பூமணி – அள்ளக் கிடைக்காத அம்பாரம்

புத்தகம்: அம்பாரம் – பூமணி சிறுகதைகள். 2007ம் ஆண்டுப் பதிப்பு. 448 பக்கங்கள். விலை ரூ.225. பதிப்பாளர்: பொன்னி, சென்னை 91,

எந்த ஒரு எழுத்தாளனும் தன் கதைகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு வகையில் மாறுபட்டதாயிருக்க வேண்டும் என்றே விரும்புவான். ஆனால், வாசகர்களாக நாம் அந்தக் கதைகளை ஒரு தொகுப்பாகப் படிக்கையில் அவற்றுக்குள் ஒரு ஒழுங்கைக் காண விரும்புகிறோம். இப்படி வாசிப்பது, நமக்கு அந்த எழுத்தாளனையும் அவனது எழுத்தையும் புரிந்து கொள்ள ஒரு எளிய வழியாக இருக்கிறது. இதில் ஓரளவு பயனுண்டு என்றாலும், எழுத்தாளனின் நோக்கம் இதற்கு முற்றிலும் மாறான ஒன்றாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவனது எழுத்தில் நாம் காணும் ஒருமை, உண்மையாக இருக்கிற ஒன்றென்றால், அது அவனது நோக்கத்தையும் மீறி படைப்பில் வெளிப்பட்டிருக்க வேண்டும். இது அவனது அந்தரங்க வெளிப்பாடேயன்றி வேறில்லை. இதை அறியும் முனைப்பில்தான் ஒரு படைப்பாளியின் அனைத்து ஆக்கங்களிலும் ஒரு பொதுத் தன்மையை அடையாளப்படுத்தி அதை ஒட்டியும் விலகியும் அவனது எழுத்தைப் பேசும் முயற்சி தொடர்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் அது எழுத்தில் புது வெளிச்சம் பாய்ச்சுவதாக இருக்கும், ஆனால் தோல்வியுறும்போது அபத்தங்களை விரித்துப் பேசுவதால் அது பரிதாபமான தோல்வியாக இருக்கும்.

பூமணியின் ஐம்பத்து ஒரு சிறுகதைகள் அடங்கிய “அம்பாரம்” என்ற தொகுப்பை பொன்னி பதிப்பித்துள்ளது. தலைப்புதான் அம்பாரம் என்று இருக்கிறதே தவிர, இதில் உள்ள எந்த ஒரு சிறுகதையின் தலைப்பும் அதுவல்ல: அம்பாரம் என்பது பூமணியின் அனைத்து சிறுகதைகளுக்குமான தொகுப்புப் பெயர் என்று கருத வேண்டியுள்ளது. இப்பெயர் ஏன் சூட்டப்பட்டது, இதன் பொருள் என்ன, இது அனைத்துக் கதைகளையும் தொகுத்து வாசிக்க உதவக் கூடிய சொல்லா என்ற கேள்விகளைத் தவிர்க்க முடியாது.

பூமணியின் சிறுகதைகளில் இப்படிப்பட்ட ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில கதைகள் சிறுவர்கள் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில பெண்களின் பார்வையில் என்று ஒவ்வொரு கதையும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலும் சாதி அடையாளங்களுடன் பேசப்படும் பூமணியின் எழுத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை சில கதைகளின் அடித்தளத்தில் காணப்படுகிறது. ஐம்பத்து ஒரு கதைகளில் எத்தனை கதைகள் சாதியைத் தன் களமாகக் கொண்டிருக்கின்றன என்று கணக்கு பார்த்தால் அவை குறைவாகவே இருக்கும். ஆனால், அதற்காக அந்தக் கதைகளில் நமது கவனம் ஈர்க்கப்படாமல் இருக்கக்கூடிய காலம் இன்னும் வரவில்லை.

