கதைப் புத்தகம்

‘முட்டாள் காலத்திய முட்டாள்தனங்கள் எதும் புதிய செய்தியல்ல. முட்டாள்தனங்களைத் தொடர் பேணவும், புதிய மடத்தனங்களைத் தொடர் சுரக்கவும் பல்வேறு காரணிகள் இருந்ததும் நமக்குத் தெரிந்ததே! நமது வரலாற்றின் அழுக்குகளைச் சுத்திகரிப்பதே தலையாயதாய் செயல்படும் வேரறுப்பு செயல்துறை, அக்காலத்தின் ஒட்டுமொத்த முட்டாள்தனத்தின் அடிநாதத்தை கண்டு பிடித்துள்ளது. கற்பனை உதவியுடன் கூட விழ முடியாத அடியற்ற பள்ளத்தில் உழன்று திரிந்தவர்கள் நம் மூதாதையர் என்பதில் உள்ள அவமானத்தை விட கேவலமான, ஆனால் 🙂 ஏலச்செய்யும் கண்டுபிடிப்பு அது. புத்தகம்! முட்டாள் கால மனிதர்களின் இசைகேடான மதியீன ஒழுகல்களை சேகரித்த நாற்றமுடை வஸ்து. புத்தகம் என்பது செவ்வக வடிவில் சேர்த்து வைத்த அச்சிடப்பட்ட தாள்கள்! அச்சு என்பது எழுத்துக்களை தாளில் ஒட்டவைக்கும் உத்தி. தாள், உடல் சுத்த டிஷ்யூ போன்றது. இந்த எழுத்துகள் ஒருபோதும் மாறுவதில்லை! ஒரு தாளில் உள்ள எழுத்துகள் எப்போதும் அதே தாளில் இருக்கும்! நம்பமுடியா நகைச்சுவை! இருந்ததை இருந்த மாதிரியும், இல்லாததை இல்லாத மாதிரியும் சொல்லத் தெரியாதவர்களின் தாள்சேகரிப்பின் பெயர், கதைப்புத்தகம்! கட்டற்ற சமூகநலன் பேண, உச்ச செயல்துறை, கட்டுப்பெட்டித்தனங்களைத் தீயாய்ப் பொசுக்கியதில் அக்காலத்தின் மற்ற மூடக்கூறுகள் போல இவையும் ஆவியாகிப் போயின. உச்ச செயல்துறைக்கு நன்றி! நம் மூதாதையரின் பழம்பெருமை(!)களை ஏளனப்படுத்தி, நம் எல்லோரையும் 🙂 ஏலச்செய்யும் கலாசார செயல்துறை, புத்தகங்களின் உச்ச நகைச்சுவையான கதைப்புத்தகம் என்ற பிரிவு சார்ந்த ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று மட்டுமே கிட்டக்கூடிய அதை வாங்க, இங்கே தொடவும். இதை எழுதியவர்…’

தகவல் திரையில் மற்ற தகவல்கள் மேலெழும்பத் தொடங்கின.

“ஆச்சரியம்!” என்றாள் வீன்_1969. தகவல் திரையருகே அவளையும் சேர்த்து மூன்றே பேர். சுத்திகரிப்புப் பட்டையை பற்களில் இடுக்கிக் கொண்டே, “யெம்ன ஆத்ச்யாம்?” மென்ற பப்பி_1699, அவள் வீட்டுத் தோழி. அவளுக்கும் பின்னாலிருந்தவன், பப்பி_1699 ‘இரவு 8 மணிக்கு அவனுடன் கலவுவாளா?’ என்று கேட்கக் காத்திருந்தான்.

“என்ன?” – வீன்_

“என்ன ஆச்சர்யம்?” – பப்பி_

வீன்_, திரையைக் காட்டினாள். “திறந்தவெளி அரங்கம் இரவு முழுதும் திறந்திருக்குமாம். போவோமா?” என்றாள்.

“ம்” வீன்_1969 திரையைத் தொடப் போகும்போது அவன் பப்பி_ யைக் கேட்டிருந்தான். ‘இல்லை’ யென்று விட்டுத் திரைப் பக்கம் வந்தாள். ‘விற்றுத் தீர்ந்தது!’ என மின்னியது திரை.

“அதற்குள்ளாகவா? இது தான் ஆச்சர்யம்!” என்றாள் பப்பி_1699.

“என் தவறு. ‘கதைப் புத்தகம்’ ங்கிறதைத் தொட்டுவிட்டேன்”

“கதைப்புத்தகம்?! What shit is that?”

