நாம் நம்மைப் பலரென்றுணர்ந்த அந்த எதிர்பாரா தருணம்

நடாலியா க்ள்யூஷரேவா 

தமிழாக்கம்: நந்தின் அரங்கன்

எங்கள் கிண்டர்கார்டனின் தாழ்வாரக் கூரையைத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னர் செப்பனிட்டனர். குழந்தைகள் மேலுள்ள அக்கறையால் அல்ல. உண்மைக் காரணம் மிக எளிமையானது: இந்த கிண்டர்கார்டன் தேர்தல் நிலையமாகவும் இயங்குகிறது. இந்த உண்மையைப் போல், நம்மை ஆள்வோரின் தர்க்கமும் மிக எளிமையானது: வாக்களிக்கும்போது கூரை ஒழுகிக் கொண்டிருந்ததென்றால் வாக்காளர்கள் கோபப்படுவார்கள், அவர்கள் தவறானவர்களுக்கு வாக்களிக்ககூடும்.நம் ஆட்சியாளர்களின் நம்பிக்கையைப் புரிந்து கொள்ள, தொடர்ந்து பல்லாண்டுகளாகத் தங்கள் குழந்தைகளின் தலைகளில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்ததை வாக்காளர்கள் கவனிக்கத் தவறி விட்டனர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் கூரை தேர்தலுக்கு சில நாட்கள் முன்னர்தான் சரி செய்யப்படுகின்றது. வாக்காளர்கள் ஒழுகும் கூரைக்கும் உண்டு கொழுத்த அரசியல்வாதிகளின் தோற்றத்துக்கும் தொடர்பு காண மாட்டார்கள் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் நான்காண்டுகளுக்கு ஒரு முறைதான் மூளையைப் பயன்படுத்தி செயல்படுத்துவதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்- அதாவது, வாக்களிக்க அவர்கள் தேர்தல் நிலையத்துக்குச் செல்லும்போது மட்டுமே சிந்திக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

Kljutscharjowa_Nataljaசுருக்கமாகச் சொன்னால் டூமா, நம் பாராளுமன்றம், இப்படித்தான் நடந்து கொள்கிறது : திமிர்த்தனமாக, தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற முழு நம்பிக்கையுடன், மக்களை ஏளனமானவர்களாக நினைத்துக் கொண்டு. இப்படிப்பட்ட ஒரு அரசை சகித்துக் கொள்ளும் மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே. ஆனால் என்னைக் கேட்டால் ‘சகித்துக் கொள்ளுதல்’ என்று சொல்வதுகூட இங்கு முழுக்க முழுக்க பொருத்தமானதல்ல என்று சொல்வேன். சகித்துக் கொள்கிறார்கள் என்று சொன்னால் இந்த நிலைமை எவ்வளவு கேவலமானது என்பது தெரிந்திருக்கிறதென்று சொல்வதாகும். ஆனால், நாம் இந்த நிலைமைக்கு நன்றாகப் பழக்கப்பட்டு விட்டோம். இப்போதெல்லாம் அதன் சிறுமையைக் காண்பதே இல்லை. நம் சிறு கோடைக் காலமும் வேனிலின் ஈரப் பாதைகளும் ரஷ்ய வாழ்க்கையில் நிரந்தர நிலைபெற்றுவிட்டது போல் நேர்மையற்ற அரசும் நிரந்தரமாகி விட்டது. ஒரு மீமாநகர மக்கள் தாங்கள் சுவாசிக்கும் காற்றின் நச்சுத்தன்மையை மறந்திருப்பதைப் போல.

ரஷ்யாவில் அரசியல் சுதந்திரம் என்றும் இருந்ததே இல்லை. அதனால்தான் விமரிசிக்கத் தெரிந்தவர்களும்கூட சமுதாயத்தை ஒருமித்த ஒன்றாகச் சிந்திக்கத் தங்களை இதுவரை பழக்கப் படுத்திக் கொள்ளவில்லை. உண்மையாகவே அவர்களில் பலருக்கு கிண்டர்கார்டனின் ஒழுகும் கூரைக்கும் டூமா தேர்தல்களுக்கும் எந்தத் தொடர்பையும் காண முடிவதில்லை. அரசியல் ஒன்று, வாழ்க்கை வேறொன்று. ரஷ்ய சமூகம், அதிலும் குறிப்பாக என் தலைமுறை, கொஞ்சமும் அரசியல் அறிவற்ற ஒன்று. இங்கு அரசுக்குக் கட்டற்ற சுதந்திரம் இருக்கிறது. எங்களுக்கு நல்லாட்சி குறித்த அக்கறையில்லை என்பதைவிட அரசுக்கு வேறென்ன வேண்டும்?

