வாசகர் மறுவினை


சொல்வனத்தில் வெளியான டென்னிஸ் ரிச்சீ அஞ்சலியைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. ஊரே ஸ்டீவ் ஜாப்ஸ் ஜெபித்து இருக்க, நீங்களாவது பொருத்தமான பதிவை வெளியிட்டதற்கு நன்றி. தினமணிக் கதிரில் சிலிகான் குறித்து சுஜாதா எழுதிய சுவாரசியத்துடன் ஆங்கிலத்தில் அவருடைய ‘சி’, யூனிக்ஸ் புத்தகங்கள் அமைந்திருந்தன. தொழில் நுட்பத்தை அறியாதவருக்கு அதைக் குறித்த அறிமுகமாக எழுதுவது எத்தனை கடினம்!

அவரைத் தொடர்ந்து கடந்த வருடத்தில் மறைந்த Alan Haberman, Robert Morris, John McCarthy & Michael Hart ஆகியோருக்கும் குறிப்புகள் பகிர இயலுமா?

அன்புடன்

பாஸ்டன் பாலா

-o00o-

டென்னிஸ் ரிச்சீ -க்கு அஞ்சலி அருமையான கட்டுரை. இதை வெளியிட்ட சொல்வனத்திற்கு நன்றி. கட்டுரையை எழுதிய கார்கில் ஜெய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். விளம்பரம் மற்றும் பகட்டு நிறைந்த கணினி மென்பொருள் உலகில், ரிச்சீ போன்ற மென்பொருள் விஞ்ஞானிகளை மறக்காமல் சிலராவது இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படிப்பட்ட கட்டுரைகள் வெளிவரவில்லை என்றால், தமிழ் கூறும் நல்லுலகம், என்னமோ பில் கேட்ஸ் தான் கணினியை கண்டு பிடித்தவர் போல நம்பி விடக் கூடும். உண்மையான விஞ்ஞானிகளை மறந்து, கேட்ஸையும், ஜக்கர்பர்க்கையும் போற்றும் இளைஞர்களுக்கு இது போன்ற கட்டுரைகள் மிகத் தேவை.

கணினி விஞ்ஞானம் பற்றி தமிழில் எழுதுவது எளிதல்ல. ஜெய் சற்று ஆங்கிலச் சொற்களுக்கு தமிழாக்க முயற்சி செய்திருக்கலாம் என்பது என் கருத்து. உதாரணம், நினைவு மாற்று (memory swap) அல்லது, சூழ்நிலை விசை (context switch) என்று எழுதுவதோடு, இவற்றைப் பற்றி எளிமையாக விளக்கியும் இருக்கலாம்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

நன்றி
ரவி நடராஜன்