அம்மா

பிரசாத் வெள்ளிகிழமை மாலை ஐந்து மணிக்கெல்லாம் டிரஸ் எடுத்து வைத்துக்கொண்டு தயாராகி விட்டான். சனிக்கிழமைக்கு ஒன்று. ஞாயிற்றுக்கிழமைக்கு ஒன்று என்று தனக்குள் சொல்லி கொண்டான். அம்மா ஆபிசில் இருந்து வந்த உடனே சொல்லிக்கொண்டு கிளம்ப வேண்டும்.மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டுமே விடுமுறை. அப்போதெல்லாம் தவறாமல் அவன் பாட்டி வீட்டிற்குச் செல்வது வழக்கம். இந்த முறை செல்வதும் எப்பவும் போல் சந்தோஷமாக இருந்தது. வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் போய் உட்கார்ந்தான். 24 வீடுகள் கொண்ட குடியிருப்பு அது. அவன் வீட்டில் அவன்தான் முதலில் வருவான். ஐந்தேகாலுக்கு அம்மா வருவாள். அப்பா வருவதைச் சொல்லவே முடியாது. சில சமயம் மதியமே லீவ் போட்டு வந்து படுத்துக்கொள்வார். சில சமயங்களில் இரவு பத்து பதினொன்று கூட ஆகும். மணி இப்போ அஞ்சு அஞ்சு. இன்னும் அம்மா வர பத்து நிமிஷங்கள் உள்ளன. பத்து நிமிஷங்கள். பத்தாம் வாய்ப்பாடு எவ்ளோ ஈசி என்று அவனுக்கு தோன்றியது. பதினஞ்சு கூட பரவாயில்லை. இந்த பதிமூணு பதினேழு எல்லாம்தான் எவ்ளோ மனப்பாடம் செஞ்சாலும் மனசுல நிக்கறது இல்ல. இன்னொரு முறை மணி பார்த்தான். இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு.

சாதாரணமாக ஸ்கூல் விட்டு வந்ததும் வீடு பூட்டிவிட்டு வாசலில் விளையாட போய் விடுவான். ஹரி, கோபி எல்லாம் அவனுக்கு பிரண்ட்ஸ். மதன், வசந்த் கூட எல்லாம் சேர வேண்டாம் என்று அம்மா சொல்லி இருந்தாள். கோபி அம்மா ஸ்கூல் டீச்சர். அதுவும் அவன் படிக்கற ஸ்கூலிலேயே. நல்ல வேளை பிரசாத்திற்கு அவர்கள் பாடம் எதுவும் எடுக்கவில்லை. ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சர் என்று கேள்விப்பட்டு இருக்கிறான். கோபி அப்பா கூட அவருக்கு பயப்படுவார் என்று அம்மா சிரித்துக்கொண்டே சொல்லுவாள். அப்பா போய் எங்கயாவது பயப்படுவாளா? இன்னும் கொஞ்ச நேரத்துல சன் முழுக்க செட் ஆயிடும். சூரிய வெளிச்சம் பூமியை வந்து சேர்வதற்கு எட்டு நிமிடங்கள் ஆகும் என்று அவனுக்கு ஞாபகம் வந்தது. இந்த விஷயம் எல்லாம் எவ்ளோ பேருக்கு தெரியும். சேகருக்குக் கூட தெரியாது. இத்தனைக்கும் அவன்தான் கிளாஸ்லேயே பணக்காரன்.

தூரத்தில் அம்மா நடந்து வருவது பார்த்து ஓடினான். பக்கத்தில் போய் கையைப் பிடித்துக்கொண்டான். அம்மா கட்டிக்கொண்டு கன்னத்தைக் கிள்ளினாள். உள்ளே வந்தவுடன் “பாட்டி வீட்டுக்குக் கிளம்பறேன் மா” என்றான். “அதுக்குள்ளேயேவா? இருட்டிண்டு இருக்கே நாளைக்கு போகலாம்” என்றாள். “போ..இப்பவே போவேன்” என்றான். 24a பிடித்தால் கடைசி நிறுத்தம் வெஸ்ட் பஸ் டிப்போ. அங்கிருந்து பக்கத்து தெரு ஓரமாக நடந்தால் மூணாவது திருப்பத்தில் பாட்டி வீடு. அவன் நிறைய முறை போய் இருக்கிறான். “அப்பா என்ன சொல்லுவா மா?” என்றான். “ஒண்ணும் சொல்ல மாட்டார் நான் பாத்துக்கறேன், ஆனா ஞாயித்துகிழம சீக்ரம் வந்துடனும் என்ன?”  “ஓகே மா” என்று பையை எடுத்துக்கொண்டு செருப்பு போட்டுக்கொண்டு ஓடினான். பிறகு எதோ தோன்றியவன் போல் திரும்பி வந்து “அப்போ அப்பா திட்டினா” என்றான்.”நான் பாத்துக்கறேன் போடா” என்றாள் அம்மா.