ஆனால் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு இரண்டுக்கும் உள்ள தொடர்பு தெரிந்திருக்கிறது. ஆனால் இவர்கள் இதில் சிக்கிக் கொள்வதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, கிராம அமைப்பு முதல் மத்திய குழுக்கள் வரை ரஷ்யாவின் அரசியல் அமைப்பே பொய்களால் கட்டமைக்கப்பட்ட ஒன்று. பொது நலமல்ல, தனியாருக்கு லாபத்தைத் தேடித் தரும் ஒன்று. இது திருடி வாழும் அமைப்பு. அரசியலில் இறங்கும் நேர்மையான நபர்களும் ஓரளவுக்காவது இந்த விளையாட்டில் பங்கேற்றாக வேண்டும். மறுத்தால், நேர்மையற்ற சகாக்கள் அவர்களை விழுங்கி விடுவார்கள். அதனால்தான் நேர்மையானவர்கள் அரசியலை விட்டு விலகிச் செல்கிறார்கள். குடிமைச் சமூகத்தின் வேறு வகைகளில் பங்கேற்கிறார்கள். அண்மைக்காலமாக பெருவாரி ஆதரவைப் பெற்றுவரும் தன்னார்வ இயக்கங்களில் இணைந்து கொள்கிறார்கள்.

இரண்டாவதாக, ரஷ்யாவில் அரசியல் சுதந்திரமோ, தனிநபர் சுதந்திரமோ வெகு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு சர்வாதிகார அரசு, இருபதாம் நூற்றாண்டு முழுவதுமே வாழ்க்கை முழுவதையும் கட்டுக்குள் வைத்திருக்க விருப்பப்பட்ட ஒன்று, ஆண்டது. இப்போது நிலைமை அப்படியில்லை. அரசு தனிநபர் வாழ்க்கையிலோ அவரது குடும்ப விவகாரங்களிலோ நுழைவதில்லை. அதற்கு மேல் மக்களுக்கு அரசிடமிருந்து எந்த எதிர்பார்ப்புமில்லை. மக்கள் அரசாங்கத் தொல்லையின்றி நிம்மதியாக இருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட கவிதையைப் படித்த குற்றத்துக்காக இனியும் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதில்லை. அவர்கள் விருப்பப்பட்ட ஆடையை அணிந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் விரும்பிய இசையைக் கேட்க அனுமதி இருக்கிறது. உலகில் எங்கும் போய் வரலாம். அரசு குறித்து என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளக்கக்கூட முடிகிறது. இதுவே போதும். இது ஒரு வகை அமைதி உடன்படிக்கை. இருதரப்பினரும் விலகி நிற்பதாக ஒப்புக்கொண்ட உடன்பாடு எங்களைத் தொல்லை செய்யாமல் இருங்கள், நாங்கள் உங்களைத் தொல்லை செய்யாமல் இருக்கிறோம். அரசியலில் நுழையாமல் இருப்பதற்குப் பரிசாக விருப்பப்பட்ட வாழ்க்கை வாழும் உரிமை. சிலபல காலமாக இது இரு தரப்பினருக்கும் போதுமானதாக இருந்து வந்திருக்கிறது.

இந்த உடன்படிக்கையை மீறத் துணிபவர்கள்மேலும், சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைப்பவர்கள் மீதும், சமநிலையைக் குலைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு கொஞ்சமும் தாமதிப்பதில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் மீது தாக்குதல்கள், விசாரிக்க முயற்சி செய்யும் நிருபர்களின் மரணங்கள், ஆர்ப்பாட்டங்களின் மீது இரக்கமற்ற நடவடிக்கை – சமூக ஊடகங்கள், பொது வெளிகளில் பாதுகாப்பு சோதனைகள்- இவை போல் இந்த அரசு அடக்குமுறைகளும் சமகால நோய்க்குறிகளாக இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ரஷ்யாவில் உங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வது கடினம் என்பது மட்டுமல்ல, அது ஆபத்தான விஷயமாகவும் இருக்கிறது. தங்கள் வாழ்வைப் பணயம் வைக்கவில்லை என்பதற்காக நீங்கள் யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லாரும் அதிநாயகர்களாகவோ போராளிகளாகவோ இருக்க முடியாது.

