வெட்டுப்புலி

வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை, சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.

பிராமணரல்லாத சாதிகளில் செல்வ வளமும் நிலம் உடை ஆதிக்கமும் கொண்ட சாதிகளை எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறது. மூன்று சாதிகள் இவ்வாறு பேசப்படுகின்றன:

– வெட்டுப்புலி இளைஞனான சின்னா ரெட்டியின் உறவான தசரத ரெட்டியின் மகன் லஷ்மண ரெட்டி.

லஷ்மண ரெட்டி காலப்போக்கில், குறிப்பாக தனது ஆதர்சமான ஈவேராவின் மறைவுக்குப்பின், பார்வையாளராகவும் அனுதாபியுமாக மட்டுமே ஆகி விட்டவர். லஷ்மண ரெட்டி ஈவேரா தவிர வேறு யாரும் ஆதர்சம் இல்லை. அவரது சிந்தனைப்போக்கு அவரைத்தாண்டி அவர் மகன் நடராஜனின் வாழ்க்கையில் படர்ந்து விளையாடுகிறது.

– சினிமா எடுக்க ஆசைப்படும் ஆறுமுக முதலி. இது திராவிட சினிமா களம் எனலாம். இங்கும் ஆறுமுக முதலியைத்தாண்டி அவரது மகன் சிவகுருவையே சினிமா மோகம் கடுமையாய் புரட்டிப்போடுகிறது. சினிமா மோகம் அவன் வாழ்க்கையைத்தடம் புரள வைக்கிறது.

ஆறுமுக முதலியின் அண்ணா கணேச முதலி கடும் பிராமண வெறுப்பாளர். சென்னையில் மாம்பலத்தில் கிரயம் பிரித்து எதுத்துக்கொண்ட பெரிய சொந்த வீட்டில் வசதியாய் வாழ்ந்தாலும் எல்லாவற்றிலும் பிராமண சதியைக் காண்பவர். இவர் திராவிட இயக்கத்தின் மைய நீரோட்டமானதொரு தளம். கணேச முதலி மகன் நடேசன் பெரியார் பக்தனாகவும் தியாகராசன் அண்ணா பக்தனாகவும் ஆகிறார்கள்.

– மணி நாயுடு – இது திராவிட காண்ட்ராக்ட் வியாபார களம் எனலாம். வரதராஜுலு நாயுடுவின் ஜமீன் பரம்பரையில் வந்த இவர் திராவிட அரசியலில் எல்லா இடங்களிலும் பெருகும் லஞ்சத்தின் அங்கமாகிப்போனவர். ஊரில் கைதேர்ந்த திருடனான படவேட்டான் திருடிக்கொண்டு வந்த தங்க முருகன் சிலையை வைத்து தொடர்கிறது இந்த ஜமீன் பரம்பரையின் ஏறுமுகம்.

பரம்பரைச் செல்வமும் சமூக செல்வாக்கும் நிறைந்த இந்த மூன்று குடும்பங்களையும் திராவிட இயக்கத்தளத்தில் பிணைக்கும் ஒரே அம்சம் அவர்களது பிராமண வெறுப்பு. அந்த வெறுப்பு ரெட்டி குடும்பத்தில் 1930-களின் உரையாடல் ஒன்றின் வழியாக கதையில் வெளியாகும் இடம் திராவிட இயக்க விதைக்குள் இருந்த ஜீவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ”குருவிகாரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டமே வரப்போவுதாம்” என்று சொல்லக்கேட்கும் தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா அதிர்ச்சியில் “மேலும் முன்னேறணும்னு நினைப்பானா குருவிக்காரனும் நாமும் சமம்னு சொல்வானா?” என்று கேட்க, தசரத ரெட்டி ”குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி, பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தாண்டி சட்டம் போடச்சொல்றாங்க” என்கிறார்.

சூத்திரர்கள் கோவிலுக்குள் எந்த அளவுக்கு போக முடியுமோ அது வரை தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் போகலாம் என்று காந்தியடிகள் கூறியபோது ஈவேரா ஆவேசமாய் இவ்வாறு அறிவிக்கிறார்: ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”.

