கலங்கிய நதியும், திரும்பிய விமானமும்

சில படைப்புகளின் சில வரிகள் படித்தவுடனேயே மறக்க முடியாத இடத்தைப் பிடித்து அழுத்தமாக நெஞ்சில் அமர்ந்து விடுகின்றன. ‘அந்த மரத்தை வெட்டுவதற்காகக் கொண்டு வந்திருந்த கோடரி அதே மரத்தின் நிழலில்தான் வைக்கப்பட்டிருந்தது’ என்று துவங்குகிறது வண்ணதாசனின் ஒரு சிறுகதை. மொத்த சிறுகதையின் சாரத்தையும் அந்த முதல் வாக்கியம் கரைத்துக் கொடுத்துவிட்டது. அதற்கீடான வரிகளை, ‘காலச்சுவடி’ல் வெளிவந்துள்ள (அவர்கள் பதிப்பாக வரவிருக்கும், பி.ஏ.கிருஷ்ணனின் இரண்டாவது நாவலான ‘கலங்கிய நதி’ யின்) நாவல் பகுதியில் உள்ள ஒரு உரையாடலாகப் படித்தேன்.(http://kalachuvadu.com/issue-144/page67.asp)

‘அற்புதமான நதி. எத்தனைதரம் பார்த்தாலும் திகட்டாது.’

‘ஏன் திகட்டும்? நீங்கள் அதன் ஓரத்தில் உட்கார்ந்து, அதன் வெள்ளத்தில் மிதந்து பிழைக்கத் தேவையில்லை.’

படித்தவுடன் என்னைக் கவர்ந்து மீண்டும் மீண்டும் படிக்க வைத்த அத்தியாயம் அப்பகுதி. இத்தனைக்கும் இந்த நாவலின் ஆங்கில வடிவமான ‘The Muddy River’ புத்தகத்தை நான் அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு படித்திருந்தேன். ஆனாலும் தமிழ் வடிவத்தின் கவித்துவமும், சரளமும் ஆங்கில வடிவில் என் மனதிலிருந்த படைப்பைப் பல மடங்கு உயர்த்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

ஃபின்லாந்து கிளம்புவதற்கான ஏற்பாடுகளில் இருந்தபோது தற்செயலாக பெங்களூர் லேண்ட்மார்க்கில் கண்ணில்பட்டது ‘The Muddy River’. அத்தோடு வேறு சில புத்தகங்களும் வாங்கியிருந்தாலும், பயணத்தின்போது முதலில் படிக்க எடுத்தது பி.ஏ.கிருஷ்ணனைத்தான். படிப்பதற்கு முன்னால் ஒரு முடிவெடுத்திருந்தேன். ‘பெங்களூரிலிருந்து டெல்லி சென்று, டெல்லியிலிருந்து ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்ஸின்கி சென்று, அங்கிருந்து இன்னொரு விமானத்தில் என் இறுதி இலக்கான அவ்லு (Oulu) என்ற சிறுநகரை அடையும் 12 மணி நேரப்பயணத்துக்குள் இப்புத்தகத்தைப் படித்து முடித்து விடவேண்டும்.’ படிக்க ஆரம்பித்தபின் அப்படியொரு முடிவையெல்லாம் வெளிப்படையாக எடுத்திருக்கத் தேவையில்லை எனத் தோன்றியது. கீழே வைக்கமுடியாமல் ஒரு சாகசக்கதையைப் போல் வெகு வேகமாகச் சென்றது புத்தகம்.

ஒருவிதத்தில் பார்த்தால் ‘The Muddy River’ ஒரு சாகசக்கதைதான். அரசு இயந்திரத்தின் பெரும் நகர்வில் ஒரு அச்சாக இருக்கும் அரசுப்பணி அதிகாரி, அஸ்ஸாம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட தன் நிறுவனத்தின் ஓர் எஞ்சினியரை மீட்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள்தான் இந்நாவல்.

ரமேஷ் மத்திய மின்துறை அமைச்சகத்தில் தலைமைக் கண்காணிப்பு அதிகாரியாகப் பணிபுரிகிறார். பணியிடத்தில் நடக்கும் ஊழல்களையும், கேலிக்கூத்தான விஷயங்களையும் பொறுத்துக் கொள்ளுமளவுக்கு அவருக்கு ‘சகிப்புத்தன்மை’ இருப்பதில்லை. அதனாலேயே அவர் தண்டனை மாற்றலாகப் போராளிகளிடம் பேரம் பேச அனுப்பப்படுகிறார்.