மேலும், அரசியல் ஆதரவு பெற்ற எதிர்கட்சி என்று எதுவும் ரஷ்யாவில் கிடையாது. நான் மெய்யாகவே வாக்களிக்க விரும்பும் எதிர்கட்சித் தலைவர் என்று யாரும் இல்லை. நான் இந்தக் கட்சியைச் சேர்ந்தவள் என்று சங்கடமில்லாமல் சொல்லிக் கொள்ளக்கூடிய கட்சி ஒன்றுகூட இல்லை. வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், எதிர்கட்சியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பைத்தியக்காரர்கள், அதிசயப் பிறவிகள், உண்மை தெரியாத வாய்ப்பேச்சு வீரர்களாக இருக்கின்றனர்.

நிலத்தடி கார் நிறுத்துமிடம் ஒன்றை அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது மக்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். ரஷ்யாவெங்கும் இப்படித்தான் இருக்கிறது. போராட்டங்கள், கண்டனக் கடிதங்கள், உண்ணாவிரதங்கள் என்று கசப்பான எதிர்ப்பு இருந்தது. ஒரு வழியாக ஆளுநர் பொதுமக்களைச் சந்திக்கவும் அவர்களுடன் பேசவும் தான் தயார் என்று அறிவித்தார். முதல் போராட்டக்காரர் எழுந்து நின்று பேசினார். அவர் பிராந்திய வரலாற்று அறிஞர். அடிப்படையில் அவர் சொன்னது, “அந்தக் காலத்தில் இங்கே நிலத்தடி லாயங்கள் இருந்திருக்கவேயில்லை” என்ற சங்கதிதான். இப்போது மட்டும் ஏன் நிலத்தடி கார் நிறுத்துமிடம் அவசியப்படுகிறது என்று கேட்டார். அடுத்தது ஒரு நூலகப் பணியாளர் பேசினார். “நிலத்தடி கார் நிறுத்துமிடங்களைச் சுற்றி தீவினை வட்டம் உள்ளது, ஒரு எதிர்மறை சக்தி” அதற்குண்டு என்றார் அவர். அந்த பிராந்தியத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒரே தலைவர் இந்த ஆளுநர். மிகக் கண்ணியமாக அவர் இந்த இருவரையும் பேச அனுமதித்தார். அதன்பின் வேறு யாரேனும் எதுவேனும் சொல்ல விரும்புகிறார்களா என்று கேட்டார் அவர். இல்லை, யாருக்கும் எதுவும் சொல்வதற்கில்லை. கார் நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதற்கு இன்னொரு காரணமிருக்கிறது. அது மிகவும் சோகமான விஷயம். ரஷ்யர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த அரசு திருப்தியளிப்பதாக உள்ளது. ஏனெனில், இந்தப் பெரும்பான்மையினரைப் போன்றவர்களே ஆட்சியாளர்களாக இருக்கின்றனர். எந்தவிதத்திலும் உயர்ந்தோ குறைந்தோ போய் விடவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்கு இருக்கிற அதே தீக்குணங்கள்தான் உள்ளன. அவை புரிந்து கொள்ளப்படக் கூடியவை. மன்னிக்கப்படக் கூடியவை. அரசியல்வாதிகள் திருடுகிறார்கள், சாமானியர்களும்தான் திருடுகிறார்கள் – ஏதோ அவர்களுக்குக் கிடைத்த சிறிய அளவில். ஜனாதிபதி மகா மட்டமாக நடந்து கொள்கிறார், சராசரி குடிமகனும் அப்படித்தான் இருக்கிறான். தொலைக்காட்சிப் பெட்டியில் வேண்டுமானால் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று சொல்லலாம், ஆனால் தங்கள் வீடுகளில் மக்கள் மட்டமானவர்களாகத்தான் இருக்கிறார்கள். அப்படியானால் இந்த ஆண்டு டிசம்பர் பத்தாம் தேதி என்னதான் நடந்தது? எதுவாவது மாறியதா அல்லது எல்லாம் ஒரு பிரமைதானா? திடீரென்று அரசியல் விழிப்பு பெற்ற ஒரு நூறாயிரம் மக்கள் எங்கிருந்து கிளம்பி வந்தார்கள்? எதிர்க்கட்சிகளே தங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அதிக பட்சம் நூற்றுச் சொச்சம் பேரைதானே கூட்ட முடிந்திருக்கிறது?

