ஆயிரம் தெய்வங்கள் 17

ஆர்ட்டமிஸ் – லெட்டோ பெற்ற லேடி டாக்டர்

அப்போல்லோவின் சொந்த அக்காள் ஆர்ட்டமிஸ் லெட்டோவின் முதல் பிறப்பு. பிறக்கும் போதே மருத்துவ அறிவுடன் விளங்கும் அருள் பெற்ற தெய்வம். தம்பி அப்போல்லோவுக்கே பிறக்கும் போது மருத்துவம் பார்த்தவள். மகப்பேறு காலத்தில் தாயின் வலியைப் போக்கும் சக்தியுள்ளவள்.
ஆர்ட்டமிஸ் எப்போதும் காடுகளில் வேட்டையாடித் திரியும் தெய்வமும்கூட. இவளுடன் எப்போதும் நாய்களும் பல்வேறு மிருகங்களும் உடன்செல்லும். கிரீசில் வேட்டையில் வல்லவனாக ஓரியோன் திகழ்ந்தான். ஓரியோனுடைய கர்வத்தை அடக்க ஆர்ட்டமிஸ் விரும்பியபோது அவனே சக்கரப்படை எறிதல் போட்டிக்கு அழைத்தான். ஆர்ட்டமிஸின் பக்தையான ஒப்பிஸ் என்பவளை ஓரியோன் கெடுத்துவிட்ட செய்தியை அறிந்து அவனைப் பழி வாங்கத் துடித்தாள். அவன் வட்டெறியும் சமயம் பார்த்து ஒரு விஷத் தேளை அனுப்பி அவன் குதிகாலில் கொட்டச்செய்தாள். ஓரியோனும் ஒரு தெய்வமகன் என்பதால் உயிரிழப்பினும் சப்தரிஷிமண்டலத்தில் ஒரு நட்சத்திரமானான். ஓரியோனைக் கொட்டிய தேளும் விருச்சிக ராசியாக கிருகசஞ்சாரத்தில் இடம் பெற்றது.

ஓரியோனைப் போலவே ஆக்டேயனும் கொல்லப்பட்டான். அரிஸ்டேயஸின் புதல்வன். ஈர்ட்டமிஸ் உடலில் ஒரு ஒட்டுத்துணிகூட இல்லாமல் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது பார்த்துவிட்ட குற்றத்திற்கு அவனை மானாக மாற்றினாள். ஆக்டேயனுடன் வந்த நாய்கள் அடையாளம் தெரியாமல் அந்த மானைக் கடித்துக் குதறிக் கொன்றுவிட்டன.

இலியத் போரில் கிரேக்கப்படைகளுக்குத் தலைமை தாங்கிய ஆகலெமனான் அக்கேயன் கடற்கரையில் கப்பலுடன் ஆதரவான காற்றுக்குக் காத்திருந்தான். துõரத்தில் மான் ஒன்று தென்பட்டது. மான் மீது குறிதப்பாமல் அம்பெறிந்து கொன்றதோடு நிற்காமல் இதுபோல் ஒரே அம்பில் ஆர்ட்டமிஷால்கூட வீழ்த்தமுடியாது என்று செறுக்குடன் பேசிய ஆகமெனானுக்கு ஆர்ட்டமிஷ் தண்டனை வழங்கினாள். ஆகமெனான் புறப்பட முடியாதவாறு கடலில் புயல் வந்தது. திடீரென்று ஏற்பட்ட புயலின் காரணம் புரியாமல் ஆகமெனானன் திகைத்தான். கடலில் அமைதி ஏற்படாத காரணத்தை அறிய ஒரு கோவில் பூசாரியை அணுகினான். தீயரைசஸ் என்ற பெயருடைய கோவில் பூசாரி, “இது ஆர்ட்டமிஷின் சினம் என்றும், இந்த சினத்தைத் தவிர்க்க ஆர்ட்டமிஸ் உன் மகன் இஃபிஜினியாவை பலிபீடத்தில் நிறுத்தினான். ஆர்ட்டமிஸ் இஃபிஜினியாவைக் காப்பாற்றி அவனுக்கு மாற்றாக மற்றொருவனை பலிகடாவாக மாற்றினாள். இஃபிஜினியா நன்றிக்கடனாக என்றென்றும் ஆர்ட்டமிசுக்குரிய விசுவாசியாகவும், கிரைமியா ஆலயத்தில் அருள்வாக்கு சொல்பவனாகவும் மாறினாள்.