இந்த நாவலை எழுதவேண்டுமென்ற உத்வேகம், கிருஷ்ணனுக்கு அரசுப்பணியில் கிடைத்த கசப்பனுப்பவங்களிலிருந்துதான் கிடைத்திருக்கவேண்டும். ரமேஷ் தன் மேலதிகரிகளிடம் போடும் சண்டைகளையும், அரசு அலுவலகங்களில் நடக்கும் அசட்டுத்தனமான சம்பிரதாயங்களையும் குறித்து நகைச்சுவை கலந்து சொல்லியிருந்தாலும், அந்த அத்யாயங்கள் பூராவும் கிருஷ்ணன் மனதிலிருக்கும் கோபமும், ஆதங்கமும் கொட்டியபடியே இருக்கின்றன. தனக்குத் தரப்படும் தேநீர் சூடாக இருப்பதில்லை என்று தன்னிடம் கோபப்படும் மேலதிகாரிக்கு, மிகவும் கிண்டலாக ஒரு பதில் கடிதம் எழுதுகிறார் ரமேஷ். (‘அதிகாரியின் டேபிளில் தேநீரை வைத்தபின் அது குளிர்ந்துபோக இருபது நிமிடங்களாகின்றன. அதனால் தேநீரை வைத்தபின் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை சத்தமெழுப்பி தேநீர் ஆறிப்போகிறது என்பதை நினைவுபடுத்தும்படி ஒரு கருவியை நிறுவப் பரிந்துரை செய்கிறேன்.’) அந்தக் கிண்டலிலிருந்து அலுவலகத்தில் ரமேஷுக்குக் கஷ்டகாலம் தொடங்குகிறது. பல்வேறு அலுவலக சிரமங்களைத் தாண்டி பேரம் பேசும் தொழிலுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார். அதே சமயம், அரசுத்துறையிலிருந்து பிணைத்தொகை என எதையும் அதிகாரப்பூர்வமாக வழங்குவது சாத்தியமில்லை என்றும் ஒரு விதி இருக்கிறது. போராளிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி ஆளையும் மீட்கவேண்டும். பணம் கொடுப்பதும் சாத்தியமில்லை.

இதற்கு நடுவே கடத்தப்பட்ட பொறியாளரின் மனைவி அதீதமான கோபத்தில் இருக்கிறார். அத்தனை கோபத்தையும் எதிர்கொள்ளவேண்டிய ஒரே ஆள் ரமேஷ் மட்டும்தான். அரசு இயந்திரம், மின்துறை அமைச்சகம் என்றெல்லாம் அரூபமாகச் சொல்லப்படும் குறியீடுகளுக்கு கிடைத்த ஒரே முகம் ரமேஷுடையது. பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் ஒவ்வொருமுறை தோல்வியடையும்போதும், தான் மேற்கொள்ளும் நேர்மையான அத்தனை முயற்சிகளையும் மீறி, ஊடகங்களால் வில்லனாகச் சித்தரிக்கப்படும் அப்பாவி ரமேஷ். அந்த அப்பாவித்தனத்துக்குப் பின்னால் ரமேஷிடம் ஒரு மூர்க்கமான நேர்மை இருக்கிறது. அதுதான் அவருக்குப் பல விதங்களில் சாதகமாகவும் செயல்படுகிறது. தான் மேற்கொண்டிருக்கும் கடினமான பணியில் சில நல்லவர்களின் துணையைப் பெற்றுத்தருகிறது. அவர்களில் ஒருவர் சரத் ராஜபொங்ஷி.

