையும் ஈர்க்கும்.

fig_1a_and_1b

ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் அவருடைய படைப்புகள் மிகுதியாக வெளிவந்து ரசனைத் தன்மையையும் ஊட்டின. நாடகங்களின் பின்னணி ஓவியங்கள், பேனர்களில் கன்னையா கம்பெனி, கே.எஸ்.கே. நாடார், தி.க.சண்முகம் சகோதரர்கள் ஜெமினி ஸ்டுடியோ போன்ற பெரிய கம்பெனிகளுக்காகவும் கே.மாதவனின் கைவண்ணங்கள் மிளிர்ந்தன. கே.மாதவன் வரைந்த என்.எஸ்.கே போர்ட்ரேட் பெயிண்டிங்கில் உள்ள பட்டுச்சட்டை அப்படியே பட்டின் பளபளப்பை கச்சிதமாகக் காட்டும். அதற்காக மாதவன் அந்தச் சட்டையினை என்.எஸ்.கே.யிடம் வாங்கி ஹோம் ஒர்க் செய்து வரைந்திருக்கிறார். கே.மாதவனின் பிசிறில்லாத அனாடமியும் கலர் ஸ்கீமும் காம்போசிஸனும் தனித்தன்மை வாய்ந்தவை. தூரம் மற்றும் பரந்த வெளியில் ஒரு காட்சியை லே அவுட் செய்வதில் வல்லவர். அவர் உருவங்கள் இயற்கைச் சித்திரங்கள், கதைச் சித்திரங்கள், புராணச் சித்திரங்கள் என எல்லா வகையிலும் தனி ஆளுமை பெற்றிருந்தார்.

fig-2உமா, முத்தாரம், கலைமகள், கலாவல்லி, நளாயினி காமராஜ், காவேரி, சாவி, கல்கி, ஆனந்த விகடன், தாமரை உள்ளிட்ட பல இதழ்கள் கே.மாதவனின் ஓவியங்களை அட்டையில் வெளியிட்டு அழகு பார்த்தன. உலகத் தமிழ் மாநாட்டு மலர் முதல் வாழ்த்து அட்டைகள் வரை எங்கும் மாதவ மயம்தான். ஓவியர்கள் கந்தசாமி, தர்மதாஸ், குப்புசாமி, ஆர்.நடராஜன், பாலன் ஆர்ட்ஸ் பாலன் என சிறந்த சீடர் பட்டாளமும் அவரைத் தொடர்ந்தது. கே.மாதவனை தென்னிந்தியாவின் நார்மன் ராக்வெல் என்று சொல்வதாக உடையார்பட்டி இசக்கி அண்ணாச்சியும் கே.மாதவனைப் பற்றி நிறைய பேசுவார். சென்னை கோட்டையிலுள்ள அறிஞர் அண்ணா ஓவியம் கே.மாதவனால் வரையப்பட்டது. சென்னையில் லிட்டில் ஆனந்த் தியேட்டரில் உமாபதி இதழுக்காக கே.மாதவன் வரைந்த அறுபதுக்கும் மேற்பட்ட படங்கள் இருந்தன.

போன வருடம் புத்தாண்டின் போது வாழ்த்துச் சொல்ல சென்னையிலிருந்து அழைத்த கணபதி அண்ணன் (அய்யா திகசி அவர்களின் மூத்த மைந்தர், திருவேந்தி என்ற பெயரில் குறுந்தொகையினை எளிய பாக்களில் எழுதியவர்) புத்தாண்டையும் பொங்கலையும் பற்றி சொல்லி கே.மாதவனிடமும் இழுத்துச் சென்றார். கணபதி அண்ணன் கே.மாதவன் அவர்களை நேரிலே சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர். அவர் பட்டறைக்கும் சென்றிருக்கிறார். நல்ல ஓவியர். ஓவியக் கல்லூரி வாழ்க்கையினை அனுபவிக்க முடியாமல் போனவர். இருந்தாலும் ஓவியங்களைப் பற்றி பேசும்போதெல்லாம் கே.மாதவனைப் பற்றி கணபதி அண்ணன் பேசாமல் இருந்ததில்லை. உங்களிடம் ஏதாவது கே.மாதவன் படம் இருக்கிறதா எனக் கேட்டபோது, அவருடைய ஒன்றிரண்டு ஒரிஜினல் பென்சில் ஸ்கெட்ச் என்னிடம் இருக்கிறது என்றும் சொன்னேன். பரவாயில்லையே கே.மாதவனுடைய பிரிண்டிங் படங்களாவது சேர்த்து வைக்கக் கூடிய ஆட்கள் இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லையே என்று கேட்டார். ஓவியர் மாருதி அவர்களும் கே.மாதவனின் படங்களைப் போற்றி அவர் வழியே வந்த கதையையும் பேசிக் கொண்டிருந்தோம். பொங்கல் வாழ்த்துக்கென அனுப்பிய கே.மாதவனுடைய படங்களெல்லாம் அனுப்பாமலாவது இருந்திருக்கலாம். நிறைய படங்கள் நம் கைவசமாவது இருந்திருக்குமென்று கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இருபத்தைந்து நிமிடம் நீளமாக பேசினார். அதற்குப் பின் பேசிய பொழுதுகளிலும் கே.மாதவனை பேசாமல் பேச்சு முடிந்ததாக ஞாபகமே இல்லை.

madavan-1

நேற்று பழைய நோட்டு ஒன்றை தேடிப் பார்க்கும் பொழுது கே.மாதவன் வரைந்த படம் ஒன்று கிடைத்தது. இந்த வருடமும் அதை ஸ்கேன் செய்து பிரிண்ட் போட்டு அனுப்பலாம். ஆனால், கணபதி அண்ணன், கழிந்த ஆனி மாதம் 7ம் தேதிக்கு மேல் இல்லை.

One Reply to “பொங்கல் வாழ்த்தும், ஓவியர் கே.மாதவனும்”

Comments are closed.