picasso-blueபாட்டி வீடு பக்கத்தில் சரவணணும் மணியும்தான் அவனுக்கு க்ளோஸ் பிரண்ட்ஸ்.ரெண்டு பேர் கிட்டயும் வீடியோ கேம் இருக்கு. ஆனா மணிதான் கஞ்சன். பிரசாத்திற்கு விளையாடத் தரவே மாட்டான். அவன் போனபோது பாட்டி ஸ்ரீராமஜெயம் எழுதி கொண்டு இருந்தாள். மாமா ஆபிசிலிருந்து வந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். பாட்டி உட்கார்ந்திருந்த இடத்திற்கு மேலே தாத்தா படம் மாட்டி மாலை போட்டிருந்துது. அந்த மலை வாடவே வாடாது என்று பாட்டி சொல்லி இருக்கிறாள். போனவுடன் பாட்டி மடியில் படுத்துக்கொண்டான். பாட்டி தலையை கோதிக்கொண்டே “அம்மா ஆபீஸிலிருந்து வந்தாச்சா?” என்று கேட்டாள். “உங்க அப்பங்காரன்”. “ம்ம் ஹும்.. அவன் வெள்ளிகிழம என்னிக்கு நேரத்தோட வந்திருக்கான். என் பொண்ணு உசுர…” அதுக்குள்ளே மாமா “அம்மா” என்று கத்தினார். “விளக்கு வெச்சப்றம் இப்டி அழுது பிராணன் வாங்காதே. ஏற்கனவே தரித்தரம் தாண்டவம் ஆடறது.”

பிரசாத் உடனே புறப்பட்டு சரவணா வீட்டுக்கு போனான். சரவணா டென்னிஸ் கிளாஸ் கூட போறான். அவன் அப்பாவே கொண்டு விடுவார். அம்மா டாக்டர். அவன் வீடியோ கேம்தான் ஆட வந்திருக்கான் என்று சரவணனுக்கு தெரியும். ஆனா அவன் மாட்டுக்கு டிவி பாத்துண்டு இருக்கான். அவன் அம்மாவும்தான் ஆபிஸ் போறா. ஆனா இவன பாத்துக்கவே தனிய ஒரு ஆயா. ஆயா சாதத்துல கொழம்ப போட்டு கொழச்சு அவனுக்கு வாய்ல ஊட்டி விடறா. பிரசாத் தலையை திருப்பிக்கொண்டான். டிவில இங்கிலீஷ் படம் எதோ ஒண்ணு. நல்ல வேளை. சீக்ரம் முடிஞ்சிது. பிறகு வீடியோ கேம் செட் பண்ணி ஆடஆரம்பித்தனர்.

கார் ரேஸ் விளையாட்டு. சரவணனுக்கு நல்ல பழக்கம் இருந்ததால் அவனால் சீக்கிரமே ஜெயிக்க முடிந்தது. பிரசாதிற்க்கு அந்த இயக்குபிடியை சரிவர கையாள முடியவில்லை. ஆனால் அடுத்து வந்த செஸ் விளையாட்டில் பிரசாத் எளிதாக ஜெயித்தான். கொஞ்ச நேரம்தான் விளையாடின மாதிரி இருந்தது. அதுக்குள் பாட்டி குரல் கேட்டது. சாப்பிட்டு போய் விளையாடுடா என்றார் பாட்டி. பிரசாத்திற்கு கோவமாய் வந்தது. பாட்டி பக்கத்தில் போய் “ஏன் இவ்வளவு சீக்கிரமா வந்து தொலைக்கற?” என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்டான். ஆனால் பரவாயில்லை. சாப்பிட்டு வந்து கூட விளையாடலாம். பதினோரு மணி வரை வெளியில் இருக்கும் சுதந்திரம் இங்கு உண்டு. மாமாவும் ராத்திரி தூங்க நேரம் ஆகும். திரும்ப சரவணா வீட்டிற்குக் கூட வரலாம். அவன் அப்பா திட்டவே மாட்டார். அவர் வந்தா சரவணா அம்மா பயப்படறது இல்ல. அந்த அழுகிப்போன திராட்சை வாசனை வரது இல்ல. சாராயம் குடிச்சா அந்த வாசன வரும்னு அவனுக்குத் தெரியும். அதனாலதான் அவன் அப்பாகிட்ட அந்த வாசன எப்பவும் வரதும்னும் அவனுக்கும் தெரியும். ஆனா இத அவன் அம்மாகிட்ட கேக்கிறது இல்ல. கேட்டா அம்மா அழுவானும் அவனுக்கு தெரியும்.

