வீடு வாங்கிய கதை

கடைசிக்காலம் வரை என் அப்பா வாடகை வீட்டில் இருந்தாலோ என்னவோ எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை.

திருமணம் ஆன பிறகு “மாப்பிள்ளை, எப்போது குழந்தை?” என்ற கேள்விக்கு விடைகிடைத்தபின்பு வீட்டுக்கு வருபவர்கள் “எப்போது சொந்த வீடு?” கேள்விக்கு மாறிவிட்டார்கள்.

“வேளச்சேரில என் ஃப்ரெண்டோட ஃபிளாட் ஒண்ணு ஒருக்கு, மழை வந்தால் அந்த வீட்டைச் சுத்தி மட்டும் தண்ணி வராது”

“சோ ஸ்கூல் தொரியுமோ? அது பக்கம் சீபிராஸ் பிளாட் ஒண்ணு போடறான். அந்த ஏரியா நல்லா டெவலப் ஆயுடுத்து”

–போன்ற சம்பாஷனைகளிலிருந்து தப்பித்து பெங்களூர் வந்தாலும், இங்கே இருக்கும் சொந்தங்கள் ஓட்டப்பந்தய ரிலே மாதிரி திரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். ‘சேரி’க்கு பதில் இங்கே ‘ஹல்லி’.

“சரி நாமளும் ஆணி அடிக்க சொந்த வீடு வாங்கலாமே” என்ற எண்ணம் எட்டு வருடம் முன் உதித்தது. பிளாட்(Plot) வாங்கி நம் இஷ்டத்துக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற நினைப்பில், சனி ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் காலி வீட்டு மனை கிடைக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தேம்.

செய்திதாளில் வரும் விளம்பரங்களை கண்டுபிடித்து ஃபோன் செய்தால் “இந்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை” என்ற தகவல் அல்லது மறுமுறை “ஐந்து கோடி ரூபாய், மூன்று கோடி கேஷ். டாலர் பேமண்ட் என்றால் 10 லட்சம் கம்மி” என்பார்கள். “சொந்த வீடு கட்டினால் சம்ப் ரொப்பணும், நாமளே மோட்டர் போடணும், காவலுக்கு நாய் வளர்க்கணும் போன்ற காரணங்களைக் கண்டுபிடித்து அடுக்கி, ஒருவழியாய் ரெடிமேட் அடுக்குமாடி (Flat) வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்து தேட ஆரம்பித்தோம். பட்ஜெட் இவ்வளவுதான் என்று முடிவு செய்து 2BHK பார்க்க ஆரம்பித்தோம்.

“நிறைய வீடுகள் இருக்க கூடாது – தண்ணீர் பிரச்சினை வரும்.
பெரிய பெரிய கட்டிடமாக இருக்க கூடாது – அன்டிவைடட் ஷார் ரொம்பக் கம்மியா இருக்கும்.
மூன்றாவது மாடிக்கு மேல் போக கூடாது – லிப்ட் வேலை செய்யவில்லை என்றால் யார் ஏறுவது?” போன்ற கறாரான கண்டிஷன்களை கட்டடம் போல அடுக்கினாள் மனைவி.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே குடும்பம் பெரிதாகிவிட 3BHK-க்குத் தாவினோம்.

brigademetropolis_3

அடுக்குமாடிக் குடியிருப்பு பெங்களூரில் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. 100–200 வீடுகளிலிரிந்து 1000, 2000, 3000 வீடுகள் வரை வந்துவிட்டது. குர்தா பைஜாமா போட்டுக்கொண்டு பில்டர்களிடம் பேசினால் டி, காபி கொடுத்து உபசரித்து சுற்றிக் காண்பிப்பார்கள். இல்லை என்றால் இருக்கையிலிருந்து எழுந்துக்கொள்ளாமல் யாராவது வாட்ச்மேனைக் கூப்பிட்டு சுற்றிக் காண்பிக்க அனுப்புவார்கள். எல்லா பில்டர்களும் ‘மாடல் ஹவுஸ்’ என்கிற ‘மாதிரி வீட்டை’ பிரமாதமாகக் கட்டி அலங்காரம் செய்திருப்பார்கள். உடனே பேங்கில் இருக்கும் எல்லாப் பணத்தையும் துடைத்து எடுத்து புக் செய்துவிடலாம் என்று தோன்றும், அடுத்த பில்டரிடம் போகும்வரை. போனால் அவர் இதைவிடப் பிரமாதமாகக் கட்டியிருப்பார்.

