எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் சமீபத்திய நாவல் ‘கலங்கிய நதி’. அவரது ஆங்கில நாவலான ‘The Muddy River’ என்ற ஆங்கில நாவலை அவரே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு மத்திய அரசு அதிகாரியின் வாழ்க்கையினுடான பயணத்தில் பல விஷயங்களை பேசிச் செல்லும் இந்நாவலின் வடிவம் தமிழுக்குப் புதிது. இந்நாவல் குறித்து பி.ஏ.கிருஷ்ணனுடன் நடந்த ஒரு உரையாடல் இது. ’ஆங்கிலத்தில் நன்றாக எழுதுபவன் என்ற பெயரை விட தமிழில் நன்றாக எழுதுபவன் என்ற பெயர் எனக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்தால் மிகவும் பெருமையாக இருக்கும்’, என்று சொல்லும் கிருஷ்ணன், இந்த உரையாடலில் தன் நாவல் குறித்து மட்டுமல்லாமல், தன்னுடைய இளவயது குறித்தும், அதிகார மட்டத்தில் நிகழும் ஊழல், காந்தியம், அண்ணா ஹசாரே முதலிய பலவற்றைக் குறித்தும் பி.ஏ.கிருஷ்ணன் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.
சேதுபதி அருணாசலம் : முதலில், புலிநகக்கொன்றை நாவலுக்கும், கலங்கிய நதி நாவலுக்கும் இடையில் இத்தனை கால இடைவெளி ஏன்?
பி.ஏ.கிருஷ்ணன் : கலங்கிய நதியின் முதல் வரைவை நான் 2002ம் ஆண்டே எழுதி முடித்து விட்டேன். திரும்பப் படித்தபோது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. மாற்றங்கள் பல செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போதிலும் சில சொந்தக் காரணங்களினால் என்னால் நாவலின் பக்கம் போக முடியவில்லை. வேலைப்பளு வேறு. 2009ம் ஆண்டு திரும்ப வந்தேன். செப்டம்பர் மாதம், பதினைந்து நாட்களில் செய்ய நினைத்த மாற்றங்களைச் செய்தேன்.
ஏன் திரும்ப நாவல் எழுத வந்தாய் என்று கேட்காததற்கு நன்றி.
சேதுபதி : ஒரு நாவலை இருவேறு மொழிகளில் ஒருவரே எழுதும்போது சந்திக்கவேண்டிய சவால்கள் சுவாரசியமானவை என நினைக்கிறேன். குறிப்பாக, நாவலை ஆங்கிலத்துக்கு வேறு ஒரு எழுத்தாளர் மொழிபெயர்க்கும்போது, அவருக்குப் பெரிய சுதந்திரங்கள் இருப்பதில்லை. மூலக்கதையை மிகவும் faithful-ஆக அப்படியே திருப்பித் தரவேண்டும். ஆனால் எழுத்தாளரே வேறொரு மொழியில் திரும்ப எழுதும்போது அவருக்கு சுதந்திரங்கள் அதிகம். தன்னுடைய எழுத்து என்பதால், எழுதும் மொழிக்கேற்ப கவித்துவமான வடிவமைப்புகளைத் தரமுடியும். Muddy River நாவலின் கூறுமொழி plain-ஆக இருந்தது எனக்கு ஏமாற்றமளித்தது. ஏனென்றால் என் மனதிலிருந்த புலிநகக்கொன்றை மொழியாளுமையே வேறு. Muddy River – அதன் geography மற்றும் dark humor காரணமாக உபமன்யு சட்டர்ஜியின் படைப்புகளை நிறைவூட்டியது. ஆனால் காலச்சுவடில் வெளியொகியிருக்கும் ‘கலங்கிய நதி’ நாவலின் பகுதிகள் என்னை வியப்புக்குள்ளாக்கின. ஆங்கில வடிவுக்கும், தமிழ் வடிவுக்கும் சாராம்சம்தான் ஒன்றே தவிர, சொல்லப்பட்ட விதம், மொழியாளுமையில் தமிழ் வடிவம் மிகவும் கவித்துவமாக வந்திருக்கிறது. அங்கே என்னால் புலிநகக்கொன்றை கிருஷ்ணனைப் பார்க்க முடிகிறது. இப்படி இரு வேறு மொழிகளில் எழுதும் அனுபவம் குறித்தும், அதில் சந்திக்க வேண்டிய சவால்களைக் குறித்தும் உங்கள் கருத்துகளைக் கூறுங்களேன்?
