சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 6

அந்தாதி

சிற்றிலக்கிய நூல்கள் வரிசையில் அந்தாதி சிறப்பானதோர் வகை. அந்தம் + ஆதி = அந்தாதி. அந்தாதி எனப்படுவது ஒரு பாடலில் முடியும் சொல்லை அடுத்த பாடலின் முதற்சொல்லாக வைத்துப் பாடுவது. எடுத்துக் காட்டாக, ஒரு பாடல் ‘வையத்தே’ என முடிந்தால் அடுத்த பாடல் வையம் என்றோ, வையத்தே என்றோ, வையத்தோர் என்றோ, வையத்துள் என்றோ தொடங்கும். அந்தம் எனில் இறுதி, ஆதி எனில் தொடக்கம்.

‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்’

என்று தொடங்கியது மாணிக்க வாசகரின் திருவெம்பாவை.

பதிற்றுப் பத்து எனும் சங்க இலக்கிய நூலே அந்தாதியில் பாடப் பெற்றது தான் என்றும் இடையில் ஒரு பத்தில் தொடர்ச்சி அறுவதால் அதை அந்தாதி வகையில் கொள்வதில்லை என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

அபிராமப் பட்டர் எழுதிய ‘அபிராமி அந்தாதி’, நக்கீர தேவ நாயனார் பாடிய ‘கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி’. சேரமான் பெருமாள் நாயனார் அருளிய ‘பொன் வண்ணத்து அந்தாதி’ என்பன சிறப்பாகக் குறிப்பிடப் படுவன. மேலும் ‘திருப்பெருந்துறைக் கலித்துறை அந்தாதி’, திருவரங்கத்து அமுதனார் இயற்றிய ‘இராமானுசர் நூற்றந்தாதி’ என்று மேலும் சில கேள்விப் படுகிறோம். பெரும்பாலும் அந்தாதிகள் வெண்பா, விருத்தம், கலித்துறை எனும் பாவினங்களில் பாடப்பெற்றுள்ளன.

அபிராமி அந்தாதி

அபிராமிப் பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி பெரிதும் வாசிக்கப் படுவது, பாராயணம் செய்யப்படுவது, ஓதப்படுவது, பூசையறையில் வைத்துப் பூசிக்கவும் படுவது. இசை வடிவமாக பாடப்படுவதும் அபிராமி அந்தாதி பரவலானதன் காரணங்களில் ஒன்று. இங்கு, வாசகர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் இசைப்பேழைகளை அல்லது குறுவட்டுக்களை நான் பரிந்துரைக்கிறேன். அதுபோன்றே தமிழின் சிறந்த பாவை நூற்களான திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களையும் இசை வடிவமாகக் கேட்டல் சிறப்பு. எம்.எல்.வசந்தகுமாரி, வேதவல்லி முதலானோர் பாடியிருக்கிறார்கள். அபிராமி அந்தாதி அல்லது திருப்பாவை, திருவெம்பாவை, கே.ஜே.யேசுதாஸ் பாடியிருப்பதாகவும் நினைவு. என்னிடம் இருக்கலாம், தேடிப் பார்க்க வேண்டும்.

நான் வாசிக்க நேர்ந்த சிற்றிலக்கியங்களில், கிண்கிணி ஆர்ப்ப போலும், சிலம்பின் சிலம்பல் போலும், புலர்காலைப் புள்ளின அலம்பல் போலும், சிற்றருவித் துள்ளல் போலும், பெருங்கடல் ஓதை போலும், வண்டின் ரீங்காரம் போலும் ஒலிக்கும் பாடல்களைக் கொண்டது அபிராமி அந்தாதி.

முதலில் கள்ள வாரணப் பிள்ளையார் காப்பு, இறுதியில் நூற்பயன் எனும் இரு செய்யுட்கள் நீங்கலாக, நூறு விருத்தப் பாக்கள். முதல் பாடலில் ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’ என்று தொடங்கி இறுதிப்பாடல், ‘நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே’ என்று முடிவது. அதாவது ஆதிச் சொல் அந்தமாக முடிகிறது.

