பகையைத் தேடி

said-sayrafiezadeh-190இந்த வாரம் நியூயார்க்கர் (ஜனவரி 16, 2012) இதழில் வெளியாகியிருக்கும் “A Brief Encounter with the Enemy” என்ற சிறுகதையின் மொழிபெயர்ப்பு இது. சயீத் சராஃபிஸாடே (Said Sayrafiezadeh) என்ற அமெரிக்க இளம் எழுத்தாளர் இதை எழுதியிருக்கிறார். அமெரிக்கா உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலகட்டங்களில் நடத்தும் போர்கள், அதில் பங்குகொள்ளும் ஒரு சராசரி அமெரிக்கரின் மனநிலையை எப்படி பாதிக்கிறது என்பதைக் குறித்து மெல்லிய நகைச்சுவை இழையோடும் நடையில் சொல்கிறார் சயீத்.  கர்ட் வானகட், ஜோஸஃப் ஹெல்லர் போன்றோரின் பாணியில் போரின் அபத்தத்தைச் சொல்லும் கதை. போர்முனையில் வேலையில்லாமல் எதிர்கொள்ள நேரிடும் அலுப்பும், போரில் பங்கு பெறுவதைக் குறித்து பொதுவெளியில் உருவாக்கப்பட்டிருக்கும் சாகசச் சித்திரமும், ஒரு சாதாரண மனிதனைக்கூட எந்த நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் என்று அலட்டிக்கொள்ளாத நடையில் சொல்லிவிட்டுப் போகிறார் சயீத். இக்கதையின் வடிவமும், நகைச்சுவையுணர்வும், குரூரமும் எனக்கு அசோகமித்திரன், அ.முத்துலிங்கம் இருவரின் எழுத்துமுறையையும் நினைவூட்டின. அசோகமித்திரன், முத்துலிங்கம் இருவருமே இதே தரத்திலோ, இதைவிட நன்றாகவோ பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் எழுதும் அமெரிக்கரான சயீதுக்குக் கிடைக்கும் கவனம், தமிழில் எழுதும் இவர்களிருவருக்கும் கிடைக்காது என்பது வருத்தமளிக்கும் நிதர்சனம்.

லைக்குச் செல்ல ஒரு பாதை வழியாகச் செல்ல வேண்டும். அந்தப்பாதை மிகவும் குறுகலாகவும், நெட்டுக்குத்தாகவும், இரண்டு பக்கமும் மரங்களோடும் இருந்தது. அந்த மரங்கள் அடர் ஊதா நிறத்தின் கருமையோடும், ஒரு சுவரைப் போல அடர்த்தியாகவும் இருந்தன. அந்தச் சுவருக்கு வெளியே இருந்து யாரும் பார்க்கமுடியாது. உள்ளே இருந்து யாரும் வெளியே பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை.

முதல் முறை அந்தப் பாதை வழியே நடந்து சென்றது மிகவும் திகிலூட்டுவதாக இருந்தது. ஒரு காலுக்கு முன் இன்னொரு காலை அடியெடுத்து வைத்து நடப்பது இருக்கட்டும், என்னால் ஒழுங்காக மூச்சுவிடக்கூட முடியவில்லை. ஒருவேளை, ஓடவேண்டி வந்திருந்தால், எப்படி ஓடுவது என்பது கூட எனக்கு நினைவில் இருந்திருக்காது. மேலும், ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும்போதும் கடமுடவென்று ஒலியெழுப்பிய ஐம்பது பவுண்ட் எடையுள்ள உபகரணங்களை வேறு நான் சுமந்துகொண்டிருந்தேன். ஒரு குளிர்சாதனப்பெட்டியைக் கூட நான் முதுகில் சுமந்துகொண்டிருந்திருக்கலாம் என்னும் அளவுக்கு அந்தச் சுமை இருந்தது. ஆனால் ஒரு மாதத்துக்குப் பின் அச்சம் மெல்லத் தளர்ந்தது. அந்தப் பாதை வியப்பளிப்பதாகவும், ஏன் இனிமையானதாகவும் கூட மாறத் தொடங்கியது. குறிப்பேட்டில் சொல்லியிருந்தது போல என்னால் ‘சுற்றுச்சூழலின் அழகை’ ரசிக்க முடிந்தது. நான் தொடர்ந்து இடித்துக்கொள்ளும் மரங்கள் கூட எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. “இவை என்ன மரங்கள்?” என சத்தமாகக் கத்திக் கேட்டேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமென நினைத்தேன். இந்த அனுபவத்திலிருந்து எவ்வளவு பெற்றுக் கொள்ள முடியுமோ, அவ்வளவையும் எடுத்துக் கொள்ளவேண்டுமென நினைத்தேன்.

“கிறிஸ்துமஸ் மரங்கள்” எனப் பின்னாலிருந்து யாரோ ஒருவன் கத்தினான். கிண்டலாகத்தான் சொன்னான். அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். இந்த வருடம் கிறிஸ்துமஸை நாங்கள் தவறவிடப்போகிறோம் என்றாலும்.

எதற்காக நாங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறோம், அப்படியென்ன நகைச்சுவை என எங்கள் சர்ஜெண்ட் தெரிந்துகொள்ள விரும்பினார். “ஒரு நகைச்சுவையும் இல்லை சார்” என்று பதில் சொன்னோம். “ஆம். ஒன்றும் இங்கே நகைச்சுவை கிடையாது. எந்த நேரமும் உங்கள் முகத்தில் குண்டடிப்பட நேர்ந்தால் ஒன்றுமே நகைச்சுவையாக இருக்க முடியாது.”

நாங்கள் மீண்டும் அமைதியானோம். ஐம்பது பேரும். மீண்டும் பயப்படத் தொடங்கினோம். ஆனால் அது நீண்டநேரம் நிலைக்கவில்லை. எந்த பயமுமே நீண்ட நேரம் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அதற்கான அத்தாட்சி சிறிதளவாவது இருக்கவேண்டும். ஆனால் ஒரு அத்தாட்சியுமில்லாமல் அலுப்பு (boredom) மட்டும் நீடித்து இருக்க முடியும். ஏதாவது அசாத்தியமான நிகழ்வை எதிர்பார்த்துதான் நான் இவ்வளவு தூரம் வந்திருந்தேன், ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. இப்போது பன்னிரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. நான் நாளை வீட்டுக்குத் திரும்பிப் போகப் போகிறேன். கடைசி முறையாக அந்தப் பாதையில் நடந்து சென்றபோது நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

—oooOOOooo—

நான் பெக்கியைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

நான் அந்தச் செய்தியைச் சொன்னபோது, “ஊஊஊ” என்றாள். “சாகசப் பயணத்துக்குச் செல்கிறாய் ல்யூக்!” என்று ஒரு சிறுபெண்ணைப் போல கைகளைத் தட்டிச் சொன்னாள்.

“நிச்சயமாக” என்றேன்.

அப்போது அவள் சிகரெட்டோடு கீழே வந்துகொண்டிருந்தாள். நான் ஸாண்ட்விச்சோடு மேலே சென்று கொண்டிருந்தேன். அதற்கு முன் நாங்கள் லாபியில் சில முறை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறோம். கடைசியாக நான் அவளைப் பார்த்தபோது, நான் அவளை வெளியே அழைத்துச்செல்லக் கூப்பிட்டிருக்கிறேன். அவள் ஒரு கணம் கூட தாமதிக்காமல் ‘வேண்டாம்’ என்று சொல்லியிருந்தாள். “ஐஸ்க்ரீமாவது சாப்பிடலாமே?” என்று கேட்டுவிட்டு, அவளை பள்ளி நாட்களிலிருந்தே தெரியும் என்றும் சொன்னேன். ஐஸ்க்ரீம் வண்டி அப்போது அலுவலகத்துக்கு வெளியேதான் நின்று கொண்டிருந்தது.

“இல்லை, வேண்டாம். நான் டயட்டில் இருக்கிறேன்,” என்றாள். அது உண்மையான காரணமா என்று எனக்குத் தெரியவில்லை. அவள் உடம்பு சரியான அளவாகத்தான் இருப்பதாக எனக்குப்பட்டது.

ஆனால் ஆறு மாதங்கள் கழித்து, வாயெல்லாம் பல்லாக, தன் பெரிய கண்களை இமைத்தபடி லாபியில் என் அருகில் நின்று கொண்டிருந்தாள். அலுவலகத்திலிருந்த மற்றவர்களெல்லாம் எங்களைச் சுற்றிச் சென்றபடி இருந்தார்கள்.