இலியத் போரில் சாகசம் புரிந்த பெண் வீராங்கனைகளில் அமேசான் அரக்கியர் பிரபலமானவர்கள். இவர்களின் வீரத்திற்குக் காரணம் ஆர்ட்டமிஸ் மீது கொண்ட அளவுகடந்த பக்தியே. அன்றைய ஆசியாமைனரில் எஃப்சஸ் என்ற இடத்தில் இவர்கள் ஆர்ட்டமிசுக்குக் கோவில் கட்டி வழிபட்டனர். பின்னர் ரோமானியர்களால் வெல்லப்பட்ட பின்னர் ஆர்ட்டமிஸ் தெய்வத்தை ரோமானியர்கள் டயானா என்ற தெய்வமாக அடையாளப்படுத்தி வணங்கினர்.

மிகவும் வித்தியாசமான தாய்வழி மரபு இனமாக தெர்மொடான் நதிப்பிரதேசத்தில் அமேசான் அரக்கியர் ஆட்சி நிகழ்ந்தது. அந்த நாட்டில் ஆண்கள் அடிமைகளாகவும் பெண்கள் போர்த்தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர். இதன் அடையாளமாக இடப்புற முலை வளராதபடி தீயில் சுட்டுவிடுவார்கள். பெண்களுக்கு ஒரே முலைதான். காரணம் வில்வித்தைக்கு அது இடைஞ்சல் என்று கருதப்பட்டதுவே. குறிபார்த்து அம்பு எய்வதில் அமேசான் அரக்கியர் வல்லவர்களாம். இவர்கள் ட்ராய் கோட்டையைக் காப்பாற்ற இந்த அமேசான் அரக்கியர்கள் கிரேக்கர்களை எதிர்த்துப் போராடினர். குறிப்பாக வீரர்களான ஹிராக்ளீஸ் , பெல்லரோஃபோன், அர்க்கில்லஸ் ஆகியோர் அமேசான் அரக்கியர்களிடம் திணறிப் போயினர். எனினும் அசோன் இளவரசி பெந்தசீலியா அக்கில்லாசால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த போதும் அவள் முகத்தில் புன்னகை பூத்ததாக ஹோமர் வர்ணிக்கிறார். ஏனெனில் தான் விரும்பிய வீரபுருஷனால் அவள் கொல்லப்பட்டாள். அக்கில்லஸ் பெந்தசீலியாவின் வீரத்தைப் புகழ்ந்திருப்பதையும் ஹோமர் கூறினாலும் அன்புக்கு அம்புதான் பரிசு போலும் ! பெந்த சீலியாவுக்கு ஆர்ட்டமிஸ் அருள் இருந்தும்கூட அக்கில்லாஸ் அவள் கொல்லப்படவேண்டுமென்பது விதி செய்த சதி.