திருக்கடையூர் என்று இன்று வழங்கப் பெறும் திருக்கடவூர் வதியும் அபிராமி அம்மையின் மீது அபிராமிப் பட்டர் என்றும் அந்தணர் எழுதிய நூல் இது. ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நூல். எல்லா வகையிலும் சிற்றிலக்கிய சிறப்புக் கொண்டது. தஞ்சை சரபோஜி மன்னர் காலம். அது பற்றிக் செவி வழிக் கதைகள் உண்டு.

அபிராமி பட்டர், அபிராமி அந்தாதி தவிரவும் ‘அபிராமி அம்மைப் பதிகம்’ என்று பதினாங்கு சீர் ஆசிரிய விருத்தத்தில் 11 பாடல்களும் யாத்தவர். ஒரு காலத்தில் திருப்பாவை, திருவெம்பாவை போல, அபிராமி அந்தாதி நூறுபாடல்களும் எனக்கு மனப்பாடமாக இருந்தது. அது நான் இறை மறுப்பாளனாகத் திரிந்த காலம். இன்றும் எனக்குப் பெரிய பற்று ஒன்றும் இல்லை. இன்று பல்லும் போயிற்று, சொல்லும் போயிற்று, காலக்குப்பை கனத்து அமுக சினைவும் போயிற்று.

அபிராமி அந்தாதியின் நூறு பாடல்களும் நூறு வகையில் சிறப்புடையன. அபிராமி அம்மையைத் தமிழ்ப் பாக்கள் கொஞ்சிக் கொஞ்சிப் பாடுகின்றன :

‘நின்றும் இருந்தும் கிடந்தும்
நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்
தாள் எழுதா மறையின்
ஒன்றும் அரும்பொருளே அரு
ளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழி
யாமுத்தி ஆனந்தமே’

என்றும்,

‘கண்ணிய துன்புகழ் கற்பதுன்
நாமம் கசிந்து பத்தி
பண்ணிய துள்ளிரு பாதாம்
புயத்தில் பகல் இரவா
நண்ணிய துன்னை நயந்தோர்
அவையத்து நான்முன் செய்த
புண்ணிய மேதுஎன் அம்மே புவி
வழையும் பூத்தவளே!’

என்றும் பாய்ந்து செல்லும் பக்தி வெள்ளம்.

சின்னப் புத்தகம் கையிடக்கமாக முன்பெல்லாம் இரண்டு ரூபாய்க்குக் கிடைத்தது. இன்று பத்து ரூபாய் இருக்கலாம். உரை அவசியமே இல்லை. காதில் ஒலிக்கும் கவிதையின் சந்தம். பயண காலங்களில் குறுஞ்செய்தி குத்துவதை விடுத்து திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி என்று வாசிக்கலாம் போல.

மீனாட்சியின் நிறம் கறுப்பு என்பார்கள். மரகதப் பச்சை என்பார்கள். ஆனால் அபிராமியின் நிறம் கருஞ் சிவப்பு. எண்ணற்ற பாடல்களில் பட்டர் புலப்படுத்திச் செல்கிறார்.

’சிந்துர வண்ணப் பெண்ணே’ – என்றும்

‘மங்கலை செங்கலசம் முலையாள்
மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகல
கலா மயில்’ – என்றும்

‘பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும்’ – என்றும்

‘செப்பும் கனக கலசமும்
போலும் திருமுலை மேல்
அப்பும் களப அபிராம வல்லி’ – என்றும்

‘மாதுளம் பூ நிறத்தாளை’ – என்றும்

பக்தி மயமாகத் தென்படும் பாடல்கள் கொண்ட நூல் இது.

‘உமையும் உமையொரு பாகனும்
ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தான்
இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை ஈன்றெடுப்பாள்
ஒரு தாயும் இல்லை’

என்று இனிமேல் தனக்குப் பிறவியே இல்லை என உறுதி கொள்ளும் பாடல்கள்.

‘ஆசைக் கடலில் அகப்பட்டு
அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல் பட இருந்த
எனை நின் பாதம் என்றும்
வாசக்கமலம் தலைமேல்
வலிய வைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லு வேன் ஈசர்
பாகத்து நேரிழையே’

என வாசிக்க வாசிக்கத் திகட்டாத தமிழ். நூறு பாட்டையும் சொல்லலாம் தான். எமக்குப் பொறுதி இல்லை. ஏதோ பக்தி என்ற நினைப்பில் புறக்கணித்து விடாமல் தமிழுக்காகத் திரும்பத் திரும்ப வாசிக்கப்பட வேண்டிய நூல் இது.

