20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 23

இங்கிலாந்து நாட்டில் ஓவிய நிகழ்வுகள்

ராஃபலைட்ஸ் சகோதரத்திற்கு முன்_1848

PRE RAPHAELITES BROTHERHOOD (PRB)

19ஆம் நூற்றாண்டின் மைய ஆண்டுகளில் லண்டன் நகரில் இயங்கிய ராயல் அகாதமி ஆஃப் ஆர்ட்ஸ் (Royal Academy of Arts) என்னும் கலைப் பள்ளிதான் பயிற்றுவிப்பதில் முதன்மை பெற்றதாக இருந்தது அதன் பயில்விக்கும் வழியைத்தான் மற்ற அமைப்புகளும் பின்பற்றின. மாணாக்கர் ஓவியத்திற்கான உடல் அமைப்புக்கூறு, ஒத்திசைவு, வடிவியல் போன்ற அடிப்படை அறிவைக் கற்றனர். ஆனால், ஓவியர் ராஃபேல் (Raphael) பின்பற்றிய ‘நியோ கிளாஸிகல்’ (Neo-Classical) பாணியோ, அல்லது, ஓவியர் கான்ஸ்டபிள் (Constable), ஓவியர் டர்னர் (Turner) போன்றோர் அமைத்துக் கொடுத்த ‘ரொமான்டிக்’ (Romantic) பாணியோ மட்டுமே கற்பிக்கப்பட்டது. அவை தவிர அங்கு மற்ற எந்தப் பாணியும் இடம் பெறவில்லை.

கலைப் பள்ளியில் ஒரு ஓவியத்தில் பின்பற்றப்படவேண்டிய மூன்று முக்கிய நிலைகள் என்று பயில்விக்கப் பட்டவை:

1) உருவங்களை ஒரு கூம்புவடிவத்தில் பொருந்தும் விதமாக ஓவியத்தில் கட்டமைக்க வேண்டும்.
2) ஓவியத்தில் ஒரு புறத்திலிருந்து அதிக ஒளியும், எதிர்ப் புறத்திலிருந்து அதற்கு இசைவான மங்கலான ஒளியும் அமையவேண்டும்.
3) ஒளியால் உண்டாகும் உருவங்களின் நிழற்பரப்பு வண்ணம் குறைந்த இருள் பகுதியாக அமையவேண்டும்.

இக் கல்வி முறையில் சலிப்புற்ற சில மாணவர்கள் ஒன்றுகூடி ரகசியமாக ஒரு குழுவை 1848 இல் தொடங்கினர். அதற்கு ‘ராஃபலைட்ஸ் சகோதரத்திற்கு முன்’ (Pre-Raphaelites Brotherhood) என்று பெயரிட்டனர். அந்தக்குழுவில் தொடக்கமாக ஏழு கலைஞர்கள் இருந்தனர். அவர்களில் வில்லியம் ஹால்மான் ஹன்ட், டாண்டே கேப்ரியல் ராசெட்டி, ஜான் எவரெஸ்ட் மிலாயிஸ்ட் (William Holman Hunt, Dante Gabrial Rossetti, Jhon Everett Millais) ஆகிய மூவரும் பின்னாட்களில் பிரபலமாகப் பேசப்பட்டனர். Pre-Raphaelites இயக்கத்தின் நோக்கம் ஓவியம், கவிதை இரண்டையும் மீண்டும் புதிய சக்தி கொண்டதாக மாற்றுவதுதான்.

