’துருவ நட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழா

கார்த்திகை மாதக் காலைப்பொழுதில், ஒன்பது மணிக்கெல்லாம் மக்களை வீட்டிற்கு வெளியே பார்ப்பதே அபூர்வமான விஷயம். அதிலும் ஊரே தூங்கிவழியும் ஞாயிற்றுகிழமையும் அதுவுமாக மயிலை ராகசுதா ஹாலில் காலம் சென்ற ஒரு இசைக் கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கும் ஒரு புத்தகத்துடைய வெளியீட்டு விழாவில் அரங்கு நிறைய மக்களைப் பார்க்க முடியும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை.

சொல்வனம் வெளியீடாக ஸ்ரீ. லலிதாராம் எழுதிய மிருதங்க மாமேதை அமரர் பழனி சுப்பிரமணியப் பிள்ளை அவர்களைப் பற்றிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவினை சிறப்பிக்கத்தான் அத்தனை பேரும் கூடியிருந்தனர். ஒரு இசைமேதை மறைந்து சுமார் அரை நூற்றாண்டு காலம் கடந்தபின் அவர் குறித்த ஒரு புத்தகம் வெளிவருவதே வியப்பிற்குரிய விஷயம். அதை விட, அந்த மேதையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் முதல் புத்தகம் இதுதான்- அப்படியொரு புத்தகம் இப்போதாவது எழுதப்படுகிறது என்பது இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு பெரிய அதிசயமும்கூட.

எத்தனை மேதைகளைப் பற்றிய தகவல்களை நாம் அலட்சியத்தாலும் காலத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாத மிதப்பிலும் இழந்து விட்டிருக்கிறோம்! “மிருதங்கம் என்றாலே பழனிதான்!” என்று அவரது சமகாலத்துச் சிறந்த கலைஞர்களால் போற்றப்பட்ட அந்த மாமேதை மறைந்து பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஒரு இளைஞர், தொழில்முறை இசைக் கலைஞராகவோ, பத்திரிக்கையாளராகவோ இல்லாத ஒருவர், “ஆசை பற்றி அறையலுற்றேன்” என்று அரும்பாடுபட்டு, நான்கு நீண்ட ஆண்டுகள் அந்த மேதையின் மாணவர்களைச் சந்தித்துப் பேசி, பழைய புத்தகங்களைத் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தை எழுத வேண்டியிருந்திருக்கிறது.

மிருதங்க இசைக்கு ஒரு புதிய ஆற்றலை அளித்த அந்த மாமேதையின் வாழ்க்கையை அதன் காலகட்டத்தோடு ஆவணப்படுத்தும் லலிதா ராமின் இந்த நூல் மிக முக்கியமான ஒன்று என்பது விழா மேடையில் உரையாற்றியவர்களைக் கொண்டுதான் நான் அறிய நேர்ந்தது. நமது அறியாமையே பிழை என்று இல்லை; ஆனால் அந்த அறியாமையைக்கூட அறியாதிருக்கும் காலத்தை, அதை ஒரு பொருட்டாகவே நினைக்காத அவலத்தை நினைத்துப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

கர்நாடக சங்கீதத்தின் ஒரு பொற்காலத்தைப் பற்றிப் பேசுவோரையே, வாழும் ஆவணங்களையே கூட நாம் ஒவ்வொருவராய் இழந்து கொண்டிருக்கிறோம் – இந்த இழப்பை நினைத்து வருந்தக்கூடிய விழிப்பும் நமக்கு இல்லை, இவர்களிடம் பொதிந்திருக்கும் அரிய தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் ஊக்கமும் நமக்கு இல்லை. இசையில் நாட்டமுள்ள என் போன்ற இளைஞர்கள் அனைவருக்கும் இந்த இழப்பு பெரும்வலியாக இருக்கிறது, ஆனால் ஒரு சிலராலேயே இந்த இழப்பில் இருந்து சேகரிக்கக் கூடியதைக் காப்பாற்றித் தர முடிகிறது- தங்களுக்கு முந்தைய தலைமுறை செய்திருக்க வேண்டிய வேலையைச் செய்யும் இவர்களில் லலிதா ராம் முக்கியமானவர், தமிழகக் கலை வரலாற்றுப் பின்னணியில் இவரது எழுத்துப் பணியும், இந்த நூலும் அந்த வகையில் ஒரு அவசியத் தேவையை நிறைவு செய்வதாக இருக்கின்றன.