ஹெர்மஸ் – கிரேக்க நாட்டின் மாயக்கண்ணன்

தெய்வக் குழந்தைகள் தாமாகவே வளர்ந்து மாயங்களைச் செய்யும். தெய்வங்களின் தெய்வமான ஸீயஸ், ப்ளீயதஸ்ஸின் கடைசிப் புதல்வி மையா என்பவளுடன் உறவாடிப் பிறந்த ஹெர்மஸ் குழந்தையை ஆர்க்கேடியாவில் சைலீன் மலைக்குகையில் ஒரு கட்டுக் கூடைக்குள் துணியால் போர்த்தி வைத்துவிட்டு மையா மறைந்துவிட்டாள். ஹெர்மஸ் தன் கட்டிலிருந்து விடுபட்டு தெஸ்ஸாலி சென்றது. அப்போது ஹெர்மசின் அண்ணன் அப்போல்லோ அங்கு அட்மீட்டசின் ஆடு மாடுகளை மேய்க்கும் தண்டனைக்கு உட்பட்டிருந்தான். ஆடுமாடுகளை மேயவிட்டு அவற்றை கவனிக்காமல் அப்போல்லோ வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தான். இந்த சமயத்தைப் பயன்படுத்தி ஹெர்மஸ் அப்போல்லோவின் 12 பசுக்களையும் 100 கன்றுக்குட்டிகளையும் திருடிக்கொண்டு அடர்ந்த மரங்களுள்ள மறைவிடத்தில் கட்டி விட்டுப் பழையபடி சைலீன் குகைக்குத் திரும்பி வந்தான். தான் பிறந்த இடத்தில் உள்ள கட்டுக்கூடைக்கு அருகில் ஒரு ஆமையைக் கண்டான். அந்த ஆமையின் மேல் ஓட்டைப் பிரித்து எடுத்தான். பின்னர் பலிக்குரிய பொலிகாளையின் குடல் நரம்புகளைப் பிரித்தெடுத்து அதை ஆமை ஓட்டில் கட்டி யாழைப்போல் ஒரு இசைக்கருவியைச் செய்தான். அப்படிச் செய்யப்பட்டதுதான் முதல் யாழ்.

இதன் நடுவில் அப்போல்லோ தன்னுடைய மாடுகளைக் காணாமல் திகைத்தான். தனது தெய்வீக சக்தியால் அவை சைலீன் மலைப்பகுதியில் ஒளித்துவைக்கப்பட்டுள்ளதை அறிந்து தன் சிற்றன்னை மையாவிடம் முறையிட்டான். இந்தக் குழந்தைதான் திருடியது என்று ஹெர்மசைச் சுட்டிக்காட்டினாள் அவள். இந்தச் சிறு குழந்தையா? என்று வியப்புற்று மௌனமானான் அப்போல்லோ சின்னக் குழந்தையுடன் என்ன பேச்சு எனச் சிந்தித்து முடிவில் ஸீயஸ்ஸிடம் முறையிடவே, ஸீயஸ் உடனேயே மாடுகளை அப்போல்லோவுக்கு வழங்கும்படி ஹெர்மஸ்ஸிடம் கூறினார். இதன் நடுவில் ஹெர்மஸ் செய்த ஆமை ஓட்டு யாழை கவனித்து வாசிக்கச் சொல்லவே, ஹெர்மஸ் இசைத்தான். இந்த இசையால் கவர்ந்த அப்போல்லோ ஆமை வாத்தியத்தைப் பெற்றுக்கொண்டு மாடுகளை ஹெர்மசே வைத்திருக்கலாம் என்று கூறிச்சென்றான். இந்திய புராணத்தில் மாயக்கண்ணன் வேய்ங்குழல் செய்தது போலவே கிரேக்க புராணத்தில் புளூட் எனப்படும் மேநாட்டுப் புல்லாங்குழலையும் ஹெர்மஸ் செய்தான். அதையும் பெற்றுக்கொண்ட அப்போல்லோ அதற்கு ஈடாகத்தன் தங்க மந்திரக்கோலைத் தன் தம்பிக்கு வழங்கினான். அதன் பெயர் கெடூசீயஸ் () இந்தத் தங்க மந்திரக்கோலில் இரண்டு நாகங்கள் பின்னியபடி இருக்கும். பின்னர் இதுவே ஹெர்மசின் சின்னமானது. ஹெர்மசின் கலைத்திறனைக் கண்டு வியந்த ஸீயஸ் அவனுக்கு தேவதுõதன் என்ற பட்டத்தையும், பாதாள உலகின் வழிகாட்டியாக ஒரு பதவியும் வழங்கினார். வியாபாரிகள், வழிபோக்கர்கள், திருடர்கள் ஆகிய மூன்று சாராருக்கும் ஹெர்மன் காவல் தெய்வமானார். மக்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் குபேர தெய்வமாகவும் ஆர்க்கேடியன் பகுதியில் வணங்கப்பட்டார்.