நான் இன்னும் இரண்டு வாரங்களில் ராணுவத்தில் தற்காலிகமாகப் பணியாற்றத் தொடங்கவேண்டும். ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை எனக் காட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையிலேயே அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான். போர் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று எல்லோரும் நினைத்தார்கள். தீபகற்பத்தைப் பிடித்துவிட்டோம், எல்லைகளைப் பிடித்துவிட்டோம், தலைநகரிலிருந்து இருபத்தைந்து மைல்களுக்குள் நெருங்கிவிட்டோம். என்றைக்கு வேண்டுமானாலும் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். நான் சென்று சேர்வதற்குள் போர் முடிவுக்கு வந்து நான் சண்டை எதையும் நேரடியாகப் பார்க்கமுடியாமல் போய்விடும் என்பதுதான் எனக்குக் கவலையாக இருந்தது.

“நீ என்னோடு தொடர்பில் இருப்பாய் இல்லையா?” என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கேட்டாள், ஏதோ அவள் ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூப்பிட்டு நான் வரமாட்டேன் என்று சொன்னதைப் போல.

“நிச்சயம் தொடர்பிலிருப்பேன் என்று உனக்குத் தெரியும்” என்றேன்.

அவள் உதடுகள் பெரிதாகவும், இமைகள் நீளமாகவும் இருந்தன. தலைமுடி இலேசாக நரைக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் அதை நான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. அதையும் நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு அப்போதுதான் இருபத்தியேழு வயதாகியிருந்தது. இடுப்புப்பகுதியில் தளரத்தொடங்கியிருந்தேன். ராணுவப்பயிற்சி மூலம் மீண்டும் உறுதியான வடிவுக்குத் திரும்புவேன் என்று நான் நம்பினேன். “Push yourself to your physical limits” என்று குறிப்பேடு சொன்னது.

அவள் தன் ஈமெயில் முகவரியை என் ஸாண்ட்விட்ச் பையின் கீழ்ப்பகுதியில் ஊதாப்பூ நிற மையில் எழுதிக்கொடுத்தாள். அவள் திரும்பிச் சென்றபோது அவள் பிருஷ்டத்தை நன்றாக உற்றுப் பார்த்தேன். அவள் டயட்டிலிருக்கத் தேவையில்லை.

முதலிரண்டு மாதங்களில் அவளுக்கு மெயில் செய்வதில் நான் குறிப்பாக இருந்தேன். எங்கள் ஒவ்வொருவருக்கும் இணைய மையத்தில் பதினைந்து நிமிடம் கொடுக்கப்பட்டிருந்தது. என்னால் எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் தகவல்கள் கொடுத்தபடி இருந்தேன்.

“அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது ல்யூக்? எனக்கு எல்லாவற்றையும் சொல்.” அவள் தெரிந்துகொள்ள விரும்பினாள். தன் ஈமெயில்களை “XOXO***” என்று முடித்தாள்.

“அதற்கு அர்த்தம் என்ன?” – நான் உடன் இருந்த ஒருவனைக் கேட்கவேண்டியிருந்தது.

“தழுவல்களும், முத்தங்களும்”

“ஆனால், அந்த நட்சத்திரக்குறிகளுக்கு என்ன அர்த்தம்?”

அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் எனக்கு சொல்வதற்குப் பெரிதாக எதுவும் விஷயமிருக்கவில்லை. எங்கள் எதிரி இன்னும் எங்கள் முன் வரவில்லை. ஆகவே, இங்கே ஒரு இண்டர்நெட் மையம், பெளலிங் கூடம், பர்கர் கிங் ஆகியவை இருக்கின்றன என்று எழுதினேன். “இங்கே எல்லாமே இருக்கிறது,” என்று எழுதினேன்.

ஆனால் அது முழுக்க உண்மையில்லை. இங்கே காலணி (boot) போன்ற விஷயங்கள் இருக்கவில்லை. அது மழைக்காலம். தினமும் மழை பெய்தது. மழைக்கோட்டுகள் (ponchos) இருந்தன. ஆனால் அவை வழுக்குவதிலிருந்தும், சறுக்குவதிலிருந்தும் எங்களைக் காக்கவில்லை. குறிப்பாக ஸ்கெச்சர்ஸ் (Skechers – அமெரிக்க ஷு கம்பெனி) அணிந்துகொண்டு ரோந்து செல்லும்போது மிகவும் சிரமம். கனமழையில் மாட்டிக்கொண்டால் நீங்கள் ஐஸ் ஸ்கேட்டிங் செய்தபடி திரும்பிவரலாம். ஆனால் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேர்வீர்கள். சர்ஜெண்ட் அதைத் தவறாமல் தன்னுடைய நீலநிறப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்வார். அப்படி அவர் குறித்துக்கொள்வதை நீங்கள் கவனிக்கவேண்டும் என்பதிலும் குறிப்பாக இருப்பார். ஆனால் அதற்குப் பின் அந்தக் குறிப்பு என்னவாகிறது என்பது அவரவர் யூகத்திலேயே இருந்தது. “அது போன்ற பத்து குறிப்புகள் சேர்ந்தால், ராணுவ நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை கொடுப்பார்கள்,” என்று இருப்பதிலேயே அதிகம் பயந்த ஒருவன் அனுமானித்தான்.

ஒருவழியாகக் காலணிகள் வந்து சேர்ந்தன. நாங்கள் அப்போது பணியாற்றத் தொடங்கி மூன்று மாதங்களாகியிருந்தன. அவை டிம்பர்லேண்ட் என்ற கம்பெனியால், வரி கட்டுபவர்களின் தலையிலேயே எல்லா செலவும் விழவேண்டாம் என்ற நல்லெண்ணம் காரணமாக, இலவசமாக வழங்கப்பட்டிருந்தன. பாதிப்பேர் உடனடியாகத் தங்களுக்கு வழங்கப்பட்ட காலணிகளை விற்றுவிட்டார்கள். அதை வாங்க வசதியிருந்த இதர பாதிப்பேருக்குத்தான் அதை விற்றிருந்தார்கள். விற்ற காசிலிருந்து சிகரெட், உடனடி சூப் போன்ற பொருட்களை வாங்கினார்கள். சாஸ் (Chaz) என்ற ஒருவன் என் காலணிகளுக்கு இருபத்தைந்து டாலர் தருவதற்குத் தயாராக இருந்தான். அதன்மூலம் அவன் எனக்கு ஏதோ உபகாரம் செய்வது போல நடந்துகொண்டான். “நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா,” என் கட்டிலில் அமர்ந்து பணத்தை எடுத்துக் காட்டினான். “என்ன சொல்கிறாய்?”. அதைக் குறித்து அவன் சகஜமாக இருக்க நினைத்தான். அது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போலக் காட்டிக்கொண்டான். அவன் ஒரு நல்ல கல்லூரியில் படித்திருக்கக்கூடும். அவன் பெற்றோர் அவனுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பணம் அனுப்பியிருக்கக்கூடும். எங்கள் இருவருக்குமே காலணிகள் தேவை என்பதைத் தவிர, எனக்கும், அவனுக்கும் வாழ்க்கையில் பொதுவான விஷயங்கள் எதுவுமே இருக்கக்கூடும் என எனக்குத் தோன்றவில்லை. அவன் ராணுவத்தில் ஏதோ கொள்கைக்காகவெல்லாம் சேர்ந்திருக்க முடியாது. அதைத் தன் ரெஸ்யூமேவில் போட்டுக்கொண்டு, தன் career-ஐ வெகுவேகமாகத் துவங்கவேண்டுமென்பதற்காகத்தான் சேர்ந்திருக்கவேண்டும்.

“நீ இங்கே தவறான காராணங்களுக்காக சேர்ந்திருக்கிறாய் சாஸ்” என்றேன் நான்.

“அப்படியா? என்ன காரணங்கள் அவை?” ஏதோ தனக்குத் தெரியாதது போலக் கேட்டான்.

இருபது வருடங்கள் கழித்து, ஒருவேளை அவனை நான் தொலைக்காட்சியில் பார்க்கக்கூடும். அப்போது அவன் என்னிடம் ஓட்டு கேட்டுக்கொண்டிருப்பான். என் காலணிகளைப் பற்றிப்பேசும்போது, “தொலைநோக்குப் பார்வையில்” போன்ற வழக்குகளை அவன் உபயோகித்தான்.