ஒதுக்கம் என்ற சிறுகதையில் இந்த அம்பாரம் என்ற சொல் வருகிறது. ஒரு பேருந்து நிலையத்தின் கழிவறையைப் பராமரிப்பவன் ஒருவன், பேருந்து நடத்துனரைப் பார்த்து பேசுவதாக அமைந்திருக்கிறது இது: “பேசாம துட்ட எடுங்க. அம்பாரத்துல அள்ளிக் கொறஞ்சிறாது. வகுறு சும்மாக் கெடக்குது,” என்கிறான் அவன். அந்த அம்பாரம் பேருந்தில் டிக்கெட் கொடுத்த பணம், இருந்தாலும் அதில் இருந்து காசு எடுத்து இருவரும் டீ குடிக்கின்றனர். இந்தக் கதையின் பிரதான பாத்திரம் எவ்வளவு உரிமையாக அம்பாரத்துல அள்ளிக் கொறஞ்சிறாது என்று சொல்கிறான்!- இவனை இரக்கத்துடன் பேசும் கதை ஒரு ஓரப் பார்வையில் இப்படி நினைத்துக் கொண்டு அரசியல் பிழைப்போரைச் சாடுவதாக இருக்கிறது. “முந்தாநாளு டீக்கடையில கரிமூட்டத்துக்குள்ள அழுக்குத் துணியோட கெடந்திருப்பான்.இன்னைக்கு என்னடான்னா எஞ்சாதி ஒஞ்சாதின்னு சொல்லி ஓட்டு வாங்கி கவுன்சிலரா வந்த ஒடனே அவனுக்கு வாற வருத்து சொல்ல முடியாது. கக்கூசு வண்டி இழுக்கறவன்னா கக்கூசல்ல சுத்தணும். அது கெடையாது. கொண்ட நெறையா பூவ வச்சுக்கிட்டு கவுன்சிலரு வீட்டைச் சுத்தணுமாம். அடிக்கடி கூப்பிட்டு வுட்ருவாக. கக்கூசென்ன அவுக நடு வீட்லயா கெட்டி வெச்சிருக்காக,’ என்று இவன் தன் அதிருப்தியை வெளிப்படுத்துவதன் பின்னணியில் ஒரு கசப்பான அனுபவம் இருக்கிறது. அது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை நாம் எப்படி ஏற்றுக் கொண்டிருக்கிறோம், இதனால் மானுடம் எப்படி சிறுமைப்பட்டுப் போகிறது என்பது எந்த விதமான பிரசார தொனியும் இல்லாமல் பூமணியால் சுட்டிக் காட்டப்படுகிறது.

பொதுவாகவே இந்தத் தொகுப்பில் நிறைய பேருக்கு வகுறு சும்மாக் கெடக்குது, “எங்கே அந்த அம்பாரம்?” என்று தேடும்படியான கதைகள்தான்.

இந்த அம்பாரம் என்பது எழுத்தாளனின் கற்பனையையும் குறிக்கலாம். ஆழம் என்ற சிறுகதை இப்படி துவங்குகிறது: “அவன் கதையெழுதிக் கொண்டிருந்தான். தூக்கம் கழுவித் துடைத்திருந்த மனசுக்குள் நினைவும் உணர்வும் ஊறி விரலில் கசியக் கசிய எழுத்து வேகமாக ஓடியது. உடம்பு குளிரை மறந்து முறுக்கேறியிருந்தது”. ஆனால் அவன் மனைவி பேசிக் கொண்டேயிருக்கிறாள், வீட்டுப் பிரச்சினைகளை, பணப் பிரச்சினைகளை, கௌரவப் பிரச்சினைகளை, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் இருக்கும் பிரச்சினைகளை என்று அவளது பேச்சு தனது செயல்களின் தொடர் வர்ணனையாக இருக்கிறது; “அந்தப் பய அழுகிறது கேக்கலயா, காது இடிஞ்சா போச்சு. வீட்ல ஆம்பள இல்லன்னு எண்ணைக்கோ முடிவாயிருச்சு.” எழுத்தாளன் அத்தனையையும் கேட்டுக் கொண்டிருக்கிறான், ஆனால் கதை தன் பாட்டுக்கு “வெண்ணையாகத் திரண்டு” வருகிறது. மனைவியின் அத்தனை உதவி கோரலுக்கும் கதை எழுதும் முனைப்பில் அலட்சியமாக இருந்தவன், கடிகாரத்தில் அலுவலகம் செல்லும் நேரம் பார்த்ததும் கதையை விட்டுவிட்டுக் கிளம்புகிறான். மாலை வீடு திரும்பும்போது மனைவி மகிழ்ச்சியாக இருக்கிறாள். ஒரு அற்ப காரணம்தான். ஆனால் அது அவளது பிரச்சினையைத் தீர்த்து சிறிது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அவளை இந்த மன நிலையில் பார்க்கும் எழுத்தாளனை அவனது உணர்வுகள் அதன் ஆழத்திலிருந்து எழுந்து தாக்குகின்றன,

“அவனுக்கு நெற்றிக்குள் குடைந்தது/ ராத்திரிக்குக் கதை எழுத முடியுமென்று தோணவில்லை. தூக்கம்கூட சந்தேகந்தான்.

“கொழந்தைக இன்னும் வரலையா?”

