காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா

“பறவைகள் பறத்தல் பறத்தலற்ற கணத்தை நோக்கி” என்றார் வண்ணதாசன், சாரல் விருதைப் பெற்றுக் கொண்டு, தன் ஏற்புரையில். ,”நான் இப்போது பறந்து கொண்டே இருக்கிறேன், பறந்து கொண்டு இருப்பேன்.” என்று சொன்ன வண்ணதாசனின் குரல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடுங்கினாலும் ஓங்கி ஒலித்தது. அதைத் தொடர்ந்து அவர் எதுவும் பேசியிருக்கலாம். அல்லது மேடையில் அவரது இடப்புறத்தில் அமர்ந்திருந்த வண்ணநிலவனைப் போல் நிகழ்ச்சி முடியும்வரை எதுவும் பேசாதிருந்திருக்கலாம். இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான வண்ணநிலவனும் ஐம்பதாண்டு கால எழுத்துலக அனுபவத்தைத் தொடும் வண்ணதாசனும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகின்ற வாசக அமைப்பொன்றினால் ஒருசேர கௌரவிக்கப்பட்ட நிகழ்வில் வண்ணதாசனின் உரை உச்சத்தைத் தொட்டு அடங்கிய தருணம் அது. தேவநேயப் பாவாணர் அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் உடைதலின் விளிம்பில் வண்ணதாசன் நிகழ்த்திய உரையின் உணர்வில் அப்போது பங்கேற்றுக் கொண்டிருந்தார்கள்.

saral14

“தன் சமூகத்தின் அடுத்த நூற்றாண்டைப் பற்றிச் சிந்திக்கும் எழுத்தாளனை இன்றைய தமிழ் சூழல் எப்படி நடத்துகிறது?” என்று கோபமாகக் கேட்டிருந்தார் நாஞ்சில் நாடன். அவன் அடையாளமற்றிருக்கிறான், அடித்தட்டில் நிற்கிறான். அரசு விருதுகள் பிரச்சினைக்குரியனவாகிவிட்ட நிலையில் வாசகர்களும் விமரிசகர்களும் வழங்கும் சாரல், விளக்கு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போன்ற விருதுகள்தான் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. “ஒரு காய்கறிக் கடையில் உங்கள் அருகில் வண்ணநிலவன் நின்று கொண்டிருப்பார். பேருந்தில் உங்களருகில் அமர்ந்து கொண்டிருப்பார். சாலையில் உங்கள் எதிரில் வந்து கொண்டிருப்பார். ஆனால் நீங்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் செல்வீர்கள். இதுதான் எழுத்தாளனுக்கு இன்றுள்ள நிலை,” என்று நாஞ்சில் ஆதங்கப்பட்டார்.

“நீங்களும் நானும் அனைவரும் மறந்து போயிருந்த ஆ மாதவனுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் விருதளித்து சிறப்பித்தது,” என்று நினைவு கூர்ந்த அவர், “இது போன்ற விருது விழாக்களுக்கு நான் செல்லும்போது, எனக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள், இது போன்ற விருதுகள் பெற்றுக் கொள்ளும் தகுதி கொண்டவர்கள் என்று குறைந்த பட்சம் இருபத்தைந்து பேரின் நினைவையும், அவர்கள் இன்னும் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணத்தால் ஏற்படும் குற்ற உணர்வையும் என்னால் தவிர்க்க முடிவதில்லை. ஆண்டுக்கு ஒருவர் என்று அவர்களைச் சிறப்பித்தாலும், பலர் விருது பெறாமலேயே இறந்து விடுவார்கள். பாரதி மறைந்த பின் புகழ் பாடி பாரதிக்கு என்ன பயன்?” என்ற கேள்வியை எழுப்பினார்.