நாங்கள் இருக்கும் வீட்டுப்பக்கம் ஒரு பிளாட் பிடித்துப்போக, ஐந்தாவது மாடியில் அதை புக் செய்தோம். பாத்ரூம் தவிர எல்லா இடத்திலும் பால்கனி; பிரமாதமாக இருந்தது. புக் செய்த அடுத்த நாள் காலை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று போனால் எல்லா பால்கனியிலிருந்தும் அடுத்த வீட்டு ஜன்னல் அல்லது பால்கனி தெரிந்தது. எந்த இடுக்கில் பார்த்தாலும், பச்சையாக ஒரு மரம் கூட தெரியவில்லை. பிரைவசி என்பது பாத்ரூமில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைமை. கிரஹபிரவேசத்துக்கு அடுத்த நாள் ஸ்கீரீன் போட்டு எல்லா ஜன்னல் பால்கனியும் மூடியாக வேண்டுமா? என்று கொடுத்த முன்பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு அடுத்த ஃபிளாட்டைத் தேட ஆரம்பித்தேன்.

சில மாதங்கள் கழித்து அடுத்து இன்னொரு அடுக்குமாடியை புக் செய்தேன். ஒரு வாரம் கழித்துப்போய் பார்த்தால் வீட்டுக்கு முன்புறம் STPக்கு (Sewage Treatment Plant) ராக்ஷச மோட்டார்களை நிறுவிக்கொண்டு இருந்தார்கள். அந்த மோட்டார்கள் ஓடினால் வீடே மாவு மில் மாதிரி ஆகிவிடும் என்ற காரணத்தால் அதையும் நிராகரித்தேன்.

பல இடங்களில் தேடிய பின்பு ஆறு ஆண்டுகளுக்கு முன் பார்த்த பிராஜக்டையே திரும்பப் பார்க்கலாம் என்று முடிவு செய்து போனால் விலை இரட்டிப்பாகியிருந்தது, தவிர எங்களுக்கு பிடித்த மாதிரி வீடு அங்கே காலி இல்லை என்று கையை விரித்துவிட்டார். அதே பிராஜக்டில் பிடித்த மாதிரி வீடு வாங்க வேண்டும் என்றால், முதலீட்டுக்காக வாங்கி விற்பவர்களிடம்தான் வாங்க வேண்டும். வீட்டுத் தரகரை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை.

அலுவலக நண்பர் மூலம் வீட்டுத் தரகர் அறிமுகம் கிடைக்க அவரிடம் என்னுடைய தேவையைச் சொன்னேன்.

“கவலையே வேண்டாம் உங்களுக்கு வீடு வாங்கித் தருவது என் பொறுப்பு” என்றார்.

மும்பைக்காரர் வீடு… !

ஒரு வாரம் கழித்து “சார் பதிமூன்றாவது மாடியில் மும்பைக்காரர் வீடு ஒன்று இருக்கு பார்க்கிறீங்களா ?” என்று ஃபோன் செய்தார் தரகர்.

முன்றாவது மாடிக்கு மேலே போக கூடாது என்ற என் மனைவி கண்டிஷன் நினைவுக்கு வந்துபோனாலும், ஒரு எட்டு(பிளஸ் ஐந்து) பார்த்துவிட்டு வந்துவிடலாமே என்ற நினைப்பில் “சரி என்றேன்”

வீடு நான் விரும்பிய வண்ணம் இருந்தால் மேற்கொண்டு தொடரலாம் என்றேன்.

“மூன்றாவது மாடிக்கு மேலே இரண்டு மாடி போகலாம், பத்து மாடி எல்லாம், ஐயோ, நாம என்ன வவ்வாலா, அந்திரத்தில தொங்க?” என்றாள் மனைவி.

13-வது வீட்டுக்காரர் மும்பையிலிருந்து ஃபோன் செய்தார். அவர் என்ன விலை எதிர்ப்பார்க்கிறார் என்று சொல்லிவிட்டு…

“பத்து லட்சம் கேஷ், கணக்கில் வராது.. சம்மதமா?” என்றார்.

“என்னுடைய வெள்ளை சம்பாதியதை கருப்பாக்க என்னுடைய மனம் ஒத்துக்கொள்ளவில்லை” என்றேன்.