சரவணா வீட்டிலிருந்து பாட்டி வீட்டிற்கு போக ஒரு சின்ன ரோடு நடக்க வேண்டும். அவன் வெளியில் வந்ததும் கரண்ட் போனது. உடனே ஹோவென கூச்சல் கேட்டது. அவன் நண்பர்கள்தான். அவனும் உடனே கத்தினான். ஒரே இருட்டாக இருந்தது. நிலா வெளிச்சத்தில் பார்க்கவும் முடிஞ்சது. மரத்துக்குக் கீழ இலை கருப்பு கருப்பா அசையறது. அவனுக்கு முன்னாடி பாட்டியோட நிழல். பக்கத்துல அவனோட நிழல். பெரிசா. பாட்டி இங்க பாரேன் என்றான். இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு ஆ..ஹை… ஆ..ஹை… ஆ..ஹை…என்று இடுப்பை முன்னால் ஒரு தள்ளு தள்ளிக்கொண்டு குதித்துக்கொண்டு வந்தான். பாட்டி இங்க பாரேன் என்று இன்னொரு முறை செய்தான், பாட்டி பார்க்கவே இல்லை, பாட்டி இன்னைக்கு எனக்கு புடிச்ச சேனை கிழங்குதானே என்று கேட்டான். அதற்கும் பாட்டி பதில் சொல்லவே இல்லை. சாப்பிட்டு முடித்து கரண்ட் வரணுமே என்று நினைத்து கொண்டான். ஆனால் சாப்பிட்ட பிறகு அப்படியே தூங்கிப்போனான்.

சனிக்கிழமை முழுக்க கிரிக்கெட் விளையாடி விட்டு ஆறு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வந்தான். அன்று சித்ரா பெரியம்மா, பெரியப்பா அவா பொண்ணு ரோஷனி எல்லாரும் வருவதாக இருந்தது. அம்மாவோட அக்கா இந்த பெரிம்மா. அம்மா தம்பி, மணி மாமாக்கு இன்னும் கல்யாணம் ஆகவே இல்ல. கல்யாணம்னாலே கஷ்டம்தான்னு பாட்டி சொல்லுவா. ஆனா பெரிம்மா எல்லாம் எப்பவும் சிரிசிண்டேதான் இருக்கா. பெரிப்பாக்கு எதோ ப்ரோமொஷன் வந்திருக்காம். அதப் பத்திதான் பேசிண்டே இருக்கா. பெரியப்பா பிசிக்ஸ் எல்லாம் எப்படி படிக்கறேன்னு கேக்கறார். ஆறாவது கிளாஸ்ல இருந்துதான் பிசிக்ஸ்… அடுத்த வருஷம்தான். பெரியப்பாக்கு பிசிக்ஸ் நல்லா தெரியும். நல்லா இங்கிலீஷ் பேசுவார். கேமரா வெச்சு நெறைய ஃபோட்டோ கூட எடுப்பார். ரோஷனி எப்பவும் போல அதிகம் பேசவே இல்ல. அப்பாவோட ஒட்டிண்டே அமைதிய இருந்தா. அவா கிளம்பின அப்பறம் நல்ல மழை. நல்ல இருட்டு வேற. எதிர்ல இருக்கற மைதானத்துல சோனு மழை விழுந்துண்டு இருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு தவளை எல்லாம் கத்தற சத்தம். இலை மேல விழும்போது படபடனு ஒரு சத்தம். தேங்கி இருக்கற தண்ணீல விழறது வேற மாதிரியான சத்தம். எப்போவாவது ஹெட் லைட் போட்டுண்டு போற கார் போகும். அப்போதான் மைதானத்துல விழற மழை கண்ணுக்குத் தெரியும். எல்லோரும் தூங்கப் போயிட்டு ரொம்ப நேரத்துக்கு அப்பறமும் இருட்டுல மழை மட்டும் கேட்டுண்டு இருந்தது. இப்படி பாட்டி கூடவே இருந்துட்டா எவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு நெனச்சப்போ லேசா நெஞ்சு முட்டிண்டு ஒரு அழுக வந்துது.