கிருஷ்ணன் : ஆங்கில நாவலின் தமிழ் வடிவத்தை நானே கொண்டு வருவதால் பல சுதந்திங்களை எடுத்துக் கொள்ள முடியும் என்பதில் ஐயம் இல்லை. தமிழ் என் தாய் மொழி. என்னுடைய தந்தையின் காலடியில் அமர்ந்து கற்ற மொழி. என் தமிழ் கவித்துவமான வடிவரமப்புகளுடன் இருக்கிறது என்று நீங்கள் கருதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உபமன்யு சட்டர்ஜி அரசு அலுவலகங்களில் நடைபெறுவதைப் பற்றி எழுதியிருக்கிறார். எனது நாவலும் ஒரு அரசு அதிகாரியைப் பற்றியது. இதைத் தவிர எனது நாவலுக்கும் அவரது படைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் மொழியைக் கையாளும் விதம் அவர் கையாளும் விதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனது பாத்திரங்கள் இயங்கும் தளங்களும் வேறு.
The Muddy River நாவலின் கதையமைப்பு சிறிது சிக்கலானது (என்ன சிக்கல் என்பது பற்றி பின்னால் கூறுகிறேன்). அந்தக் கதையை எனக்கு அலங்காரங்கள் அதிகம் செய்யாமல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நினைத்தேன். அதனால் ஆங்கிலத்தில் எழுதும் போது மொழி விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தேன். இப்படி எழுதியிருக்கும்போதே நான் மிகவும் கடினமான மொழியில் எழுதியிருக்கிறேன் என்று சிலர் சொல்கின்றனர். தம்பி இரா.முருகன் ஆங்கில வடிவம் தமிழை விட நன்றாக வந்திருக்கிறது என்று சொல்கிறார். ஆங்கிலம் மட்டும் தெரிந்த நண்பர்கள் இந்த நாவலின் ஆங்கிலம் The Tigerclaw Tree நாவலின் மொழியை விட மிகக் கச்சிதமாக அமைந்திருப்பதாகக் கூறுகிறார்கள். எனக்கே அப்படித்தான் தோன்றுகிறது.
மொழியைக் கையாளுவதைப் பற்றி இரு உதாரணங்கள்:
“அவளது முகம் அடுத்தது காட்டும் பளிங்கு அல்ல.’
தமிழ்த் தெரிந்தவனுக்கு திருக்குறள் உடனே நினைவு வரும். இதை ’Her face is not a mirror that reflects’ என்று ஆங்கிலத்தில் எழுதினால் வாசகனிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாது. இதை போன்று ஆங்கிலத்தில் ‘In the novel, I simper over my husband’s little gifts. I keep thanking him for having me as his wife.’ என்ற வாக்கியங்களைப் படித்தால் ஆங்கிலம் பயின்றவர்களுக்கு ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நினைவிற்கு வரும். இவற்றின் தமிழ் வடிவம்: என் கணவன் கொடுக்கும் சிறிய பரிசுகளால் நான் பூரிப்பு அடைகிறேன். அவன் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டதற்காக தினமும் (மனதால்) நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த வாக்கியங்கள் தமிழ் வாசகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
ஆங்கிலத்தில் வார்த்தைகள் அதிகம். ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழில் வார்த்தைத் தட்டுபாடு. அது எனது தமிழ் அறிவுக் குறைவால் விளைந்ததாக இருக்கலாம். நாவலில் வரும் சில தொழில்நுட்பம் தொடர்பான சொற்களை தமிழில் கொண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தது. ஆங்கிலத்தில் முதலில் எழுதி முடித்ததால் தமிழில் நகாசு வேலை செய்ய முடிந்தது. தமிழிலும் எளிய மொழியில் எழுத முயன்றிருக்கிறேன்.
