20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 24

இங்கிலாந்து நாட்டில் ஓவிய நிகழ்வுகள்
கலை, கைவினை இயக்கம்
The Arts and Crafts Movement

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்து நாட்டிலும், அமெரிக்காவிலும் விக்டோரியன் பாணி (Victorian Style) கலைப் பண்டங்கள், இல்லப் பயன்பாட்டுப் பொருள்கள், அணிகலன்கள் போன்றவைதான் பரவலாக நடுத்தரப் பொருளாதாரக் குடும்பங்களிடையே புழக்கத்தில் இருந்தன. அந்தக் கலாரசனையைக் கேள்விக்குரியதாக்கித் தோன்றியது இவ்வியக்கம். சிந்தனை யாளர்கள் வால்ட்டர் க்ரேன், (Walter Crane), ஜான் ரஸ்கின் (John Ruskin) இருவரும் நவீன உத்திகளும் கலை சார்ந்த கோட்பாடுகளும் கொண்ட வில்லியம் மாரிஸ் (William Morris) என்ற கட்டிடக் கலைஞருடன் இணைந்து தொடங்கியதுதான் பின்னர் அமெரிக்கக் கலைஞர்களால் விரும்பிப் பின்பற்றப் பட்டது. சிற்சில மாற்றங்களுடன் மக்களிடையே பரவலாகச் சென்றடைந்த அது மிஷன் ஸ்டைல் (Mission Style) என்றும் பின்னர் அழைக்கப் பட்டது.

குறைபாடுகள் கொண்ட, வசதிகள் இல்லாத தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி அல்லல் படுவது என்றில்லாமல், அவனது கலைப்படைப்புக் களுக்கான சிறப்பைப் பிறர் போற்றும் ஒரு புதிய சமூகத்தை நோக்கியதாக அவ் வியக்கம் இருந்தது. இங்கிலாந்தில் தோன்றிய தொழில் புரட்சியின் காரணமாக பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி ஏராளமாக பெருகியதால், அவற்றில் கலைநயம் என்பது மிகவும் குறைவான அளவிலேயே இருந்தது. நுகர்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியதும் அதற்கு ஒரு காரணம்.

ஜான் ரஸ்கின் (John Ruskin) வில்லியம் மாரிஸ் (William Morris) மற்றும் இயக்கம் சார்ந்த அவர்கள் தேர்ந்த கலையியல் என்பது நல்லொழுக்கம் கூடிய சமூகம் சார்ந்தது என்னும் பார்வையை முன் நிறுத்திச் செயற்பட்டனர். கைவினைக் கலைஞனின் கலைத்திறனை மீண்டும் மையப்படுத்தி, பொருள்களின் கலையழகை மேன்மையுறச் செய்யவேண்டும். மேலும், ஒரு கலைஞனுக்கு அது வருவாய் தரும் தொழிலாகவும், நடுத்தரவர்க்க நுகர்வோருக்கு (Middle Class Consumers) அவ்வழகுப் பொருட்களைக் கொண்டு தமது இல்லங்களை அலங்கரிக்கும் விதமாகவும் அது அமையவேண்டும் என்னும் நோக்கில் இயக்கத்தினை நடத்திச் சென்றனர்.

உலக வரலாற்றில் இடைக்காலம் (Medivial Period) என்று சுட்டப்படும் கி.பி. 1100 முதல் கி.பி.1500 வரைலான காலகட்டத்தில் படைக்கப்பட்ட கலை வடிவங்கள் இப்போது மீண்டும் கலைஞர்களால் கையாளப்படத் தொடங்கின. அத்துடன், ஐரோப்பிய, அரேபிய நிலப்பகுதிகளில் இருந்த அப்போதைய கலையியல் சிந்தனைகளும், அவர்களுக்குக் கைகொடுத்தன. அவற்றுடன், ஜப்பான் நாட்டுக் கலைச் சிந்தனைகளும் சேர்ந்துகொண்டன. அந்தப் படைப்புகளில் கலை வடிவங்கள் சதுரம், கோணம் போன்ற அமைப்பு சார்ந்ததாகவும், இஸ்லாமியக் கலை வடிவங்களின் பாதிப்பு கொண்டதாகவும் இருந்தன. ஓவன் ஜோன்ஸ் (Owen Jones) என்னும் வடிவியல் கலைஞர் (Designer) தமது “அணிகலன் இலக்கணம்” (“The Grammer of Ornament”) என்னும் நூலில், அணிகலன்கள் வடிவமைப்பது பற்றிப் பல புதிய உத்திகளை விளக்கியிருந்தார். பல கலைஞர்கள் அந்நூலைப் பின்பற்றி நூதன அணி கலன்களைப் படைத்தனர்.