-o00o-

திருமுறைகள் பன்னிரெண்டு என வரையறை செய்து தொகுக்கப் பெற்றவற்றினுள், பதினோராம் திருமுறையில் சில அந்தாதிகள் அடங்கும். திருமுறைகள் என அடக்கப் பட்ட காணத்தினால், அவற்றை எவரும் சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்களாகக் கொள்வதில்லை. என்றாலும் அந்தாதி எனும் பகுப்பினுள் நாம் இங்கு குறித்துச் செல்வதில் தவறில்லை என்று கருதிகிறேன்.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டின் உள்ளும் ஒரேயொரு பெண்பாற் புலவர்தான். அவர் காரைக்கால் அம்மையார். அதுபோன்று பன்னிரு ஆழ்வார்களிலும் ஒரேயொரு பெண்பாற் புலவர் தான் ஆண்டாள். அதுவும் பொறுக்கவில்லை, வைணவ அறிஞர்கட்கு. ஆண்டாள் என்பவர் பெண் அல்ல, பெரியாழ்வாரின் பெண் பாவனை என்கிறார்கள். இங்கும் ஒரு பெண் இருந்து விட்டுப் போகட்டுமே என்ற பெரிய மனதில்லை.

காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகங்களும் திரு இரட்டை மணிமாலையும் அற்புதத் திருவந்தாதியும் தமிழுக்கு அவரது கொடைகள்.

பெண்கவிதை, பெண்மொழி எனத் தீவிரமாகச் செயல்படும் இளம் படைப்பாளிகள், காரைக்கால் அம்மையார், திருவில்லிபுத்தூர் ஆண்டாள், சங்க காலத்தும் பிந்திய காலத்தும் தோன்றிய ஒளவைகள். காக்கைப்பாடினியார், நச்செள்ளையார், வெள்ளிவீதி, நப்பின்னை, அள்ளூர் நன்முல்லை, ஆதிமந்தி, ஊண்பித்தையார், ஒக்கூர் மாசாத்தியார், காமக் கணிப் பசலையார் எனும் நப்பசலையார், காவற்பெண்டு, குமிழி ஞாழலார் நப்பசைலயார், குறமகள் இளவெயினி, தாயங்கண்ணியார், நக்கண்ணையார், நாமகள், பாரி மகளிர், நெடும்பல்லியத்தை, பெருங்கோப பெண்டு, பேய் மகள் இளவெயினி, பொன்மணியார், பொன் முடியார், மதுரை நல்வெள்ளியார், மாற்பித்தியார், மாறோக்கத்து நப்பசலையார், மூடத்தாமக் கண்ணியார், வருமுலையாரித்தி, வெண்ணிக் குயத்தியார், வெறி பாடிய காமக் கண்ணியார் போன்ற கவிஞர்களை வாசித்துப் பார்க்கலாம். இது ஒரு பரிந்துரையே அன்றி, இதற்கு உட்பொருள் ஏதும் இல்லை.

அற்புதத்திரு அந்தாதி

எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த காரைக்காலம்மையார் யாத்தது அற்புதத் திருவந்தாதி. வெண்பாக்களால் ஆன அந்தாதி இது. இதன் பாடல் ஒன்றை அடிக்கடி நான் மேற்கோள்காட்டுவதுண்டு

‘அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல் சிவந்த வாறோ – கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயோடு வாய் இதனைச் செப்பு’

தீயேந்தி ஆடுவதால் அழகிய கை சிவந்து காணப்படுகிறதா? அல்லால் அழகிய கையின் அழகால் தீ சிவந்தவாறோ? கால்களின் கழல் ஆட, கானகத்தில் பேயோடு அனல் ஏந்தித் தீயாடுகிறவனே இதனைச் சொல்வாய் என்பது பொருள்.

அந்தாதி என்பதால் தொடர்ந்து அடுத்த பாடலையும் காண்பது சிறப்பாக இருக்கும்.