“காப்பி ஆறிப் போயிருக்கும்”

அவள் வெளியே நின்று குழந்தைகளைத் தேடினாள், அவன் அவளையே பார்த்தபடி காபியை விழுங்கும்போது தொண்டைக்குள் விக்கியது”

என்று முடிகிறது கதை.

அருமையான கதை. அம்பாரமாக எழுத விஷயமிருந்தாலும், அனைத்தையும் எழுதி முடிவதில்லை. மிகவும் அந்தரங்கமான விஷயங்கள் தொண்டையின் விக்கல்களாக கதைக்கு வெளியே நின்று விடுகின்றன. இருந்தாலும் பூமணியின் கதைகள் அந்த அந்தரங்க வெளிப்பாட்டின் சாயல்கலைத் தம்முள் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றில் பூமணியின் விருப்பு வெறுப்பு, நன்மை தீமை என்ற இருமைகள் இல்லை. ஆனால் வறுமை உண்டு, இரக்கமின்மை உண்டு, வன்மம் உண்டு, அவற்றின் நியாயமின்மை குறித்த வேதனை உண்டு, அந்த வேதனை ஆழம் சிறுகதையில் வரும் விக்கல் போல் கனிவைக் கண்டு நெகிழ்வதாக இருக்கிறது.

“வாடை” என்ற சிறுகதையை பூமணியின் இந்த நுட்பமான பார்வைக்கு சான்றாகச் சொல்லலாம். எழுத்தாளனாகப் பேசாமல் பேசுகிறார் அவர். கதையின் போக்கில் தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பெர்ய அளவில் வெற்றி பெற்றிருக்கும் சிறுகதை இது. எவ்வளவோ விஷயங்களைக் கதை தன் போக்கில் சொல்லிச் செல்கிறது.

மழை பெய்கிறது. தன் மிளகாய்த் தோட்டம் என்னாகுமோ என்ற கவலை பாப்புக் கோனாருக்கு. ஒரு ‘நட்டுவாக்காலி’ அவரை ஐந்தாறு முறை தன் கொடுக்கால் கொட்டி விடுகிறது. வழுக்கி விழும் பாப்புக்கோனார் நினைவு தப்பி, நுரை கக்கி மரணமடைகிறார். அவரைத் தூக்குவது எளிதாக இல்லை, அப்படி ஒரு ஆகிருதி. எனவே ஒரு மாட்டைத் தூக்குகிற மாதிரி, “தோளோர முதுகிலும் தொடைப் பக்கமுமாக இருப்புச் சட்டத்தைச் சொருகித் தூக்கி” வண்டியில் வைத்து வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். “தோட்டம்துரவு மாடுகண்ணு என்று நல்ல வசதி”யாக ஒரு பண்ணையார் போல இருந்த பாப்புக் கோனார் இப்படி பிணமாக வீடு திரும்புகிறார்.

அப்போது “சக்கிலியக்குடி சனங்கள் மிரண்டு போய் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இனம்புரியாத வருத்தத்தில் கண்கள் கலங்கியிருந்தன” என்று எழுதுகிறார் பூமணி. இத்தனைக்கும் அவருக்கு அந்த சனங்களைக் கண்டால் தீவிர வெறுப்பு. மாடு குளிப்பாட்டும்போது அவர்களில் யாரும் வந்தால்கூட, “கூகமாதிரி நின்னுக்கிட்டு மாடு கலயிதுல்ல. ஊருணித் தண்ணி ஓடியா போகுது. இப்பத்தான் சனியனா வரணுமாக்கும்” என்று விரட்டி விடுபவர். இப்படிப்பட்டவருக்குதான் அவர்களின் கண்கள் கலங்குகின்றன. அவரது பிணம் அழுகிப் போய் வாடையடிக்கத் துவங்குகிறது. எடுக்க ஆளில்லை. அப்போது இவர்களைக் கூப்பிட்டு காசு கொடுத்து அடக்கம் செய்யச் சொல்கிறார்கள்.

“அந்த மனுசன் நம்மள கண்ணுலயே காங்கவுடாம வெரட்டுவாரு. எல்லாரும் நம்ம வாடையே அடிக்கப்புடாதுன்னு ஒதுங்கி ஓடுவாக. இப்ப அவுக வாடைய அவுகளாலயே தாங்க முடியல. கொடுமையப் பாருங்க” என்று இரக்கப்பட்டு அவர்கள் அவரை ஒரு சவப்பெட்டியில் வைத்து சுமந்து செல்கிறார்கள். இதையடுத்து கதை இப்படி முடிகிறது :

இடைவழியில் கூட்டமாக நின்று பாப்புக்கோனாரை வழியனுப்பிய சக்கிலியக்குடிப் பெண்களில் பினாங்குக்காரி தளுதளுத்த குரலில் சொன்னாள்,

“நம்ம வாடையே ஆகாதுன்னு இருந்தவருக்கு இந்தக் கதியா வரணும்”

நிறைய பேர் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.