அந்த சனிக்கிழமையன்று போலோட்நயா சதுக்கத்தில் என் நண்பர்கள் அனைவரும் இருந்தனர். அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை என்று நான் நினைத்திருந்தவர்கள் கூட அங்கு வந்திருந்தனர். அவர்கள் ஒரு போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று நான் நினைத்தே பார்த்திருக்க முடியாது. திடீரென்று அவர்கள் அனைவருக்கும் ஏதோ நேர்ந்திருக்கிறது. திடீரென்று விலகியிருப்பது தவிர்க்க முடியாத காரியமாக ஆகி விட்டிருக்கிறது. ஆனால் அப்படி என்னதான் நடந்தது என்று யாராவது கேட்டால் “போதும் போதும் என்றாகி விட்டது” என்றோ, “அவர்களுக்குத் தெரிந்தாக வேண்டும்” என்றோ ஒரு தெளிவில்லாத பதில்தான் கிடைக்கும்.

அது ஆகச்சிறந்த ஒரு தன்னிச்சை இயக்கம். “ரஷ்யாவில் குடிமைச் சமூகம் பிறந்தமைக்கு எங்கள் வாழ்த்துகள்” என்று ஜெர்மன நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதினர். ஆனால் இது முழுக்க முழுக்க உண்மையல்ல. குடிமைச் சமூகத்தை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாது. எல்லாம் அதற்கு பல நாட்கள் முன்பே துவங்கியிருக்கின்றன. தங்களைச் சுற்றி துயர் கவிந்த மக்கள் இருப்பதை கவனித்து, அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்று இருக்காமல், அவர்களுக்கு உதவி செய்யத் துவங்கியபோதே குடிமைச் சமூகம் பிறந்து விட்டது.

நான் உட்பட, என் சமகாலத்தவர்கள், கடந்த காலத்திலும் போராட்டங்களில் பங்கேற்றுள்ளோம், கண்டனக் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். ஆனால் எதுவும் எதையும் மாற்றிவிட முடியாது என்பதை விரைவில் உணர்ந்து விட்டோம். யாரும் எங்களால் எந்த உதவியும் பெறவில்லை என்பது புரிந்து விட்டது. பாதசாரிக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு அவனை இடித்துத் தள்ளிய காரைத் துரத்திக் கொண்டு ஓடுவது போன்ற விஷயமாக அரசை எதிர்த்து நாங்கள் நடத்தும் போராட்டங்கள் இருந்தன. உன்னால் காரையும் பிடிக்க முடியாது, பாதசாரியையும் காப்பாற்ற முடியாது.

ரஷ்யாவில் உள்ள காடுகளில் பெரும்பகுதியில் தீ பரவிக் கொண்டிருந்த சென்ற ஆண்டின் கோடைக் காலத்தில் முதல்முறையாக நாங்கள் பலரென்று அறிந்தோம். அதாவது தனிப்பட்ட பொறுப்புகள் உள்ள மனிதர்களாக எங்களை அறிந்தோம். ஒரு ஆத்திர அவசரத்தில் கூடச் செயல்படக் கூடியவர்கள் என்று எங்களை உணர்ந்தோம். ஆட்சியில் உள்ளவர்கள் போலல்லாமல் விரைவாகவும், துல்லியமாகவும், திறமையாகவும் எங்களால் செயல்பட முடியும் என்றறிந்தோம். தங்கள் கட்சிச் சின்னம் தாங்கிய பேஸ்பால் தொப்பிகளை அணிந்து கொண்டு ஒன்றுபட்ட ரஷ்ய ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்தனர். தீயணைப்புப் படையின் நீரிறைப்பு வாகனங்கள் பயணித்த சாலைகளை அதிபர் புதினின் வருகையை ஒட்டி முடக்கி வைத்து, அவற்றின் நடைபாதைகளுக்கு அரசு அதிகாரிகள் வர்ணம் அடித்து அலங்கரித்தபோது சாமானிய மக்கள் காட்டுத் தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருளுதவி திரட்டி அவற்றை விநியோகம் செய்தனர், தீயணைப்புப் படையினரிடம் இல்லாத கருவிகளை வாங்கப் பணம் சேகரித்துக் கொடுத்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அரசு கவனித்திருக்க வேண்டிய அத்தனை வேலைகளையும் அவர்கள் செய்தனர். இந்த அரசு எந்த உதவியும் செய்யாமலேயே நம்மால் இவ்வளவு நன்றாக செயல்பட முடிகிறதென்றால் அரசுக்கான அவசியம்தான் என்ன என்ற கேள்வியை அவர்கள் கேட்டுக் கொள்ள நேர்ந்தது.