பழனி சுப்பிரமணியப் பிள்ளை ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தபடி சரியாக ஒன்பது மணிக்குத் தொடங்கியது. ஸ்ரீ கே.எஸ்.காளிதாஸ் , ஸ்ரீ என்.முரளி (’த ஹிந்து’), திருச்சி. ஸ்ரீ சங்கரன் , ஸ்ரீ பி.எம்.சுந்தரம் , சங்கீத கலாநிதி ஸ்ரீமதி ஆர்.வேதவல்லி ஆகியோர் விழா மேடையை அலங்கரித்தனர். சங்கீத கலாநிதி ஸ்ரீமதி. ஆர். வேதவல்லி குத்துவிளக்கு ஏற்றி வைக்க, சங்கீத மும்மூர்த்திகளை வணங்கும் ஒரு இனிய இறைவணக்கப் பாடலை குமாரி. ஐஷ்வர்யா ஷங்கர் பாட, இப் புத்தக வெளியீட்டு விழா இனிதே தொடங்கியது.

”ரா ரா ராஜீவலோசனா ராமா” என்று நூலின் ஆசிரியர் லலிதாராமை வரவேற்று வரவேற்புரை வழங்கிய திரு.கே.எஸ்.காளிதாஸ்,  லலிதாராம் இப்புத்தகம் வெளிவர மேற்கொண்ட பெரும் முயற்சிகள் குறித்து விரிவாகவே குறிப்பிட்டார். மேலும் திருச்சி. ஸ்ரீ சங்கரனுக்கு இந்த வருடத்தின் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதைப் பேருவகையுடன் அவர் குறிப்பிட்டு, இந்த விருது தங்கள் இருவரின் குருநாதரான “துருவ நட்சத்திரம்” புத்தகத்தின் நாயகர் ஸ்ரீ சுப்பிரமணியப் பிள்ளை அவர்களுக்கே கிடைத்ததாகத் தாங்கள் கொள்வதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தப் புத்தகம் தான் எழுதி வெளிவரும் பொருட்டு, திரு. காளிதாஸ் பேருதவிகளை தனக்கு நல்கியதை லலிதாராம் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது:

“காளிதாஸ் சிறந்த மிருதங்க வித்வான் மட்டுமன்றி தெளிவாகவும் சுவையாகவும் எழுதக் கூடியவர். நினைத்திருந்தால், பழனியைப் பற்றிய நூலை என்னை விட சிறப்பாக அவர் எழுதியிருக்க முடியும். ஆனால், ஏனோ என் மூலமாகத்தான் இந்த நூல் வெளிவர வேண்டும் என்பதில் என்னை விட அதிக ஆர்வமாக இருந்தார். சில வாரங்களுக்கு ஒரு முறை தொலைபேசி மூலமும், நேரில் சந்திக்கும் போதும் தூண்டிக் கொண்டே இருந்தார். அவரது வழிகாட்டலும் தூண்டுதலும் இல்லாமல் இந்த நூலை எழுதியிருக்க முடியாது என்பதில் சந்தேகமே இல்லை.”

என்று எழுதுகிறார் லலிதா ராம். அவர் தன் பேச்சிலும், காளிதாஸ் இந்தப் புத்தகத்தை எழுத எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்பதைக் குறிப்பிட்டார். பழனி அவர்களின் இருபத்து ஐந்தாவது நினைவாண்டை ஒட்டி ’ஸ்ருதி’ இதழ், திரு. காளிதாஸின் மேற்பார்வையில் ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. அது இந்தப் புத்தகத்துக்கு உருவம் தரக்கூடிய ஒரு ‘காம்பாக்ட்டான பிப்லியோகிராபியாக’ இருந்தது என்று லலிதா ராம் சொன்னார். இது மிக முக்கியமான தகவல்- இருபத்து ஐந்தாம் நினைவாண்டில் விழுந்த விதை, ஐம்பதாம் நினைவாண்டை ஒட்டி ஒரு விருட்சமாக வளர்ந்திருக்கிறது.

