சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள்

“ A Short HISTORY of Nearly Everything” என்ற பில் ப்ரைஸன் எழுதிய புத்தகத்திலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகளைப் பற்றிய பகுதிகளை இங்கே படிக்கலாம். மிகையில்லாமல், அதே சமயம் கோர்வையாகவும் விஷயத்தைச் சொல்லும் பில் பிரைஸனின் எழுத்துமுறை நம் தமிழ் அறிவியல் எழுத்தாளர்கள் கவனத்தில் கொண்டு கைக்கொள்ள வேண்டிய ஒன்று.

ஏன் இந்த நுண்ணுயிரிகள் நம்மை அடிக்கடி நமக்கு அவதிக்கு ஆளாக்கி இன்பம் அடைகின்றன? நமக்கு கொடிய காய்ச்சலையும் கொப்புளஙகளையும் கொடுப்பதிலும், சில சமயம் மரணத்திற்கே இட்டுச்செல்வதிலும் அவற்றிற்கு என்ன திருப்தி? இறந்த உடல், நுண்ணுயிர் உட்பட யாருக்குமே பயனில்லாமல் போய் விடுமே? இவை போன்ற கேள்விகள் உஙகள் மனதில் கட்டாயம் எழும்.

9780552997041முதலாவதாக நமக்குத் தெரியவேண்டியது, பெரும்பாலான நுண்ணுயிரிகள் துர்நோக்கம் கொண்டவை அல்ல; நடுநிலை வகிப்பனவும், மனித குலத்துக்கு நன்மை செய்வனவுமே அதிக அளவில் உள்ளன. உலகிலேயே மிகக்கொடிய தொற்றுநோய் பரப்பும் நுண்ணுயிரியான வால்பாச்சியா (walbachia) என்கிற பாக்டீரியம், மனிதர்களையோ, முதுகெலும்புள்ள பிராணிகள் எதனையுமோ, தாக்குவதில்லை. ஆனால் shrimp, புழு, fruitfly வகையறாக்களைப் படாதபாடு படுத்தி விடும். நுண்ணுயிரிகளில் சுமார் ஆயிரத்தில் ஒன்று என்கிற விகிதத்தில்தான் மனிதர்களின் எதிரிகள் (pathogen) இருக்கும் என்று National Geographic பத்திரிக்கை கூறுகிறது. இந்தக் கொஞ்சமே உங்களுக்குத் தரும் உபாதைகளை நினைத்தால் இதுவே போதும் சொல்லிவிடுவீர்கள். நுண்ணுயிரிகள்தான் உலகின் மூன்றாவது கொலைக்காரணிகளாக பவனி வருவதால், ஆளைக்கொல்லாத சாது வகைகளைக் கூட மனிதர்கள் நம்புவதில்லை..

கிருமிகள் தாக்கி நீங்கள் நோயுறும்போது அவற்றிற்கு சில அனுகூலங்கள் கிடைக்கின்றன. நோயின் அறிகுறிகளே பெரும்பாலும் நோய் பரவ உதவுகின்றன. வாந்தி, தும்மல்,வயிற்றுப்போக்கு போன்றவை, ஒரு உடலில் இருந்து கிருமிகள் பிற உடல்களுக்குத் தாவ சுலபமான வழிவகுத்துக் கொடுக்கின்றன. ஊர்வன,பறப்பன மூலம் பரவ முடிந்தால், அது மிக உத்தமம். தொற்றுநோய் கிருமிகளுக்குப் பிடித்தமான வாகனங்கள் கொசுக்கள்; ஏனெனில் கொசுக்கடி மூலம்,கிருமிகள் நேரடியாக பிறர் ரத்தத்தில் கலந்து, கடி வாங்கியவரின் பாதுகாப்பு மெக்கானிசம் விழித்துக் கொள்ளும் முன்பே, திடீர் தாக்குதல் நடத்தி விடுகிறது. கிரேட்-A நோய்களான மலேரியா, Yellow Fever, டெங்கு, யானைக்கால் வியாதி மற்றும் நூற்றுக்கணக்கான பிரபலமடையாத நோய்களை கொசுக்கடிதான் துவக்கி வைக்கிறது. ஹெச்.ஐ.வி இன்று வரை இந்த லிஸ்டில் சேராதது நம் நல்ல நேரம். கொசுவால் உறிஞ்சப்படும் ஹெச்.ஐ.வி அதன் உடலிலேயே கரைந்துவிடுகிறது. வருங்காலத்தில் எப்போதாவது இந்த வைரஸின் கட்டமைப்பு மாறினால், நம் பாடு திண்டாட்டந்தான்.