அந்நாட்களில் ராஃபாயல் (Raphael), மைக்கெல்ஏங்கிலியோ, (Michel-angelo) இருவரையும் தங்களது முன்னோடிகளாகக் கொண்டு ஓவியங்கள் படைத்த மறுமலர்ச்சிக் கால ஓவியர்களை இந்த இயக்கம் ஒப்புக்கொள்ள வில்லை. அதிலும் குறிப்பாக, ஓவியர் ராஃபாயல் இன் ஓவிய வழி, அவற்றில் உருவங்கள் அமையப்பெற்ற விதம், ஓவியங்கள் கட்டமைக்கப்பட்ட முறை போன்றவற்றை இக்குழு ஒதுக்கியது. இவ்வகைக் காரணங்களால் குழுவுக்கு ‘ராஃபலைட்ஸ்கு முன்’ (Pre-Raphaelites)என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் உருவங்களைத் தத்ரூபமாக -இயற்கைக்கு வெகு அண்மையான நுணுக்கங்களுடன்- படைத்தனர். ஓவியங்களில் அனைத்துப் பொருட்களும் (உருவங்கள் / வடிவங்கள்) ஒரே விதமான அக்கறையுடனும், தெளிவுடனும் தீட்டப்பட்டன. முன்னர் ஓவியத்தின் கீழ்பகுதியில் பெரும்பாலும் உருவங்கள் நிழலில் தெரியும் தெளிவில்லாதவிதமாகவே படைக்கப்பட்டன. அதை மாற்றி அவற்றையும் தெளிவாகத் தெரியும் விதமாக ஒளிரும் வண்ணங்கள் கொண்டு அமைத்தனர். புழக்கத்தில் இருந்த முறைகளைப் பற்றி மறு ஆய்வு செய்து அவற்றில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். ஒரு கலைஞன் ஓவியம், இலக்கியம் இரண்டிலும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஊக்கு விக்கப் பட்டனர். அவர்களது படைப்புகள், ‘ஓவியங்களின் கருப்பொருள் விவிலிய கதைகள்’ என்பதிலிருந்து விலகி சமகாலக் கவிஞர்களின் கவிதைகளைக் கருப்பொருளாகக் கொண்ட விதமாக அமைந்தன. தங்களது கருத்துக்களையும் கோட்பாடுகளையும், இலக்கியப்படைப்புகளையும், படைப்பு சார்ந்த சர்ச்சை களையும் ‘ஜெர்ம்’ (Germ) என்னும் கலை இதழில் பதிவு செய்தனர். அந்த இதழ் 1850 ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்கள்தான் வந்தது. இதழ் தொடர்ந்து வராததை நோக்கும் போது அதற்கு வாசகரிடையே வரவேற்பு இருக்கவில்லை என்பது தெரிகிறது. வில்லியம் ராசெட்டி (Wiliam Rossetti) (இவர் டாண்டே கேப்ரியல் ராசெட்டி (Dante Gabrial Rossetti) இன் சகோதரர், கவிஞர்) இதழின் ஆசிரியராகச் செயற்பட்டார்.

குழுவின் முதல் ஓவியக்காட்சி 1849 இல் ‘ராயல் அக்காதமி ஆஃப் ஆர்ட்ஸ்’ (Royal Academy of Arts) வளாகத்தில் நிகழ்ந்தது. அதுவரை தங்களது இயக்கத்தை மிக ரகசியமானதாகவே வைத்திருந்தனர் அவ்விளைஞர்கள். முன்பே முடிவு செய்யப்பட்ட விதத்தில் அனைத்துப் படைப்புகளும் ஓவியர்களின் கையெழுத்துடன் ‘PRB’ என்று அவர்கள் இயக்கத்தின் பெயரையும் கொண்டிருந்தன. ஓவியர் மில்லோயிஸ் (Millois) இன் ஓவியம் (அதன் கருப் பொருள் ஏசு தமது பெற்றோரின் இல்லத்தில் இருப்பது) விமர்சகர் மற்றும் பழமை வாதிகளிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது. எழுத்தாளர் சார்லஸ் டிகன்ஸ் (Charles Dickens) வெளிப்படையாகவே, ‘ஓவியத்தில் அளவு கடந்த நுணுக்கங்களில் கவனம் செலுத்தியிருப்பதும் வண்ணங்களின் தேர்வும் கண்களைக் கூச வைக்கிறது. மேலும் அதில் உருவங்கள் சமூகத்தில் வறுமைப் பிடியில் சிக்கிய குடிகாரக் குடும்பம் போலத் தோற்றமளிக்கின்றன’ விமர்சித்தார்.