சொல்வனம் பதிப்பகத்தார் சார்பில் திரு. பாஸ்கர் பேசினார். தனது துரித வாசிப்பில், “இசை, இசைக் கலைஞர்கள், வரலாறு என்று எந்தத் துறையாக இருந்தாலும் தான் எழுதுவதில் தகவல் பிழைகள் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் கடுமையாக உழைப்பவர் லலிதா ராம். தகவல் பிழைகள் தவறான கருத்துகளை நிலைநிறுத்தக்கூடிய ஆதாரங்களாக அமையும் என்பதை நன்கு உணர்ந்தவர் அவர்,” என்று பேசிய பாஸ்கர், இந்தப் புத்தகத்துக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், அவற்றை பிழையின்றி தொகுத்தளிக்கவும் லலிதா ராம் மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட்டு, இத்தகைய உழைப்பும் வரலாற்று உணர்வு சார்ந்த அர்ப்பணிப்பும் அவரது எழுத்தில் இருப்பதால், புத்தகமானாலும் கட்டுரையானாலும் லலிதா ராம் எழுதுவது உண்மையாக இருக்கும் என்று முழு நம்பிக்கையுடன் படிக்கலாம் என்றார்.

மியூசிக் அகாடமியின் இயக்குனரும் ’த ஹிந்து’ பத்திரிகைக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீ.என்.முரளி, லலிதாராமின் இந்த அரிய முயற்சியைப் பெரிதும் பாராட்டினார். திரு. சுப்பிரமணியப் பிள்ளை குறித்து அவர் பேசுகையில், தனி ஆவர்த்தனங்களில் அவர் வெளிப்படுத்திய தனிச்சிறப்புகளைக் குறிப்பிட்டார். அதே வேளையில் இந்தக் கால தனி ஆவர்த்தனங்கள் பற்றி ஒரு சின்ன ஒப்பீட்டு நகைச்சுவையையும் குறிப்பிட அவர் தவறவிடவில்லை. மிருதங்க வித்வான்களில் இடதுகை வாசிப்பு கொண்டவர்கள் சோபிப்பதில் உள்ள பிரச்னைகளைச் சொன்னவர், அதையும் தாண்டி பழனி சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் தன் நிகரற்ற திறமையால் எப்படிப் புகழ் பெற்றார் என்பதையும் குறிப்பிட்டார். அவரது உரை ஆங்கிலத்தில் அமைத்திருந்தது. மேடையில். எவ்விதத் தயக்கமுமின்றி தமிழில் தொடர்ந்து உரையாற்றக்கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது என்பது என் எண்ணம்- இனி வரும் காலங்களில் அவர் தமிழிலேயே உரையாற்றலாம் என்று தோன்றுகிறது. பேசியவரை அவரது தமிழ் சரளமாகவும், சிறப்பாகவும் ரசிக்கும்படியுமே இருந்தது.

குரு வந்தனத்துடன் தன் பேச்சைத் துவக்கிய ஸ்ரீ.பி.எம்.சுந்தரம், தங்கள் குருவான பழனி சுப்பிரமணியம் பிள்ளை பாட்டுக்கு வாசிப்பதில் சிறந்தவர் என்பதைக் குறிப்பிட்டார். எல்லா மிருதங்க வித்வான்களும் பாட்டுக்கு வாசிப்பவர்கள்தானே என்ற கேள்விக்கு அவர் தந்த பதில் அற்புதமானது. தன் வாசிப்பு பாடுபவரின் பாடலை உயர்த்தும் பண்பு உடையதாக இருக்கவேண்டுமே தவிர தன் மிருதங்கக் கருவியின் நாதம் தனித்துத் தெரிவது அவசியம் இல்லை என்று வாழ்ந்தவர் அவர் என்று தெளிவுபடுத்தினார். தனி ஆவர்த்தனத்தில் மிருதங்கத்தின் நுட்பங்களை அனைவரும் வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் கீர்த்தனையின் சுவை கெடாமல் அதை ஒட்டி ஒலிக்கும் மிருதங்க இசை சாத்தியங்களின் உச்சத்தை பழனியவர்கள் அளவுக்கு அடைந்தவர்கள் எவருமில்லை என்று குறிப்பிட்டார் சுந்தரம்.