நுண்ணுயிரிகள் மனிதரிடம் பகைமை பாராட்டுவதாக நினைத்துவிடக்கூடாது. அவற்றிற்கு பாவபுண்ணியம் பார்க்கத்தெரியாது. நீங்கள் சோப், டியோட்ரண்ட் போடுவதால் கோடிக்கணக்கில் கிருமிகள் கொல்லப்படுவதைப் பற்றிக் கண்டு கொள்ளாதது போலவே அவையும் உங்கள் அவஸ்தைகளை மதிப்பதில்லை. தீவிர தாக்குதல் நடத்தி உங்களை ஒழித்துவிடும் பட்சத்தில், தப்பிக்க வழியில்லாமல் தங்கிவிடும் சிலகிருமிகள் மடிய நேரலாம். சில நேரங்களில் அப்படியும் நடந்துவிடும். “மனித சரித்திரத்தில், கொள்ளை நோயாக வந்து பேரழிவை உண்டாக்கிப் பின்னர் வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிட்ட நோய்கள் பல உண்டு” என்கிறார் Dr.Jared Diamond. கி.பி.1482-1552-kaalaகால கட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களை பலி கொண்ட English sweating sickness, பின்னர் வீரியம் இழந்து மறைந்ததை அவர் உதாரணம் காட்டுகிறார். தொற்றுநோய்க் கிருமிகளின் அசாதாரணமான செயல்பாடுகள் சுய அழிவுக்கே வழிவகுக்கும். நீங்கள் நோயின் கடுமையாக உணர்வதெல்லாமே உங்கள் உடல் கிருமியை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதானாலேயேயன்றி கிருமி என்ன செய்தது என்பதால் அல்ல. கிருமிகளை முற்றிலுமாக ஒழிக்கும் முனைப்பில், உடலின் நோய்த்தடுப்பு அமைப்பு, சில சமயம் செல்களை அழிப்பதுடன், முக்கிய திசுக்களையும் தகர்க்கிறது. இத்தகைய தற்காப்புக் கடும்போர்தான் நோயின் கடுமையென உணரப்படுகிறது. உடலில் கிருமியின் நுழைவுக்கு, நோயில் விழுவதே சரியான எதிர்வினை. நோயாளிகள் படுக்கையில் படுத்து ஓய்வு எடுப்பதால், நோய் பரவ வழியில்லை. மேலும் உடலின் சக்தியை சேமித்து ஒருமுகப்படுத்தி கிருமிகளைத் துரத்த முடிகிறது.

உங்களுக்கு ஊறுவிளைவிக்கும் வலிவுள்ள பல நுண்ணுயிர்களை எதிர்கொள்ள வேண்டி, உங்கள் உடல் பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறு வகையான தற்காப்பு வெள்ளணுக்களை கைவசம் வைத்துள்ளது. அவை சில கோடி வகைகளாவது இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு வகை ஆக்ரமிப்பாளியை அடையாளம் கண்டு அழிக்கும் திறன் உடையதாக வடிவமைக்கப்பட்டது. தற்காப்பு என்ற பெயரில், ஒரு கோடி படையினரை எல்லையில் தயார்நிலையில் வைத்திருக்கும் அபத்த நிலையை தவிர்த்து, அதற்கு பதிலாக ஒவ்வொரு படைப்பிரிவிலும் சில காவலாளிகள் முழு தயார் நிலையில் நிறுத்திவைக்கப்படுவார்கள். அத்து மீறி நுழையும் எதிராளியை, அதற்குரிய காவலாளிகள் அடையாளம் கண்டு தமது தலைமைக்கு சரியான படைகளை அனுப்பக்கோருவார்கள். உடலில் வெள்ளணுப்படை திரட்டப்படும் நேரத்தில், நீங்கள் அவதிப்படுவீர்கள். அவை போராடும் போது உடல் தேறிவர ஆரம்பிக்கும்.