“அட என்ன சார், இதுதான் உங்க முதல் வீடா, எல்லோரும் இது மாதிரிதான் செய்யறாங்க. புரோக்கர் உங்ககிட்ட இதைப்பத்தி தெளிவாப் பேசுவார்” என்றார்.

சில மணியில் மும்பைக்காரர் ஐந்து லட்சம் கருப்புக்கு ஒத்துக்கொள்ள, பத்தோ ஐந்தோ கருப்பு கருப்புதானே என்று என் உள்மனம் சொன்னாலும், கடைசியாக இவ்வளவு நாள் தேடுதல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஒத்துக்கொண்டேன்.

“ஒரு வாரத்தில் நான் திரும்பப் பேசறேன், பெங்களூர் எப்ப வரேன்னு சொல்றேன், அக்ரிமெண்ட் போட்டுவிடலாம்” என்றார் மும்பைக்காரர்.

இரண்டு வாரம் கழித்தும் அவரிடமிருந்து எந்தத் தகவலும் வராததால், அவருக்குத் தொலைப்பேசினேன். வெளிநாட்டில் இருப்பதாக மெசேஜ் வந்தது. மின்னஞ்சலுக்கு பதில் இல்லை.

ஒரு மாதம் கழித்து அவர் ஃபோன் செய்து, “சார் எனக்கு ஏகப்பட்ட வேலை, இந்த வீட்டை விற்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும், அதனால் வேற வீட்டை பார்க்க ஆரம்பியுங்கள்” என்ற அட்வைஸுடன் போனை வைத்துவிட்டார்.

“அவர் கூட எதிர்ப்பார்க்கிறார் என்று நினைக்கிறேன் 2 லட்சம் அதிகமாகப் பேசி டீலை முடிக்கட்டுமா?” என்றார் தரகர்.

“நல்ல வேளை அந்த வீடு போச்சு, 13-ஆவது மாடி வீடு யாருக்கு வேணும்? ‘யாவரும் நலம்’ வீடு மாதிரி ஆகியிருக்கும். அஞ்சாவது மாடியில ஏதாவது கிடைக்கிறதா பாருங்க” என்றாள் மனைவி சந்தோஷமாக.

டெல்லிக்க்காரர் வீடு…

பத்து நாள் கழித்து தரகரிடமிரிந்து இன்னொரு தொலைப்பேசி அழைப்பு.

“1302 விலைக்கு வருது” என்றார். முன்பு பார்த்த ‘யாவரும் நலம்’ வீட்டுக்கு எதிர் போர்ஷன்!

“வேண்டாம்னா நீங்க கேக்கவா போறீங்க” என்ற பழகிப்போன கமெண்ட் எல்லாம் கேட்டுவிட்டு வீட்டைப் போய்ப்பார்த்தால் முன்பு பார்த்த வீட்டை விட இது நன்றாக இருந்தது. விலை அதைவிட அதிகம்.

தரகரிடம் கிரீன் சிக்னல் கொடுக்க, வீட்டுச் சொந்தக்காரர் டெல்லியிலிருந்து பேசினார். கிட்டதட்ட மும்பைக்கார் மாதிரியே இவரும் பேசினார்…

பேசிய சில மணி நேரத்தில் எனக்கு இன்னொரு தொலைப்பேசி.. இந்த முறை வேறு ஒரு தரகரிடமிருந்து…

“சார் அந்த 1302 வீட்டை நீங்க பார்ப்பதாக…”

“ஆமாம்.. உங்களுக்கு எப்படித் தெரியும் ?”

“….”

“சார் அந்த வீடு வேண்டாம்.. அந்த வீடு கணவன் மனைவி இரண்டு பேர் பேருல இருக்கு….”

“அதுக்கு என்ன?”

“அவர்கள் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார்கள்… வீட்டை வாங்கினால் அக்ரிமெண்டில் பிரச்சினை வரும்… ஜாக்கிரதை…”

“…..”

“எவ்வளவுக்கு முடித்திருக்கிறீர்கள்… ?”

“…..”