ஹெர்மஸ் வளர்ந்து பெரியவனாகிக் குடும்பம் நடத்த சையோன் வந்தாள். சையோனும் ஹெர்மசும் கூடி ஆட்டோலைக்கஸ் பிறந்தான். ஆட்டோலைக்கஸ் கனவின் தெய்வம் மட்டுமல்ல. களவின் தெய்வமும்கூட. ஆட்டோலைக்கஸ் திருடினால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது ஆர்கோஸ் கப்பல் பயணத்தில் இவனும் ஒரு ஆர்கோநட்ஸ். தன் சொன்த மகள் ஆண்டிக்ளீயாவை ஏமாற்றி அவளை சிசைஃபசுவுடன் உறவுகொள்ள வைத்துப் பின் அவளை லாயிர்ட்டசுடன் மணம் புரிவித்தான். அந்த உறவில் பிறந்தவனே ஒடிஸ்ஸஸ். யூலிசஸ் என்றும் அழைக்கப்பபட்ட இவன் கதையை ஹோமர், இலியத்தின் தொடர்ச்சியாக ஓடிஸ்ஸே என்ற பெயரில் காவியமாக்கினார்.

ஹெர்மசின் இரண்டாவது மனைவி ஹர்சே. அவள் மூலம் பிறந்த வீரன் சிஃபாலஸ். மூன்றாவது மனைவி அக்லாராசை மணந்து சிலைக்ஸ் என்ற வீரனை உருவாக்கினான். ஹேடஸ் கடத்திய பெர்சிஃபோனை பாதாள உலகின் வழிகாட்டி என்ற முறையில் அவளை டீனேரியா என்று பெயரில் மாற்றி விவகாரம் கொண்டதால் எலுõசிஸ் பிறந்தது. டீனேரியாவின் மகன் எலுõசிஸ். எலுõஸிஸ் என்ற பெயரில் ஊரும் உண்டு. எலுõசிஸ் வட்டாரக் கதைகள் மர்மம் நிரம்பியவை. எலுõசிஸில் உள்ள ஹெர்மஸ் ஆலயத்திற்கு கிரைக்ஸ் முதல்நிலைப் பூசாரியாக வாழ்ந்தான்.

ஹெர்மசின் செயல்கள் எதுவுமே சுயமாகச் செய்தவை அல்ல. ஸீயஸ் கட்டளையிடுவதை நிறைவேற்றுவதே அவன் கடமை. அயோவைச் சிறைவைத்த ஆர்காலை ஹெர்மஸ் கொன்றான். ஜடா மலையில் நிகழ்ந்த அழகிப்போட்டிக்குரிய தேவதைகளான எத்தினா, ஹரா, அஃப்ரொடைட் மூவரையும் கொண்டுவர ஸீயஸ்ஸால் பணிக்கப்பட்டான். இந்தப்போட்டியால்தான் ஹெலனை பாரிஸ் கடத்திய நிகழ்ச்சிக்கான இலியத் காவியத்தின் கதைக்கரு தொடங்குவதை பாரிஸ் பற்றி எழுதும்போது அறியலாம்.