நாஞ்சிலின் கோபம் இப்படியொரு நீண்ட புறக்கணிப்புக்குக் காரணமான சாகித்ய அகாடமி போன்ற அரசு அமைப்புகளின் மேல் இருக்கிறது. “சாகித்ய அகாடமி, ஞானபீடம் போன்றவை அளிக்கும் சன்மானத்தைவிட அதிக தொகையை நீங்கள் அளிக்க வேண்டும். ஒரு எழுத்தாளன் அரசு சார்ந்த விருதுகளைப் பொருட்படுத்தாத, புறக்கணிக்கும் சூழலைத் தனியார் உருவாக்க வேண்டும்,” என்று அவர் ஆவேசமாகப் பேசினார். அந்த இருபத்தைந்து மூத்த எழுத்தாளர்களுக்கும் ஒருசேர ஒரு கணிசமான தொகையை விருதாக அளித்து கௌரவித்துவிட்டு, இன்று எழுதும் நாற்பது நாற்பத்து ஐந்து வயது சாதனையாளர்களுக்கு விருதுகள் தரலாம் என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு சாகித்ய அகாதமி விருது ஒரு இளைஞருக்குத் தரப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். இது தொடரவும் வேண்டும். ஆனால், இதுவரை புறக்கணிக்கப்பட்டுவிட்ட தேர்ந்த எழுத்தாளர்களை அப்படியே மறந்து விடப் போகிறோமா? நாஞ்சில் நாடன் இதற்குத் தந்துள்ள தீர்வை நாம் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். குழு அடையாளங்களைத் தாண்டி அனைத்து இலக்கிய ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து இதைச் செய்தால் இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் அது ஒரு முக்கியமான திருப்பு முனை தருணமாக இருக்கலாம்.

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது சாரல் விருது வழங்கிய ஜேடி- ஜெர்ரி இயக்குனர்களில் ஒருவரின் பேச்சில் வெளிப்பட்டிருந்தது- “இதைவிட இன்னமும் கூடுதலான தொகையை விருதாக அளித்து சிறப்பிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால் இலக்கியத்துக்கு ஒரு சிறிய ஸ்பான்சர்கூட கிடைப்பதில்லை,” என்று குறைபட்டுக் கொண்டார் அவர். பெருமளவு இளைஞர்கள் அரங்கை நிறைத்த எஸ் ராமகிருஷ்ணனின் இலக்கியத் தொடர் உரைக்கே எவ்வளவோ முயன்றும் வர்த்தக நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய மறுத்து விட்டன என்றார் அவர், தொலைக்காட்சி சேனல் எதிலாவது இலக்கிய உரைகள் ஒளிபரப்பாகின்றனவா என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

நாஞ்சில் நாடன் உரையில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் வண்ணநிலவனைப் புதுமைப் பித்தனின் நேரடி வாரிசு என்று அறிவித்ததுதான். “புதுமைப்பித்தனையும் கடந்து சென்றுவிட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் வண்ணநிலவன்தான் புதுமைப்பித்தனின் நேரடி வாரிசு” என்று அவர் குறிப்பிட்டார். வண்ணதாசனைப் பற்றி நிறைய எழுதிவிட்ட காரணத்தால் அன்றைய உரை முழுக்க முழுக்க வண்ணநிலவனுக்காக இருந்தது. “வண்ணநிலவன் இல்லையென்றால் நாஞ்சில் நாடன் என்ற நாவலாசிரியன் இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டான்” என்று வண்ணநிலவனின் தாக்கத்தை வெளிப்படுத்தினார் நாஞ்சில்.

நாஞ்சில் பேசியபின் அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பா.ஜெயப்பிரகாசம் வண்ணதாசனுக்கும் தனக்கும் உள்ள நட்பை, வண்ணதாசனின் எழுத்தின் மீது தனக்குள்ள நேசத்தைப் பேசினார். வண்ணதாசன் ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற கோரிக்கையைத் திரும்பத் திரும்ப முன்வைத்தார். தன் உரையில் வண்ணதாசன் அதைக் குறித்து எதுவும் சொல்லவில்லை.