ஏற்புரை நல்கிய லலிதாராம் இந்தப்புத்தகம் வெளிவருவதில் திரு. காளிதாஸ் காட்டிய முனைப்பை முக்கியமாகக் குறிப்பிட்டது பற்றி மேலே பார்த்தோம். மேலும் பேசியதில், வரலாற்றுத் தகவல் சேகரிப்புகளின் போது தன்னைப் போன்றவர்கள் சந்திக்கும் முக்கிய இன்னலாக, தகவல்களின் ”கிடைக்கும் தன்மை” (availability) பற்றி குறிப்பிட்ட லலிதாராம் இதற்காக மியூசிக் அகாடமி போன்ற அமைப்புகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

விழாவிற்குத் தலைமை உரை ஆற்றிய திருச்சி.ஸ்ரீ. சங்கரனின் பேச்சு அரங்கத்தில் இருந்தவர்களை ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு சென்றது என்றால் அது மிகையில்லை. திரு.சுப்பிரமணியப் பிள்ளை சின்னஞ்சிறு வயதிலேயே மிருதங்கம் கற்ற விபரங்கள் குறித்துப் பேசியவர், திரு.பஞ்சாமிப் பிள்ளையின் வாசிப்பு சுப்பிரமணியப் பிள்ளை அவர்களின் வாசிப்பை பாதித்தது பற்றியும், அவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட இசை சார்ந்த விஷயங்கள் பற்றியும் குறிப்பிட்டார். சுப்பிரமணியம் பிள்ளை ஒரு தேர்ந்த பாடகரும் கூட என்பதையும் குறிப்பிட்டவர், ரயில் பயண நேரங்களில் கல்பனா ஸ்வர சம்பாஷனைகளில் ஈடுபடுவது சுப்பிரமணியப் பிள்ளை அவர்களுக்கும் செம்பை வைத்தியநாத பாகவதருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு என்பதையும் நினைவுகூர்ந்தார்.

லலிதா ராம் ஆவணப்படுத்துதலின் அவசியம் குறித்தும் அது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டது தொடர்பாக திருச்சி சங்கரன் கூறிய ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது என்று நினைக்கிறேன். இதை எப்படி சரி செய்யப்போகிறார்கள் என்பது மிகவும் சிக்கலான கேள்வி.

ஆவணப்படுத்துதல் குறித்து திருச்சி சங்கரன் அவர்கள் சொன்னது இதுதான் (நான் புரிந்து கொண்டதை எழுதுகிறேன்)- நம்மிடம் இரண்டு வகை ஆவணப்படுத்தல்கள் உண்டு. எழுத்து மற்றும் ஒலிப்பேழைகளாக ஒன்று. இவற்றையே போதுமான அளவில் செய்யவில்லை. இதை இன்னும் நிறைய செய்ய வேண்டும், சிறப்பாகச் செய்ய வேண்டும். உண்மைதான். ஆனால் இன்னொரு வகை ஆவணப்படுத்தல் இருக்கிறது. அது, குருபரம்பரையான வாசிப்பு.

இது குறித்து அவர் பேசியதைக் கேட்டபோது, இசையில் வெளி உலகுக்கு, ரசிகர்களுக்கு எளிதில் தெரிய வராத எவ்வளவோ இருக்கிறது என்பது புலனாயிற்று. ஒரு முறை சங்கரன் அவர் வீட்டுக்குப் போனபோது பழனியும் அவரது மனைவியும் பூஜை அறையில் ஒரு கீர்த்தனையைப் பாடிக் கொண்டிருந்தனர். அவ்வளவு அருமையாக பாடினார்கள் என்று சொன்னார் திரு. சங்கரன். பழனியவர்கள் வீட்டில் எங்கும், எல்லாரிடமும் இசை கமழ்ந்த விதம் போன்ற விவரமெல்லாம் அரிய தகவல்கள். காலப்போக்கில் மறைந்து, பதிவு செய்யப்படாவிட்டால் பழனிக்கு ஒரு வாத்தியத்தை அருமையாக வாசிக்க மட்டும்தான் தெரியும், அவருக்கு பாடத் தெரியாது அல்லது பாட வராது என்றேதும் பிழைபட்ட கருத்தை உருவாக்கக்கூடிய தகவல்கள். இவற்றை எல்லாம் எழுதி வைப்பது ஒரு காலகட்டத்தில் இசை பரவி மிளிர்ந்ததைப் பற்றிய பூரணமான பார்வையைத் தருமென்பதால் இதெல்லாமும் பதியப்படுவது அவசியம்.