இந்த சரத் ராஜபொங்ஷி, அஸ்ஸாம் மாநிலத்தின் முந்நாள் முதலமைச்சர் ஸரத் சந்திர சின்ஹா என்பதை பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்’ (http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=206031710&format=print&edition_id=20060317) என்ற கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். நான் அதை இரண்டு வருடங்களுக்கு முன் ‘அக்கிரகாரத்தில் பெரியார்’ என்ற கட்டுரைத்தொகுப்பில் படித்திருந்தேன். உண்மையில் இப்புத்தகம் மீதான என் ஆர்வத்துக்கு பி.ஏ.கிருஷ்ணனின் இக்கட்டுரையும் ஒரு காரணம். நான் படித்த மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று இது. உண்மை நிகழ்வை ஒரு சிறுகதைக்குரிய நேர்த்தியோடு, அதே சமயம் மிகையில்லாமல் எழுதியிருந்தார் கிருஷ்ணன். புத்தகத்தின் சுருக்கம், இந்த நாவல் இக்கட்டுரையிலிருந்து விரிவாக உருவானதாகத்தான் இருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். கட்டுரையை சிறுகதை போல் எழுதியிருந்தாலும், நாவலில் சரத் ராஜபொங்ஷி குறித்த பகுதி கட்டுரை போல வந்து போனது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. (குறிப்பாக, கட்டுரையின் உச்சமாக அமைந்த ஸரத் சந்திர சின்ஹாவின் மகன் பற்றிய குறிப்பு, நாவலின் ஓட்டத்தில் வெறும் தகவலாக அடிபட்டுப் போகிறது.)

இக்கடத்தலும், அதன் பேச்சுவார்த்தைகளும் நாவலின் ஒரு பரிமாணம் என்றால், அக்கடத்தலுக்குப் பின்னிருக்கும் அரசியல் சித்தாந்தங்களின் அலசல் நாவலின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது. போராளிகளின் சார்பாகப் பேசவரும் திலீப் பேஸ்பரூவா ரமேஷின் மார்க்ஸிய சாய்வை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, தன் அரசியல் பார்வைகளைக் குறித்து, ரோஸா லக்ஸம்பர்க் உதாரணங்களைக் காட்டிப் பேசியபடியே இருக்கிறார். ஓரெல்லைக்கு மேல் கோபமடைந்து ரமேஷ் திலீபிடம் சொல்கிறார்:

“இந்தக் கோயிலுக்கு வரும்வழியில் நிறைய கால்நடைகளைப் பார்த்திருப்பீர்கள். அவை கோயிலுக்கு, கடவுளுக்காக நேர்ந்துவிடப்பட்டவை. ஆனால் அவை கசாப்புக்கடைகளுக்குச் சென்று சேர்கின்றன. அஸ்ஸாமிலும் அதேதான் நடந்துகொண்டிருக்கிறது. உங்கள் மாநிலத்தின் அற்புதமான இளைஞர்களும், இளைஞிகளும் கசாப்புக்கடைக்கு இழுத்துச் செல்லப்படும் கன்றுக்குட்டிகள்தான். நீங்கள்தான் அவர்களை பலிபீடத்தை நோக்கி அனுப்பும் ஆள்.”

இன்னொரு பக்கம் காந்திய சிந்தனைகளும் நாவலில் பேசப்படுகின்றன. காந்தியத்தில் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் சரத் ராஜபொங்ஷியில் முடியும் அத்யாயம், காந்தியவாதியான ரமேஷின் அப்பாவைப் பற்றிப் பேசுவதில் தொடர்கிறது. ரமேஷின் வயது முதிர்ந்த அப்பா வந்துபோகும் அந்த சில பக்கங்களில் ‘புலிநகக்கொன்றை’ கிருஷ்ணனை நாம் பார்க்கமுடிகிறது. பெரியவர் காந்தி சமாதியைச் சென்று பார்க்கும் கட்டங்களும், அதற்குப்பிறகு அவர் இறக்கும் இடங்களும் நாவல் உச்சம் கொள்ளும் பகுதிகள். இப்பகுதிகளில்தான் ரமேஷ் வழியாகக் கிருஷ்ணனும் மெல்ல காந்தியை நோக்கி நகர்வதைப் பார்க்க முடிகிறது. அந்த நகர்வில் சரத் சந்திர சின்ஹாவுக்கும் நிச்சயம் பெரிய பங்கு இருக்கவேண்டும். போராளிகளின் பிடிவாதங்களையும், சர்வதேசத் தலைமை அமைப்புகள் திரைமறைவில் அதிகாரப்பீடங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வதையும் காட்டும் அதே வேளை, களத்தில் சண்டை போடும் போராளிகளின் நேர்மையையும், கண்ணியத்தையும் பதிவுசெய்கிறார் கிருஷ்ணன். அப்பகுதிகளில் கசாப்புக்கடைக்கு ஓட்டிச் செல்லப்படும் ஆடுகள் உருவகம் அசலாகப் பொருந்திப் போகிறது.