‘செப்பேந்து இளமுலையாள் காணவோ தீப்படு காட்டு
அப்பேய்க் கணம் அவைதாம் காணவோ – செப்பு எனக்கு ஒன்
றாகத்தான் அங்காத்து அனல் உமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடும் உன் நடம்’

செப்புப் போன்ற இளமுலையாளாகிய உமையாள் காணவோ, அன்றேல் தீப்படு சுடுகாட்டுப் பேய்க்கணங்கள் காணவோ? அண்ணாந்து பார்த்து ஒன்றாக அனல் உமிழும் ஐவாய் நாகம் அணிந்தவனே, உனது நடம் எதற்காக என்று சொல்வாய்! – என்பது என் உத்தேசமான உடை.

‘ஒருபால் உலகு அளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் – இருபாலும்
நின்னுருவ மாகநிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து’

என்றொரு பாடல். காரைக்காலம்மையின் தமிழை, செய்யுளை, வெண்பாவின் நேர்த்தியை, நயத்தை வாசித்து உணர்தல் வேண்டும். எட்டாம் நூற்றாண்டுத் தமிழ் அப்படியொன்றும் நமக்கு இன்னும் அன்னியமாகிப் போய்விடவில்லை. இருமலுக்கு பனங்கற்கண்டுக் கட்டியை அலவில் ஒதுக்கிக் கொள்வதைப் போல, ஒரு பாடலை மனதில் போட்டுக் கொண்டால் அது கரைந்து இனிப்புப் பயக்கும். முதலில் பொதுவான பொருள் புரிந்தால் போதும். சில சொற்களுக்குப் பொருள் முதலில் புரியாவிடின் ஒன்றும் மோசம் இல்லை. நாட்பட நாட்படப் புரியும். கொண்டல், கொண் மூ, கார்முகில், எல்லாம் மேகம் தான். அரவம், நாகம், சர்ப்பம் எல்லாம் பாம்பு தான். நாட்பட நாட்பட நாகம் எனில் யானை என்றும் பொருள் உண்டு என்பதும் அர்த்தமாகும். செந்தமிழும் மனப்பழக்கம். யாவரையும் போல் எனது தமிழ்க் கல்வியும் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டில் முடிந்து போனது. நான் குரு மூலம் கற்றது கம்பன் மட்டுமே. எனது மூதாயின் தமிழ் எனக்கு விளங்காமற் போய்விடுமா?

சைவக்குரவர் நால்வருக்கும் மூத்தவர் காரைக்கால் அம்மையார். காரைக்காலில் அவர்க்கொரு கோயில் உண்டு. காரைக்காலின் மூத்த ரொட்டேரியன், சகோதரர் இராகவ சாமி அழைத்துப்போனார். கோயிலின் காலம் பற்றி என்னால் அறிந்து கொள்ள இயலவில்லை.

காரக்கால் அம்மையாரின் ‘அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்’ என்றும் வரியும் திருப்பாவையில் ஆண்டாள் பாடும்

‘எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்’ எனும் வரிக்கும் ஒப்புமை உண்டு.

‘யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்’

எனும் எட்டாம் நூற்றாண்டு காரைக்காலம்மையின் வரிகளை ஏழாம் நூற்றாண்டின் ஆழ்வாராகிய பூதத்தாழ்வாரின்,

’யானே தவம் செய்தேன், ஏழ்பிறப்பும், எப்போழுதும்
யானே தவம் உடையேன்’

எனும் வரிகளோடு ஒப்பு நோக்கலாம்.

சற்றே தோய்ந்த வாசிப்பும் பயிற்சி இருந்தால் ஆழ்வார்களோ நாயன்மார்களோ கடினமானவர் அல்லர். சில வரிகள் மேற்கோள் தருகிறேன். இதில் என்ன புரியாமை உண்டென்று பாருங்கள் :

1. இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டு இறக்கம் செய்வான்

2. அரன் என்கோ நான்முகன் என்கோ அரியாம்
பரன் என்கோ புண்பு உணர மாட்டேன்

3. அவனே இரு சுடர், தீ, ஆகாசம் ஆவான்
அவனே புவி, புனல், காற்று ஆவான்

4. பண்டு அமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டம் கறுத்ததுவும்

5. காலனையும் வென்றோம் கரு நரகம் கை கழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம்