தசரத ரெட்டி மங்கம்மாவுக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஈவேரா மொழியில் ஆவேசமாய் வெளிவரப்போகும் பிற்கால வார்த்தைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.

லஷ்மண ரெட்டியாருக்கு பறையர் ஜாதியைச்சேர்ந்த குணவதியின் மீது ஏற்படும் காதல் அவரது வாழ்க்கையில் ஒரு திறப்பினை உண்டாக்குகிறது. பறையர்கள் ஏன் இந்நிலையில் இருக்கிறார்கள் என்று சிந்திக்க வைக்கிறது.

”பெரிய அளவில் நிலத்தை ஆக்ரமித்து உழுது பயிர் செய்வதில் அவர்களுக்கு வெட்கமும் தயக்கமும்” இருப்பது லஷ்மண ரெட்டியால் ”கடுமையான உழைப்பாளிகளாகவும் வைத்து வாழத்தெரியாத சோம்பேறிகளாகவும்” பறையர்களைப் பார்க்க வைக்கிறது. ஆனால், உண்மை நிலை என்னவென்றால், நிலத்தை ஆக்ரமித்து உழுது பயிரிட முனைந்தால் உடனடியாக நில உடமை ஆதிக்க ஜாதிகளுடன் பெரும் பூசல்கள் உருவாகும். அந்த பூசல்களின் இழப்புகளைத்தாங்கும் வல்லமை இல்லாததால் தம் சமுதாயமே நிர்மூலமாவதை விட “வாழத்தெரியாத சோம்பேறிகளாக” வாழ்ந்து விட்டுப்போகலாம் என்று அவர்கள் ஆகியிருக்கலாம் என்கிற கோணம் அவர் சிந்தனைக்கு எட்டுவதில்லை. அவர்கள் சோம்பேறிகள் என்று சொல்வது தம் ஜாதியின் ”பரம்பரை” மேல்நிலைக்கு எளிதான ஒரு காரணத்தைக் கொண்டு வந்து அவர் காலடியில் போட்டு விடுகிறது. இதைப்படிக்கையில், பூர்வீக அமெரிக்க செவ்விந்தியர்களை விரட்டி அவர்களது சமூகங்களை நிர்மூலமாக்கி விட்டு அவர்களது ஏழ்மைக்கு குடிப்பழக்கம்தான் காரணம் என்று காரணம் சொல்லும் வெள்ளைக்காரர்களின் வாதம் எனக்கு நினைவுக்கு வந்தது.

ஆனாலும் குணவதியின் மீதான லஷ்மண ரெட்டியின் காதல், தோல்வியில்தான் முடிகிறது. இது அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாகிறது. லஷ்மண ரெட்டியின் தாய் செலம்பாத்தாளுக்கு கூழ் ஊற்றி பொங்கல் வைப்பதாக வேண்டிக்கொண்டு பையனுக்குக்கட்டி விசாலாட்சியைக் கட்டி வைக்கிறாள். “ராமகிருஷ்ண பரமஹம்சரோ, பெரியாரோ யாரா இருந்தாலும் குடும்ப வாழ்க்கைக்கு பாதிப்பில்லாம சம்பந்தம் வச்சிக்கிடணும்” என்ரு யதார்த்தம் பேசும் மனைவியாக அறிமுகமாகிறாள் விசாலாட்சி லஷ்மண ரெட்டியை ஆற்றுப்படுத்துகிறாள்.

அப்படி மாற்றியிராவிட்டால் அவரது வாழ்க்கையும் கணேச முதலி மகன் தியாகராசன் வாழ்க்கை மாதிரி ஆகிவிட்டிருக்கலாம். .

ஈவேரா நடத்தும் போராட்டம் அண்ணா நடத்தும் போராட்டம் என்று இரண்டிலும் கலந்து கொள்ளும் விசித்திரக்குழுவில் தியாகராஜன் இருக்கிறான். இத்தகையவர்களின் பொது எதிரி பிராமணர்கள். ”சாதி இழிவு தீர்வதற்கு ஆயிரம் பார்ப்பானைக் கொல்ல வேண்டுமானால் நான் அதையும் செய்வேன்” என்று பேசிய ஈவேராவின் மீது பக்தி கொண்ட தொண்டனான அவனுக்கு திருமணமோ ஒரு விபத்து போல நிகழ்கிறது.