இந்தக் கதையைத் தனியாகப் படிக்கும்போது இயல்பாக நடக்கும் ஒரு விஷயத்தைப் பெரிய அளவில் சமூக நியாயங்களைப் பற்றிய கேள்விகளை எழுப்பாமல் அமைதியான குரலில் பதிவு செய்திருக்கிறார் பூமணி என்று சொன்னால் அது தவறாக இருக்காது. ஆனால் அது முழு உண்மையாகவும் இருக்காது. முன்னர் அம்பாரம் பற்றி எழுதுகையில், ஆழம் என்ற கதையில், பரிவு தொண்டையில் விக்கலாய் வந்து நின்று எழுத்தாளனைக் கதை எழுத முடியாமல் தடுத்து விடுகிறது என்று பார்த்தோம். அந்தரங்கமான உணர்வுகள் கதைக்கு வெளியேயே நின்று விடுகின்றன. என்றாலும், அவற்றில் சாயல்கள் கதையின் மையத்தில் நிற்கின்றன. இந்த உண்மையை நாம் வாடை என்ற இந்த சிறுகதையை விடுதலை என்ற சிறுகதையோடு இணைத்துப் படிக்கும்போது உணர முடியும்.

காக்கைகளால் சிறு சிறு தொல்லைகள் ஏற்படுகின்றன என்று அதன் கூட்டைக் கலைக்கப் போகும்போது, கோழிக் குஞ்சுகளை வேட்டையாடும் செம்பிராந்துகளைக் காகங்கள் விரட்டுகின்றன என்று அந்தக் கூட்டைக் காப்பாற்றுகிறார் பெரியவர். ஆனால் பிராந்துத் தொல்லையை ஒழித்த காகங்களில் ஒன்று அவருடைய கோழிக் குஞ்சையே காயப்படுத்தி விடுகிறது. அதையடுத்து அவரது கோபம் காகங்களின் மேல் திரும்புகிறது. இங்கே இருக்கும் வசனத்தைப் பாருங்கள்:

“காளைமாடு ரெண்டும் காடிக்கு முன்னால் வெயிலுறைப்புக்கு தலைமடக்கி சொகமாகப் படுத்துக் கிடந்தன. ஒரு மாட்டுக்கு பின் சப்பையில் தார்க்குத்து மங்கி சிராய்ப்பாய்ந்திருந்த பழைய புண்ணை காக்காய் கொத்திக் கிளறிக் கொண்டிருந்தது. நுனியலகுக் கீறலில் சொகம் ஏற ஏற ரத்தம் வடியும்வரை கொடுத்துக் கொண்டிருந்தது மாடு. கூளம் போட வந்த அவர் திடுக்கிட்டுப் போனார்.

“இம்புட்டுக்குக் கொத்துந்தட்டியும் குடுத்துட்டுந்திருக்கே அதச் சொல்லணும். சொகமாருந்தா இப்படியா மரமா படுத்துக் கெடக்கிறது”

விடுதலை என்ற கதையை எழுதிய பூமணிதான் வாடையையும் எழுதியிருக்கிறார். ஆனால், இங்கு வெளிப்படும் உணர்வுகள் வாடையில் காணப்படுவதில்லை. அதற்காக இரண்டையும் இணைத்துப் படித்து, ஒன்றில் சொல்லாத கருத்தை இன்னொன்றில் சொல்லியிருக்கிறார் என்று எண்ணாமலும் இருக்க முடிவதில்லை. ஏனெனில், “”இம்புட்டுக்குக் கொத்துந்தட்டியும் குடுத்துட்டுந்திருக்கே அதச் சொல்லணும். சொகமாருந்தா இப்படியா மரமா படுத்துக் கெடக்கிறது” என்ற வாக்கியங்கள் எழுதப்பட்டிருக்கும் சிறுகதையின் தலைப்பு- விடுதலை.

காக்கைகளின் பிரச்சினை தொடர்கிறது. ஒரு நாள் அவற்றுக்கு விஷம் வைக்கிறார் பெரியவர். ஒன்று செத்து விழுகிறது. அதை விளார் நுனியில் கட்டி செண்டா நட்டு வைக்கிறார். காக்கைகள் பீதியுடன் சிதறி ஓடுகின்றன. அவர் கம்பீரமாக ஏரை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார், என்று முடிகிறது அந்தச் சிறுகதை.