ஹெஃபெஸ்டஸ் – பட்டரைத்தீ

ஹெஃபெஸ்டஸ் என்றால் பட்டரைத்தீ என்று பொருள். ஆனால் ஸீயஸ்ஸுக்கும் ஹீராவுக்கும் பிறந்தவனா? ஹீரா சுயம்பூவாக உருவாக்கினாளா என்பது தெளிவாயில்லை. ஒரு வகையில் ஹெபியின் சகோதரன். ஹீராக்ளீசின் மைத்துனன். இவன் ஒரு தீப்பிழம்பு. அக்னிதேவன் இவனை ஸீயஸ் அதிகம் நேசித்தது ஹீராவுக்குப் பிடிக்காமல் இவனை ஒலிம்பசிலிருந்து கீழே தள்ளிவிட்டதில் நொண்டியாகிவிட்டான். மீண்டும் ஒலிம்பசில் இடம் பிடிக்க இவன் ஒரு தந்திரம் செய்தான். மிகவும் ஒப்பற்ற சிம்மாசனம் ஒன்றைச் செய்து அதைப் பார்த்தால் ஒருவர் கட்டாயம் அமரவேண்டும் என்ற ஆசையும் வரும். ஹீதைராவைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். ஹீரா தன் அதிகாரபலம் ஸீயஸ்ஸுக்கு நிகர் என்ற செறுக்குடைய தெய்வமாயிற்றே. ‘ஃபெஸ்டஸ் ஒரு நாள் ஹீராவை அழைத்து வந்து அந்த அரியாசனத்தைக் காண்பித்தான். ஆசையுடன் ஹீரா அமர்ந்தாள். பின்னர் என்ன முயன்றும் எழுந்திருக்க முடியவில்லை. அவ்வாறு ஹெஃபெஸ்டஸ் ஒரு அரியாசனத்தையே சிறையாக்கியிருந்தான். ஹெஃபெஸ்டசைத் தவிர வேறு யாராலும் ஹீராவை அந்த சிம்மாசனத்திலிருந்து விடுவிக்க இயலாது. ஹீரா விடுதலை பெற வேண்டுமானால் ஹெஃபெஸ்டசை ஒலிம்பஸ் தெய்வங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று நிபந்தனை. வேறு வழி இல்லை. தாய்க்குப் பாடம் புகட்டிய தனயன் இறுதியில் ஹீராவை விடுவித்து ஒலிம்பஸ் தெய்வவரிசையில் இடம் பெற்றான்.

தாய்க்குப் பாடம் புகட்டியது போல் தகாத உறவு கொண்ட மனைவிக்கும் பாடம் வழங்கியுள்ளான். இவனிடம் ஏராளமான தந்திரக் கருவிகள் உண்டு. அக்னி வவிளையாட்டுடன் மாயா ஜாலப் புரிவதில் வல்லவன். இவளை அழகு தெய்வம் அக்லேயா மிகவும் விரும்பினாலும், அஃப்ரோடைட் என்ற அழகு தேவதையே இவனது மனைவி. இலியத் போருக்குக் காரணமான இந்த அம்மண அழகி ஹெர்ஃபஸ்டசை விரும்பாமல் ஹெஃபஸ்டசின் சகோதரன் ஏரசுடன் உறவு கொண்டிருந்தாள். இதை சூரியன் பார்த்துவிடவே விஷயம் ஹெஃபஸ்டஸ் காதுக்கு வந்தது. அஃப்ரோடைட்டின் படுக்கை அறையில் ஒரு மாயவலை பின்னப்பட்டது. அது யார் கண்ணுக்கும் தெரியாது. வழக்கம்போல் அஃப்ரோடைட்டுடன் உறவாட ஏரஸ் வந்தான். இருவரும் ஆடையே இல்லாமல் இன்புற்றிருக்கும் வேளையில் வலை மூடிக்கொண்டது. என்ன முயன்றும் அவர்களால் வெளியேற முடியவில்லை. எல்லா ஒலிம்பஸ் தெய்வங்களையும் அழைத்து இப்படிப்பட்ட அம்மணக்காட்சியைக் காண வைத்தான். இந்தக் காட்சியைக் கண்டு எல்லா தெய்வங்களும் வயிறு குலுங்கச் சிரித்தனவாம். அடுத்தவன் மீது ஆசைகொள்ளும் அஃப்ரொடைட் அப்படியும் திருந்தவில்லை. அடுத்தவன் மனைவியாகிய ஹெலனைக் கடத்தி பாரிசுக்கு மணமுடித்தவளும் இவள்தானே! இவள் இல்லாவிட்டால் இலியத் காவியமே இல்லை!

ஸீயெஸ் தொடங்கிய ஒலிம்பிக் யுத்தத்தில் அசுரர்களுக்கு எதிராக ஸீயஸ்ஸுக்குத் தோள் கொடுத்து உதவிய ஹெஃபெஸ்டஸ் தீப்பிழம்பால் கிளைட்டீயசைக் கொன்று ஸீயஸ்ஸின் கருணையைப் பெற்றான். இலியத் ட்ரோஜன் யுத்தத்திலும் அக்கில்லசின் தாய் லதத்தீயசின் கோரிக்கையை ஏற்றுஅக்கில்லவுக்குப் படை ஆயுதங்களை வழங்கினான். எரிமலையில் பட்டரை அமைத்துப் படை ஆயுதங்களைச் செய்தான். ஹெஃபஸ்டசின் குரு சைக்ளோப்பஸ். சைக்ளோப்பஸ் படை ஆயுதங்களையும், பல தந்திரக் கருவிகளையும் உருவாக்குவதில் வல்லவன்.