தியாகராஜனுக்கு, ஹேமலதா என்கிற தெலுங்கு நாயக்கர் வீட்டுப்பெண் கட்சிக்காரர்கள் பேசி முடித்த கலப்புத்திருமணமாக மணமுடிக்கப்படுகிறார். அதற்குப்பின்தான் தியாகராஜனுக்கு தம் கொள்கைகளுக்கெதிரான தலைவலி வீட்டிற்குள்ளேயே பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்திருப்பது தெரிகிறது. முதலிரவில் அவள் கேட்ட எளிய நேரடிக் கேள்வியில் அவன் பொறிகலங்கிப்போகிறான்: “எதுக்கு மீட்டிங் வந்தவங்கலாம் ஐயரைத்திட்டிகினு இருந்தாங்க? வேற வேல கெடயாதா? நாம நம்ம பொழப்ப பாக்கணும். ஒருத்தர பாத்து வயிறெரியறுது கூடாது…அப்புறம் இருக்கிறதும் நம்மளவுட்டுப் போயிடும்”. “அவனுங்களாலதான் நம்ம வாழ்க்கை இப்படி நாறிகிட்டு இருக்குது” என்கிறான் தியாகராஜன். அவள் தன் கழுத்தில் தொங்கும் நகையையும் புடவையையும் அவசரமாகப்பார்த்து விட்டு நல்லாத்தானே இருக்கிறோம் என்று ஏறிட்டுப்பார்க்கிறாள்

சுயமரியாதைத்திருமணம் செய்தவனின் மனைவி இரண்டாம் நாள் இரவு முந்தானையை விலக்க அங்கே அவன் பார்ப்பதோ ஒரு பேரதிர்ச்சியை- அவள் கழுத்தில் தாலி தொங்கிக் கொண்டிருந்தது! “அம்மாதான் கழுத்து மூலியா இருக்க ஒத்துனு செப்பி அரை சவரன்ல தாலி எடுத்துக் குடுதுச்சி” என்கிறாள்.

தியாகராஜன் தன் வாழ்நாளின் அதிர்ச்சியை வீட்டிற்குள்ளேயே அனுபவிக்கிறான். ஹேமலதாவோ இவன் பேசுவதையெல்லாம் வெகுசுலபமாக விளக்குமாற்றால் பெருக்கித் தள்ளுவது போன்று தன் எளிய எதிர்வாதங்களால் தள்ளிவிட்டு அவனை நிலைகுலையச்செய்து கொண்டே இருக்கிறாள். தியாகராசனின் முரட்டுக்கோபம் அதிகமாவதை உணராமல் “சாமி லேது; பூதம் லேதுனு செப்பிதாரண்டே நரகம் நிச்சயம்” என்கிறாள். “ஐயருங்கள திட்றத விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க?.” என்று உசுப்புபவள் “அவங்கள மாரி சுத்தபத்தமா இருக்க முடியலைனுதான அவங்க மேல பொறாமை” என்று கேட்க ”அடிச்செருப்பால” என்று அவள் முகத்தில் வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்து அவளை அடிக்கத்தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் இதையும் பிராமணர்கள் சதியென்று நினைக்கத் தலைப்படுகிறான்.

பிராமணர்கள் மீதுள்ள காழ்ப்பின் காரணம் இன்னதென்று தெளிவாக கதையில் சொல்லப்படவில்லை என்றாலும் உரையாடல்களின் வழியாக அவை தொடர்ந்து கோடிகாட்டப்பட்டுக்கொண்டே வருகின்றன: அசூயை, பொறாமை, ஜாதீய சந்தேகம் ஆகியவைதான் அவை.