வெள்ளணு தயவு தாட்சண்யம் இல்லாமல் ஒவ்வொரு கிருமியையும் வேட்டையாடிக் கொல்லும். கிருமிகள் முழு அழிவிலிருந்து தப்ப இரு எளிய வழிகளைக் கையாளும். ஒன்று, கொரில்லாப் போராளிபோல், வேகமாகத் தாக்கிவிட்டு உடனே வெளியேறி வேறு உடலில் புகுந்து தாக்குவது. இது தொற்றுநோய் பரப்பும் வழி; மற்றையது, வெள்ளணுக்களால் அடையாளம் காண முடியாத மாற்றுருவில் ஒளிந்து கொள்வது; ஹெச்ஐவி வைரஸ், செல்களின் கருவில் ஒளிந்துகொண்டு வம்பு செய்யாமல் ஆண்டுக்கணக்கில் தாக்குதலை நடத்தும் தருணம் வரும் வரை காத்திருக்கும்.
கிருமி தாக்குவதிலும் கூட சில புரிந்துகொள்ள முடியாத அதீத நிகழ்வுகள் உண்டு. “மனித உடலின் ஒரு பகுதியில் நிரந்தரமாகத் தங்கி ஒரு தீங்கும் விளைவிக்காமல் சாதுவாக வாழ்ந்துவரும் சில நுண்ணுயிரிகள், சில சமயம் வழி தவறி வேறு பகுதியை அடைய நேர்ந்தால்,அவை வெறியாட்டம் போடும்” என்கிறார், லெபனான், ஹாம்ப்க்ஷைரின் டார்ட்மவ்த்-ஹிட்ச்காக் மருத்துவ மையத்தின் தொற்றுநோய் நிபுணர் ப்ரையன் மார்ஷ். “எல்லா பயங்கர கார் விபத்துகளிலும், மக்கள் உள்காயம் அடையும்போது, குடல் பகுதியில் வாழும் சாது கிருமிகள்,உடலின் வேறுபகுதிகளுக்குத் தள்ளப்பட்டு (உதாரணமாக,ரத்த ஓட்டம்), அங்கே அவை பேராபத்தை விளைவிக்கின்றன” என்கிறார்.

human_virusNecrotizing fasciitis என்னும் கொடிய வியாதிதான் பாக்டீரியாக்களின் மிகவும் கட்டுப்பாடற்ற வெறியாட்டம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இங்கே பாக்டீரியா உள்ளிருந்தபடியே நோயாளியின் எல்லா உள்ளுறுப்புகளையும் தின்றழித்த கையோடு,கொழகொழவென்றிருக்கும் நச்சுப் பொருளை எச்சமாக விட்டுச் செல்கிறது. இந்நோய் காய்ச்சல், அரிப்பு போன்ற சாதாரண உபாதையாக, ஆரம்பமாகிப் பின்னர் மிக மோசமான நிலைக்குப் போய்விடுகிறது. கடைசியில் அறுத்துப் பார்த்தால், நோயாளியின் உள்ளுடல் பகுதிகள் சிறிதுசிறிதாக கிருமிகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தது தெரியவருகிறது. இதற்கான ஒரே சிகிச்சை, radical excissional surgery என்பதாகும். நோய் தாக்கிய பகுதிகளை வெட்டி எறிவது. இந்நோய் தாக்கியவர்களில் 70% மடிகிறார்கள்; மீதிப்பேர் பெரும் உடற்குறையுடன் மீள்கிறார்கள். நோயின் காரணிகள், வெகு சாதாரணமான, தொண்டைக் கரகரப்பை தவிர வேறு நோய் தராத streptococcus A குழும பாக்டீரியா. எப்போதாவது, சில இந்தவகை பாக்டீரியாக்கள் தொண்டையின் உட்சுவரைக் கடந்து (இதுவரை ஏன் அப்படி நடந்துகொள்கின்றன எனத் தெரியவில்லை) உடற்கட்டுமானத்தில் நுழைந்து பேரழிவில் ஈடுபடுகின்றன. எதிர்-உயிரிகள் (Antibiotics)  அவற்றை ஒன்றும் செய்ய முடிவதில்லை. அமெரிக்காவில், ஓர் ஆண்டில் 1000 பேருக்கு இந்த நோய் வருகிறது. மேலும் தீவிரமடையாது என்று உறுதி சொல்வாரில்லை.