பா.ஜெயப்பிரகாசத்தின் உரை நாஞ்சிலின் உரையைத் தொடர்ந்து வந்ததால் அவர் பேசிய சில விஷயங்கள் இலக்கியத்தை சமுதாயம் எப்படி மதிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்துவதாக இருந்தன. வாசகர்கள் மற்றும் விமரிசகர்கள் அளிக்கும் விருதுகளை நாஞ்சில் பாராட்டினார் என்றால் பா ஜெயப்பிரகாசம் தன் உரையில் சன் பிக்சர்ஸ், ஏவிஎம் பிரமிட் சாய்மீரா போன்றவர்கள் திரைத்துறையையும் சன், விகடன், குமுதம், திரிசக்தி குழுமங்கள் மற்றும் ஹிந்து போன்ற நிறுவனங்கள் அச்சு ஊடகங்களையும் கைப்பற்றி, கட்டற்ற சுதந்திரம் இல்லாத நிலையை உருவாக்கி படைப்பாளியின் குரல்வளையை நசுக்குகிறது என்று ஆவேசப்பட்டார். அதனால்தான் எழுத்தாளன் திரைத்துறையைத் தேடிச் செல்வது இன்றைய கட்டாயமாக இருக்கிறது என்று அது குறித்த தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்ற முன்னணி இலக்கியவாதிகள் எவரும் திரைத்துறையினரிடம் வாய்ப்பு கேட்டுச் செல்வதில்லை – மாறாக, திரைத்துறையினர்தான் இவர்களைத் தேடி வருகிறார்கள். ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் என்று பாராட்ட வேண்டுமேயன்றி இதை ஒரு பின்னடைவாகப் பேசியிருக்க வேண்டியதில்லை – அதிலும் குறிப்பாக வண்ணநிலவன், வண்ணதாசன், நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஷ்ணன் என்று மேடையில் அமர்ந்திருந்த அனைவரின் ஆக்கங்களும் இன்று திரை வடிவம் பெரும் நிலையில் இப்படிப்பட்ட விமரிசனத்தின் பயன் என்னவென்று தெரியவில்லை.

இணையம் இன்று பூதாகரமாக வளர்ந்து வருகிறது. அச்சு ஊடகம் தன் செல்வாக்கைத் தொடர்ந்து இழந்து வருகிறது. நாளைய இலக்கியத்தை அச்சு ஊடகம் தீர்மானிக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை. இணையம் அளிக்கும் சுதந்திரம் இலக்கியவாதிகள் அனைவருக்கும் ஒரு பெருங்கொடை. யாரும் யாருடைய எழுத்தையும் தடை செய்ய முடியாது என்பதே இன்றுள்ள நிலை. இங்கு விகடனிலும் குமுதத்திலும் இலக்கியம் பிரசுரமாக வேண்டிய தேவையில்லை. அச்சு ஊடகத்தின் முக்கியமான இதழ்களே எதிர்கால இணைய வெள்ளத்தில் மூழ்கப் போகின்றன.

தேர்ந்த ஒரு இலக்கியப் படைப்பு வெளியாவதையோ, அது திரை வடிவம் பெருவதையோ தடுத்து நிறுத்திவிடக் கூடிய ஆற்றல் இன்று எந்த கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் கிடையாது. பல சிறந்த சிறுகதைகள் குறும்படங்களாகத் திரை வடிவம் பெருகின்றன. இவை இணையத்திலும் அதற்கு வெளியிலும் வரவேற்கப்படுகின்றன. அன்றைய விழாவிலும்கூட வண்ணநிலவனின் ஜன்னல் என்ற சிறுகதை குறும்பட வடிவில் திரையிடப்படவிருந்தது.

இன்று நல்ல இலக்கியத்துக்குள்ள வாசகர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் போன்ற இணையத்தில் செயல்படும் இலக்கியவாதிகளுக்குப் பெருமளவில் இளைஞர்கள் வாசகர்களாக இருக்கிறார்கள். இன்றைய இலக்கிய விழாக்களில் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் காண முடிகிறது. இவர்களைத் தாண்டிய பரவலான சமுதாயத்தில் எழுத்தாளர்களின் இடத்தை எப்படி நிறுவ முடியும் என்பதே இன்று நம் முன்னிற்கும் கேள்வி. தமிழ் மக்கள் தொகை முழுவதுமே எழுத்தாளர்களுக்கு எதிராக ஒரு மாபெரும் புறக்கணிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படைப்புச் சுதந்திரத்தை கார்பரேட் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன என்ற வாதம் இந்த மேடையில் பொருத்தமானதாகவே இல்லை.