டிம்பர்லேண்டிலிருந்து எங்களுக்குக் காலணிகள் வந்து சேர்ந்ததை நான் பெக்கிக்கு மெயில் செய்து தெரிவித்தேன்.

அவள் பதில் அனுப்பினாள்:

“அது சரி, அங்கே வேறென்ன நடந்து கொண்டிருக்கிறது?
XOXO***”

—oooOOOooo—

story

இப்போது இது மழைக்காலம் இல்லை. வெப்பமான, வறட்சியான காலம். யாருக்கும் காலணிகள் தேவைப்படவில்லை. நான் என் பாதையின் முடிவை பதினைந்து நிமிடத்தில் நெருங்கிவிட்டிருந்தேன். அதை நான் நொண்டியடித்துக்கொண்டும் கடந்திருக்கலாம்; வெறுங்காலோடும் கடந்திருக்கலாம்.

நேரம் அந்திக்கருக்கலை நெருங்கிக்கொண்டிருந்தது. வெப்பம் கொஞ்சம் தணியத் தொடங்கியது. ஆனால் பூச்சிகள் சத்தமெழுப்பத் தொடங்கியிருந்தன. நான் வியர்த்துக் கொட்டிக்கொண்டிருந்தேன். ஏதோ போருக்குப் போகப் போகிறவன் போல உடையணிந்திருந்ததுதான் அந்தப் புழுக்கத்துக்குக் காரணம். ஒரு போர்வீரனாக உணர்வதைக் காட்டிலும், போர்வீரனாக மாறுவேடமணிந்த பள்ளிச்சிறுவனைப் போலத்தான் நான் உணர்ந்தேன். சாக்லேட்டுகளை வாங்கிப் போட்டுக்கொள்ளும் பை மட்டும்தான் குறைச்சல். என்னிடமிருந்த அத்தனையுமே அதீதமாக மட்டுமில்லாமல் அசட்டுத்தனமாகவும் தோன்றியது. காலணிகள் மட்டுமல்ல, ஹெல்மெட், ஜாக்கெட், gunball இயந்திரம் போல சத்தமெழுப்பிக் கொண்டிருந்த என் தோள்பை… துப்பாக்கியும் கூட தேவையற்றதுதான். ஆனால் அதுதான் இருப்பதிலேயே இலகுவான பொருள். அதுதான் ஒரு பெரிய முரண். அத்துப்பாக்கி மூன்று அடி நீளமாக இருந்தது. பார்ப்பதற்கு இரும்பால் செய்யப்பட்டது போலத் தோற்றமளித்தாலும், கையாள்வதற்கு ப்ளாஸ்டிக் போல இலகுவாக இருந்தது. உண்மையில் அது ஒரு தண்ணீர்த் துப்பாக்கியாகக் கூட இருந்திருக்கலாம், ஆனால் அதில் நேரத்தையும், தட்பவெப்பநிலையையும் காட்டும் பல்வேறு கருவிகள் இருந்தன. மேலும் அந்தத் துப்பாக்கியால் ஒரு மைல் தூரத்திலிருக்கும் மனிதனையும் சுட்டுக்கொல்லலாம். துப்பாக்கியின் விசையை முழுமையாக இயக்கவேண்டுமென்று கூட அவசியமில்லை. விசைக்கு அருகில் விரலைக் கொண்டு சென்றாலே, நம் மனநிலை அறிந்து அது தன்னைத்தானே இயக்கிக் கொள்ளும். ப்பூஃப் என தோட்டா வெளியேறும். துப்பாக்கியின் அதிர்ச்சியோ, ஏதோ செல்ஃபோனில் அழைப்பு வரும் அளவுக்குத்தான் இருக்கும்.

என் அப்பா என்னையும், தங்கையையும் காட்டுக்கு வேட்டைக்குக் கூட்டிச் சென்றபோதுதான் முதல்முறையாக ஒரு துப்பாக்கியை நான் இயக்கினேன். அது பத்து வருடங்களுக்கு முன்னால், போர் தொடங்கியிருந்த காலம். காட்டில் புள்ளிமான், காட்டுமான் போன்றவைகளெல்லாம் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. குறைந்தபட்சம், என் அப்பாவை அவர் அப்பா வேட்டைக்குக் கூட்டிச் சென்றபோது அவை இருந்தன. ஆனால் காலம் மாறிவிட்டது. தொழிற்சாலைகள் வந்துவிட்டன. போருக்காக வேண்டி, காடுகள் அழிக்கப்பட்டு ரயில் பாதைகள் போடப்பட்டுவிட்டன. எல்லாவற்றுக்கும் மேல் புகை வேறு. அது இலையுதிர்காலம். பார்பக்யூ மற்றும் அம்மோனியா போல புகை நாற்றமடித்தது. புள்ளிமான், காட்டுமானெல்லாம் போகட்டும், குரங்குகள் கூட காட்டில் இல்லை. ஆகவே, வேட்டை சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக, என் அப்பா ஒரு மரத்தில் சாக்கட்டியால் இலக்கு மையத்தை (bulls-eye) வரைந்தார். இலக்கு மையத்துக்குள்ளே எதிரியின் முகத்தையும் வரைந்தார். நையாண்டியாகக் காதுகளையும், கண்களையும் பெரிதாக வரைந்திருந்தாலும், ஆச்சரியப்படும்வகையில் அது நல்ல ஓவியமாகவே இருந்தது.

“இதை இப்படித்தான் பிடித்துக்கொள்ளவேண்டும்,” அப்பா சொல்லிக்கொடுத்தார். “இப்படித்தான் இயக்கவேண்டும், இப்படித்தான் குறி பார்க்கவேண்டும்.”

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. அந்தத் துப்பாக்கி ஒரு செங்கலைப் போல கனமாக இருந்தது. விசையைப் பிடித்து இழுத்தபோது என் வலதுகையும், காதும் தீப்பிடித்துக்கொண்டது போல எரிந்தது. “என்ன செய்திருக்கிறாய் பார் ல்யூக்!” என் அப்பா கத்தினார். இலக்கு மையத்தின் நட்டநடுவே மிகச்சரியாக நான் சுட்டிருந்தேன். “இன்னொரு முறை சுடு, ல்யூக்,” என் அப்பா சொன்னார். ஆனால் எனக்கு அதில் விருப்பமிருக்கவில்லை.

ஆனால் என் தங்கை வசமாக விளையாடினாள். இலக்கை நோக்கிப் பலமுறை சுட்டாள். ப்ளாம், ப்ளாம், ப்ளாம். அது ஏதோ நிஜ எதிரியைப் போல. பலமுறை அவள் இலக்கைத் தவறவிட்டாள். சில சமயங்களில் மரத்தையும். ஆனால் அது அவளுக்கு வேடிக்கையான அனுபவமாக இருந்தது. “அவன் செத்துவிட்டான்,” அவள் மீண்டும் மீண்டும் சொன்னாள். “எதிரி செத்துவிட்டான்!” பன்னிரண்டு வயதுதான் என்றாலும், தொழில்முறை துப்பாக்கி வீராங்கனை போல் அவள் இருந்தாள். நான் ஆற்றில் கல்லெறிந்தபடி இருந்தேன். துப்பாக்கி விளையாட்டு முடிந்து வீட்டுக்குப்போய் வீடியோ கேம் விளையாடுவதற்காகக் காத்திருந்தேன். சாயங்காலமாகி, தோட்டாக்கள் தீர்ந்த சமயத்தில் அவள் அந்த மரத்தில் ஒரு ஓட்டையே போட்டிருந்தாள்.

“அவர்கள் எல்லோரும் செத்துவிட்டார்கள்” என்று கத்தினாள்.