பூமணியின் சிறுகதைகள் பலவற்றில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படாமல் தங்களுக்கு நேரும் அநியாயங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இது போன்ற ‘விடுதலைகள்’ மிகக் குறைவே. மாறாக, ரீதி, கங்கு, எதிர்கொண்டு போன்ற கதைகளில் ஆத்திரமாக, தங்கள் நிலையில் எந்த முன்னேற்றத்தையும் பெற்றுத் தராத வன்மமாக வெளிப்பட்டு அடங்குகிறது கோபம்.

இன்றைய சமூக சூழலில் இவரது கதைகள் சாதி அடையாளங்களோடு, சாதி குறித்த விமரிசனங்களாகவே அறியப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், பூமணியின் கதைகளுக்கு பொதுமைத் தன்மை உண்டு. அனைத்து அதிகார அமைப்புகளையும் இவரது கதைகள் கேள்விக்குட்படுத்துவதாக நாம் உணர வேண்டுமெனில், இன்றிருக்கும் சாதி வேறுபாடுகள், அவற்றின் அடிப்படையிலான அடக்குமுறைகள் மாற வேண்டும். இவை இருக்கும்வரை, சாதி அதிகாரத்துக்கு பலியானவர்களின் மௌனத் துயரைப் பதிவு செய்தவராகவே பூமணி அறியப்படுவார் என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அதைத்தான் அவரது கதைகளில் தேடிப் படிக்கிறோம். ஆனால், அவரது களம் அதனினும் பெரிது. பிரசாரமாக இல்லாமல் மனிதனின் அன்றாட இருப்பின் அடிப்படைத் தேவைகள்கூட நிறைவு செய்யப்படாமல் இருக்கும் அவலத்தை பேசுகிறார் பூமணி. உணவுக்கும் உடைக்கும்கூட வழியின்றி பல்வேறு தளைகளில் அவன் உடைந்த ஆன்மாவாகச் சிக்குண்டிருப்பதைத் தன் சிறுகதைகளில் காட்டுகிறார் அவர். இல்லாதவன் மட்டுமல்ல, இருப்பவனும் இந்த சமூக அமைப்பில் உடைந்த ஆன்மாவே: அம்பாரம் அம்பாரமாக இருந்தென்ன, அள்ளிக் கொடுக்க மனம் வருவதில்லை. தேவை என்ற சிறுகதை இப்படிப்பட்ட இருபுற நசிவைப் பேசுகிறது. ஐம்பத்தொரு சிறுகதைகளையும் பேச முடியாது, மாறாக, பூமணியின் சிறுகதைகளைத் தொகுத்து வாசிக்கத் துணை செய்யக்கூடிய ஒரு சில சிறுகதைகள் மட்டுமே இங்கு குறிப்பிடப்படுகின்றன.

பூமணியின் எழுத்து குறித்த தொடர்ந்த வாசிப்பும் விவாதங்களும் இன்றைய சமூக நிலையைப் ஒத்திசைவுடன் புரிந்து கொள்ள அவசியமாக இருக்கின்றன. விஷ்ணுபுரம் இலக்கிய விருது மற்றும் போர்டு பவுண்டேஷன் துணையுடன் அவர் எழுதி வெளிவர இருக்கும் மாபெரும் நாவல் ஆகியவை தற்போது அவர்மேல் வெளிச்சம் விழக் காரணமாக உள்ளன. ‘பொன்னி’ 2007ல் பதிப்பித்துள்ள “அம்பாரம்” என்ற இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தையும் படிக்கையில் அவற்றின் பரவலான களத்தையும் அதில் வெளிப்படும் உலகையும் பார்க்கும்போது, பூமணி நம் தொடர்ந்த கவனத்துக்கு உரியவர்தான் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது.

சிறப்பாக அச்சிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் குறித்து எனக்கு ஒரு குறை இருக்கிறது: எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையில் இயங்கிய அன்றைய சிறுபத்திரிக்கைகளே பூமணியின் எழுத்துகளுக்கு இடம் தந்திருக்கின்றன. இந்த இதழ்கள் நின்றுவிட்டாலும் இவற்றின் பங்களிப்பு மறக்கப்படுவதற்கில்லை. ஆனால், இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எந்த இதழில் எப்போது வெளிவந்தன என்ற தகவல் எதுவும் இல்லை. இந்தக் குறை அடுத்த பதிப்பிலேனும் சரி செய்யப்பட வேண்டும்.

விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வாழ்த்துகள். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினருக்கு இலக்கிய வாசகர்களாகிய நாம் அனைவரும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.