மோசமான அந்தக் கோடைக் காலத்தில் இந்த தேசமெங்கும் கவிந்திருந்த புகை மூட்டத்தினுள் காலம் கழிக்க நேர்ந்த எங்களில் பலர் வெகு விரைவில் வளர்ந்தோம், அரசு உதவி கிடைக்கும் என்ற குழந்தைத்தனமான, சோவியத்திய நம்பிக்கை ஒருவழியாக குணமாயிற்று நாங்கள் எங்களுக்கு உதவி செய்து கொள்ள முடியும் என்று திடீரென உணர்ந்தோம். இது எங்கள் தேசம், இதன் எதிர்காலம் எங்கள் கையில் உள்ளது என்று உணர்ந்தோம். இது உண்மையான அரசியல் மாற்றத்துக்கு வழி செய்யக் கூடிய புரிதலாக மாற மேலும் பல காலம் ஆகும் என்பது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அதற்கான அழைப்பின் முதல் துவக்க மணி ஒலித்து விட்டது- போலோட்நயா சதுக்கத்தில் டிசம்பர் பத்தாம் தேதி ஒலித்துள்ளது அந்த அழைப்பு.

நான் இன்னும் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஒரு வயதான மூதாட்டி, அவளது மகனுக்கு என் வயதிருக்கும், அவள் என் புத்தகங்களைப் படித்துவிட்டு என்னிடம் ஒன்று சொன்னாள். அது என்னை முதலில் திகைப்பில் ஆழ்த்தியது. ஆனால் இப்போது எனக்குப் புரிகிறது. “நீ எழுதியுள்ளதைப் படிக்க நான் வெட்கப்படுகிறேன். நாங்கள் உங்களுக்கு விட்டுச் செல்லும் உலகை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்றார் அவர்.

சென்ற ஆண்டு என் நண்பர்கள் அனைவருக்கும் குழந்தை பிறந்தது. எனக்கும் ஒன்று பிறந்தது. ஒரு தலைமுறையே மனித உரிமை ஆர்வலர்களாக திடீரென்று விழிப்புற்று இயங்க இது இன்னொரு காரணம் என்று நான் நம்புகிறேன். பனி நிலத்தில் ஒரு பொந்தில் வீசப்பட்ட பூனைக் குட்டிகளின் உலகமாக இனியும் எங்கள் உலகம் இருக்கப் போவதில்லை. எங்களைச் சுற்றியுள்ள உலகை நிறைக்கும் அவல உண்மை அப்படிப்பட்ட ஒன்றல்ல. இந்த உலகம் எங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் விட்டுச் செல்லப்போகும் உலகம். இங்கு பல விஷயங்கள் மாற்றம் கண்டாக வேண்டும் என்பதை நாங்கள் மிகத் தீவிரமாக விரும்புகிறோம்.

***      *****     ***

இந்தக் கட்டுரை டி வெல்ட் (Die Welt) என்ற ஜெர்மன் பத்திரிகையின் டிசம்பர் 19, 2011

இதழில் பிரசுரிக்கப்பட்டது.

நடாலியா க்ள்யூஷரேவா (Natalia Klyuchareva)

ரஷ்யாவில் 1981ஆம் ஆண்டு பெர்ம் நகரில் பிறந்தவர். கவிஞர். கட்டுரையாளர். மாஸ்கோவில் வாழ்கிறார். செப்டம்பர் முதல் தேதி என்ற நாளிதழில் பணியாற்றுகிறார். நோவி மீர் என்ற இலக்கிய இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். 2002ஆம் ஆண்டு நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர் என்று அங்கீகரிக்கப்பட்டார். முதல் கவிதைக்கான பரிசுப் பட்டியலின் தேர்வு வரிசையில் அவர் பெயர் இடம் பெற்றது. “வெண் முன்னோடிகள்” என்ற அவரது முதல் கவிதைத் தொகுப்பு 2006ஆம் ஆண்டு வெளிவந்தது. “ரஷ்யா என்னும் ரயில்” என்ற நாவல் நோவி மீரால் பதிப்பிக்கப்பட்டு தேசிய விற்பனைச் சாதனைப் பரிசுக்குத் தேர்வடைந்தது. அது ஒரு புத்தக வடிவில் வெளிவந்து ஐந்து மொழிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி : சைன் அண்ட் சைட் டாட் காம். (http://www.signandsight.com)