பத்துவருடங்கள் கழித்து, இப்போது சர்ஜெண்ட் நாங்கள் சாகவேண்டுமா என்று கேட்கிறார். “இல்லை சார்” என்று நாங்கள் சொல்கிறோம். ஒவ்வொரு நாளும் இலக்கை நோக்கிச் சுடும் பயிற்சியில் இரண்டு மணி நேரம் நாங்கள் செலவழிக்கவேண்டும் என்று அவர் உறுதியாக இருக்கிறார். கவிழ்ந்து படுத்தபடியும், சேற்றில் ஊர்ந்தபடியும். நாங்கள் வெறியோடு பயிற்சிசெய்தோம். ஏனென்றால் உண்மையான சண்டையில் பங்கேற்கப் போகிறோம் என நாங்கள் உறுதியாக நம்பினோம். நாங்கள் வந்த ஒரு வாரம் கழித்து, போரில் மோசமான திருப்பம் ஏற்பட்டது. போர் உடனடியாக முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலானது. நாங்கள் தீபகற்பத்தை இழந்திருந்தோம். எல்லைகளைப் பராமரிக்கத் தவறினோம், தலைநகரிலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டோம். ஒவ்வொரு நாளும் எத்தனை உயிரிழப்புகள் என்று சொல்லி தகவல்கள் வந்தபடி இருந்தன. இரண்டிலிருந்து இருநூறு வரை அது எந்த எண்ணாக வேண்டுமானாலும் இருந்தது. எண்ணிக்கை ஒவ்வொருமுறை அறிவிக்கப்பட்டபோதும், மிகைப்படுத்தப்பட்டிருக்கிறதா, குறைக்கப்பட்டிருக்கிறதா என்று எங்களால் அனுமானிக்கமுடியவில்லை. நாங்கள் உண்மையில் எத்தனை பேரை இழந்திருக்கிறோம் என்பது வெறும் யூகமாகவே இருந்தது. “நாங்கள்” என்று நான் சொன்னாலும், எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் எதிரி நாட்டின் மறுபுறத்தில், போர் முனையிலிருந்து வெகு தொலைவில் இருந்தோம். எங்களுக்கு எந்த இழப்புமில்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தலைநகரை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த துர்பாக்கியசாலிகள்தான் அதைக் குறித்துக் கவலைப்பட வேண்டியிருந்தது.

“அங்கே என்ன நடக்கிறது என்று சொல்கிறாயா?” என்று நான் பெக்கிக்கு சில முறை மெயில் அனுப்பினேன். அவள் பதில் வந்தபோது, அது கிட்டத்தட்ட முழுமையாகவே கருப்படிக்கப் (redact) பட்டிருந்தது.

Dear Luke,

————————

xoxo***

—oooOOOooo—

என்னுடைய அதி நவீன துப்பாக்கியின் படி இப்போதைய நேரம் ஆறு மணி இரண்டு நிமிடம், வெப்பம் எண்பத்தி ஐந்து டிகிரி. என் சொந்த ஊரில் இப்போது பன்னிரண்டு மணி நேரம் பின்னாலும், அறுபது டிகிரி குளிர்வாகவும் இருக்கும். நாளை காலை நாங்கள் ஊருக்குத் திரும்பிப் போகப் போகிறோம். ஆனால் குளிர்காலத்துக்குத் திரும்பிப் போகிறோம் என்று எங்கள் யாருக்கும் கவலையில்லை. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாங்கள் திரும்பிச் செல்லப் போகிறோம். அப்பயணத்தை அந்த நிறுவனம் இலவசமாக வழங்கியிருந்தது. “Travelling in style” என மற்றவர்கள் சொன்னார்கள். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவி இதுவாகத்தான் இருக்கமுடியும் எனப் பேசிக்கொண்டார்கள். ஆனால் பன்னிரண்டு மாதங்கள் கடந்தும், நாங்கள் சொல்லிக்கொளும்படி எதையுமே செய்திருக்கவில்லை. ஒருவேளை, நான் இப்போது நடந்துகொண்டிருக்கும் இந்தப் பாலம்தான் நாங்கள் செய்திருக்கும் முக்கியமான சாதனையாக இருக்கமுடியும். என் காலணிகள் பள்ளத்தாக்கில் எதிரொலித்தன. இந்தப் பாலம் உறுதியான ஒன்று. இரும்பாலானது. இந்தப் போர் முடிந்து பத்தாயிரம் வருடம் கழித்தும் இது இப்படியே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பள்ளத்தாக்கைக் கடக்கவேண்டும் என்பதற்காக இந்தப் பாலத்தைக் கட்டினோம். மலை முகட்டுக்குச் செல்வதற்காகப் பள்ளத்தாக்கைக் கடக்கவேண்டும். மலைதான் எங்கள் இலக்கு. அந்த மலையில்தான் எதிரி எங்களுக்காகக் காத்திருந்தான்.

“எண்ணூற்று எண்பது பேர் ஒளிந்திருக்கிறார்கள்,” எங்கள் சர்ஜெண்ட் சொன்னார். அந்த எண்ணிக்கை அவருக்கு எப்படித் தெரிந்தது என்று எங்களுக்குத் தெரியாது. அவ்வளவு துல்லியமாகச் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என நாங்கள் நம்பினோம்.

ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் நாங்கள் அந்தப் பாலம் கட்டுவதற்காக உழைத்தோம். விடிவதற்கு முன்பே எழுந்து, இருட்டிலேயே பொடியாக்கப்பட்ட முட்டைகளைத் தின்றுவிட்டு, பாதையைக் கடந்து, பள்ளத்தாக்கை அடைந்தால் சூரியன் உதிப்பதற்கு சரியாக இருக்கும். பள்ளத்தாக்கிலிருந்து வெளிச்சம் வருவதைப் போல இருக்கும். தங்க நிறத்தில் கதகதப்பாக, இளஞ்சிவப்பும், சிவப்பும் கலந்து ஒளிக்கற்றைகள் இருக்கும். உபயோகிக்கப்பட்ட கார்களை விற்கும் டீலரிடம் பணியாற்றும் ஒருவன், ஒருவேளை தான் ஒரு கார் விளம்பரத்தை இயக்கினால், காரின் சக்தி, நீடித்த தன்மை இவற்றைக் காட்டுவற்காக இந்தப் பள்ளத்தாக்கின் பின்னணியில்தான் படம்பிடிப்பேன் என்று சொன்னான். மற்ற எல்லோரும் அதை ஆமோதித்து, அந்தக் காரை நிச்சயம் வாங்குவதாக வாக்களித்தார்கள்.

ஆனால் உண்மையில் யாருக்குமே அந்தப் பாலத்தைக் கட்டுவதில் விருப்பம் இருக்கவில்லை. ஏனென்றால் யாருக்கும் மலைக்குச் செல்வதில் விருப்பமில்லை. யாரும் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, எவ்வளவு மெதுவாகவும், மோசமாகவும் வேலை செய்யமுடியுமோ அவ்வளவு மெதுவாகவும், மோசமாகவும் வேலை செய்தோம். தவறுதலாக எங்கள் உபகரணங்களைப் பள்ளத்தாக்குக்குள் தவறவிட்டோம். நான் ஒருமுறை என் ப்ளோ டார்ச்சைத் தவறவிட்டேன். ஒரு சோப்புக்கட்டியைப் போல அது என் கையிலிருந்து நழுவி, மலைமுகட்டில் இடித்து, பள்ளத்துக்குள் சென்று விழுந்தது.

“அந்த ப்ளோ டார்ச்சின் விலை என்னவென்று உனக்குத் தெரியுமா?” சர்ஜெண்ட் கத்தினார். ஏதோ அவர் சட்டைப்பையிலிருந்து பணம் கொடுத்ததைப் போலக் கத்தினார். அவர் மகளை நான் பள்ளத்தாக்கில் நழுவவிட்டது போலக் கத்தினார். என் முகத்திலிருந்து ஒரு ஜாண் தூரத்தில் நின்று நீண்டநேரம் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஓட்டப்பந்தயத்தில் ஓடப்போவதைப் போவது போல மூச்சு விட்டார். அந்த மூச்சில் முட்டைப் பொடியின் வாசமடித்தது. இதனாலெல்லாம் அவர் என்னை உண்மையாலுமே கேள்வி கேட்டதாக நான் நினைத்துக்கொண்டேன்.

“நூற்றி நாற்பது டாலர் இருக்குமா?” எனக் கேட்டேன்.

என்னுடைய பதில் கேள்வி அவரைத் திகைப்புக்குள்ளாக்கியது. “அதன் விலை நாற்பது டாலர்” என்றார்.

ஆனால் அது அவ்வளவெல்லாம் இருக்குமெனத் தோன்றவில்லை.

