நான்கு கவிதைகள்

வேட்கை

எண்ணை
பற்றியெரியும் தீயாய்
பிடித்தவர்களையும்
பிடித்தவற்றையும்
பற்றிக் கொண்டிருக்கிறேன்
தீவிரமாய்.
விடுபடும் வேட்கையில்
நெளிகிறதோர்
நெருப்புச் சுடர்.

காலடித் தவளைகள்

மழையில் நனைந்து
ரப்பர் செருப்புகளோடு
ஹாஸ்பிடல் நுழைந்தேன்.
வளாகத்தில் நடந்தபோது
காலடித் தவளைகள்
ஒலிக்கத் துவங்கின.

காகித மௌனம்

உதடு துடிக்க
உற்றுப் பார்க்கின்றன
திறக்கப்படாத புத்தகங்கள்.
மூடிய புத்தகங்களின் மௌனம்
காந்தப்புலமாய் கவர்ந்திழுக்கிறது.
திறந்துவிட்டால்
உள்ளக்கிடங்கை உரக்கவே இறைத்துவிடும்.
அள்ளிக்கிடத்தி உரையாடத் தோன்றாமல்
உறங்கிவிடுகிறேன் தினமும்.

பூத்திருக்கும்

பூமியின் இதழ்கள்
புலப்படுவதே இல்லை
மொட்டு அவிழ்ந்து குவிய
பொழுது புலர்ந்து சரியும்.