“Some stupid old shit. நீயே பார்த்துக் கொள்” மேலே கைகாட்டியவாறே, கவனமாய் ‘திறந்தவெளி அரங்க அனுமதி’யைத் தொட்டாள்.

“என்ன பெயர் அது! அன்டர்ஸ்கோர் கூட இல்லாமல்!” என்றாள் பப்பி_1699.

-0-

அந்தக் கதவு அங்கேயே தான் இருந்ததா? நேற்று வரை கதவு அங்கிருந்த ஞாபகம் இல்லை. எதுவரை நேற்று வரை என்பதே வெறும் மனக்கணக்கு தான். ஞாபகம் பற்றி கேட்கக்கூட வேண்டாம். ‘காலம்’ என்பது கட்டுப்படுத்தப்பட்டு, தண்ணீர், மின்சார விநியோகம் போல, தினப்படி வழங்கப்படும் போது, ‘காலக்கிரமமான நிகழ்வுகளின் தொகுப்பான ஞாபகம்’ என்பதற்கு அர்த்தமேயில்லை. உச்ச செயல் துறையிடம், ‘நேற்றை’ ‘நாளை’யாகவும், ‘ இன்றை’ ‘நேற்றா’கவும, ஒன்றை என்றாகவும் மாற்றும் தனிப்பிரிவு இருந்தது. நேரச்சீர் செயல்துறை, ‘காலம் நேர்படுத்தும்’ அல்காரிதத்தையும் மாற்றிக்கொண்டேயிருந்தது. ‘இன்று’ வெள்ளி என்றால் வெள்ளிக்கிழமை. நாளையும் வெள்ளியாகவே இருக்கலாம். கட்டற்ற சமூகத் திரையில் ‘நுழையும்’ போது ‘அன்றைய’ காலண்டர் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி காலண்டர்கள். உங்கள் திங்கள் இன்னொருவனுக்கு சனி. புபித்தனுக்கு கிழமைகள் பற்றி கவலையில்லை. அலுவல் சேரில் இருந்தும் போது செல்ஃபோனில் செய்தி.

‘புபித்தனின் நிகரற்ற கதைப்புத்தகம்! விற்பனை: 1,23,357. வாங்க: இங்கே தொடவும்’

பார்க்கும்போதே விற்பனை எண்ணிக்கை கூடியது. அதற்குள் சேரில் இருந்தியிருந்தான். முன்னாடி, திரை, அலுவல்களை அவசரக்கிரமப்படி ஒப்பிக்க ஆரம்பித்தது. புபித்தனுக்கு multi-interactive socio-emotional games பிரிவில் அடிமட்ட வேலை. விளையாடுபவர்கள், ஒரு குறிப்பிட்ட சமூக சூழ்நிலை சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள்; மற்றவர்களின் செயல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை pattern களாக நினைவிருத்தி, புதிய சூழ்நிலை சந்தர்ப்பங்களை கேம் தானாகவே உருவாக்கும் module-ல் டெஸ்டர். கேம் உருவாக்கிய சூழ்நிலை சந்தர்ப்பம், நிஜத்தில் இருக்கிறதா, யாரேனும் இது பற்றி பேசியிருக்கிறார்களா என்று கண்டுபிடிக்கும் வேலை. முப்பது அவதார்களை மத்திய தகவல் தளத்திலிருந்து உருவி ‘புதிது’ என்று பட்ட சூழ்நிலையில் உலவ விட்டான். கம்ப்யூட்டரே முப்பது பேராகவும் மாறி ‘நடந்துகொண்டிருந்த’ சின்ன இடைவெளியில், சேதிப்பெட்டியைத் திறந்தான். ஒருத்தருக்கு ஒரு சேதிப்பெட்டி. உறுப்பினராய் இருக்கும் குழு அறிவிப்புகள், செய்தி செயல்துறையின் தினசரி செய்தி சுருக்கங்கள், நண்ப விசாரிப்புகள், ரசீதுகள்… சராசரி சமூகத்தினனுக்கு மணிக்கு 200 சேதிகள் சாதாரணம். புபித்தன் சராசரிக்கு மேல். இன்று ஒரேயொரு ஒருவரி செய்தி!

‘புபித்தனின் நிகரற்ற கதைப்புத்தகம். விற்பனை: 1,37,532. வாங்க: இங்கே தொடவும்.’