அன்று பிராமணர்களின் மேல் காழ்ப்பு கொள்ள பல காரணங்கள் இருந்தன, அவர்கள் தங்களை மேலோராய்க்கருதிக்கொண்டிருந்தனர் – என்று ஒரு வாதம் சொல்லப்படுகிறது. உண்மையில் இந்த குற்றச்சாட்டை எந்த ஜாதியின் மீதும் சுமத்தி விடலாம்- அந்த ஜாதியால் பாதிக்கப்பட்டதாக உணரப்படும் ஜாதிகளிடம் அந்தப்பொறுப்பை விட்டு விட வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டியதெல்லாம். வன்முறை, வெட்டு குத்து என்று இறங்காத ஜாதி, அல்லது அப்படிப்பட்ட சமூக பலம் அற்ற ஜாதி என்றால் இன்னமும் சௌகர்யம். அய்யர்களில் இருந்து அருந்ததிகள் வரை அடித்துத் துவைத்து விடலாம்.

பிராமணக்காழ்ப்பு உருவானதன் பின்னால் உள்ள சமூகவியல் காரணிகள்தான் உண்மையில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. பிரிட்டிஷ் அரசு இந்தியாவை பொருளாதார ரீதியில் பிழிந்தெடுக்கப்பட வேண்டிய பிரதேசமாக மட்டுமே பார்த்ததில் தொடங்குவது அது.

உற்பத்தியுடன் நேரடித்தொடர்பற்ற அத்தனை விஷயங்களும் பிரிட்டிஷ் அரசால் கழுத்து நெரிக்கப்பட்டன. பிராமண சாதி வேதக்கல்வி, கோவில், பூஜைகள் ஆகியவை அடங்கிய ஒரு பொருளாதாரத்தைச் சார்ந்து வாழ்ந்த ஜாதி. அவர்களுத்தரப்பட்ட நிலங்களும் மேற்சொன்ன தெய்வீக சூழல் பாதுகாக்கப்பட வேண்டி அளிக்கப்பட்டவையே. வேறு வகையில் பார்த்தால் தமிழக பிராமண ஜாதி தொழில் புரட்சியின் கச்சாப்பொருட்களைத்தர வேண்டிய காலனியாக உருவாகிக்கொண்டிருந்த அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவிற்கு எந்த வகையிலும் நேரடி உபயோகமில்லாத ஒரு ஜாதித் தொகை. இதனால் கிராமத்திலும் சிறு நகரங்களிலும் புரவலர்கள் இல்லாத நிலையில், முதலில் வெளியேறத்தொடங்கிய ஜாதிகளில் ஒன்றாகவும் அது ஆனது. புதிதாக உருவான நகர்ப்புறங்கள் பிராமணர்களுக்கு கோவில் சூழல் தாண்டியதோர் தொழிலை, புதிய வயிற்றுப்பிழைப்பைக் காட்டிக்கொடுத்தன.

சீதாராம அய்யரும் அவருக்குப்பின் சுப்ரமணிய அய்யரும் தம் ஜாதித்தொழிலிலிருந்து விலகி மோட்டார் இஞ்சின் ரிப்பேர் செய்கிறார்கள். வயிற்றுப்பிழைப்புக்கு அது போதாமல் போகும் வேளையில் சுப்ரமணிய அய்யரும் ஒரு கட்டத்தில் ஊரை விட்டு வெளியேறுகிறார். ஊரில் வேலையில்லாமல் வெளியூர் சென்று விட்ட நிலமற்ற ஏழை பிராமணக் குடும்பங்கள் இவை. பணம் என்கிற குறிக்கோளை மையமாக வைக்காத தன் குலத்தொழிலை விடுத்து, படிப்பையும் உழைப்பையும் நகரத்தில் பணத்துக்காக விற்கும் நேரத்தில் பிராமண சமூகம் புதிய சமூக அடையாளத்திற்கு வந்தடையத் தொடங்குகிறது.