காரைக்கால் அம்மை பால் எம்மை ஆற்றுப்படுத்தியவர் மதுரைக் கவிஞர் ந.ஜயபாஸ்கரன். வண்ணதாசனின் உற்ற நண்பர். அவரது வெண்கல-பித்தளைப் பாத்திரக் கடையில் அமர்ந்தவாறு நயங்கள் கேட்டேன். கிட்டத்தட்ட சமவயதுக்காரர். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டதாரி. திருப்பூவனத்துத் தாசி பொன்னனையாளையும் அவர்தான் எனக்கு அடையாளம் காட்டினார். திருப்பூவன நாதனுக்கே நகக்குறி பதித்தவள் அந்த தாசி. தனது முழுச்செல்வத்தையும் கோயில் கட்டப் பயன்படுத்தியவள். நவீனக் கவிதை படைக்கும் பலரும் இன்று அறிந்திராத நவீன கவிஞர் அவர். மூன்று தொகுப்புகள் வந்துள்ளன. அவரது முழுக் கவிதைத் தொகுப்பொன்றைக் கொணர முயற்சி செய்து, வாக்குத் தந்து மறந்து போனவருண்டு. விரைவில் உயிர் எழுத்து பதிப்பக வெளியீடாக அவரது ஒன்று சேர்ந்த கவிதைகள் வர இருக்கின்றன. அவர் எனக்குச் சொன்ன பாடலை இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.

‘அன்றுன் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் – என்றும் தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது’

இதில் பொருள் கூற ஏதுண்டு. என்றாலும் புரியாதவர்க்கு சிறுவிளக்கம்’

அன்று உன் திருவுருவம் காணாமலேயே ஆட்பட்டேன்.
இன்றும் உன் திருவுருவம் காண்கிலேன். என்றென்றும்
நும் பிரான் உருவம் என்று வினவுகிறவர்க்கு என்ன
உரைப்பேன், எவ்வுருவம் தான் உன்னுருவம் என்று?

எல்லாமே அற்புதங்களாக இருக்கின்றன காரைக்கால் அம்மைக்கு. அதனால் தான் இது அற்புதத் திருவந்தாதி போலும்!

‘காலையே போன்று இயங்கும் மேனி, கடும்பகலின்
வேலையே போன்று இலங்கும் வெண்ணீறு – மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
வீங்கு இருளே போலும் மிடறு’

காலைக் கதிரவனின் ஒளிபோல் இலங்குகின்றது மேனி. கடும்பகலில் ஒளிக்கற்றை பட்டுப் பிரகாசிக்கும் கடல்போல் இயங்கும் வெண்ணீறு. மாலையின் செக்கர் வானம் போல் ஒளிரும் சடைக் கற்றை, நம்பிக்கை அற்ற மற்றவர்க்குப் பெருகும் இருளே போன்ற நீலகண்டம் என்பது பொருள்.

‘இருளின் உரு என்கோ மாமேகம் என்கோ
மருளின் மணி நீலம் என்கோ – அருள் எமக்கு
நன்றுடையாய் செஞ்சடை மேல் நன்கு இல்ங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத்து ஒளி’

என்று ஒரு பாடல். எமக்கு நல்ல அருள் உடையவனே, செஞ்சடைமேல் நன்கு இலங்கும் வெண்மதியம் ஒன்று உடையவனே, உன் கழுத்தில் தங்கி இருக்கும் விடத்தின் ஒளியினை நான் இருளின் உருவம் என்பேனோ, கரிய மாமேகம் என்பேனோ, மருளின் மணி நீலம் என்பேனோ என்று வியப்புத் தொனிக்கும் பாடல் இது.

பேயுருப் பெற்று, நடக்க இயலாத முதுமை அடைந்து, வானோர் பிரானை, அம்பவள வண்ணனை, மை போன்ற கண்டத்தானைக் காண உருண்டும் தவழ்ந்தும் கைலாயம் ஏறிய காரைக்கால் அம்மையைத் தொலைவில் இருந்து பார்த்த, வாம பாகத்தை வவ்விய உமையம்மை கேட்டாளாம், யாரிவள் என. அம்மையப்பன் பகர்ந்தானாம் ‘அவள் எம் அம்மை காண்’ என்று.