ஹெஃபஸ்டசின் பிள்ளைகளில் மூவர் பிரபலமானவர்கள். மூத்தவன் பாலமோன் ஆர்கோநட் வீரன். அர்டாலஸ் காவியப்புகழ் பெற்றான். மூன்றாவது பெரிஃபீட்டஸ் மாபெரும் கொள்ளைக்காரனாக வாழ்ந்து முடிவில் தெசீயசால் கொல்லப்பட்டான்.

ஹெஃபஸ்டசின் ரண சிகிச்சை – எத்தினா ஜனனம்

ஸீயெஸ் மீது சினமுற்ற அவன் தாய் ஜெயியே அவன் மனைவி மெத்திசின் இரண்டாவது புதல்வனால் மரணம் ஏற்படும் என்று சாபம் இட்டதைக் கேள்வியுற்ற ஸீலியஸ் கர்ப்பவதியாயிருந்த மனைவி மெத்திசை அப்படியே விழுங்கியதையும், பின்னர் ஹெஃபஸ்டஸ் வரவழைக்கப்பட்டு ஸீயெஸ் உத்தரவுப்படி ஸீயெஸ்ஸின் மண்டையை உடைத்து எத்தினாவை வெளியில் எடுத்துப் பின் மெத்தமிஸ் மட்டும் ஸீயெஸ்ஸின் வயிற்றில் அடக்கமானாள். இதனால் தாயின் சாபம் பலிக்கவில்லை. இதை முன்பே கவனித்துள்ளோம். இவ்வாறு பிறந்த காரணத்தினால் எத்தீனாவும் ஆர்ட்டமிசைப் போல் போர்க்கடவுளானது மட்டுமல்ல. ஸீயெஸ்ஸின் சக்திகள் அவளுக்கும் கிடைத்தன. எத்தினாவிடம் வில்-அம்பு இல்லை. ஈட்டி மட்டுமே உண்டு. ஒலிம்பிக் யுத்தத்தில் பல்லாஸ், என்சிலாடஸ் ஆகிய அரக்கர்களைக் கொன்றாள். பாரிஸ் இவளை அழகியாகத் தேர்ந்தெடுக்காவிட்டாலும் ட்ராய் யுத்தத்தில் பாரிசுக்கு உதவினாள். ஹீராக்ளீசுக்கும் உதவினாள். இலியத் போர் முடிந்ததும் ஒடிஸ்சின் துணிகரச் செயல்களுக்கு எத்தினா உறுதுணையாக இருந்தாள்.

எத்தினா வீரத்தில் மட்டுமல்ல. கருணை உள்ளம் கொண்ட கடவுள். யாருக்கும் தீமை செய்ய விரும்பமாட்டாள். எளியோர்க்கு உதவுவதும் நல்ல ஆளுமையும் உள்ள காரணத்தால் ஆசூர்கோ கோட்டைத் தலைவியானால். கப்பல் கட்டும் திறமையுள்ளவள். ஏதன்ஸ் நகரின் பழைய பெயர் அட்டிகா, அட்டிகாவை யார் ஆட்சி செய்வது என்பதில் போட்டி எழுந்தது. போட்டியில் எத்தினாவுக்கு எதிரியாக பாசிடோன் இருந்தான். ஆண்டவனுக்கு விருப்பமான பரிசை யார் வழங்குகிறார்களோ அவர்களுக்கே அட்டிகா என்று முடிவானபோது, பாசிடான் தன் திறமையால் உவர் நீர் ஊற்றை வழங்கினான். எத்தினாவோ ஒரு ஆலிவ் மரத்தை நட்டாள். ஆலிவ் மரமே உகந்த பரிசாக ஏற்கப்பட்டு அட்டிகாவின் அரசியாக எத்தீனா உயர்ந்த பின்னர் அட்டிகா ஏதன்ஸ் நகர் என்ற பெயரில் வழக்கு மாறியது.