அனைத்து மீடியா விளம்பரம்! அனைத்து என்றால் அனைத்து. எல்லாத்தரப்பட்ட டிஸ்ப்ளே திரைகளிலும் மினுங்கக்கூடியது. இன்டெர்நெட், டெலிவிஷன், ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் இத்யாதி வீட்டுச்சாதனப் பேனல்கள், செல்ஃபோன் வகையறா உள்ளங்கையடக்க கேட்ஜெட் கள், போக்குவரத்து சாதன, மார்க்க அறிவிப்பு திரைகள்…எலெக்ட்ரானிக் டிஸ்ப்ளே உள்ள எல்லா பொருட்களிலும். புபித்தன், குவித்த உள்ளங்கைகளுக்குள் மூக்கு வாய் புதைத்து, ஒற்றைச் செய்தியை வெறித்தான். எண்ணிக்கை கூட ஆரம்பித்தது. மனிதனைத் தவிர எல்லாவற்றிலும் எலெக்ட்ரானிக் டிஸ்ப்ளே இருந்தது. மனிதர்களுக்கும், கண்ணில் பொருத்திக் கொள்ளக்கூடிய கட்டற்ற சமூகத்திரைக் கண்ணாடி வில்லைகள் மலிவாகவே கிடைத்தன. இருபதாம் ஆள் ‘நீ உட்கார்’ என்று அதட்டினான். தயங்கிய மூன்றாம் ஆள் உட்காருமுன்…விளையாட்டை நிறுத்தி எழுந்தான். யோசிக்க வேண்டும். ஏதாவது ஸ்டீராய்ட் பானம் அருந்தினால் நல்லது. உள்ளே வந்த போது, இந்தக் கதவு இங்கே இருந்ததா? பச்சைக் கதவு. திறப்பதற்கு அடையாளத் தேவையில்லை. மூன்றடி அருகில் போனால், அவனை ஸ்கேன் செய்துவிட்டு திறக்கக் கூடிய கதவு…

‘புபித்தனின் நிகரற்ற கதைப்புத்தகம். விற்பனை: 1,53,723. வாங்க: இங்கே தொடவும்.’ …என்று மினுங்கி, தயங்கித் திறந்து கொண்டது.

-0-

தாழ இருந்த குடிவிடுதியில் புழுக்கம். ‘இன்று’ சென்னை தினம். குறைவான கூட்டமே. மூன்று பெண்கள் டி-ஷர்ட்டையும், கால் டிரவுசரையும் கழற்றிப்போட்ட சேர்களில் சாய்ந்து பியரோடு கிடந்தார்கள். சிலபேர் அதிசயமாய் மேலாடை கூட அணிந்திருந்தார்கள். ஒரு கறுப்பன், கட்டிப்பிடித்திருந்த வெள்ளையனை பிடறியில் முத்தமிட்டிக் கொண்டிருந்தான். கறுப்பன் மட்டும் ஜட்டி போட்டிருந்தான். ஈரத்துவாலை மட்டும் போர்த்தியிருந்த ஆசியப்பெண் புபித்தனிடம் “ஐந்து நிமிடம் இருக்கிறதா?” என்றபடி துவாலையை சரியவிட்டாள். ‘இல்லை’யென்று தலை அவளுக்கு அசைந்தபோதும் பார்வை, பின்னாலிருந்த சுவர்த்திரை மீதேயிருந்தது. ‘புபித்தனின் நிகரற்ற…’ தொடாதே! முதலில் யோசி! ‘இங்கே’ தொட்டான். ‘விற்றுத் தீர்ந்தது!’ மின்னிய செய்தி கீழ் ‘தினசரி கடைகளில் விசாரிக்கவும்’ உப செய்தி. வேண்டாம்! ஒரு ஸ்டிமுலி குடி! துவாலைப்பெண் இன்னும் போர்த்திக்கொள்ளவில்லை! மூன்று நிமிடமாவது எடுத்துக்கொள்! ‘தினசரி கடை’ மீது விரல் வைத்து ‘எது பக்கம்?’ என்று கேட்டான்.

இரண்டாவது மாடியில். குட்டையான ஒரு ஆள், கண்ணாடி வில்லைகளைப் பொருத்தி சோதித்துக்கொண்டிருந்தான். ‘புதிய வரவுகள்’ திரையில் புபித்தனின் புத்தகம். யோசி! யோசி! யோசி டா! ‘இங்கே’ யும் தொட்டான். செய்தி மாறவில்லை. திரும்பத் தொட கைவிரல் நீட்டி…செல்ஃபோனில் குரல் செய்தி,

‘கலாசார செயல்பிரிவை அழைக்கவும். சங்கேத எண்: 22031969′

நில்! ஒரே ஒரு நிமிடம் நில்! கீழே போ! பியர் குடி! உடனே அழைக்காதே! மறுமுனை மெஷின் குரல், இரு நிமிடம் காக்கச் சொன்னது. குட்டையன் இரண்டு கண்ணாடி வில்லைகளைத் தேர்ந்துவிட்டான். கலாசார செயல்துறை நகர மையக் கட்டிடத்தில், புபித்தனின் விரல் ரேகைக்கு அனுமதி சேர்த்துவிட்டு, ஒன்றரை நிமிடங்களில் மெஷின்குரல் திரும்பக் கரகரத்தது.