நில உடைமையாளர் ஜாதிகளுக்கு கால நேரம் குறித்துத் தந்து கொண்டிருந்த ஜாதி, ஒரு தலைமுறையில் அவர்களிடம் நிலவரி கணக்கு கேட்கும் அரசு அதிகாரி என்கிற தரப்புக்கு இடமாற்றம் அடைகிறது. நிலம் சார்ந்த பொருளாதாரம், தொழில் சார்ந்த பொருளாதாரமாக மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் முதலில் பாதிப்படைந்த பிராமண ஜாதிகள் நகரங்களில் வந்தடைந்த இடத்தை அடுத்தடுத்த தலைமுறைகளில் பிற கிராமப்புற ஆதிக்க ஜாதிகளும் வந்தடையத்தொடங்கின. ஆனால் கிராமங்களில் இருந்த அதிகார சமன்பாடு, நகரங்களில் வேறு மாதிரியாக இருந்தது. குறிப்பாக கிராம பிராமணர்கள் போல் வைதீகம், கோவில், பூஜை, என்று இல்லாமல், நகர பிராமணர்கள் அரசு மற்றும் தொழிற்சாலை வேலைகளில் இருந்தனர், வேதத்திற்கு பதில் டிப்ளமாவும், சட்டமும் படித்திருந்தனர். சங்கீதமும், இந்தியும் கற்றுக்கொடுத்தனர். காபி கிளப் திறந்தனர். மெஸ் வைத்தனர். வேதக்கட்டை மூலையில் வைத்து விட்டு, தட்டச்சும் சுருக்கெழுத்தும் பயின்றனர்.

கிராமப்புற பொருளாதாரம் நகர்மயமானதன் முதல் கலாசார பலிகளில் ஒன்றாக இவ்வாறு இடம் பெயர்ந்த பிராமண ஜாதிகளின் நிலையைக் குறிப்பிடலாம். ஆனால் அதுவே அவர்களில் பலரை அரசியலை நோக்கியும் செலுத்தியது.

அதே சமயம் இது, நகர்மயமாதல் விரைவடையத் தொடங்கிய காலத்தில் கிராமத்தை விடுத்து நகரத்திற்கு வந்து சேர்ந்த கிராமப்புற ஆதிக்க ஜாதிகளுக்கு கடும் அதிர்ச்சியையும் அசூயையும் அஜீரணத்தையுமே ஏற்படுத்தியது. (இங்கு நகர்ப் புறம் என்று சொல்வது சென்னை போன்ற பெருநகரங்களை மட்டுமல்ல; அடுத்தகட்ட நகரங்களையும் இதற்குப் பொருத்திப் பார்க்கலாம்). கிராமங்களில் தன்னை அண்டிக்கிடந்த பிராமணர்கள் இப்போது அதிகாரத்தின் தரப்பாக ஆவது அவர்களுக்கு உவப்பானதாக இல்லை. பிராமண வெறுப்பின் தளத்தில் அவர்கள் தம்மைத்திரட்டிக் கொள்ளத்தொடங்கிறார்கள்.

”பாப்பானைத்திட்டணும்னா அப்படி ஒரு ஆவேசம் வருதுய்யா உனக்கு” என்று பங்காளி கணேச ரெட்டி ஆச்சர்யப்படும் அளவுக்கு லஷ்மண ரெட்டியின் தந்தை தசரத ரெட்டி பார்ப்பன வெறுப்பாளராய் இருக்கிறார். அதற்கென்ன காரணம் என்பதும் அவர் வாயிலாகவே வெளிப்படுகிறது. ”நாமெல்லாம் ஷத்ரிய வம்சம்டா” என்று தந்தை சொல்வதைக் கேட்டு வளர்ந்தவர் தசரத ரெட்டி. எவன் அதிகாரத்திலிருக்கானோ அவனுக்கு சேவை செய்து வாழ்க்கையோட்டுவது பார்ப்பான் விதி என்று சொல்லும் கணேச ரெட்டியைப்பார்த்து “அதிகாரத்துல இருக்கறவனுக்கு சேவகம் செய்றானுங்க…கூடவே அதிகாரமும் பண்றாங்களே” என்று ஆற்றாமையுடன் சொல்வது திராவிட இயக்கத்தின் அச்சாணியான உளவியலைப் படம் பிடித்துக்காட்டும் ஓர் இடம். தமக்கு ஒரு வேலை பார்ப்பானுக்கு ஒரு வேலை என்று இருந்தது, படிப்பு முக்கியமாகிப்போன அந்த கால கட்டத்தில் “அவன் செய்ற வேலைதான் ஒசத்தினு ஆகிப்போச்சே” என்கிற எரிச்சலாக வெளிப்படுகிறது.