அந்த காரைக்கால் அம்மை அருளிய அந்தாதி அற்புதத் திருவந்தாதி.

பொன் வண்ணத்து அந்தாதி

இதுவும் பதினோராம் திருமுறையில் அடக்கம். பதினோராம் திருமுறை, சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் அடக்கம். பன்னிரு திருமுறைகளோ பக்தி இலக்கியங்கள் மொத்தத்தினுள் அடக்கம். பக்தி இலக்கியங்களோ, தமிழ் இலக்கியங்களினுள் அடக்கம். தமிழ் இலக்கியங்கள் தமிழின் சொத்து, தமிழனின் செல்வம், உலகத்தின் புதையல். ஆனால் தமிழனுக்கு அவற்றின் பெயர்கள், ஆக்கியோன் பெயர்கள், காலகட்டம் எதுவும் தெரியாது. ஆனால் வெளியாகும் அத்தனை சினிமாக்கள், அவற்றின் நாயக-நாயகியர், இயக்குனர், இசையமைத்தவர், படம் தொகுத்தவர், நிலைப்படம் எடுத்தவர், சுவரொட்டி வடிவமைத்தவர் வரைக்கும் தெரியும். எம்மின் யார் உலகில் உள்ளார்?

அது கிடக்க!

பொன்வண்ணத்து அந்தாதியையும் நாம் பக்தியிலக்கியம் எனப் பாராது, அந்தாதி வகையின் ஒன்றாகவே அறிமுகப்படுத்துகிறோம். இதனை ஆக்கியோன், அல்லது சைவப் பெருமக்கள் புண்படாது இருக்க, அருளியோன், சேர மன்னர் மரபில் வந்த சிவனடியார் சேரமான் பெருமாள் நாயனார். சிவத் தொண்டர்களின் வரலாறு அறிய சேக்கிழார் அருளிய பெரிய புராணம் கற்கலாம்.

பதினோராம் திருமுறையில், பொன்வண்ணத்து அந்தாதி தவிர, சேரமான் பெருமாள் நாயனார் அருளியவை, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கைலாய ஞான உலா என்பன.

பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி, பொலிந்து இயங்கும்
மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை, வெள்ளிக் குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை, தன்னைக் கண்ட
என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.

இவ்வந்தாதியின் முதற் பாடல் இது. பன்னிரண்டு வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஒரு வேளை இந்த நூலின் பெயர்க்காரணமே இதன் முதல் சீர்தானோ? இந்தப் பாடலைச் சொல்லிவிட்டுக் கம்பனைக் காட்டாவிட்டால் எப்படி?

தாடகை வதை செய்த பின்னர், அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தபோது, விசுவாமித்திர முனிவன் வியந்து, இராமனது கை வண்ணத்தையும் கால் வண்ணத்தையும் பாராட்டுவதாக அமைந்த பாடல், பால காண்டத்தில், அகலிகைப் படலத்தில்.

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்,
இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மாற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில்,
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்!

இந்தப் பாட்டை வாசிக்கும்போதே புரிந்து கொள்வீர்கள், எவனோ பொருட்கள் தேடி, பக்குவம் ஆய்ந்து, கருத்தாய் சமைத்து வைத்ததைக் கோரி விளம்புகிறவர்கள்- சினிமாவில் – புகழும் செல்வமும் பட்டங்களும் தட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள் என்பதை. அதனால் என்ன, நமக்கும் அசலை மறந்துவிட்டு, நகலை பூசிப்பதுதானே வழக்கமும் வசதியும்?

காரைக்கால் அம்மையின் அந்தாதியில், “காலையே போன்று இலங்கும் மேனி” என்றொரு பாடல் பார்த்தோம். அதனுடன் ஒப்பு நோக்கத்தக்கது, பொன்வண்ணத்து அந்தாதியின் பாடல் ஒன்று.

விரிகின்ற ஞாயிறு போன்றது
மேனி அஞ்ஞாயிறு சூழ்ந்து
எரிகின்ற வெங்கதிர் ஒத்தது
செஞ்சடை அச்சடைக் கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது
கண்டம் அக்காரிருட் கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்று
உளதால் எந்தை வெண்பொடியே.