ஆனால் இப்படிப்பட்ட தகவல்களைவிட முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இசை என்று எடுத்துக் கொண்டால், இந்தக் கதைகள் தகவல்கள் மறைவதால் இசைக்கோ, அதன் ரசிகர்களுக்கோ பெரிய அளவில் வருந்தக்கூடிய நஷ்டமில்லை எனக் கருதலாம். இரண்டாவது வகை ஆவணப்படுத்துதல் பற்றி திருச்சி சங்கரன் சொன்னாரல்லவா, அது தொடர்பறாது, பாரம்பரியத்தை நீட்டி, அதே நேரம் தலைமுறை தலைமுறையாக புதுப்பிக்கப் பட்டு வாழும் இசை. அதுதான் முக்கியம். ரெகார்டிங் எவ்வளவு முக்கியமோ அதைவிட இந்த மாதிரியான ‘டாக்குமெண்டேஷன்’ முக்கியம். காலத்தால் உறைந்துவிடாமல் அது ஒரு மனிதனின் டிஎன்ஏ மாதிரி தொடர்ந்து நிலைத்தும்,  வளர்ச்சியுள்ள நீட்சியாகியும், காலங்களுக்கேற்ப மாறித் தன்னைக் காப்பாற்றி வைத்துக் கொண்டும் அது இருக்கிறது.

மாமேதை பழனி அவர்களின் நினைவு சொல்வனம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தால் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கு ஒரு நியாயமும் அவசியமும் இந்த இசை தொடர்ந்து வளரும்போதுதான் இருக்கும். மிருதங்க இசையும், புதுக்கோட்டை பாணியும் சபைகளில் மட்டுமின்றி நம் கிராமப்புறங்களிலும் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்- அருங்காட்சியகத்தில் இருக்கும் ஆவணங்களை நாம் தொட முடியாமல் தூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்க்கும் நிலை இந்தப் புத்தகத்துக்கும், இது பேசும் இசைக்கும் வந்து விடக் கூடாது.

இந்தக் கவலை இசையில் நாட்டமுள்ள அனைவரையும் எதிர்நோக்கி நிற்கிறது. நாகசுரம் மற்றும் தவில் வாசிப்பு தமிழகத்தில் தொய்வடைந்த நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி கோலப்பன் – ஜெயமோகன் இடையான உரையாடல் முக்கியமான ஒன்று.

இந்நிலை மிருதங்கத்துக்கும் ஏற்பட்டுவிடாமல் காக்க பழனி எம் சுப்பிரமணிய பிள்ளை அறக்கட்டளையினர் வாயிலாக அவரது மாணவர்கள் செய்து வரும் முயற்சிகள் போற்றத்தக்கன. திருச்சி சங்கரன் பேசிய இரண்டாம் வகை ஆவணப்படுத்தலும், இசையின் உயிர்ப்பும் இவர்களின் தொடர்ந்த முயற்சியாலேயே நிகழ முடியும்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்ரீ.ஜே.பாலாஜியின் நன்றியுரையுடன் புத்தக வெளியீட்டு விழா இனிதே நிறைந்தது. அதனைத் தொடர்ந்து டாக்டர்.விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமல்லாமல் பல்துறை அன்பர்களையும் இந்த நிகழ்வில் பார்க்க முடிந்தது. சில வெளிநாட்டு அன்பர்களும் நிகழ்ச்சியில் ஆவலுடன் கலந்துகொண்டார்கள்.

விழா அரங்கிலேயே புத்தகம் விற்பனைக்குக் கிடைத்தது. அழகான வடிவமைப்பில் பல அரிய தகவல்கள், கிடைப்பதற்கு மிகவும் அரிதான புகைப்படங்களுடன் புத்தகம் அருமையாக வந்திருக்கிறது.

விழாவில் கலந்துகொள்ளத் தவறியவர்கள் இப்புத்தகத்தை உடுமலை.காம் மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.