ஆங்கிலத்தில் நன்றாக எழுதுபவன் என்ற பெயரை விட தமிழில் நன்றாக எழுதுபவன் என்ற பெயர் எனக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்தால் மிகவும் பெருமையாக இருக்கும். இதையே நான் பேசும் மேடைகளில் (கேட்பவர்களில் தமிழர்கள் குறைவாக இருந்தாலும்) சொல்லி வருகிறேன்.
சேதுபதி : புலிநகக்கொன்றை போலில்லாமல், கலங்கிய நதி இரண்டு அடுக்குகளாக நகர்கிறது. நாவலின் சலிப்பூட்டும் பகுதிகளை விமர்சிக்க வேண்டும் என்று நினைத்தால் அடுத்த பக்கத்திலேயே அதை சுகன்யாவும், மற்றவர்களும் விமர்சித்துவிடுகிறார்கள். நாவலுக்குள்ளேயே ஓடும் நாவல் விமர்சனம், வெறும் உத்தியாக மட்டுமில்லாமல், அர்த்தபூர்வமாகவும் உருவாகியிருப்பது நாவலின் இறுதிப் பகுதிகளில் தெரிகிறது. இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
கிருஷ்ணன் : கலங்கிய நதி ரமேஷ் சந்திரனின் வாழ்க்கையைப் பற்றிய நாவல். மற்றவர்கள் அனைவரும் (சுகன்யா உட்பட) அவனை மையமாகக் கொண்டே இயங்குகிறார்கள். ஆனால் நாவலில் சந்திரனுக்கே தெரியாத பல நிகழ்ச்சிகள் நேர்கின்றன. இதனால் நாவலில் வருபவர்கள் அவற்றைப் பற்றிப் பேசினால் நாவலுக்கு இன்னொரு பரிமாணம் கிடைக்கும் என்று நினைத்தேன். உதாரணமாக அனுபமாவைப் பற்றி சந்திரன் அதிகம் பேசுவதில்லை. அவளைப் பற்றிய ஒரு முழுச் சித்திரம் மற்றவர்கள் வாயிலாகவே கிடைக்கிறது. மேலும் நேசிப்பவர்களுக்கிடையே நெருக்கம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு இடைவெளியும் இருக்கிறது. இது ஒருவருக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பைச் சிறிதளவும் குறைப்பதில்லை. ஆனாலும் அன்புடை நெஞ்சங்கள் தாங்கலந்தாலும் வானம் நீரை மீண்டும் இழுத்துக் கொள்கிறது. செம்புலம் உலர்ந்து விடுகிறது. வானம் மறுபடியும் பொழியும், நீர் திரும்பச் செம்புலத்தை வந்தடையும் என்ற நம்பிக்கையே இந்த நாவலின் மைய அச்சு. கதையின் இரு முக்கியமான பாத்திரங்களான சந்திரனும், சுகன்யாவும் இந்த நம்பிக்கையை வெவ்வேறு பாதைகளில் பயணம் சென்று சேர்ந்தடைகிறார்கள் அவர்களது பயணங்களைப் பற்றிப் பேசும் ஒரு சிறிய முயற்சியே இந்த வடிவம்.
சேதுபதி : நாவலின் மைய கதாபாத்திரம், அறிவுஜீவியான ரமேஷ், நாவலின் இறுதிக்கட்டத்தில் மெல்ல மெல்ல காந்தியத்துக்கு நகர்ந்து வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதை ஒருவிதத்தில் மார்க்ஸியத்தில் நம்பிக்கை கொண்டிருந்த பி.ஏ.கிருஷ்ணன், மெல்ல காந்தியத்துக்கு நகர்ந்து வந்திருக்கிறார் என்று சொல்லலாமா?