‘நான்காம் கட்டிடம். இரண்டாவது மாடி. முப்பது நிமிடங்களில். வழி தெரியாவிட்டால் கேள்’

தெரியும் அவனுக்கு. பலவர்ணக் கட்டிடம். தொலை!

-0-

இரண்டாவது மாடியில் கால் வைத்தவுடன் “வணக்கம்!” என்றார் ஒரு நடுத்தர வயது வழுக்கை குள்ள பரும நபர்.

“நான் மதி_2102. என் அறையில் உட்கார்ந்து பேசலாம்” பெண்குரலில் பேசினார்.

இரண்டு சேர்கள் தவிர்த்தால் அந்த அறை காலி, சுவரோர குட்டி ஃப்ரிட்ஜ் தவிர. சுத்த வெள்ளை நிறம். எல்லாமே. அவர் உடைகள் உட்பட.

“சொல்லுங்கள்” ஒரு சேரில் சரிந்து கொண்டே மற்றதைக் காட்டினார்.

“நீங்கள் தான் சொல்லவேண்டும்! என்ன நடக்கிறது?” செல்ஃபோன் முதல் செய்தி, சேதிப் பெட்டியின் ஒற்றைச் செய்தி, குடிவிடுதி, தினசரிக் கடை, மெஷின்குரல்…என்று பச்சைக்கதவு, ஈரத்துவாலை ஒளித்து வரிசையாய் ஒப்பித்தான்.

“ஏன் இவ்வளவு ஆர்வம்?”

“ஏனா? நோ-ஹிப் ஜட்டிகளை விட வேகமாக விற்கின்ற ஒரே எண்ணம் இது தான். அதுவும் ‘கதைப் புத்தகம்’ என்கிற புரியாத தலைப்பில்.”

“வேரறுப்பு செயல்துறையின் அறிவிப்பு கவனிக்கவில்லையா?”

“கவனித்தேன். எதும் புரியவில்லை”

“எதும் புரியாமல் ஏன் தேடுகிறீர்கள்?”

“ஏனென்றால்…” புபித்தனின் பெயர் புபித்தன் என்பது புபித்தனுக்கு மட்டும் தான் தெரியும். “கொஞ்ச நாட்களாக எனக்குள் ஏதோ நடக்கிறது. உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று கூடத் தெரியவில்லை. ‘எழுத’ வேண்டும் என்று தோன்றிக் கொண்டேயிருக்கிறது. எழுதுவது என்ன, எப்படி எதும் தெரியவில்லை. எழுதினால், ‘புபித்தன்’ ங்கிற பெயரில் எழுதவேண்டும் என்றும் தோன்றுகிறது” இவரிடம் இதெல்லாம் சொல்லலாமா?

‘பரவாயில்லை, சொல்லுங்கள்’ பார்வையுடன் பியர் நீட்டினார்.

“இதெல்லாம் உங்களிடம் சொல்லலாமா? என்பது கூடத் தெரியவில்லை”

வீண் கேள்வி. “எப்பொழுதெல்லாம் ‘எழுத’த் தோன்றுகிறது?” பியரைத் திணித்தார்.

“எப்பொழுதும்”

“எப்பொழுதிலிருந்து?” யோசித்தான்.

காத்திராமல் “இந்தப் பெயரை எப்படித் தீர்மானித்தீர்கள்? அன்டர்ஸ்கோர் கூட இல்லாமல்?!” முதல்தடவையாக அவர் முகம் மாறியது.

“அதே தான்! அது தான், என்னைத் தேடத் தூண்டியது. இந்தப் பெயர் எனக்கு மட்டுமேத் தெரிந்த பெயர்! கனவில் தோன்றியிருக்க வேண்டும். எப்போது என்று ஞாபகம் இல்லை. ஆனால், இப்போது எல்லாத் திரைகளிலும்…எனக்குப் புரியவில்லை.”