“நான்தான் அந்த வீட்டுக்குத் தரகர், அட்வைஸ் செய்வது என் கடமை …. ”

என் பழைய தரகரிடம் கேட்டேன். “அவர் வேற ஒரு கிளையண்ட் வைத்திருப்பார், பொய்யாக இருக்கும்.” என்றார்

1302 வீட்டுக்காரர் எனக்கு ஃபோன் செய்தார் “நீங்க நிர்ணையித்த விலையை விட எனக்கு வேறு ஒருவர் 2 லட்சம் கூடக் கொடுக்கத் தயாரா இருக்கார்; உங்ககிட்டதான் முதல்ல பேசினேன். அதனால் நீங்க அந்த விலையைத் தர சம்மதிச்சா….”

எங்கே என்னென்ன பர்னிச்சர்கள் போடுவது, எந்த ரூமில் எது இருக்க வேண்டும் என்று கற்பனை செய்துவைத்த வீட்டை விட மனசு இல்லை…..

“சரி” என்றேன்.

“நல்லது… டோக்கன் அட்வான்ஸ் தந்துவிடுங்கள். இரண்டு நாளில் டாகுமெண்ட்ஸ் அனுப்புகிறேன்” என்றார்.

“டோக்கன் அட்வான்ஸ் யாரிடம் தரவேண்டும்?”

“வீட்டில் எல்லா நல்ல காரியத்தையும் எங்க வீட்டுல பெரியவங்கதான் ஆரம்பிச்சு வைப்பாங்க. எங்கள் பேரண்ட்ஸ் பெங்களூர்லதான் இருக்காங்க. அவங்ககிட்ட போய் அட்வான்ஸைக் கொடுத்துடுங்க” என்றார்.

பழைய ஏர்போர்ட் ரோட்டில் அவர்கள் வீட்டை ஒரு மாலை நேரம் தேடிக்கண்டுபிடித்துச் சென்றபோது, வரவேற்பறையில் மலர்ந்த முகத்துடன் பையன், மருமகள், குழந்தைகள் படம் அலங்கரித்தது. இவர்களுக்கா டைவர்ஸ் என்று நம்ப முடியவில்லை, கேட்கவும் முடியவில்லை.

பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தார்கள். முதன்முதலில் வீடு வாங்கிறீங்க, “ஸ்வீட் எடு கொண்டாடு” என்று தட்டு நிறைய கொடுத்துவிட்டு, கூடவே ஐஸ்கீர்ம் தந்தார்கள்.

அட்வான்ஸ் செக்கைக் கொடுத்துவிட்டு இரண்டு நாள் கழித்து பத்திரங்களின் நகலை வாங்கிக்கொள்கிறேன் என்று புறப்பட்டேன்.

இரண்டு நாள் கழித்து ஃபோன் செய்து “வரட்டுமா?” என்றதற்கு, சரியான பதில் இல்லை. “என் பையனிடம் பேசுங்கள்” என்றார் ஐஸ்கீரீம் தாத்தா.

பேசினேன். “ரொம்ப சாரி, என் அக்கா யூஸ்ஸிலிருந்து வருகிறாள், அந்த வீட்டை அவளுக்கே கொடுக்கலாம்னு இருக்கேன். உங்க அட்வான்ஸ் செக்கை வந்து வாங்கிண்டு போங்க!” என்றார்.

தேடுதல் தொடர்ந்தது…

இந்த முறை புரோக்கரிடம் சொல்லவில்லை, அதே அபார்ட்மெண்ட் காம்பிளாக்ஸில் மேற்பார்வை பார்ப்பவரிடம் என் தேவையை சொன்னேன். அவரும் “சரி சார் ஏதாவது இருந்தால் சொல்லுகிறேன்” என்றார்.

ஆந்திராக்காரர் வீடு

சில வாரம் கழித்து அவர் தொலைபேசியில் அழைத்தார். “சார் பார்ட்டி, ஆந்திரா. அவங்களுக்கு ரெண்டு வீடு இருக்கு. ஒன்னை விற்க முடிவு செஞ்சிருக்காங்க. பேசுங்க” என்று தொலைப்பேசி எண்ணைத் தந்தார்.

அழைத்தேன்.

மறுமுனையில் தன்னை ராவ் என்று அறிமுகத்துடன் பேசினார். பதினைந்தாவது மாடி!. விலையும் அதிகம்.

இவ்வளவு கொடுத்து வாங்க வேண்டுமா? என்று யோசிக்கும்போது “எந்த வீட்டுச் செங்கலில் உங்க பெயர் எழுதியிருக்கோ அந்த வீடுதான் அமையும்” என்று நண்பர் உசுப்பேத்திவிட இந்த வீட்டை வாங்குவது என்று முடிவு செய்தேன்.