“உன்னைத் தூக்கி பள்ளத்தாக்கில் வீசவேண்டும்,” என்றார். என்னை அவர் அங்கேயே, அந்த இடத்திலேயே, தண்டால் எடுக்கும்படி பணித்தார். முப்பது தண்டால்கள். ஆனால் என்னால் முடியவில்லை. தோள்பையைக் கழற்றிவிட்டு செய்யச்சொன்னார். அப்போதும் முடியவில்லை. அது அவரை மேலும் எரிச்சல்படுத்தியது. கழிவறையைச் சுத்தம் செய்யும்படி பணித்தார். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. என் பணிக்காலம் முழுவதும் கூட ஒரு பிரச்சினையும் இல்லாமல் நான் கழிவறையைச் சுத்தம் செய்திருப்பேன். என் ஆயுசுக்கும் கூட அதைச் செய்திருப்பேன். அந்த மலையையேறி, எண்ணூற்று எண்பது எதிரிகளை எதிர்கொள்வதைக் காட்டிலும் வேறு எந்த வேலையையும் நான் செய்யத் தயாராக இருந்தேன். ஆனால் அடுத்தநாள் மீண்டும் பளிச்சென்ற அதிகாலையில் பாலத்தில் வேலை செய்ய வந்துவிட்டேன். எத்தனை ஆட்கள் இருக்கிறார்களோ, அத்தனை பேரையும் உபயோகித்துக்கொள்ள என சர்ஜெண்ட் தயாராக இருந்தார். ஒருவேளை அவருடைய மேலதிகாரி அவர் முகத்திலிருந்து ஒரு ஜாண் தொலைவிலிருந்து கத்துகிறாரோ என்னவோ. இன்னொரு பக்கம், நாட்டின் அடுத்த பக்கத்தில் உயிரிழப்புகள் அதிகமாகிக்கொண்டே போயின.

ஒவ்வொரு நாளும், நாங்கள் சுத்தியலடித்து, வெல்டிங் செய்தபடி இருந்தோம். ஐம்பது பேர் ஒரே சமயத்தில் வேலை செய்தோம். அந்த சத்தம் பள்ளத்தாக்கு முழுவதும் காலையிலிருந்து இரவு வரை எதிரொலித்தபடி இருந்தது. நாங்கள் வருவது எதிரிகளுக்கு அதுவரை தெரிந்திருக்கவில்லை என்றால், அப்போது தெரிந்துகொண்டிருப்பார்கள்.

ஒரு நாள் இரவில், நாங்களெல்லோரும் வேலை நிறுத்தம் செய்யவேண்டும் என்றான் ஒருவன். அவன் அயோவாவிலிருந்தோ, இதாஹாவோலிருந்தோ வந்த விவசாயி. பெரிதாகவும், இளஞ்சிவப்பாகவும் இருந்தான். எங்கள் கூட்டத்தில் பாதிப்பேர் விவசாயிகள். மீதிப்பேர் கருப்பர்கள். என்னைப் போலவும், எதிர்கால அரசியல்வாதி போலவும் வெகு சிலர் இருந்தாலும், அவர்கள் இருபிரிவினர்தான் பெரும்பாலும் இருந்தார்கள்.

“உங்கள் தொழிற்கருவிகளைக் கீழே போடுங்கள் தோழர்களே!” என்று அவன் கூக்குரலிட்டான். அந்த வசனத்தை அவன் எங்கோ கேட்டிருக்க வேண்டும்.

“நான் எதையும் கீழே போடுவதாக இல்லை,” ஒரு கருப்பன் சொன்னான். “நான் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மற்றவர்களிடம், “நான் கவனம் செலுத்துகிறேன், கேள்விகள் கேட்கிறேன், எல்லாவற்றையும் உற்றுப் பார்த்தபடி இருக்கிறேன்” என்று கிசுகிசுப்பாகச் சொன்னான். ஏதோ வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுவது போல் இருந்தது அவன் பேசியது. கொள்கைக்காக இல்லாமல், வேலை கிடைக்கவேண்டுமே என்பதற்காக ராணுவத்தில் சேர்ந்தால் அப்படித்தான் நடந்துகொள்ளமுடியும் என்று எனக்குத் தோன்றியது.

இப்படியாக அந்தப் பாலத்தைக் கட்டுவதில் நாங்கள் நான்கு மாதங்கள் செலவழித்தோம். ஆனால் எவ்வளவுதான் நிதானமாகவும், மோசமாகவும் வேலை செய்தாலும், செய்யும் வேலையில் முன்னேற்றம் இருக்கத்தான் செய்தது. ஒருவழியாக, பள்ளத்தாக்கின் அடுத்த பக்கத்துக்கு வந்தபோது, எங்கள் மனதில் எழுந்த அசட்டுப் பெருமிதத்தைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் பாலத்திலிருந்து இறங்கி, மலையைப் பார்த்தபோது, ஆளில்லா அத்துவானத்தில் வந்து நிற்கிறோம் என்று புரிந்தது. எங்கள் அழிவுக்கு நாங்களே குழி தோண்டியிருக்கிறோம்.

பாலத்துக்கு அந்தப்பக்கம் இருக்கும் கானகப்பாதையைப் போல இல்லை இந்த மலை. கரடுமுரடாகவும், வறண்டும், ஒளிந்து கொள்ள எந்த இடமும் இல்லாமலும் இருந்தது. சமைக்கப்படாத மாபெரும் ஓட்மீல் (oatmeal) குவியல் போலக் காட்சியளித்தது. எவர் கவனத்தையும் கவராதபடி அங்கே மிக எளிதாக ஐம்பது பேரைக் கொன்று புதைக்கலாம்.

“இதைவிட சிறந்த தருணம் வேறொன்றுமில்லை,” சர்ஜெண்ட் சொன்னார். தோள்பையை மாட்டிக்கொண்டு, ஹெல்மெட்டின் முகப்பை மூடி, துப்பாக்கியைத் தாங்கியபடி நாங்கள் முன்னேறினோம்.

—oooOOOooo—

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நாங்கள் யாருமே சரியான காரணங்களுக்காக ராணுவத்தில் சேரவில்லை. ஒருவேளை ராணுவத்துக்கு ஆளெடுக்கும் நிறுவனத்தில் பதிவு செய்தபோது நான் சரியான காரணத்துக்குத்தான் சேர்ந்திருக்கிறேன் என்ற மாயையில் நான் இருந்திருக்கலாம். உடற்பரிசோதனைக்குப் பின் அவர்கள் கொடுத்த குறிப்பேட்டில், “வாழ்க்கையையே புரட்டிப்போடப்போகும் அனுபவம்” என்று எழுதியிருந்தது. வாசகத்துக்குப் பின்னணியில் அரை டஜன் சீருடை இளைஞர்கள், அது அவர்கள் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் என்பதைப்போல் கடற்கரையில் நின்று அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். என் மதிப்பீடுகளுக்காக நான் ராணுவத்தில் சேர்ந்திருப்பதாக எல்லோரும் என்னைப் பாராட்டியபோது, நானும் அதை நம்பி என்னை நானே ஏமாற்றிக்கொள்வது எளிதாக இருந்தது. அந்தக் காரணத்தை யார் மறுக்கமுடியும்? என் வழியனுப்பு விழாவின்போது முந்நூறு பேர் சுற்றிநின்று, “ல்யூக்! ல்யூக்! ல்யூக்! USA! USA! USA!” என்று கோஷமிட்டார்கள். என்னிடம் ஒரு வார்த்தை கூட அதுவரை பேசியிராதவர்கள், என் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்த்திராதவர்கள், என் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் ஆகியோரும் அவர்களில் அடக்கம். ஆனால் இப்போதோ அவர்கள் என்னை எப்போதுமே நன்றாகத் தெரிந்தவர்கள் போல நடந்துகொண்டார்கள். நான் ஏதோ அந்தக் கம்பெனியை சுற்றிப்பார்க்க விருந்தினராக வந்த ஹாலிவுட் நட்சத்திரம் போல! இளைஞர்கள் என் கைகளைக் குலுக்கினார்கள். இளம்பெண்கள் என் கன்னத்தில் முத்தமிட்டார்கள். என் மானேஜிங் டைரக்டர், “ல்யூக் போன்ற மனிதர்கள்” என்று ஒரு திடீர் பிரசங்கம் நடத்தினார். நான் ஒரு வருடம் கழித்துத் திரும்பி வந்து மீண்டும் என் வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்றும், அது கம்பெனியின் கொள்கை என்றும் விளக்கினார். உலகத்திலேயே மிகவும் போரடிக்கக்கூடிய அந்த வேலை நான் திரும்பிவரும்வரை இருக்கக்கூடாது என்று நான் நினைத்துக்கொண்டேன். உண்மையாலுமே ஏதோ அதிசயம் நிகழ்ந்து, என்னை முற்றிலுமாக மாற்றப்போகிறது என நான் நம்பினேன். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம், வாரத்துக்கு ஐந்து நாட்கள், என் தடுக்கறையில் (cubicle) கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து எக்ஸெல் கோப்பின் கட்டங்களை நிரப்பிக்கொண்டிருந்தேன். Click, drag, drop. Click, drag, drop. பாதி நேரம் செய்வதற்கு எந்த வேலையும் இருக்காது. என் கம்ப்யூட்டரின் வெற்றுத்திரையை முறைத்துப் பார்த்து வேலை செய்வது போல நடித்துக்கொண்டிருப்பேன். ஆனால் இணையத்தில் நுழைந்து, கலவிக்காட்சிகளைப் (porn) பார்த்தால் நன்றாக இருக்குமே என உள்ளூர ஏங்கிக்கொண்டிருப்பேன். Click, drag, drop. நீங்கள் ஒரு இளநிலைப் பட்டதாரியாக இருந்தால் இப்படித்தான் ஆகும்.