என்றாலும் காலப்போக்கில் இந்த இயக்கத்தில் கலைஞனின் படைப்புத் திறனுக்கு முக்கியத்துவம் கூடிவிட்டது. அதனால் பொருள்களின் விலை கூடி, பொது மக்களுக்காக என்னும் நோக்கம் அடிபட்டுப் போயிற்று. செல்வந்தர் மட்டுமே அவற்றை வாங்க முடிந்தது. கலைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து போயிற்று. அதன்பின்னர் இந்த இயக்கம் ‘ஏஸ்தடிக் ஸ்டைல்’ (Aesthetic style) என்னும் புதிய பெயருடன் தொடர்ந்தது. அவ்வமயம் பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பிரபலமாக இருந்த ‘ ஆர்ட் நோவோ’ (Art nouveau) என்னும் இயக்கத்துடன் அது பெரிதும் ஒத்துப் போயிற்று.

மிஷன் ஸ்டைல்
Mission Style

ஐக்கிய அமெரிக்காவில் (U.S.A.) பிரபலமடைந்த இவ்வித இயக்கத்துக்கு Mission Style என்னும் பெயர் சூட்டப்பட்டது. அங்கு ‘கலை மக்களுக்காக’ என்னும் நோக்கம் நிறைவேறியது. ஆனால் கலைஞனின் அடையாளம் காணாமற் போயிற்று. நியூயார்க் நகரில் குஸ்டவ் ஸ்டிக்லி (Gustav Stickly) என்னும் கலைஞர் நடுத்தர (வருவாயின் அடிப்படையில்) நுகர்வோருக்கு ஏற்ற விதத்தில் கலையம்சம் கூடிய, அதிக விலை இல்லாத இருக்கைகள், கட்டில்-அலமாரிகள், திரைச் சீலைகள், மேசை விரிப்புகள் போன்ற இல்லப் பயன்பாட்டுக்கான பொருள்களை (Household meterials) உற்பத்தி செய்ய விழைந்தார். பொருள் களின் உதிரி பாகங்களை மொத்தமாகத் தொழிற்சாலைகளிலிருந்து வாங்கி, கைவினைக் கலைஞர்களைக் கொண்டு அவற்றை ஒருங்கிணைத்து அவற்றில் சிடுக்கும் நுணுக்கமும் இல்லாத -சதுரம் / கோணம் போன்ற அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட- வடிவங்களைக் கொண்டதாகச் சந்தைக்குக் கொண்டு சென்றார். அவ்வுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆங்கில நிலப்பகுதிக் கலைவடிவங்களுடன் பெரிதும் ஒத்திருந்த தென் மேற்கு அமெரிக்க நிலப்பகுதிக் கலை வடிவங்கள் அவற்றில் அதிக அளவில் இடம் பெற்றன. அத்துடன், அமெரிக்க நிலத்தின் பழங்குடி மக்களின் கலை வடிவங்களும் பெரிதும் இடம்பெற்றன. அதன் பயனாக, அங்கு ஒரு புதிய கலை வடிவம் தோற்றம் கண்டது. தரை விரிப்பு, பலவித மண் பாண்டங்கள், கூடை வகைகள், உடைகள் அணிகலன்கள் போன்றவற்றில் காணப்பட்ட அவை காண்போரை மிகவும் ஈர்த்தன.

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]
01-jones-owen02-jowen03-jowen04-jowen05-gustav-s06-gustavs07-gustavs08-mission-lamp09-dreem-on-me10-mission-style-cot07-gustavs
[/DDET]
(தொடரும்)