மறுநாள் சாயங்காலம் வீட்டிற்கு கிளம்ப தயாரானான். துணியுடன் சேர்த்து பாட்டி கொடுத்த மாதுளம்பழமும் எடுத்துக்கொண்டான். பாட்டி ஒரு தடவை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தாள். பாட்டி கிட்ட எப்பவும் இந்த விக்கோ வஜ்ராதந்தி வாசன. அவனுக்கு அப்போ அது புடிச்சு இருந்துது. மாமா அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டுவிட்டுச் சென்றார். அப்போவே கொஞ்சம் இருட்டத் தொடங்கி இருந்தது.பஸ்ஸிற்கு நீண்ட நேரம் காத்திருந்தான். எதிரில் ஒரு புது ஹோட்டல் வாசலில் லைட் தோரணம் எரிந்து எரிந்து அணைந்தது. எப்பவும் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் பூக்கார அம்மா இன்றும் இருந்தாள். கொஞ்ச நேரத்தில் பஸ் வந்து விட்டது.

வீட்டின் அருக போகும் போதே உள்ளே லைட் எல்லாம் அணைந்திருந்தது தெரிந்தது. அவன் ஹால் ஜன்னல் பக்கத்தில் போய் மெதுவாக “அம்மா” என்று குரல் கொடுத்தான். அம்மா ஜன்னல் அருகே வந்து “இரு இரு” என்றாள். கதவைத் திறந்து, “ஏன் இவ்ளோ லேட்? சீக்கிரம் வரதுதானே?” என்றாள். அம்மா குரலே வெளியில் வரவில்லை. காத்து மட்டும் வந்து வந்து ஒலி எழுப்பி கொண்டிருந்தது. உள்ளே அந்த அழுகிப்போன பழ வாசனை அடித்தது. அம்மா பிளாஸ்டிக்கில் மணிகளைக் கோர்த்து தோரணம் மாதிரி செய்து வைத்திருப்பாள். அது எல்லாம் அறுக்கப்பட்டு கீழே சிதறி இருந்தது. “என்ன அம்மா சண்டயா?” “அதெல்லாம் ஒன்னும் இல்ல. படு…” “இப்பவே எப்டிமா படுக்க முடியும்?”ஆனால் படுத்துதான் ஆக வேண்டும் என்பது அவனுக்கு தெரியும். எதோ பெரிசா சண்டை வந்திருக்கு. எதிரில் இருந்த பிள்ளையார் லக்ஷ்மி சரஸ்வதி படத்தை பார்த்து ஒவ்வொருவருக்காய் சுலோகம் சொல்லி வேண்டிக்கொண்டான். உள் ரூமில் ஏஏஏஏய் என்று சத்தமாக ஒரு குரல். அப்பாதான். எப்படியும் அந்த அடுக்கில் இருந்த எல்லா வீட்டிலும் அது கேட்டிருக்கும். மொத்த வீட்டில் இருந்த இருட்டிலும் அமைதியிலும் பயங்கரமாக ஒரு மிருகத்தின் கத்தல் போல கேட்டது. அவன் கால்கள் கடகட என உதறியது. போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டான். அம்மா கட்டிக்கொண்டாள். பயமா இருந்தது. கொஞ்ச நேரத்தில் தூங்கிப்போய் இருக்க வேண்டும். எதோ ஈரம் உணர்ந்து விசுக்கென எழுந்தான். அப்போது லைட் எரிந்து கொண்டிருந்தது. அப்பா கையில் ஒரு ஆரஞ்சு பக்கேட்டுடன் நின்று கொண்டிருந்தார். அம்மா தலையில் இருந்து உடம்பு முழுக்க தண்ணி. அம்மாவும் நடுங்கி கொண்டிருந்தாள். அம்மா முகத்தருகே வந்து ‘நக்கி முண்ட’ என்று கன்னத்தில் ஒரு அறை. பின் ‘நாற முண்ட’ என்று கொத்தாகத் தலைமுடியை பிடித்து தூக்கினார். அம்மா அடிக்குரலில் இருந்து பூனை கத்துவதை போல் கத்தினாள். மாறி மாறி கன்னத்தில் அடித்தார். அம்மா கை கூப்பியபடி நின்றாள். அவனுக்கு முட்டிக்கொண்டு வந்தது. விசும்பலுடன் ஒரு கேவல். அப்படியே அடக்கிக் கொண்டான்.