Meningitis –இதே போல் வரும் நோய். குறைந்த பட்சம் 10% இளைஞர்களுக்கும், 30% பதின்பருவத்தினருக்கும் தொண்டையில் கொடிய meningococcal பாக்டீரியாக்கள் சாதுவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. லட்சத்தில் ஒரு இளைஞருக்கு, இந்த பாக்டீரியா எப்போதாவது ரத்த ஓட்டத்தில் நுழைந்து அவர்களை சாவின் எல்லைக்கே அனுப்பிவிடுகிறது. நிலைமை மிக மோசமாகி நோய் தாக்கி 12 மணி நேரத்தில் மரணமடைவதும் உண்டு. “காலை உணவின்போது பரிபூரண ஆரோக்யத்துடன் இருந்தவர் மாலைக்குள் இந்த நோயால் இறந்து போவது சாத்தியம்” என்கிறார் டாக்டர்.மார்ஷ்.

பாக்டீரியாக்களைப் போரிட்டு அழிக்கும் மிகச்சிறந்த ஆயுதமான எதிர்-உயிரிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், தொற்றுநோய் ஒழிப்பில் பெரும் வெற்றியடையாததற்கு காரணம், வளர்ந்த நாடுகள் அவற்றைப் பெருமளவில் முறையற்ற வகையில் பயன்படுத்தியதாலேயேதான். கண்டுபிடிக்கப்பட்டதில் 70% க்கும் மேலான எதிர்-உயிரிகள், பண்ணை மிருகங்களின் நோய் தடுப்புக்காகவும், அவற்றைக் கொழுக்க வைக்கவும், தினமும் கால்நடைத்தீவனங்களில் கலந்து தரப்படுகின்றன. அது போன்ற பயன்பாடுகளால், பாக்டீரியாக்கள் மருந்து எதிர்ப்பு சக்தியை தருவித்துக்கொள்ள நிறைய அவகாசம் கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி,  எதிர்-உயிரிகளால் தகர்க்க முடியாத கவசங்களை அவை அமைத்துக்கொள்கின்றன.