ஆனால் என் வழியனுப்பு விழாவின்போது கைதட்டல்களில் நான் நனைந்துகொண்டிருந்தேன். என் மானேஜிங் டைரக்டருக்கு, அவர் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் நன்றி சொன்னேன். விழாவில் கலந்துகொண்டதற்காக எல்லாருக்கும் நன்றி சொன்னேன். அவர்கள் என்னைச் சுற்றிநின்று புன்னகை பூத்த முகத்துடன், நான் ஏதோ ஆழமானதொரு உரையாற்றுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். முந்நூறு பேர் என் லிப்ஸ்டிக் நிறைந்த முகத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பின் வரிசையிலிருந்து யாரோ ஒருவன், “அந்த நாய்களை எனக்காகச் சுட்டுக்கொல் ல்யூக்!” என்று கத்தினான். அதனால் எல்லோரும் இறுக்கம் தளர்ந்து சிரிக்கத் தொடங்கினார்கள். அதன்பிறகு எல்லோரும் காசு போட்டு வாங்கிய பெரிய சிகப்பு-வெள்ளை-ஊதா நிறக் கேக்கை வெட்டி சாப்பிடத்தொடங்கினோம்.

அந்த மலையை ஏறத் தொடங்கிய தருணம் வரை தவறான காரணங்களுக்காக நான் அங்கே வந்து சேர்ந்திருக்கிறேன் என்பதை நான் உணரவேயில்லை. அக்காரணங்களில் தற்பெருமையையும், சுய மயக்கமும் முதலிடம் வகித்தன. நேர்மையாகச் சொல்லவேண்டுமென்றால் – பெண்களும் ஒரு காரணம். வேறு மாதிரியாகச் சொல்லவேண்டுமென்றால், மதிப்பீடுகள் கடைசியிடங்களை வகித்தன. மலை உச்சியை நெருங்க நெருங்க, மலையின் அந்தப்பக்கம் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்காமலிருக்க, இந்த அத்தனை காரணங்களையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தேன்.

மலை உச்சிக்குச் சென்று (சர்ஜெண்ட் எங்கள் பின்னால் நின்றபடி இருந்தபோது), பள்ளிச்சிறுவர்களைப் போல நடுங்கிக்கொண்டே, தலையைக் குனிந்துகொண்டு, அரைக்கண் மூடி, அந்தப்பக்கம் என்ன இருக்கிறது என்று பார்த்தபோதுதான் எங்களுக்கு அந்த உண்மை தெரிந்தது. அந்தப்பக்கம் யாருமே இல்லை. ஒரே ஒரு ஆத்மா கூட இல்லை. வெற்று வெளிதான் இருந்தது. கிட்டத்தட்ட அகன்று விரிந்த புல்வெளி (prairie) அது. அதன் ஒரு எல்லையாக ஒரு ஏரி இருந்தது. ஏரிக்கு அந்தப்பக்கம் மேலும் புல்வெளி. அது எங்கள் சர்ஜெண்ட் உட்பட எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் இப்போது தைரியமாக முன்சென்று எங்களை அந்த ஆளற்றப் பெருவெளிக்கு வழிநடத்திச் சென்றார்.

முதல்நாள் அந்தப் பகுதி முழுதும் தேடிப்பார்த்து ஒன்றும் கிடைக்காமல் திரும்பினோம். அடுத்தநாள் இருபத்திஐந்து பேர் சென்று வெறுங்கையோடு திரும்பினோம். அதற்குப்பின் பதினைந்து பேர், பத்து பேர்… கடைசியில் அந்த வேலையே நேரம் மற்றும் சக்தி விரயம், அந்த சுற்றுப்பக்கத்திலேயே எதிரி இருக்கவில்லை என்ற ஞானம் உதித்தது. அதற்குப்பின் தினமும் ஒரே ஒருவன் அந்த கானகப்பாதையில் நடந்து, பாலத்தைக் கடந்து, மலையேறி அங்கே விசேஷமாக ஒன்றுமில்லை என்பதை உறுதி செய்துவந்தால் போதும் என்று முடிவானது.

அதைத்தான் நான் அன்று செய்துகொண்டிருந்தேன். மலையுச்சியை அடைந்தபோது மணி ஆறே முக்கால் ஆகியிருந்தது. ஆனால் வெப்பம் அப்போதும் எண்பத்தி ஐந்து டிகிரியாகவே இருந்தது.

—oooOOOooo—

அங்கே ஒன்றுமில்லை என்று உறுதியானபின் தாங்கமுடியாமல் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. என்ன செய்தாலும் தீராத அலுப்பு. சாப்பிடுவோம், குளிப்போம், சுத்தம் செய்வோம், பயிற்சி செய்வோம். இதே வரிசையில் தினமும் செய்வோம். சில நாட்கள் கழித்து பயிற்சி செய்வதை நிறுத்தினோம். ஏனென்றால் அதற்கு எந்தத் தேவையுமிருக்கவில்லை. ஐந்தாம் மாதம் இப்படி இருந்தது.

ஆறாம் மாதத்தில் தினமும் நான் சினிமா தியேட்டருக்கு செல்லத் தொடங்கினேன். ஆனால், சப்ளையில் ஏதோ தட்டுப்பாடு ஏற்பட்டதால், அந்தத் தியேட்டரில் இரண்டே இரண்டு படங்கள்தான் ஓடின. இரண்டுமே இண்டியானா ஜோன்ஸ். ஒன்று ஸ்பானிஷ் மொழியில். அப்படத்தை நான் திரும்பத் திரும்பப் பார்த்தேன். ஸ்பானிஷ் மொழியில் கூட. ஆனால் ஒரு கட்டத்தில் அதையும் நிறுத்தினேன். ஒரு சிலர் சர்ஜெண்ட்டிடம் வேறு படங்கள் வருமா என்று கேட்டபோது, அவர், “ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நம் ஆட்கள் செத்துக்கொண்டிருக்கும்போது, இங்கே நீங்கள் திரைப்படங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே?” என்று கேட்டார். அவர் கேள்வியில் ஒரு நியாயம் இருந்தது.

நாட்கள் மெதுவாக நகரத் தொடங்கின. வனப்பாக உடல் மாறுவதற்கு பதிலாக, நான் குண்டாகத் தொடங்கினேன். என் மனநிலையைப் பற்றியும் யோசித்துப் பார்த்தால், அந்த ஒரு வருடம் கழித்து என் சுற்றுலாவின் முடிவில் எனக்கு ஒரு வயது கூடியிருந்தது அவ்வளவே! வேறு எந்த மாற்றமும் இல்லை. நான் ராணுவத்திலிருந்து வெளியேறப்போகிறேன். ஆனால் சேர்வதற்கு முன்பு எப்படியிருந்தேனோ, அப்படியேதான் வெளியே போகப்போகிறேன். என்னுடைய அதே சிறிய தடுக்கறைக்கு, என்னுடைய எக்ஸெல் கோப்புகளுக்குத் திரும்பிச் செல்லப்போகிறேன். இரவுகளில், சாகசக்காட்சிக் கனவுகளில் திளைத்துக்கொண்டிருந்தேன். அக்கனவுகள் இண்டியானா ஜோன்ஸ் திரைப்படம் போலில்லாமல் செறிவான வண்ணங்களில் படம்பிடிக்கப்பட்டிருந்தன. அவற்றில் நான் எதிரியை நேருக்கு நேராய் சந்தித்துக்கொண்டிருந்தேன். ஆனால் விடிந்தபோது ஏமாற்றத்தோடு எழுந்து, சாப்பிட்டு, குளித்து, உறங்கும் அறையை சுத்தம் செய்து, பந்தெறியப் போனேன். என் பந்து வீசும் திறன் முன்னேறியிருந்தது.