அஸ்ஸாம் பிரச்சினையின் வேர்களாக வெளியாட்கள் அங்கே வந்து குடியமர்ந்ததையும், அது உள்ளுக்குள் பெரிய நிம்மதியின்மையை உருவாக்கியதையும் கதாபாத்திரங்கள் மூலமே காட்டிச் செல்கிறார்.

“நிமிர்ந்து பார்க்கிறேன். ஹோட்டல் பணியாளர் ஒருவர் கையில் தட்டுடன் நிற்கிறார்.

‘நீங்க கேட்ட மாதிரி காபி கொண்டுவந்திருக்கிறேன்.’

‘நன்றி. ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். காற்று தூக்கத்தைக் கொண்டுவந்துவிட்டது.’

‘தூங்கினா என்ன சார். வேலை பார்த்தா தூக்கம் வரத்தான் செய்யும். இந்த ஊர் ஆட்களை மாதிரி தூக்கத்தையே வேலையாக வைத்துக்கொள்ள முடியுமா?’

நான் சிரிக்கிறேன்.

‘என்ன செய்ய முடியும் சார்? சிரிக்கத்தான் முடியும். நம்ம ஊர்க்காரங்களின் தலை எழுத்து. நாள் பூராவும் உழைக்க வேண்டும். இவங்க அதிர்ஷ்டம் தூங்கி எழுந்தவுடனேயே சூடாகச் சாப்பிடலாம்.’

நான் இங்கு வந்த நாளிலிருந்து இதே மாதிரி ஒப்பாரியை அஸ்ஸாமியர் அல்லாதவர்களிடமிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.”

இந்நாவல் இரண்டு அடுக்குகளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று ரமேஷ் சொல்லும் கதை. இன்னொன்று அதைத் தொகுக்கும் ரமேஷின் மனைவி சுகன்யாவின் பார்வை. சில இடங்களில் நான் இது சரியாக வரவில்லையே என்று நினைத்ததையெல்லாம் சுகன்யா விமர்சித்துவிடுகிறாள். ஆனால் இந்த உத்தி வெறும் பின்னவீனத்துவ விளையாட்டாக வலிந்து செய்யப்படாமல், நாவலின் இறுதிக்கட்டத்தில் இரண்டு அடுக்குகளும் அர்த்தபூர்வமாக ஒன்று சேர்ந்துவிடுகின்றன.

ரமேஷ் சொல்லும் பகுதிகளின் பல உண்மைப்பகுதிகளை கிருஷ்ணன் ஏற்கனவே எழுதியிருக்கும் கட்டுரைகளிலிருந்து கண்டுகொள்ள முடிவது, சம்பவங்களுக்கு நிறைய நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. ஆனால் ரமேஷ் என்ற கதாபாத்திரத்தை பி.ஏ.கிருஷ்ணனாகவே பார்ப்பதைத் தவிர்க்கமுடியாமலும் செய்துவிடுகிறது. இக்காலத்தில் எழுத்தாளர்கள் சொந்தப்பெயரிலேயே கதையில் ஒரு பாத்திரமாகவே வருவது சகஜமாகிவிட்டாலும் கூட, கதாபாத்திரத்தின் கட்டமைப்பில் அது ஒரு புதிய உருவாகப் படிப்பவர்கள் மனதில் உருவாகும்போது, வாசகர்களாகவே கண்டடையும் முடிவுகள் ஒரு புதிய உலகைத் திறப்பவை. அது இந்நாவலில் சில இடங்களில் சாத்தியமாகவில்லை என்பது நாவலின் ஆங்கில வடிவில் எனக்கு உறுத்தலைத் தந்தது. ஆனால் இச்சிறு உறுத்தலைத் தாண்டி பி.ஏ.கிருஷ்ணனின் புனைவுத்திறன் உச்சமடையும் தருணங்களும் இந்நாவலில் இருக்கின்றன. முன்பே நான் குறிப்பிட்ட ரமேஷின் அப்பாவைப் பற்றிய பகுதிகள், காமாக்யா தேவி கோயிலுக்கு ரமேஷ் தன் மனைவியோடு செல்லும் பகுதிகள்… இவை அனைத்தையும் தாண்டி ரமேஷின் சிறு வயது மகள் இறந்துபோகும் பகுதியும், அதைத் தொடர்ந்த விவரணைகளும். அந்த அத்யாயத்தைப் படித்துவிட்டு, தொடர்ந்து படிக்க முடியாமல் சற்று நேரம் புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.