எஸ் ராமகிருஷ்ணனின் உரை பற்றி விரிவாக எழுதவேண்டிய அவசியமில்லை. இதை நீங்கள் வாசிக்கும்போது அவரது இணையதளத்தில் பதியப்பெற்று, அதை நீங்கள் வாசித்துமிருப்பீர்கள். அவரது உரையை நேரில் கேட்டவன் என்ற முறையில் சில விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டும். எஸ் ராமகிருஷ்ணன் அருமையான பேச்சாளர், கதை சொல்லி. அரங்கில் இருப்பவர்களைத் தன் பேச்சால் வசியம் செய்து விடுகிறார் – அவர் நகைச்சுவையாகப் பேசும்போது சிரிக்கிறார்கள், சீரியஸாகப் பேசும்போது அமைதியாக இருக்கிறார்கள், பாப்புலரான கருத்துகளைச் சொல்லும்போது பலமாகக் கை தட்டுகிறார்கள். அவரது உரையின் பின்னணியில் கரவொலி ஒலித்துக் கொண்டே இருந்தது. தான் போட்ட தண்டவாளத்தில் பஞ்சம் பிழைக்க ரயிலேறிப் போய் குழந்தைகளோடு போலீசில் சிக்கிக் கொள்ளும் தாயின் கதையை அவர் விவாரித்ததை நிசப்தமாக உறைந்த நிலையில் கேட்டு ரசித்தது கூட்டம். வண்ணதாசனின் கதைகளை ஓவியங்களாக உருவகித்தார் எஸ் ராமகிருஷ்ணன். வண்ணநிலவனின் கதைகளின் இருண்மையை ரெம்ப்ராண்ட்டின் ஓவியங்களில் காணப்படும் ஒளி நிழல் கூட்டில் வெளிப்படும் கருமையோடு ஒப்பிட்டிருக்க வேண்டும் அவர். ஹெர்மான் ஹெஸ்சின் சித்தார்த்தா நாவலின் முடிவில், புத்தர் கோவிந்தனுக்குக் கூழாங்கல் கொடுத்து உண்மையை உணர்த்தும் கட்டத்தைச் சுட்டி ஏதோ ஒரு மாயம் நிகழ்த்தி அங்கே வண்ணநிலவனையும் வண்ணதாசனையும் இணைத்தார்- வண்ணநிலவனும் வண்ணதாசனும் ஒரு பெரும் நதியின் இரு கரைகள், இரு வேறு குரல்களில், இரு வேறு வகைகளில் பேசினாலும் அவர்கள் இருவரும் ஒரு பெரும் நதிக்குரியவர்கள் என்று சொல்லி, மேடையில் இருவரின் இருப்பையும் ஒருமித்த சிறப்பித்தலையும் நியாயப்படுத்தினார். இதைவிட நன்றாக இனியும் யாராவது பேச முடியுமா என்ற திகைப்பு வண்ணதாசனின் உணர்ச்சிகரமான நன்றியுரையில் அடங்கிற்று.

saral23

தன்னை நடுங்கும் சுடர் என்று சொல்லிக் கொண்டார் வண்ணதாசன். அவர் குரலில், அங்க அசைவுகளில் உணர்ச்சி மேலீட்டின் நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது- ஒரு இறுகிய பாத்திரம் உடையுமுன் விரிசல் கொடுக்கும் சத்தம் அவரது மௌனங்களை நிறைத்தது. வண்ணதாசனின் பேச்சை எழுத வேண்டுமானால் கவிஞனின் மொழி தேவைப்படுகிறது. அவரது பேச்சைக் கேட்பது அற்புத கணங்கள் நிறைந்த அனுபவம். நம் கண்முன் அவர் சொற்களால் விரிக்கும் கவியனுபவம் நம்மை விரைந்து கடந்து செல்கிறது- அவரது சொற்கள் நமக்கு உணர்த்தும் அழகனுபவம் கருத்துகளின் செறிவல்ல, படிமங்கள், காட்சிகள் என்று நினைவில் இருத்தி வைத்துக் கொள்ளக் கூடிய அருவ உருவங்களல்ல. நிகழும்போதே இழக்கப்பட்டுவிடும் தருணங்கள் நிறைந்த உரை அது. எண்ணங்கள் விரிந்து ஒரு அழகிய உணர்வை மட்டுமே விட்டுச் சென்ற அனுபவத்தை வண்ணதாசனின் அன்றைய உரை அளித்தது. அனைத்து எழுத்தும், வண்ணநிலவனின் பாம்பும் பிடாரனும் என்ற சிறுகதை உட்பட அனைத்தும் ஆண் பெண் வெளிச்சமே என்றார் வண்ணதாசன். “மகுடி ஊதி ஊதி ஊதி எச்சில் நுரைக்கிறது, எதற்கும் அடங்காத பாம்பு தலையைப் பின்னால் சாய்த்து சூரியனைப் பார்க்கிறது. அந்த சூரியனுக்கு வெளிச்சம் தந்ததுகூட ஆண் பெண் வெளிச்சம்தான் என்று நான் நினைக்கிறேன்,” என்று சொன்னபோது அவர் என்ன சொல்கிறார் என்று புரியாவிட்டாலும் அவரது மொழியின் அழகையும் அதன் வெளிப்பாட்டை ஆக்கிரமித்த உணர்வின் அழகையும் நாம் இழக்க விரும்புவதில்லை. ஆமாம், ஆமாம், அதுதான் உண்மை என்று ஆமோதிக்க விரும்புகிறது மனம் – ஆனால் அவரது சொற்களோடு ஓய்ந்து விடுகிறது உணர்ச்சி மிகுந்த அந்த கணத்தின் உண்மை. வண்ணதாசன் உணர்த்தும் உண்மைகள் அபரிதமான கற்பனை சாத்தியப்பட்டாலன்றி உலர்ந்து விடும் என்று தோன்றுகிறது, அதை விவரிக்கவும் வண்ணதாசனுக்கினையான கவிமொழி தேவைப்படுகிறது.

