சாம்ராட்
– எம்.ராஜா
விலகாத விசுவாசியாய்
உடன்வரும் என் நிழல்
சாம்ராட்டைப் போலவே
நடந்து செல்கிறேன்.
பணிந்து பின்னகரும்
இருபுறச் சுவர்களும்
மரம்செடி கொடிகளும்
ஆடி அசைந்து ஆமோதிக்கும்
நீண்டு கிடக்கும் நிலம்
குறுநகை உதிர்க்கும்
உதடுகளைக் கடந்தபடி
ஒரு சாம்ராட்டைப் போலத்தான்
நடந்து போகிறேன்.
எண்ணிக்கை
– ச.அனுக்ரஹா
குழந்தை கேட்டது,
‘எனக்கு எப்படி ஐந்து வயது?’
‘நீ பிறந்து ஐந்து வருடங்கள்
ஆகின்றன’.
விரல்களை விரித்து எண்ணியது.
பின், விரல்களை மடித்து மூடியது.
மீண்டும்,
வெயிலில் நின்று
எறும்புகள் கோடாக
நகர்வதை பார்க்கத்
தொடங்கியது.
ஒரே எறும்பு,
ஒரே கணத்தில்,
எல்லா இடத்திலும்
நடந்துகொண்டிருப்பதுபோல
இருந்தது.