இந்த எரிச்சலுக்கான வடிகாலாக, நகர்ப்புறங்களில் பிராமணர்களை எதிர்க்கவும் ஆதிக்க ஜாதிகளின் செல்வாக்கான கிராமப்புற இடத்தை நகரங்களில் மீளுருவாக்கம் செய்யவும் உருவான கட்சியாக ஜஸ்டிஸ் கட்சியும் தென்னிந்திய நல உரிமைச்சங்கமும் உருவெடுத்தது. அவற்றில் பெரும்பான்மையாய் இருந்தது முதலியார்கள். இந்த ஆதிக்கம் நகர்ப்புற கல்விநிலையங்களிலும் பரவியது.

”தென்னிந்திய நல உரிமைச்சங்கம், ஜஸ்டிஸ் பார்ட்டி போன்றவற்றில் முதலியார் சமூகம் அதிகப்பங்கு வகித்ததால், பச்சையப்பன் முதலியார் கல்லூரியிலும் அதனுடைய தாக்கமும் இயல்பாகவே இருந்தது” என்கிறார் ஆசிரியர். பச்சையப்பன்கல்லூரி திராவிட இயக்க வளர்ச்சி சூல் கொண்ட வளாகமாக ஆவதும் இதனால்தான்.

பச்சையப்பன் கல்லூரியில் அன்றைய பெரியார் தாசன் – இன்றைய அப்துல்லாஹ்-இன் மாணவனாகும் லஷ்மண ரெட்டி மகன் நடராஜனுக்கும் பார்ப்பனக்காழ்ப்பு பொங்கிப் பொங்கி எழுகிறது. ஈவேராவைப்போலவே பார்ப்பனர்களைக் கொன்று போட்டு விட வேண்டும் என்று ஆவேசம் கொள்கிறான். இத்தனைக்கும் எந்த பார்ப்பனனும் அவனுக்கு எதுவும் செய்யவில்லை. சொல்லப்போனால், பார்ப்பனனிடம் அவன் நேரடியாகப் பேசியது கூடக்கிடையாது. ஆனால் அவர்கள் தம்மிடமிருந்து வித்யாசமாய் இருப்பதே அவனது கோபத்தைக்கிளறப் போதுமானதாய் இருக்கிறது. தான் பேசிய முதல் பார்ப்பனப்பெண் அவனை நட்பாகப் பார்த்து போலிஸிடமிருந்து காப்பாற்றி வீட்டிற்கு அழைத்துப்போய் காபி கொடுத்து உபசரிக்கிறாள். அந்த அன்பைக்கூட அவனால் திருப்பித்தர முடியவில்லை. தனக்குள் அவன் உருவாக்கி கூர் செய்து வைத்திருக்கும் பிராமணக் காழ்ப்பு அவளது அன்பையும் நிராகரிக்கிறது. திடர்ந்து, காழ்ப்பால் நிறைந்த அவன் மூளை கலங்கிப்போகும் காலமும் வருகிறது. பிற்காலத்தில் விடுதலைப்புலி ஆதரவாய்ப்பேசப்போய் அதன் தொடர் விளைவாய் பாழுங்கிணற்றில் விழுந்து தலையில் அடிபட்டு படுத்த படுக்கையாகிறான். அவனுக்கு ஏன் தலையில் ஏன் அடிபட வேண்டும்? ஒருவேளை காழ்ப்பு என்பது தன்னையே திருப்பித்தாக்கும் ஆயுதமோ?