தமிழில் விளையாட்டு காட்டுகிறார் சேரமான் பெருமான்.

தாழும் சடை, சடை மேலது
கங்கை, அக்கங்கை நங்கை
வாழும் சடை, சடை மேலது
திங்கள், அத்திங்கள் பிள்ளை
போழும் சடை, சடை மேலது
பொங்கு அரவு, அவ்வரவம்
வாழும் சடை, சடை மேலது
கொன்றை, எம் மாமுனிக்கே.

சிவபெருமானின் சடையும் சடை சார்ந்தவையும் சொல்லணி ததும்பப் பாடப்பட்டுள்ளது இப்பாடலில். மொழியின் உச்ச பட்ச சாத்தியப்பாடுகளை நிரூபிக்கின்றன சில பாடல்கள். மாதொரு பாகன், உமையொரு பாகன், அர்த்த நாரி, மாதொரு பங்கன் என்றெல்லாம் போற்றப்படும் ஈசனின் வலமும் இடமும் எவையெவை எனப் பட்டியலிட்டு விளக்கும் பாடல் ஒன்றுண்டு ஈண்டு.

வலம் தான் கழல், இடம் பாடகம்
பாம்பு வலம், இடமே
கலம் தான், வலம் நீறு, இடம் சாந்து,
எரி வலம், பந்து இடம், என்பு
அலம் தாழ் சடை வலம், தண்ணங்
குழல் இடம், சங்கரற்கே!

இராவணனைப் பற்றிய குறிப்பொன்றும் உண்டு இங்கு. “வரையினை எடுத்த தோளும்” என்று கைலாய மலையைக் கரங்களால் எடுத்தவன் என்று கம்பன் சிறப்பித்துப் பாடும் இடம்.

குன்றெடுத்தான் செவிகண்வாய்
சிரங்கள் நெரிந்து அலற

என்று.

சில மாதங்கள் முன்பு, காவியங்கள் பற்றி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் முகாமில், ஊட்டியில், மஞ்சனகொர எனும் இடத்தில் இருக்கும் ஸ்ரீ நாராயண குருகுலத்தில், துறவி ஒருவர் இராவணன் கைலாய மலையைப் பெயர்த்து எடுத்துப் பந்தாடும் காட்சியை நடித்துக் காட்டினார். அவர் மாஹி கல்லூரி ஒன்றில் மலையாளப் பேராசிரியர். மலையாளம், சமஸ்கிருதம் கற்றவர். கேரளத்தின் பாரம்பரிய கதகளிக் குருவின் பேரன், மாணாக்கன். மேற்சொன்ன அந்தாதிப் பாடல் வரியின் பொருள் எனக்கு அன்று அர்த்தமாயிற்று. இராவணனின் மெய்ப்பாடுகள் இன்று நினைத்தாலும் பிரமிக்க வைக்கின்றன.

இந்தப் பின்புலத்தில், அந்தி மாலைப் பொழுதில் சிவன் திருநடனம் செய்யும்போது என்ன நடந்தது என்பதற்கான பாடலை நாம் பார்க்கலாம்:

கலங்கின மால்; கடல் வீழ்ந்தன
கார்வரை, ஆழ்ந்தது மண்,
மயங்கின நாகம், மருண்டன
பல்கணம், வானம் கை போய்
இலங்கின, மின்னொடு நீண்ட
சடை இமையோர் வியந்தார்
அலங்கல் நன் மாநடம் ஆர்க்கு இனி
ஆடுவது எம் இறையே!

இந்தப் பாடலைப் படித்த பின்பு பாரதியின் ஊழிக்கூத்து வாசித்துப் பாருங்கள், பாரதியின் ஆளுமை புலனாகும். எனக்குக் கம்பன் பயிற்றிய ஆசான், அமரர் திரு ரா. பத்மநாபன் சொல்லும் பாணியில் பாரதியின் “ஊழிக் கூத்து” கவிதையை, ஒரு முகாமில் நண்பர்களுக்குச் சொல்ல வேண்டும், ஒரு சமயம், முறையான பயிற்சிக்குப் பிறகு.

பொய்யா நரகம் புகினும், துறக்கம் புகினும், பேசுவது எல்லாம் அரண் திருநாமம் சேரமான் பெருமானுக்கு.