என்னைப் பற்றிக் கவலைப்படுவதாகவும், என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவதாகவும், நான் நன்றாக இருக்கிறேனா என்று விசாரித்தும் பெக்கி மெயில் அனுப்புவாள். ஆனால் அவள் மெயில்களில் எண்பது சதம் சாயமிடப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும். கொஞ்சநாள் அவள் கவலையைத் தூண்டிவிடும் விதத்தில், “நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்,” என்பது போன்று குழப்பமாக பதில்கள் அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனால் விரைவிலேயே அவள் அக்கறை என்னை முட்டாளைப் போல் உணர வைக்கத் தொடங்கிவிட்டது. இண்டர்நெட் மையத்துக்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டேன். அப்படியே போனாலும் என் பதினைந்து நிமிடத்தை கலவிக்காட்சிகள் பார்ப்பதில் செலவழித்தேன்.

போர் என்பதைப் பொருத்தவரையில் எங்களால் செய்யமுடிந்ததெல்லாம், எங்கள் தலைக்கு மேல் பறந்து சென்று எதிரி நாட்டின் மறுபுறம் குண்டு வீசிவிட்டு வரும் எங்கள் நாட்டு விமானங்களைக் கீழிருந்து கத்தி உற்சாகப்படுத்துவதுதான். அவை எப்போதும் மதிய நேரத்தில் இடிமுழக்கத்தைப் போல் வானில் உதிக்கும். கிட்டத்தட்ட இரண்டு டஜன் விமானங்கள் இருக்கும். அடிவயிறு வெள்ளியும், சிகப்புமாக இருக்கும். நாங்கள் ஐம்பது பேரும் ஏதோ ஆளில்லாத் தீவில் மாட்டிக்கொண்டது போல கீழிருந்து உரக்கக் கத்தியபடி எகிறிக் குதிப்போம். பைலட்டுகள் எங்களைப் பார்த்து சைகை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். மாலை நேரத்தில் அவை மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கு, எடை குறைந்துவிட்டதால் வேகமாகப் பறந்து செல்லும்.

ஒரு நாள் எங்கள் சர்ஜெண்ட் கேட்டார்: “எதற்காக அந்த விமானங்களைப் பார்த்து கையாட்டுகிறீர்கள்? அவற்றில் யாரும் இல்லை. அவை ரிமோட்டால் இயக்கப்படும் தானியங்கி விமானங்கள்.”

—oooOOOooo—

நான் மலையுச்சிக்கு வந்துவிட்டேன். என் துப்பாக்கியின் கடிகாரத்தின்படி மணி ஏழு பன்னிரண்டு ஆகியிருந்தது. அந்தி சாயத் தொடங்கியிருந்தது. நான் அந்த மாபெரும் வெற்று வெளியைப் பார்வையிட்டேன். எனக்குப் பயிற்சியளித்திருந்தபடி வடக்கிலிருந்து தெற்காகப் பார்த்தேன். பிறகு கிழக்கிலிருந்து மேற்காக. தண்ணீர், புல்வெளி, சூன்யம்.

அவ்வப்போது கேட்ட பூச்சிகளின் சப்தம் தவிர மலையுச்சியில் பேரமைதி நிலவியது. எப்போதும் இருப்பதுதான். ஆனால் இன்று ஏனோ அதீதமான அமைதியோடு இருப்பதுபோல் தோன்றியது. எனக்கு திடீரென்று பிரிவாற்றாமை வந்தது: கடைசி முறையாக நான் இங்கே இப்படி நிற்கிறேன். சிறைக்கைதிகள் விடுதலையடையும் நாள் தங்கள் சிறையை நினைத்து ஏங்குவதற்கு ஒப்பானது அது.

என் தோள்பையை அவிழ்த்து, அமெரிக்கக் கொடி பொறித்த ப்ளாஸ்டிக் பையில் கொடுக்கப்பட்டிருந்த என் உணவை சாப்பிடத் தொடங்கினேன். அது இரவுணவு வேளை. ஆனால் என் மதிய உணவையே நான் இன்னும் சாப்பிட்டிருக்கவில்லை. இன்று ஹாம் பன்றிக்கறி, சீஸ், ஆப்பிள் மற்றும் பிஸ்கட். நேற்று வான்கோழி, சீஸ், ஆப்பிள் மற்றும் பிஸ்கட். நாளை என் மதிய உணவை நானே தயாரித்துக் கொள்வேன். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, என் தடுப்பறையில் எக்ஸெல் கோப்புகளைப் பார்த்தபடி என் அலுவலகத்தில் அமர்ந்திருப்பேன். ஒரு பாறை மீது அமர்ந்து என் சாண்ட்விச்சை சாப்பிடத் தொடங்கினேன். பூச்சிகள் ரீங்கரித்தன. ராணுவ உணவை இழக்கப்போவதை நினைத்தும் வருந்த ஆரம்பித்தேன்.

அப்போதுதான் அவனை நான் பார்த்தேன். முதலில் நான் பார்ப்பது என்னவென்பது எனக்கே விளங்கவில்லை. உண்மையில், அது ஒரு விலங்கு என்றே முதலில் நினைத்தேன். என்னால் உணர முடிந்ததெல்லாம் புல்வெளியின் சிறு அசைவுதான். அதுவும் ஒரு மைலுக்கு அப்பால், புற்களின் அசைவு. அது வெறும் காற்றின் அசைவு என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் பார்த்துக்கொண்டேயிருந்தபோது, ஒரு மனிதத்தலை புற்களின் மீது தெரிவதைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. சாண்ட்விச்சைக் கீழே வைத்துவிட்டு தோள்ப்பையை எடுத்துக் கொண்டேன். என் பைனாகுலரை வெளியே எடுத்தபோது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. ஆடாமல் சரியாகப் பார்ப்பதற்காக என் முழங்கைகளை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. நிச்சயமாக அங்கே ஒரு மனிதன் இருந்தான். உயரமான, வழுக்கையான, குண்டான மனிதன். ஐம்பது வயதுடையவனாகவோ, அதற்குக் குறைவாகவோ இருக்கலாம் அந்த மனிதன்: அந்த எதிரி.

அவன் வெள்ளாட்டோடோ, செம்மறியாட்டோடோ நடந்து கொண்டிருந்தான். ஆனால் அந்தப் புற்களின் மறைப்பில் அது என்னவென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. அவன் ஒளிந்து மறைந்து நடந்துகொண்டிருக்கிறான் என்று நினைத்தேன். ஆனால் புற்கள் விலகியபோது, அவன் பதுங்கியிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏதோ மதிய நடை போவது போல சாதாரணமாக நடந்துகொண்டிருந்தான். அவனுடைய அசட்டையான மனோபாவம் எனக்கு எரிச்சலளித்தது. என் அலுப்புக்கு சவால் விடுவது போலிருந்தது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான் செய்தது எல்லாமே, இந்த மனிதனுடைய இருப்பையோ, இல்லாமையையோதான் சார்ந்திருந்தது. ஆனால் அவனோ நான் உட்கார்ந்திருக்கும் இந்த மலைக்குப் பின் என்ன இருக்கிறது என்பதையே பொருட்படுத்தாதது போலிருந்தான். நாங்கள் ஒரு பாலம் கட்டியிருக்கிறோம் என்பது கூட அவனுக்குத் தெரியாது.