மெதுவே பியருருஞ்சினான். “தேட வேண்டாம். தொட வேண்டாம் என்று தானிருந்தேன். கூடிக்கொண்டேயிருந்த எண்ணிக்கை! என் பெயர்…”

“தெரியும், மபொ_1990! கடைசியாய் மன அலசலுக்கு எப்போது போனீர்கள்?”

That’s it! உறிஞ்சிய பியரை, மூக்கு வாய் வழி எறிஞ்சினான். அஃதே! கடைசியாய் எப்போதென்று ஞாபகமில்லை, ஆனால் இந்தப் பெயரை நினைக்கக் கூடாது என்று நினைத்து, நினைத்துக்கொண்டே இருந்த ஞாபகம் வந்தது. எழுந்தே விட்டான்! மதி_2102, ஒரு புன்னகையோடு பழைய முகமானார். எதிர்சுவர் திரையை உயிர்ப்பித்தார். செய்தி செயல்துறை முகப்பு. ‘அதிகம் கேட்கப்பட்டவை’ பிரிவில் ‘புபித்தனின் கதைப் புத்தகம்: ஒரு விமர்சனம்’ தொட்டார். ஆயிரக் கணக்கில் விமர்சித்திருந்தார்கள்.

“எல்லாவற்றின் சாராம்சம்” என்றார். குரல், குரலாய் விமர்சனங்கள். பத்தாவது குரல் அமைதியானவுடன் “random” என்றார். திரை, வரிசைக்கிரமமின்றி விமர்சன சத்தங்களை விசிறியது.

“என்ன, பிடித்திருக்கிறதா உங்கள் கதைப் புத்தகம்?” சிரித்தபடி திரையை அமிழ்த்தினார்

“கதை என்பது, முட்டாள் காலத்திய தட்டை விசயம். பலவீன மனம் ஒன்று, மிகைப்படுத்திய சுய பயங்களையும், அவநம்பிக்கைகளையும், பிரக்ஞையற்ற சிந்தனைப் பிசகுகளையும் மற்ற சார்ந்துணர் மனங்களில் ஏற்ற முயன்ற அற்ப காரியம். அற்பமே, ஆனால், ஒரு சமூகத்தையே சிதைக்க வல்ல அழிவாற்றல் நிறைந்தது”

அருகே வந்தார். புபித்தன் தளர்ந்திருந்தான்.

“கட்டற்ற சமூகத்தின் நலன் மேல் தீரா அக்கறை கொண்ட உச்ச செயல்துறை, ‘நமது சமூக பலம் இதை மீறியதா?’ என்று நிகழ்த்திய சோதனை தான், நீங்கள் எழுதிய புத்தகம்! நமது சமூகம் பலமானது! உச்ச செயல்துறைக்கு நன்றி! இரண்டே பேர் தான், புத்தகம் வாங்க தொட்டிருக்கிறார்கள். வீன்_1969 பெண்ணை ஏற்கனவே விசாரித்து விட்டோம். தவறுதலான தொடல். தீங்கற்றது. நீங்கள் தான் கவலையூட்டுகிறீர்கள். ‘ஏன்’ என்று தெரியாமலேயே ‘வாங்க’ முயற்சி செய்திருக்கிறீர்கள்”

புபித்தன் ஒப்புக்காய் கேட்டான் “இத்தனை பேர் விமர்சித்திருக்கிறார்களே?”

“இப்போது என்னை அச்சப்படுத்துகிறீர்கள்! தெரிந்து கொண்டு தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கட்டை நாம் எப்போதே உடைத்து விட்டோமே!”

காதுக்குள் பொத்தான் ஸ்பீக்கரை அமிழ்த்தி, சுவர் பேனலில் ஒரு பட்டனை அழுத்தினார். ஒரு நிமிடத்தில் ஸ்பீக்கரை எடுத்தவாறே,

“நீங்கள் சமூக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள். மன சுத்தத்தில் ஆறாம் நிலை தேறினால், உங்கள் மறுநுழைவு பரிசீலிக்கப்படும். வந்ததற்கு நன்றி! அறைக்கு வெளியே சென்றதும், வழி நடத்தப்படுவீர்கள்”

“போவதற்கு முன் ஒரு சிறு சலுகை” தூரத்தில் ஒலிக்கிற மாதிரியான குரலில் கேட்டான் “ ‘நான் எழுதிய கதைப்புத்தகத்தை’ ஒருமுறை பார்க்க விரும்புகிறேன்!”

முறுவலித்துக்கொண்டே கதவைக் காட்டி “அது எழுதப்படவே இல்லை” என்றார்.