கிருஷ்ணன் : நான் காந்தியைப் பிரிந்ததே இல்லை. இள வயதில் அவர் மீது கோபமாக இருந்தேன், அவ்வளவுதான்.
எனது நண்பரும், கல்பனா ஜோஷியின் மருமகளும், டெலிக்ராப் பத்திரிகையின் தில்லி ஆசிரியருமான மானினி சட்டர்ஜி சமீபத்தில் மறைந்த ஜார்ஜ் விட்மனைப்(The Shakespeare and Company என்ற புகழ் பெற்ற புத்தக்கடையை பாரிஸில் நடத்திக் கொண்டிருந்தவர்) பற்றி கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இந்த வரிகள் வருகின்றன:
He once asked me, “Do you know the greatest line Marx ever wrote?” As I stuttered “Workers of the world unite….” he cut me short with a “No, no, no, no, no… Marx’s greatest line was, ‘Live for humanity’.
மானுடத்திற்காகவே வாழ்ந்தவர் காந்தி. அவரை விட்டு விலகி நிற்பது என்பது இயலாது.
சேதுபதி : நாவலின் மிக முக்கிய பகுதி பக்ஷிராஜ ஐய்யங்காரைப் பற்றியது. அவர் டெல்லிக்கு வந்து காந்தி சமாதியைத் தரிசிக்க முற்படும் சித்தரிப்புகள் என்னை மிகவும் பாதித்தவை. தமிழில் உங்கள் மொழியாளுமையில் இன்னும் அழுத்தமாக அப்பகுதிகள் வரும் என எதிர்பார்க்கிறேன். உங்கள் தந்தையின் அரசியல் பார்வைகள் உங்கள் மீது என்னவிதமான பாதிப்புகளை செலுத்தின?
கிருஷ்ணன் : பக்ஷிராஜ ஐயங்காரின் மரணம் சென்னை மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்தது. சந்திரனின் தந்தைக்கும் அவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இருவரும் காந்தியவாதிகள் என்பதுதான். எனது தந்தை காந்தியை உணர்வுப்பூர்வமாக தலைவராக ஏற்றுக் கொண்டவர். கம்பனைப் படித்த அளவு காந்தியை அவர் படித்ததாக எனக்குத் தெரியவில்லை. நாவலில் வரும் தந்தை காந்தி எழுதியதை நன்கு படித்தவர்.
எனக்கு அரசியல் ஓரளவு புரிய ஆரம்பித்தபோது காங்கிரஸ் கட்சியில் இருப்பதா, அல்லது ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்குச் செல்வதா என்ற மனத் தடுமாற்றத்தில் என் தந்தை இருந்தார். ராஜாஜியின் வியாசர் விருந்து எனக்குப் பிடித்திருந்தது. அவரது அரசியல் அல்ல. அதனால் தந்தையுடன் அரசியல் விவாதங்கள் செய்வதை கூடிய வரையில் தவிர்த்துக் கொண்டிருந்தேன்.
எல்லா இளைஞர்களையும் போல நானும் முதலில் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, வெண்பாக்கள் எழுதுவதிலும் அடுக்குமொழிகளைத் எழுதுவதிலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நேருவைப் பற்றியும் சோஷியலிசத்தைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தவர் தந்தையின் நண்பர் கோபால பிள்ளை.
என் தந்தை மாற்றுக் குறையாத ஜனநாயக வாதி. என்னைத் தடுதாட்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை..
சேதுபதி : கடந்த இரு வருடங்களில் ஒரு புதிய காந்தி அலை உருவாகியிருக்கிறது. காந்தியைப் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கருத்தரங்கங்கள் நடக்கின்றன. இதே காலகட்டத்தில்தான் அண்ணா ஹஸாரேயும் தன் லோக்பால் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். ஒரு பக்கம் நடுத்தர வர்க்கத்து மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும், இன்னொரு பக்கம் தீவிரமாக விமர்சிக்கவும் படுகிறார் அண்ணா ஹஸொரே. அவரைப் பற்றி உங்கள் கருத்துகள் என்ன?