கிரேக்க புராணப்படி எத்தீனா ஒரு கன்னிமேரி. திருமணத்தை அவள் விரும்பவில்லை. வாழ்வில் ஒரு முறை அவள் ஹெஃபஸ்டஸ் மீது மோகம் கொண்டான். அவனுடைய நெருப்புப்பட்டறைக்கு வந்தாள். அங்கு ஹெஃபஸ்டசைக் கண்டதும் வெளியில் ஓடினாள். ஹெஃபஸ்டஸ் அவளைத் துரத்தி எட்டிப்பிடித்துவிட்டான். அவளைக் கட்டிப்பிடித்து ஆரத்தழுவிப் புணர்ந்தான். எத்தினாவால் திமிறி விடுவிக்க முடியவில்லை. இறுதியில் வெறுப்புற்று ஹெஃபஸ்டசிடமிருந்து விடுப்பட்டுத் தன் உடலில் உள்ள களங்கத்தை ஒரு துணியால் துடைத்து மண்ணில் வீசினாள். பூமி கருவுற்று ஒரு ஆண்டு குழந்தையை வழங்கியது. இதர தெய்வங்கள் அறியாதபடி அக்குழந்தையைப் பெட்டியில் வைத்து ஏதன்ஸ் மன்னர் சித்ராப்ஸின் பெண்கள் வசம் ஒப்படைத்தாள். சித்ராப்சின் மூன்று பெண்களில் அக்ளோரஸ் எத்தீனாவின் கட்டளையை மீறி அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அந்தக் குழந்தைக்குக் காவலாக இரண்டு நல்ல பாம்புகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியுற்றுப் பித்துப் பிடித்து ஏதன்ஸ் மலைமீது ஏறிக்கீழே விழுந்து இறந்துவிட்டாள். பின்னர் எத்தீனா அக்குழந்தையைத் தன் ஆலயத்தில் வளர்க்க ஏற்பாடு செய்தாள். அக்குழந்தை வளர்ந்து பெரியவனானதும் சிக்ராப்ஸ் அவளிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தான். அவன் பெயர்தான் எரிக்தோனியஸ். எரிக்தோனியஸ் வம்சாவளி ஏதன்சில் உருவாகி இவன் வாரிசாக வந்தவன் தெசீயஸ்.

பல்லடியம்

எத்தீனாவின் சின்ன வயதுத் தோழியே பல்லா. எத்தீனாவுக்கும் பல்லாவுக்கும் டிரைட்டன், பல்லாவின் தந்தை, போர்ப்பயிற்சி அளித்தான். விளையாடும்போது காயமுற்ற பல்லா இறந்துவிடுகிறாள். அவளை எத்தீனா சிலையாக வடித்துத் தன்னையும் அவள் பெயரில் அழைக்குமாறு பிரகடனம் செய்தாள். அச்சிலையே பல்லடியம் எனப்பட்டது. பல்லடியம் என்றால் எத்தினாசிலை என்று பொருள் மாறியது. ஸீயஸ் ஒரு முறை எலக்ட்ராவைத் துரத்தினார். எலக்ட்ரா இந்தப் பல்லடியத்தில் ஒளிந்து கொண்டதை அறிந்த ஸீயஸ் கோபத்தில் அப்பல்லடியத்தைத் துõக்கி எறிந்தார். அது ட்ராய் கோட்டைக்குள் விழுந்தது. அதுவே ட்ராய்க் கோட்டைக்குக் காவல் தெய்வமானது. இலியத் வெற்றிக்குப் பின் ஒடிஸ்ஸிஸ் பல்லடியத்தைத் திருடிக் கொண்டு சென்றதாகக் கதை உண்டு. ஆர்க்கேடியா, ஏதன்ஸ், இதாலி ஆகிய நாடுகளின் பல்லடியம் தெய்வமானது. ரோம் நகரில் வெஸ்டா ஆலயத்தில் பல்லடியம்(சிலை) உள்ளது. அடுத்த இதழில் முதல் உலக அழகி அஃப்ரோடைட்டை கவனிப்போம்.

(தொடரும்)