கொற்றவனே என்றும் கோவணத்
தாய் என்றும் ஆவணத்தால்
நற்றவனே என்றும் நஞ்சுண்டி
யே என்றும் அஞ்சமைக்கப்
பெற்றவனே என்றும் பிஞ்ஞக
னே என்றும் மன்மதனை
செற்றவனே என்றும் நாளும்
பரவும் என் சிந்தனையே.

என்று பரவுகிறார். குறைந்த பட்சம், சைவ சமயத்தவர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவரேனும் வாசித்து இன்புற வேண்டியது இவ்வந்தாதி.

கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி

நக்கீர தேவ நாயனார் அருளிச் செய்த அந்தாதி இது. இவரும் பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்ட சிவனடியார். இவர் எழுதிய பிற நூல்கள், திரு ஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திரு எழு கூற்றிருக்கை, பெருந்தேவ பரணி, கோபப் பிரசாதம், கார் எட்டு, போற்றித் திரு கலிவெண்பா, திருமுருகாற்றுப் படை, திரு கண்ணப்ப தேவர் திருமறம் என்பன.

சங்கப் புலவர் நக்கீரர் எழுத்திய திருமுருகாற்றுப்படை எங்ஙனம் நக்கீர தேவ நாயனார் பெயரில் பதினோராம் திருமுறையினுள் தொகுக்கப்பட்டது என்பதை அறிஞர் பெருமக்களிடம் கேட்டு ஐயம் தெளிய வேண்டும்.

வெண்பாக்களால் அமைந்த அந்தாதி இது. ஒரு பாடல் திருக்கயிலாய மலையையும் தொடரும் மறுபாடல் திருக்காளத்தி மலையையும் அந்தாதித் தொடலில் அமைத்துப் பாடப்பட்டது. கயிலை நாதனையும் காளத்தி நாதனையும் பாடுவது.

போர்த்த களிற்று உரியும் பூண்ட பொறி அரவும்
தீர்த்த மகள் இருந்த செஞ்சடையும் – மூர்த்தி
குயிலாய மென்மொழியாள் கூறு ஆயவாறும்
கயிலாயா யான் காணக் காட்டு.

என்பது கயிலாயம் பற்றிய பாடல் எனில் அடுத்தது,

காட்டில் நடமாடிக் கங்காளர் ஆகிப் போய்
ஆட்டில் பலி திரிந்து நாள்தோறும் – ஓட்டு உண்பார்
ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை
வானோர் வணங்குமா வந்து.

என்பதில் காளத்தியைக் காணலாம். இதில் முந்தைய பாடலில் காட்டு என முடிந்து அடுத்த பாடல், ‘காட்டில்’ எனத் தொடங்குவதுதான் அந்தாதி.

இன்னொரு இணைப் பாடல்களையும் பார்க்கலாம்.

மயலைத் தவிர்க்க நீ வாராய் ஒரு மூன்று
எயிலைப் பொடியாக எய்தாய் – கயிலைப்
பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே
இருப்பதவா உற்றாள் இவள்.

இவளுக்கு நல்லவாறு எண்ணுதிரேல் இன்றே
தவளப்பொடி இவள்மேல் சாத்தி – இவளுக்குக்
காட்டுமின்கள் காளத்தி, காட்டிக் கமழ்கொன்றை
சூட்டுமின்கள் தீரும் துயர்.

மூன்று கோட்டைகளைப் போடியாகப் போகும்படி எய்தவனே, கயிலைப் பெருமலையில் அமர்ந்தவனே, உன்னுடைய பாதத்தின் கீழே இருக்கும் இவள் மையல் தீர்க்க வாராய். இவளுக்கு நல்லவாறு செய்ய எண்ணுவீராயின், தாய்மார்களே, இன்றே இவள்மேல் தவளப்பொடி சாத்தி, காளத்தி மலையைக் காட்டுங்கள், கமழ் கொன்றை மாலை சூட்டுங்கள், இவள் துயர் தீரும். ஏதோ அகத்திணைப் பாடல் போல் இருக்கிறது.

எப்படியெல்லாம் தமிழ் பாட யோசித்திருக்கிறார்கள் பாருங்கள்.

(தொடரும்)