பால்கனியிலிருந்து மொத்த பெங்களூரில் இருக்கும் வீடுகளும் தெரிய, கீழே(!) பறவைகள் பறக்க, “ஒரு முறை என்னை ஃபிளைட்ல அழைச்சுண்டு போங்கன்னு சொன்னேன். ஆனா இந்த ஃப்ளாட்டே ஃபிளைட் மாதிரிதான் இருக்கும் போலிருக்கு” என்றாள் மனைவி.

ராவ் எனக்கு நிறைய அட்வைஸ் தந்தார். எந்தத் தரகரிடமும் சொல்லாதீர்கள், குழப்பிவிடுவார்கள் என்று எனக்கு அட்வைஸ் கொடுத்தார். பெங்களூருக்கு ஒரு முறை வந்து டோக்கன் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு அக்ரிமெண்ட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போனார்.

வங்கியில் வீட்டுக் கடன் வாங்க முடிவுசெய்து விண்ணப்பித்தேன். சுமார் நான்கு வாரங்களில் கிடைத்தது. வீடு, சென்ற வருடம் இதே சமயம் வீடு பதிவானது. ராவ் ஃபோன் செய்து வாழ்த்துச் சொன்னார். (கட்டுரை ரொம்ப பெரிது என்று நினைப்பவர்கள் ‘சுபம்’ என்று இத்துடன் நிறுத்திக்கொள்லலாம்).

வீட்டு கடனுக்கு காத்துக்கொண்டு இருந்த அந்த இடைப்பட்ட நான்கு வாரங்களில் நடந்த விஷயங்களை மேற்கொண்டு படிக்கலாம்.

ஒரு முறை ராவ் எனக்கு ஃபோன் செய்யும் போது தான் ஒரு நிலம் வாங்க முடிவு செய்திருப்பதாகவும், பேங்க் லோன் சீக்கிரம் கிடைக்குமா என்று கேட்க ஆரம்பித்தார். பாரத ஸ்டேட் வங்கி பல ராவ்-களைப் பார்த்தவர்கள், வங்கியின் ‘ரூல் புக்’ படி எல்லா விதமான விஷயங்களையும் ஆராய்ந்துக்கொண்டு இருந்தார்கள்.

சில நாள் கழித்து “நான் வாங்க இருக்கும் நிலத்துக்கு எப்படியோ பணம் திரட்டிவிட்டேன், பத்து லட்சம் குறைகிறது… உங்க லோன் எப்ப கிடைக்கும்?” என்றார்.

“லோன் கிடைக்க ஒரு வாரமாவது ஆகும், என்னால் நீங்கள் கஷ்ட பட வேண்டாம். உங்களுக்கு அர்ஜண்டாக பணம் வேண்டும் என்றால், நான் பத்து லட்சம் திரட்டி தருகிறேன். லோன் பணம் வந்தவுடன் நீங்கள் எனக்குத் திருப்பி தாங்க” என்றேன்.

“நீ என் பையன் மாதிரி… ” என்று புகழ்ந்தார். சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.

ஒரு நாள் மாலை வங்கியிலிருந்து ஃபோன் வந்தது, லோன் செக்கை வாங்கிக்கொண்டு போகும்படி. உடனே வங்கிக்குச் சென்று செக்கை வாங்கி ராவ் அக்கவுண்டில் சேர்த்தேன்.

ராவிடம் தொலைப்பேசியில் இந்தத் தகவலைச் சொன்னேன்.

“பையா, நான் இப்ப சபரி மலைக்குக் கிளம்பிண்டு இருக்கேன், திரும்ப வர ரெண்டு வாரம் ஆகும். வந்ததும் உங்க பத்து லட்சத்தைத் திரும்ப தரேன்” என்றார் கேட்காமலேயே.

சபரிமலையிலிருந்து திரும்பி வந்தவுடனே- உடனே என்றால் ஒரு 30 நாள் கழித்து, ராவ் பத்து லட்சத்தில் அறுபது ஆயிரம் ரூபாய் கழித்துக்கொண்டு மீதியை அனுப்பினார்.

சொல்ல மறந்துவிட்டேன், மும்பைக்காரர் திரும்ப ஃபோன் செய்து “வீட்டை வாங்கிக் கொள்கிறீர்களா?” என்றார்.