***

ஹெல்ஸின்கியில் இறங்கி பத்தே பத்து நிமிடம் இடைவெளியில் தடதடவென்று ஓடி என் டெர்மினலைப் பிடித்து அடுத்த விமானத்தில் சென்று அமர்ந்தபோது மணி மதியம் நான்குதான் என்றாலும், நன்றாக இருட்டிவிட்டிருந்தது. ஃபின்லாந்தின் தென்பகுதியிலேயே இத்தனை குளிராக இருக்கிறதே, வடபகுதியில் எப்படி இருக்குமோ என்ற கவலை ஒருபுறம் அரித்தபடி, புத்தகத்தைப் பிரித்தபோது மிச்சம் முப்பது – நாற்பது பக்கங்கள் இருந்தன. இடுப்பு பெல்ட்டை அணிந்து, விளக்கணைத்து, பணிப்பெண்கள் அபிநயித்து, மீண்டும் விளக்கு போட்டு, டீயும் பிஸ்கட்டும் கொடுத்து, மீண்டும் விளக்கணைத்து கீழே இறக்கிவிடுவது போக மிச்சம் இருபது நிமிடங்கள்தான் அப்பயணத்தில் இருந்தன.

முடிந்த அளவு படித்துமுடித்துவிடுவோம் என்று ஆரம்பித்தேன். விமானம் கிளம்பி அரை மணி நேரத்தில் ஃபின்னிஷ் மொழியில் ஏதோ அறிவிப்பு செய்தார்கள். சில நிமிடங்களில் பெரிய ஏர்ப்போர்ட் கண்ணுக்குத் தெரிந்தது. அடக்கடவுளே, இவ்வளவு சீக்கிரம் அவ்லு வந்துவிட்டதா? ஆனால் அவ்லு ஏர்ப்போர்ட் இவ்வளவு பெரியது இல்லையே? என்றெல்லாம் குழம்பி என் பக்கத்து இருக்கை ஃபின்னிஷ் பெண்ணிடம் ‘இது அவ்லுவா?’ என்றேன்.

‘இல்லை. We are back to Helsinki.’ என்றாள்.

‘ஐயோ! ஏன்?’

‘சில crew members விமானத்தை மிஸ் செய்துவிட்டார்களாம். அவர்களை அழைத்துக் கொள்வதற்காகத் திரும்பி வந்திருக்கிறோம்.’

‘இப்படியெல்லாமா நடக்கும்? பயணிகள் விமானத்தை விட்டுக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சிப்பந்திகளுமா? அதுவுமில்லாமல் இதற்குப் போயா திரும்பி வருவது? எரிபொருள் செலவு, லேண்டிங் வாடகை, நம் நேர இழப்பு…’

‘என்ன செய்ய? விமானப் பணியாளர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அற்றவர்களாக இருந்தாலும் அவர்களை அழைத்து வந்தே ஆகவேண்டும் போல…’

‘ஏன்?’

அந்த ஃபின்னிஷ் பெண் தன் தோள்களைக் குலுக்கி, புருவம் உயர்த்திச் சொன்னாள்: ‘May be some protocol?’

கையிலிருந்த புத்தகத்தில் பி.ஏ.கிருஷ்ணன் சொல்லியிருந்த ‘Nut protocol’ நினைவுக்கு வந்தது.

‘ஏன் எதையோ நினைத்து நினைத்து சிரிக்கிறீர்கள்?’ என்றாள் அப்பெண்.

‘இந்த ப்ரோடோகால் தாமதத்தால் நான் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிடுவேன்’ என்றேன்.

ஒன்றும் புரியாமல் சற்றுநேரம் விழித்துவிட்டு, ‘Crazy’ என்று சொல்லி கண் கருப்புப்பட்டையை இழுத்து மூடியபடி தூக்கத்தைத் தொடர்ந்தாள் அப்பெண்.