அவன் அந்த ஏரியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். ஒருவேளை தன் ஆட்டுக்கு நீர் கொடுப்பதற்காகச் சென்று கொண்டிருக்கலாம். என் பைனாகுலர் வழியாக அவனை உற்று கவனித்துக்கொண்டிருந்தேன். அப்படி அவனைப் பார்ப்பது எனக்கு அவன் அந்தரங்கத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. அது கொஞ்சம் ஆபாசமாகவும் பட்டது. பல வருடங்களுக்கு முன்னால், என் வீட்டின் தாழ்வாரத்திலிருந்த ஜன்னலிலிருந்து பக்கத்துவீட்டு படுக்கையறையின் ஜன்னல் தெரிவதைத் தற்செயலாகக் கண்டறிந்தேன். அப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம். ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கமுடியுமளவுக்கு மட்டுமே உயரமாகியிருந்தேன். அந்தப் படுக்கையறை ஒரு பெண்ணுடையது. ஆனால் ஏமாற்றமளிக்குமளவுக்கு அவள் சாதாரணமாக இருந்தாள். நீண்ட பழுப்பு நிறத் தலைமுடியுடைவளாக இருந்தாள். எதையும் வெளிக்காட்டாத சாக்குத்துணியைப் போன்ற பைஜாமா அணிந்திருந்தாள். எப்போதும் படுக்கையில் படுத்துக்கொண்டு ஏதாவது படித்துக்கொண்டேயிருந்தாள். பல மணி நேரங்கள் அப்படிப் படித்துக்கொண்டிருந்தாள். நான் பல மணி நேரம் அப்படி நின்று அவளைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன். எனக்குக் கிளர்ச்சியூட்டும் வகையில், ஆடைகளைக் களைந்து, சுயமைதுனம் செய்யமாட்டாளா என்ற நப்பாசையில் நின்றுகொண்டிருப்பேன். ஆனால் அவள் படித்துக்கொண்டேயிருந்தாள் – நான் பார்த்துக்கொண்டேயிருந்தேன். பத்துமணி வாக்கில் அவள் புத்தகத்தை வைத்துவிட்டு, விளக்கணைத்துவிட்டு தூங்கிவிடுவாள். நான் வீட்டுக்குள் திரும்பவருவேன். என் அப்பா என்னைப் பார்த்துவிட்டு இரண்டு மூன்று மணி நேரமாகத் தாழ்வாரத்தில் என்ன செய்துகொண்டிருந்தாய் என்று கேட்பார்.

“ஒன்றும் செய்யவில்லை அப்பா” என்பேன் நான். அது உண்மைதான். நான் எதுவுமே செய்யவில்லை.

—oooOOOooo—

அந்த மலைமுகட்டில் நின்று கொண்டிருந்த நான் ஒன்று செய்தேன். என் துப்பாக்கியை எடுத்து, பாதுகாப்பு விசையை விடுவித்தேன். நான் துப்பாக்கியைக் கையாண்டு சில நாட்கள் ஆகியிருந்தன. அது விசித்திரமான பளுவுடைய, கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகத் தெரிந்தது. ஏதோ மனிதர்கள் இறங்கும் திறப்புக்கான (manhole) மூடியை வெறும் கைகளால் தூக்க முற்படுவதைப் போல இருந்தது. துப்பாக்கியின் கண்ணாடி வழியே பார்க்க முற்பட்டபோது அது பெரும்பளுவோடு என் தோளில் அழுந்தியது. அவன் ஏரியின் கரையில் நின்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தான். ஒரு கையை இடுப்பில் வைத்து, இலேசாகப் பின்புறம் சாய்ந்து, சுகானுபவத்தில் திளைத்துக்கொண்டிருந்தான். அவன் முகம், பல வருடங்களுக்கு முன்னால் என் அப்பா மரத்தில் வரைந்த எதிரியின் முகத்திலிருந்து அதிகம் வேறுபட்டிருக்கவில்லை. துப்பாக்கியின் குறிமானி (crosshairs) வழியாக நான் அவனைப் பார்த்தேன். அவன் 1.1 மைல் தொலைவில் இருந்தான். ஐந்தடி பத்தங்குல உயரம். குறியை உதறி உள்ளே போட்டுக்கொண்டான். ஏரியின் கரையோரம் நிதானமாக நடந்து புல்வெளியை நோக்கி நடக்கத் தொடங்கினான். அதற்குள் 1.2 மைல் தள்ளிப்போயிருந்தான். வெற்றுவெளியை நோக்கித் திரும்பி ஆளுயர புற்களுக்குள் அவன் நுழைந்து என் பார்வையிலிருந்து எப்போதுமாக மறையப்போன அந்த கணத்தில் விசைக்கு அருகில் என் விரலைக் கொண்டுவந்தேன். ப்பூஃப். இலேசாக அதிர்ந்து அடங்கியது துப்பாக்கி.

அவன் தடுமாறி, தலைகுப்புறக் கீழே விழுந்தான். அவன் ஏதோ கால் இடறி கீழே விழுந்தான் என நான் நினைக்குமளவுக்கு அது அவ்வளவு சீக்கிரம் நடந்துவிட்டது. அவன் கீழே விழுந்ததற்கு நான் காரணமல்ல என நான் நினைத்துக் கொண்டிருந்தபோதே, அவனைச் சுற்றி ஒரு ரத்தக்குளம் உருவாகத் தொடங்கியது.

அவனுக்கு அருகில் செம்மறியாடோ, வெள்ளாடோ என நான் நினைத்துக்கொண்டிருந்தது, செம்மறியாடோ, வெள்ளாடோ அல்ல. அது ஒரு சிறுவன். அவன் பயந்துபோய் சுற்றிச்சுற்றி ஓடத் தொடங்கினான். குறிமானி வழியாக அவனைப் பார்த்தேன். அவன் கால்களாலேயே நிலத்தில் ஓட்டை போட்டுவிடக்கூடும் என்னும் அளவுக்கு அவன் பயந்து வட்டமாக ஓடிக்கொண்டிருந்தான். அவன் புல்வெளிக்குள் ஓடி மறைந்தான். ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் வந்து கீழே விழுந்துகிடந்த மனிதனின் கையைப் பிடித்து இழுக்கத் தொடங்கினான். ஆனால் அவனால் இழுக்கமுடியவில்லை. ஒரு கணம், நான் கீழே ஓடிப்போய் அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யலாம் என்று கூட நினைத்தேன். அதற்குப்பின் பெக்கிக்கு மெயில் எழுதுவேன்: “அன்புள்ள பெக்கி, நான் இன்று ஓர் உள்ளூர் சிறுவனுக்கு உதவி செய்தேன்.”

ப்பூஃப்.

அந்தச் சிறுவன் நின்ற இடத்திலேயே திடப்பொருளொன்று ரத்தமாக உருகி வழிவதைப் போல பொத்தென்று அப்படியே விழுந்தான். கீழே விழுந்தபிறகு அவன் அசையவில்லை. ஆனால் அந்த மனிதன்தான் இப்போது அசையத் தொடங்கியிருந்தான். எழுந்து நிற்பதற்கு வெகுவாக முயற்சித்தான். ஆனால் அதற்கான வலு இல்லை என்று நன்றாகத் தெரிந்தது. சற்றுநேரத்தில் தூங்குவதைப் போல அவன் அசைவற்றுத் தரையில் கிடந்தான். ரத்தக்குளம் பெருகி வழிந்து ஆளுயரப் புல்வெளியை நோக்கி ஓடியது.

நான் அங்கே சற்று நேரம் நின்றுகொண்டிருந்தேன். இருட்டத் தொடங்கியிருந்தது. நேரம் ஏழு ஐம்பத்தி மூன்றாகிவிட்டிருந்தது. என் சொந்த ஊரில் இப்போது மணி ஏழு ஐம்பத்தி மூன்று. சில நிமிடங்களுக்குப் பிறகு புல்வெளி அடர் இருளில் மூழ்க ஆரம்பித்தது. என் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. பூச்சிகளின் சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

நான் திரும்பி கடைசி முறையாக மலையிறங்கத் தொடங்கினேன். பாலத்தைக் கடந்து, கானகப் பாதையில் நடந்தேன். என் தோள்பையும், துப்பாக்கியும் மரச்சுவரில் இடித்தபடியே வந்தன. இப்போது கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. அந்த இருளில் என் அப்பா கேட்டது திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தது: “என்ன செய்துகொண்டிருந்தாய் ல்யூக்? இரண்டு மூன்று மணி நேரமாய் அங்கே என்ன செய்துகொண்டிருந்தாய்?”

ஒன்றும் செய்யவில்லை. நான் எதுவும் செய்யவில்லை.

அடுத்தநாள் சர்வ சவுகரியமாக விமானத்தில் வீட்டுக்குப் பறந்து வந்து சேர்ந்தேன்.