1952-ல், பென்சிலின் மட்டுமே எல்லாவகையான staphylococcus பாக்டீரியாக்களை அழிக்கப் போதுமானது என்ற கருத்து நிலவியது. 1960-களில் அமெரிக்க சர்ஜன் ஜெனரலான வில்லியம் ஸ்டெவார்ட், “அமெரிக்காவில் எல்லாவித நோய்த்தொற்றுகளும் முறியடிக்கப்பட்டுவிட்டன. மருத்துவநூல்களில் “தொற்று நோய்கள்” என்ற பகுதியையே நீக்கிவிடலாம்” என்று மார்தட்டினார். அதே காலகட்டத்தில், 90% பாக்டீரியாவகைகள், பென்சிலின் எதிர்ப்பு கவசத்துடன், அடுத்த தாக்குதலுக்கு தயாராகி விட்டன.வெகு விரைவில், Methicillin-Resistant staphylococcus Aureus என்னும் புதிய வகை பாக்டீரியா மருத்துவமனைகளில் தலையைக் காட்டியது. Vancomycin என்னும் ஒரே ஒரு ஆண்டிபயாடிக்கால் மட்டுமே அதைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. 1997-ல், அதற்கும் பணியாத மற்றொரு வகை பாக்டீரியா, டோக்யோ மருத்துவ மனை ஒன்றில் தலையை காட்டியது. சில மாதங்களுக்குள், அதே வகை மேலும் ஆறு மருத்துவமனைகளுக்குப் பரவியது. உலகமெங்கிலும், கிருமிகள் ஜெயிக்கத் தொடங்கிவிட்டன. தற்போதய நிலவரப்படி, அமெரிக்க மருத்துவமனைகளில் மட்டுமே, ஆண்டுக்கு சுமார் 14000 மக்கள், மருத்துவமனைகளில் ஏற்படும் நோய்த்தொற்றால் மடிகிறார்கள். பன்னாட்டு மருந்துக்கம்பெனிகளின் வணிக நோக்கே, இந்த அவல நிலைக்கு காரணம் என்கிறார் James Surowiecki . பதினைந்து நாட்கள் மட்டுமே உட்கொள்ளப்படும் ஆண்டிபயாடிக் ஆராய்ச்சியிலா அல்லது ஆயுளுக்கும் மக்கள் உண்ணும் மனத்தாழ்வு போக்கி (anti-depressionist) ஆராய்ச்சியிலா பணத்தை முதலீடு செய்வது லாபமகரமானது என்று பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு நன்றாகத்தெரியும். பயனில் உள்ள சில  எதிர்-உயிரிகளை வீரியப்படுத்தியது தவிர, 1970களுக்குப் பிறகு, மருந்துத் துறை எந்த புதிய  எதிர்-உயிரியையும் நமக்குத்தரவில்லை என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

மேலும் பல நோய்களைத் தோற்றுவிப்பவையும் பாக்டீரியாக்களே என்ற புதிய கண்டுபிடிப்பின் பின்னணியில் பார்த்தால், புது ஆண்டிபயாடிக் ஆராய்ச்சியின் பின்னடைவு மனித குலத்துக்கு எதிரான கொடுமை. 1983-லேயே மேற்கு ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் வசிக்கும், பேரி மார்ஷல் (Barry Marshall)  என்ற டாக்டர், பல வகையான வயிற்றுப் புற்றுநோய்க்கும் மற்றும் பெரும்பாலான வயிற்றுப் புண்களுக்கும் Helicobar pylori என்னும் பாக்டீரியம்தான் காரணம் என்று கண்டுபிடித்து விட்டார். இது மிகவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக கருதப்பட்டதால், சோதித்து உண்மை தெரிந்த பின்னரும், அறிஞர்களின் ஒப்புதல் பெற 10 ஆண்டுக்காலம் ஆனது. உதாரணமாக, அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட், 1994 வரை, இக்கருத்தை அங்கீகரிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில், சில ஆயிரம் அல்ஸர் நோயாளிகள் அநியாயமாக மடிந்திருப்பார்கள் என்று மார்சல்,1993-ல் Forbes பத்திரிக்கை நிருபரிடம் கூறியிருக்கிறார்.

அதன் பிறகும் மேற்கொண்ட ஆராய்ச்சியில், இருதய நோய், ஆஸ்த்மா, ஆர்த்திரிடிஸ் (கீல்வாதம்), multiple sclerosis (தண்டுவட மரப்பு நோய்), பல வகை மூளைக்கோளாறுகள், பலவிதமான புற்று நோய்கள், (உடற்பருமனையும் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது ஸயன்ஸ் பத்திரிக்கை) எல்லாவற்றிலும் பாக்டீரியாவின் பங்கு இருக்கிறது அல்லது இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வரும் நாட்களில், எப்பாடுபட்டாவது நோயாளியின் உயிரைக் காக்க ஒரு சரியான ஆண்டிபயாடிக்கைத் தேடுகையில், அந்த மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற வரலாற்றுத் தவறு தெரியவரும்.