“பறவைகள் பறத்தல் பறத்தலற்ற கணத்தை நோக்கி” என்றார் வண்ணதாசன் என்று இந்தக் கட்டுரையைத் துவங்கினேன், அங்கேயே திரும்ப வருகிறேன். “”நான் இப்போது பறந்து கொண்டே இருக்கிறேன், பறந்து கொண்டே இருக்கிறேன்.” என்று திரும்பத் திரும்ப சொன்ன வண்ணதாசன், இது என் எழுத்தின் ஐம்பதாவது ஆண்டு, என் பறத்தலும் விரைவில் ஓய்ந்துவிடும் என்று நினைக்கிறேன்,” என்றார், இன்று நான் மிகவும் நேசிக்கும் ராமச்சந்திரனோடு இணைந்திருக்கிறேன் – இந்தப் புகைப்படம், இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பொக்கிஷம் என்றார். எனக்கு உயரப் பறக்கும் ஆசையில்லை, பறக்க முடியுமென்பதால் பறக்கிறேன், என் வாழ்க்கையிலிருந்து கிளம்பி உங்கள் வானத்தில் பறக்குமளவுக்கு என் சிறகுகளின் காற்றரைகளை நிரப்பிக் கொண்டு உங்களிடையே பறந்து வருகிறேன், என்றார் வண்ணதாசன்.

நிகழ்ச்சியில் திலீப் குமாரைச் சந்திக்க நேர்ந்தது. வெகு காலம் எழுதாமலிருந்த அவரது புதிய ஆக்கம், “ரமாவும் உமாவும்” என்ற குறுநாவல், இவ்வாண்டின் துவக்கத்தில் சந்தியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. பேச்சிடையில், “அடுத்தது ஒரு நாவலை நினைத்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார் அவர் சிரித்துக் கொண்டே. தொலைவில் மேடையில் எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டிருந்த வண்ணநிலவனைப் பார்த்தேன். இங்கே நேற்று தன் புதுப் புத்தகம் வெளியான சந்தோஷத்தில் முகம் மலர சிரித்துக் கொண்டிருக்கும் திலீப்குமாரைப் பார்த்தேன். அவரது மனதில் ஓடிக் கொண்டிருக்கும் நாவலை நினைத்தேன், எனக்கும் சிரிப்பு வந்தது.

பறவாதிருக்கும் பறவைகள் அனைத்தும் கூடு சேர்ந்திருக்க வேண்டியதில்லை, துடுப்பசைக்க விரிந்து உறைந்த பறவைச் சிறகுகளை காற்றின் சிறகுகள் நீள்பெரும் வட்டங்களில் அணைத்தும் செல்லலாம், இல்லையா? அவை சொற்களின் கட்டுக்குள் சிறைப்பட வேண்டிய அவசியமென்ன?

2 Replies to “காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா”

Comments are closed.