ஆனால், சிந்தனையாளரும் எழுத்தாளருமான ‘ஜான் ரஸ்கின்’ (John Ruskin) அவ்வியக்கத்தின் இயற்கையை ஆராதிக்கும் ஈடுபாட்டையும், ஓவியம் கட்டமைக்கும் பழைய வழியைப் புறக்கணித்த அவர்களது உறுதியையும் பற்றி சிறப்பாகப் பேசினார். தமது எழுத்து மூலம் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தார். தேவையானபோது பொருளுதவியும் செய்தார். என்றாலும் விமர்சனங்கள் இயக்கத்தின் தன்னம்பிக்கையை ஆட்டம் கொள்ளச் செய்து விட்டன. அதனால் ஏற்பட்ட சலசலப்பு குழு கலையக் காரணமாயிற்று. 1855 இல் இரண்டாகப் பிரிந்த அவை எதிரெதிர் வழிகளில் பயணப்படத் தொடங்கின.

ப்ரீ-ராஃபலைட்-ரியலிஸ்ட்ஸ் (Pre-Raphaelite – Realists) என்று அறியப் பட்ட குழு ஓவியர்கள் ஹன்ட், மிலாஸ் (Hunt, Millas) தலைமையில் பயணித்தது. அவ்விதமே, ப்ரீ-ராஃபலைட் மெடிவியலிஸ்ட் (Pre-Raphaelite – Medivalist) குழு ராசெட்டி, வில்லியம் மோரிஸ் (D.G.Rossetti, William Moriss) போன்றோரால் வழி நடத்தப்பட்டது. ஆனால் அந்தப் பிரிவை முழுமையானது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், இரு குழுக்களுமே ‘கலை என்பது உள்ளம் சார்ந்த வெளிப்பாடு’ என்னும் கோட்பாட்டை ஒப்புக்கொண்டன. அதுபோலவே, க்யூபிஸம், இம்ப்ரெஷனிஸம் (Coubism, Impressionism) போன்ற உத்திப் படைப்புகளுடன் தொடர்பு கொண்ட, பொருள்களைத் தத்ரூபமாகப் படைக்கும் வழியை ஏற்கவில்லை.

ஓவியர் ராசெட்டி (Rossetti), எட்வர்ட் பர்ன் ஜோன்ஸ் (Edward Burne-Jones), ஃபோர்டு மாடாக்ஸ் ப்ரவுன் (Ford Madox Brown) என்னும் ஓவியர்களுடன் குழுவை மீண்டும் வடிவமைத்தார். இப்போது அது ஏஸ்தடிக் ப்ரீ ராஃபியலிட்டிஸம் (Aesthetic Pre-Raphealitism) என்று பெயர் சூட்டிக் கொண்டது. அதன் கொள்கை ரொமான்டிக் (Romantic) பாணியைப் பின் தொடரவதாயிற்று. பின்னர் மூவருமே வில்லியம் மாரிஸ் (William Morris) தோற்றுவித்த கலை கைவினை இயக்கத்துடன் (Arts and Crafts Movement) இணைந்தனர்.

ப்ரீ-ராஃபலைட் இயக்கத்தை (Pre-Raphaelites) ‘கலையில் மாற்றங்களை அறிமுகப்படுத்திய முதல் அறிவுஜீவிக் கூட்டம்’ (Avent Garde) என்போரும், ‘இல்லை’ என மறுப்போரும் உண்டு. என்றாலும் இக்குழு கலை உலகில் ஏற்படுத்திய தாக்கத்தை மறுக்க முடியாது.

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்துங்கள்]
01-william-holma-hunt02-whhunt03-whhunt04-whhunt05-dgrossetti06-dgrossetti07-dgrossetti08-dgrossetti09-detail-of-ophelia-by-john-everett-millais10-jemillais11-william-morris12-wmorris13-jemillais
[/DDET]