கணேச முதலி மகன் தியாகராஜன் வாழ்க்கையும் ஹேமலதாவால் அடிபட்டு, பாழாகிறது; ஆனால் காழ்ப்பென்ற கொந்தளிப்பை விட்டு விலகி பாண்டிச்சேரி அன்னையின் தியானத்திற்கு (பிராமண பாஷை இல்லாமல் சாதாரணமாய்ப் பேசும் ஒரு பிராமணரால்) அறிமுகப்படுத்தப்படும் நேரத்தில் அது அவனைப் பரந்து கனிந்த ஒரு சம நிலைக்கு கொண்டு சேர்க்கிறது.

கணேச முதலி மகன் தியாகராசன் பாண்டிச்சேரி அன்னையால் ஆற்றுப்படுத்தப்படுகிறான். ஆறுமுக முதலி மகன் சிவகுரு சினிமா மோகம், பெண் மோகம் என்று திசை மாறி தந்தையால் கைகழுவப்பட்டு ரோகம் வந்து மாம்பலம் சிவ-விஷ்ணு கோவில் வாசலில் பிச்சையெடுத்து இறக்கிறான். லஷ்மண ரெட்டியின் பெண் நாகம்மை சாய் பக்தையாகிறாள்.

எண்ணங்கள் மனோநிலையை உருவாக்குகின்றன, மனோநிலை அதற்கான கற்பனா உலகில் தனக்கான எதிர்காலங்களைச் சிருஷ்டித்துக்கொண்டே இருக்கிறது. காழ்ப்பும் வெறுப்பும் ஒருவனை அவற்றுக்கேயான சம்பவங்களில் கொண்டுபோய்க் கோர்த்துவிட்டு விடுகிறது. ஒவ்வொரு சம்பவமும் அதற்கானதொரு எதிர்காலத்தைப் பிறப்பித்துக்கொண்டே போகிறது. சம்பவங்கள் முட்டிக்கொள்கையில் அவற்றின் எதிர்காலங்களும் மோதிக்கொள்கின்றன. லஷ்மண ரெட்டியைக்கொல்ல துரை ஆள் அனுப்பிய விஷயம் அவனுக்குத் தெரிந்திருந்தால் வெள்ளைக்காரனை விட பிராமணன் மோசம் என்று காழ்ப்பை வளர்த்துக்கொள்ளாமல் இருந்திருப்பானோ? பிராமணப்பெண்ணை திருமணம் செய்திருந்தால் நடராஜனுக்கு தலையடிபட்டு மூளை கலங்கிப்போகாமல் இருந்திருக்குமோ? விசாலாட்சிக்கு லஷ்மண ரெட்டி விட்டுக்கொடுத்ததுபோல ஹேமலதாவிற்கு தியாகராஜன் விட்டுக்கொடுத்திருந்தால் அவன் வாழ்க்கை இவ்வளவு அடிபட்டிருக்காதோ?

ஹேமலதாவின் வெறுப்பு அவள் கையில் பச்சை குத்தியிருந்த அதிமுக அண்ணா உருவமாய் வடிவெடுத்திருக்கிறது. பர்னர் சூட்டில் பழுத்துக்கிடந்த இரும்பு வளையத்தை எடுத்து பச்சையாய் இருந்த ”அண்ணாவின் மேல் வைத்தாள்.” அண்ணா உருவம் இல்லாத தன் கையைப்பார்த்து பரவசம் அடைகிறாள். அவள் பச்சை குத்தியது அண்ணாவை அல்ல, வெறுப்பை என்பது புரிகிறது. வெறுப்பைச் சுட்டெரித்த அவளுக்கு அந்த வலி இனிக்கிறது. களங்கம் நீங்கிய புது வெளிச்சம் வீடெங்கும் நிரம்பி வழிகிறது.

லஷ்மண ரெட்டி, பறைப்பெண் மேல் கொண்ட காதல் அன்று ஒருவித ஜாதிக்காழ்ப்பால் தோல்வியடைய, அவர் மகனுக்குள் துளிர்க்கும் காதலின் ஈர்ப்பை இன்று அவனுள் உருவாக்கப்பட்டு விட்டிருந்த வேறுவித ஜாதிக்காழ்ப்பு கொன்று போடுகிறது. கொள்கையை வாழ வைக்க அவர் மகன் மணந்த ”ஷெட்யுல்ட் காஸ்ட்” பெண் தலையில் அடிபட்டு மூளை கலங்கிக்கிடக்கும் அவனுக்கு வாழ்க்கை தரும் சேவகியாகிப் போகிறாள்.

ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் அந்த காலகட்டத்தின் குரல் போன்று வந்து ஆசிரியர் முழங்கி விட்டுச்சென்றிருப்பது கொஞ்சம் கூட அவசியமில்லாதது. கதையோட்டத்தில் ஒட்டாமல் துருத்தி நிற்கும் அபத்தங்கள் அவை. தனது அரசியல் பிரசாரத்தைத் தூவுவது தவிர படைப்பின் செழுமைக்கு எந்த வகையிலும் அது பயன்படவில்லை. நாவலின் போக்கில் வரும் ஈவேராவை விதந்தோதும் பிரசாரப்பக்கங்கள் லஷ்மண ரெட்டி, ஏதோ ஒருதளத்தில் வெட்டுப்புலி ஆசிரியரின் புனைவுலகப் ப்ரதிதானோ என எண்ணத்தோன்றுகிறது. தீபாவளி மதவாதம், ஆனால் ரம்ஜான் நோன்புக்கஞ்சியும் கிறிஸ்துமஸ் வாழ்த்தும் அப்பழுக்கற்ற செக்யுலரிஸம் என்கிற வழியில் இந்துத்துவ கட்சிகளுடன் கூட்டணி வைப்பது மதவாதம், ஆனால் தமுமுக, முஸ்லீம் லீக், கிறித்துவ ஜனநாயக முன்னணி என்பதெல்லாம் மதவாதமற்ற கட்சிகள் என்கிற கன கச்சிதமான திராவிட அரசியல் முரண்பாட்டை ஆசிரியரும் எந்த உறுத்தலும் இன்றி கிளிப்பிள்ளைபோல தானும் சொல்லிச் செல்கிறார்.

இவற்றையெல்லாம் தாண்டி, அரசியல் கதை என்றாலும், எழுத்து நடையின் அபாரம் அங்கங்கே வைரம் போல பளீரிடுகிறது. தகவல் முத்துக்கள் நாவலில் வழியெங்கிலும் பொதிந்து கிடக்கின்றன. சிந்தனைக்கு அழைக்கும் நுட்பமான பல விஷயங்கள் தெளிக்கப்பட்டுள்ளன. கதையின் மடிப்புகள் பல விதங்களில் கதையைப் படிக்கக்கூடிய சாத்தியங்களை நமக்குக்காட்டிக்கொண்டே இருக்கின்றன.

லஷ்மண ரெட்டி வெள்ளைக்காரன் குதிரையில் திருட்டுத்தனமாய் ஏறி சவாரி விடுவதன் பரவச விவரிப்பில் கதை தொடங்குகிறது. அருமையான தொடக்கம். வரலாற்றின் சம்பவங்களால் அடித்துச்செல்லப்படும் அவரது வாழ்க்கை கதையின் முடிவில் ஈஸி சேரில் கொண்டு வந்து அவரைப் போடுகிறது. பெரியார் பக்தராய்த்தொடங்கும் லட்சமண ரெட்டி பிற்காலத்தில் ”தான் மட்டுமேயான ஒரு இயக்கமாக மாறிப்போகிறார். ஒருகாலத்தில் ஊரையே எதிர்க்கத்துணிந்தவர், பேரனுக்கு ”ராஜேஷ் என்று பெயர் வைத்தது நாராசமாய் இருந்தாலும்” ஒன்றும் சொல்ல சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுகிறார். அந்த அபத்தமான இடத்தில் நின்று கொண்டு காலம் அமைதியாய்ப் புன்னகைக்கிறது. அந்தப்புன்னகையை நமக்கு அடையாளம் காட்டும் கணத்தில் படைப்பூக்கத்தின் சாராம்சமான ஓர் இடத்தை”வெட்டுப்புலி” தொட்டு விடுகிறது. வெற்றிகரமான ஒரு புனைவிற்கு வேறு என்ன வேண்டும்?