கிருஷ்ணன் : சிலர் கூறுவது போல அவருக்கு ரகசிய திட்டம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாக் காந்தியவாதிகளையும் போல அவர் பிடிவாதக்காரர். படிப்பறிவு இல்லாதவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கலையை அதிகம் அறியாதவர்.
ஊழலை மிக அருகில் இருந்து பார்த்தவர்களில் நானும் ஒருவன். அதை வேரோடு களையா விட்டால் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளையும் என்று நான் நம்புகிறேன்.. அண்ணா குரல் கொடுத்தது போல இவ்வளவு வலுவாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் யாரும் இல்லை. ஊழலைக் களைய நாம் எடுத்து வைக்கும் முதல் அடி அவருடைய இயக்கம். ஒரு நீண்ட பயணத்தின் முதல் அடி. கடைசிவரை அண்ணா இருப்பார் என்று கூற இயலாது.
இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். அவரது பரிவார தேவதைகள் எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறார்கள்.
சேதுபதி : நாவலில் இந்திய அரசு இயந்திரத்தைக் குறித்த அழுத்தமான விமர்சனங்களை வைத்திருக்கிறீர்கள். முக்கியமாக Bureaucracy-யின் உள்ளரசியல், எந்த விஷயத்தைக் குறித்தும் முடிவெடுக்க முடியாமல் ஆறப்போடுதல் போன்றவற்றைக் குறித்து எழுதியிருக்கிறீர்கள். நாவலில் வரும் peanut protocol உண்மையாலுமே நடந்த விஷயமா?
கிருஷ்ணன் : உண்மையில் நடப்பது இன்னும் மோசம். அரசியல்வாதிகள் மீது நமக்கு இருக்கும் கோபத்தில் அரசு அதிகாரிகளின் தடித்தனங்களை மறந்து விடுகிறோம். நான் இந்த நாவலை எழுதியதின் முக்கிய காரணம் மிகப் பெரிய ஊழல் ஒன்றை அம்பலப்படுத்துவதற்காகத்தான். அது உண்மையாக நடைபெற்ற ஊழல். இன்று வரை அரசிற்குச் சேர்ந்தாக வேண்டிய பணம் வந்து சேரவில்லை. பணத்தை அரசிற்குக் கொண்டு சேர்க்க, நான் அரசு ஊழியனாக இருந்தபோது மேற்சகாண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.
Nut Protocol எனது கற்பனை.
சேதுபதி : அஸ்ஸொம் பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்களையும் இந்த நாவல் பேசுகிறது. எல்லாத் தரப்பினர்களின் பார்வைகளையும் கொடுக்க முயன்றிருக்கிறீர்கள். அஸ்ஸாம் பிரச்சனையை எப்படித் தீர்க்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்?
கிருஷ்ணன் : பிரச்சனையை தீர்ப்பதற்கு வழிகள் சொல்லும் அளவிற்கு நான் அஸ்ஸாமைப் பற்றி அறிந்தவன் அல்ல. ஆனால் அஸ்ஸாமிய மக்களில் பெரும்பாலானவர் இந்தியாவுடன் இணைந்து இருப்பதையே விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன். ULFA இயக்கத்தின் இறுதி அத்தியாயங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என்ன தேவை என்பதை அவர்கள் தீர்மானிக்கும் அதிகாரம் அஸ்ஸாமிய மக்களிடம் உண்மையாகப் போய்ச் சேர்ந்தால் அஸ்ஸாம் இந்தியாவின் செல்வமிக்க மாநிலங்களில் ஒன்றாக மாற வாய்ப்பு இருக்கிறது. இது நடைபெறாவிட்டால், ULFA புத்தயிர் பெறும்.
இப்புத்தகம் குறித்த விமர்சனத்தை இங்கே படிக்கலாம் : கலங்கிய நதியும், திரும்பிய விமானமும்
2 Replies to “’கலங்கிய நதி’ – பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு உரையாடல்”
Comments are closed.